திருமணம் ஏன் அநேகர் வெளிநடப்புச் செய்கின்றனர்
கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய பண்பாடுகள் இணையாக நிலவியிருக்கும் ஹாங்காங்கில் உள்ள மணவிலக்கின்பேரில் கருத்துத் தெரிவிக்கும்போது, ஆசியா பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “பேச்சுத் தொடர்பின்மை, உண்மையின்மை, பாலுறவு பிரச்னைகள், இசைவு பொருத்தமின்மை போன்றவையே வழக்கமாகச் சீன மற்றும் மேற்கத்திய தம்பதிகளின் திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளின் மையத்திலிருக்கின்றன.” உலகத்தின் மற்றப் பாகங்களிலும் நிலைமை அவ்வாறே இருக்கிறது.
வேலை-முதலில் மனநிலையை உடைய ஆண்களும் பெண்களும் வேலைக்காகத் தங்களுடைய குடும்பங்களைத் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றனர். இவ்வாறு, குடும்பப் பேச்சுத் தொடர்பைப் படார் என அடைத்துவிடுகின்றனர். ஒரு நாள் முழுவதும் உழைப்பிற்குப் பின்னர் களைப்புடன், கணவன் செய்தித்தாளில் தன்னுடைய தலையைப் புதைத்துக் கொள்கிறான். ஜுனிச்சியும் அவருடைய மனைவியும் மூன்று உணவு விடுதிகளை நடத்திவந்தனர். காலை எட்டுமணி முதல் இரவு பத்துமணி வரை வெவ்வேறு இடங்களில் வேலை செய்தனர். “கணவன் மனைவியாகிய எங்களுக்குள் பேச்சுத் தொடர்பு அறவே இல்லாமலிருந்தது,” என்று ஜுனிச்சி ஒப்புக்கொள்கிறார். இந்தப் பேச்சுத் தொடர்பின்மை வினைமையான விவாகப் பிரச்னைகளுக்கு வழிநடத்திற்று.
திருமணக்கட்டுகளின் முறிவுக்கு வழிநடத்தும் மற்றொரு காரணி விவாகத்திற்குப் புறம்பான பாலுறவைப்பற்றிய மக்களின் கருத்து ஆகும். ஜப்பானில் ஒரு சுற்றாய்வுக்குப் பிரதிபலித்த ஆண்களில் 20 சதவீதத்தினரும் பெண்களில் 8 சதவீதத்தினரும் கடந்த ஆண்டிற்குள் தங்களுடைய ஒருதார உறவுமுறைகளுக்கு வெளியே பாலுறவு தொடர்பு கொண்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர். அந்தளவுக்கு இப்போது விவாகத்திற்குப் புறம்பான பாலுறவு மட்டுக்கு மீறி காணப்படுகிறது. தங்களுடைய கணவன் அல்லாத மற்ற ஆண்களோடு உறவுகொள்ளும், வேலைசெய்யும் பெண் ஜப்பானில் வழக்கத்திற்கு மாறானவள் அல்ல. “என் கணவர் கண்டுபிடித்துவிட்டால், நான் வெறுமனே அவரை மணவிலக்குச் செய்துவிடுவேன்,” என்று எண்ணி அவள் ஆள் விட்டு ஆள் மாற்றிக்கொண்டிருந்தாள். நவீன சமுதாயம் இவ்விவகாரங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறது.
இதே சமுதாயந்தான் நான்-முதல் மனப்பான்மையை வளர்த்துவிடுகிறது. இதனால் கணவனும் மனைவியும் சுயநல நாட்டமுடையவர்களாக மாறி, மணவிலக்கிற்கான மற்றொரு காரணமாகிய இசைவு பொருத்தமின்மைக்கு வழிநடத்துகிறது. “நாங்கள் ஒரு தம்பதியாக எங்களுடைய திருமணம் பலவீனமடைந்ததிலிருந்து எந்த நேரம் வேண்டுமென்றாலும் பிரிந்திருந்திருக்கலாம்,” என்று கியோகோ சொல்கிறார். “எங்களுடைய திருமணம் முடிந்தவுடனேயே, நான் ஓர் இயந்திர மனுஷியைப்போல் இருந்து எனக்குச் சொல்லப்படுவதை மட்டும் செய்துகொண்டிருக்கும்படி என் கணவர் சொன்னார். காரியங்கள் அவருக்கு நல்லமுறையில் நடந்துகொண்டிருந்தவரை அவர் அந்தளவு மோசமாக இருக்கவில்லை. ஆனால் காரியங்கள் மோசமாகும்போது, அவர் தன்னுடைய குறைகளை ஏற்றுக்கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் மற்றவர்கள்மேல் பழிசுமத்தினார். நானும் குற்றம் சுமத்தப்படவேண்டும் ஏனென்றால் நான் அதிகாரத்தை எதிர்த்துக்கொண்டிருந்தேன். அவர் அநியாயம் செய்தபோது என் கணவருக்குக் கீழ்ப்படிவதை நான் மிகக் கடினமானதாகக் கண்டேன்.”
வன்முறை, குடிவெறிப் பழக்கம், பணப் பிரச்னைகள், துணைவரின் குடும்பத்தினரோடு ஏற்படும் கஷ்டங்கள், மனச்சம்பந்தமான துர்ப்பிரயோகம் போன்றவை மணவிலக்கிற்கான மற்ற காரணங்களாக இருக்கின்றன.
இவற்றிற்குப் பின்னால் இருப்பதென்ன?
மணவிலக்கிற்கு எத்தனைதான் வித்தியாசப்பட்ட காரணங்கள் இருந்தாலும், அதன் உலகளாவிய அதிகரிப்பிற்குப் பின்னால் ஏதோ ஒன்று அதிகம் இருக்கிறது. அதன் கெடுதிகளுக்குக் கீழை நாடுகள் மேலை நாடுகளின் செல்வாக்கின் மீது பழிசுமத்தினாலும், மேலை நாடுகளில் மணவிலக்கை ஏற்றுக்கொண்டது ஓர் அண்மைக்கால நிகழ்வாகும். உண்மையிலேயே, கடந்த ஒரு சில பத்தாண்டுகளில் மட்டும் ஐக்கிய மாகாணங்களில் மணவிலக்கு மூன்று மடங்காகவும், பிரிட்டனில் நான்கு மடங்காகவும் அதிகரித்திருக்கிறது. (ஐக்கிய மாகாணங்களில் உள்ள சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளை ஆய்வு செய்யும் ஓர் ஆராய்ச்சி நிலையமாகிய) நகர்ப்புற ஆராய்ச்சி நிலையத்தை (The Urban Institute) சேர்ந்த ஆண்ரூ J. செர்லின் மணவிலக்கு அதிகரிப்பிற்கான காரணங்கள் நன்கு புரிந்துகொள்ளப்படவில்லை என்று ஒப்புக்கொண்டாலும், “பெண்களின் அதிகரித்துவரும் பொருளாதார சுதந்திரம்” மற்றும் “பொதுவான சமுதாய மனநிலை மாற்றங்கள்” போன்றவையும் இந்தப் போக்குமுறையின் பின்னால் இருக்கின்ற காரணிகளுள் இருப்பதாக அவர் பட்டியலிடுகிறார்.
ஐக்கிய மாகாணங்களிலும், தொழில் முன்னேற்றமடைந்த மற்ற நாடுகளிலுமுள்ள பெண்களுக்கு, திருமணமாகியும், தங்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்வதென்பது இனியும் வழக்கத்திற்கு மாறான காரியமல்ல. எனினும், வீட்டில் கணவனால் செய்யப்படவேண்டிய அனுதின வீட்டுவேலைகள் மிகவும் குறைவாகவே அதிகரித்து வந்திருக்கின்றன. எனவே “வேலைசெய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதெல்லாம் ஒரு மனைவியின் வேலையைச் செய்ய யாராவது ஒருவர்!” என்று சில பெண்கள் முணுமுணுப்பது ஆச்சரியமல்ல.
ஐக்கிய மாகாணங்களில், துணி துவைத்தல், சுத்தம் செய்தல், உணவு தயாரித்தல், குழந்தைகளைப் பராமரித்தல் போன்றவற்றில் பெண்கள் மிகக் கடினமாக உழைக்கும்போது, “அநேக ஆண்கள் ‘வெறுமனே சுற்றித் திரிவதில்’ நேரத்தைச் செலவழித்து மகிழ்கின்றனர்,” என்று மாறிவரும் அமெரிக்கக் குடும்பமும் பொது நியமமும் (The Changing American Family and Public Policy) என்ற புத்தகம் கூறுகிறது. உலக முழுவதும் இதுவே நடப்பதாக மானிடவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜப்பானில் ஆண்கள் வேலைக்குப் பிறகு, மற்றவர்களோடு கூட்டுறவு கொள்வதற்காக வெளியே போவது வழக்கத்திற்கு மாறானதல்ல. தங்களுடைய வீட்டில் சுமுகமான மனித உறவுமுறையை அசட்டை செய்யும் அவர்கள், வேலைசெய்யுமிடத்தில் ஆட்களோடு சுமுகமான உறவுமுறை கொள்ள இது அவசியம் என்பதாக வாதாடுகின்றனர். அவர்களுடைய விவாதத்தின்படி, ஆண்கள் குடும்பத்தை ஆதரிப்பவர்களாதலால் (breadwinners) பெண்களும் பிள்ளைகளும் குறைகூறக்கூடாது. இருப்பினும், அதிக பெண்கள் வேலை செய்து வருகிறதனால், அப்படிப்பட்ட எண்ணம் வெறுமனே நொண்டிச் சாக்கு என காண்பிக்கப்படுகிறது.
திருமண தோல்விக்குப் பங்களிக்கும் மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அது “திருமணத்தின் நிரந்தரத் தன்மையைப் பற்றியுள்ள உயர்ந்த நோக்கத்தில் குறைவுபடுதல்,” என்று திருமண மற்றும் குடும்ப பத்திரிகை (Journal of Marriage and the Family) விவரித்தது, அல்லது “பொதுவான சமுதாய மனநிலை மாற்றங்கள்,” ஆகும். “மரணம் நம்மைப் பிரிக்கும் வரை” என்று 1990-களின் மாப்பிள்ளைகளுக்கும் மணப்பெண்களுக்கும், பாரம்பரியமாகக் கொடுக்கப்பட்டுவரும் திருமண வாக்கு இனியும் உண்மையாய் இராது. அவர்கள் ஒரு நல்ல துணை தேடுவதைத் தொடர்கிறார்கள். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் தங்கள் திருமணக்கட்டை இவ்வாறுதான் நோக்குகிறார்கள் என்றால், அது எவ்வளவு உறுதியுள்ளதாய் இருக்கும்?
இந்தச் சமுதாய மாற்றங்கள் பைபிள் மாணாக்கர்களுக்கு ஆச்சரியமானதாகவே இல்லை. ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகம் 1914 முதல் நாம் ‘கொடிய காலங்களாகிய’ “கடைசிநாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று வெளிப்படுத்துகிறது. மக்கள் “தற்பிரியராயும், . . . நன்றியறியாதவர்களாயும், உண்மையில்லாதவர்களாயும் [NW] சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும்” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:1-3) எனவே, தங்கள் துணையைவிட தங்களை அதிகம் நேசிக்கும், தங்களுடைய துணையுடன் உண்மையற்றவர்களாக நடந்துகொள்ளும், தங்களுடைய திருமணத்தில் இணங்காதவர்களாய் இருந்துவரும் மக்களுக்கு, தங்களுடைய திருமண பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மணவிலக்கு மட்டுமே ஒரே வழியாகிறது.
மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு ஒரு நுழைவாயிலா?
பெரும்பாலானோருடைய விஷயத்தில், மணவிலக்கு, மகிழ்ச்சிக்கான ஒரு நுழைவாயிலாக நிரூபிக்கவில்லை.a மணவிலக்குச் செய்துகொண்ட 60 தம்பதிகளைக் கொண்டு நடத்திய ஒரு 15-வருட சுற்றாய்வுக்குப் பிறகு மனநல ஆராய்ச்சியாளர் ஜூடத் உவாலர்ஸ்டீன் “மணவிலக்கு ஏமாற்றக்கூடியது,” என்று சொல்கிறார். “சட்டரீதியில் இது ஒரே ஒரு சம்பவம்தான், ஆனால் மனநிலை சம்பந்தமாக இது ஒரு நிகழ்ச்சிக் கோவையாக—சில சமயங்களில் காலத்தால் இணைக்கப்படும் நிகழ்ச்சிகளின், இடமாற்றங்களின், உறவுமுறை மாற்றங்களின் முடிவுறா கோவையாக இருக்கிறது.” பெண்களில் கால்பாகத்தினருக்கும், ஆண்களில் ஐந்திலொரு பாகத்தினருக்கும் மணவிலக்குச் செய்து பத்து வருடங்கள் கழித்தும் அவர்களுடைய வாழ்க்கை வழக்கமான நிலைக்குத் திரும்பவில்லை என்பதாக அவருடைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள் மணவிலக்குச் செய்துகொண்டவர்களின் பிள்ளைகளே. உட்பட்டிருக்கும் எல்லா பிள்ளைகள் மீதும், மணவிலக்கு “பலம்வாய்ந்த முற்றிலும் எதிர்ப்பார்க்காத பாதிப்புகளைக்” கொண்டிருந்தது என்பதாக அதே ஆராய்ச்சியிலிருந்து உவாலர்ஸ்டீன் கண்டுபிடித்தார். தங்களுடைய பெற்றோரின் மணவிலக்குச் சம்பந்தமாக எந்தவித கசப்பான உணர்ச்சிகளும் இல்லை என்று கூறும் சில பிள்ளைகள், பிற்காலத்தில் தங்கள் வாழ்க்கையில் ஒரு விவாகத் துணையைத் தேடும்போது திடீரென அத்தகைய உணர்ச்சிகள் தோன்றுவதைக் காணலாம்.
இது மணவிலக்குக்குப் பலியானோர் ஒருபோதும் மகிழ்ச்சியைக் கண்டடையமாட்டார்கள் என்று சுட்டிக் காட்டாது; காரணம் சிலர் மகிழ்ச்சியைக் கண்டடைகின்றனர். இவர்களுக்கு மறுவுருப்படுத்தப்பட்ட ஓர் ஆளுமை, வழக்கமாகவே அவர்களுடைய பழைய ஆளுமையிலிருந்து தோன்றுகிறது. உதாரணமாக, மணவிலக்கின் அதிர்ச்சியும், அதோடு சேர்ந்துவருகிற துக்கம், சுய-மதிப்பைப் பற்றிய சந்தேகம் போன்றவையும் மறைந்ததும், இக்கடுஞ்சோதனைகளிலிருந்து ஓர் உறுதியான, உயிர்த்துடிப்புள்ள, முழுமையான ஓர் ஆள் தோன்றுகிறார்.
தன்னைக் கைவிட்டு மற்றொருத்தியோடு சென்றுவிட்ட கணவனின் மனைவி ஒருவர் விவரிக்கிறார்: ஏற்பட்ட காயமும் கோபமும் தணிய ஆரம்பித்தப்பிறகு, “உள்ளுக்குள் நீங்கள் ஒரு வித்தியாசப்பட்டவராய் உணருகிறீர்கள். உங்கள் உணர்ச்சிகள் மாறிவிட்டிருக்கின்றன. நீங்கள் முன்பிருந்த ஆளாக இனி ஒருபோதும் இருக்கமுடியாது.” அவர் ஆலோசனை கூறுகிறார்: “ஒரு தனிநபராக மீண்டும் உங்களையே அறிந்துகொள்வதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணத்தில் துணைகள் பொதுவாகத் தங்களுடைய விருப்பங்களையும், ஆசைகளையும் மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அடக்கிவைக்கின்றனர். ஆனால் மணவிலக்கிற்குப் பிறகு, உங்களுடைய விருப்பு வெறுப்புகள் எவை என்பதைக் கண்டுபிடிக்க நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் உணர்ச்சிகளைப் புதைப்பீர்களேயானால் அவற்றை உயிருடன் புதைத்துவிடுகிறீர்கள். ஒரு நாள் அவை திரும்ப வரும், நீங்கள் அவற்றை எதிர்ப்படவேண்டியிருக்கும். எனவே உங்கள் உணர்ச்சிகளை இப்போதே எதிர்ப்பட்டு அவற்றினூடே செயலாற்றுங்கள்.”
மணவிலக்கு விளைவிக்கக்கூடிய பிரச்னைகள் அதிகம் அறியப்பட்டிருப்பதால், குறைந்த ஆட்களே அதை ஒரு தெரிவாகத் தெரிந்துகொள்கின்றனர். அதிகரித்துவரும் சிறுபான்மை ஆலோசகர்கள் இப்போது பிரச்னைகளுக்குள்ளான தம்பதிகளை “சேர்ந்து வாழும்படி” உற்சாகப்படுத்துகின்றனர், என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது. டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் எல்கைன்ட் எழுதினார்: “ஒரு மணவிலக்கை அனுபவிப்பது, ஓரளவு பனிச்சறுக்கு விளையாட்டில் உங்கள் காலை உடைத்துக்கொள்வது போலாகும். பனிச்சறுக்கு விடுதியில் அநேகர் காலை உடைத்துக்கொண்டனர் என்பதற்காக உடைந்துபோன உங்களுடைய கால் குறைவாகவே வலிக்கும் என்றாகிவிடாது.”
விவாக பிரச்னைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள மணவிலக்கு ஓர் எளிய வழி அல்ல. அப்படியென்றால், விவாக முரண்பாடுகளைத் தீர்க்க ஒரு நல்ல வழிதான் என்ன?
[அடிக்குறிப்புகள்]
a ஒரு சட்டப்பூர்வமான மணவிலக்கு அல்லது ஒரு சட்டப்பூர்வமான பிரிவு மட்டுக்குமீறிய துர்ப்பிரயோகம் அல்லது வேண்டுமென்றே ஆதரிக்காமல் கைவிடப்படுவதிலிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பைத் தரலாம்.
[பக்கம் 7-ன் படம்]
இன்று தம்பதிகள் அடிக்கடி ஒருவரோடொருவர் பேச்சுத் தொடர்புகொள்ள முடிவதில்லை