அழுத்தத்தைச் சமாளிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்
“அநேக பிள்ளைகள் பேசவேண்டிய தேவை இருக்கும்போது—சரீரப்பிரகாரமாகவோ உணர்ச்சிசம்பந்தமாகவோ—வீட்டில் அவர்கள் யாரையும் காண்பதில்லை.” —சோர்வு—குடும்பங்கள் அறிந்திருக்கவேண்டியது.
குடும்பம் ஓர் உணர்ச்சிசம்பந்தப்பட்ட ஆய்வுக்கூடம் என்று சரியாகவே அழைக்கப்பட்டிருக்கிறது. அது பிள்ளை தன்னுடைய நம்பிக்கைகளைப் பரிசோதித்து, விளைவுகளைக் கவனித்து, வாழ்க்கையைப்பற்றி நிச்சயமான முடிவுகளை அடையத் தொடங்கும் ஓர் ஆராய்ச்சி நிலையமாக இருக்கிறது. தங்களுடைய பிள்ளைகள் அழுத்தங்கள் நிறைந்த ஒரு சுற்றுச்சூழலிலல்ல, ஆனால் ஓர் ஆரோக்கிய சுற்றுச்சூழலில் அத்தகைய இன்றியமையாத பரிசோதனைகளை நடத்துவதைப் பெற்றோர் எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ளமுடியும்?
கவனித்துக் கேளுங்கள்
நெருக்கடியில் பிள்ளை புத்தகம் பெற்றோரை இவ்வாறு வற்புறுத்துகிறது: “உங்கள் பிள்ளையோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டிருங்கள்.” பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் ஓர் உயிர்நாடியாக, உரையாடல் (dialogue) குறிப்பாக இன்றியமையாததாய் இருக்கிறது. விசேஷமாகக் குடும்பத்தில் அதிர்ச்சிதரும் சம்பவம் ஏதேனும் நிகழ்ந்திருக்குமேயானால் அது அவ்வாறு இருக்கிறது. பிள்ளை அமைதியாக இருப்பதால், அந்த அதிர்ச்சிதரும் நிகழ்ச்சிக்கு அவன் எதிர்மறையான பிரதிபலிப்பை அனுபவிக்கிறதில்லை அல்லது அவன் சமாளித்துக் கொள்கிறான் என்று ஒருபோதும் ஊகிக்காதீர்கள். அவன் வெறுமனே கவலை மற்றும் துன்ப உணர்ச்சிகளை மறைத்து வைத்துக்கொண்டு, தன்னுடைய பெற்றோர் பிரிந்ததைத் தொடர்ந்து ஆறே மாதத்தில் தன்னுடைய எடையில் 15 கிலோவைக் கூட்டிய ஓர் ஏழு வயது சிறுமியைப்போல், மெளனமாகவே துன்புறலாம்.
“உரையாடல்” என்ற வார்த்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பேச்சாளர்கள் ஈடுபட்டிருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. ஆகவே, பெற்றோர் மட்டுமே எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்கக்கூடாது. தங்களுடைய ஆறு வயது மகன் வீட்டில் கட்டுப்படுத்த முடியாதளவு முரட்டுத்தனமாக நடந்துகொண்டபோது ரிக் மற்றும் ஸூ ஆலோசனையை நாடிச்சென்றனர். முழுக் குடும்பத்தினரையும் சந்தித்த பிறகு, அந்த ஆலோசகர் ஏதோவொன்றைக் குறிப்பிட்டுக் காட்டினார். “அந்தப் பெற்றோர் எல்லா காரியங்களையுமே மிக புத்திக்கூர்மையோடும், அடிக்கடி தேவைக்கதிக நீண்ட விவரிப்புகளோடும் ஆராய்ந்துபார்த்தனர்,” என்று அவர் கூறினார். “கூடுதலாக, அந்தப் பெற்றோர் உரையாடலில் தாங்களே பேசிக்கொண்டிருக்கும் மனப்போக்கைக் கொண்டிருந்தனர். அந்தப் பிள்ளைகள் பொறுமை இழந்துகொண்டிருந்ததை என்னால் காணமுடிந்தது.” ஒரு பிள்ளைத் தன்னைத்தானே வெளிப்படுத்தும்படி செய்வது நன்மையானது. (யோபு 32:20-ஐ ஒப்பிடவும்.) பிரச்னைகள் உருவாகும்போதே அவனால் அவற்றை வெளிப்படுத்த முடியவில்லையெனில், பின்னர் அவற்றைத் தன் நடத்தையில் காண்பிக்கலாம்.—நீதிமொழிகள் 18:1-ஐ ஒப்பிடவும்.
சிட்சை தேவைப்படும்போது உரையாடல் முக்கியமாக இருக்கிறது. கண்டித்தலைப்பற்றி பிள்ளை எவ்வாறு உணருகிறான்? தான் ஏன் தண்டிக்கப்படுகிறான் எனப் புரிந்துகொள்கிறானா? பிள்ளை எவ்வாறு உணரவேண்டும் என்று வெறுமனே கூறுவதைவிட, அவனுடைய இருதயத்தில் உள்ளதென்ன என்று கண்டுபிடியுங்கள். அவன் தகுந்த முடிவை எடுக்கும்படி அவனோடு நியாயங்காட்டி விளக்குங்கள். “மனதுக்கு உணவளியுங்கள், ஆனால் உங்கள் பிள்ளையை அசைபோட விடுங்கள்” என்று எழுதுகிறார் இலேன் ஃபேன்ட்ல் ஷிம்பர்க்.
உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
சில பெற்றோர், “நீ அழுதது போதும் நிறுத்து,” “நீ அப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது,” “அது நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு மோசம் ஒன்னுமில்லை,” என்றெல்லாம் சொல்லி உரையாடலை நிறுத்திவிடுகின்றனர். பிள்ளையின் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்வது மிகவும் நல்லது. “உன்னை ஏதோ கவலைப்பட வைத்திருக்கிறதை என்னால் உணர முடிகிறது,” “நீ உண்மையிலேயே மன அமைதியற்று காணப்படுகிறாய்,” “ஆம், நீ ஏமாற்றமடைந்திருப்பாய்.” இது உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்படி செய்யும்.
இதன் சம்பந்தமாகப் பிள்ளைகள் கவனிக்கத்தக்க வகையில் பேசுவதெப்படி & பிள்ளைகள் பேசுகிற வகையில் கவனிப்பதெப்படி (How to Talk so Kids Will Listen & Listen so Kids Will Talk) புத்தகம் ஒரு மதிப்பிடத்தக்க குறிப்பைக் கொடுக்கிறது: “பிள்ளையின் மகிழ்ச்சியற்ற உணர்ச்சிகளைத் தள்ளிவிட நீங்கள் எவ்வளவு முயற்சிசெய்கிறீர்களோ, அவற்றை நீக்கிப்போடுவதை அவன் அவ்வளவு கடினமாகக் காண்கிறான். அந்த எதிர்மறையான உணர்ச்சிகளை எந்தளவு சுமுகமாக உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ, அவற்றை நீக்கிப்போடுவதையும் அவன் அந்தளவு சுலபமாகக் காண்கிறான். மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தை விரும்புவீர்களேயானால், மகிழ்ச்சியற்ற காரியங்கள் அதிகத்தை வெளிப்படுத்த அனுமதிக்கத் தயாராக இருப்பது நல்லது என்றும்கூட நீங்கள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.”—பிரசங்கி 7:3-ஐ ஒப்பிடவும்.
ஒற்றுணர்வைக் காண்பியுங்கள்
“வயதுவந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரு பிள்ளையின் உலகைத் தங்களுடைய சொந்த அறிவுக்கேற்ப நோக்குவதால், தங்களுடைய சொந்த வாழ்க்கையைவிட மற்றெந்த வாழ்க்கையையும் அழுத்தம் நிறைந்ததாக எண்ணிப்பார்ப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது,” என்று மேரி சூஸன் மில்லர் எழுதுகிறார்.
ஆம், வளர்ந்துவரும்போது தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், கவலைகளையும் பெற்றோர் எளிதில் மறந்துவிடுகின்றனர். ஆகவே, தங்கள் பிள்ளைகள் உணரும் அழுத்தங்களை அவர்கள் அடிக்கடி குறைவாக எண்ணுகின்றனர். ஓர் ஆசை விலங்கின் சாவு, ஒரு நண்பனின் மரணம், புதிய அயலகத்துக்குக் குடிமாறிப்போதல் போன்றவற்றை எதிர்ப்படுவது எவ்வாறிருந்தது என்பதைப் பெற்றோர் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டும். தங்களுடைய சொந்த பிள்ளைப்பருவ பயங்களை, பகுத்தறிவற்றதாய் இருந்தாலும் சரி, ஞாபகப்படுத்திப் பார்க்கவேண்டும். ஞாபகம் வைப்பது ஒற்றுணர்வின் ஒரு திறவுகோலாக இருக்கிறது.
சரியான முன்மாதிரியை வையுங்கள்
உங்களுடைய பிள்ளை அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறான் என்பது, பெரும்பாலும் ஒரு பெற்றோராக நீங்கள் அதை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. நீங்கள் வன்முறையைக் கையாண்டு அழுத்தத்தைக் குறைக்க முயற்சிசெய்கிறீர்களா? அப்படியானால், உங்களுடைய பிள்ளையும் தனது கவலையை அதேபோன்ற செயலில் காண்பித்தால் ஆச்சரியப்படாதிருங்கள். உங்களுடைய அமைதி மிகவும் குலைக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் மெளனமாயிருந்து துன்புறுகிறீர்களா? அப்படியானால் உங்கள் பிள்ளை நம்பிக்கையுடன் மனம் திறந்து பேசவேண்டும் என்று நீங்கள் எவ்வாறு வற்புறுத்த முடியும்? அழுத்த உணர்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்த்துவைக்கப்படுவதைவிட அவை புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு உங்கள் குடும்பத்தில் அவ்வுணர்ச்சிகள் மறைத்து வைக்கப்படுகின்றனவா? அப்படியானால் அது உங்கள் பிள்ளையின் மீது கொள்ளும் சரீரப்பிரகாரமான மற்றும் உணர்ச்சிசம்பந்தமான கெட்ட விளைவுகளைக் குறித்துத் திடுக்கிடாதீர்கள். ஏனென்றால், கவலையை மறைப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும், சாதாரணமாக அதன் வெளிக்காட்டுதலின் கடுமையையே அதிகரிக்கிறது.
அழுத்தம் நிறைந்த ஓர் உலகில் பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோருக்கு விசேஷித்த சவால்களை அளிக்கிறது. பைபிளைப் படிப்பது இந்தச் சவால்களை எதிர்ப்படுவதில் அநேகருக்கு உதவிபுரிந்திருக்கிறது. இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்; ஏனென்றால் பைபிள் ஆசிரியரே குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி வைத்தவராகவும் இருக்கிறார். “கடவுளுடைய ஞானம் அதன் விளைவுகளால் சரியானதென்று நிரூபிக்கப்படுகிறது,” என இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 11:19, தி நியூ இங்லீஷ் பைபிள்) பெற்றோர் பைபிள் நியமங்களை நடைமுறையில் பொருத்துவதன் மூலம், வேதவாக்கியங்களெல்லாம் “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது,” என்பதைக் காண்பார்கள்.—2 தீமோத்தேயு 3:16. (g93 7/22)
[பக்கம் 10-ன் படம்]
முழுமையான பேச்சுத்தொடர்பு அழுத்தத்தைத் தணிக்கிறது
[பக்கம் 11-ன் படம்]
சிறுவன் பாலைச் சிந்துகிறான், அண்ணன் அவனை ஏளனம் செய்கிறான், தந்தையோ புரிந்துகொள்ளுதலோடு அவனுக்கு ஆறுதலளிக்கிறார்