பைபிளின்கருத்து
“புதிய ஏற்பாடு” யூதர்களுக்கு எதிரானதா?
அமெரிக்க சுவிசேஷகர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: “ஒழுங்கமைக்கப்பட்ட சர்ச் தனது சரித்திரத்தின் பெரும்பகுதி பாவம் செய்துவந்திருக்கிறது; அது நியாயத்தீர்ப்பின்போது, முக்கியமாக யூத ஜனங்களுக்கு எதிராக அது காண்பித்த யூதர்-எதிர்ப்புக்கு அதிகம் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்கிறது.”
யூதர்-எதிர்ப்பு ஏன் அத்தகைய நீண்ட வெறுக்கத்தக்க ஒரு வரலாற்றைக் கொண்டிருந்து, 20-ம் நூற்றாண்டிற்குள்ளும்கூட தொடர்ந்து வந்திருக்கிறது? புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிற, கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களைச் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். உதாரணமாக, ஹார்வர்டு இறைமையியல் கல்லூரியின் முதல்வர், க்றிஸ்டர் ஸ்டென்டல் வலியுறுத்தினார்: “அந்த . . . புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டவை யூதர்களை வெறுப்பதற்கான ‘தெய்வீக’ உரிமமாகச் செயல்பட்டுவந்திருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே மற்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையே.” இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படலாம், ஆனால் அது மெய்யாகவே உண்மைதானா?
இயேசுவின் மரணத்திற்கு யார் குற்றஞ்சாட்டப்பட்டனர்?
“புதிய ஏற்பாடு” யூதர்களுக்கு எதிரானது என்பதற்கு அத்தாட்சியாக அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் ஒரு பகுதி மத்தேயு 27:15-25. இயேசுவைத் தூக்கிலிடவேண்டும் என்று ஒரு யூத கூட்டம் ரோம கவர்னர் பொந்தியு பிலாத்துவிடம் கோரிக்கை விடுத்தனர், மற்றும் “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக,” என்றும்கூட கூக்குரலிட்டனர் என்பதாக அதில் நாம் சொல்லப்படுகிறோம். இயேசுவின் மரணத்திற்கு முதல் நூற்றாண்டு யூதர்கள் அனைவருமே பொறுப்பாளிகளாய் இருந்தனர் என்றும், எனவே யூதர்கள் கிறிஸ்துவின் கொலைபாதகர்கள் என்று என்றென்றுமாக அறியப்படவேண்டும் என்றுந்தான் “புதிய ஏற்பாடு” அதில் போதித்துக்கொண்டிருந்ததா?
முதலாவது, இயேசுவின் ஊழியத்தின்போது பெரும்பாலான யூதர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? யூதர் கூட்டங்களின் மத்தியில், குறிப்பாக அவரது ஊழியத்தின் பெரும்பகுதியைச் செய்த கலிலேயாவில், இயேசு மிகவும் விரும்பத்தக்கவராக இருந்தார் என்று “புதிய ஏற்பாடு” வெளிப்படுத்துகிறது. (யோவான் 7:31; 8:30; 10:42; 11:45) அவர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான், ஒரு யூதர் கூட்டம் அவரை மேசியாவாக எருசலேமிற்குள் வரவேற்றது.—மத்தேயு 21:6-11.
அப்படியானால் இயேசு கொல்லப்படவேண்டும் என்று விரும்பியது யார்? பிரதான ஆசாரியர்கள் மத்தியிலும் பரிசேயர், சதுசேயர் அநேகர் மத்தியிலும் இயேசு வெறுக்கப்படக்கூடியவராய் இருந்தார் என்று “புதிய ஏற்பாடு” குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம் அவர் அவர்களுடைய மாய்மாலத்தன்மையை வெளிப்படுத்தியதே. (மத்தேயு 21:33-46; 23:1-36)a பிரதான ஆசாரியன் காய்பா இயேசுவைத் தீவிரமாக எதிர்த்தவர்களுள் ஒருவனாக இருந்தான். சந்தேகமின்றி இயேசு தேவாலயத்திலிருந்து காசுக்காரர்களை விரட்டியடித்தபோது இவன் தனிப்பட்ட பொருளாதார நஷ்டத்திற்கு ஆளாகியிருந்திருப்பான். (மாற்கு 11:15-18) அது மட்டுமன்றி, யூதர் கூட்டங்களின் மத்தியில் இயேசு விரும்பப்படுவது இறுதியில் ரோமர் தலையிடுதலுக்கும் தன்னுடைய சொந்த அதிகாரத்தை இழப்பதற்கும் வழிநடத்தும் என்று காய்பா பயப்பட்டான். (யோவான் 11:45-53) இதன் காரணமாக, அந்தப் பிரதான ஆசாரியர்களும் மற்ற மதத் தலைவர்களும் சேர்ந்து இயேசுவின் மரணத்திற்குத் திட்டம் வகுத்து, அத்திட்டத்தை நிறைவேற்ற அவரை ஒரு ரோம நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். (மத்தேயு 27:1, 2; மாற்கு 15:1; லூக்கா 22:66–23:1) இயேசு யூத ஜனங்கள் மத்தியில் விரும்பத்தக்கவராக இருந்ததே அவருடைய மரணத்திற்கு வழிநடத்திற்று என்பது என்னே ஒரு முரண்பாடு!
இயேசுவின் பிரபலத்தைக் கருதுகையில், அவருடைய மரணத்திற்காக ஒரு யூதர் கூட்டம் எவ்வாறு கூக்குரலிட்டிருக்க முடியும்? இயேசுவின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் கலிலேயர்களாய் இருந்ததால், அவர் மரிக்கவேண்டும் என்று விரும்பிய கூட்டம் முக்கியமாக யூதேயாவைச் சேர்ந்ததாக இருந்திருக்க சாத்தியமுண்டு. கலிலேயர்கள் அனலான இருதயமுள்ளவர்களாயும் மனத்தாழ்மை உடையவர்களாயும் ஒளிவுமறைவு இல்லாத சுபாவமுள்ளவர்களாயும் இருந்தனர். யூதேயாவைச் சேர்ந்தவர்களோ, முக்கியமாக எருசலேமில் இருந்தவர்கள், பெருமையுள்ளவர்களாயும் செல்வந்தர்களாயும் உயர்ந்த கல்வியறிவு உடையவர்களாயும் இருந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், அந்தக் கூட்டம் ‘பிரதான ஆசாரியராலும் மூப்பராலும்’ தூண்டிவிடப்பட்டது என்று மத்தேயு வெளிப்படுத்துகிறார். (மத்தேயு 27:20) இவ்வாறு அந்தக் கூட்டத்தின் வெறியைக் கிளறிவிடுவதற்காக அவர்கள் என்ன பொய்யைச் சொல்லியிருக்கக்கூடும்? முன்பே இயேசுவின் விசாரணையின்போது சொல்லி, இயேசுவைத் தூக்கிக் கொன்றபோது திரும்பவும் சொன்ன அதாவது, இயேசு இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போடுவேன் என்று சொன்ன அதே பொய்தானா?—மாற்கு 14:57, 58; 15:29.b
சமுதாயப் பொறுப்பு
இந்த யூதர் கூட்டந்தானே முழு யூத ஜனங்களும் அல்ல என்றால், சுமார் ஐம்பது நாட்கள் கழித்து வாரங்களின் பண்டிகையை ஆசரிக்க எருசலேமில் கூடிவந்திருந்த யூதர்களின் மாபெரும் கூட்டத்திடம் பேசும்போது “நீங்கள் [இயேசுவை] பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளால் கழுமரத்தில் ஆணியடித்தீர்கள்,” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னது ஏன்? (அப்போஸ்தலர் 2:22, 23) அவர்களில் பெரும்பாலானோர் இயேசுவின் மரணத்திற்கு வழிநடத்திய சம்பவங்களோடு சம்பந்தப்பட்டவர்களாக இல்லை என்று பேதுரு நிச்சயமாகவே அறிந்திருந்தார். அப்படியானால், பேதுரு எதை அர்த்தப்படுத்தினார்?
வேத எழுத்துக்களின் பிரகாரம், பாவநிவிர்த்தி செய்யப்படாத ஒரு கொலை, கொலையாளியின் மீது மட்டுமல்ல ஆனால் அவனை நியாயந்தீர்க்க தவறிய சமுதாயத்தின் மீதும் பழியைக் கொண்டுவருகிறது. (உபாகமம் 21:1-9) உதாரணமாக, தங்கள் மத்தியில் இருந்த ஒரு கொலைகாரக் கும்பலைத் தண்டிக்க தவறியதற்காகப் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமே இரத்தப்பழி சுமந்தவர்களாக ஒருமுறை நியாயந்தீர்க்கப்பட்டிருந்தனர். அந்தக் கோத்திரத்தின் பெரும்பகுதியினர் அந்தக் கொலையில் நேரடியாக ஈடுபடாதிருந்தபோதிலும், அந்தக் குற்றச்செயலைப் பொறுத்ததால், அவர்கள் அதை மன்னித்தனர், அதன் காரணமாக ஓரளவு பொறுப்பேற்றனர். (நியாயாதிபதிகள் 20:8-48) உண்மையிலேயே “மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி,” என்று குறிப்பிடப்படுகிறது.
அதைப்போலவே, முதல் நூற்றாண்டு யூத தேசத்தார் இரத்தப்பழி சுமந்த தங்களுடைய தலைவர்களின் குற்றச்செயலுக்கு இணக்கம் தெரிவித்தனர். பிரதான ஆசாரியர் மற்றும் பரிசேயரின் கொலைபாதக செயல்களைப் பொறுத்ததால், முழுத் தேசத்தாருமே பொறுப்பேற்றனர். சந்தேகமின்றி இதனால்தான் பேதுரு தான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்களிடம் மனந்திரும்பும்படி கேட்டுக்கொண்டார்.c
அவ்வாறு இயேசுவை மேசியாவாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் யாவை? எருசலேம் நகரத்தை நோக்கி இயேசு சொன்னார்: “உங்கள் வீடு [தேவாலயம்] உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.” (மத்தேயு 23:37, 38) ஆம், கடவுள் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதை நிறுத்திவிட்டார். அதைத் தொடர்ந்து ரோம படைகள் எருசலேமை அதன் தேவாலயத்தோடே அழித்துப்போட்டன. ஒரு மனிதன் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விரயப்படுத்தினால் அவனுடைய குடும்பத்தினர் அதன் விளைவுகளை உணர்வதுபோல, தெய்வீக பாதுகாப்பின் இழப்பு இயேசுவின் மரணத்திற்காகக் கூக்குரலிட்டவர்களால் மட்டுமல்ல அவர்களுடைய குடும்பங்களாலும் உணரப்பட்டது. இந்த அர்த்தத்தில்தான் இயேசுவின் இரத்தம் அவர்கள் மீதும் அவர்களுடைய பிள்ளைகள் மீதும் வந்தது.—மத்தேயு 27:25.
இருப்பினும், வருங்கால யூத தலைமுறைகள் இயேசுவின் மரணத்திற்காக விசேஷித்த பழியைச் சுமக்கும் என்று ‘புதிய ஏற்பாட்டில்’ எதுவும் காண்பிக்கிறதில்லை. அதற்கு மாறாக, அவர்களுடைய முற்பிதா ஆபிரகாமில் உள்ள அன்பின் காரணமாக, கடவுள் யூதர்களுக்கு விசேஷித்த பரிவு காண்பித்து, அவர்கள் கிறிஸ்தவர்களாவதற்கு முதல் வாய்ப்பை நல்கினார். (அப்போஸ்தலர் 3:25, 26; 13:46; ரோமர் 1:16; 11:28) இந்த வாய்ப்பு இறுதியாக யூதர்களல்லாதோருக்கு அளிக்கப்பட்டபோது, கடவுள் எந்த நபரோடும் தேச பிறப்பின் அடிப்படையில் தொடர்புகொள்வதை நிறுத்தினார். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்,” என்று பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 10:34, 35) அப்போஸ்தலன் பவுல் பின்னர் எழுதினார்: “யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை.” (ரோமர் 10:12) அப்போது யூதர்கள் கடவுள் முன்னிலையில் யூதரல்லாதோருக்குச் சமமான தகுதிநிலையையே கொண்டிருந்தனர், இன்றும் அதுவே உண்மையாக இருந்துவருகிறது.—எசேக்கியேல் 18:20-ஐ ஒப்பிடவும்.
கிறிஸ்தவமண்டலத்தில் யூதர்-எதிர்ப்பு ஏன்?
ஆகவே “புதிய ஏற்பாடு” யூதர்களுக்கு எதிரானது அல்ல என்று காணமுடிகிறது. அதற்குப்பதிலாக யூதனாக வாழ்ந்து மரித்த, மோசேயின் கட்டளைகளின் கருத்துக்களுக்கு மரியாதை செலுத்தும்படி தன்னைப் பின்பற்றிய யூதர்களுக்குப் போதித்த, ஒரு மனிதனின் போதனைகளைப் பதிவுசெய்கிறது. (மத்தேயு 5:17-19) ஆனால் ‘புதிய ஏற்பாட்டை’ குறைகூற முடியாதென்றால் கிறிஸ்தவமண்டலத்தில் ஏன் யூதர்-எதிர்ப்பு அந்தளவு தொடர்ந்து நிலவி வந்திருக்கிறது?
கிறிஸ்தவத்தைத்தானே குறைகூறமுடியாது. யூதாவின் காலத்துப் பொய்க் கிறிஸ்தவர்கள் “தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி”யது போன்ற அதே வழியில், கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்கள் வரலாறு முழுவதும் கிறிஸ்துவின் நாமத்தை மதவெறி மற்றும் தப்பெண்ணம் போன்றவற்றின் சேற்றில் இழுத்திருக்கின்றனர். (யூதா 4) இவ்வாறு, கிறிஸ்தவமண்டலத்தில் உள்ள யூதர்-எதிர்ப்புப் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்துவருபவர்களின் தன்னல தப்பெண்ணங்களின் காரணமாகவே இருந்துவந்திருக்கிறது.
ஆர்வமூட்டும்வகையில், சிலர் எழுந்து இயேசுவின் நாமத்தில் எல்லா வகையான வல்லமைமிக்க அற்புதங்களைச் செய்ததாகப் பெருமைபாராட்டுவர்; ஆனால் உண்மையிலேயே அவர்கள்—தம்முடைய நண்பர்களாக அல்ல—“அக்கிரமச் செய்கைக்காரர்”களாக இருப்பர், என்று இயேசுதாமே முன்னறிவித்தார். (மத்தேயு 7:21-23) இவர்களில் அநேகர் தங்களுடைய வெறுப்புகளுக்கும் தப்பெண்ணங்களுக்கும் ‘புதிய ஏற்பாட்டை’ ஒரு காரணமாகப் பயன்படுத்த முயற்சிசெய்திருக்கின்றனர். ஆனால் பகுத்தறிவுள்ள ஜனங்கள் அந்த வெறும் போலிநடிப்பைக் காணமுடிகிறது.
பொய்க் கிறிஸ்தவர்கள் தங்களுடைய யூதர்-எதிர்ப்புக்குக் கடவுளிடம் கணக்கு ஒப்படைக்கவேண்டும். கள்ளப் பணம் இருந்துவருவது உண்மைப் பணம் இருந்துவருவதைப் பொய்யாக்க முடியாததுபோல, போலிக் கிறிஸ்தவர்கள் இருப்பதுதானே, தங்களுடைய தப்பெண்ணங்களுக்காக அல்ல ஆனால் தங்களுடைய அன்புக்காக அறியப்பட்ட உண்மைக் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர் என்ற உண்மையை எவ்வழியிலும் மறைப்பதில்லை. உங்களுக்கு அருகில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் அத்தகைய ஜனங்களோடு நீங்கள் ஏன் பழகக்கூடாது? (g93 8/8)
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் காலப்பகுதியில் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியர்கள் ரோம பிரதிநிதிகளால் வருடத்திற்கு ஒருமுறை நியமிக்கப்பட்டு, பின் விலக்கப்பட்டனர் என முதல் நூற்றாண்டு யூத வரலாற்று ஆசிரியர் ஜோசஃப் பென் மத்தியாஸ் (ஃப்ளேவியஸ் ஜொஸிஃபஸ்) பதிவு செய்கிறார். இந்தச் சூழ்நிலையில், பிரதான ஆசாரியத்துவம் சமுதாயத்தின் மகா மோசமான அங்கத்தினரை மட்டுமே கவர்ந்த சம்பள பதவியாகத் தாழ்நிலையை அடைந்தது. தி பாபிலோனியன் டால்முட் அந்தப் பிரதான ஆசாரியர் சிலரின் மட்டுக்கு மீறிய ஒழுக்கக்கேடுகளைப் பதிவுசெய்கிறது. (பெசாஹிம் 57a) அந்த டால்முட் அதேபோலப் பரிசேயர்களுடைய மாய்மாலத்தின் பேரிலான மனச்சாய்வைப்பற்றியும் குறிப்பிடுகிறது. (ஸோட்டா 22b)
b இயேசு தம்முடைய பகைவர்களிடத்தில் உண்மையிலேயே “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்,” என்றுதான் சொன்னார். (யோவான் 2:19-22) ஆனால் யோவான் குறிப்பிட்டுக் காட்டுகிற விதமாக, இயேசு எருசலேமிலுள்ள தேவாலயத்தை அல்ல, ஆனால் “தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.” இவ்வாறு இயேசு எதிர்பார்த்திருக்கும் தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் ஒரு கட்டடத்தை இடித்துத் திரும்ப எழுப்புவதற்கு ஒப்பிட்டுக்கொண்டிருந்தார்.—மத்தேயு 16:21-ஐ ஒப்பிடவும்.
c அதைப்போன்ற பொறுப்பு நவீன காலத்திலும்கூட கவனிக்கப்பட்டிருக்கிறது. நாசி ஜெர்மனியின் குடிமக்கள் அனைவருமே அந்த அட்டூழியத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. இருப்பினும், ஜெர்மனி ஒரு சமுதாயப் பொறுப்பை உணர்ந்து, நாசி துன்புறுத்தலில் பலியானோருக்கு நஷ்டஈடு செய்யத் தானாகவே விருப்பப்பட்டுத் தெரிந்துகொண்டது.
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
இயேசுவோ அவருடைய சீஷர்களோ யூதர்-எதிர்ப்பை ஆதரித்ததில்லை
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
கிறிஸ்தவமண்டலத்தில் யூதர்-எதிர்ப்பு பெயரளவில் மட்டும் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களாலேயே கைக்கொள்ளப்படுகிறது