“சகிப்புத்தன்மையின் படிப்பினையைக் கற்றுக்கொள்ளுதல்”
நாம் 20-ம் நூற்றாண்டின் முடிவை அணுகிக்கொண்டிருக்கையில், 1914-ல் இருந்து நிலவிவரும் தன்னுடைய வன்முறை வரலாற்றிலிருந்து மனிதவர்க்கம் பொதுவாகவே ஏதேனும் படிப்பினையைக் கற்றுக்கொண்டுள்ளதா? யுனெஸ்கோவின் (ஐக்கியநாட்டுக் கல்வி, விஞ்ஞானம், கலாச்சார நிறுவனத்தின்) பொது இயக்குநர், ஃபேடேரீகோ மாயோர், தி யுனெஸ்கோ கூரியர் பத்திரிகைக்காக எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அதிக நம்பிக்கை தெரிவிக்கவில்லை. “பகுத்துணரப்படக்கூடியதாய் வெளிப்படும் உலகம் . . . முழு இருதயத்தோடுகூடிய ஆர்வத்தைத் தூண்டுகிறதில்லை. மதச் சம்பந்தமான மாறா மரபுக்கோட்பாடு, தேசீயப்பற்று, இன மற்றும் குல தப்பெண்ணம், யூத-எதிர்ப்பு: சுதந்திரத்தின் புயல் வெறுப்புணர்ச்சியின் தீயை மீண்டும் கிளறிவிட்டிருக்கிறது. . . . பழைய ஒழுங்குமுறையின் வீழ்ச்சி, எல்லா வகையான புதிய முயற்சிகளுக்கும்—அவற்றில் சில உச்ச அளவான குழப்பத்தை உண்டுபண்ணும் முயற்சிகளுக்கும்—களத்தைத் திறந்துவிட்டிருக்கிறது. இதனால் ஒரு வெற்றிடத்தில் வன்முறை செழித்தோங்குகிறது.”
வன்முறை ஏன் செழித்தோங்குகிறது? வெறுமனே மத அல்லது இன பின்னணியில் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதற்காக, ஜனங்கள் ஏன் மற்றவர்களை வெறுத்துக் கொல்லுகின்றனர்? முன்னாள் யுகோஸ்லாவியாவிலும், இந்தியாவிலும், வட அயர்லாந்திலும், ஐக்கிய மாகாணங்களிலும்சரி, அல்லது உலகில் வேறு எந்த இடமானாலும்சரி, அடிப்படையான காரணங்களில் ஒன்று தவறாக வழிநடத்தப்பட்ட கல்வியில் அடங்கியிருப்பதாக தோன்றுகிறது. ஒருவரோடொருவர் காண்பிக்கும் சகிப்புத்தன்மையையும் மரியாதையையும் கற்பதற்குப் பதிலாக, ஜனங்கள் அவநம்பிக்கையையும் வெறுப்புணர்ச்சியையுமே தங்களுடைய பெற்றோரிடத்திலும் பள்ளியிலும் பொதுவாக சமுதாயத்திடமிருந்தும் கற்றுகொண்டிருக்கின்றனர்.
ஃபேடேரிகோ மாயோர் தொடர்ந்து கூறினார்: “வஞ்சகமான அந்தச் சகிப்புத்தன்மையை நாம் உதறித்தள்ளுவோமாக. ஏனென்றால், அது லட்சக்கணக்கான மனிதரை வாட்டும் வறுமை, பட்டினி, துன்பம் போன்ற—சகிக்கக்கூடாதவற்றை சகிக்கும்படி நம்மை அனுமதித்திருக்கிறது. அவ்வாறு உதறித்தள்ளுவோமாகில், பரிவு மற்றும் தோழமை ஒளியின் அனலை நாம் அனுபவிப்போம்.” அவை மிகச் சிறந்த உணர்ச்சிகள். ஒளியூட்டப்பட்டதாக சொல்லப்படும் நம்முடைய உலகில் புதைந்துகிடக்கும் இருளடைந்த ஆவியை மாற்றவல்ல என்ன நடைமுறையான வழிகள் உள்ளன?
2,500-க்கும் அதிக வருடங்களுக்குமுன், ஏசாயா யெகோவாவின் இந்த வார்த்தைகளைப் பதிவு செய்துவைத்தார்: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.” (ஏசாயா 54:13) ‘தேவன் அன்பாகவே’ இருப்பதால், அவருடைய நியமங்களின்படி வாழ்பவர்கள் சமாதானத்தைக் கற்றுக்கொள்வார்கள், யுத்தத்தையல்ல; அன்பைக் கற்றுக்கொள்வார்கள், வெறுப்புணர்ச்சியையல்ல; சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்வார்கள், சகிக்காத்தன்மையையல்ல, என்பது தொடர்கிறது.—1 யோவான் 4:8.
ஜனங்களை சமாதானத்திற்கும், அன்புக்கும், சகிப்புத்தன்மைக்கும் வழிநடத்துகிற இப்போதனைகளை ஆதரித்துவருவது யார்? தாங்கள் தோன்றிய தேசங்கள் வெவ்வேறாயிருந்தாலும், ஐக்கியமாய் வாழ்வது யார்? தங்களுடைய முழு மனநிலையையுமே வெறுப்புணர்ச்சி நிறைந்த ஒன்றிலிருந்து அன்பு நிறைந்த ஒன்றுக்கு மாற்றியிருக்கும் பைபிள் கல்வியைப் பெற்றிருப்பது யார்? யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளையும் பழக்கவழக்கங்களையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்கும்படி நாங்கள் சிபாரிசு செய்கிறோம். அப்பொழுது அவர்கள் எப்படி உலகளாவிய ஓர் ஐக்கியத்தை உண்மையிலேயே கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.—யோவான் 13:34, 35; 1 கொரிந்தியர் 13:4-8. (g93 9/8)