தாய்ப்பாலுக்குச் சாதகமான அத்தாட்சி
நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
சுவையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய, மற்றும் வளரும் குழந்தைகளின் ஊட்டச் சத்துத் தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் ஒரு குழந்தை உணவைக் கற்பனை செய்துபாருங்கள். நோயை எதிர்க்கவும் குணப்படுத்தவும் வல்ல ‘அற்புத மருந்தாகிய’ ஓர் உணவைக் கற்பனை செய்துபாருங்கள். செலவேயில்லாமல், பூமியில் எல்லா இடங்களிலும் குடும்பங்களுக்குத் தயாராக கிடைக்கும் ஓர் உணவையும் கற்பனை செய்துபாருங்கள்.
சாத்தியமேயில்லை என்று சொல்கிறீர்களா? சரி, அது தொழில்துறை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை; எனினும், அத்தகைய ஒரு பொருள் இருக்கிறது. அதுதான் தாய்ப்பால்.
மனிதவர்க்க வரலாறு முழுவதிலும் இந்த அதிசயமான உணவு குழந்தை பராமரிப்புக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டு வந்தது. உதாரணமாக, பார்வோனின் மகள் குழந்தையாகிய மோசேயைக் கண்டெடுத்தபோது, அவனை வளர்ப்பதற்கு “பால்கொடுக்கிற ஒருத்தியை” அழைத்துவரும்படி அவனுடைய அக்காவை ஏவினாள் என்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது. (யாத்திராகமம் 2:5-9) பின்னர், கிரேக்க மற்றும் ரோம சமுதாயங்களில், பணக்காரப் பெற்றோருடைய குழந்தைகளுக்குப் பால்கொடுப்பதற்காக, ஆரோக்கியமான பாலூட்டுஞ்செவிலிகள் பொதுவாகவே அமர்த்தப்பட்டனர். எனினும், சமீப பத்தாண்டுகளில், தாய்ப்பாலூட்டும் பழக்கம் திடீரென குறைந்துவிட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தின் குழந்தை ஃபார்முலாக்களைவிட தாய்ப்பால் தரத்தில் குறைவானது என்று மக்களைச் சிந்திக்க வைத்த விளம்பரப்படுத்துதல் இதற்கு ஓரளவு காரணமாகும். இன்றோ, அதிகமதிகமான தாய்மார்கள் “தாய்ப்பாலே தலைசிறந்தது” என உணர்வதால் இந்தப் போக்குமுறை தலைகீழாக மாற்றப்பட்டுவருகிறது.
மிகச் சிறந்த ஊட்டச் சத்து
குழந்தைக்குப் பாலூட்ட சிருஷ்டிகரால் உள்ளமைக்கப்பட்ட முறையை விஞ்ஞானிகள் மேம்படுத்தியிருக்கின்றனரா? இல்லவே இல்லை. “வாழ்க்கையின் முதல் நான்கிலிருந்து ஆறு மாதங்களுக்குக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த உணவும் பானமுமாக இருக்கிறது,” என்று ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி (UNICEF) கூறுகிறது. தாய்ப்பாலில் புரதங்கள், வளர்ச்சி ஊக்கிகள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், என்சைம்கள், வைட்டமின்கள், நுண்ணளவு கூட்டுப்பொருள்கள் (trace elements) போன்றவை எல்லாம் அடங்கியுள்ளன. வாழ்க்கையின் முதல் சில மாதங்களின்போது ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இவையனைத்தும் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
தாய்ப்பால் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவாக மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான ஒரே உணவாகவும் இருக்கிறது. உலக சுகாதார மாநாடு மே 1992-ல் இவ்வாறு திரும்பவும் உறுதிப்படுத்தியது: “வாழ்க்கையின் முதல் நான்கிலிருந்து ஆறு மாதங்களின்போது குழந்தையின் இயல்பான ஊட்டச் சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவுவோ பானமோ தண்ணீரும்கூட, தேவையில்லை.” வெப்பமான உலர்ந்த தட்பவெப்பநிலைகளிலும்கூட ஒரு குழந்தையின் தாகத்தைத் தணிக்கப் போதுமான தண்ணீர் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது. புட்டியில் கூடுதல் தண்ணீர் அல்லது மற்ற இனிப்பு பானங்களைப் பருகவைப்பது தேவையற்றது மட்டுமல்லாமல், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிடும்படி செய்யலாம். ஏனென்றால் குழந்தைகள் வழக்கமாகவே புட்டியில் சுலபமாகக் குடிப்பதை விரும்புகின்றனர். சந்தேகமின்றி, வாழ்க்கையின் முதல் சில மாதங்களுக்குப் பின், மற்ற உணவும் பானமும் குழந்தையின் உணவுமுறையில் படிப்படியாக சேர்க்கப்படவேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் ஆதரிக்குமளவு கூட்டுப்பொருள்களின் அத்தகைய தகுந்தவொரு சமநிலையை வேறு எந்த மாற்றுப் பொருளும் கொடுப்பதில்லை. ரீப்ரடக்டிவ் ஹெல்த்—க்ளோபல் இஷ்யூஸ் என்ற புத்தகம் சொல்கிறது: “தாய்ப்பாலை மாற்றீடு செய்யும் முயற்சிகள் வெற்றிகரமாக இருந்ததில்லை. தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளைக்காட்டிலும் தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள் நோயினாலும் ஊட்டச் சத்துக் குறைவினாலும் தாக்கப்படுவதற்கான மிக அதிக அபாயத்தில் இருக்கின்றன என்பதற்கான அத்தாட்சி குழந்தைக்கு உணவளித்தல் என்ற பொருளின்மீதான சரித்திரப் புகழ்பெற்ற புத்தகங்களில் அதிகம் காணப்படுகிறது.”
தாய்ப்பால் கொடுப்பது உயிர்களைக் காக்கிறது
உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறபடி, அனைத்துத் தாய்மார்களும் தங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் நான்கிலிருந்து ஆறு மாதங்களுக்கு, வேறொன்றுமல்ல, ஆனால் தாய்ப்பால் மட்டும் கொடுத்தாலே ஒவ்வொரு வருடமும் உலகமுழுவதும் பத்து லட்ச குழந்தைகளின் மரணங்கள் தவிர்க்கப்படும். UNICEF அறிக்கை ஸ்டேட் ஆஃப் தி உவர்ல்ட்ஸ் சில்ரன் 1992 கூறுவதாவது: “தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையைவிட ஓர் ஏழை சமுதாயத்தில் உள்ள புட்டிப்பால் கொடுக்கப்பட்ட குழந்தை, வயிற்றுப்போக்கு நோயால் இறப்பதற்கு சுமார் 15 மடங்கு அதிக வாய்ப்புகளும் நுரையீரல் அழற்சியினால் இறப்பதற்கு 4 மடங்கு அதிக வாய்ப்புகளும் இருக்கின்றன.”
இது ஏன் அவ்வாறு? ஒரு காரணம் என்னவென்றால், பவுடர் பால் தாய்ப்பாலைவிட ஊட்டச் சத்தில் குறைவுபட்டதாய் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், அடிக்கடி சுத்தமற்ற தண்ணீர் அளவுக்குமீறி சேர்க்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிர் நீக்கப்படாத (unsterilized) பால்புட்டிகளில் ஊற்றி கொடுக்கப்படுகிறது. ஆகவே புட்டிப்பால் வயிற்றுப்போக்கு நோயையும் சுவாச நோய்களையும் உண்டாக்கும் பாக்டீரியாக்களாலும் வைரஸ்களாலும் எளிதில் மாசுபடுத்தப்படலாம். இந்நோய்கள் வளரும் நாடுகளில் பிள்ளைகளைப் பெருமளவில் கொன்றுவருகின்றன. இதற்கு மாறுபாடாக, முலையிலிருந்து நேரடியாக வரும் பால் எளிதில் மாசுபடுத்தப்படுவதில்லை, எதையும் சேர்க்கவேண்டிய தேவையில்லை, கெட்டுப்போவதில்லை, மற்றும் அளவுக்குமீறி தண்ணீர்போல் ஆக்கமுடியாது.
தாய்ப்பால் உயிர்களைக் காப்பதற்கான இரண்டாவது காரணம், தாய்ப்பாலில் குழந்தையை நோயிலிருந்து பாதுகாக்கும் உடற்காப்பு மூலங்கள் (antibodies) அடங்கியிருக்கின்றன. தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகள் மத்தியில் வயிற்றுப்போக்கு நோயோ மற்ற நோய்களோ ஏற்பட்டாலும் அவை வழக்கமாகவே அவ்வளவு கடுமையாக இருப்பதில்லை; மேலும் அவற்றை குணப்படுத்துவதும் எளிதே. தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பல் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், ஒவ்வாமைகள் போன்ற நோய்களுக்குக் குறைந்தளவிலேயே ஆளாகிறார்கள்போல் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்களும் ஆலோசனை கூறுகின்றனர். தாய்ப்பால் குடிப்பது தீவிரமாக உறிஞ்சிக் குடித்தலைத் தேவைப்படுத்துகிறதால், தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் முக எலும்புகளின் மற்றும் தசைகளின் தகுந்த வளர்ச்சியை ஆதரிக்கலாம்.
தாய்மார்களுக்கு நன்மைகள்
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல, அது தாய்க்கும் பயன் விளைவிக்கிறது. ஒரு நன்மையானது, குழந்தை முலைப்பாலை உறிஞ்சிக் குடிப்பது ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன் சுரப்பதைத் தூண்டிவிடுகிறது. இது பால் சுரப்பதற்கும் வெளியே வருவதற்கும் உதவுவது மட்டுமல்லாமல், கருப்பையைச் சுருங்கவும்செய்கிறது. பிள்ளைப்பேற்றிற்குப் பிறகு தாமதமின்றி கருப்பை சுருங்கும்போது, நீண்டகால இரத்தக் கசிவிற்கான வாய்ப்புக் குறைகிறது. தாய்ப்பால் கொடுப்பதானது கருவணுக்கள் திரும்ப உண்டாகி மாதவிடாய் திரும்பத் தொடங்குவதையும் தாமதிக்கிறது. இது அடுத்த கருத்தரிப்புத் தாமதிப்பதை ஏதுவாக்குகிறது. கருத்தரிப்புகளுக்கு இடையில் நீண்ட இடைவெளிகள், ஆரோக்கியமான தாய்மார்களையும் குழந்தைகளையும் அர்த்தப்படுத்துகின்றன.
பெண்களுக்கு மற்றொரு பெரிய நன்மையானது, தாய்ப்பால் கொடுத்தல் கருப்பை மற்றும் முலைப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுகிற பெண்ணுக்கு முலைப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து, அவள் தாய்ப்பாலூட்டாதிருந்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தைவிட பாதிதான் என்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாய்ப்பாலூட்டுவதன் பயன்களைப் பட்டியலிடும்போது அசட்டை செய்யப்படக்கூடாத ஒன்று தாய்-சேய் பிணைப்பாகும். தாய்ப்பால் கொடுப்பது வெறுமனே உணவளிப்பதை மட்டுமல்ல, ஆனால் பேச்சுத் தொடர்பு, தோலுக்குத்தோல் தொடர்பு, சரீரப்பிரகாரமான வெதுவெதுப்பு போன்றவற்றையும் உட்படுத்துகிறது. ஆகவே தாய்ப்பாலூட்டுதல் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு முக்கிய பிணைப்பைப் படிப்படியாக முன்னேற்றுவிக்க உதவுகிறது. மேலும் இது பிள்ளையின் உணர்ச்சிசம்பந்தமான மற்றும் சமூக வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
தாய்ப்பாலூட்ட தீர்மானித்தல்
குறிப்பிட்ட சில தேவைகளைப் பூர்த்தி செய்தால், பெரும்பாலும் எல்லா தாய்மார்களும் தங்களுடைய குழந்தைகளுக்குப் போதுமானளவு பால் கொடுக்க சரீரபலம் உள்ளவர்களாக இருக்கின்றனர். தாய்ப்பாலூட்டுவது குழந்தை பிறந்த பிறகு முடிந்தளவு உடனேயே—குழந்தை பிறந்து முதல் மணிநேரத்திலேயே—தொடங்கவேண்டும். (மார்பிலிருந்து வரும் முதற்பாலாகிய, சீம்பால் என்றழைக்கப்படும் கெட்டியான மஞ்சள் நிற திரவம், குழந்தைகளுக்கு நல்லதாகும் மற்றும் இது அவர்களைத் தொற்றுநோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது.) அதற்குப் பிறகு, ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படியல்ல, ஆனால் குழந்தைகளுக்கு, இரவுநேரமானாலும்சரி, பசியெடுக்கும்போதெல்லாம் கொடுக்கவேண்டும். முலைக்கு நேராக குழந்தையை வைத்திருக்கும் சரியான பால்கொடுக்கும் நிலையும் முக்கியமாக இருக்கிறது. நல்ல அனுபவமும் கரிசனையுமுள்ள ஆலோசகர் ஒருவர் இந்த விஷயங்களில் உதவியளிக்க முடியும்.
சந்தேகமின்றி, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க தீர்மானிப்பதும் தீர்மானிக்காததும் வெறுமனே பால் கொடுப்பதற்கான அவளுடைய சரீரபலத்தைவிட அதிகத்தைச் சார்ந்திருக்கிறது. ஸ்டேட் ஆஃப் தி உவர்ல்ட்ஸ் சில்ரன் 1992 அறிக்கை செய்கிறது: “தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முடிந்தளவு மிகச் சிறந்த தொடக்கத்தைக் கொடுக்கவேண்டுமானால், மருத்துவமனைகளின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது; ஆனால் அவர்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டுமானால், அவர்களுக்கு முதலாளிகள், தொழில் சங்கங்கள், சமுதாயங்கள், ஆண்கள் ஆகியோரின் ஆதரவும் தேவையாய் இருக்கிறது.” (g93 9/22)
[பக்கம் 13-ன் பெட்டி]
வளரும் உலகில் தாய்ப்பாலூட்டுதல்
1. வாழ்க்கையின் முதல் நான்கிலிருந்து ஆறு மாதங்களுக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த உணவும் பானமுமாக இருக்கிறது.
2. பிறந்த பிறகு குழந்தைகள் முடிந்தளவு உடனேயே தாய்ப்பால் குடிக்கத் தொடங்கவேண்டும். நடைமுறையாகவே ஒவ்வொரு தாயும் தன்னுடைய குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
3. குழந்தை அடிக்கடி உறிஞ்சிக் குடித்தல் அதன் தேவைகளுக்குப் போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையாக இருக்கிறது.
4. புட்டிப்பாலூட்டுதல் மிக மோசமான வியாதிக்கும் மரணத்திற்கும் வழிநடத்தக்கூடும்.
5. தாய்ப்பால் கொடுத்தல் ஒரு குழந்தையின் வாழ்க்கையின் இரண்டாம் வருடத்திலும், முடியுமானால் அதைவிட நீண்ட காலத்திற்கும் தொடர வேண்டும்.
மூலம்: வாழ்க்கைக்கான உண்மைகள் (Facts for Life), UNICEF, WHO, UNESCO ஆகியவற்றால் சேர்ந்து வெளியிடப்பட்டது.
[பக்கம் 14-ன் பெட்டி]
தாய்ப்பாலூட்டுதலும் எய்ட்ஸும்
ஏப்ரல் 1992-ன் பிற்பகுதியில், தாய்ப்பாலூட்டுதலுக்கும் எய்ட்ஸுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வதற்கு WHO மற்றும் UNICEF இணைந்து நிபுணர்களடங்கிய சர்வதேசிய தொகுதி ஒன்றைக் கூட்டிச் சேர்த்தன. அந்தக் கூட்டத்தின் தேவை, எய்ட்ஸின் பேரிலான WHO-வின் உலகளாவிய திட்டத்தின் இயக்குநர், டாக்டர் மைக்கேல் மெர்சனால் விளக்கப்பட்டது. அவர் சொன்னதாவது: “தாய்ப்பாலூட்டல் குழந்தையின் தப்பிப்பிழைத்தலுக்கு அத்தியாவசியமான மூலக்கூறாக இருக்கிறது. தாய்ப்பால் குடிப்பதன் மூலம் வரும் எய்ட்ஸால் ஒரு குழந்தை மரிப்பதற்கான அபாயத்தைத் தாய்ப்பால் குடிக்காததால் வரும் மற்ற காரணங்களால் மரிப்பதற்கான அபாயத்திற்கெதிராக சமநிலைப்படுத்த வேண்டும்.”
WHO சொல்லுகிறபடி, HIV-யால் தாக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறந்த எல்லா குழந்தைகளிலும்கூட சுமார் மூன்றிலொரு பாகத்தினர் தாக்கப்பட்டனர். தாயிலிருந்து குழந்தைக்கு நோய் கடத்தப்படுவதன் பெருமளவு கருத்தரித்தல் மற்றும் பிள்ளைப் பிறப்பு சமயத்தில் நடைபெறுகிறது. இருந்தபோதிலும் தாய்ப்பாலூட்டுவதன் மூலமும் இது நடைபெறலாம் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. இருப்பினும், WHO சொல்லுகிறது, “HIV-யால் தாக்கப்பட்ட தாய்மார்களால் தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளில் பெரும் எண்ணிக்கையினர், தாய்ப்பால் குடிப்பதன் மூலம் தாக்கப்பட்டவர்களாக ஆவதில்லை.”
அந்த நிபுணர்கள் குழு இவ்வாறு முடிவுக்கு வந்தது: “எங்குத் தொற்றுநோய்களும் ஊட்டச் சத்துக் குறைவும் குழந்தை மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறதோ, மேலும் குழந்தை மரண வீதம் எங்கு உயர்ந்து காணப்படுகிறதோ, தாய்ப்பாலூட்டுதலே—HIV-யால் தாக்கப்பட்டவர்களையும் உட்படுத்திய—கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் அறிவுரையாக இருக்கவேண்டும். இது ஏனென்றால் தாய்ப்பால் குடிப்பதன் மூலம் HIV-யால் தாக்கப்படுவதற்கான தங்களுடைய குழந்தையின் அபாயம், தாய்ப்பால் குடிக்காததால் வரும் மற்ற காரணங்களுக்காக மரிப்பதற்கான அபாயத்தைவிட குறைவாக இருப்பதற்கே வாய்ப்பிருக்கிறது.
“மறுபட்சத்தில், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மரணத்திற்குத் தொற்றுநோய்கள் முக்கிய காரணமாக இல்லாத பின்னணிகளிலும், குழந்தை மரண வீதம் குறைவாக உள்ள பின்னணிகளிலும், . . . HIV-யால் தாக்கப்பட்டவர்களாக அறியப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, தாய்ப்பால் கொடுப்பதைவிட தங்களுடைய குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஒரு மாற்று உணவளிப்பு முறையைக் கைக்கொள்வதே வழக்கமாக கொடுக்கப்படும் அறிவுரையாக இருக்கவேண்டும்.”