“யெகோவாவே, என் வாலிப மகளை உண்மையுள்ளவளாக இருக்கச்செய்யும்!”
நான் 1930-ல் பிரான்ஸின் அல்சேஸில், கலைக் குடும்பம் ஒன்றில் பிறந்தேன். மாலை நேரங்களில், அப்பா, தன்னுடைய சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, புவியியல் அல்லது வானியலைப்பற்றிய சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பார். என்னுடைய நாய்க்குட்டி அவருடைய காலடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும். அப்பா படித்தவற்றிலிருந்து சில முக்கிய விவரங்களை அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பார். அப்போது அம்மாவோ அவருடைய குடும்பத்திற்காக பின்னிக்கொண்டிருப்பார்கள். அந்த மாலை நேரங்களை நான் எவ்வளவு அனுபவித்துக் களித்தேன்!
எங்களுடைய வாழ்க்கையில் மதம் ஒரு பெரும்பாகத்தை வகித்தது. நாங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள கத்தோலிக்கர்களாக இருந்தோம். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்குப் போவதைப் பார்த்தவர்கள், “இப்போ ஒன்பது மணி. அர்னால்ட் குடும்பத்தினர் கோயிலுக்குப் போறாங்க,” என்று சொல்வர். தினமும் பள்ளிக்குச் செல்லுமுன் நான் கோயிலுக்குப் போனேன். ஆனால் அந்தக் குருவின் தவறான நடத்தையின் காரணமாக, நான் தனியாக கோயிலுக்குப் போவதை அம்மா தடுத்தார்கள். அப்போது எனக்கு ஆறு வயது.
பீபல்ஃபார்ஷெர்களின் (இப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் என்றறியப்படும் பைபிள் மாணாக்கர்கள்) மூன்றே மூன்று சிறு புத்தகங்களைப் படித்துவிட்டு, என் அம்மா வீடு வீடாகச் சென்று பிரசங்கிக்கத் தொடங்கினார்கள். அதனால் அப்பாவுக்கு மனவருத்தம் ஏற்பட்டது. எனக்கு முன் மதத்தைப்பற்றிய எந்த விவாதமும் நடத்தக்கூடாது என்று அவர் ஒரு சட்டம் போட்டார். ‘அந்தச் சனியனைப் படிக்கக்கூடாது!’ ஆனால் அம்மாவோ சத்தியத்தைப்பற்றி மிக்க ஆர்வம் உடையவர்களாக இருந்ததால், என்னோடு சேர்ந்து பைபிளைக் கொஞ்சம் வாசிக்கலாம் என்று தீர்மானித்தார்கள். ஆகவே, பைபிளின் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு ஒன்றைப் பெற்று, அதைத் தினமும் காலையில் என்னோடு வாசித்தார்கள். அப்பாவுக்குக் கீழ்ப்படிவதற்காக, வாசிக்கும்போது அதன்பேரில் குறிப்புகள் ஒன்றும் சொல்லாமல் வாசித்தார்கள்.
ஒரு நாள் சங்கீதம் 115:4-8-ஐ வாசித்தார்கள்: “அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. . . . அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.” அவர் அதை, “யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்,” என்று சொல்கிற இரண்டாம் கட்டளையோடு இணைத்துக் காட்டினார்கள். (யாத்திராகமம் 20:4-6) நான் உடனடியாக எழுந்துபோய் என்னுடைய அறையில் நான் வைத்திருந்த என்னுடைய தனிப்பட்ட பூசைப்பீடத்தைத் தரைமட்டமாக்கினேன்.
நான் பள்ளிக்குச் சென்று என் வகுப்பிலுள்ள கத்தோலிக்க மாணவிகளோடு என்னுடைய அனுதின பைபிள் வாசிப்பைப் பகிர்ந்துகொள்வேன். இது பள்ளியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. அடிக்கடி பிள்ளைகள் என்னைத் தெருவில் பின்தொடர்ந்து வந்து, “அசிங்கம்புடிச்ச யூதப் பெண்!” என்று சொல்லி அழைப்பார்கள். அது 1937-ல் நடந்தது. இந்தச் சூழ்நிலைமை நான் எதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று என் அப்பாவைக் கவனிக்கவைத்தது. யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட படைப்பு (Creation) என்ற புத்தகத்தை அவராகவே வாங்கினார். அதை அவர் படித்துவிட்டு அவரே ஒரு சாட்சியாக மாறிவிட்டார்!
பெல்ஜியம் எல்லை வழியாக ஜெர்மானிய படை பிரான்ஸினுள் நுழைந்த உடனேயே, நகராட்சி அலுவலகத்தின்மீது பிரெஞ்சு தேசிய கொடி பறந்துகொண்டிருந்தாலும், சர்ச்சுகளின்மீது பறந்த கொடிகளில் இருந்த ஸ்வஸ்திகைகளை நாங்கள் பார்க்கத் தொடங்கினோம். பிரெஞ்சு அரசாங்கம் எங்களுடைய ராஜ்ய மன்றத்தை அடைத்துவிட்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையைத் தடைசெய்திருந்தது. ஜெர்மானியர்கள் நுழைந்தபோது ஏற்கெனவே நாங்கள் ரகசியமாகத்தான் வேலை செய்துகொண்டிருந்தோம். ஆனால் சாட்சிகளை அழிப்பதற்கான முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து, 11-ம் வயதில், நான் முழுக்காட்டப்பட்டேன்.
ஒரு மாதம் கழித்து, 1941, செப்டம்பர் 4-ம் தேதி, பிற்பகல் இரண்டு மணிக்கு, வாயிலில் மணி அடித்தது. அப்பா வேலையிலிருந்து வீடுதிரும்பும் நேரமாக இருந்தது. நான் துள்ளிக் குதித்தோடி, கதவைத் திறந்து, அவருடைய கைகளுக்குள் என்னை அடக்கிக்கொண்டேன். அவருக்குப் பின் நின்றுகொண்டிருந்த ஒரு மனிதன் “ஹைல் ஹிட்லர்!” என கத்தினான். நான் அவனுடைய கைகளிலிருந்து விடுபட்டு, நான் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த மனிதன் ஒரு SS படைவீரன் என்பதை அப்பொழுது உணர்ந்தேன்! அவர்கள் என்னை என்னுடைய அறைக்கு அனுப்பிவிட்டு, என் அம்மாவோடு ஒரு நான்கு-மணி நேர குறுக்கு விசாரணை நடத்தினர். அவர்கள் வீட்டை விட்டுப் போகும்போது, அவர்களில் ஒருவன் உரக்கச் சொன்னான்: “நீ உன் கணவரை இனிமேல் பார்க்கமாட்டாய்! நீயும் உன் பிள்ளையும் அதேபோல் நடத்தப்படுவீர்கள்!”
அப்பா அன்று காலையில் கைதுசெய்யப்பட்டிருந்தார். தன்னுடைய மாத சம்பளத்தை அவர் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்தார். அந்த SS படையினர் வங்கி கணக்கை அடைத்துவிட்டு என்னுடைய அம்மாவுக்கு ஒரு வேலை கிடைப்பதற்குத் தேவையான ஆவணமாகிய—வேலைவாய்ப்பு அட்டை ஒன்றை வழங்க மறுத்தனர். இப்போது: “அந்தக் கயவருக்குப் பிழைப்புத் தேவைகள் கிடையாது!” என்பதே அவர்களுடைய கொள்கையாக இருந்தது.
பள்ளியில் துன்புறுத்துதல்
இந்தக் காலப்பகுதியில் நான் கல்லூரி செல்ல தகுதிபெறுவதற்கான படிப்பைத் தொடர்ந்த பள்ளியில் அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்துவந்தன. ஆசிரியை வகுப்பறைக்குள் வந்தபோதெல்லாம், எல்லா 58 மாணாக்கரும் எழுந்து நீட்டிய கைகளோடு நின்று “ஹைல் ஹிட்லர்” என்று சொல்லவேண்டும். சமயக் கல்விக்காக குரு வந்தபோது, அவர் உள்ளே வந்து, “ஹைல் ஹிட்லர்—கர்த்தரின் பெயரால் வருபவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்,” என்று சொல்வார். வகுப்பு மாணாக்கர் “ஹைல் ஹிட்லர்—ஆமென்!” என்று பதிலளிப்பர்.
“ஹைல் ஹிட்லர்,” என்று சொல்ல நான் மறுத்தேன். இது பள்ளி இயக்குநருக்குத் தெரியவந்தது. “பள்ளி சட்டதிட்டங்களுக்கு ஒரு மாணவி அடிபணிவதில்லை, ஒரு வார காலத்திற்குள் மாற்றம் ஏற்படவில்லையெனில், அந்த மாணவி பள்ளியைவிட்டு நிற்கவேண்டியிருக்கும்,” என்று கூறும் ஓர் எச்சரிக்கை கடிதம் எழுதப்பட்டது. இந்தக் கடிதம் 20-க்கும் மேற்பட்ட வகுப்புகளிலும் வாசிக்கப்படவேண்டும் என்று அதன் அடியில் குறிப்பிட்டது.
வகுப்பு மாணாக்கர் முன்னிலையில் அழைக்கப்பட்டு என்னுடைய தீர்மானத்தைத் தெரியப்படுத்தவேண்டிய நாள் வந்தது. நான் வணக்கம் செலுத்தவோ என்னுடைய பள்ளிச் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு போகவோ இயக்குநர் எனக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் கொடுத்தார். கடிகாரத்தில் அந்த ஐந்து நிமிடங்கள் ஒரு நித்தியத்தைப்போல தோன்றின. என் கால்கள் பலமிழந்தன, என் தலை கனமாக இருப்பதை உணர்ந்தேன், என் இருதயம் படபடத்துக்கொண்டிருந்தது. “ஹைல் ஹிட்லர்,” என்ற உரத்த குரலொலியைத் தொடர்ந்து முழு வகுப்பும் சேர்ந்து அதை மும்முறை திரும்ப சொன்னதால் வகுப்பறை முழுவதிலும் நிலவியிருந்த ஆழ்ந்த நிசப்தம் கலைக்கப்பட்டது. நான் மேசைக்கு ஓடிச்சென்று என்னுடைய சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு, வெளியே ஓடிவிட்டேன்.
அதைத் தொடர்ந்துவந்த திங்கட்கிழமை, நான் வேறொரு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன். நான் ஏன் மற்ற பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் நான் பள்ளிக்கு வரலாம் என்று அந்த இயக்குநர் சொன்னார். என்னுடைய வகுப்பு மாணவிகள் எனக்கு விரோதமாக எழும்பி நான் ஒரு திருடி, ஒரு குற்றவாளி பிள்ளை என்றழைத்து, இக்காரணத்தால்தான் நான் வெளியே அனுப்பப்பட்டேன் என்று கூறினர். ஆனால் உண்மையான காரணத்தை என்னால் விவரிக்க முடியாமற்போயிற்று.
நான் வகுப்பின் கடைசியில் அமர்த்தப்பட்டேன். எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண் நான் வணக்கம் செலுத்துவதில்லை என்பதை உணர்ந்தாள். நான் ஹிட்லரை எதிர்க்கும் பிரெஞ்சு இயக்கத்தில் ஒருத்தி என்று அவள் நினைத்தாள். நான் ஏன் ஹைல் ஹிட்லர் என சொல்ல மறுத்தேன் என்பதை அவளுக்கு விளக்கவேண்டியதாயிற்று: “அப்போஸ்தலர் 4:12-ன்படி ‘அவராலேயன்றி வெறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.’ கிறிஸ்து மட்டும்தான் நம் இரட்சகர். ‘ஹைல்’ என்பது ஒருவரால் இரட்சிப்புப் பெறுவதை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே அத்தகைய இரட்சிப்பை நான் ஹிட்லர் உட்பட வேறு எந்த மனிதனுக்கும் தொடர்புபடுத்தமுடியாது.” இந்தப் பெண்ணும் அவளுடைய அம்மாவும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கத் தொடங்கி அவர்களே சாட்சிகளாக மாறினர்!
இரகசிய செயல்நடவடிக்கை
இந்தக் காலப் பகுதிகளெல்லாம், நாங்கள் ரகசியமாகவே தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும், ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்க பிரெஞ்சு பதிப்பு காவற்கோபுரம் பத்திரிகையைப் பெற மலைகளில் உள்ள ஓர் இடத்திற்குப் போனோம். அம்மா காலுறையைக் கட்டும் இழைக்கச்சையைக் கொண்ட ஒரு விசேஷித்த உள்ளாடையில் நான் காவற்கோபுரம் வைத்துச் செல்வதற்காக ஒரு ரகசிய பாக்கெட்டை வைத்துத் தைத்துத் தந்தார்கள். ஒரு நாள் நாங்கள் இரண்டு படைவீரர்களால் நிறுத்தப்பட்டு, ஒரு மலையிலுள்ள பண்ணைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, சோதனை செய்யப்பட்டோம். நான் மிகவும் சுகமில்லாமல் இருந்ததால், என்னை வைக்கோலின் மீது படுத்துக்கொள்ள செய்தனர். இதனால், காவற்கோபுரம் பத்திரிகையை அவர்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. ஏதாவது ஒரு வழியில், யெகோவா என்னை எப்போதுமே தப்புவித்ததாகத் தோன்றியது.
ஒரு நாள் நான் ஒரு ‘மனநல மருத்துவரை’ அணுகும்படி அழைப்பைப் பெற்றேன். அவர்கள் SS படையினரில் இருவர். மற்ற சாட்சிகளுடைய பிள்ளைகளும்கூட அங்கு இருந்தனர். நான்தான் இறுதியாக உள்ளே அழைக்கப்பட்டேன். அந்த இரண்டு ‘மருத்துவர்களும்’ ஒரு மேசைக்குப் பின்னால் உட்கார்ந்தனர். என்னுடைய முகத்தில் மிகவும் பிரகாசமான விளக்கு ஒளிரும்படி என்னை உட்காரவைத்தனர். குறுக்கு விசாரணை தொடங்கிற்று. ஒரு “மருத்துவர்” என்னிடம் வரலாறு அல்லது புவியியல் சம்பந்தமான சில கேள்விகளைக் கேட்பார். ஆனால் நான் பதில் சொல்லுமுன்பே, அடுத்தவர் ரகசிய வேலையைப்பற்றிய கேள்விகளைக் கேட்பார். அவர் மற்ற சாட்சிகளுடைய பெயர்களையும் கேட்பார். நான் நிலைகுலைந்து போகும் நிலையை அடைந்தபோது, திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்து அவர்களுடைய விசாரணையைக் குறுக்கிட்டது. யெகோவாவின் உதவி எப்போதும் என்னே அற்புதமாக வந்தது!
வகுப்பு மாணவிகளில் ஒருத்திக்கு நான் எங்களுடைய நம்பிக்கைகளை விவரித்துக்கொண்டிருந்தேன் என்று என்னுடைய பள்ளி இயக்குநருக்குத் தெரியவந்தபோது, நான் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, நீதிபதியால் ஓர் ‘இளைஞர் சீர்திருத்தப்பள்ளிக்கு’ போகும்படி தீர்ப்பளிக்கப்பட்டேன். ‘அவள் சர்வதேசிய பைபிள் மாணாக்கர் சங்கத்தினரின் போதனைகளில் வளர்க்கப்பட்டாள். அவர்களுடைய போதனைகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டவையாகும். அவள் ஒரு கெட்ட நடத்தைக்காரியாகவும் மற்றவர்களுக்கு ஓர் ஆபத்தாகவும் மாறுவாள்,’ என்று அந்தத் தீர்ப்புக் கூறிற்று. இப்போது 12 வயதான எனக்கு, அச்சந்தரும் அந்த நீதிமன்றத்தில் அது நடுங்கவைக்கும் ஒரு சோதனையாக இருந்தது! இருப்பினும், நிர்வாகத் துறையில் வேலை செய்யும் பரிவுள்ள ஒரு நண்பரின் உதவியால், என்னுடைய தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படவில்லை.
சுமார் ஒரு மாதத்திற்குப் பின், எங்கள் பள்ளியின் வகுப்பு இரண்டு வார ஹிட்லர் இளைஞர் பயிற்சி முகாமுக்குப் போக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைப்பற்றி நான் என் அம்மாவிடம் ஒருபோதும் சொல்லிக்கொள்ளவில்லை. அதற்குப் போகாமலிருப்பதற்கான என்னுடைய தீர்மானத்தில் அவர்கள் எந்தப் பொறுப்பும் ஏற்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை. புறப்படுவதற்கான நாள் வருமுன் அந்தப் பள்ளி இயக்குநர் என்னை இவ்வாறு எச்சரித்தார்: “திங்கட்கிழமை நீ ரயில் நிலையத்திற்கோ என்னுடைய அலுவலகத்திற்கோ வராமலிருந்தால், நான் உன்னைப் போலீஸில் ஒப்படைத்துவிடுவேன்!”
எனவே திங்கட்கிழமை என்னுடைய பள்ளிக்குப் போகும் வழியில் நான் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றேன். தங்களோடு வரும்படி என் வகுப்பு மாணவிகளெல்லாரும் என்னைக் கூப்பிட்டனர். ஆனால் நானோ இயக்குநரின் அலுவலகத்திற்குப் போக தீர்மானமாய் இருந்தேன். நான் அங்குத் தாமதித்துப் போய் சேர்ந்தேன். ஆகவே நான் மற்றவர்களோடு ரயிலில் போய்விட்டேன் என்று அவர் ஊகித்துக்கொண்டார். என்னைக் கண்டதும் அவருக்கு வெறி கிளம்பியது. அவர் என்னைத் தன்னுடைய வகுப்பறைக்குள் அழைத்துச் சென்று, முழு வகுப்பையும் நான்கு மணிநேரம் கஷ்டப்படுத்தினார். உதாரணமாக, அவர் ஒவ்வொரு பிள்ளையையும் வகுப்புக்கு முன்னால் அழைப்பார். அவர்களுடைய நோட்டுப் புத்தகத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அதைக்கொண்டு அவர்களுடைய முகத்தில் ஓர் அறை கொடுப்பார். அவர் என்னைச் சுட்டிக்காட்டி, “இவள்தான் பொறுப்பு!” என்று சொல்வார். பத்துவயதே ஆன, 45 பிள்ளைகளையும் எனக்கு எதிராகக் கிளப்பிவிட முயற்சித்தார் அவர். ஆனால் வகுப்பு முடிந்ததும், அவர்கள் வந்து எனக்குப் பாராட்டுதல் தெரிவித்தனர்; ஏனென்றால் நான் ராணுவ பாட்டுகளைப் பாட மறுப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தேன்.
பின்னர் காகிதங்களையும், டப்பாக்களையும், எலும்புகளையும் பிரித்தெடுக்க நான் நியமிக்கப்பட்டேன். டப்பாக்கள் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதால், நான் அதைச் செய்ய மறுத்தேன். நான் அடிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் விடப்பட்டேன். மீண்டும் நான் நினைவுக்கு வர என்னுடைய வகுப்பு மாணவிகள் உதவினர்.
நான் பள்ளிக்குத் திரும்பி போனபோது, எல்லா வகுப்பு மாணாக்கரும், சுமார் 800 பிள்ளைகள், வளாகத்தில் ஒரு கொடிக்கம்பத்தைச் சுற்றி நிற்பதைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். நான் நடுவில் நிறுத்தப்பட்டேன். சுதந்திரத்தைப் பற்றியும் தேசத்துரோகிகளுக்கான விளைவைப்பற்றியும் நீண்டதொரு விளக்கவுரை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸீக் ஹைல்! (வெற்றியும் ரட்சிப்பும்) என்று மும்முறை கூக்குரலிடப்பட்டது. நான் விட்டுக்கொடுக்காமல் நடுக்கத்துடன் நின்றுகொண்டிருக்க தேசியகீதம் பாடப்பட்டது. யெகோவா எனக்கு ஆதரவளித்தார்; நான் உத்தமத்தன்மையைக் காத்துக்கொண்டேன். பின்னர், எங்களுடைய வீட்டில் நுழைந்ததும், என்னுடைய துணிமணிகள் படுக்கையின்மேல் கிடந்ததையும், “சீமோன் அர்னால்ட் நாளை காலை ரயில் நிலையத்தில் இருக்கவேண்டும்,” என்று கூறிய ஒரு கடிதத்தையும் கண்டேன்.
இளைஞர் சீர்திருத்தப்பள்ளிக்கு
அடுத்த நாள் காலை நானும் அம்மாவும் ரயில் நிலையத்தில் இருந்தோம். இரண்டு பெண்கள் என்னைத் தங்கள் காவலில் வைத்துக்கொண்டனர். என் நடத்தையைப்பற்றி ரயிலில் அம்மா தன்னுடைய அறிவுரையைத் திரும்பக் கூறினார்கள். “எப்போதும், அநீதியினால் துன்பப்படும்போதும், பண்புடனும் அன்பாகவும் மதிப்புடனும் நடந்துகொள். ஒருபோதும் பிடிவாதமுடன் நடந்துகொள்ளாதே. ஒருபோதும் எதிர்த்துப் பேசாதே அல்லது திமிராக பதில் பேசாதே. மனவுறுதியுடன் இருப்பது பிடிவாதமுடன் இருப்பதோடு எவ்வகையிலும் தொடர்புள்ளதாய் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். இது எதிர்கால வாழ்க்கைக்கான உன்னுடைய பள்ளி படிப்பாக இருக்கப்போகிறது. நம்முடைய எதிர்கால பலனுக்காக நாம் சோதனைக்கு உட்படுவது யெகோவாவின் சித்தமாய் இருக்கிறது. நீ அதற்கு நன்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறாய். எவ்வாறு தைப்பது, சமைப்பது, துவைப்பது, தோட்டமிடுவது என்றெல்லாம் உனக்குத் தெரியும். நீ இப்போது ஓர் இளம் பெண்ணாக இருக்கிறாய்.”
அன்று மாலை, எங்களுடைய ஹோட்டலுக்கு வெளியே உள்ள ஒரு திராட்சைத் தோட்டத்தில், நானும் அம்மாவும் முழங்காலிட்டு, உயிர்த்தெழுதலைப்பற்றி ஒரு ராஜ்ய பாட்டைப் பாடி, ஒரு ஜெபம் செய்தோம். உறுதியான ஒரு குரலில் அம்மா எனக்காக, “யெகோவாவே, என் வாலிப மகளை உண்மையுள்ளவளாக இருக்கச்செய்யும்!” என்று ஜெபம் செய்தார்கள். கடைசிமுறையாக, அம்மா என்னைப் படுக்கைக்குள் பொதித்து, என்னை முத்தமிட்டார்கள்.
அடுத்த நாள் இளைஞர் சீர்திருத்தப்பள்ளியின் வீட்டைச் சென்றடைந்தபோது, அம்மாவுக்கு நான் குட்-பை சொல்லக்கூட வாய்ப்பில்லாமல் காரியங்கள் அதிவேகமாக நிகழ்ந்தன. கோதுமைத் தவிட்டால் செய்யப்பட்ட ஒரு மெத்தையை ஒரு பெண் எனக்குக் காட்டினாள். என்னுடைய காலணிகள் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன. நவம்பர் முதல் தேதி வரை நாங்கள் வெறுங்காலில்தான் நடக்கவேண்டியதாய் இருந்தது. முதல் மதிய உணவை உண்பதே விரக்தியாக இருந்தது. தைப்பதற்காக ஆறு ஜோடி காலுறைகள் என்னிடம் கொடுக்கப்பட்டன; தைக்கவில்லையென்றால் எனக்கு எந்த உணவும் கிடையாது. முதன்முறையாக நான் அழ ஆரம்பித்தேன். கண்ணீர் அந்தக் காலுறைகளை நனைத்தது. பெரும்பாலும் முழு ராத்திரியும் நான் அழுதுகொண்டேயிருந்தேன்.
அடுத்த நாள் காலை 5:30 மணிக்கு நான் எழுந்தேன். என்னுடைய படுக்கை இரத்தம் தோய்ந்ததாய் இருந்தது—என் மாதவிடாய் இதற்குச் சற்றுமுன்தான் ஆரம்பித்திருக்கிறது. நடுக்கத்துடன், நான் முதலில் பார்த்த ஆசிரியை, மிஸ் மெசிஞ்சரிடம் சென்றேன். அவர் ஒரு பெண்ணை அழைக்க, அவள் குளிர்ந்த நீரில் என்னுடைய போர்வையைத் துவைப்பது எவ்வாறு என்று காண்பித்தாள். கல்லினால் ஆன தரை ஜில்லென்றிருந்தது, என்னுடைய வேதனையும் அதிகரித்தது. நான் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டேன். பின்னர் மிஸ் மெசிஞ்சர், “உன் யெகோவாகிட்ட சொல்லு அவர் உன்னுடைய போர்வையைத் துவைத்துத் தரட்டும்!” என்று எரிச்சலூட்டும் ஒரு கள்ளப் புன்முறுவலோடு சொன்னார். அதைத்தான் நான் கேட்க வேண்டுமென்றிருந்தேன். நான் என் கண்களைத் துடைத்துக்கொண்டேன். என்னை மீண்டும் ஒருபோதும் கண்ணீர் வடிக்கச் செய்ய அவர்களால் முடியாமற்போயிற்று.
காலை உணவுக்குமுன்—8:00 மணிக்கு ஒரு கிண்ணம் சூப்—வீட்டைச் சுத்தம் செய்ய நாங்கள் தினமும் காலையில் 5:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் பள்ளி, 6 முதல் 14 வயதுள்ள, 37 பிள்ளைகளுக்காக அந்த வீட்டில் நடத்தப்பட்டது. கஷ்டமான வேலைகளைச் செய்ய ஆண்கள் யாரும் இல்லாததால், பிற்பகலில் நாங்கள் கழுவுதல், துணி தைத்தல், தோட்டமிடுதல் போன்ற வேலைகளைச் செய்தோம். 1944/45-ன் குளிர்காலத்தில் மற்றொரு பெண்ணோடு சேர்ந்து, நான் லம்பர்ஜேக் வாளைப் பயன்படுத்தி 2 அடி வரை விட்டம் உள்ள மரங்களை அறுக்க வேண்டியிருந்தது. பிள்ளைகள் ஒருவரோடொருவர் பேசுவதிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்தனர்; தனிமையிலிருப்பதற்கும், கழிவறைக்குப் போவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. வருடத்திற்கு இருமுறை நாங்கள் குளித்தோம், மேலும் தலைமுடியை வருடத்திற்கு ஒருமுறை கழுவினோம். பட்டினிபோடுதல் அல்லது அடிகொடுத்தல் தண்டனையாக இருந்தது.
நான் மிஸ் மெசிஞ்சரின் அறையைச் சுத்தம் செய்யவேண்டும். நான் தினமும் படுக்கைக்குக் கீழே சென்று ஸ்ப்ரிங்குகளைச் சுத்தம் செய்யவேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தினார். நான் அந்த வீட்டிற்குள் கடத்திச் சென்ற ஒரு சிறிய பைபிள் என்னிடம் இருந்தது. இதை ஸ்ப்ரிங்குகளுக்கு இடையில் செருகிவைக்க என்னால் முடிந்தது. அப்போதிலிருந்து தினமும் பைபிளின் ஒரு பகுதியை என்னால் வாசிக்க முடிந்தது. அவர்களிடம் இதுவரை இருந்த பிள்ளைகளிலேயே மிகவும் மந்தமான பிள்ளை என்று நான் அழைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
ஞாயிற்றுக்கிழமையில் புராட்டஸ்டண்டு பெண்கள் அவர்களுடைய கோயிலுக்கும், மூன்று கத்தோலிக்க பெண்கள் அவர்களுடைய கோயிலுக்கும் போவார்கள். ஆனால் நானோ எல்லா 37 பிள்ளைகளுக்கும் சமையல் செய்யவேண்டியிருந்தது. ஒரு பெஞ்சுமேல் நின்று கரண்டியை இரு கைகளாலும் பிடித்து சூப்பைக் கிண்டிவிடுமளவுக்கு நான் மிகவும் சிறியவளாய் இருந்தேன். எங்களுடைய நான்கு ஆசிரியைகளுக்கு இறைச்சியைச் சமைத்து, கேக் செய்து, காய்கறி தயாரிக்கவேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், நாங்கள் துடைப்புக் குட்டைகளுக்கு (napkins) எம்ப்ராய்டரிங் செய்யவேண்டியிருந்தது. விளையாட்டு நேரமே இருந்ததில்லை.
பல மாதங்களுக்குப் பிறகு, அன்பார்ந்த அம்மா கைதுசெய்யப்பட்டு ஒரு சித்திரவதை முகாமில் இருந்தார்கள் என்ற செய்தியை, தெளிவான மகிழ்ச்சியோடு, மிஸ் மெசிஞ்சர் என்னிடம் கூறினார்.
1945-ல் யுத்தம் ஓய்ந்தது. சித்திரவதை முகாம்கள் ஒழிந்து அவற்றில் சித்திரவதை செய்யப்பட்ட பலியாட்களைத் தேசத்தின் மீதெங்கும் சிதறடித்தன. இது ஆயிரக்கணக்கானோரைக் குடும்பத்தில் மீதியானோர் யாரேனும் இன்னும் உயிருடன் இருக்கின்றனரா என்று அங்குமிங்கும் தேடியலைய வைத்தது.
நெஞ்சத்தைத் தொடும் மறு ஒன்றுகூடுதல்கள்
அம்மாவுக்காவது நான் எங்கு இருக்கிறேன் என்று தெரிந்திருந்தது, ஆனால் அவர்கள் என்னை அழைத்துக்கொண்டுபோக வந்தபோது நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் பட்டனுபவித்தவற்றைக் கவனிக்கும்போது அது ஆச்சரியமொன்றுமில்லை! அம்மா கைதுசெய்யப்பட்டபோது அப்பா இருந்த அதே ஷிர்மக் முகாமுக்குத்தான், ஆனால் பெண்கள் முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். படைவீரர்களின் சீருடைகளைத் தைக்க அவர்கள் மறுத்த காரணத்தால் நிலமட்டத்திற்குக் கீழுள்ள ஓர் அறையில் மாதக்கணக்கில் தனிமைச் சிறைவாசத் தண்டனையில் வைக்கப்பட்டார்கள். அடுத்ததாக, அவர்களை மாசுப்படுத்த, மேகநோயை (syphilis) கொண்டிருந்த பெண்களோடு இருப்பதற்கு மாற்றப்பட்டார்கள். ராவன்ஸ்ப்ரூக்குக்கு மாற்றப்படுகையில் அவர்கள் இருமலினால் மிகவும் பலவீனமானார்கள். அந்தச் சமயத்தில் ஜெர்மானியர்கள் ஓடிவிட்டனர். அப்போது ராவன்ஸ்ப்ரூக்குக்குச் சென்றுகொண்டிருந்த கைதிகள், அவர்களோடு இருந்த என்னுடைய அம்மாவும், திடீரென விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நானிருந்த கான்ஸ்டன்ஸுக்குப் போனார்கள். ஆனால் விமானத் தாக்குதல் வெடிப்பு ஒன்று அவர்களுடைய முகத்தில் வெட்டு ஏற்படுத்தி இரத்தம் வடியச்செய்திருந்தது.
அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர்கள் அவ்வளவு மாறியிருந்தார்கள்—பட்டினியால் மெலிந்துபோய், தெளிவாகவே நோய்ப்பட்டு, முகம் காயப்படுத்தப்பட்டு இரத்தம் வடிந்து, அவருடைய குரல் சிறிதளவே கேட்கக்கூடியளவுக்கு மங்கிபோய் இருந்தார்கள். பார்வையாளர்களுக்கு முன் குனிந்து—எம்ப்ராய்டரி வேலைகள், தையல் போன்ற—என்னுடைய வேலையெல்லாம் காண்பிக்கும்படி நான் பயிற்றுவிக்கப்பட்டிருந்தேன். ஏனென்றால் ஒரு பணிப்பெண்ணைப் பெறுவதற்கு இந்த வீட்டிற்கு சில பெண்கள் வந்தனர். அதே முறையில்தான் பாவம் அம்மாவையும் நான் உபசரித்தேன்! என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் சட்ட உரிமையைப் பெற ஒரு நீதிபதியிடம் என்னை அழைத்துக்கொண்டு போனபோதுதான் அவர்கள் என்னுடைய அம்மா என்பதை நான் உணர்ந்தேன்! உடனடியாக 22 மாதங்களாக நான் எனக்குள் அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் பொங்கி வழிந்தது.
நாங்கள் புறப்பட்டபோது, இயக்குநர் மிஸ் லேடர்லாவின் கூற்று அம்மாவுக்கு இதமூட்டும் தைலத்தைப்போல் இருந்தது. அவர் சொன்னார்: “வரும்போது இருந்த அதே மனநிலையோடு உங்களுடைய பெண்ணை உங்களிடம் திரும்ப ஒப்படைக்கிறேன்.” என்னுடைய உத்தமத்தன்மை இன்னும் உறுதியாக இருந்தது. நாங்கள் எங்களுடைய வீட்டைக் கண்டுபிடித்து அதில் வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பித்தோம். இன்னும் எங்களைக் கவலையுறச் செய்த ஒரே ஒரு காரியம் என்னவென்றால் அப்பா இல்லாமலிருந்ததுதான். அவர் இறந்துவிட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பட்டியல் காண்பித்தது.
மே 1945-ன் மத்திபத்தில், கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. மீண்டும் நான் ஓடித் திறக்கப்போனேன். ஒரு தோழி, மரியா கோல், கதவருகில் இருந்தார். அவர் சொன்னார்: “சீமோன், நான் மட்டும் தனியாக வரவில்லை, உன்னுடைய அப்பா கீழ்த்தளத்தில் இருக்கிறார்.” அப்பா படிகளில் ஏறி மேலேகூட வரமுடியவில்லை, அவருடைய கேட்கும் சக்தியை அவர் இழந்துவிட்டிருந்தார். அவர் என்னையும் கடந்துவிட்டு நேரே அம்மாவிடம் சென்றார்! அவர் ஒரு காலத்தில் அறிந்திருந்த அந்தத் தன்னியல்பான 11 வயது சிறுமி அந்த நீண்ட மாதங்களில் ஒரு நாணமுறும் இளம் பருவ வயது பெண்ணாக வளர்ந்திருந்தாள். இந்தப் புதிய பெண்ணை அவரால் அடையாளம் கண்டுகொள்ளக்கூட முடியவில்லை.
அவர் அனுபவித்த பாடுகள் அதன் பாகத்தைக் கொள்ளைகொண்டது. முதலில் ஷிர்மக் சிறப்பு முகாம் ஒன்றுக்கும், பின்னர் அவர் ஜன்னிக் காய்ச்சல் பெற்று அதன் பிறகு அதனால் 14 நாட்கள் மயக்கத்தில் கிடந்திருந்த டாக்கெயு முகாமுக்கும் அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டார். டாக்கெயுவிலிருந்து மவுத்தவுசன் முகாமுக்கு அனுப்பப்பட்டார். இது டாக்கெயுவைவிட மோசமான ஓர் அழிவு முகாமாக இருந்தது. இதில் அவர் கடின வேலைகளாலும் அடிவாங்குதலாலும் துன்புற்று, காவல்துறை நாய்களால் தாக்கப்பட்டார். இருப்பினும் அவர் உயிர்ப்பிழைத்து இறுதியில் மீண்டும் வீட்டிலிருந்தார்.
எனக்கு 17 வயதானபோது, நான் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியராக முழுநேர ஊழியத்திற்கும் பிறகு உவாட்ச் டவர் சொஸையிட்டியின் மிஷனரிகளுக்கான பள்ளியாகிய, ஐக்கிய மாகாணங்களில் உள்ள கிலியடுக்கும் சென்றேன். சங்கத்தின் உலக தலைமை அலுவலகங்களில், நான் மேக்ஸ் லீப்ஸ்டரைச் சந்தித்தேன். இவர் ஹிட்லரின் சித்திரவதை முகாம்கள் ஒன்றில் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆன ஒரு ஜெர்மானிய யூதராவார். நாங்கள் 1956-ல் திருமணம் செய்துகொண்டோம். நம் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் இதுவரை விசேஷித்த பயனியர் ஊழியர்களாக இங்கு பிரான்ஸில் நாங்கள் முழுநேர சேவையில் இருந்துவருகிறோம்.
அநேக வருடங்களுக்குமுன் அந்த இளைஞர் சீர்திருத்தப்பள்ளியில் என்னை விட்டுச் செல்வதற்கு முந்தின நாள் மாலையில், எனக்கான தன்னுடைய ஜெபத்தில் சொன்ன அம்மாவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையாயிருந்தன: “யெகோவாவே, என் வாலிப மகளை உண்மையுள்ளவளாக இருக்கச்செய்யும்படி உம்மிடம் நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்!”
இந்நாள் வரையாக, யெகோவா அதைத்தான் செய்திருக்கிறார்!—சீமோன் அர்னால்ட் லீப்ஸ்டர் கூறியபடி. (g93 9/22)
[படத்திற்கான நன்றி]
Courtesy of Buckfast Butterfly Farm
[பக்கம் 26-ன் படம்]
சீமோன் அர்னால்ட் லீப்ஸ்டரும் அவருடைய கணவர் மேக்ஸ் லீப்ஸ்டரும்