ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கையில் ஒரு நாள்
உங்களுடைய அனுதின வாழ்க்கைமுறை அழுத்தம் நிறைந்ததாகவும் கடினமானதாகவும் தோன்றினால், கடினமாக உழைக்கும் வண்ணத்துப்பூச்சியைப்பற்றி நினைத்துப் பாருங்கள். முதலில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் வேலை அட்டவணை ஒரு கனவு விடுமுறையைப்போல இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். மலர்விட்டு மலருக்குப் பறந்து திரிந்து, இங்குமங்குமாக சிறிதளவு தேனை உறிஞ்சி, தன் இஷ்டம்போல சூரிய ஒளியில் வெயில்காயும் வண்ணத்துப்பூச்சி, கவலையற்ற வாழ்க்கைப் பாணியின் மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக திகழ்வதாய்த் தோன்றுகிறது.
ஆனால் பூச்சி உலகில், காரியங்கள் அவை தோன்றுவதைப் போல் எப்போதுமே இருப்பதில்லை. இடைவிடாமல் அவசர அவசரமாக வேலைசெய்கிற அதே சமயம் ஒரு முக்கிய சேவையை செய்யும் வண்ணத்துப்பூச்சிகள் சுறுசுறுப்புள்ள படைப்புகளாகும். நாம் வழக்கமான ஒரு வேலைநாளில் ஒரு வண்ணத்துப்பூச்சியை சேர்ந்துகொள்வோம் வாருங்கள்.
சூரிய ஒளி காலையுணவு
நீங்கள் உறக்கத்திலிருந்து எழும்போது தளர்ந்து தள்ளாடுவதுபோல் உணர்கிறீர்களா? அதிகாலை சோர்வுகள் வண்ணத்துப்பூச்சிகள் மத்தியில் வழக்கமானதாக இருக்கின்றன. சில காலைவேளைகளில்—சொல்லர்த்தமாகவே—அவற்றிற்கு அசையக்கூட முடிவதில்லை. அவற்றின் பிரச்னை என்னவென்றால், அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடும் உடல் வெப்பநிலையாகும். இலையொன்றின் மீது அமர்ந்து குளிர்ந்த இரவைக் கழித்தப்பின், அவற்றின் இரத்தம் மிகவும் குளிர்ந்துபோனபடியால் அவற்றால் அசையவே முடிவதில்லை; நிச்சயமாக பறக்கவும் முடியாது. ஆகவே சூரியன் உதிக்கும்வரை அவை காத்திருக்க வேண்டும்.
சூரியன் உதிக்கும்போது, வண்ணத்துப்பூச்சி அவனுடைய சிறகுகளை விரித்து, அவற்றை சூரிய ஒளியின் வெப்ப கதிர்களை நோக்கி வைத்திருக்கிறான். சூரிய ஒளி செல்களின் சிறு பேட்டரிகளைப் போல வேலைசெய்யும் நீட்டி விரிக்கப்பட்ட சிறகுகள், விரைவில் தேவையான வெப்பத்தை சேகரித்துக்கொண்டு, பறந்து செல்கிறது அந்த வண்ணத்துப்பூச்சி. வானம் மப்பாக இருந்தால் அப்போது என்ன? குளிர்மிகுந்த குளிர்ப்பிரதேசங்களில், வண்ணத்துப்பூச்சிகள் சூரியன் ஒளிரும்வரை வசதியான ஒரு குச்சியிலோ பூவிலோ அசைவின்றி தங்கியிருக்க வேண்டும். இது சோம்பேறித்தனம் அல்ல. ஆனால் அது உண்மையிலேயே ஓர் அவசியமாக இருக்கிறது.
அந்த நாள் அதிக வெப்பமின்றி இருந்தால், வண்ணத்துப்பூச்சி நேராநேரத்துக்குக் கூடுதலான சூரிய ஒளி சிகிச்சைக்காக சமயம் ஒதுக்குகிறது. ஒரு கார் பெட்ரோல் நிலையத்தில் மீண்டும் மீண்டும் பெட்ரோல் நிரப்பிக் கொள்வதைப் போன்று, அவனுக்கு அவசியமான சூரிய சக்தியை நிரப்புவது தேவையாயிருக்கிறது. வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வண்ணத்துப்பூச்சி அதிகாலையில் அல்லது மழைக்குப் பிறகு மட்டும் வெயில் காய்ந்தால் போதுமானது. பொதுவாகவே, தட்பவெப்ப நிலை எவ்வளவு குளிராக இருக்கிறதோ அவ்வளவு அதிக நேரம் அவன் வெயில் காய்வதில் செலவு செய்கிறான். அவனுடைய சக்தியை ஒருமுறை திரும்ப பெற்றுக்கொண்டால் அவன் செய்யவேண்டி இருக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்கிறான்.
‘முகர்ந்ததும் காதல்’
மிக அவசரமான வேலையானது ஒரு துணையைக் கண்டடைவதாகும். சில வாரங்களுக்குமேல் நீளக்கூடிய ஆயுசு எதிர்பார்ப்பை அபூர்வமாகவே கொண்டுள்ளதால், காலந்தாழ்த்தாமல் இதைச் செய்தாகவேண்டும். வண்ணத்துப்பூச்சி உலகில் ஒரு துணையைக் கண்டடைவது அவ்வளவு சுலபமான வேலையுமல்ல—அது நீண்ட பொறுமையையும் தொடர்ந்த முயற்சியையும் தேவைப்படுத்துகிறது.
வண்ணத்துப்பூச்சிகள் மத்தியில் “கண்டதும் காதல்” என்பது அறியப்படாத ஒன்று. அவை தங்களுடைய கிட்டப்பார்வைக்கு நன்கு அறியப்பட்டவையாய் இருக்கின்றன. மிகவும் அடிக்கடி வேறு இனத்தைச் சேர்ந்த ஒன்றைத் தங்களுடைய சொந்த இனத்தைச் சேர்ந்த ஒன்று என தப்பாக எண்ணிவிடுகின்றன. பலனற்று முடிவடையும் தேடுதலுக்கு இது அடிக்கடி வழிநடத்துகிறது. தன் கண்கள் தன்னை ஏமாற்றிவிட்டன என்று இறுதியில் அந்த வண்ணத்துப்பூச்சி காதலன் உணருகையில் இந்தத் தேடுதல் முடிவுக்கு வருகிறது.
வாழ்க்கையை இன்னும் அதிக கடினமாக்குவதற்கு, அந்தப் பெண் வண்ணத்துப்பூச்சி வழக்கமாகவே மசிவதில்லை. மிக்க ஆர்வமுள்ள ஆண் விடாப்பிடியாக, ஓர் அதிவேக ஆகாய சுழற்சி நடன பாணியில், அவளைச் சுற்றிச் சுற்றி பறக்கிறது. அப்படியாவது அவள் இறுதியில் மனமிரங்கமாட்டாளா என்ற நம்பிக்கையில்தான். ஆனால் அந்தப் பெண் வண்ணத்துப்பூச்சி, ஏமாற்றமடைந்த ஆண் தனது துணைக்கான வேட்டையைத் தொடரும்படி விட்டுவிட்டுப் பறந்துபோகும்போது, இந்தக் கண்கொள்ளாக் கூட்டு நடனங்கள் வழக்கமாகவே திடீரென முடிவடைகின்றன.
ஆச்சரியகரமாக, பெண் தன்னுடைய ஆண் துணையின் கண்கவரும் வண்ணங்களால் அந்தளவுக்கு ஒன்றும் கிளர்ச்சியடைவதில்லை. வண்ணத்துப்பூச்சிகளின் பகட்டான வண்ணங்கள், சில ‘பரிணாம அணுகூலங்களை’ தருகின்றன என்று டார்வின் உவகையுடன் ஊகித்தபோதிலும், அதற்கான அத்தாட்சி ஒன்றுமில்லாது போயிற்று. பரிசோதனை ஒன்றில், வட அமெரிக்க அனர்ஷியா அமதிய சிற்றினத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்களின் பகட்டான செவ்வண்ண மற்றும் கறுப்பு சிறகுகள் முழுவதும் கறுப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தபோதிலும், ஆண்களோடு மிக்க மகிழ்ச்சியுடன் இனப்பெருக்கம் செய்தன. மிக முக்கியமாகத் தோன்றுவது என்னவென்றால், ஆண்கள் பறக்கும் முறை, அவனுடைய விடாமுயற்சி, எல்லாவற்றிற்கும் மேலாக, தனிச்சிறப்பு வாய்ந்த அந்தக் “காதல் பொடி” போன்றவையே.
அந்தக் காதல் பொடி ஒரு வசீகர பொருளை உள்ளடக்கியிருக்கிறது. அதுதான் அந்த ஆணுடைய துருப்புச்சீட்டாக இருக்கிறது. அது அவனுடைய இனப் பெண்களைக் கவர்ந்திழுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட மயக்கமூட்டும் ஒரு வாசனைப் பொருளாகும். காதல் விளையாட்டின்போது இந்த ‘சூப்பர் சென்ட்டை’ அவள் மீது தூவிவிட அவன் முயற்சிக்கிறான். அந்தக் காதல் பொடிதானே வெற்றிக்கு உத்தரவாதம் தருவதில்லையென்றாலும், இறுதியில் விருப்பமுள்ள ஒரு பெண் வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்படும்போது அது அற்புதங்களை நடப்பிக்கிறது.
தேனுக்கான விருப்பம்
இவ்வாறு ஒரு துணைக்காக தேடி அலைந்ததில் இழந்த சக்திகளையெல்லாம் திரும்பப் பெறவேண்டும். ஆகவேதான் தேனுக்கான வண்ணத்துப்பூச்சிகளின் விருப்பம். பூக்கள் கண்ணைக் கவரும் வடிவங்களாலும் வண்ணங்களாலும் இந்த அதிசக்தியளிக்கும் உணவை விளம்பரப்படுத்துகின்றன. மலரில் ஒருமுறை வந்து அமர்ந்ததும், அந்த வண்ணத்துப்பூச்சி ஒரு நீண்ட குழாய்போன்ற உறிஞ்சுகுழலை மலரின் அடிபாகத்திற்குள் நுழைத்துச் சாமர்த்தியமாக தேனை உறிஞ்சுகிறது.
தேனைப் பருகும்போது, அந்தப் பூச்சி தன்னுடைய ரோமம் நிறைந்த உடல்மீது மகரந்தத்தூளைத் தூவப்பெறுகிறது. இவ்வாறு தான் விஜயம் செய்யும் அடுத்த மலருக்கு அந்த மகரந்தத்தூளைக் கொண்டு செல்லுகிறான். வழக்கமான ஒரு வேலைநாளில் நூற்றுக்கணக்கான மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தப்படுகிறது. எனினும், வெப்பமண்டலக் காடுகளில், பூக்கள் அதிகம் காணப்படுகிறதில்லை. அப்படியானால் வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சிகள் எதை அருந்துகின்றன?
வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சிகள் அழுகிய பழங்களைப் பேராசையோடு உண்பதைக்காட்டிலும் வேறு எதையும் அந்தளவுக்கு விரும்புவதில்லை. அதிகம் பழுத்துத் தானாக கீழேவிழும் பழம் அவற்றுக்கு ஏராளமான சர்க்கரை சக்தியின் ஒரு மூலத்தைக் கொடுக்கிறது.
வண்ணத்துப்பூச்சிகள் உப்பையும் விரும்புகின்றன. அவை அடிக்கடி ஈரமான தரையில் உள்ள உப்புக்கலந்த ஈரத்தை அல்லது வண்ணத்துப்பூச்சியை விரும்பும் ஒரு மனிதனின் கையில் உள்ள வியர்வையை அவ்வப்போது உறிஞ்சிக்கொண்டிருப்பதைக் காணலாம். துணிச்சலுள்ள தீப்பந்த வண்ணத்துப்பூச்சி தென் அமெரிக்க முதலையின் கண்ணீரை உறிஞ்சுவதும்கூட காணப்பட்டிருக்கிறது.
ஒரு துணைக்காக சுறுசுறுப்பாக தேடி அலைந்து, மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தி, நன்கு உணவருந்திக் கொண்டிருக்கும்போதே, நம்முடைய சிறகுள்ள நண்பன், எதிரிகள் மேலும் ஒரு கண் வைத்திருக்கவேண்டும். அவன் ஒருவேளை பாதுகாப்பற்றவனாகத் தோன்றலாம்; ஆனால் பிடிபடுவதைத் தவிர்க்க தந்திரங்கள் பலவற்றை அவன் வைத்திருக்கிறான்.
அபாயத்தைத் தவிர்த்தல்
பசும்புல்வெளியில் மெல்ல சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கும் வசீகரிக்கும் வண்ணமிகு வண்ணத்துப்பூச்சி, பூச்சியுண்ணும் எந்தப் பறவைக்கும் ஊகிக்கக்கூடிய வகையில் தூண்டுதலையுண்டாக்கும் ஓர் உணவாகத்தான் இருக்கும். ஆனால் வண்ணத்துப்பூச்சியின் மனம்போன போக்கில் சட்டென திரும்பி பறக்கும் முறை அவனைப் பிடிப்பதை மிகவும் சூழ்ச்சி நிறைந்த ஒரு வேலையாக்குகிறது. பெரும்பாலான பறவைகள் ஒருசில தடவைகளுக்குப்பின் முயற்சியைக் கைவிடுகின்றன. அதையும் மீறி ஒரு பறவை வண்ணத்துப்பூச்சி ஒன்றைப் பிடிக்குமானால், தன் சிறகின் ஒரு பகுதியைப் பறவையின் அலகில் விட்டுச் செல்வதன்மூலம் அந்தப் பூச்சி தப்பித்துக்கொள்வதில் வெற்றிபெறலாம்.
கண்பார்வை மற்றொரு பாதுகாப்பாக இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகள் கிட்டப்பார்வையை உடையவையாய் இருந்தபோதிலும், அவற்றின் கூட்டுக்கண்கள் அசைவுகளைக் கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையுள்ளவையாய் இருக்கின்றன. அபாயத்தின் எந்தச் சிறிய அறிகுறி கிடைத்ததும் அவை பாய்ந்து செல்கின்றன. வண்ணத்துப்பூச்சியைப் போட்டோ எடுக்க முயற்சித்திருக்கும் எவரும் இதை மிக நன்றாக அறிவார்.
மெல்ல-பறக்கும் தன்மையுடைய சில வண்ணத்துப்பூச்சிகள் மற்றொரு பாதுகாப்பு முறையைக் கொண்டிருக்கின்றன—அவற்றின் அருவருப்பான சுவை. அந்தச் சுவைக்குக் காரணம், அவை கம்பளிப்புழுக்களாக இருந்தபோது நச்சுச் செடிகளை உட்கொண்டதேயாகும். ஒரு பறவை அதைப் போன்ற வண்ணத்துப்பூச்சியை ஒருமுறை கடித்துவிட்டால், வழக்கமாகவே இரண்டாவது முறை கடிப்பதைத் தவிர்க்கிறது. பெரும்பாலும்—மோனார்க்—போன்ற அருவருக்கத்தக்க சுவையை உடைய இந்த வண்ணத்துப்பூச்சிகள் வழக்கமாகவே, ஒளிரும் வண்ணமுடையவையாய் இருக்கின்றன. அது விலகியிருக்கவேண்டும் என்று பறவைக்குத் தெளிவாக நினைவுபடுத்தும் காணக்கூடிய எச்சரிப்பாக இருக்கிறது.
பயணத்தின் முடிவு
பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் சில வாரங்களுக்குமேல் உயிர்வாழ்வதில்லை; ஆனால் சில சிற்றினத்தைச் சேர்ந்தவை 18 மாதங்கள் வரை உயிர்வாழலாம் என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. குளிர்மிகுந்த குளிர்கால மாதங்களிலோ வெப்பமண்டலத்தின் நீண்டகால வறட்சி பருவத்திலோ, சில வண்ணத்துப்பூச்சிகள் செயலற்று இருக்கின்றன.
ஆனால் தங்களுடைய வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும், வண்ணத்துப்பூச்சிகளால் வியக்கத்தக்க சாகசங்களை நிறைவேற்ற முடியும். கடந்த நூற்றாண்டில் மோனார்க் வண்ணத்துப்பூச்சி ஆப்பிரிக்க கடற்கரைக்கப்பால் உள்ள கேனரித் தீவுகளில் தங்களையே நிலைபெறச் செய்யப் போதுமான எண்ணிக்கைகளில் அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்துசென்றன. பெயிண்ட்டட் லேடி என்ற மற்றொரு மகா பிரயாணி, கோடை காலத்தில் தவறாமல் வட ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் வட பாகத்திற்குப் பிரயாணப்படுகிறது.
தங்களுடைய குறுகிய ஆயுசுகாலத்தில், அயராதுழைக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மலர்களிலும் புதர்ச்செடிகளிலும் பழ மரங்களிலும் மகரந்தச் சேர்க்கை நடத்தி முக்கியமான ஒரு வேலையைச் செய்கின்றன. அதைவிட முக்கியமாக, அவை இருப்பதுதானே நாட்டுப்புறத்திற்குத் தனியழகையும் மகிழ்ச்சியையும் கூட்டுகின்றன. அவை இல்லையெனில் வசந்தம் வசந்தமாகவே இருக்காது. (g93 10/8)
[பக்கம் 20-ன் படம்]
அதிகாலையில் வெயில்காய்தல்
[பக்கம் 21-ன் படம்]
மலரொன்றிலிருந்து தேனுறிஞ்சுதல்
[பக்கம் 22-ன் படம்]
தரையிலிருந்து ஈரத்தை உறிஞ்சுதல்
[படத்திற்கான நன்றி]
Courtesy of Buckfast Butterfly Farm