காரகாஸ் மலைச்சரிவுகளில் நகர வாழ்க்கை
வெனிசுவேலாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
காரகாஸ், வெனிசுவேலா. இரைச்சலான போக்குவரத்து, மும்முரமாக வியாபாரம் நடக்கும் கடைகள், மக்கள் கூட்டம் நிறைந்த உணவகங்கள் ஆகியவற்றிற்கு மேல் உயரமான, நவீன அலுவலக கட்டடத் தொகுதிகள், பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் தங்கள் அரைக்கால்சட்டையில், வெயில் தொப்பிகளணிந்து, கழுத்தில் மாட்டியுள்ள கேமராக்களோடு முக்கியத் தெருக்களில் சுற்றித் திரிகின்றனர். சாலையோர நடைபாதைகள் ஜனங்களால் நிறைந்திருக்கின்றன.
ஆனால் காரகாஸுக்கு மற்றொரு பக்கமும் உண்டு. இந்தக் குரோம், ஸ்டீல், கண்ணாடிக்கு அப்பால் அமைந்திருக்கின்றன லோஸ் செர்ரோஸ் (மலைகள்), மலைச்சரிவுகளில் அமைக்கப்பட்ட வழக்கத்திற்கு மாறான குடியிருப்புகள். அவை அந்த நகரத்தைச் சுற்றி கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் அமைந்துள்ள மலைகளின் செங்குத்துச் சரிவுகளைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அங்கு ஏறக்குறைய 20 லட்சம் மக்கள் பாரியோக்கள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான குடியிருப்புப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
இந்தக் குடியிருப்புகள் எவ்வாறு உருவாயின? அரசாங்கம் 1958-ல் வேலையில்லா நகரவாசிகளுக்கு உதவித் தொகை கொடுத்த ஒரு திட்டம் போட்டது. ஆகவே அந்த ஏற்பாட்டினால் பயனடையும் நோக்கோடு அந்தத் தலைநகருக்குள் மக்கள்கூட்டம் அலைபாய்ந்தது. மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய நகர வாழ்க்கை வசதிகளை நாடி அநேகர் மாகாணங்களை விட்டு வந்தனர்.
பக்கத்து நாடுகளில் ஏற்பட்ட அரசியல் வன்முறையும் பொருளாதார மந்தநிலையும்கூட, மக்கள் வேலைதேடி காரகாஸுக்கு வரும் குடியேற்றத்தைத் தூண்டிவிட்டன. விரைவில் காரகாஸ் சமவெளியின் சமநிலப் பகுதிகள் முழுவதும் நிரப்பப்பட்டன. இது ஓர் உறைவிடம் தேடி மேல்நோக்கிச் செல்லும்படி மக்களை வற்புறுத்தியது. இவ்வாறு பிறந்தவையே இந்த மலைச்சரிவு குடியிருப்புகள்.
மேல்நோக்கிப் பயணம்
நீண்ட வரிசையில் நிற்கும் மக்களோடு சேர்ந்துகொள்வதன் மூலம் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். அவர்கள் பஸ்ஸுக்காக அல்ல, ஆனால் ஒரு ஜீப்புக்காக காத்திருக்கின்றனர். ஏறவேண்டியிருக்கும் செங்குத்தான ஏற்றத்தில் ஏற ஜீப்பே மிகப் பொருத்தமானது. நீண்ட மணை (chassis) கொண்ட ஜீப் ஒன்று அணுகுகிறது. அதனுள் ஒரு டஜன் ஆட்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றனர். பின்புறத்தில் நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் பெஞ்ச் ஒவ்வொன்றிலும் ஐந்துபேர் உட்காருகின்றனர். மதிப்பாகக் கருதப்படும் முன் இருக்கையை இருவர் பகிர்ந்துகொள்கின்றனர். விரைவில் பின் கதவினூடே புகுவதற்கு நாங்கள் எங்களையே இரண்டாக மடிப்பதுபோல வளைகிறோம். அந்தப் பெஞ்ச்சில் உள்ள ஓர் இடத்தில் நாங்கள் நெருக்கி உட்காருகிறோம். ஒரு பெண்ணின் காய்கறிப் பையை மிதிப்பதைத் தவிர்ப்பதற்கு எங்களுடைய முழங்கால்களை எங்களுடைய தாடைகளுக்குக் கீழ் மடக்கிவைக்கிறோம்.
செங்குத்தான ஏற்றத்தை நாங்கள் தொடங்குகிறோம். தெருக்கள் குறுகியும் அடிக்கடி வளைந்து நெளிந்து செல்பவையாகவும் இருக்கின்றன. சிலசமயங்களில் அவை ஏறக்குறைய செங்குத்தாக இருப்பதாகத் தோன்றுகின்றன. தனக்கு விருப்பமான மியூசிக் கேசட்டை ஓட்டுநர் செருகுகிறார். விரைவில் அந்த லத்தீன் தாளத்துக்கு ஏற்ப கால்கள் தாளம் போட்டுக்கொண்டிக்கின்றன. திடீரென யாரோ ஒருவர் ஓட்டுநரை அழைக்கிறார்: “டான்டா புயெடா!” (உங்களால் எங்கு முடியுமோ!) அது அவரை நிறுத்தச் சொல்வதற்கான விநோத முறையாக தோன்றுகிறது. ஆனால் அவருடைய முடிவின்பேரில் சார்ந்திருப்பது மிகச் சிறந்ததாக இருக்கிறது. செங்குத்தான சாலையின் நெடுவழிகள் ஒன்றில் ஜீப் நிறுத்தப்பட வேண்டுமானால், அது மறுபடியும் நகராமல்போகலாம்—எத்திசையில் நகர்ந்தாலும் முன்னோக்கி நகராது! இங்குமங்குமாக அமர்ந்திருந்த ஒருசில பயணிகள் வழியில் சிலருடைய கால்களை மிதித்துவிட்டு தட்டுத்தடுமாறி பின்கதவு வழியாக வெளியே இறங்கினர்.
விரைவில் நாங்கள் ஒவ்வொரு இணைப்புகளிலிருந்து ஒழுகிக்கொண்டு மெதுவாக செல்லும் ஒரு வாகனத்திற்குப் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம். அது ஒரு தண்ணீர் லாரி. குழாய்த் தண்ணீர் என்றால் அநேகமாக அறியப்படாத ஒரு சொகுசு வசதியாக இருந்த வீடுகளுக்கு அதன் விலையேறப்பெற்ற சரக்கை ஏற்றிச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் வழக்கமாக தொட்டிகளிலோ அல்லது காலி எண்ணெய்ப் பீப்பாய்களிலோ அதை நிரப்பி வைக்கின்றனர்.
ஜீப் அதன் பல நிறுத்தங்களில் மற்றொரு நிறுத்தத்தில் ஆட்டத்துடன் நிற்கிறது. அது நாங்கள் இறங்குவதற்கான நேரம் என்று உணருகிறோம். நாங்கள் நின்று கொண்டிருந்த உறுதியான அந்த நிலம் ஏறக்குறைய விநோதமாகத் தோன்றுகிறது. நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்று உணர்ந்துகொள்ள சற்று நிற்கிறோம்.
மலைச்சரிவு வீடுகள்
வீடுகள் நினைத்த இடத்தில், நினைத்த மாதிரி கட்டப்பட்டிருக்கின்றன. குடும்பம் வளர வளர கூடுதல் அறைகளோ கூடுதல் மாடிகளோடுகூட சர்வசாதாரணமாக கட்டப்படுவதாக தோன்றுகிறது. சில வீடுகள் செம்பழுப்பு நிற செங்கற்களால் கட்டப்பட்ட உறுதியான சிறிய வீடுகள். மற்றவையோ பலகைகளாலும், நிமிர்த்தப்பட்ட தகர டின்களாலும், அல்லது “இந்தப் பக்கம் மேல்நோக்கி” (This side up) என்ற வார்த்தைகளை இன்னும் கொண்டிருக்கும் அடைத்துவைப்பதற்கான பெட்டிகளாலும்கூட (packing cases) உண்டாக்கப்பட்டிருக்கின்றன.
அந்த ஜீப் உறுமிக்கொண்டேபோய் பார்வையில் இருந்து மறைகிறது. ஆகவே இப்போது ஓரளவு அமைதி நிலவுகிறது. அந்தக் காட்சி திகைக்கவைக்கும் ஒன்றாக இருக்கிறது. அதோ, வெகு கீழே, காரகாஸின் மையப்பகுதி இருக்கிறது. திடீரென ஒலிபெருக்கியில் இருந்து கரகரப்புடன் கத்திய ஒரு குரல் அமைதியைக் கலைக்கிறது: “ஆமாம், வெங்காயம் இருக்கிறது. ஆமாம், உருளைக்கிழங்கு, யுக்கா, வாழைப்பழம் இருக்கிறது.” நாங்கள் திரும்பிப் பார்த்தபோது, அமைதியாக சற்றருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு வண்டி திடீரென உயிர்ப்பெற்றிருக்கிறதைக் காண்கிறோம். வண்டியின் பின்புறத்தில் இருந்து ஒரு பையன் வாங்குபவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்கிறான்.
காரகாஸில் கணக்கிடப்பட்ட 500 பாரியோக்கள் இருக்கின்றன. சில “புனிதர்கள்” பெயர்களாலும் மற்றவை பிரபலமான தேதிகளாலும் அல்லது அரசியல் புள்ளிகளின் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இன்னும் மற்ற பெயர்கள் நிஜத்தைவிட அங்குள்ள குடிமக்களின் ஆவல்களைப் பிரதிபலிக்கின்றன. உதாரணங்கள்: எல் ப்ரொக்ரெஸோ (முன்னேற்றம்), நுயெவோ முண்டோ (புதிய உலகம்), எல் என்காண்டோ (பூரிப்பு).
பாரியோவில் வாழ்க்கை
இங்கு ஒரு கூட்டுறவு மனப்பான்மை செழித்தோங்குகிறது. போதை மருந்து துர்ப்பிரயோகம் அல்லது குற்றச்செயல்களை பாரியோவிலிருந்து ஒழிக்க அடிக்கடி ஐக்கியப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான பாரியோக்களில் போடேகாக்களும்—பல்வகை பொருட்கள் விற்கும் ஜெனரல் ஸ்டோர்ஸ்—ஒரு பள்ளியும், ஒரு மருந்து கடையும் உள்ளன. இந்த மருந்து கடையில் எளிய நோய்களைக் கண்டுபிடித்து சிகிச்சைகளை சிபாரிசு செய்வதில் உதவிட ஒரு மருந்தாளர் எப்போதும் தயாராக இருக்கிறார்.
இருப்பினும், இங்கு வாழ்க்கை கடினமாக இருக்கிறது. பிரச்னைகளைக் குற்றச்செயல் நிபுணர் டாக்டர் ஏல்யோ கோம்ஸ் கிரிலோ விவரிக்கிறார்: “தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் திறனற்ற இரண்டு மில்லியன் ஜனங்கள் தற்போது இந்த எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். குற்றச்செயல்களின் வீதம் உயர்ந்துவருகிறது . . . தற்கொலைகள், தாக்குதல்கள், வங்கிக் கொள்ளைகள், மனித கொலையில் விளைவடையும் ஆயுதம்தரித்து கொள்ளையடித்தல் போன்றவை கவலை தருவனவாய் இருக்கின்றன.” தண்ணீர் பஞ்சமும், மின்சார தடையும் சகஜமான காரியங்களாகும்.
மழைக் காலத்தில், லோஸ் செர்ரோஸ் முற்றிலும் மாறிவிடுகிறது. நிலம் சகதியாகவும், படிக்கட்டுகள் சிறிய நீர்வீழ்ச்சிகளாகவும் மாறுகின்றன. சாலையோரக் கால்வாய்களில் பெருக்கெடுக்கும் ஆறுகள் வழியாக குப்பைக்கூளங்கள் மிதந்து வருகின்றன. தகரக் கூரைகளின் மேல் விழும் மழையின் இரைச்சல் செவிடாக்குகிறது. குடியிருப்பவர்கள் ஒழுக்குகளின் கீழ் வைப்பதற்கு கிண்ணங்களையும் வாளிகளையும் தேடுவதில் கவனம் செலுத்துவதால் உள்ளே உரையாடல் நின்றுவிடுகிறது. ஆனால் சூரியன் மீண்டும் ஒளிரத் தொடங்கி, நனைந்த கூரைகளையும் சாலைகளையும் உலர்த்துகிறது. அதைப்போலவே, கட்டுப்படுத்த முடியாத வெனிசுவேலாவின் ஆவி மீண்டும் தலைதூக்குகிறது. வாழ்க்கை அவ்வாறு தொடர்கிறது.
தொடர்ந்து மேல்நோக்கி நடந்துசெல்லுதல்
எங்களுடைய பயணம் இன்னும் முடியவில்லை. இன்னும் எங்கள் நண்பருடைய வீட்டைச் சென்றடையவேண்டும். இரண்டு வீடுகளுக்கு இடையில் செங்குத்தான, சமதளமற்ற படிக்கட்டுப்பாதை ஒன்று மலைக்கு மேலே செல்கிறது. இடத்திற்குப் போட்டியிடுவதாகத் தோன்றும் குறுகிய வீடுகளின் மேல் எங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அறிவிப்புப் பலகைகள் போட்டிபோடுகின்றன: பேகோ சையரஸ் (ஸிப் தைத்துத் தரப்படும்); கார்ட்டெஸ் டெ பெலோ (முடிவெட்டப்படும்); செ வெண்டென் எலாடோஸ் (ஐஸ் கிரீம் விற்கப்படும்). இங்குக் குடியிருப்போர் பிழைப்பதற்காக அனைத்து வகை வழிகளையும் கண்டுபிடிக்கின்றனர். சிலர் கார்களுக்கு ஸ்ப்ரே பெயிண்டிங் செய்தல், ஆயில் மாற்றுதல், பழுதுபார்த்தல் ஆகியவற்றை எல்லாம் தெருவில் வைத்தே செய்து தருகின்றனர்.
படிக்கட்டுப் பாதையின் உச்சிக்குச் சென்றடைந்ததும் இளைப்பாறிவிட்டு, பிறகு வீடுகளின் இடையிலுள்ள வளைவுசுழிவான குறுகிய சந்துகளுக்குள் நுழைகிறோம். பிரகாசமான சூரிய ஒளியில் கண்கூச பார்த்துக்கொண்டே இந்த வலைபின்னலான சந்துகளிலிருந்து நாங்கள் வெளியே வருகிறோம். எங்கள் நண்பரின் வீடு சீராக அமைக்கப்படாத இந்தப் பாதையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீட்டு எண்கள் கிடையாது—மேலும் அஞ்சல் சேவையுமில்லை. புதிதாக வடிகட்டிய காபியின் மணம் காற்றில் ஊடுருவிப் பரவுகிறது. எங்களை உபசரிப்பவர்கள் ஆரெப்பாவோடும் (பல்வகைப் பொருட்களைக் கொண்டு நிரப்பி சுவையேற்றப்பட்ட மென்மையான ஒரு மக்காச்சோள ரொட்டி) அதோடு சிறிய கப்புகளில் காபியோடும் எங்களை வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வரவேற்கப்படுகிறோம்
எதிர்பார்த்த வண்ணமே, அக்குடும்பம் பாரம்பரிய உபசரிப்போடு எங்களைத் தங்களுடைய எளிமையான, ஆனால் தூய்மையான ராஞ்ச்சிட்டோவிற்குள் வரவேற்கின்றனர். இந்தச் சிறிய வீடுகள் இவ்வாறே அழைக்கப்படுகின்றன. “எஸ்டான் என் சூகாசா” (உங்கள் வீட்டில் இருப்பதுபோலவே நினைத்துக் கொள்ளுங்கள்) என்பதுதான் அவர்கள் முதலில் சொல்லும் காரியங்களில் ஒன்று.
தகர கூரையை சூரிய வெப்பம் தாக்குகையில், கண்ணாடியில்லா சன்னல்கள் வழியாக வீசுகிற தென்றலுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனினும், வீடுபுகுந்து கொள்ளையடித்தல் இங்குச் சர்வசாதாரணமாக நடப்பதால், சன்னல்களுக்குக் குறுக்குக் கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எங்களுக்குப் புழுக்கமாக இருக்கிறதென்பதை கவனித்து, வீட்டார் ஒரு மின்சார விசிறியைக் கொண்டுவருகின்றனர். இங்கு அது ஒரு குளிர்சாதனப் பெட்டி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியைப் போல ஆடம்பர சாதனமாக இருக்கிறது. தரை சிமெண்ட் தரை. அயலகத்தாரில் அநேகர் மண்தரையையே கொண்டிருக்கின்றனர்.
ஐந்து சிறிய பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருக்கும் அந்தக் கணவர், பெரிய நகரில் நல்ல வேலைவாய்ப்புகளைத் தேடும் நோக்கத்தோடு கிராமப் புறத்தில் இருந்து காரகாஸுக்கு ஒரு பருவவயதினனாக இருக்கும்போது மாறிவந்தார். அவர் திருமணமான தன்னுடைய அண்ணனோடு தங்கியிருக்கலானார். அவருடைய அண்ணன் அவருக்குமுன் செய்த அநேகரைப் போல, மலைச்சரிவின் உச்சியில் காலி நிலம் ஒன்றில் வெறுமனே குடியேறி அதைத் தனது உரிமையாக்கிக் கொண்டிருக்கிறார். எங்கள் நண்பர் தனது வருங்கால மனைவியைச் சந்தித்தபோது, அவரது அண்ணன் தனது வீட்டின் ஒரு பக்கத்தில் கிடக்கும் ஒரு துண்டு நிலத்தைத் தங்களுக்கு தற்காலிக வீடு ஒன்றைக் கட்ட பயன்படுத்திக்கொள்ளும்படி தாராள மனதுடன் சொன்னார். அயலகத்தார் மற்றும் உறவினர்களின் உதவியைக்கொண்டு, இந்தத் தம்பதிகள் அதே இடத்தில் தங்களுடைய செங்கல் வீட்டை சிறிது சிறிதாக கட்டிமுடித்தனர்.
அதன் அமைவிடம் தங்களுக்கு மிகச் சிறந்ததாய் இல்லை என்று அந்தக் குடும்பத்தினர் உணருகிறார்கள். ஆனால் அவர்கள் வேறுவழியில்லாமல் இங்கு தங்கியிருக்கின்றனர். தங்களுக்கு உள்ளதை வைத்து மிகச் சிறந்தமுறையில் வாழ்ந்து வருகின்றனர். ‘ஒருவேளை மலையிலிருந்து இறங்கி சமவெளிக்கு ஒருநாள் மாறிப்போக எங்களால் முடியலாம்,’ என்கின்றனர் அவர்கள், “சி டையாஸ் க்வையரெ” (கடவுளுக்குச் சித்தமானால்).
இவ்வாறு ஓர் இனிய பிற்பகல் இந்த எளிய, ஆனால் அன்பான குடும்பத்தோடு கடந்துபோகிறது. அவ்வப்போது முன்பக்க சன்னலில் மிட்டாய் வாங்க வரும் சிறுபிள்ளைகளால் உரையாடல் தடைசெய்யப்படுகிறது. தனது கணவனின் வருமானத்தைக் கூட்ட உதவும் மனைவியின் வழியாகும் இது.
இறக்கம்
இருட்டுவதற்கு முன் நாங்கள் புறப்பட விரும்புகிறோம். இன்று வெள்ளிக்கிழமை; ஆண்கள் தங்களுடைய கூலியோடு வீட்டுக்கு வருகிறதால் அந்தப் பாரியோ உயிரூட்டம் பெற்று காணப்படுகிறது. போடேகாக்கள் மும்முரமாக பியர் விற்பனை செய்கின்றன; லத்தீன் இசையும் மரெங்கே இசையும் தளர்ந்த வார இறுதி சூழ்நிலைமைக்குப் பங்களிக்கிறது.
அடிவாரத்திற்குச் சென்றதும், மிக அண்மையிலிருக்கும் மெட்ரோ நிலையத்தை நோக்கி நடக்கிறோம். அங்குத் திறமைவாய்ந்த ஒரு நிலத்தடி ரயில் (subway train) எங்களை நகரத்தின் மையத்திற்குக் கொண்டுச் செல்லும். அதிகப் பழக்கப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்ததால் நாங்கள் சிறிது இலகுவாக உணருகிறோம். ஆனால் நாங்கள் திரும்பி மேலே, இப்போது இருட்டில் மின்னிக்கொண்டிருக்கும் ஒரு விளக்குக் கூட்டத்தைப் போன்ற, லோஸ் செர்ரோஸைப் பார்க்கையில், காரகாஸின் இந்த மறுபக்கத்தைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். (g93 12/8)