மர்பகப் புற்றுநோயைப்பற்றி பெண்கள் அறிந்திருக்க வேண்டியவை
மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கண்டத்திலும் அதிகரித்து வருகிறது. ஒருசில கணக்கீடுகளின் பிரகாரம், 2000-வது ஆண்டிற்குள்ளாக, உலகமுழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் பத்து லட்சம் பேருக்குப் புதிதாக மார்பகப் புற்றுநோய் வந்திருப்பதாக கண்டுபிடிக்கப்படுவர்.
இந்த நோய் வராது தப்பித்துக்கொள்ளும் எந்தப் பெண்ணாவது இருக்கிறாளா? அதைத் தடுப்பதற்கு ஏதாகிலும் செய்யப்பட முடியுமா? இந்த எதிரியை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு என்னென்ன ஆறுதலும் ஆதரவும் தேவைப்படுகின்றன?
பெரும்பாலான தோல் புற்றுநோய்கள் சூரியனிலிருந்துவரும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்கள் புகைபிடிப்பதால் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் மார்பகப் புற்றுநோய்க்கு எந்தவொரு காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இருப்பினும், சமீபகால ஆராய்ச்சியின்படி, மரபியல் காரணிகளும் சுற்றுச்சூழல் காரணிகளும் ஹார்மோன் காரணிகளும் மார்பகப் புற்றுநோயில் ஒரு பங்கை வகிக்கலாம். இந்தக் காரணிகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் அதிக ஆபத்தில் இருக்கலாம்.
குடும்ப வரலாறு
ஒரு பெண்ணின் குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கலாம்; அந்த அங்கத்தினர் தாயாகவோ சகோதரியாகவோ அல்லது சித்தியாகவோ பெரியம்மாவாகவோ பாட்டியாகவோ இருக்கலாம். அத்தகைய பெண்ணுக்கு அந்நோய் வருவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர்களில் அநேகருக்கு இந்த நோய் இருந்திருக்குமானால், அவள் இன்னும் அதிக ஆபத்தில் இருக்கிறாள்.
பரம்பரைக் காரணிகள் உட்பட்டிருந்தாலும், அவை இருக்கிற அனைத்து மார்பகப் புற்றுநோய்களிலும் 5 முதல் 10 சதவீதத்திற்கே காரணமாக இருக்கலாம். இவ்வாறு டாக்டர் பெட்ரீஷியா கெல்லி என்ற ஐக்கிய மாகாணங்களில் உள்ள மரபியல் நிபுணர் ஒருவர் விழித்தெழு! நிருபரிடம் கூறுகிறார். அவர் விவரிக்கிறார்: “எண்ணற்ற மார்பகப் புற்றுநோய்கள், அவ்வளவாக சக்திவாய்ந்திராத பரம்பரைக் காரணிகள் சுற்றுச்சூழலோடு சேர்ந்து செயல்படுவதனால் உண்டாகின்றன என்று நாங்கள் நினைக்கிறோம்.” ஒரேவகையான ஜீன்களையுடைய குடும்ப அங்கத்தினர்கள் ஒரேமாதிரியான சுற்றுச்சூழலில் வாழும் நாட்டத்தைக் கொண்டிருக்கின்றனர்.
சுற்றுச்சூழல் காரணிகள்
இந்நோயைத் தூண்டிவிடுவதில் “தெளிவாகவே, விவரமாக புரிந்துகொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் காரணிகளும் உட்பட்டிருக்கின்றன,” என்பதாக சயன்ஸ் பத்திரிகையில் குறிப்புச்சொல்லும்போது டெவ்ரா டேவிஸ் என்ற ஓர் அறிஞர் கூறினார். பெண்ணின் மார்பகம் கதிர்வீச்சால் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய உடல் உறுப்புக்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகவே அயனியாக்க கதிர்வீச்சுகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கான மிகுந்த ஆபத்தைக் கொண்டிருக்கின்றனர். நச்சுத்தன்மையுடைய ரசாயனப் பொருட்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் விஷயத்திலும் அவ்வாறே இருக்கிறது.
மற்றொரு சுற்றுச்சூழல் காரணியாக இருப்பது உணவு. மார்பகப் புற்றுநோய் வைட்டமின் பற்றாக்குறை நோயாக இருக்கலாம் என்று சிலர் கருத்துத் தெரிவித்து, வைட்டமின் D பற்றாக்குறைவைச் சுட்டிக்காட்டுகின்றனர். சுண்ணாம்புச்சத்தை உடல் உறிஞ்சிக்கொள்வதற்கு இந்த வைட்டமின் உதவிபுரிகிறது. இது செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதைத் தடுக்க உதவிசெய்யலாம்.
மற்ற ஆராய்ச்சிகள் உணவிலுள்ள கொழுப்புச்சத்தை ஒரு காரணியாக அல்ல, ஆனால் மார்பகப் புற்றுநோயை வளரச்செய்யும் ஓர் ஊக்கியாகவே தொடர்புபடுத்துகின்றன. கொழுப்புச்சத்தையும் விலங்குப் புரதத்தையும் அதிகளவாக உட்கொள்ளும் ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் மார்பகப் புற்றுநோயினால் ஏற்படும் மரணவீதம் மிக அதிகமாக இருந்தது என்பதாக FDA கன்ஸ்யூமர் பத்திரிகை கூறியது. அது குறிப்பிட்டதாவது: “ஜப்பானிய பெண்கள் வரலாற்றில் மார்பகப் புற்றுநோய்க்கான குறைந்த ஆபத்தையே கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த ஆபத்து, உணவுப் பழக்கங்களில் ஏற்படுத்தப்படும் ‘மேற்கத்திய பாணிக்கு,’ அதாவது குறைந்த கொழுப்புச்சத்துள்ள உணவிலிருந்து அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுக்கு ஏற்றவாறு, வெகுவிரைவில் அதிகரித்துவருகிறது.”
அதிக கொழுப்புச்சத்துள்ள ஓர் உணவின்மூலம் உட்கொண்ட உயர்ந்தளவு எண்ணிக்கையுள்ள கலோரிகள்தான் உண்மையான ஆபத்தைக் குறிக்கலாம் என்று ஒரு சமீபத்திய ஆராய்ச்சி கருத்துத் தெரிவித்தது. சயன்ஸ் நியூஸ் சொன்னது: “தேவைக்குமீறி காணப்படும் ஒவ்வொரு கலோரியும் மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. கொழுப்பிலிருந்து பெறப்படும் தேவைக்குமீறிய ஒவ்வொரு கலோரியும் மற்ற மூலங்களிலிருந்து பெறப்படும் கலோரிகளைவிட சுமார் 67 சதவீதம் அதிகமான ஆபத்தை விளைவிக்கிறது.” தேவைக்குமீறிய கலோரிகள் எடையை அளவுக்குமீறி அதிகரிக்கின்றன. மிகவும் அளவுக்குமீறிய எடையை உடைய பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கான சுமார் மூன்று மடங்கு அதிக ஆபத்தைக் கொண்டிருப்பதாக கருதப்படுகின்றனர். முக்கியமாக இறுதி மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களின் விஷயத்தில் இது அவ்வாறு இருக்கிறது. உடலின் கொழுப்புச்சத்து எஸ்ட்ரோஜன் என்ற ஒரு பெண் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் மார்பகத் திசுவிற்கு எதிராக செயல்புரிந்து, புற்றுநோய்க்கு வழிநடத்தக்கூடும்.
சொந்த வரலாறும் ஹார்மோன்களும்
ஒரு பெண்ணின் மார்பகத்தினுள் அபரிமிதமான ஹார்மோன் செறிந்த சூழல் அமைந்திருக்கிறது. இது அவளுடைய வாழ்க்கை முழுவதும் மார்பகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆஸ்ட்ரேலியன் Dr. உவீக்லியில் கட்டி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பால் க்ரி இவ்வாறு எழுதுகிறார்: “எனினும், சில பெண்களில், நீண்டகால ஹார்மோன் உற்பத்திக்கு ஆளாகும் மார்பகத் திசு . . . செல்களில் ஒரு தொடர்வரிசை மாற்றங்களை ஏற்படுத்தும். இம்மாற்றங்கள் இறுதியில் கேடுவிளைவிக்கும் [புற்றுநோய் சம்பந்தமான] மாறுதலடைதலில் முடிவடைகின்றன.” இதன் காரணமாக முதல் மாதவிடாய் விரைவில், 12-வது வயதின்போது வரப்பெற்ற அல்லது இறுதி மாதவிடாய் தாமதித்து, 50-களின் மத்திபத்தில் நிற்கப்பெற்ற பெண்கள் அதிக ஆபத்திலிருக்கின்றனர் எனக் கருதப்படுகிறது.
ERT-யின் மூலம் (எஸ்ட்ரோஜன் மாற்றீட்டு சிகிச்சை) பெற்ற கூடுதலான எஸ்ட்ரோஜன்கள், மார்பகப் புற்றுநோயோடு ஒருவேளை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது அதிக கருத்துவேறுபாட்டைத் தூண்டும் பொருளாக இருந்துவந்திருக்கிறது. ERT அதிகரிக்கப்பட்ட ஆபத்தை ஏற்படுத்துவதில்லை என்பதாக சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் நீண்டகாலமாக இதைப் பெறுபவர்களுக்கு உள்ள ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தை மற்ற ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. மறு ஆய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளுக்குக் கவனம் செலுத்துகையில், நீண்டகால உபயோகத்திற்குப்பின் “கருத்தடையை ஏற்படுத்தாத எஸ்ட்ரோஜன், மார்பகப் புற்றுநோயின் ஆபத்தை 30-50% வரை அதிகரிக்க” சாத்தியம் இருப்பதாக 1992-ன் பிரிட்டிஷ் மெடிக்கல் புல்லட்டின் குறிப்பிட்டது.
கருத்தடை மாத்திரைகளுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் இடையிலிருக்கும் தொடர்பின் பேரிலான அறிக்கைகள் அவற்றின் உபயோகம் குறைந்த ஆபத்தையே விளைவிப்பதாக கருத்துத் தெரிவிக்கின்றன. எனினும், அதிக ஆபத்திலிருக்கும் பெண்களின் ஒரு கிளைத் தொகுதி வெளிப்படுகிறது. இளம் பெண்கள், ஒருபோதும் பிள்ளைகளைப் பெற்றிராத பெண்கள், வெகுகாலமாக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தியிருக்கும் பெண்கள் ஆகியோர் 20 சதவீதம்வரை மார்பகப் புற்றுநோய் பெறுவதற்கான அதிக ஆபத்திலிருக்கலாம்.
எனினும், மார்பகப் புற்றுநோயுள்ள ஒவ்வொரு 4 பெண்களிலும் 3 பேர் தங்களுக்கு அந்த நோய் வந்ததற்கு காரணமாயிருந்தது எது என்று குறிப்பாக எதையும் சுட்டிக்காட்ட முடியாது. ஆகவே, எந்தப் பெண்ணாவது தனக்கு மார்பகப் புற்றுநோயே வராது என்று நினைக்கலாமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. FDA கன்ஸ்யூமர் இவ்வாறு அறிவிக்கிறது: “மருத்துவரின் நோக்குநிலையில் இருந்து பார்ப்போமானால், பெண்கள் அனைவருமே மார்பகப் புற்றுநோய் வரும் கணிசமான ஆபத்திலிருப்பவர்களாக கருதி சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.”
ஆகவே, பெண்கள், முக்கியமாக வயதுசென்ற பெண்கள் இந்நோய்க்கு ஆளாகுபவர்களாக இருக்கின்றனர். மார்பகப் புற்றுநோய்க்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ‘அவற்றில் சில வெறுமனே வயதாவதனாலேயும் செல்கள் கேடுவிளைவிக்கும் வகையில் பிரிவதனாலேயும் ஏற்படுகின்றன என்று நான் கருதுகிறேன்’ என்று டாக்டர் கெல்லி குறிப்பிடுகிறார்.
ஏன் ஆளாகிறது
பெண்களுடைய மார்பகத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்ப்பது, அது ஏன் அவ்வளவு எளிதில் புற்றுநோய்க்கு ஆளாகிறது என்பதை விவரிக்கிறது. அதனுள் சிற்றறைகளாகிய நாளங்களும் சிற்றறைகளும் இருக்கின்றன. இவை பால்-உற்பத்தி செய்யும் பைகளிலிருந்து பாலை முலைக்காம்புக்கு கொண்டுசெல்கின்றன. இந்த நாளங்களைச் சுற்றி, ஒரு பெண்ணின் மாத சுழற்சியின் பிரதிபலிப்புக்கு ஏற்றாற்போல், பிரிவுற்று தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் செல்கள் அமைந்திருக்கின்றன. இந்த நடவடிக்கை அவளுடைய கருத்தரித்தலுக்காகவும், பால்சுரத்தலுக்காகவும், தன் குழந்தைக்குப் பாலூட்டுவதற்காகவும் அவளைத் தயாராக்குகிறது. இந்த நாளங்களில்தான் பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்கள் உருவாகின்றன.
மாற்று சிகிச்சைகள்: மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் புதிய முன்னேற்றங்கள் (Alternatives: New Developments in the War on Breast Cancer) என்ற புத்தகத்தில் ஆராய்ச்சியாளர் ரோஸ் குஷ்னர் விவரிக்கிறார்: “ஏதோவொரு தடையினால்—அது முற்றிலும் இயற்கையானதாகவே இருந்தாலும்சரி . . . —தொடர்ந்து நிலைகுலைவிக்கப்படும் எந்த வழக்கமுறையான செயலும், தவறுகளால் அதிக ஆபத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.” அவர் மேலும் கூறுகிறார்: “கடுமையாக உழைத்த மார்பக செல், ‘அதைச் செய்தது போதும், இதைச் செய்யத் தொடங்கிக்கொள்,’ என்று கட்டளையிடும் ஏதாவதொரு ஹார்மோனால் எப்பொழுதும் குளிப்பாட்டப்படுகிறது. ஆகவே புதிதாக பிறப்பிக்கப்பட்ட செல்களில் அநேகம் கட்டுப்பாடின்றி வளர்ச்சியடைகின்றன என்பதில் ஆச்சரியமேதுமில்லை.”
இயல்புமீறிய ஒரு செல் பிரிந்து அதன் வளர்ச்சி செயல்முறையில் கட்டுப்பாட்டை இழக்கும்போது மார்பகப் புற்றுநோய் தொடங்குகிறது. பின்னர் அது விரைந்து பெருகத் தொடங்குகிறது. அத்தகைய செல்கள் இனப்பெருக்கம் செய்வதை நிறுத்துவது கிடையாது. காலப்போக்கில், சுற்றியிருக்கும் ஆரோக்கியமான திசுவையும் அவை ஆட்கொண்டு, ஆரோக்கியமான ஓர் உறுப்பை நோயுற்ற ஒன்றாக்குகின்றன.
நோய் இடம் மாறுதல்
புற்றுநோய் மார்பகத்தினுள்ளேயே இருக்குமானால், சாவுக்கேதுவான அந்தப் புற்று அகற்றப்படலாம். மார்பகப் புற்றுநோய் உடலின் தூரப்பகுதிகளுக்குப் பரவிவிட்டதென்றால், அது இடம் மாறிய மார்பகப் புற்றுநோய் (metastatic breast cancer) என்றழைக்கப்படுகிறது. இதுவே மார்பகப் புற்றுநோயாளிகளில் மரணத்தை விளைவிக்க காரணமாயிருக்கும் அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளது. புற்றுநோய் செல்கள் மார்பகத்தில் பெருகிப்பெருகி, அந்தக் கட்டியானது அளவில் பெரிதாக வளர்கிறது. இதனால் புற்றுநோய் செல்கள் ஆரம்பத்தில் கட்டி உருவான இடத்திலிருந்து வெளியேறி, அரவமின்றி ரகசியமாக இரத்தக் குழாயின் சுவர்களினூடேயும் நிணநீர் முடிச்சுகளினூடேயும் ஊடுருவி செல்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில், கட்டிச் செல்கள் உடலின் தூரப்பகுதிகளுக்குச் சென்று பரவக்கூடும். மரணத்தை விளைவிக்கும் இந்தச் செல்கள் உடலின் நோய்த்தடைகாப்பு அமைப்புகளிடம் அகப்படாமல் தப்பித்துக்கொண்டால், அவை கல்லீரல், நுரையீரல்கள், மூளை ஆகிய முக்கிய உறுப்புகளில் சென்று குடியேறுகின்றன. இந்த நோய்த்தடைகாப்பு அமைப்புகள் இரத்தம் மற்றும் நிணநீர் திரவங்களில் நிறைந்திருக்கும் இயற்கைக் கொலையாளி செல்களையும் உள்ளடக்குகின்றன. இந்த உறுப்புகளிலும் அவை புற்றுநோயை ஏற்படுத்திவிட்டு, விரைவில் பெருகி மீண்டும் பரவக்கூடும். புற்றுநோய் இடம் மாறுதல் ஒருமுறை தொடங்கிவிட்டால், ஒரு பெண்ணின் உயிர் ஆபத்திற்குள்ளாகிறது.
ஆதலால், மார்பகப் புற்றுநோய் உருவாகும் தொடக்க நிலையிலேயே, அது பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படும் முன்னமே கண்டுபிடிக்கவேண்டும். உயிர்ப்பிழைப்பதற்கான ஒரு திறவுகோல் இதுவே. தொடக்க நிலையிலேயே கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த ஒவ்வொரு பெண்ணும் என்ன செய்யக்கூடும்? முதலாவது மார்பகப் புற்றுநோயைத் தடுக்க உதவுவதற்கு ஏதாகிலும் செய்யப்படக்கூடுமா?
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
மார்பகப் புற்றுநோயுள்ள ஒவ்வொரு 4 பெண்களிலும் 3 பேர் தங்களுக்கு அந்த நோய் வந்ததற்கு காரணமாயிருந்தது எது என்று குறிப்பாக எதையும் சுட்டிக்காட்ட முடியாது