கனடாவின் அற்புதமான “நகரும் சாலை”
“இது என்ன நதி?” “முடிவில்லா நதி,” என்று உள்ளூர் வழிகாட்டி பதிலளித்தார்
கனடாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
வருடம் 1535. தகவலாராயும் ஆய்வுப்பயணியாகிய ஷாக் கார்டியர் போடவிருந்த வரைபடம், ஒரு நாள் வட அமெரிக்காவில் மிக முக்கியமான நீர்வழிப் பாதைகளில் ஒன்றாக இருக்கும் என்பதை அவர் கொஞ்சம்கூட உணரவில்லை. இந்த நதி, பூர்வீக மென்தோல் வியாபாரிகளுக்கும் குடியேற்ற நாட்டவர்களுக்கும், கடைசியில் நவீனகால இராட்சத சரக்குக் கப்பல்களுக்கும் விசாலமான முதல் “சாலை”யாக ஆனது. அதன் முகப்பில் 130 கிலோமீட்டருக்கு மேலான அகலத்திற்கும் அட்லான்டிக் பெருங்கடலிலிருந்து ஒன்டாரியோ ஏரி வரையாக சுமார் 1,200 கிலோமீட்டர் நீளத்திற்கும் உள்நாட்டுப் பயணம் இருக்கிறது.
சரித்திர ஏடுகள் இந்த அற்புத நீர்வழிப் பாதையை செயின்ட் லாரன்ஸ் என்று பெயரிட்டு கார்டியரை கெளரவிக்கின்றன. கடைசியாக, அந்நதிக்கும் அதன் நுழைவாயிலில் உள்ள வளைகுடாவிற்கும் அப்பெயர் வைக்கப்பட்டது.
வட அமெரிக்காவின் மிக அழகுவாய்ந்த சில இயற்கைக்காட்சிகள் செயின்ட் லாரன்ஸ் நதியோரம் காணப்படுகின்றன. ஏறக்குறைய நூறு கிலோமீட்டர் தூரம் பரந்துகிடக்கிற, உலகிலுள்ள மிக நீளமான கடற்கால்களில் ஒன்றாகிய சேகுனே கடற்காலை உருவாக்குவதற்கு பாறைகள் நிறைந்த செங்குத்து மலைகளும் கரடுமுரடான பள்ளத்தாக்குகளும் தண்ணீர் வரையாக ஓடிவருகின்றன. இப்பெரிய சேகுனே நதி வடக்கிலிருந்து வந்து செயின்ட் லாரன்ஸில் சுழன்றுசெல்கிறது. இங்குதான் பெருங்கடலின் நீரோட்டம் நதியின் நீரோட்டத்துடன் கலந்து, கழிமுகம் ஒன்றை உண்டுபண்ணுகிறது.
இங்குதான் ஈருலகங்களும் அடிப்பரப்பில் சந்திக்கின்றன என்று கடல்வாழ் உயிரியல் வல்லுநர்கள் சொல்லுகின்றனர். குளிர்ந்த, உப்பான கடல்நீர் 400 மீட்டர் ஆழமான நிலத்தடி நீர்க் கால்வாய்கள் வழியாக பாய்ந்துசெல்கிறது, பின்பு நதிகளிலிருந்து வருகிற நன்னீருடன் மேலெழும்பி கலக்கிறது. இந்தக் கழிமுகத்தில் கடல்வாழ் உயிரினம் செழித்தோங்குகிறது. ஓரளவு ஒன்றாகச் சேர்ந்திருப்பவை பெலூகா திமிங்கிலங்கள் (சிறிய வெண் திமிங்கிலங்கள்), மின்கி திமிங்கிலங்கள், துடுப்புத் திமிங்கிலங்கள், இராட்சத நீலத் திமிங்கிலங்கள் ஆகியவையாகும். சாதாரணமாக இந்த நான்கு வகையான திமிங்கிலங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றன. சமீப வருடத்தில், 70,000-க்கும் மேலான உல்லாசப்பயணிகள் செயின்ட் லாரன்ஸில் திமிங்கிலத்தைக் காணச்செல்லும் பயணங்களை மேற்கொண்டதில் ஆச்சரியமேதுமில்லை.
நதியோரத்திலிருக்கிற தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் கதம்பம், பூமியிலிருக்கிற மிக அசாதாரணமான காரியங்களில் ஒன்றாகும். நூற்றுக்கணக்கான மீன் இனங்கள், 20 விதங்களுக்கும் அதிகமான நில நீர் உயிரினங்கள் மற்றும் ஊர்வனங்கள், 12 வகைகளான கடல்வாழ் பாலூட்டிகள் ஆகியவை இருக்கின்றன. கிட்டத்தட்ட 300 பறவையினங்கள் சதுப்பு தாழ்நிலங்களுக்கும் கரைகளுக்கும் அடிக்கடி வருவதாகச் சொல்லப்படுகின்றன. தாராக்கள் மற்றும் பனிவாழ் வாத்துக்கள் போன்ற இடம்பெயர்ந்து செல்கிற பறவைகள் ஆயிரக்கணக்கில் இந்த நீர்நிலைகளுக்குத் திரண்டுவருகின்றன.
மேலுமாக, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் நீடமைதி வாய்ந்த நீலநிற மலைகள் அதன் கரைகளுக்கு அப்பால் எழும்பி நிற்கின்றன. அடர்ந்த காடுகள் அதன் கரையோரங்களில் அணிவகுத்து நிற்கின்றன. ஒய்யாரமான தீவுகள் அதன் அகன்ற கால்வாயில் காவலுக்கு நிற்கின்றன. பண்ணைகள், கிராமங்கள், பட்டணங்கள் ஆகியவை அதன் கரைகளின்மீது அமைந்திருக்கின்றன.
மான்ட்ரீலில் இருந்து நில உட்பரப்பில் 160 கிலோமீட்டருக்கு ஒரு தொடர்ச்சியான நீர்வீழ்ச்சிகள் நதியை கட்டுப்படுத்துகின்றன. அந்த நீர்வீழ்ச்சிகளுக்கும் அப்பால், புள்ளிகள்போன்றிருக்கும் ஆயிரம் தீவுகள் (உண்மையில் கிட்டத்தட்ட இரண்டாயிரம்) என்று பெயரிடப்பட்ட 60 கிலோமீட்டர் நீர்ப் பரப்பினூடே கடற்பயணம் மிகச் சாவதானமாக ஆகிறது.
“சாலை”யில் போக்குவரத்து
1680-லேயே, நீர்வீழ்ச்சிகளை மேற்கொண்டு கால்வாய்கள் மூலமாக மான்ட்ரீலுக்கு அப்பால் கடற்பயணத்திற்கான “சாலை”யை நீட்டிப்பதைப்பற்றி குடியேறிய ஐரோப்பியர்கள் பேசினர். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின்பு, 1959-ல் செயின்ட் லாரன்ஸ் கடல்வழியை திறந்தவுடன் அந்தக் கனவு நனவாகியது. உலகிலேயே மிகப் பெரிய பொறியியல் சாதனைகளில் ஒன்று என்பதாக அது போற்றப்படுகிறது.
இந்த 293 கிலோமீட்டர் நீளமான நீர்வழிப் பாதையை முடிப்பதற்கு, மான்ட்ரீலுக்கும் ஒன்டாரியோ ஏரிக்கும் இடையில் ஏழு புதிய மதகுகள் கட்டப்பட்டன. 15 கோடி கனசதுர மீட்டருக்கும் மேலான அளவு மண்ணையும் பாறையையும் தோண்டியெடுப்பதை இது தேவைப்படுத்தியது. கால்பந்தாட்ட களத்தின்மீது சமமாகக் குவித்தால், 35 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரமுடைய ஒரு மலையை உண்டுபண்ணும். இந்த மதகுகளில் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட் அளவு லண்டனுக்கும் ரோமுக்கும் இடையே நான்கு பாதைகொண்ட நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கமுடியும்.
கடல்வழி—வட அமெரிக்காவின் நான்காவது கடற்கரைபற்றிய சொல்லப்படாத கதை (Seaway—The Untold Story of North America’s Fourth Seacoast) என்ற புத்தகத்தின் ஆசிரியராகிய ஷாக் லஸ்ட்ரான் என்பவர் கப்பற்தளபதி ஒருவர் இவ்வாறு சொன்னதாக குறிப்பிட்டார்: “இந்த முழு உலகத்திலும் இதுபோன்ற நீர்வழிப் பாதை இல்லை. இது சுலபமான பயணம் அல்ல, ஆனால் இந்த நதியின் பேரழகு, நயாகரா நீர்வீழ்ச்சியின் இரைச்சல், முடிவற்ற சங்கிலிபோன்ற ஏரிகளும் தீவுகளும் அதிக கவனத்தை கவருவதாய் ஆக்குகிறது.”
ஐக்கிய மாகாணங்களின் சுபீரியர் ஏரி பக்கத்திலுள்ள டூலுத்-சுபீரியருக்கு நீட்டிக்கப்பட்ட “சாலை” வரையாகப் பயணப்படுகிற சமுத்திரக் கப்பல்கள், எலிவேட்டரில் ஏறிச்செல்வது போல, கடல் மட்டத்திற்கு மேல் 180 மீட்டர், 60 மாடி வானளாவிய கட்டடத்தின் உயரமாக இருக்கும் அட்லான்டிக் பெருங்கடலிலிருந்து உள்நாட்டுப் பயணத்தின் மொத்த தூரம் 3,700 கிலோமீட்டராகும்.
இப்படிப்பட்ட கடற்பயணம், அந்த வழியருகே உள்ள நகரங்களுக்கு வர்த்தக செழுமையைக் கொண்டுவந்திருக்கிறது. கிரேட் ஏரிகள்/செயின்ட் லாரன்ஸ் திட்டம் (The Great Lakes/St. Lawrence System) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அதனுடைய இருதேச எல்லைகளுக்குள்ளேயே கனடா மற்றும் ஐக்கிய மாகாணங்களின் முக்கிய தொழிற்சாலை இருக்கிறது. அதனுடைய ஜனத்தொகை நெருக்கம் 10 கோடியையும் மிஞ்சுகிறது. மேற்கத்திய உலகிலேயே தொழிற்சாலை மற்றும் உற்பத்தி வளத்தின் தனியொரு மிகப் பெரிய ஊற்றுமூலமாகவும் இது இருக்கிறது.”
அட்லான்டிக் பெருங்கடலிலிருந்து சுபீரியர் ஏரி வரையாக உள்ள அந்த நீர்வழிப் பாதையில் இருக்கிற 150-க்கும் அதிகமான துறைமுகங்கள், (கனடாவிலுள்ள) க்யுபெக் நகரம், மான்ட்ரீல், டோரன்டோ, ஹாமில்டன், சால்ட் செயின்டே மரி, தண்டர் விரிகுடா, மற்றும் (ஐக்கிய மாகாணங்களிலுள்ள) பஃப்ஃபலோ, ஈரீ, கிளீவ்லாண்ட், டெட்ராய்ட், சிகாகோ, டூலுத்-சுபீரியர் ஆகியவையாகும். கஸபிளான்கா, லி ஹாவ்ரே, ராட்டர்டம், இன்னும் பிற இடத்திலிருந்து வருகிற கப்பல்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான டன்கள் அளவான சரக்கை செயின்ட் லாரன்ஸுக்கு அனுப்புகின்றன. இந்தச் “சாலை”யின் பயன், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைகளையும் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான டாலர்கள் வருமானத்தையும் அளிக்கிறது.
அபாய அறிவிப்பின் கூக்குரல்கள்
என்றபோதிலும், இந்தச் “சாலை”யின்மீது 30 ஆண்டுகளுக்கு மேலாக கடற்பயணம்செய்தபின், அபாய அறிவிப்பின் கூக்குரல்கள் ஒலிக்கப்பட்டிருக்கின்றன. நூற்றாண்டுகளாக, செயின்ட் லாரன்ஸ் நதி அதனுடைய கிரேட் ஏரிகளின் நீர்த்தேக்கத்தோடுகூட “கழிவுநீர்ச் சாக்கடையாகவும் குப்பைமேடாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது,” என்று என்வைரன்மென்ட் கனடா வலியுறுத்திக் கூறுகிறது. சமீபத்தில்தான், அந்த “கிரேட் நதி”யால் சமாளிக்க முடிந்தது.
கடலில்செல்லும் பெரிய சரக்குக்கப்பல்கள் அவற்றினுடைய சுமையை நன்னீர் ஏரிகளிலும் நதிகளிலும் கொட்டின. தொழிற்சாலைகளும் கடலோரப் பகுதியிலுள்ள நகரங்களும் நச்சு இரசாயனப் பொருட்களை நதியில் சேர்த்திருக்கின்றன. விவசாயம் அதனுடைய நீர்மத்தை வடித்துப்போக்குவதற்கு காரணமாயிருந்திருக்கிறது. ஒன்றுதிரண்ட பாதிப்புகள் நதியை ஆபத்திற்குள்ளாக்கியிருக்கின்றன.
அதிகமான மாசுபடுத்தும் பொருட்கள் நதியினுள் ஊற்றப்படுகையில், மீன் இனங்கள் படிப்படியாக மறைந்தன. காலப்போக்கில் நீந்துவது தடைசெய்யப்பட்டது. குறிப்பிட்ட சில மீன்களையும் சிப்பிமீன்களையும் சாப்பிடுவதன்பேரில் தடைவிதிக்கப்பட்டது. நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட குழாய் தண்ணீரைக் குடிப்பதும் கேள்விக்குரியதானது. குறிப்பிட்ட சில வகைகளான வனவிலங்குகள் அதிகாரப்பூர்வமாக ஆபத்திற்குள்ளாயின. செத்த பெலுகா திமிங்கிலங்கள் கரையில் குவிக்கப்பட்டிருந்தன, தண்ணீரிலுள்ள விஷங்களினால் உண்டான வியாதிகளுக்குப் பலியாயின.
“சாலை”யை சுத்தப்படுத்துதல்
அந்த நதி ஒரு தெளிவான செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தது. அந்த அற்புதமான “நகரும் சாலை”க்கு செப்பனிடுதல்கள் தேவைப்பட்டன. ஆகவே, 1988-ல், கனடா அரசாங்கம் பராமரித்தல், பாதுகாத்தல், புதுப்பித்தல் ஆகிய திட்டத்தைக்கொண்டு அந்த நதியை சுத்தப்படுத்துவதற்கு, குறிப்பாக மான்ட்ரீல் முதல் அட்லான்டிக் பெருங்கடல் வரையாக சுத்தப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்ட செயின்ட் லாரன்ஸ் செயல் திட்டத்தை ஆரம்பிப்பதன்மூலம் பிரதிபலித்தது.
ஆபத்திற்குள்ளாக்கப்பட்ட இனங்களுக்கான தப்பிப்பிழைக்கும் திட்டங்களின் வளர்ச்சி இப்பொழுது முன்னேறிவருகிறது. மீதியுள்ளவற்றை தக்கவைப்பதற்கு பராமரிப்பு பகுதிகள் நிறுவப்பட்டுவருகின்றன. தனித்தன்மை வாய்ந்த கடற்வாழ் சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கு, சேகுனே நதி செயின்ட் லாரன்ஸ் நதியைச் சந்திக்கிற இடத்தில் புதுமையான சேகுனே கடற்வாழ் பூங்கா நிறுவப்பட்டது.
புதிய சட்டங்கள் நிறுவப்பட்டன. நதியை மாசுபடுத்துகிற பொருட்களை 90 சதவீதம் குறைக்கும்படி தொழிற்சாலைகளுக்கு குறிப்பிட்ட தேதிகள் கொடுக்கப்பட்டன. தூய்மைக்கேட்டைக் குறைப்பதற்குப் புதிய தொழிநுட்பங்கள் முன்னேற்றுவிக்கப்பட்டுவருகின்றன. நதியிலுள்ள வண்டல் அல்லது தூர்வாருதலிலிருந்து வருகிற நச்சுப் பொருட்களினால் மாசுபடுத்தப்பட்ட பகுதிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் மாசு நீக்கப்பட்ட வண்டல்களைப் பயன்படுத்தி கரையோரங்களில் புதிய வனவிலங்கு வாழிடங்கள் நிறுவப்படவிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் அந்த நதியைப் பார்க்க வருகிற ஆயிரக்கணக்கான உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கையையும் வருகையையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அந்தப் பாதிப்பு மாற்றப்படலாம். ஒரு காரியம் என்னவென்றால், மனிதனால் உண்டுபண்ணப்பட்ட சாலைகளைப்போலில்லாமல், மக்கள் அதை மாசுபடுத்துவதை நிறுத்தினால் அந்த நதி தானாகவே செப்பனிட்டுக்கொள்ளும். மிகப் பெரிய தேவையானது, அந்த நதியின் மற்றும் கிரேட் ஏரியின் கரையிலிருந்து செய்யப்படுகிற வர்த்தகத்திலிருந்து பயனடைகிற தொழிலதிபர்கள் மற்றும் சாதாரண நுகர்வோர்களின் மனப்பான்மையை மாற்றுவதேயாகும்.
சீர்கேட்டை மாற்றுவதில் வெற்றிக்கான ஓர் அறிகுறியானது பெலூகா திமிங்கிலமாகும். இன்னும் ஆபத்திற்குள்ளாக்கப்பட்டாலும், 5,000-ல் இருந்து வெறுமனே சுமார் 500-க்கு குறைந்துவிட்ட பிறகு பெலூகா திமிங்கிலங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன.
அந்த நதிக்குரிய இயற்கை வளத்திற்கும் அதன் கடந்தகால மகிமைக்கும் செய்யப்பட்டிருக்கிற பாதிப்பைப்பற்றி பொதுமக்களிடத்தில் புது விழிப்புணர்வு இருக்கிறது. எதிர்காலத்தில் புதுப்பிக்கும் முயற்சிகளைத் தக்கவைப்பதற்கு இந்த மதித்துணர்வு போதுமான பலம்வாய்ந்ததாய் இருக்குமா? மானிட சிருஷ்டிகள் கடவுளுடைய சிருஷ்டிப்புகளை மதித்துப் போற்றும்போது, அந்தவிதமாய் இருக்கும்.