இளைஞர் கேட்கின்றனர்
நான் ஏன் இவ்வளவு தடியாக இருக்கிறேன்?
“நான் உண்மையிலேயே தடியாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன், இருந்தாலும் எடை காட்டுகிற அட்டவணைகளைப் பார்க்கும்போது, அவற்றின்படி நான் அதிக எடையாக இல்லை.”—பேட்டி.
“தடியாக இருப்பது . . . உங்களுடைய சுயமதிப்பை மட்டமானநிலைக்கு தாழ்த்துகிறது. நாலாம் வகுப்பிலிருந்து நான் அதிக எடையாக இருந்துவருகிறேன். . . அப்பொழுதுதான் கேலிசெய்கிறதெல்லாம் ஆரம்பமானது.”—ஜட்.
எடை. இது உண்மையிலேயே சில இளைஞர், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஆட்டிப்படைக்கும் ஒன்றாக இருக்கிறது. பள்ளிசெல்லும் வயதுடைய இளம் பெண்களின் தொகுதி ஒன்றை வாக்கெடுப்பு நடத்தியபோது, அவர்களில் 58 சதவீதத்தினர் தங்களை தடியாகக் கருதினார்கள்.
ஐ.மா. சுற்றாய்வு ஒன்றின்படி, அதிக எடையுள்ள பருவவயது பெண்களில் 34 சதவீதத்தினர் எடையை குறைப்பதற்காக திட்ட உணவு மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார்கள். 4 பேரில் ஏறக்குறைய ஒருவர் சாப்பிட்டதை வாந்தியெடுக்க நாடியிருக்கிறார்! மற்றொரு சுற்றாய்வின்பேரில் அறிக்கைசெய்கையில், தி நியூ டீனேஜ் பாடி புக் இவ்வாறு சொல்கிறது: “அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒன்பது வயதுடையவர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் பத்து மற்றும் பதினோரு வயதுடையவர்களில் சுமார் 80 சதவீதத்தினரும் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தனர். பன்னிரண்டு முதல் பதினாறு வயதுடைய இளம் பெண்களில் சுமார் 70 சதவீதத்தினர் எடையை குறைக்க முயற்சிசெய்துவந்தனர்—பதினேழு வயதுடையவர்களில் 90 சதவீதத்தினர் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தனர்.”
ஒல்லியாக வேண்டுமென்ற வெறி
நூற்றாண்டுகளாக, ஆண்களிலும் பெண்களிலும் ஓரளவு சதைப்பிடிப்பான தோற்றம் கவர்ச்சியானதாய் கருதப்பட்டது. ஆனால் 1920-களில், ஐ.மா.-வின் புதுப்பாணி துறை மிதமான புரட்சிக்கு ஆளானது. திடீரென ஒல்லியான தோற்றம் அழகானதாக மாறியது. பல பத்தாண்டுகளுக்குப் பிற்பாடு, ஒல்லியான தோற்றம் புதுப்பாணியாகவே தொடர்ந்து இருக்கிறது. ஒல்லியான ஆண், பெண் மாடல்களைச் சிறப்பித்துக் காண்பிக்கிற இடைவிடா தந்திரமான விளம்பரங்களின்மூலம் இந்த நோக்குநிலையை முன்னேற்றுவிக்க டிவி-யும் பத்திரிகைகளும் உதவிசெய்திருக்கின்றன. இந்த ஒல்லியான மாடல்களில் அநேகர் தங்களைத்தாங்களே ஏறக்குறைய பட்டினியான நிலையில் வைப்பதைக் குறித்து அவை கவலைப்படவில்லை! கவர்ச்சி ஒல்லியாய் இருப்பதற்குச் சமம் என்பதை லட்சக்கணக்கான இளைஞர் (மற்றும் வயதுவந்தோர்) நம்பும்படி சூட்சுமமாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால், அவ்வளவு ஒல்லியாய் இல்லாத இளைஞர், பொதுவாக தங்களை தடியாகவும் கவர்ச்சியற்றவர்களாகவும் நினைத்துக்கொள்வதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.
சகாக்களிடமிருந்து வருகிற அழுத்தம் எந்தவிதத்திலும் உதவிசெய்கிறதில்லை. அதிக எடையுள்ள பருவவயதானவர்கள் எல்லையற்ற கேலி, பரிகாசம், தப்பெண்ணம் ஆகியவற்றிற்கு அடிக்கடி ஆளாக்கப்படுகிறார்கள். இது, “கணிசமான மனோதத்துவம் சார்ந்த வேதனை”—வயதுவந்த பருவத்துக்குள்ளும் நீடித்திருக்கக்கூடிய வேதனை என்பதாக ஓர் எழுத்தாளர் வருணித்ததை உண்டாக்குகிறது.
நீங்கள் தடியாக இருக்கிறீர்கள் என்று யார் சொல்கிறார்கள்?
சந்தர்ப்பவசமாக, நீங்கள் உண்மையிலேயே அதிக எடையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா இல்லையா என்ற கேள்வி, நீங்கள் நீச்சல் உடையில் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது—மருத்துவ நோக்குநிலையில் பார்க்கையிலாவது அவ்வாறு இருக்கிறது. ஓர் ஆள் அவருடைய பொருத்தமான எடையைவிட 20 சதவீதம் அதிக எடையுடையவராக இருந்தால், மருத்துவர்கள் அவரை பொதுவாக தடித்தவராக வரையறுக்கிறார்கள். என்றாலும், ஏற்கத்தக்க உயரமும் எடையும் பற்றிய அட்டவணைகள் சராசரிகளின் அடிப்படையிலானவை; ஆகவே ஆரோக்கியமான ஓர் ஆள் என்ன எடையாய் இருக்கவேண்டும் என்பதைப்பற்றி ஒரு குத்துமதிப்பான எண்ணத்தையே கொடுக்கமுடியும். எனவே சில மருத்துவர்கள் தடித்திருப்பதை வெறுமனே எடை என்ற அலகுகளில் மட்டும் அளவிடுவதில்லை, ஆனால் உடம்பிலுள்ள அதிகளவான கொழுப்புச்சத்து என்ற அலகுகளிலும் அளவிடுகிறார்கள். சீரற்ற உணவுப்பழக்கங்களுக்கும் தடித்துவிடுவதற்குமான பெற்றோரின் வழிகாட்டி (A Parent’s Guide to Eating Disorders and Obesity) சொல்லுகிறபடி, “பெண்களின் உடல்திசுவில் 20 முதல் 27 சதவீதமும் ஆண்களின் உடல்திசுவில் 15 முதல் 22 சதவீதமும் கொழுப்புச்சத்து இருக்கிறது.”
ஒப்பிடுகையில் சில இளைஞரே உண்மையில் அதிக எடையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆரோக்கியத்தின் நோக்குநிலையிலிருந்து பார்க்கையில், எடையை குறைப்பதற்கு எந்தவித காரணமும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சுற்றாய்வில், வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேலானோர் தங்களை அதிக எடையுள்ளவர்களாக கருதினார்கள், ஆனால் உண்மையில் 15 சதவீதத்தினரே அவ்விதமாக இருந்தார்கள்.
நான் பார்ப்பதற்கு ஏன் இப்படி இருக்கிறேன்?
நீங்கள் உங்களை கண்ணாடியில் பார்க்கும்போது, இது ஆறுதலளிப்பதாய் இல்லாமல் இருக்கலாம்; கவர்ச்சிகரமான உடல் என்று நீங்கள் நினைப்பதுபோன்ற உடல் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். பருவவயது பெண்ணொருத்தி இவ்வாறு புலம்பினாள்: “என்னுடைய எடையை குறைத்து, உயரமாகி நல்ல உடல்வாகை கொண்டிருக்க விரும்புகிறேன்.”
இருப்பினும், நீங்கள் பருவவயதுடைய ஒருவராக இருப்பதால், உங்களுடைய உடல்வாகு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். “பொதுவாக பையன்கள், பெண்கள் ஆகிய இருவருமே பூப்பு பருவத்தில் தடியாகிறார்கள்” என்பதாக டாக்டர் ஐரஸ் லிட் விளக்குகிறார். “பையன்கள் பெரும்பாலும் தசை திசுவை பெறுகிறார்கள், ஆனால் பெண்கள் கொழுப்புத் திசுவை அடைகிறார்கள். பூப்பு பருவத்தில், ஒரு பெண் ஏறக்குறைய எட்டு சதவிகித உடல் கொழுப்பை உடையவளாயிருப்பதிலிருந்து—குழந்தைப் பருவத்தில் இருபாலருக்கும் இருக்கிற சராசரி அளவிலிருந்து—சுமார் 22 சதவீத உடல் கொழுப்பை உடையவளாகிறாள். அதேசமயத்தில், எலும்புக்கூட்டில் ஏற்படும் மாற்றங்கள் பெண்கள் பெறுகிற எடையை விரைவுபடுத்துகின்றன. பையன்களுக்கு பரந்த தோள்பட்டைகள் உருவாகின்றன, ஆனால் பெண்களுக்கு அகன்ற இடைகள் உருவாகின்றன.” இந்த மாற்றங்களுக்கு காலம் எடுக்கிறது. ஆனால் 11 அல்லது 12 வயதுடைய சதைப்பிடிப்பான பெண்ணொருத்தி பூப்பு பருவத்திலிருந்து நல்ல உடல்வாகான பருவ மங்கையாக திடீரென வளரலாம். அவ்வாறு வளராமலும் இருக்கலாம்.
உங்களுடைய விஷயத்தில் இது உண்மையாக இருந்தால், ஓரளவு உங்களுடைய பெற்றோரிடமிருந்து சுதந்தரித்திருக்கிற மரபணு படிவத்தின் காரணமாயிருக்கலாம். உங்களுடைய தோல் நிறம், முடியின் அமைப்பு, உயரம் ஆகியவற்றோடுகூட, உங்களுடைய அடிப்படை உடல்வாகு, சங்கீதக்காரன் எழுதினபடி, கருத்தரிக்கும்போது மரபணு தொகுப்பில் ‘எழுதப்படுகிறது’ என்று சில மருத்துவர்கள் நினைக்கின்றனர். (சங்கீதம் 139:16) டாக்டர் லாரன்ஸ் லேம், சங்கீதக்காரன் எழுதுவதற்கு ஏவப்பட்ட அதே குறிப்பை, தி வெயிட்டிங் கேம் என்ற தன்னுடைய புத்தகத்தில் சொல்கிறார்: “உங்களுடைய வாழ்க்கையின் பலவித கட்டங்களில், நீங்கள் எவ்வளவு எடையுள்ளவர்களாக ஆகவேண்டும், எவ்வளவு அதிகமான கொழுப்பை கொண்டிருக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வாழ்க்கைப் படிவத்தோடு நீங்கள் பிறந்தீர்கள்.”
உடல்வாகின்மீது மரபணுக்களின் செல்வாக்கை ஆராய்ச்சிகள் உறுதிசெய்திருக்கின்றன. தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள், தத்தெடுக்கும் பெற்றோருடைய வடிவத்தைப் பொருத்தில்லாமல், தங்களைப் பிறப்பித்த பெற்றோரைப்போன்ற உடல் தோற்றத்தைக் கொண்டவர்களாக ஆகின்றனர். இரட்டையர்கள் ஒத்தவிதமான மரபணு படிவத்தைக் கொண்டிருப்பதால், இரட்டையர்கள் ஒரே எடையுள்ளவர்களாக ஆகிறார்கள் என்பதைக்குறித்து எந்தவித ஆச்சரியமும் இருக்கவேண்டியதில்லை.
இது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? உதாரணமாக, உங்களுடைய பெற்றோர் இருவரும் தடித்தவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நீங்கள் தடித்தவராக இருப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. ஒரேவொரு பெற்றோரே தடித்தவராய் இருந்தால், வாய்ப்பானது பாதியளவாக குறைக்கப்படுகிறது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் ஓரளவிற்கு உதவிசெய்யலாம். ஆனால் பொதுவாக நாம் பெரும்பாலும் நம்முடைய அடிப்படை உடல்வாகுகளுடனேயே இருக்கிறோம். நீங்கள் எக்டோமார்ஃபாக (ectomorph) இருந்தால், இயல்பாகவே ஒல்லியாகவும் எலும்பும் தோலுமாகவும் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என்டோமார்ஃபுடைய (endomorph) ஒருவராக—உருட்சிதிரட்சியான தோற்றமாகவும் அதிக கொழுப்புடனும் இருக்கிற ஒருவராக—இருக்கும்படி உங்களுடைய மரபணுக்கள் உங்களை நியமித்திருந்தால், நீங்கள் வெறுமனே ஒல்லியாக இருக்கமுடியாது. மருத்துவ ரீதியில் பொருத்தமான எடையுள்ளவராக இருந்தாலும்கூட, நீங்கள் விரும்புவதைவிட பார்ப்பதற்கு அதிக குண்டாக இருப்பீர்கள்.
உங்களுடைய உடலைக்கொண்டு திருப்தியை வளர்த்துக்கொள்ளுதல்
உற்சாகமிழக்கச் செய்கிறதா? ஒருவேளை இருக்கலாம். ஆனால் நற்செய்தி என்னவென்றால், யெகோவா தேவன் முதல் மானிட தம்பதியினராகிய ஆதாம் ஏவாளை பரிபூரண சரீர வடிவமைப்போடு சிருஷ்டித்தார். அவர்கள் அபூரணர்களாகி, அபூரணத்தன்மையை தங்களுடைய சந்ததியினருக்குக் கடத்தியபோதிலும்கூட, சுதந்தரிக்கப்பட்ட எந்தச் சரீர குறைபாடுகளும் தம்முடைய புதிய உலகில் சரிப்படுத்தப்படும்படி கடவுள் பார்த்துக்கொள்வார்.—யோபு 14:4; ரோமர் 5:12; 2 பேதுரு 3:13.
அழகைப் பற்றிய தராதரங்கள் சமுதாயத்தால் வகுத்தமைக்கப்பட்டதாகவும் தனிப்பட்ட தெரிவாகவும் இருக்கலாம் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். இப்படியாக, அழகு என்று கருதப்படுவது எதுவோ அது உலகமுழுவதும் வித்தியாசப்படுகிறது, காலத்தின் ஓட்டத்தில் அது மாறவும் செய்யலாம். ஆகவே, ‘உலகம் அதனுடைய சொந்த வார்ப்புக்குள் உங்களை நெருக்கும்படி அனுமதிப்பானேன்?’ (ரோமர் 12:2, பிலிப்ஸ்) அதனுடைய ஏறுமாறான போக்குடைய தராதரங்களுக்கும் நோக்குநிலைகளுக்கும் இணங்கிச்செல்வானேன்?
நீங்கள் உங்களைத் தாழ்வாக நினைப்பதற்கோ நீங்கள் ஒல்லியாக இல்லாததால்தானே மனச்சோர்வடைந்தவர்களாக ஆவதற்கோ உண்மையில் எந்தவித அவசியமுமில்லை. நம்முடைய சரீரப்பிரகாரமான உயரத்தையோ வடிவத்தையோ கொண்டு கடவுள் நியாயந்தீர்க்கிறதில்லை. “கண்களுக்குத் தோன்றுவதையே மனிதன் காண்கிறான். யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்,” என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 16:7, NW) ஆம், கடவுள் கவனிப்பது “இருதயத்தின் மறைவான ஆளையே”—உங்களுடைய இடுப்பு அல்லது அரையின் அளவை அல்ல. (1 பேதுரு 3:4, NW) நீங்கள் உற்சாகமுள்ளவராய், சாந்தகுணமுள்ளவராய், தயாளகுணமுள்ளவராய், மற்றவர்கள்மீது அக்கறைகாட்டுகிறவராய் இருந்தால், பொதுவாக ஆட்கள் உங்களிடமாக கவர்ந்திழுக்கப்படுவார்கள்.
உங்களுடைய தோற்றத்தை முன்னேற்றுவிப்பதற்கு உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதை இது சொல்லுகிறதில்லை. ஆனால், உங்களுடைய உடல் தோற்றத்தைக் குறித்து நீங்கள் நிறைவான மகிழ்ச்சியுள்ளவர்களாய் இல்லையென்றால், ஏதோ வெறிபிடித்த உணவுக் கட்டுப்பாட்டுடன் உங்களுடைய உடலை வருத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. வெறுமனே என்ன விதமான பாணிகளையும் நிறங்களையும் நீங்கள் அணிகிறீர்கள் என்பதைப்பற்றி அதிக கவனமுள்ளவர்களாக இருப்பது அவசியம். நீங்கள் குறைகளாக கருதுகிறதை அதிகமாக முக்கியப்படுத்திக் காட்டாமல், நீங்கள் நிறைகளாக கருதுகிறதை உயர்த்திக் காட்டுகிற ஆடைகளையும் நிறங்களையும் தெரிந்தெடுங்கள்.
என்றபோதிலும், சிறிதளவு எடையை குறைப்பதே பிரயோஜனமாயிருக்கும் என்று நீங்கள் உணரலாம். அல்லது நீங்கள் தடித்திருப்பதால் உண்மையான பிரச்னைகளை உடையவர்களாக இருக்கலாம். நன்றாக தோற்றமளிப்பதற்காக இல்லாமல், ஆரோக்கியத்திற்கான காரணங்களுக்காக எடையைக் குறைக்கவேண்டி இருக்கலாம். நீங்கள் அதை எவ்வாறு பாதுகாப்பான முறையில் செய்யலாம் என்பது எமது அடுத்த கட்டுரையின் பொருளாக இருக்கும்.
[பக்கம் 19-ன் பெட்டி]
“நான் ரொம்ப ஒல்லியாக இருக்கிறேன்”
ஒல்லியாய் இருப்பதுதான் மயக்கும் அழகு என்பதை எல்லா இளைஞரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். “நான் 15 வயதுள்ள ஒரு பையன், எலும்பும் தோலுமாக இருப்பதால், எப்பொழுதும் கேலிசெய்யப்படுகிறேன்” என்று சிறுவனாகிய மார்க் முறையிடுகிறான். ஒல்லியானது பூப்பு பருவத்தின் ஒரு பக்கவிளைவுதானே தவிர பெரும்பாலும் வேறொன்றுமில்லை. வளர்ந்துவருகிற உடல் மிக அதிகளவான கலோரிகளை செலவழிக்கிறது. திடீர் வளர்ச்சி நிற்கும் வரையாக ஓர் இளைஞன் சதைபோட மாட்டார். மரபணுக்களும்கூட முக்கிய பங்கு வகிக்கின்றன. நிச்சயமாகவே, வியாதியோ ஹார்மோன் சுரப்பியின் சமநிலையின்மையோகூட அதிகளவாக ஒல்லியாக்கலாம். இப்படிப்பட்டவர்களுடைய விஷயத்தில் மருத்துவருடைய கவனம் அத்தியாவசியமானது. சாப்பிடுவதை நிறுத்துகிற இளைஞருக்கும் அதேபோன்று மருத்துவரின் உதவி தேவைப்படலாம், ஏனென்றால் அவர்கள் மனச்சோர்வடைகிறார்கள் அல்லது பசியின்மை போன்ற வினைமையான சீரற்ற உணவுப்பழக்கங்களினால் அவதிப்படுகிறார்கள்.
காரியம் என்னவாக இருந்தாலும்சரி, நீங்கள் அதிக ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று நினைத்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்களுடைய தோற்றத்தை ஏற்றுக்கொள்ள—ஒருவேளை விரும்புவதற்குகூட கற்றுக்கொள்ள—வேண்டியிருக்கலாம்.
[பக்கம் 18-ன் படம்]
புதுப்பாணி பத்திரிகைகளிலுள்ள மாடல்களின் தோற்றம் தங்களுக்கில்லாததால், அதிக எடையுள்ளவர்களாக தங்களை அநேகர் கற்பனைசெய்கின்றனர்