காம்பேக்ட் டிஸ்க்—அது என்ன?
எடிசன் தன்னுடைய நீளுருளை ஒலிப்பதிவுக் கருவியை (tinfoil-cylinder phonograph) 1877-ல் கண்டுபிடித்ததிலிருந்து அல்லது 1960-களின் ஆரம்பத்தில் ஸ்டீரியோ வந்ததிலிருந்து, பொதுமக்களுக்கு விற்பதற்காக 1980-களின் ஆரம்பத்தில் காம்பேக்ட் டிஸ்கை அறிமுகப்படுத்தியதிலிருந்தே, ஒலிப் பதிவுசெய்வதில் லேசர் ஸ்கேன்செய்யும் டிஜிட்டல் காம்பேக்ட் டிஸ்க் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக வரவேற்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய மாகாணங்களில், 1992-ல் 41 கோடியே 40 லட்சத்திற்கும் மேலான காம்பேக்ட் டிஸ்குகளை தயாரிப்பாளர்கள் ஏற்றுமதிசெய்தார்கள், ஆனால் ஃபோனோகிராப் ரெக்கார்டுகளை 2 கோடியே 20 லட்சம் மட்டுமே ஏற்றுமதிசெய்தார்கள் என்று வர்த்தக இதழாகிய பில்போர்டில் உள்ள அறிக்கை ஒன்று காட்டுகிறது. சில ரெக்கார்டு கம்பெனிகள் இனிமேலும் ஃபோனோகிராப் ரெக்கார்டுகளைத் தயாரிக்காத அளவுக்கு காம்பேக்ட் டிஸ்க் விற்பனைகளுக்கு அவ்வளவு ஆதரவு இருக்கின்றன. இருப்பினும், பளபளப்பான அந்த மிகச் சிறிய டிஸ்க் பெரும்பாலானோருக்கு ஒரு புரியாப் புதிராகவே இருந்துவருகிறது. டிஜிட்டல் சவுண்ட் என்றால் என்ன? அது புகழப்படுகிற அளவுக்கு உண்மையிலேயே அவ்வளவு நல்லதா? அந்த டிஸ்க் எவ்வாறு செயல்படுகிறது? காவற்கோபுரம், விழித்தெழு! போன்றவற்றில் உள்ளதைப்போன்ற தகவல் தொகுப்புகளை இருப்புவைத்து மீண்டும்பெறும் காப்பறையாக்க சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா?
டிஜிட்டல் பதிவுமுறை—அது என்ன?
டிஜிட்டல் பதிவுமுறை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, பழைய ஒப்பியல் (analog) பதிவுமுறை எவ்வாறு வேலைசெய்கிறது என்பதைப்பற்றி நாம் முதலாவது ஓரளவு தெரிந்திருக்கவேண்டும். பழக்கமாயிருக்கிற ஃபோனோகிராப் ரெக்கார்டின்மீது, இசையானது தொடர்ச்சியான, ஒலி அலையின் அலையலையான அதிர்வுப் பள்ளமாக, ஒரு படம் அல்லது ஒப்பியல்போல பதிவுசெய்யப்படுகிறது. இசையை மீண்டும் ஒலிக்கச்செய்வதற்கு, ரெக்கார்டு பிளேயரின் ஊசி அல்லது ஆணி சுழல்கிற டிஸ்கின்மீதுள்ள அதிர்வுப் பள்ளத்தில் வைக்கப்படுகிறது. அந்த ஆணியானது அதிர்வுப் பள்ளத்தில் தொடர்ந்துவருகிறது, வரிப்பள்ளத்தின் குலுக்கல் அந்த ஆணியை அதிர்வுறும்படிச் செய்கிறது. இது, முறையே, நுண்ணிய மின்னாற்றல் சமிக்கையை உருவாக்குகிறது; இது பதிவுசெய்யும் ஸ்டுடியோவில் ஒலிவாங்கி (microphone) பெற்ற சப்தங்களின் நேர்ப் பகர்ப்பாக இருக்கிறது. பின்பு அந்தச் சமிக்கை ஒலிபெருக்கப்படுகிறது—இதோ இசை!
டிஜிட்டல் பதிவு வித்தியாசமான முறையைப் பயன்படுத்துகிறது. ஒரு டிஜிட்டல் பதிவுக்கருவி மிக நுட்பமான இடைவெளிகளில்—ஒரு வினாடிக்கு ஆயிரக்கணக்கான தடவைகள்—சமிக்கையின் அளவை ஆராய்ந்து அளவிடுகிறது. அளவிடப்பட்ட இந்த மதிப்புகளை எண்களாக, அல்லது இலக்கங்களாகப் பதிவுசெய்கிறது. அந்த அளவீடுகள் 0-யங்களும் 1-களும் மட்டுமே அடங்கியுள்ள ஈரிணை எண்களாக—கம்ப்யூட்டர் மொழியில்—பதிவுசெய்யப்படுகின்றன; பின்பு எண்கள் அல்லது இலக்கங்களின் தொடர்ச்சியான ஓட்டம் ஒரு கம்ப்யூட்டரால் படிமுறையாக்கப்பட்டு, சாதாரணமாக டேப்பில் இருப்பு வைக்கப்படுகிறது. மீண்டும் போட்டுக் கேட்பதற்காக (playback), ஒரு கம்ப்யூட்டர் அந்த இலக்கங்களை ஸ்கேன்செய்து, ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டதைப் போன்ற சமிக்கையை திரும்பவும் உண்டுபண்ணுகிறது. பின்பு இந்தச் சமிக்கையானது ஒலிப்பெருக்கப்படுகிறது—மறுபடியும்—இதோ இசை!
இந்தச் செயல்முறை, ஒப்பியல் பதிவுமுறையைவிட பதிவுசெய்வதன் மற்றும் கடினப்பொருளைத் தயாரிப்பதன் வரம்புகளாலும் குறைவாக பாதிக்கப்படுகிறது. இது குறைவான இரைச்சல், குறைவான ஒலிக் கோளாறு, பதிவுகளின் தரத்தைக் குறைக்கிற மற்ற காரணிகள் சிலவற்றில் விளைவடைகிறது. அதோடுகூட, டிஜிட்டல் முறையிலுள்ள தகவல்கள் மிகக் கச்சிதமான வடிவில் இருப்பு வைக்கப்படலாம், சுலமாக திரும்பப்பெறலாம். கம்ப்யூட்டரும் பதிவுசெய்யும் கருவியும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் இயல்பான பலன்தான் டிஜிட்டல் பதிவு என்று ஒருவர் சொல்லலாம்.
பல ஆண்டுகளாக ரெக்கார்டு கம்பெனிகள் டிஜிட்டல் பதிவுகளை தங்களுடைய ஸ்டுடியோக்களில் உண்டுபண்ணி வந்திருக்கின்றன. ஆனால் திரும்பப் போட்டுக் கேட்பதற்கான கருவியை, இசைகேட்க வீட்டில் பயன்படுத்துவது மிகவும் சிக்கல்வாய்ந்தது. பயன்படுத்துவோரைப் பொருத்தவரை, டிஜிட்டல் பதிவுமுறையில் உண்மையான முன்னேற்றமானது, வீட்டில் பயன்படுத்துகிற நடுத்தர வர்க்கத்தினருக்குப் பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் நடைமுறையான முறையில் திரும்பப் போட்டு கேட்கும் கருவியின் வளர்ச்சியே. அதன் விளைவே டிஜிட்டல் காம்பேக்ட் டிஸ்கும் (CD) காம்பேக்ட் டிஸ்க் பிளேயருமாகும்.
ஈரிணை எண்கள் அல்லது பிட்டுகள், நுண்ணிய விளிம்பு வெட்டுகளின் (microscopic pits) தொடர்வரிசை வடிவிலும் பளபளப்பான அலுமினிய மேலடுக்குடன்கூடிய ஒரு பிளாஸ்டிக் டிஸ்கினுடைய மேற்பரப்பின்மீது சமதள இடைவெளிகள் வடிவிலும் குறியீடுகளாக மாற்றிவைக்கப்படுகின்றன. அந்த டிஸ்கின் விட்டம் நாலே முக்கால் அங்குலம்தான். அலுமினிய மேலடுக்கு சுத்தமான பிளாஸ்டிக்கின் பாதுகாப்பான மேலடுக்கின்கீழ் அடைக்கப்படுகிறது. இசையை போட்டுக் கேட்பதற்காக, வெள்ளிபோன்ற டிஸ்க் CD பிளேயரில் செருகப்படுகிறது. ஓர் ஊசிக்குப் பதிலாக, மிக நுட்பமாக குவிமையப்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கற்றை வெட்டுகளின் ஓட்டப் பாதையில் செல்கிறது. ஒளிக்கற்றை நுண்ணிய விளிம்பு வெட்டுகளில் படும்போது, அது சிதறடிக்கப்படுகிறது. ஆனால் அது தட்டையான மேற்பரப்பின்மீது படும்போது, ஓர் உணர்வுக் கருவிக்கு மீண்டும் பிரதிபலிக்கப்படுகிறது. இந்த முறையில், CD-யின் மேற்பரப்பின்மீதுள்ள வெட்டுகளும் சமதளங்களும் பிளேயரிலுள்ள சிக்கல்வாய்ந்த எலெக்ட்ரானிக் மின் சுற்றுப்பாதைகள்மூலம் குறியீடுகளைக் கண்டுணருவதற்காக மின்னணு துடிப்புகளின் தொடர்வரிசைக்குள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன.
அது எந்தளவுக்குச் சிறந்தது?
ஆனால் ஃபோனோகிராப் ரெக்கார்டுகளைவிட உண்மையில் CD சிறந்ததா? அது இருக்கட்டும், இதைக் கவனியுங்கள்: ஒரு வைர ஊசிக்குப் பதிலாக ஓர் ஒளிக்கற்றையை பயன்படுத்தி CD இயக்கப்படுவதால், எத்தனைமுறை இசை ஒலிபரப்பப்பட்டாலும்சரி, தேய்ந்துபோவதோ பிய்ந்துபோவதோ இல்லை. சிறிய குறைபாடுகளும் டிஸ்கின் மேற்பரப்பின்மீதுள்ள கீறல்களும்கூட சப்தத்தை மோசமாகப் பாதிக்காது. ஏனென்றால் லேசர் ஒளிக்கற்றையானது வெட்டுகளின்மீது குவிமையப்படுத்தப்படுகிறது, டிஸ்கின் மேற்பரப்பின்மீதல்ல. எரிச்சலூட்டுகிற விநோதமான சப்தங்கள், வெடிப்பொலிகள், கீறிச்சொலிகள் ஆகியவை போய்விட்டன. நீண்டநேரம் ஓடுகிற ரெக்கார்டை (LP) கேட்டிருக்கிற எவரும் அந்த இரைச்சல்களோடு மிக நன்றாக பழக்கப்பட்டிருப்பர். இவையனைத்தும் LP நிகராக முடியாத அளவுக்கு CD-க்கு ஓரளவு நிலைத்திருக்கும் தன்மையை அளிக்கிறது. கொள்கையளவில் சொல்லப்போனால், காம்பேக்ட் டிஸ்க் நீடித்து நிலைத்திருக்கவேண்டும்—தகுந்தமுறையில் தயாரிக்கப்பட்டு கையாளப்பட்டால்.
CD நீண்டநேரம் செயல்படுவதும் அளவில் சிறியதாக இருப்பதும் அதன் சாதகமான குறிப்புகளாகும். எழுந்துவந்து மறுபக்கத்திற்குத் திருப்பிப்போடும் அவசியமில்லாமலேயே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இசையை ஓடவிடலாம்! LP-ஐ விட CD ஐந்தில் ஒரு பாகம் சிறியது, ஆகவே கையாளுவதற்கும் இருப்பு வைப்பதற்கும்கூட எளிதாயிருக்கிறது. அதோடுகூட, CD பிளேயர்கள் ஒரு கம்ப்யூட்டர் போல இயங்குவதால், CD-யின் பகுதிகளை விரும்புகிற எந்தவொரு வரிசைப்படி போடவோ அவற்றை மீண்டும் போடவோ அவற்றில் பெரும்பாலானவற்றை திட்டமிடலாம். சில பிளேயர்களில் தேடும் செயற்கூறுகளும்கூட (search functions) இருக்கின்றன. இசையிலுள்ள எந்தவொரு இடத்தையும் உடனடியாகக் கண்டுபிடிப்பதற்கு அதைப் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட வசதிகளான அம்சங்கள், பயன்படுத்தப்படுகிற அநேகரால் உயர்வாக வரவேற்கப்படுகின்றன.
ஆனால் சப்தத்தைப் பற்றியென்ன? பெரும்பாலும் முதல் தடவையாக CD-யில் கேட்கிற அனைவருமே சப்தம் எவ்வளவு தெளிவாகவும் உயிரூட்டமாகவும் இருக்கிறது என்பதைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். நிசப்தமான பின்னணியிலிருந்து வெளிவருகிற இசை சிலிர்க்கவைக்கும் அளவுக்கு தெளிவாக இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், CD-யில் பதிவுசெய்யப்படக்கூடிய மிக நிசப்தமான இசைக்கும் மிக சப்தமான இசைக்கும் இடையே உள்ள வித்தியாசம்—ஆற்றலின் வித்தியாசம் என்றழைக்கப்படுவது—சராசரி LP-யில் இருக்கிறதைவிட மிக அதிகளவாகும். இதுவும் இரைச்சல் மற்றும் ஒலிக்கோளாறிலிருந்து வருகிற விடுதலையும், CD-யில் கேட்கப்படுகிற இசைக்கு பேரளவான உயிரூட்டத்தைக் கொடுக்கிறது.
மறுபட்சத்தில், ஒரு சராசரி CD-யின் விலை LP-ஐவிட கணிசமான அளவுக்கு அதிகமாக இருக்கலாம். என்றாலும், ஒலியை திரும்பவும் கொண்டுவருவதில் CD பொதுமக்களுக்கு ஓரளவு தெளிவை கொண்டுவந்திருக்கிறது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும், ஏனென்றால் கடந்தகாலத்தில் ஒலி நயத்தில் தீவிர பற்றார்வமிக்க ஒருசிலரே அதை அனுபவித்துக்களித்தார்கள்.
காம்பேக்ட் டிஸ்குகளும் கம்ப்யூட்டர்களும்
சமீபத்தில் CD-கள் முற்றும் புதிய ஓர் அம்சத்தை ஏற்றிருக்கின்றன. ஏனென்றால் இதே தொழில்நுட்பத்தைப் பேரளவான தகவல்களை அல்லது விவரங்களை இருப்பு வைப்பதற்கு பயன்படுத்தலாம். காம்பேக்ட் டிஸ்கிலுள்ள இத்தகைய பொருளடக்கங்களை ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்டிருக்கிற CD ஸ்கேனரைக் கொண்டுள்ள கம்ப்யூட்டர் மூலமாக எளிதில் பெறலாம். CD-ல் உள்ள இசையின் எந்தப் பாகத்தையும் CD பிளேயரில் உடனடியாகப் பெறமுடியும். அதைப்போலவே வேறுபட்ட விதமான CD ஸ்கேனரைக்கொண்டு, தகுந்தவிதமாக வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் கட்டளைகள் மூலமாக இருப்பு வைக்கப்பட்ட தகவலின் எந்தப் பாகத்தையும் ஒருசில வினாடிகளில் வாசிக்கலாம், தேடலாம், மேற்கோள்காட்டலாம்.
காம்பேக்ட் டிஸ்க் நம்பமுடியாத அளவுக்கு இருப்பு வைத்துகொள்ளும் திறனைக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் மொழியில் சொன்னால், அது 600 மெகாபைட்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கமுடியும். இது 1,000 ஃபிளாப்பி டிஸ்குகளுக்கு அல்லது 2,00,000 அச்சிடப்பட்ட பக்கங்களுக்குச் சமமாகும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், 20 தொகுதிகள்கொண்ட 10 மடங்கான என்ஸைக்ளோப்பீடியாவை டிஜிட்டல் முறையில் மாற்றி, வெறுமனே ஒரே காம்பேக்ட் டிஸ்கில் இருப்பு வைக்கலாம்! ஆனால் அதனுடைய அணுகூலம் பேரளவான திறனுக்கு மட்டுமே மட்டுப்பட்டதல்ல.
1985-க்குள்ளாக, கம்ப்யூட்டரில் பயன்படுத்தக்கூடிய CD-கள் விற்பனைக்கு வர ஆரம்பித்தன. இவை CD-ROM என்பதாக அழைக்கப்பட்டன, அது Compact Disc Read-Only Memory என்பதன் சுருக்கத்தைக் குறிக்கிறது. அவற்றில் பெரும்பாலும் என்ஸைக்ளோப்பீடியாக்கள், அகராதிகள், கையேடுகள், விலைப்பட்டியல்கள், புத்தக விளக்க அட்டவணை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள், சரித்திர பதிவேடுகள் அல்லது பலவிதமான தொகுப்புகள் போன்ற நோக்கீட்டு குறிப்புகளடங்கிய தகவல்கள் இருந்தன. ஆரம்பத்தில் அவற்றின் விலை அதிகமாக இருந்தது. ஆகவே அவை நூலகங்கள், வேறுசில கல்வி அல்லது அரசாங்க நிறுவனங்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. உண்மையில் சொல்லப்போனால், சில வருடங்களுக்கு முன்பு ஒரு டிஸ்கின் விலை அநேக நூற்றுக்கணக்கான டாலராக இருந்தன, இன்றோ அந்தத் தொகையில் ஒரு சிறிய பின்னமான விலைக்கு வாங்கலாம்.
பொருளை வெறுமனே இருப்பு வைப்பதற்கும் மேலாக CD-ROM-ஐ முன்னேற்றுவிக்க நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில், வண்ண படங்களும் சவுண்ட் எஃபெக்ட்ஸும் கொண்ட CD-ROM டிஸ்குகள் சந்தையில் விற்பனைக்கு வர ஆரம்பித்தன. இப்பொழுது நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆளின் வாழ்க்கை சரிதையை வாசிக்கவும் ஒரு படத்தைப் பார்க்க முடிவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆள் பேசுகிற பேச்சையும் கேட்கமுடியும். நிச்சயமாகவே, சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் இயங்கும் வண்ணப் படங்களைக்கொண்ட எல்லா விதமான கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் இருக்கின்றன. கம்ப்யூட்டரையும் வீட்டுப் பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்கிற இந்த மல்டிமீடியா என்றழைக்கப்படுகிற இடைச்செயல் முறைகள், அதன் உள்ளாற்றலை நிறைவேற்றுமா என்பது எதிர்காலத்தில் புலப்படும்.
கல்வி மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்கு அதிகப் பயனுள்ளதாக இருக்கக்கூடிய இந்த டிஜிட்டல் காம்பேக்ட் டிஸ்க், உண்மையிலேயே ஒரு தொழில்நுட்ப அதிசயமாக இருக்கிறது. அதனுடைய உள்ளாற்றலை அது நிறைவேற்றுமா என்பது பிற்காலத்தில் புலப்படும்.
[பக்கம் 21-ன் பெட்டி]
CD-யின் சின்னஞ்சிறு உலகம்
காம்பேக்ட் டிஸ்க் என்ற இந்தப் பெயர் தவறான சொல் வழக்கல்ல. உள்ளங்கை அளவான இந்த டிஸ்கின் மின்னுகிற மேற்பரப்பின்மீது ஐந்து முதல் ஆறு நூறுகோடி நுண்ணிய வெட்டுகள் ஒரு சுருள் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதை நீட்டினால், அந்தச் சரமானது 5.6 கிலோமீட்டருக்கும் மேலான நீளமாக இருக்கும். அந்த ஓட்டப்பாதைகள், டிஸ்கின் உட்புறத்தில் தொடங்கி வெளிப்புறத்தை நோக்கி 20,000 சுருள்களாக சுற்றப்பட்டிருக்கின்றன. அவை ஒரு LP-யின் (நீண்டநேரம் ஓடும் ரெக்கார்டு) அதிர்வுப் பள்ளத்திற்குள் 60 பாதைகள் பொருந்தக்கூடுமளவுக்கு அவ்வளவு நெருக்கமாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு விளிம்பு வெட்டும் அரிசி தானியத்தின் அளவாக இருந்தால், அந்த டிஸ்க் நான்கு கால்பந்தாட்ட மைதானங்களைவிட பெரியதாக இருக்கும் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தகைய மிகச் சிறிய பரிமாணத்தின் காரணமாக, காற்றானது முற்றுமுழுக்க சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான அறைகளில் CD-கள் தயாரிக்கப்படவேண்டும். CD-யின்மீதுள்ள ஒரு விளிம்பு வெட்டின் அளவைவிட சுமார் ஐந்து மடங்கு பெரிதான சராசரி தூசித் துகள் ஒன்று, பதிவு செய்வதில் பிழை உண்டுபண்ணுவதற்கு போதுமானளவு குறியீட்டெண்களை அழிக்கமுடியும். “நம்முடைய சுத்தத்தின் தராதரத்தை ஒப்பிடுகையில், அறுவைசிகிச்சை செய்யப்படுகிற அறை பன்றி அடைக்கப்படும் ஒரு பட்டியாக இருக்கிறது” என்று ஒரு பொறியாளர் சொல்கிறார்.
டிஸ்க் இயங்கும்போது ஒரு நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் வரையான வேகத்தில் அது சுழல்கிறது. ஆகையால் அந்த நுண் வெட்டுகளின்மீது லேசரை குவிமையப்படுத்துவதும் நெருக்கமாக சுற்றப்பட்ட பாதையிலிருந்து விலகாமலிருக்கச் செய்வதும் தலைசுற்றுகிற ஒரு சாகசமாக இருக்கிறது. அதைச் செய்வதற்கு, லேசர் ஒளிக்கற்றையானது வியக்கச்செய்யும் சிக்கல்வாய்ந்த வழிகாட்டு அமைப்புமூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
[பக்கம் 23-ன் பெட்டி]
உவாட்ச்டவர் நூலகம்—CD-ROM
உவாட்ச்டவர் சொஸையிட்டி ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் பொருத்தமான தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதை எப்பொழுதும் தகுந்ததாய் கண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நற்செய்தியை அறிவிப்பதில் இயங்கும் வண்ணத் திரைப்படங்கள், வானொலி வலைப்பின்னல், தூக்கிச்செல்லக்கூடிய ஃபோனோகிராப் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் இந்த சொஸையிட்டியே முன்னோடியாக இருந்திருக்கிறது. இப்பொழுது, உவாட்ச்டவர் நூலகம்—1993 பதிப்பு (Watchtower Library—1993 Edition) என்பதை உவாட்ச்டவர் சொஸையிட்டி ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறது. பைபிள் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் ஒரு மகத்தான கருவியாக இது நிரூபிக்கும் என்று நாங்கள் நிச்சயமாக இருக்கிறோம்.
இந்தப் புதிய வெளியீடு உண்மையிலேயே ஒரு நூலகமாகும். 1970 முதல் உவாட்ச்டவர் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (New World Translation of the Holy Scriptures—With References), 1950 முதல் 1993 வரையிலான வருடாந்தர பைன்ட் செய்யப்பட்ட தொகுதிகளாகிய காவற்கோபுரம் மற்றும் 1980 முதல் 1993 வரையிலான விழித்தெழு!, இரண்டு தொகுதிகளடங்கிய வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures) என்ற பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, எண்ணற்ற மற்ற புத்தகங்கள், சிறுபுத்தகங்கள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் ஆகியவற்றின் கட்டுரை பொருளானது ஆங்கிலத்தில் எலெக்ட்ரானிக் வடிவில் அடங்கியதாயிருக்கிறது. அதோடுகூட, 1930 முதல் 1993 வரையிலான காவற்கோபுர பிரசுரங்களுக்கான அகரவரிசை பொருளடக்க அட்டவணையும் அதில் அடங்கியுள்ளது.
இந்தப் பெரிய விவரத் தொகுப்போடுகூட (data base), உவாட்ச்டவர் நூலகத்தில் உள்ள எந்தப் பிரசுரங்களிலும் உள்ள ஒரு வார்த்தை, கூட்டான வார்த்தைகள், அல்லது வசன மேற்கோள் ஆகியவற்றை தேடுவதைக் கூடியகாரியமாக்கி, பயன்படுத்துவதற்கு எளிதான தேடும் கட்டளையை (search program) இந்த CD-ROM அளிக்கிறது. நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட பிரசுரத்தையும் நேரடியாக திறக்கமுடியும்; குறிப்பிட்ட ஒரு அதிகாரத்தை, கட்டுரையை, அல்லது பக்கத்தையே திறக்கமுடியும். தேடும்படலத்தின் விளைவுகளை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கலாம் அல்லது ஒரு பேச்சிலோ கடிதத்திலோ பயன்படுத்துவதற்காக சொல் செயலாக்கியில் (word processor) பதிவு செய்யலாம். தனிப்பட்ட படிப்பு திட்டங்களுக்கான பொருளை ஒழுங்கமைப்பதற்கும் உங்களுடைய சொந்த குறிப்புகளைப் பதிவுசெய்வதற்கும் ஓர் அம்சத்தை இந்தக் கம்ப்யூட்டர் கட்டளை கொண்டிருக்கிறது.
இந்தப் புதிய கருவியைக்கொண்டு, “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை” உற்றுநோக்குவதில் தொடர்ந்திருக்க அநேகரால் இயலும், மேலும் அவ்விதமாக செய்வதற்காக ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.—யாக்கோபு 1:25.