டிடிகாகா ஏரியின் மிதக்கும் தீவுகள்
பெருவிலுள்ள விழித்தெழு! நிருபர்
மிதக்கும் தீவுகளா? ஆம், தென் அமெரிக்காவிலுள்ள இந்த அபூர்வமான ஏரியின் தீவுகள் மிதக்கின்றன. மக்கள் அவற்றில் வாழவும் செய்கிறார்கள்.
மேற்கே பெருவையும் கிழக்கே பொலிவியாவையும் எல்லையாகக் கொண்ட டிடிகாகா ஏரி, பெரிய கப்பல்களின் போக்குவரத்துக்கேதுவான உலகின் மிக உயர்ந்த இடத்திலுள்ள ஏரியாகும். கடல் மட்டத்துக்கு 3,810 மீட்டர் மேலே அமையப்பெற்றதாய், வடமேற்கு முதல் தென்கிழக்கு திசையில் 190 கிலோமீட்டரும் குறுக்காக அதன் மிக அகலமான இடத்தில் 80 கிலோமீட்டருக்கும் மேலாகவும் அது விரிந்துகிடக்கிறது.
டிடிகாகா ஏரியின் அநேக தீவுகளில் சில, ஏரியின் ஆழமற்ற சில பகுதிகளில் வளரும் நாணல்போன்ற புல்வகையின் காய்ந்துபோன டோடோரவியின் மிதக்கும் தரைவிரிப்புகளாக உள்ளன. இந்த நாணல், ஏரியின் அடிப்பகுதியில் வளர்ந்து அநேக மீட்டர் தண்ணீர் வழியாக கடந்து, தண்ணீர் பரப்புக்கு மேலே பல மீட்டர் நீண்டுகிடக்கின்றன. ஒரு தீவை உண்டுபண்ணுவதற்கு, நாணல்கள் ஏரியின் அடிப்பகுதியில் இன்னும் வேர்கொண்டிருக்கும்போதே, தண்ணீர் பரப்பின்மேல் படர்ந்துகிடக்கும் ஒரு வைக்கோல்போன்ற மேடையை அல்லது தரையை உண்டுபண்ணுவதற்காக வளைக்கப்பட்டு ஒன்றொடொன்று பின்னிமுறுக்கப்படுகின்றன. நாணல்கள் பின்னர் சேற்றினால் கட்டப்பட்டு, வெட்டப்பட்ட நாணல் சேர்க்கப்பட்டு பலப்படுத்தப்படுகின்றன. குடியிருப்பவர்கள் மிதக்கிற நாணல் தீவுகளின்மீது கட்டப்பட்ட நாணல் குடிசைகளில் வசிக்கின்றனர்.
இந்தத் தீவுகளில் மக்கள் வெகு நீண்ட காலமாக வாழ்ந்துவருவதாக என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. அது மேலும் குறிப்பிடுவதாவது: “ஏரியில் குடியிருப்பவர்கள் தங்கள் புகழ்பெற்ற மிதவைகளைச் செய்கின்றனர்—காய்ந்துபோன நாணல் கொத்துகளைக் கயிற்றால் கட்டி உருவாக்குகின்றனர், இது தோற்றத்தில் பண்டைய எகிப்திய நினைவுச்சின்னங்களில் காணப்படும் பிறைநிலா வடிவ கப்பலின் ஓவியங்களைப் போன்றிருக்கின்றன.”
சமீபத்தில், யெகோவாவின் சாட்சிகள் டிடிகாகா ஏரியின் தீவுகளிலுள்ள மக்களுக்குப் பிரசங்கிப்பதற்காக படகு ஒன்றை வாங்கினர். இது வெளியே பொருத்தப்பட்டுள்ள மோட்டாரிலிருந்து (outboard motor) இயந்திர ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறது, 16 நபர்களை அது ஏற்றிச்செல்லக்கூடியது. இந்த நாணல் தீவுகளில் சாட்சிகள் ஒரு குடியிருப்பிலிருந்து மற்றொரு குடியிருப்புக்கு நடந்துசெல்கையில், காலடிக்குக் கீழே இலேசான அசைவு இருப்பதாகச் சொல்கின்றனர். நெடுந்தொலையிலுள்ள மிதக்கும் இந்தத் தீவுகளில் வாழும் மக்களையும்கூட கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தி எட்டுவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது!