பைபிளின் கருத்து
சூதாட்டம் கிறிஸ்தவர்களுக்கா?
சூதாட்டம் அளவுக்கு மீறிய செலவு உண்டாக்குகின்ற ஒரு பழக்கமாகும். இது பெரும்பாலும் ஒருவருடைய வருவாயில் பாதியை விழுங்கிவிட்டு, அவரை மட்டுக்கு மீறியக் கடன்களுக்குட்படும்படி செய்யக்கூடும். இந்தப் பழக்கம் திருமண வாழ்க்கையையும் தொழிலையும் நாசம்செய்யக்கூடும். சிலர் ஒருவேளை, குற்றச்செயலில் ஈடுபடுவதைத் துவங்கியும் வைக்கலாம். மற்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களிடத்தில் காணப்படுவதைப் போன்றே, இந்தப் பழக்கத்திற்குப் பலியானவர்களும் அடிமையாகின்றனர்; மேலும் பழக்கத்தை நிறுத்துவதினால் ஏற்படும் எதிர்விளைவுகளினால் வேதனைப்படுகின்றனர்.
சூதாட்டம் அவ்வளவு பொதுவானதாக இருப்பதனால், சில நாடுகள் அதை ஒரு “தேசிய பொழுதுபோக்கு,” (“national pastime”) என்று கருதுகின்றன. என்றபோதிலும், உண்மையில் சூதாட்டம் என்றால் என்ன? தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “சூதாட்டம் என்பது ஒரு எதிர்கால நிகழ்ச்சியின் முடிவின்மீது பந்தயம் கட்டுதல்” ஆகும். “சூதாட்டக்காரர்கள் பொதுவாகத் தாங்கள் உத்தேசிக்கும் முடிவின்மீது பணத்தை அல்லது விலைமதிப்புள்ள எதையாகிலும் ஒரு பணயமாக வைக்கின்றனர். முடிவு தீர்மானிக்கப்பட்டவுடன், வெற்றிபெற்றவர் தோல்வியடைந்தவரின் பணயங்களை (பந்தயப் பொருட்களை) எடுத்துக்கொள்கிறார்.”
சூதாட்டம் புதிதாகக் குறிப்பிடத்தக்க ஒன்றல்ல. மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த பழங்காலத்து மாயா இனத்தினர் ஒரு காலத்தில் போக்டாடோக் என்றழைக்கப்பட்ட பிரபலமானப் பந்துவிளையாட்டை விளையாடினர். இது மெக்ஸிகோ பழங்குடியினரால் ட்லாஷ்ட்லி என்று அறியப்பட்டிருந்தது. “இதில் பலர் [சூதாட்டத்தினால்] தங்களுடைய செல்வங்களை இழந்து, உயிரையும் பணயம் வைத்தனர்,” என்று ஆமெரிக்காஸ் என்ற பத்திரிகை கூறுகின்றது. இந்தப் பழங்குடியினர் பந்தய வெறிகொண்டனர். சிலசமயங்களில் “நிலையற்ற ரப்பர் பந்தாட்டத்திற்குத் தங்களுடைய உயிரையும் ஆபத்திற்குள்ளாக்கினர்.”
ஏன் அநேகர் சூதாட்ட வெறியால் பீடிக்கப்பட்டனர்? ஐக்கிய மாகாணங்களில் உள்ள பொது பந்தய ஆட்ட ஆராய்ச்சி நிலையத்தின் (Public Gaming Research Institute) முதல்வர் ட்வேன் பர்க் கூறுகிறபடி: “அதிக அதிகமான ஆட்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஓய்வுநேர செயலாக கருதி ஈடுபடுகின்றனர்.” சில மத அமைப்புகளும் சூதாட்டத்தை நிதிதிரட்டும் வழியாக ஆதரிக்கின்றன.
சூதாட்டம் பிரபலமான மற்றும் நீண்ட வரலாற்றை உடையதாக இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களுக்கு அது ஒரு தீங்கற்றப் பொழுதுபோக்காக இருக்கக்கூடுமா? அல்லது அதில் அதைக் காட்டிலும் அதிகம் உள்ளதா?
ஏன் ஆட்கள் சூதாடுகின்றனர்?
சுருங்கக்கூறின் ஜெயிப்பதற்கே. சூதாட்டக்காரர்களுக்கு சூதாட்டமானது, ஒரு தனியார் தொழிலில் உள்ளடங்கியுள்ள, முயற்சி, கட்டுப்பாடின்றி, விரைவில், கிளர்ச்சித் தூண்டும் விதத்தில், பணம் சம்பாதிக்கும் வழியாகத் தோன்றுகிறது. ‘பெரும் தொகையை’ ஜெயிப்பது பற்றியும், அந்தத் தொகை அவர்களுக்கு எத்தகையப் புகழையும், பொருட்களையும் கொண்டுவரும் என்றும் கனவு காண்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.
ஆனால் சூதாட்டக்காரர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் நசுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, புள்ளியியல் நிபுணர் ரால்ஃப் லிஷ் கூறுவதாவது: ஜெர்மனியில் “மொத்த பந்தயப் பணத்தையும் [ஜெர்மன் லாட்டரி ஜெயிப்பதைக்] காட்டிலும் ஒரு வருடத்திற்குள் மின்னலால் தாக்கப்படுவதற்கு உங்களுக்கு நான்கு மடங்கு வாய்ப்புள்ளது.” இது ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் தொனிக்கவில்லையென்றால், பின்வரும் இணைப் பொருத்தத்தை அவர் சேர்க்கின்றார்: “நீங்கள் ஒரு மனிதராக இருப்பீர்கள் என்றால், நீங்கள் 100 [வயது] வரை வாழ்வதற்கான வாய்ப்புகள் [லாட்டரியில் வெற்றிபெறுவதைக் காட்டிலும்] 7,000 மடங்குகள் அதிகமாக உள்ளன.” எதிர்பார்ப்பிற்கு மாறாக, சூதாட்டக்காரர் இதைப் பற்றி ஒருவேளை அறிந்திருக்கலாம். எனவே எது அவரைத் தொடர்ந்து சூதாடச் செய்கிறது?
டாக்டர் ராபர்ட் கஸ்டர் அதிர்ஷ்டம் கைகூடாமல் போகும்போது (When Luck Runs Out) என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதியபடி, சூதாடும் ஒரு சிலருக்கு “பொருளாதார லாபத்தை அடைதல் என்பது ஜெயிப்பதன் ஒரே ஒரு அம்சம் மட்டுமே ஆகும். . . . ஜெயிக்கும் பணம் பெறக்கூடிய பொறாமை, மதிப்பு, பாராட்டு, முகஸ்துதி இவைதான் அவர்களுக்கு ஒரு முக்கியக் காரியமாக இருக்கிறது.” இவர்களுக்கு “மற்றவர்கள் மெச்ச பணக் கத்தையைக் காட்டித் திரிவது அல்லது ‘பெரிய தொகையை ஜெயித்தேன்,’ என்று வெறுமனே சொல்லமுடிவதும், மகிமையில் திளைத்துப்போவதுமே கிளர்ச்சியூட்டுவதாக” இருக்கிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
மறுபட்சத்தில், ஜெயிப்பதும், அதோடு வரும் கிளர்ச்சியும் மட்டுமே அநேக சூதாட்டக்காரர்களுக்குப் போதுமானதாக இல்லை. சூதாடவேண்டும் என்னும் ஆர்வம் அவ்வளவு வலிமையுடன் வளர்ந்து விடுவதால், அவர்கள் சூதாட்ட வெறியர்களாக (compulsive gamblers) மாறிவிடுகின்றனர். கேம்பிளர்ஸ் அனானிமஸ் அங்கத்தினர்களுடன் டாக்டர் கஸ்டர் நடத்திய ஆராய்ச்சியில் சுற்றாய்வு செய்யப்பட்டவர்களில் 75 சதவிகிதத்தினர், தோல்வியடைந்தபோதும் அவர்கள் ஜெயிப்பதாக வீண்பெருமைப் பேசுவர் என்று கூறினர்! ஆம் மதுபானமோ போதைப்பொருட்களோ அவற்றிற்கு அடிமைப்படுத்துவதைப் போன்றே, சூதாட்டமும்கூட கொடிய மற்றும் அழிவுண்டாக்கக்கூடிய அளவுக்கு அடிமைப்படுத்தக்கூடும். எத்தனை சூதாட்டக்காரர்கள் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கி, வரம்பு தவறி சூதாட்டத்தின்மீது சார்ந்திருப்பவர்களாக மாறியிருக்கின்றனர்? அவ்வாறு மாறியிருந்தும் அதை உணராமல் இருப்பவர்கள் எத்தனைபேர்?
கடவுளுடைய நோக்குநிலை
சூதாட்டத்தைப் பற்றி பைபிள் விரிவாக விவாதிக்கவில்லை. என்றபோதிலும், கடவுள் சூதாட்டத்தை எவ்வாறு நோக்குகிறார் என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவக்கூடிய நியமங்களை அது அளிக்கின்றது.
சூதாட்டம் பேராசையைப் பிரதிபலிக்கின்றது என்பதாகவே அனுபவங்கள் காட்டுகின்றன. பைபிள் பேராசையை வன்மையாகக் கண்டிக்கின்றது. ‘பேராசைக்காரன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை,’ என்று எச்சரிக்கின்றது. (எபேசியர் 5:5, NW) சூதாட்டக்காரர்கள் தோற்றுப்போகும்போதும் பேராசைக் காணப்படுகின்றது. ஒரு அதிகாரியின் கூற்றின் பிரகாரம் சூதாட்டக்காரன், “தான் எதை இழந்தானோ அதை—‘பெரிய தொகையை’ திரும்பப் பெறும் வாய்ப்பைத்தேடி—முயற்சிக்கிறான். அவன் அவ்வாறு பெரிய தொகையை பெற்றால், அந்தப் பெரிய தொகையின்மீதும் பந்தயம்கட்டி இறுதியில் அந்தப் ‘பெரிய தொகையையும்’ இழந்துவிடுகிறான்.” ஆம் பேராசை நிச்சயமாகவே சூதாட்டத்தின் ஒரு பாகமாக இருக்கிறது.
சூதாட்டம் சிலரால், தங்களுடைய கர்வத்தை வளர்ப்பதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது. சூதாட்ட வெறியர்களோடு நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காண்பித்ததாவது, 94 சதவிகிதத்தினர் சூதாட்டத்தை, “தான் என்ற எண்ணத்தை வளர்க்கும் செயல்” எனக் கருதினர் மற்றும் 92 சதவிகிதத்தினர், சூதாடும்போது, தாங்கள் ஒரு “பெரும் புள்ளி” போல் உணர்ந்தனர். என்றாலும், கடவுள் சொல்கிறார்: “பெருமையையும், அகந்தையையும் . . . நான் வெறுக்கிறேன்.” இதன் காரணமாக, கிறிஸ்தவர்கள் தன்னடக்கத்தையும் மனத்தாழ்மையையும் வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.—நீதிமொழிகள் 8:13; 22:4; மீகா 6:8.
வேலைசெய்வதில் உட்பட்டுள்ள முயற்சியின்றி, எளிதான வழியில் பணம் சம்பாதிக்கும் முறையாகச் சூதாட்டம் தோன்றுவதினால், அது சோம்பேறித்தனத்தையும் தூண்டுவிக்கக்கூடும். ஆனால் கிறிஸ்தவர்கள் ஊக்கம் தளராமல் கடினமாக உழைக்கும்படி கடவுளுடைய வார்த்தை தெளிவாகவே தூண்டுகிறது.—எபேசியர் 4:28.
மேலுமாக, சில சூதாட்டக்காரர்களுக்கு, அவர்கள் எதை அதிர்ஷ்டம் என்று அழைக்கின்றார்களோ அது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருப்பதால், அதற்கு அடிமையாகி, அதைத் தங்களுடைய கடவுளாக ஆக்கிக்கொள்கின்றனர். இது “அதிர்ஷ்ட தேவதைக்குப் பீடம் சமர்ப்பித்த” ஆட்களைப்பற்றிய பைபிள் பதிவைப்போலவே இருக்கிறது. அவர்களுடைய விக்கிரக வழிபாட்டுச் செயலால், ‘வாளுக்கு’ இரையானார்கள்.—இசையாஸ் 65:11, 12, கத்.பை.
சூதாட உபயோகிக்கும்படி ஒருவருக்கு இலவச லாட்டரி சீட்டோ பணமுடிப்போ வழங்கப்படுமானால் அதைப்பற்றி என்ன? இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், அத்தகைய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுதல் சூதாட்ட நடவடிக்கைகளை—தெய்வீக நியமங்களுக்கு இசைவாக இல்லாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவே இருக்கும்.
அல்ல. சூதாட்டம் கிறிஸ்தவர்களுக்கு அல்ல. ஒரு பத்திரிகை ஆசிரியர் கூறுவதுபோல: ‘சூதாட்டம் தவறுமட்டும் அன்று, ஆனால் ஒரு மகா மோசமான பந்தயமாகவும் இருக்கிறது.’
[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]
Valentin/The Cheaters, Giraudon/Art Resource