உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 9/22 பக். 13-15
  • கடவுளைப் பற்றி ஏன் பேச வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளைப் பற்றி ஏன் பேச வேண்டும்?
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சிலர் தயங்குவதேன்
  • ஒரு கிறிஸ்தவக் கடமை
  • உங்களால் செய்ய முடிந்தது
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—இளைஞர்களுக்கு
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • ஸ்கூல் பிள்ளைகள் யாராவது பார்த்துவிட்டால்?
    விழித்தெழு!—2002
  • இளைஞர்களே—உங்கள் செயலை யெகோவா மறக்க மாட்டார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ஸ்கூல் பிள்ளைகளிடம் எவ்வாறு பிரசங்கிப்பது?
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 9/22 பக். 13-15

இளைஞர் கேட்கின்றனர்

கடவுளைப் பற்றி ஏன் பேச வேண்டும்?

“ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சொந்த மதம் இருக்கிறது. உங்களுடைய கடவுளைத்தான் நம்பவேண்டும் என்று மற்றவர்களை நீங்கள் கட்டாயப்படுத்த முயற்சிக்கக்கூடாது.” —14-வயது ராஷிஷ், கயானா.

“கடவுளைப்பற்றி பேசுவதற்கே எனக்குத் தயக்கமாக இருக்கிறது. காரணம் அதைப்பற்றி பேசினால் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று வெட்கப்படுகிறேன்.” —17-வயது ரோஹான், கயானா.

“நாம் கடவுளைப்பற்றி பேசவேண்டும். ஏனென்றால் அவர் நம்மைப் படைத்தவர், உயிரைத் தந்ததற்காக நாம் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம்.” —13-வயது மார்க்கோ, ஜெர்மனி.

இளைஞர் கூட்டம் ஒன்று பேசிக்கொண்டிருப்பதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் விசனகரமான இந்த முடிவுக்கு வருவீர்கள்: பொதுவாக, இளைஞர் மத்தியில் பேசப்படும் பேச்சுக்களில் கடவுளைப் பற்றிய விஷயம் நிச்சயமாகவே விரும்பக்கூடிய ஒன்றல்ல. போட்டி விளையாட்டுக்களைப் பற்றியோ, ஆடைகளைப் பற்றியோ, புது சினிமாக்கள் அல்லது எதிர்பாலாரைப் பற்றியோ பேசிப்பாருங்களேன். அவ்வளவுதான், நீங்கள் சாதாரணமாகவே ஒரு சுவாரஸ்யமான பேச்சைத் தொடங்கி வைப்பீர்கள். ஆனால் கடவுளைப்பற்றி துணிந்து ஏதாவது சொல்லுங்கள் பார்க்கலாம். உடனே ஏதோ சாவு வீட்டில் இருப்பதைப் போன்ற நிசப்தம் நிலவும்.

சில இளைஞர் கடவுளை நம்புவதே கிடையாது. அவரைப் பார்க்க முடியாததனால் அவர் இருக்க முடியாது என்றெல்லாம் அவர்கள் விவாதம் செய்யலாம். அவரைப்பற்றி பேசுவதே நேரத்தை வீணடிப்பதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இருந்தபோதிலும், இளைஞர் மத்தியில் நாத்திகர்கள் நிச்சயமாக சிறுபான்மையராகத்தான் இருக்கிறார்கள். ஒரு கேல்லப் கணக்கெடுப்பின்படி, ஐ.மா.-வின் இளைஞரில் சுமார் 95 சதவீதத்தினர் கடவுளில் நம்பிக்கை வைக்கின்றனர். உண்மையில் கேல்லப் இவ்வாறு முடிவுக்கு வந்தார்: “இளைஞர் அநேகருக்கு கடவுளைப் பற்றிய அவர்களுடைய நம்பிக்கை ஏதோ புரிந்துகொள்ளமுடியாத, தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு கோட்பாடல்ல. ஆனால் தங்களுடைய செயல்களையெல்லாம் கவனித்து அவற்றிற்கு ஏற்றாற்போல் பலனளிக்கும் அல்லது தண்டனை வழங்கும், தங்களோடு நெருங்கிய ஒரு கடவுளாக இருக்கிறார்.” அப்படியானால், தாங்கள் நம்புவதைப் பேசுவதற்கு அநேக இளைஞர் தயங்குவதேன்?

சிலர் தயங்குவதேன்

தங்களுடைய விசுவாசத்தைக் குறித்து பேசுவது நன்னடத்தையல்ல, மத சம்பந்தமான எண்ணங்களைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வதுதான் மிகச் சிறந்தது என்று அநேகர் நினைப்பதாகத் தோன்றுகிறது. கடவுளைப்பற்றி பேசுவது என்ற எண்ணம்தானே இளைஞர் சிலரை சங்கோஜப்படுத்துவதாக தோன்றுகிறது. ‘அவ்வாறு பேசுவது ஏற்கத்தக்கதல்ல,’ என்று அவர்கள் யோசிக்கின்றனர்.

உங்களுடைய சகாக்களின் நோக்குநிலை என்னவாகத்தான் இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் உங்களுடைய நிலைநிற்கை என்ன? நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக வளர்க்கப்பட்டிருந்தால் இந்தக் கேள்வி குறிப்பாக பொருத்தமானதாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால், சாட்சிகொடுத்தல், கடவுளைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லுதல், அவர்களுடைய மதத்தின் உயிர்நாடியாக இருக்கிறது!—ஏசாயா 43:9, 10; மத்தேயு 24:14.

அப்படி இருந்தபோதிலும், அவ்வப்போது தாங்கள் எதிர்ப்படும் எதிர்ப்புகளினால் உற்சாகமிழந்து, இளம் சாட்சிகளில் சிலர் பகிரங்கமாக செய்யும் பிரசங்க வேலையில் பங்குகொள்ளாமல் இருக்கின்றனர். அல்லது தங்களுடைய பெற்றோர் சொல்கிறார்களே என்ற கட்டாயத்தின் பேரிலேயே அதில் பங்குகொள்கின்றனர். இன்னும் மற்றவர்கள் அந்த வேலையில் பங்குகொள்கின்றனர், ஆனால் அவர்கள் அவ்வாறு பிரசங்கிப்பதை தங்களுடைய பள்ளி நண்பர்கள் யாரும் பார்த்துவிடாமல் இருந்தால் பரவாயில்லையே என்று மனதுக்குள் விரும்புகின்றனர். பள்ளியில் தங்கள் மதநம்பிக்கைகளை சிலர் ரகசியமாக வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இது பெரும்பாலும் வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்வார்களே என்ற பயத்தினாலேயே ஆகும். “கடவுளைப்பற்றி பேசுவதற்கே எனக்கு பயமாக இருந்தது. ஏனென்றால், என்னுடைய கூட்டாளிகள் என்னைக் கீழ்த்தரமாகப் பேசுவார்கள், எனக்கும் தொடர்ந்து பேசத் தைரியம் கிடையாது,” என்று ஒப்புக்கொள்கிறான் வாலிபன் ரையன்.

தங்களால் பைபிள் தராதரங்களுக்கு முழுவதும் இசைவாக வாழமுடியாது என்ற பயத்தினாலும் வெளிப்படையாக பேச தயங்குகிறவர்கள் இருக்கிறார்கள். ‘பாலியத்துக்குரிய இச்சைகளால்’ கவர்ந்து இழுக்கப்பட்டவர்களாய், ஒருவேளை தாங்கள் ஏதேனும் தவறுகள் செய்தால், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என்று அவர்கள் யோசிக்கின்றனர்.—2 தீமோத்தேயு 2:22.

தங்களுக்கு அதிகம் தெரியாது என்று உணருவதால் சிலர் கடவுளைப்பற்றி பேசுவதில்லை. பத்தொன்பது வயது வில்ட்டன் இவ்வாறு சொன்னான்: “கடவுளைப்பற்றி நான் பேசியதற்கு சாதகமாக, போதுமான ஆதாரங்கள் கொடுக்க எனக்குத் தகுதியில்லை என்று உணர்ந்ததால், என்னுடன் வேலை செய்யும் ஆட்களிடம் அவரைப்பற்றி பேசுவதைக் கடினமானதாகக் கண்டேன். என்னுடைய நம்பிக்கைகளைப்பற்றி என்னிடம் சவால்விட்டால் திருப்திகரமான ஒரு பதிலைக் கொடுக்கமுடியாது என்று நான் உணர்ந்தேன்.”

ஒரு கிறிஸ்தவக் கடமை

நீங்களும் இதைப்போன்ற காரணங்களுக்காக கடவுளைப்பற்றி வெளிப்படையாக பேசாமல் இருந்திருக்கிறீர்களா? ஆம் என்றால், அவ்வாறு உணருவது நீங்கள் மட்டுமல்ல. மற்ற இளைஞரும் இதே உணர்ச்சிகளோடு போராடியிருக்கின்றனர். எனினும், கடவுளைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதிலிருந்து ஒருவரை உற்சாகமிழக்கச்செய்யும் அனைத்துக் காரணங்களும் இருந்தாலும், அவ்வாறு பேசுவதற்கு உந்துவிக்கும் காரணங்கள் இருக்கின்றன என்பதை அநேகர் உணர ஆரம்பித்திருக்கின்றனர். இக்காரணங்களில் சில யாவை?

தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மார்க்கோ என்ற இளைஞன், கடவுள் “நம்மைப் படைத்தவர், உயிரைத் தந்ததற்காக நாம் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம்,” என்று சொன்னபோது இதை நன்றாகவே சொல்லியிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 4:11) ஆம், உயிர் ஒரு விலையேறப்பெற்ற பரிசு. “ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது,” என்று சங்கீதக்காரன் கடவுளைப்பற்றி சொன்னார். (சங்கீதம் 36:9) இந்தப் பரிசை நீங்கள் பெற்றுக்கொண்டதனால், அதற்கான நன்றியறிதலை காண்பிக்க வேண்டாமா?

அதைச் செய்வதற்கான ஒரு வழி மற்றவர்கள் முன்னிலையில் யெகோவா தேவனைத் துதிப்பதாகும். சூரியன், சந்திரன், மழை, நாம் சுவாசிக்கும் காற்று, நாம் உண்ணும் உணவு ஆகிய அனைத்தையும் உண்டாக்கினவர் அவரே. (அப்போஸ்தலர் 14:15-17) “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து” கிடைக்கிறது என்று சீஷன் யாக்கோபு சொன்னார். (யாக்கோபு 1:17) இந்த ஈவுகளுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? (கொலோசெயர் 3:15) உங்களுடைய நன்றியறிதலை வெளிக்காட்டுவதற்குக் கடவுளைப்பற்றி பேசுவதைத்தவிர வேறு நல்ல வழி என்ன இருக்கிறது?—லூக்கா 6:45.

எனினும் உண்மையில், தம்மைப்பற்றி பேசும்படி கடவுள் நமக்குக் கட்டளையிடுகிறார். அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்”குங்கள் என்று கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) இந்த வேலையில் பங்குகொள்ளும் பொறுப்பிலிருந்து வாலிபருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. சங்கீதக்காரன் கட்டளையிடுகிறார்: “வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள். அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.” (சங்கீதம் 148:12, 13) ஆனால் இந்த நியமிப்பை ஒரு சுமையாக நீங்கள் கருதவேண்டிய தேவையில்லை. சந்தேகமின்றி, இது ஒரு சிலாக்கியம்தான்—உண்மையிலேயே நீங்கள் ‘தேவனின் உடன்வேலையாட்களில்’ ஒருவராக இருக்கமுடியும்.—1 கொரிந்தியர் 3:9.

உங்களுக்குத் தகுதியேயில்லை என்று நீங்கள் உணருவீர்களானால் என்ன? பைபிள் காலங்களில் எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறுதான் உணர்ந்தார். அவர் சொன்னார்: “ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்.” யெகோவாவுடைய பதில்? “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.” (எரேமியா 1:6, 7) யெகோவாவின் உதவியால் 40 வருடங்களாக எரேமியா அதைத்தான் செய்தார்!

அதைப்போலவே, இன்றும் கிறிஸ்தவர்களாகிய நம்முடைய “[போதுமான, NW] தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.” (2 கொரிந்தியர் 3:5) இயல்பாகவே நீங்கள் கூச்சப்படும் சுபாவமும், ஆட்களைக்கண்டு விலகிப்போகும் தன்மையும் உடைய ஒருவராக இருந்தால்கூட, பேசுவதற்கான தைரியமுள்ளவராய் இருக்க கடவுள் உங்களுக்கு உதவிசெய்ய முடியும். கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவராக இருக்க ‘போதுமான தகுதியை’ உடையவராய் நீங்கள் ஆவதற்கு உதவக்கூடிய ஏற்பாடுகள் கிறிஸ்தவ சபைக்குள் இருக்கின்றன. உங்களுக்குச் சிறிது தனிப்பட்ட உதவி தேவைப்படுகிறதென நீங்கள் உணருவீர்களானால், ஏன் சபையிலுள்ள கண்காணிகளில் ஒருவரோடு பேசக்கூடாது? ஒருவேளை தனிப்பட்ட பைபிள் படிப்புக்கான ஒரு திட்டத்தைப்போட வேண்டியதாகவோ அதிக அனுபவமுள்ள ஒருவரோடு ஊழியம்செய்ய வேண்டியதாகவோ மட்டும் இருக்கலாம்.

உங்களால் செய்ய முடிந்தது

கடவுளைப்பற்றி பேசுவது ஒரு காரியத்தைச் செய்ததற்கான மெய்யான திருப்தியை உங்களுக்குக் கொடுக்கக்கூடும். அதற்கு ஒரு காரணம் என்னவென்றால், உங்களுடைய சகாக்களில் அநேகர் பதில்களுக்காகத் தேடியலைந்து கொண்டிருக்கின்றனர், உதவிக்காக கிட்டத்தட்ட அபயக்குரல் எழுப்புகின்றனர். அவர்களுக்கு வழிநடத்துதல் இல்லை, எதிர்காலமும் பிரகாசமாகத் தெரிவது கிடையாது. ‘நாம் ஏன் இங்கிருக்கிறோம்? எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? இந்த உலகம் ஏன் இவ்வளவு அல்லல் நிறைந்ததாய் இருக்கிறது?’ என்றெல்லாம் அவர்கள் யோசிக்கின்றனர். ஒரு கிறிஸ்தவனாக உங்களுக்கு விடைகள் தெரியும்; ஆகவே உங்களுடைய சகாக்களுக்கு அத்தகைய அறிவைக் கொடுக்கும் மிகச் சிறந்த நிலையில் நீங்கள் இருக்கலாம். அவர்கள் உங்களிடம் காரியங்களைப்பற்றி பேசலாம்; தங்களைவிட வயதில் மூத்தவரிடத்தில் பேசுவதைவிட சமவயதினர் ஒருவரிடத்தில் ஒருவேளை பேசுவார்கள்.

சிலசமயங்களில் நீங்கள் ஒதுக்கித் தள்ளப்படுவீர்கள் என்பது உண்மையே. ஆனால் பைபிளின் செய்தியைக் கேட்கும் மனப்பாங்கை உடைய ஆட்களையும் நீங்கள் காணலாம். இளம் சாட்சி ஒருத்தி ஒரு பஸ்ஸில் இருந்துகொண்டு இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்a என்ற புத்தகத்தின் தனது சொந்த பிரதியைப் படித்துக்கொண்டிருந்தாள். அருகில் உட்கார்ந்திருந்த ஒரு பையனும் சேர்ந்து அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். “இது ஒரு நல்ல புத்தகம்!” அந்தப் பையன் வியந்தான். “இந்தப் புத்தகம் கடவுளைப்பற்றி அதிகம் சொல்கிறது. பெரும்பாலான ஜனங்கள் மதத்தில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கின்றனர்.” இந்த இளம் சாட்சி இந்தச் சந்தர்ப்பத்தையே நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, கடவுளின் பெயர் என்ற பொருளின்மீது விளக்கமாகக் கலந்தாலோசித்தாள்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டால், ஒரு கிறிஸ்தவனைப்போல் நடந்துகொள்ளும் கடமை உங்களுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். (1 பேதுரு 2:12) ஆனால் நல்ல கிறிஸ்தவ நடத்தை உங்களுடைய செய்தியின் மேல் அதிக நம்பிக்கையைத்தான் வளர்க்கும். எரிக் என்ற பெயருடைய ஒரு இளைஞனின் அனுபவத்தைக் கவனியுங்கள். தன்னுடைய பள்ளியில் உள்ள இளம் சாட்சிகளின் நல்ல நடத்தையினால் அவன் மனம்கவரப்பட்டான். கடவுளைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்வதற்கான அவனுடைய ஆர்வத்தை இது தூண்டிற்று. அவனோடு ஒரு பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது. இன்று அவன் முழுக்காட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவனாக நியூ யார்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை செய்துவருகிறான்.

கடவுளைப்பற்றி பேசுவது உங்களுக்கு உதவி செய்வதாகவும் இருக்கும்! அது பாதுகாக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்று உங்களுடைய கூட்டாளிகள் அறிந்தால், அநேகர் உங்களை மதிப்பார்கள். நீங்கள் உயர்ந்த தராதரங்களைக் கொண்டவர் என்றும், பதிலுக்கு நீங்கள் சாட்சிகொடுப்பீர்கள் என்றும் அவர்கள் உணர்ந்தால், தவறுசெய்வதில் உங்களை ஈடுபடுத்துவதற்காக அதிக அழுத்தம்தரும் மனச்சாய்வு இல்லாதவர்களாய் இருக்கலாம்.

அதற்காக, நீங்கள் வாயைத் திறந்தாலே வசனத்தை மேற்கோள் காட்டவேண்டும் என்பதை இது நிச்சயமாகவே அர்த்தப்படுத்தாது. உங்களுக்குப் போட்டி விளையாட்டுக்கள், ஆடைகள், அல்லது இசை போன்றவற்றில் இன்னும் ஆர்வம் இருக்கும்; அவ்வப்போது அவற்றைப்பற்றி பேசவும் விரும்புவீர்கள். ஆனால் இதை ஞாபகத்தில் வையுங்கள்: “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.” (மத்தேயு 12:34) கடவுளுக்கான அன்பு உண்மையிலேயே உங்கள் இருதயத்தில் இருக்குமானால், இயற்கையாகவே நீங்கள் அவரைப்பற்றி பேச விரும்புவீர்கள். இனிவரும் ஒரு இதழில், இவ்வாறு நீங்கள் திறம்பட்டவகையில் பேசுவதற்கான சில வழிமுறைகளை ஆலோசிப்போம்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியினால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 15-ன் படம்]

நீங்கள் பகிரங்கமாக பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் பள்ளி மாணவர்கள் பார்ப்பதைக் குறித்து வெட்கப்படுகிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்