உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 12/22 பக். 6-9
  • நமது வளிமண்டலம் சேதமடையும்போது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நமது வளிமண்டலம் சேதமடையும்போது
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஓசோன் எவ்வாறு அழிக்கப்பட்டுவருகிறது
  • என்ன விளைவுகள்?
  • தூய்மைக்கேட்டின் விளைவு
  • மறைந்துகொண்டிருக்கும் ஓசோன்—நம்முடைய சொந்த கேடயத்தை நாம் நாசமாக்கிக்கொண்டிருக்கிறோமா?
    விழித்தெழு!—1990
  • நமது வளிமண்டலம் எவ்வாறு காக்கப்படும்
    விழித்தெழு!—1994
  • நம் கிரகத்தைப்—பாதுகாப்பதற்கான போராட்டம்
    விழித்தெழு!—1996
  • மதிப்புமிக்க நமது வளிமண்டலம்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 12/22 பக். 6-9

நமது வளிமண்டலம் சேதமடையும்போது

எட்கர் மிட்ஷெல் 1971-ல் 14-வது விண்வெளி ஊர்தியான அப்பொல்லோவில் சந்திரனுக்குப் போகும் வழியில் பூமியை அங்கிருந்து பார்த்தபோது இவ்விதமாக கூறினார்: “அது நீலமும் வெண்மையும் கலந்த பிரகாசிக்கும் மணிகற்கள் பதித்த அணிகலன் போல காட்சியளிக்கிறது.” ஆனால் இன்று விண்வெளியிலிருந்து ஒரு நபர் எதைக் காண்பார்?

விசேஷித்த மூக்குக்கண்ணாடிகள் பூமியின் வளிமண்டலத்தைப் பார்ப்பதற்கு அவரை அனுமதித்தால், அவர் மிகவும் வித்தியாசமான ஒரு காட்சியைக் காண்பார். இந்தியா டுடே பத்திரிகையில், ராஜ் செங்கப்பா இவ்விதமாக எழுதினார்: “அன்டார்க்டிகா மற்றும் வட அமெரிக்காவின் மேலே பாதுகாப்பான ஓசோன் கேடயங்களில் மிகப் பெரிய ஓட்டைகளை அவர் காண்பார். நீலமும் வெண்மையும் கலந்த பிரகாசிக்கும் மணிகற்கள் பதித்த அணிகலனுக்குப் பதிலாக, அவர் கார்பன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகளின் கருமையான சுழன்றுவரும் மேகங்கள் நிறைந்த மங்கலான அழுக்கடைந்த ஒரு பூமியைக் காண்பார்.”

ஆனால் நம்முடைய வளிமண்டலத்தின் மேல்பகுதியிலுள்ள பாதுகாப்பான ஓசோன் கேடயத்தில் துளைகளை எது ஏற்படுத்தியது? வளிமண்டலத்தில் தூய்மையைக்கெடுக்கும் பொருட்களின் அதிகரிப்பு உண்மையில் ஆபத்தானதா?

ஓசோன் எவ்வாறு அழிக்கப்பட்டுவருகிறது

60-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, அறிவியல் அறிஞர்கள் நச்சுத்தன்மையுடையதாக இருந்து துர்நாற்றத்தை வெளிவிடும் மற்ற உறைக் குளிரூட்டிகளுக்குப் பதிலாக பாதுகாப்பான ஓர் உறைக் குளிரூட்டியின் கண்டுபிடிப்பைக் குறித்து அறிவிப்பு செய்தனர். இந்தப் புதிய வேதிப்பொருள் ஒரு கார்பன், இரண்டு குளோரின் மற்றும் இரண்டு ஃப்ளுரைன் அணுக்கள் அடங்கிய மூலக்கூறுகளை (CCl2F2) கொண்டிருந்தது. இதுவும் மனிதன் உண்டுபண்ணியிருக்கும் மற்ற இரசாயனங்களும் குளோரோஃப்ளுரோகார்பன்கள் (CFC) என்று அழைக்கப்படுகின்றன.

1970-களின் ஆரம்பத்தில், CFC-களின் உற்பத்தி உலகம் முழுவதிலும் பிரமாண்டமான ஓர் உற்பத்தி தொழிலாக வளர்ந்துவிட்டிருந்தது. அவை குளிர் பதனப் பெட்டிகளில் மாத்திரமல்லாமல், தூவான கொள்கலங்கள், காற்றுக் கட்டுப்பாட்டு கருவிகள், விரைவு உணவு பெட்டிகள் மற்றும் மற்ற ப்ளாஸ்டிக்-ஃபோம் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

என்றபோதிலும், செப்டம்பர் 1974-ல் ஷெர்வுட் ரோலாண்ட் மற்றும் மேரியோ மாலினா என்ற இரண்டு அறிவியல் அறிஞர்கள், CFC-கள் படிப்படியாக மீவளிமண்டலத்திற்கு மேலே சென்று அங்கே கடைசியாக குளோரினை வெளிவிடுவதை விளக்கினார்கள். ஒவ்வொரு குளோரின் அணுவும் ஆயிரக்கணக்கான ஓசோன் மூலக்கூறுகளை அழித்துவிட முடியும் என்பதாக அறிவியல் அறிஞர்கள் கணக்கிட்டார்கள். ஆனால் வளிமண்டலத்தின் மேல்பாகம் முழுவதுமாக உள்ள ஓசோன் ஒரே சீராக அழிக்கப்படுவதற்குப் பதிலாக துருவங்கள் மீது அதன் அழிவு அதிகமாக இருந்திருக்கிறது.

1979 முதற்கொண்டு ஒவ்வொரு இளவேனிற்பருவத்திலும், அன்டார்க்டிகாவின் மேலே உள்ள ஓசோன் பெரிய அளவுகளில் மறைந்துபோய் பின்னர் திரும்ப தோன்றியிருக்கின்றன. பருவ காலத்தில் ஏற்படுகின்ற இந்தச் சரிவு ஓசோன் துளை என்பதாக அழைக்கப்படுகிறது. மேலுமாக, சமீப ஆண்டுகளில் துளை என்றழைக்கப்படுவது பெரிதாகிக்கொண்டும் நீண்ட காலம் நிலைத்திருப்பதாகவும் மாறிவருகிறது. 1992-ல் துணைக்கோள் வாயிலாக அளந்து பார்த்தது, மிகப் பெரிய ஓசோன் துளையை—வட அமெரிக்காவைவிட பெரிய துளையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில் அவ்வளவு ஓசோன் இல்லை. பலூன்களின் வழியாக செய்யப்பட்ட அளவுகள் 60 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதை வெளிப்படுத்தியது—இதுவரைப் பதிவுசெய்யப்பட்டிருப்பதில் மிகக் குறைவானது.

இதற்கிடையில், பூமியின் மற்ற பகுதிகளின் மீதுள்ள ஓசோனின் அளவுகள்கூட குறைந்துகொண்டே வந்திருக்கின்றன. “மிகச் சமீப கால மதிப்பீடுகள், வட ஐரோப்பா, ரஷ்யா மற்றும் கனடாவை உள்ளடக்கும் வடக்கே 50 டிகிரி மற்றும் 60 டிகிரி இடையிலான உயரங்களில், 1992-ல் ஓசோன் செறிவு அசாதாரணமாக குறைந்த அளவுகளில் இருந்ததை . . . காண்பிப்பதாக” நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை அறிவிப்பு செய்கிறது. ஓசோன் அளவு இயல்பாக இருப்பதைவிட 12 சதவீதம் குறைவாக இருந்தது, இது 35 வருட கால இடைவிடாத கண்காணிப்பில் மிகக் குறைவான அளவாகும்.

“மிக மோசமான முன்மதிப்பீட்டுரைகளும்கூட, குளோரோஃப்ளுரோகார்பன்களால் ஏற்படும் ஓசோன் இழப்பின் குறைவான மதிப்பீடாகவே இருப்பது இப்பொழுது காட்டப்படுகிறது,” என்பதாக சையன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை குறிப்பிடுகிறது. “முன்மதிப்பீட்டுரைகள் செய்யப்பட்ட சமயத்தில் அரசாங்கத்திலும் தொழில்துறையிலுமுள்ள செல்வாக்குள்ள ஆட்கள் முற்றுப்பெறாத அறிவியல் அத்தாட்சி என்பதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளைப் பலமாக எதிர்த்தனர்.”

இரண்டு கோடி டன் CFC-கள் ஏற்கெனவே வளிமண்டலத்திற்குள் செலுத்தப்பட்டாயிற்று. மீவளிமண்டலம் வரையாக மிதந்து செல்வதற்கு பல வருடங்கள் எடுப்பதால், லட்சக்கணக்கான டன் இன்னும் அது சேதம் ஏற்படுத்தும் வளிமண்டலத்தின் மேற்பகுதியைச் சென்றடையவில்லை. என்றபோதிலும், CFC-கள் மாத்திரமே ஓசோனை அழிக்கும் குளோரினின் ஊற்றுமூலமாக இல்லை. “விண்வெளிக்கலத்தை விண்வெளியில் செலுத்தும் ஒவ்வொரு சமயமும் சுமார் 75 டன் குளோரின் ஓசோன் அடுக்கில் படிந்துவிடுகிறது என்பதாக தேசிய விமான மற்றும் விண்வெளி நிர்வாகம் மதிப்பிடுவதை,” பாப்புலர் சையன்ஸ் பத்திரிகை அறிவிப்பு செய்கிறது.

என்ன விளைவுகள்?

வளிமண்டலத்தின் மேற்பாகத்தில் குறைந்த அளவு ஓசோன் ஏற்படுத்தும் விளைவுகள் முழுவதுமாக புரிந்துகொள்ளப்படவில்லை. என்றபோதிலும், நிச்சயமாக இருக்கும் ஒரு காரியம், பூமியை வந்தடையும் தீங்கிழைக்கும் புறஊதாக் கதிரின் பரவுதல் அதிகரித்துக்கொண்டுவருகிறது, இது தோல் புற்றுநோய் அதிகரிப்பில் விளைவடைந்துள்ளது. “கடந்த பத்தாண்டுகளின் போது, வட கோளார்த்தத்தைத் தாக்கும் தீங்கிழைக்கும் புறஊதாக் கதிர்கள் வருடாந்தர அளவு 5 சதவீதம் உயர்ந்துவிட்டிருக்கிறது,” என்பதாக எர்த் என்ற பத்திரிகை அறிவிப்பு செய்கிறது.

புறஊதாக் கதிர்களின் 1 சதவீத அதிகரிப்பு தோல் புற்றுநோயில் 2-லிருந்து 3 சதவீத அதிகரிப்பை உண்டுபண்ணுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கெட்அவே என்ற ஆப்பிரிக்கப் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “ஒவ்வொரு ஆண்டும் தென் ஆப்பிரிக்காவில் 8,000-க்கும் அதிகமானவர்களுக்குப் புதிதாக தோல் புற்றுநோய் ஏற்படுகிறது . . . நாங்கள் மிகக் குறைந்த அளவுகளில் ஓசோனையும் அதிக அளவுகளில் தோல் புற்றுநோயையும் கொண்டிருக்கிறோம் (இரண்டிற்கும் இடையிலான தொடர்பு தற்செயல் நிகழ்வு அல்ல).”

வளிமண்டலத்தின் மேற்பாகத்திலுள்ள ஓசோன் அழிக்கப்படுவது தோல் புற்றுநோயின் அதிகரிப்பில் விளைவடையும் என்பது பல வருடங்களுக்கு முன்பாக அறிவியல் அறிஞர்கள் ரோலாண்ட் மற்றும் மாலினாவினால் முன்னுரைக்கப்பட்டது. ஐக்கிய மாகாணங்களில் தூவானங்களில் CFC-களின் உபயோகம் உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும் என்பதாக அவர்கள் பரிந்துரை செய்தார்கள். ஆபத்தை உணர்ந்துகொண்ட அநேக நாடுகள் ஜனவரி 1996-க்குள் CFC-கள் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட ஒப்புக்கொண்டிருக்கின்றன. என்றபோதிலும், இதற்கிடையில், CFC-கள் உபயோகம் தொடர்ந்து பூமியின் மீது உயிர்வாழ்வதை அச்சுறுத்திக்கொண்டு வருகிறது.

அன்டார்க்டிகாவின் மேலுள்ள ஓசோனின் சரிவு, “முன்பு எண்ணியதைவிட புறஊதாக் கதிர்கள் சமுத்திரத்தின் அதிகமான ஆழங்களுக்குள் ஊடுருவிச் செல்வதை அனுமதித்திருக்கிறது. . . . சமுத்திரத்தில் உணவுத்தொடருக்கு ஆதாரமாயிருக்கும் ஓரணு உயிரினங்கள் உற்பத்தி கணிசமாக குறைந்துவிடுவதற்கு இது காரணமாயிருக்கிறது,” என்பதாக அவர் லிவ்ங் உவார்ல்ட் அறிவிப்பு செய்கிறது. புறஊதா பரவுதலின் அதிகரிப்பு அநேக பயிர்களின் மகசூலைக் குறைத்து இவ்விதமாக உலகின் உணவு வழங்கீட்டுக்கு ஆபத்தாக இருப்பதையும் பரிசோதனைகள் காண்பிக்கின்றன.

ஆம், CFC-கள் உபயோகம் அழிவுக்கேதுவானது. என்றபோதிலும், நம்முடைய வளிமண்டலம் தூய்மையைக்கெடுக்கும் அநேக மற்ற பொருட்களினாலும் தாக்கப்பட்டுவருகிறது. அதில் ஒன்று பூமியில் உயிர்வாழ்வதற்கு குறைந்த அளவுகளில் அத்தியாவசியமாக இருக்கும் ஒரு வளிமண்டல வாயுவாகும்.

தூய்மைக்கேட்டின் விளைவு

19-வது நூற்றாண்டின் மத்திப பகுதியில், மனிதர்கள் அதிகமான அளவுகளில் கரி, நிலத்திலிருந்து வெளிப்படும் வாயு மற்றும் பெட்ரோலியத்தை எரிக்க ஆரம்பித்து வளிமண்டலத்தின் கார்பன் டைஆக்ஸைடுகளின் அளவை கூட்டியிருக்கிறார்கள். குறைந்த அளவில் காணப்படும் இந்த வளிமண்டல வாயு அந்தச் சமயத்தில் ஒவ்வொரு பத்து லட்சத்துக்கும் 285 பாகமாக இருந்தது. ஆனால், தாவர மற்றும் விலங்குகள் வெளியேற்றும் கழிவுப்பொருட்களின் எரிபொருளை மனிதர் அதிகமாக பயன்படுத்துவதன் விளைவாக கார்பன் டைஆக்ஸைடின் அளவு ஒவ்வொரு பத்து லட்சத்துக்கு 350 பாகத்துக்கும் மேல் எட்டிவிட்டது. வளிமண்டலத்தில் உஷ்ணத்தை அடைத்துவிடும் அதிகமான இந்த வாயுவின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?

கார்பன் டைஆக்ஸைடு அளவுகளின் அதிகரிப்பே பூமியின் வெப்பம் அதிகமாகி இருப்பதற்குக் காரணம் என்பதாக அநேகர் நம்புகின்றனர். என்றபோதிலும், மற்ற ஆய்வாளர்கள், குறிப்பாக நம்முடைய சூரியனின் மாறுபடுந்தன்மையே உலகம் முழுவதும் வெப்பம் அதிகமாகிவிட்டதற்கு காரணம் என்கிறார்கள்—சமீப ஆண்டுகளில் சூரியன் அதிகமான ஆற்றலை வெளியேற்றி வருகிறது.

எப்படி இருந்தாலும், 19-வது நூற்றாண்டின் மத்திப பகுதியில் பதிவுகள் வைக்கப்பட ஆரம்பித்தது முதற்கொண்டு 1980-களின் பத்தாண்டுகளே அதிக உஷ்ணமாக இருந்திருக்கிறது. “உஷ்ணமாகிவரும் போக்கு இந்தப் பத்தாண்டுகளுக்குள்ளும் தொடர்ந்தது, 1990 பதிவிலுள்ள மிக உஷ்ணமான ஆண்டு, 1991 மூன்றாவது அனலான ஆண்டு மற்றும் 1992 . . . 140 ஆண்டு கால பதிவில் 10-வது அனலான ஆண்டு,” என்பதாக தென் ஆப்பிரிக்கச் செய்தித்தாள் தி ஸ்டார் அறிவிப்பு செய்கிறது. 1991-ல் பின்னட்யூபோ மலை வெடித்து வெளியேற்றிய புழுதியே கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர்ந்த வெப்பத்தின் அளவு சிறிதளவு குறைந்திருப்பதற்குக் காரணமாகும்.

பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் உலகம் முழுவதிலும் வெப்பம் அதிகரித்திருப்பது ஏற்கெனவே கடினமாக இருக்கும் வானிலை முன்னறிவிப்பை இன்னும் சிக்கலானதாக ஆக்கிவிட்டிருக்கிறது. “உலகம் முழுவதும் வெப்ப நிலை மாற்றம் சீதோஷ்ண நிலையை மாற்றும்போது” தவறான வானிலை முன்னறிவிப்புகள் “அதிகரிக்க வாய்ப்புண்டு” என்பதாக நியூ சையன்டிஸ்ட் குறிப்பிடுகிறது.

உலகம் முழுவதும் வெப்ப நிலை அதிகரிப்பு தங்கள் காப்பீடு ஒப்பந்தங்களை இலாபமற்றதாக்கும் என்பதாக அநேக காப்பீடு கம்பெனிகள் பயப்படுகின்றன. “அடுத்தடுத்து வரும் இன்னல்களை எதிர்ப்படுகையில் மறுகாப்பீடு செய்யும் சில கம்பெனிகள் இயற்கையின் நாச வேலைகளுக்குத் தங்களை வெளிப்படுத்துவதைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் சந்தையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறிவிடுவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். . . . அநிச்சயத்தைக் குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள்,” என்பதாக எக்கனாமிஸ்ட் ஒப்புக்கொள்கிறது.

குறிப்பிடத்தக்கவிதமாக, பதிவிலிருந்த மிக உஷ்ணமான ஆண்டாகிய 1990-ல் வடதுருவத்தில் மிதந்து செல்லும் பனிக்குன்றுகள் இதற்கு முன் என்றுமில்லாத அளவு பின்சென்றுவிட்டன. இதன் விளைவாக துருவத்தில் வாழும் நூற்றுக்கணக்கான வெண்ணிறக் கரடிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக ராங்கல் தீவில் பின்தங்கிவிட்டன. “உலகம் முழுவதிலும் வெப்பநிலை அதிகரிப்பினால் இந்த நிலைமைகள் வழக்கமான நிகழ்ச்சிகளாக மாறிவிடும்,” என்பதாக BBC வைல்ட்லைஃப் பத்திரிகை எச்சரிக்கிறது.

“வானிலை நிபுணர்கள், அன்டார்க்டிகாவிலிருந்து வடக்கே நழுவிச்சென்று தென் அட்லான்டிக்கில் கப்பல்களுக்கு ஆபத்தாக இருக்கிற மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாறைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு உலகம் உஷ்ணமாகிவிட்டிருப்பதைக் குறைகூறுகிறார்கள்,” என்று 1992-ல் ஆப்பிரிக்கச் செய்தித்தாள் ஒன்று அறிவிப்பு செய்தது. எர்த் பத்திரிகையின் ஜனவரி 1993-ன் பிரதியின்படி, தென் கலிபோர்னியாவுக்கு அப்பால் கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதற்கு, தண்ணீர் வெப்பமாகி வருவதே பகுதியளவான காரணமாகும்.

மனிதர்கள் திகைக்க வைக்கும் அளவுகளில் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களை வளிமண்டலத்தினுள் செலுத்திக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரிய காரியமாகும். “அ.ஐ.மா.-வில் ஆண்டுதோறும் 9,00,000 டன்னுக்கும் அதிகமான நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் காற்றுக்குள் செலுத்தப்படுகிறது என்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்ஸி அறிவிப்பதாக,” தி எர்த் ரிப்போர்ட் 3 என்ற புத்தகம் சொல்கிறது. இந்த இலக்கம் குறைவான மதிப்பீடாக கருதப்படுகிறது, ஏனென்றால் லட்சக்கணக்கான மோட்டார் வண்டிகளிலிருந்து வெளிவரும் புகை இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மற்ற அநேக தொழில் வளர்ச்சி அடைந்துள்ள தேசங்களிலிருந்தும் அதிர்ச்சியூட்டும் அறிக்கைகள் வருகின்றன. பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்து வந்த கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் கட்டுப்படுத்தப்படாத காற்று தூய்மைக்கேடு பற்றிய அண்மைகால வெளிப்படுத்துதல்கள் விசேஷமாக பயங்கரமாக இருந்திருக்கின்றன.

கார்பன் டைஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியேற்றும் பூமியின் மரங்கள் நச்சுத்தன்மை வாய்ந்த காற்றுக்குப் பலியாகி இருக்கின்றன. நியூ சையன்டிஸ்ட் இவ்வாறு அறிவித்தது: “காடுகள் தொடர்ந்து நலன் குன்றிவருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று காற்று தூய்மைக்கேடு என்பதாக சொன்ன வேளாண்மைத் துறை அமைச்சரின்படி . . . ஜெர்மனியின் மரங்களின் நலன் அதிகமதிகமாக குன்றிவருகிறது.”

தென் ஆப்பிரிக்காவின் உயரமான மேட்டு நிலப்பகுதியிலும் நிலைமை இவ்வாறே உள்ளது. “பைன் மரங்கள் ஆரோக்கியமான கரும்பச்சை நிறத்திலிருந்து சாயம்வெளுத்த வெளிறிய நிறமாக மாறிவருகின்ற கிழக்கு மேட்டு நிலப்பகுதியில் அமில மழை சேதத்தின் முதல் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன,” என்பதாக பேக் டு எர்த் என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜேம்ஸ் க்ளார்க் அறிவிக்கிறார்.

இப்படிப்பட்ட அறிக்கைகள் உலகம் முழுவதிலுமிருந்து வருகின்றன. எந்த ஒரு தேசமும் பாதுகாப்பளிக்கப்பட்டில்லை. வானளாவும் புகைப்போக்கிகளோடு, தொழிற்துறையில் முன்னேற்றமடைந்துள்ள தேசங்கள் தங்கள் தூய்மைக்கேட்டினை அருகாமையுள்ள தேசங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றன. பேராசைமிக்க தொழில் வளர்ச்சியின் மனிதனுடைய பதிவு எந்த நம்பிக்கையையும் அளிப்பதில்லை.

ஆனால் நம்பிக்கை கொள்வதற்கு ஆதாரம் இருக்கிறது. மதிப்புமிக்க நம்முடைய வளிமண்டலம் நாசமடைவதிலிருந்து பாதுகாக்கப்படும் என்று நாம் நம்பிக்கையோடிருக்கலாம். இது எவ்வாறு சாதிக்கப்படும் என்பதை அடுத்தக் கட்டுரையில் கற்றறியவும்.

[பக்கம் 7-ன் படம்]

வளிமண்டலத்தின் மேல்பாகத்திலுள்ள ஓசோனை அழிப்பது தோல் புற்றுநோய் அதிகரிப்புக்கு வழிநடத்தியிருக்கிறது

[பக்கம் 9-ன் படம்]

இப்படிப்பட்ட தூய்மைக்கேட்டின் விளைவுகள் யாவை?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்