ஐரோப்பாவில் ஆர்க்கிடு மலர்களைத் தேடி
நெதர்லாந்திலுள்ள விழித்தெழு! நிருபர்
ஆர்க்கிடு மலர்கள் எங்குமுள்ள மக்களையும் கவர்ந்திழுக்கின்றன. இந்தச் செடிகள் அசாதாரண அழகையும் வண்ணமயமான பகட்டையும் மனதிற்குக் கொண்டுவருகின்றன. உட்செல்ல முடியாத உஷ்ணமான காடுகளில் அவை மலர்வது இவற்றைச் சூழ உள்ள தனிப்பட்ட சூழலை மாயமான சூழ்நிலையை மிகைப்படுத்துகின்றன. ஆர்க்கிடு மலர்கள் உஷ்ண பிரதேசங்களில் மாத்திரம் காணப்படாமல் நம் கிரகத்தில் ஐரோப்பா போன்ற அதிக மிதமான பிரதேசங்களிலும் காணப்படுகின்றன.
ஆர்க்டிக் ஐஸ்லாந்திலிருந்து ஏறத்தாழ வெப்பமண்டல நிலை சார்ந்த கிரீஸ் வரையாக பல்வேறுபட்ட பகுதிகளில் ஆர்க்கிடு மலர்களைக் காணலாம். ஐரோப்பாவில் மொத்தமாகச் சுமார் 350 இனங்கள் இருப்பதாக அறியப்பட்டிருக்கின்றன. அநேக உஷ்ணப்பிரதேச இனங்களுக்கு மாறாக, ஐரோப்பிய இனங்கள் நிலத்தில் வளர்கின்றவையாக அவற்றின் வேராதாரத்தை மண்ணில் கொண்டிருக்கின்றன. வெப்பமண்டலப் பகுதியில் ஆர்க்கிடு மலர்கள் ஈரினச்செடி ஒட்டு வகைகளாகப் பிரதானமாய் இருக்கின்றன, வேர் ஆதாரத்தை மரங்களில் உடையதாயிருக்கின்றன. அநேக உஷ்ணபிரதேச இனங்கள் பெரிய, அழகான பூக்களைப் பூக்கின்றன, ஐரோப்பிய ஆர்க்கிடு மலர்களின் பூக்களோ மிகச் சிறியவையாகவே இருக்கின்றன.
அநேக இனங்கள் அற்புதமான சூழல்களில் வளர்வதன் காரணமாக ஐரோப்பாவில் ஆர்க்கிடு மலர்களின் தேடலில் இறங்குவது இன்பகரமான பொழுதுபோக்காகும். ஆர்க்கிடு மலர்கள் பெரும்பாலும் சுட்டிக்காட்டுபவை என்னும் இனமாக இருக்கின்றன; இவை தனிப்பட்ட சுற்றுச்சூழல் நிலவுவதைக் குறிக்கின்றன. அநேக இனங்கள் அவை இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலையைக் குறித்து அதிக கவனமாக இருக்கின்றன, அவற்றிற்கு தேவையான எல்லாவற்றையும் பூர்த்திசெய்யக்கூடிய இடங்களிலேயே வளர்கின்றன. உதாரணமாக, டாக்டிலோர்ஹிசா இன்கர்னடா போன்ற சதுப்பு நில ஆர்க்கிடு மலர்கள் அடிமண் நீரில் போதுமான சுண்ணாம்பு இருக்கிற இடங்களிலேயே வளரும். சில இனங்கள் ஏன் மற்றவற்றைக் காட்டிலும் அரிதாகக் காணப்படுகின்றன என்பதை இது விளக்கிக் காட்டுகிறது. மிகத் திட்டவட்டமான வளர்சூழலைத் தேவைப்படுத்துகிற ஆர்க்கிடு இனங்கள், கட்டுப்பாடுடைய நிலைமைகளில் வளரும் மலரைக் காட்டிலும் ஒருசில இடங்களிலேயே காணப்படும்.
ஐரோப்பாவுக்கு மறுபக்கமாக, நெதர்லாந்திலிருந்து தென்னக இத்தாலி வரை ஓர் கற்பனை பயணத்தை மேற்கொள்வோமேயானால், நாம் பயணஞ்செய்யும் பெரும்பான்மையான இடங்களில் ஆர்க்கிடு மலர்கள் நிறைந்து காணப்படும். பயணத்தை நெதர்லாந்திலிருந்து துவங்குவோம். மேற்கு ஐரோப்பாவில் உள்ள இந்தத் தாழ்நில நாட்டில், விஸ்தாரமான சதுப்புநிலங்களையும் ஈரமான மணல்மேடுகளில் பள்ளங்களையும் புல்வெளிகளையும் இன்னும் நாம் காண்கிறோம். மே, ஜூன் மாதங்களில் சில நிலப்பரப்புகள் டாக்டிலோர்ஹிசா என்ற ஒருவகை ஆர்க்கிடு மலர்களால் ரோஜா நிறத்திலிருந்த ஊதா நிறமாக இளநிறமாக்கப்பட்டிருக்கின்றன. ஓர் இனிமையான, அற்புதமான இனமானது டாக்டிலோர்ஹிசா பிரெடர்மிஸ்ஸா. இந்தச் செடி ஒரு மீட்டர் அளவு உயரத்தை எட்டக்கூடியதாக, ஏறத்தாழ 60 பூக்களைக் கொண்டிருக்கக்கூடும். புல்கரி முட்புதர்காடுகளின் மற்றும் குட்டையான புதர்ச்செடி நிலங்களின் மீதிப்பகுதிகள் ஆர்க்கிடு மலர்கள் வளரும் நிலப்பகுதிகளாக இருக்கின்றன. ஈரமான, குட்டையான புதர்ச்செடி நிலங்களில் பிரதானமாக, டாக்டிலோர்ஹிசா மாகுலாடா என்பவற்றின் பெரும் எண்ணிக்கைகள் சில வேளைகளில் காணப்படக்கூடும். புல்கரி முட்புதர்காடுகளில் ஹாமர்பையா பாலடோஸா என்ற சிறிய பச்சைநிற பூக்களைக் கண்டுபிடிக்க நாம் கவனமாகத் தேடவேண்டும். இந்தச் சிறிய ஆர்க்கிடு மலர் செல்லவே முடியாத பகுதிகளில் வளர்கிறது.
நாம் இன்னும் உள்ளே, ஜெர்மனியின் மத்திய மலைப்பகுதிகளுக்குள் செல்லலாம். இங்கே, வெவ்வேறுபட்ட வகைகள் கொண்ட இலை உதிரும் மரங்கள் மத்தியில் எப்பிபாக்டிஸ் என்ற இனத்தின் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் சில நிழல்நிறைந்த இடங்களில் வளருகையில், எப்பிபாக்டிஸ் மியூல்லெரி போன்ற பிற இனங்கள் காட்டின் புற எல்லைப் பகுதியை விரும்புகின்றன. எப்பிபாக்டிஸ் இனம் கோடைக்காலத்தின் பிற்பகுதியிலும் இலையுதிர் காலத்திலும் பூப்பதுடன் ஐரோப்பாவில், ஆர்க்கிடு மலர்க்கான காலம் முடிவுறுகிறது. சுண்ணாம்பு மிகுந்த மலைச்சரிவுகளில், வறண்ட புல்வெளியின் ஒருவகையாகிய சுண்ணாம்புப் புல்வெளி காணப்படுகிறது; இங்கு ஆர்க்கிடு மலர்கள் நிறைந்து காணப்படுகின்றன. மே, ஜூனில், டஜன்கணக்கான இனங்களை இங்குச் சிலசமயங்களில் நாம் காணலாம்; இந்த இனங்களில் ஆர்க்கிஸ் மில்லிடேரிஸும் ஆர்க்கிஸ் அஸ்ட்யுலாவும் சிறப்புவாய்ந்தவை.
ஜெர்மனியின் தென் பகுதியில் நாம் ஆல்ப்ஸை சென்றடைகிறோம். ஆல்ப்ஸ் மலைச்சார்ந்த பசும்புல்வெளிகள் எண்ணிறந்த பூக்களுக்குப் பேர்போனவை. ஆர்க்கிடு மலர்கள் இந்தச் சூழலைப் பெரும்பாலும் ஆதரிக்கின்றன. இத்தாலியிலுள்ள டோலமைட் போன்ற சில ஆல்ப்ஸ் மலைச்சார்ந்த பசும்புல்வெளிகள், ஜூலை மாதத்தில் ஊதாநிற ஆர்க்கிடு மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. நிக்ரிடெல்லா நிக்ரா என்ற பெரும்பான்மையான பூக்கள், பல வித்தியாசப்பட்ட வண்ணங்களில் இங்குக் காணப்படுகின்றன. நிக்ரிடெல்லா பலமான வனிலா மணத்தை வீசுகிறது; உஷ்ணபிரதேச ஆர்க்கிடிலிருந்து உண்டாகும் கனியிலிருந்து வனிலா பெறப்படுவதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது.
ஆர்க்கிடு மலர்கள் மூவாயிரம் மீட்டருக்கும் மேலான உயரங்களில் காணப்படலாம். அந்த உயரத்தில், அநேகமாக உலகிலேயே சின்னஞ்சிறிய ஆர்க்கிடாகிய கெமோர்கிஸ் ஆல்பீனாவைக் காண முடியும். இவ்வின பூக்கள் குறுக்கே ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைந்த அளவுடையனவாக இருக்கின்றன. அவை பச்சை நிறமானதால், இந்தப் பூக்கள் பெரும் கவனத்தை ஈர்ப்பது கிடையாது. எனினும், இந்த இனம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் சூழல்மண்டலத்தில் அதன் சொந்த குறிப்பிட்டவொரு காரியத்தைச் செய்யக்கூடியதாயிருக்கிறது.
ஆல்ப்ஸ் மலையைக் கடந்து பயணஞ்செய்பவர்களாக, ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதியைச் சென்றடைகிறோம். ஐரோப்பாவில் எவ்விடத்திலும் இல்லாத அளவுக்கு இவ்விடத்தில் பல இனங்களைக் காண்கிறோம்; வித்தியாசப்பட்ட வகைகள் பிரமிக்கத்தக்கவையாக இருக்கின்றன. இங்கு வளரக்கூடிய உஷ்ணத்தை விரும்பும் இனங்கள் வசந்த காலத்தின் முற்பகுதியிலேயே பூக்கின்றன. உலர்ந்த கோடைக்காலத்தில், ஆர்க்கிடு உட்பட எல்லா தாவரங்களும் வாடியுலர்ந்து போகின்றன; உண்மையில் சொல்லப்போனால், எந்தவொரு மலரும் செடியும் காணப்படுவது கிடையாது. வசந்த காலத்தின் ஆரம்ப மாரிகாலத்துக்குப் பிற்பாடுதான் புதிதாக, பச்சைப்பசேல் என்று செடிகள் மீண்டும் வளரத் தொடங்குகின்றன.
ஆர்க்கிடு மலர்கள் இந்த மாரிகாலத்துக்குப் பிரதிபலிக்கின்றன. அப்போது அநேக இனங்கள் இலைகள் விட்டு குளிர்காலத்தைத் தப்பி, பூவணியாக ஆகின்றன. வசந்த காலத் தொடக்கம் வரையாக அவை அதன் அழகான பூக்களை மலரச் செய்வதில்லை. ஆஃப்ரிஸ் என்ற வகையைச் சார்ந்த இனங்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள தாவரங்களுக்கு ஒப்பாயிருக்கின்றன. மகரந்தச் சேர்க்கைக்காக இந்த இனங்களில் அநேகம் ஆண் பூச்சிகளைச் சார்ந்திருக்கின்றன; இவை பார்ப்பதற்கு பூச்சிபோல் தோன்றும் பூவை, புணர்வதற்குத் தயாராயுள்ள பெண் பூச்சியாக, தவறாக எடுத்துக்கொள்கின்றன. இந்த இனங்களில் அநேகம், சிலந்தி ஆர்க்கிடு, ஈ ஆர்க்கிடு, பெரிய வண்டு ஆர்க்கிடு (ஆஃப்ரிஸ் ஸ்பெகோடெஸ், இன்ஸெக்டிஃபிரா, மேலும் பாம்பிலிஃப்ளோரா) என்று அவை தோற்றமளிக்கும் பூச்சிகளால் பெயரிடப்படுகின்றன. புணர்ச்சிபோல் தோன்றுவதைப் பின்தொடர்ந்து, அந்தப் பூச்சி மகரந்தத்தூளை எடுத்துக்கொண்டு, தெரியாத்தனமாக அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு பூவிற்குக் கடத்துகிறது. மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு விதை உருவாகத் துவங்கலாம். இந்த வகையான மகரந்தச் சேர்க்கை பிரமிக்கத்தக்க விதத்தில் துல்லியமாய் நடக்கிறது.
ஆஃப்ரிஸ் இனங்கள் சிலவற்றில், குறிப்பிடத்தக்க துணைவகைகள் அறியப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு பூச்சி இனத்தால் மகரந்தச் சேர்க்கைக்குள்ளாகின்றன. மகரந்தச் சேர்க்கையை உண்டுபண்ணும் பூச்சிகளின் ஒரு வகை, வேறொரு இனமாயிருந்தாலும் பார்ப்பதற்கு ஒரே இனமாகத் தோன்றும் பூக்களுக்கு வெளிப்படுத்தப்படுகையில், அவற்றோடு மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட மறுக்கின்றன. சில சமயங்களில் “விபத்துக்கள்” நடக்கின்றன, இதனால் இன்னொரு இனம் தவறாக மகரந்தச் சேர்க்கைக்குள்ளாகி, கலப்பினங்கள் உருவாவதில் விளைவடைகின்றன. எப்போதாவது இந்தக் கலப்பினங்கள் இனப்பெருக்கமிக்க விதையை உண்டாக்கி, பெரும் எண்ணிக்கையான இனங்களை உற்பத்தி செய்கின்றன.
மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள இன்னொரு தனிப்பட்ட வகை டங் ஆர்க்கிடு (செராபியஸ்) ஆகும். இந்த இனங்கள் பூவிற்குள் குழல்வடிவ துவாரத்தில் இரவைக் கழிக்கும் பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கைக்குள்ளாகின்றன. அந்தப் பூச்சி எழுந்திருப்பதற்குள், பூச்சியின் உடலோடு அந்த மகரந்தத்தூள் ஒட்டிக்கொண்டு, இவ்வாறு அடுத்த இரவு இன்னொரு பூவை மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடச் செய்கிறது.
ஐரோப்பாவின் மறுபக்கத்தை நோக்கி நாங்கள் பயணஞ்செய்கையில், ஆர்க்கிடு மலர்கள் நிறைந்த அற்புதமான இயற்கை நிலப்பகுதிகளைக் கண்டோம். எனினும், அநேகம் மறைந்துவிட்டிருக்கின்றன. தொழில்மயமாக்கப்பட்ட, மிகுந்த மக்கள்தொகையுள்ள, வேளாண்மையில் முன்னேற்றமடைந்த ஐரோப்பாவில், உண்மையில் ஒவ்வொரு உயிரினப் பாதுகாப்பு இல்லங்களும் எண்ணிறந்த அச்சுறுத்தும் நிலைமைகளுக்கு உள்ளாகின்றன. அமில மழை, வறட்சி, வேளாண்மை நிலங்களை அதிகபட்சம் பண்படுத்துதல், சுற்றுலா பயணங்கள், நகரமயமாக்குதல் ஆகிய யாவுமே ஆர்க்கிடு மலர்களின்மீது பெரும் பாதிப்பைக் கொண்டிருக்கின்றன. அநேக இனங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் சில இனங்கள் சட்டப்பூர்வமாகக் காக்கப்படுகின்றன.
என்றபோதிலும், ஏதோவொன்று சட்டப்பூர்வமாக விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதினால் அதிக பிரயோஜனமுமில்லை. மனிதன் படைப்பை மதிப்போடு பாவிக்கவேண்டும். படைப்பாளருக்கும் அவருடைய படைப்புக்கும் மதிப்புக் குறைவாக இருக்கும் இந்தத் தற்கால, அபூரண காரிய ஒழுங்குமுறையிலே, இயற்கை தழைத்தோங்கும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. இயற்கையின் ஒத்திசைவை கடவுளுடைய புதிய ஒழுங்குமுறை வரும் வரையாக நீதிநிறைந்த ஆட்கள் மகிழ்ந்தனுபவிக்க முடியாது. (ஏசாயா 35:1) அப்போதுதானே, ஆர்க்கிடு மலர்களின் அநேக ரகங்கள் அவை என்னவாக இருக்கின்றனவோ அவற்றிற்கான மதித்துணருதலைப் பெறும்.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
இந்த இரண்டு பக்கங்களிலும் (1) இத்தாலி, (2) நெதர்லாந்து, (3) ஆல்ப்ஸ் மலைச்சார்ந்த பசும்புல்வெளிகள், (4) சுண்ணாம்புப் புல்வெளிகள், (5) புதர்ச்செடி பகுதிகள் ஆகிய இடங்களிலிருக்கும் ஆர்க்கிடு மலர்கள் காணப்படுகின்றன. (6) வண்ணத்துப்பூச்சி ஆர்க்கிடு மலர்