“இப்போது மீயாவும் யெகோவாவுந்தான்”
மே 1991-ற்குள், என் உடல்நலத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக உடம்பு முன்கூட்டியே சுட்டிக்காட்டியது. வெகு தூரம் நடந்த பிறகோ நீண்ட தூரம் சைக்கிளை ஓட்டின பிறகோ கைகளிலும் கால்களிலும் கடும் வேதனைகளை உணர்வதுண்டு, மூட்டுகளும் வீங்கிவிடும். ஜூலை 1991-ல், மூத்த சகோதரனுடைய திருமணத்திற்கு சென்றிருந்தபோது நோய்வாய்ப்பட்டேன். இதைப் பின்தொடர்ந்து, எப்போது பார்த்தாலும் படுத்த படுக்கையாக இருந்தேன்; முகத்திலும் உடம்பிலும் விசித்திரமான சிவந்த புள்ளிகள் காணப்பட்டன.
அம்மா என்னை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு சென்றார்; உடனடியாக அவர், என்னை நார்வேயிலுள்ள ஆஸ்கிமில், எங்களுடைய வீட்டுப் பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக எடுத்துச் சென்றார். சிறுநீரக செயல்பாட்டுக் குறைவும் உயர் இரத்த அழுத்தமும் இருந்ததென கண்டறியப்பட்டது. 11.5 முதல் 16 வரை சாதாரணமாக இருக்கவேண்டிய ஹீமோகுளோபின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், என்னுடையது ஒரு டெஸிலிட்டருக்கு 7.3 கிராமே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பின், ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு என்னை மாற்றினார்கள்; அங்குச் சிறுநீரக நோய்களுக்கென சிகிச்சையளிப்பதற்கு விசேஷ வார்டு இருந்தது. பல்வேறு இரத்தப் பரிசோதனைகளின் விளைவுகளைப் பார்த்தப் பிறகு, நான் தோல் அழிநோயினால் அவதிப்படுவதாகவும், தடுப்பாற்றல் அமைப்பு இரத்தத்தையும் சிறுநீரக திசுக்களையும் தாக்கும் கிருமிக்கொல்லிகளை உற்பத்தி செய்துகொண்டிருந்ததாகவும் டாக்டர் முடிவுசெய்தார். புறணிஸ்டிராய்டுகளும் கீமோதெரபியும் எனக்குக் கொடுக்கப்பட்டது.
இந்த நோயும் ஒருசில மருந்துகளும் இரத்தப் போக்கை நிறுத்துவதால், இரத்தமேற்றும் காரியம் ஒரு பிரச்சினையாக ஆனது. முடிந்தளவு மனவுரத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னேன்: “நான் ஒரு ஒப்புக்கொடுக்கப்பட்ட, முழுக்காட்டப்பட்ட சாட்சி, இதனால் எனக்கு இரத்தம் வேண்டாம்.” (ஆதியாகமம் 9:4; அப்போஸ்தலர் 15:28, 29) பின்னர் டாக்டர், அம்மாவைத் தனியாகக் கூப்பிட்டுப் பேசினார்; இரத்தமேற்றுதலுக்கு மாற்றுவகை சிகிச்சைகளை நாங்கள் உபயோகிக்க விரும்புகிறோம் என்று அம்மா அவருக்கு விளக்கிக் காட்டினார். என் நிலைநிற்கையை மதிக்க மனமுள்ளவராயிருக்கிறாரெனவும் எனக்கு உதவ தன்னால் முடிந்ததையெல்லாம் செய்வாரெனவும் அவர் சொன்னார்.
எங்கள் கையில் பின்னர் கிடைத்த மருத்துவப் பதிவின் நகல் சொல்கிறது: “நோயாளி வயதுவந்தவராகவும் தெளிந்த புத்தியுள்ளவராகவும் தகவலளிக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், நோயாளியின் கருத்தை ஒருவர் மதிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்.” அது மேலும் சொல்கிறது: “மரணம் ஏற்பட்டாலுங்கூட, இரத்தமேற்றிக் கொள்ளக்கூடாது என்கின்ற நோயாளியின் தீர்மானத்தை, இந்த மருத்துவ வார்டு மதிக்கத் தீர்மானித்திருக்கிறது.”
மருத்துவ சிகிச்சை
பின்வந்த நாட்களில், என் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இவ்வாறு சிறுநீரகங்களிலுள்ள அழுத்தத்தை இலகுவாக்க வெவ்வேறான சிகிச்சைமுறைகள் முயற்சி செய்யப்பட்டன. என் உடம்புக்கு அம்மருத்துவத்தைத் தாங்குவதற்கான சக்தியில்லை, இதனால் கிட்டத்தட்ட அச்சமயம், மீண்டும் மீண்டும் வாந்தியெடுத்தது மாத்திரம் எனக்கு ஞாபகமிருக்கிறது. எப்போதாவது மிகவும் மனச்சோர்வடைந்தேன், பெற்றோரும் நானும் உதவிக்காகவும் பலத்திற்காகவும் யெகோவாவிடம் அடிக்கடி ஜெபித்தோம். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்த பிறகு, ஒரு வாரயிறுதியில் என்னை வீட்டிற்குப் போக அனுமதித்தனர். பிற்பாடு, மருத்துவமனையிலிருந்து இரண்டாம் முறை சென்றபோது, கடுமையான வலிப்புத்தாக்கம் என்னைப் பீடித்தது; அடுத்து நான்கு கடுமையற்ற வலிப்புத்தாக்கல்கள் ஏற்பட்டன. அந்நோய் என் மைய நரம்புமண்டலத்தைத் தாக்கிக்கொண்டிருந்தது. விரைவாக என்னை ஆஸ்பத்திரிக்குத் திரும்பக் கொண்டுவந்தனர்.
மாற்றுவகை சிகிச்சை தர டாக்டர்கள் தீர்மானித்தனர். இரத்தத்திலிருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு, இரத்த அணுக்களையும் சிறுநீரக திசுக்களையும் தாக்கும் கிருமிக்கொல்லிகள் நீக்கப்பட்டன. பின்னர் எனக்கு ஆல்புமினுடன் ரிங்கர் கரைசல் உடைய ஊசிகளை ஏற்றினர். டாக்டர்களோடு இந்தச் சிகிச்சையைப் பற்றி நான் முன்னமே கலந்தாலோசித்து, அதைக் கொடுப்பதற்கான அனுமதியையும் எழுதிக் கொடுத்தேன்.a இந்தச் சிகிச்சையை அளித்துங்கூட உடல்நிலை மோசமானது. இம்யூனோகுளோபுலின்களைக் கொண்டு எனக்குச் சிகிச்சையளிக்கவும் அவர்களுக்கு அனுமதியளித்தேன்; ஆனால் அப்போது அவற்றை அவர்கள் கொடுக்கவில்லை.b
சிறுநீரக செயற்பாடு பெரிதும் குறைந்தது. சாதாரணமாக இருக்கும் 55 முதல் 110-டன் ஒப்பிடும்போது ஸீரம் கிரீயேடினின் (serum creatinine) 682-ஆக இருந்தது. இரத்த அழுத்தம் உயர்வாகவே இருந்தது, ஹீமோகுளோபின் ஒரு டெஸிலிட்டருக்கு 5, 6 கிராம்களுக்கிடையே இருந்தது. ஒரு நாள், இரத்தவட்டுகளின் எண்ணிக்கை இரத்தத்தின் ஒரு கன மில்லிமீட்டருக்கு 17,000-ஆக இருந்தது (சாதாரண எண்ணிக்கையானது 1,50,000-லிருந்து 4,50,000 வரையாக இருக்கும்), இரத்தப்பெருக்கின் ஆபத்தை மிகவும் அதிகரித்தது. சந்தோஷகரமாக, இரத்தவட்டுகளின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்கத் தொடங்கியது. அடுத்த தினம் எண்ணிக்கையானது 31,000-ஆக இருந்தது, இப்படியாக உயர்ந்துகொண்டே போனது.
அன்பான ஆதரவு
நார்வே எங்குமிருக்கிற அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமிருந்து எனக்குக் கிடைத்த பூக்கள், கடிதங்கள், கார்டுகள், போன்கள் ஆகிய யாவற்றையும் கண்டு ஆஸ்பத்திரி அங்கத்தினர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். ஒரு 18 வயது சிறுமிக்கு எப்படி இவ்வளவு சிநேகிதர்கள் இருக்கக்கூடும் என்று அதிசயப்பட்டனர். இது எங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றியும் யெகோவாவின் அன்பான அமைப்பைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பை அளித்தது.—யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4.
இதற்கிடையே, யெகோவாவின் சாட்சிகளது மருத்துவ இணைப்பு ஆலோசனைக்குழு தோல் அழிநோய்க்கான சிகிச்சையின்பேரில் மேலுமான தகவல்களைப் பெற கடுமையாக வேலை செய்துவந்தது. எங்களுடைய நார்வே கிளை அலுவலகத்திலிருந்து, மருத்துவ இதழில் அச்சடிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையை நாங்கள் கிடைக்கப்பெற்றோம். அதில் தோல் அழிநோயுடைய இரண்டு சிக்கலான நோயாளிகளைப் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது; இரண்டு இளம் பெண்கள் இம்யூனோகுளோபுலின்கள் செலுத்தப்பட்டு, நல்ல பலன்களைப் பெற்றனர். டாக்டர்களோடு நடந்த கூட்டத்தில் பெற்றோர், எனக்குச் சிகிச்சையளிப்பதற்கு அந்தத் தகவல் உதவுமா என்றறிய அக்கட்டுரையை வாசித்துப் பார்க்கும்படியாக அவர்களைக் கேட்டுக்கொண்டனர். என்ன செய்யப்படவேண்டும் என்பதைப் பற்றியதில் டாக்டர்கள் வித்தியாசப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். உதாரணமாக, இம்யூனோகுளோபுலின்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சையின் பக்க விளைவுகள் பேரிலான மட்டுப்பட்ட தகவல் சம்பந்தமாகக் கவலையிருந்தது.
இரத்தமேற்ற அழுத்தம்
அதற்குள்ளாக, ஏறத்தாழ எட்டு வாரங்களாக நான் ஆஸ்பத்திரியிலிருந்தேன். ஓர் இரவில், வயிற்றில் கடும் வலி ஏற்பட்டது, உட்புற இரத்தப்பெருக்கினால் மல இரத்தம் வந்தது. ஓர் அறுவைசிகிச்சையாளரை அணுகினோம். எனக்கு உடனடியான அறுவைசிகிச்சையும் இரத்தமும் தேவை என்றும், இல்லையெனில் ஒருசில மணிநேரத்தில் இறந்துவிடுவேன் என்றும் அவர் சொன்னார். இரத்தமேற்றிக்கொள்ள என்னை இணங்கவைப்பது நல்லது, இல்லையென்றால் மரணத்துக்கு அக்காதான் பொறுப்பாயிருப்பார் என்று இந்த அறுவைசிகிச்சையாளர் என்னைக் கவனித்துவந்த அக்காவிடம் சொன்னார். இதனால் எனக்கு அவர்மேல் கோபம், ஏனென்றால் இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பதற்கான தீர்மானம் என் சொந்த தீர்மானமாகும்.
அப்படிப்பட்ட தீர்மானத்தை நானே எடுத்தேன் என்பதையும் இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பதனால் வரும் விளைவுகளாக அவர்கள் நம்பிய காரியங்களைக் குறித்து நான் முழுமையாக அறிந்திருந்தேன் என்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் என்னிடம் தனியாகப் பேச விரும்பினார்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு மனதை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதைப் பற்றி அவர்கள் நம்பவைக்கப்பட்டனர். அறுவைசிகிச்சை செய்வதற்குப் பதிலாக, தொற்றுநோய்க்கு எதிராகப் போராட டாக்டர்கள் உயிர்க்கொல்லி மருந்துகளைச் செலுத்தினர்.
செப்டம்பர் 30 அன்று, டாக்டர்களோடு சம்பாஷணை நடத்திய நாளிற்குப் பிறகு, ஹீமோகுளோபின் எண்ணிக்கை 6.5-லிருந்து 3.5-ற்கு சரிந்தது. அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டேன். நான் மிகவும் பலவீனமாயிருந்ததால், எனக்கு ஆக்ஸிஜன் கொடுக்க ஆக்ஸிஜன் மாஸ்க் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான கட்டத்தினூடே ஓரளவு உணர்வுள்ளவளாக இருந்தபோதிலும், எதுவுமே எனக்கு ஞாபகமில்லை. ஆகவே அடுத்த சில நாட்களில் நிகழ்ந்த காரியங்களைக் குடும்பத்தினரும் இரண்டு கிறிஸ்தவ மூப்பர்களும் பின்னர் எனக்குச் சொன்னார்கள்.
என் உயிர் ஊசலாடும்போது
இந்தத் தருணத்தில், டாக்டர்கள் நரம்பு வழியாக இம்யூனோகுளோபுலின் ஊசிகளைச் செலுத்திப் பார்க்க சம்மதித்தனர். அக்டோபர் 9 முதல் 11 வரை, ஒரு தினத்துக்கு ஆறு கிராம் அளவு இம்யூனோகுளோபுலினைச் செலுத்தினர். சிறுநீரையும் மலம் கழித்தலையும் என்னால் அடக்க முடியவில்லை; படுக்கை துணிகளை நர்ஸ்கள் மாற்றிக்கொண்டே இருந்தார்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை சரிந்துகொண்டே வந்தது. மருத்துவப் பதிவு சொல்கிறது: “அவளுக்கிருந்த மிகக் குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை 1.4-ஆக அளவிடப்பட்டது, அதற்குப் பிறகு அவளுக்குக் கூடுதலான கருமலம் [இரத்தத்தோடுகூடிய மலம்] வந்தது, இதனால் மேலுமான இரத்த எண்ணிக்கைகளைப் பரிசோதிக்க வேண்டாமென தீர்மானிக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் அவள் உண்மையில் உயிர் பிரியும் தறுவாயில் இருந்தாள் [மரித்துக்கொண்டிருந்தாள்].”
இதற்குள்ளாக, டாக்டர்களுக்கு நான் மீண்டும் சுகம் பெறுவேன் என்றிருந்த நம்பிக்கையெல்லாமே போய்விட்டது, அப்படிப் பிழைத்தாலுங்கூட, எனக்கு மூளை சேதம் ஏற்படும் என்றும், ஒருவேளை பகுதியாக முடக்குவாதமும் உண்டாகும் என்றும் அவர்கள் சொன்னார்கள். தங்களால் ஒன்றுமே செய்ய இயலாது என்பதைக் குறித்து அவர்கள் அவ்வளவு நிச்சயமாயிருந்ததால் அக்டோபர் 12 அன்று எல்லா தீவிர சிகிச்சையையும் நிறுத்தி, வெறும் நீர்மங்களைக் கொடுக்கும்படி முடிவுசெய்தனர். தொடர்ந்து போராடுவதற்கு என்னை விடாது ஊக்குவித்த என்னுடைய தகப்பன், படுக்கையையொட்டி அமர்ந்தபடி, “இப்போது மீயாவும் யெகோவாவுந்தான்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், படுக்கைக்கு அருகாமையில் என் குடும்பத்தோடு சபையிலிருந்து யாராவது ஒருவர் எப்போதுமே இருந்தார். ஒருவர் சொன்னார்: “அக்டோபர் 12, சனிக்கிழமை சாயங்காலம், மீயா அந்த இரவைத் தள்ளுவாள் என்று யாருமே நம்பவில்லை. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை காலை அவள் இன்னும் உயிரோடிருந்தாள். பிற்பகலில் அவள் மூச்சுவிட கஷ்டப்பட்டாள், இதனால் எல்லாருமே இதுவே கடைசி என்று நினைத்தனர். முழுக் குடும்பமும் அவளுடைய படுக்கையைச் சுற்றி சூழ்ந்துகொண்டது. அவள் ஆழமாக மூச்சை இழுத்து, நித்தியகாலமாகத் தோன்றும் இடைவேளைக்குப் பின்னர் மூச்சை வெளிவிட்டாள். பெற்றோர் படக்கூடிய வேதனைகளிலேயே மிகக் கடுமையான வேதனையை அவளுடைய பெற்றோர் அனுபவித்தனர்—அவர்களுடைய அன்பான பிள்ளை படிப்படியாக மரிப்பதை அவர்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜெபத்தில் நாம் எல்லாரும் யெகோவாவிடம் திரும்பவேண்டும் என்று தகப்பன் சொன்னார். அதன் பின்னர் நாங்கள் கிசுகிசுத்துக் கொண்டோம், மீயா நீண்ட காலமாக அவதிப்படவேண்டியதில்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
“மீயாவோ இறக்கவில்லை. டாக்டர்களோ நர்ஸ்களோ இதைப்போன்று, இவ்வளவு குறைந்த இரத்த எண்ணிக்கையோடு ஒருவர் உயிர்ப்பிழைப்பதை இதுவரை பார்த்ததே இல்லை. இரத்தப்பெருக்கு நின்றுவிட்டதன் காரணமாக, அவளுடைய உடல்நிலை மோசமாகவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவும் கடந்தது, மீயா இன்னும் உயிரோடிருந்தாள்.”
ஒரு திரும்புக்கட்டம்
அக்டோபர் 14, திங்கட்கிழமை காலை, ஒரு டாக்டர் என்னைப் பார்க்க வந்தார். நான் அரைத்தூக்கத்தில் இருந்ததன் காரணமாக, எனக்கு என்ன நடந்ததென்றே தெரியாது. டாக்டர் படுக்கையண்டே நின்றுகொண்டிருந்தபோது, அம்மா என்னிடம்: “டாக்டர் உனக்கு குட் மார்னிங் சொல்ல வந்திருக்கிறார்,” என்று சொன்னார். நான் சப்தமாக “ஹலோ” என்று பதிலளித்தேன். நான் அப்படிச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை, இதனால் அவர் ஆச்சரியப்பட்டு, கிளர்ச்சியடைந்தார்.
மூளை நன்றாகத்தான் இருந்தது, முடக்குவாதமும் உண்டாகவில்லை. சிகிச்சை மீண்டும் அளிக்கப்பட்டது. எரித்ரோபோய்டினும் ஐயன் டெக்ஸ்டிரனும் நரம்பு வழியாகக் கொடுக்கப்பட்டது, மேலும் இம்யூனோகுளோபுலின் ஊசிகளும் ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் கொடுக்கப்பட்டன. மெதுவாக உடல்நிலை முன்னேறியது. அக்டோபர் 16 அன்று ஹீமோகுளோபின் எண்ணிக்கை 2.6-ஆக அதிகரித்தது, 17-ம் தேதி 3.0-ஆக ஆனது. நான் நலமாகி வந்தேன். நவம்பர் 12 அன்று, ஹீமோகுளோபின் எண்ணிக்கை 8.0-ஆக இருக்கையில் ஆஸ்பத்திரியிலிருந்து என்னை அனுப்பினார்கள்.
சிவப்பு இரத்த அணுக்கள் சீரழிவது நின்றதற்கான காரணமோ இரத்த எண்ணிக்கை அவ்வளவு வேகமாக அதிகமானதற்கான காரணமோ எங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. இம்யூனோகுளோபுலின்களும் எரித்ரோபோய்டினும் ஐயன் டெக்ஸ்டிரனும் அடங்கிய ஊசிகள் பிரதான பங்கை வகித்தன என்பது தெளிவாயிருக்கிறது. மே 1992-ன் முற்பகுதிக்குள்ளாக, ஹீமோகுளோபின் எண்ணிக்கை எப்போதும்போல 12.3-ஆக ஆனது, அது அதே அளவில் இருந்துவந்திருக்கிறது.
உடல்நிலையைக் கட்டுப்பாட்டில் வைக்க நான் இப்போது பேணுகை சிகிச்சையில் இருக்கிறேன், இதனால் சுகமாக இருந்துவருகிறேன். நவம்பர் 28, 1992-ல் ஓர் உடன் கிறிஸ்தவனை மணஞ்செய்தேன்; இருவருமாக நாங்கள் இப்போது யெகோவாவைச் சேவித்துவருகிறோம். சுகவீனமும் இரத்தத்தின்பேரில் உள்ள யெகோவாவின் சட்டத்திற்கான கீழ்ப்படிதலும் யெகோவாவிடம் என்னை நெருங்கிவரச் செய்திருக்கிறது. இப்போது நித்தியகாலமாக முழுப் பலத்தோடும் அவரைச் சேவிக்கும்படி எதிர்பார்த்திருக்கிறேன்.—மீயா பியான்டல் சொன்னபடி.
[அடிக்குறிப்புகள்]
a இந்தச் செய்முறை பிளாஸ்மாஃபெரெஸிஸ் (plasmapheresis) என்றறியப்படுகிறது, புற இரத்த சுழற்சியை உள்ளடக்குகிறது. தி உவாட்ச்டவர், மார்ச் 1, 1989, 30, 31 பக்கங்களில் ஆலோசிக்கப்பட்டிருப்பதுபோல, இந்தச் செய்முறையை உபயோகிப்பதற்கான தீர்மானம் தனிப்பட்ட நபரின் மனச்சாட்சிக்கு விடப்பட்டிருக்கிறது.
b தி உவாட்ச்டவர், ஜூன் 1, 1990, 30, 31 பக்கங்களில் ஆலோசிக்கப்பட்டிருப்பதுபோல, பகுதியளவு இரத்தத்தை உடைய இம்யூனோகுளோபுலின்களை உபயோகிப்பதற்கான தீர்மானம் தனிப்பட்ட நபரின் மனச்சாட்சிக்கு விடப்பட்டிருக்கிறது.