கறுப்பு வெல்வெட் சூட்டில் சிறிய ஜென்டில்மேன்
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
மிகப் பல அகழெலிகள் இங்கிலாந்தின் வடபகுதியில் காணப்படுகின்றன, ஆனால் பண்ணை வெளி வாயிலுக்கு அப்பால் உள்ள புல்வெளியினூடே பார்க்கையில், அத்தனை அநேக அகழெலி புற்றுகளை நான் பார்த்ததே கிடையாது. அந்தப் புல்வெளியைச் சிறிய, புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்மேடுகள் மறைத்தன. அகழெலி எப்படிப்பட்ட ஒரு பிராணி என்றும் அது எப்படி வாழ்கிறது என்றும் உங்களுக்குத் தெரியுமா?
ஒருசில ஆட்களே அகழெலியைப் பார்த்திருக்கின்றனர், ஏனென்றால் அது பெரும்பான்மையாக நிலத்தடியிலேயே வாழ்கிறது. அது சுமார் 15 சென்டிமீட்டர் நீளமுடைய சிறிய பிராணி. ஆண் பிராணி 115 கிராமுக்கும் குறைந்த எடையுள்ளதாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் அகழெலி அட்டச்சாம்பல் நிற, ஏறத்தாழ கறுப்பான மென்மயிர்த்தோலை உடையதாக இருக்கிறது, இதனால் இது பொதுவாகவும் பிரியமாகவுங்கூட கறுப்பு வெல்வெட் சூட்டில் சிறிய ஜென்டில்மேன் என்றழைக்கப்படுகிறது.
அகழெலியின் மென்மையான தோலின் மயிர்கள் படியாததாக, அதாவது தோலிலிருந்து நெட்டுக்குத்தலாக எழும்பி இருக்கின்றன. ஆகையால் தரையில் அகழெலி எந்தப் பக்கம் வளைந்தாலும் அல்லது திரும்பினாலும், அதனால் சுலபமாக அவ்வாறு செய்ய முடியும். பல வருடங்களுக்கு முன்னால் அகழெலி பிடிப்பவர்கள் துணிமணிக்காக அதன் தோல்களை விற்றனர், ஆனால் “ஒரு கோட்டைத் தைக்க ஏகப்பட்ட அகழெலித்தோல்கள் தேவைப்படுகின்றன,” என்று அகழெலி பிடிப்பவர் ஒருவர் நகைச்சுவையாகச் சொன்னார்.
அகழெலியின் உடல் குடைகிற வேலை செய்ய மிகத் திட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளங்கைகளை வெளிப்புறமாகக் கொண்டதாக, அதன் முன்னங்கால்கள் உடம்புக்கு முன்புறத்தில் இருக்கின்றன. ஐந்து விரல்களும் கூடுதலான பிறைவடிவ எலும்பும் இரு திறம்பட்ட மண்வாரிகளாக அமைகின்றன. அதன் பலமான முன்னங்கால்களோடு ஒப்பிடுகையில் பலவீனமாயிருக்கும் அதன் சிறிய பின்னங்கால்கள் உந்துவிசையை அளிக்க அகழெலிக்கு உதவுகின்றன. ஈரமான நிலத்தில் அகழெலியை வைத்தீர்களானால், ஐந்து நொடிகளில் அது தரைக்குள்ளாகப் போய்விடும்! ஒரு மணிக்கு ஐந்து கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டிருக்கிற வேகத்தில் அது இருட்டான, ஓதமான சுரங்கங்களினூடேயோ தரையின்மீதோ பயணஞ்செய்யக்கூடும்.
அசாதாரண புலனுணர்வுகள்
சில ஆட்கள் நினைப்பதுபோல, அகழெலி முழுமையாகப் பார்வையற்றதாக இல்லை, ஆனால் அதன் மென்மயிர்த்தோலில் மறைந்திருக்கிற சிறிய கண்கள், வெளிச்சத்தையும் இருளையும் வித்தியாசப்படுத்தக்கூடிய விதத்தில் போதுமான பார்வையை மாத்திரம் அந்தப் பிராணிக்கு ஒருவேளை அளிக்கலாம். அகழெலி நிலத்தைத் தோண்டுகையில், அதன் கண்களைப் பாதுகாக்க அவற்றின் மேல் நீண்ட மயிர்களை வரச்செய்கிறது. என்றபோதிலும், பார்வையைப் பார்க்கிலும் மிக முக்கியமானது, அகழெலியின் தீவிரமான முகர்வுணர்வும் தொடுவுணர்வுமாகும்.
ஐரோப்பிய அகழெலியின் இளஞ்சிவப்புநிற மூக்கின் நுனியில் ஆயிரக்கணக்கான சிறிய முடிகள் துருத்தியிருக்கின்றன, ஒவ்வொன்றும் தொட்டால் உணருகிற அதனதற்குரிய முடியைக் கொண்டிருக்கிறது. அதன் தலையின் பல பாகங்களில் அது நீண்ட மீசைமயிர்களையும் கொண்டிருக்கிறது, அதன் வாலின் நுனியில் கூடுதலான புலன்கள் சார்ந்த முடிகளையும் கொண்டிருக்கிறது. அகழெலி அதன் சுரங்கப்பாதை வழியாகச் செல்கையில் அதிகரித்துவரும் அதிர்ச்சி மாறுபாடுகளை உணருகிறது. இவ்விதமாகப் பெரிய கற்கள் அல்லது பிற விலங்குகளைக் கொன்றுதின்னும் விலங்குகள் போன்ற இடையூறுகளை அதனால் கண்டுபிடித்து தவிர்க்க முடிகிறது.
அகழெலிக்கு நன்கு வளர்ந்த புறக்காதுகள் இல்லை, ஆனாலும் அதற்குக் கூர்ந்த செவிப்புலன் இருக்கிறது. நிலத்தினூடே உள்ள அதிர்வுகளைக் கண்டுணர்ந்து அவற்றிற்கேற்ப செயல்பட முடியும். அகழெலியின் காதுகள் புழைவாய் சுரிதசைகள் மூலம் அடைக்கப்பட முடியும், நுண்மையான துவாரங்களுக்குள் மண் துகள்கள் போகாதபடி காப்பதாகத் தெரிகின்றன.
உணவும் உறைவிடமும்
புல்வெளிக்கு மறுபுறமாக உற்றுப்பார்க்கையில், அகழெலிகள் அடிக்கடி வந்துபோகும் தடத்தை அல்லது பாதையை என்னால் அறிய முடிகிறது. அந்தப் பாதையானது தரைமட்டத்திற்குச் சற்று கீழே, இலேசாக மேலெழும்பியவாறு இருந்தது. அகழெலிகள் புதிதாக அகழ்ந்தெடுத்த மண்ணை மேலே தள்ளும்போது உண்டான புதிய மண்மேடுகளும் காணப்பட்டன. இப்படி மண்ணைப் புரட்டுவது ஒருவகையான உழுதலாக இருக்கிறது, மண்ணிலுள்ள நீரை வடித்து அதன் வளமையைத் தக்கவைப்பதற்கு உதவுகிறது.
அகழெலியின் பிரதான உணவு மண்புழுக்களாகும், சுரங்கங்களுக்கான காரணமும் இதுதான். மண்ணில் மண்புழுக்கள் நகர்ந்து செல்கையில், அகழெலியின் வழிகளடங்கிய பின்னலமைப்பிற்குள் நுழைகின்றன. பின்னர் அகழெலி, அகழ்ந்த அந்த இருட்டான வழிகளினூடே விரைந்தோடுகையில் அதன் உணவைச் சீக்கிரத்தில் கிடைக்கப்பெறுகிறது. ஆனால் அது முட்டைப்புழுக்கள், கம்பிப்புழுக்கள் உட்பட, பூச்சிகளையும் சாப்பிடுகிறது. அகழெலி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை உணவருந்த வேண்டும், இல்லையென்றால் அது இறந்துவிடும்.
அகழெலியின் சிறிய மண்மேடுகளை அகழெலியின் உறைவிடத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. இது இன்னும் பெரியதாக இருக்கிறது, சுமார் 30 சென்டிமீட்டர் உயரமும் ஒரு மீட்டர் அகலமாயும் இருக்கிறது. இது சாதாரணமாக நிழலான இடத்தில் காணப்படுகிறது—ஒரு மரத்தின் கீழோ புல், கிளைகள், மேலும் இலைகள் போன்ற கூடு கட்டும் பொருட்கள் உடனடியாகக் கிடைக்கும் மரவரிசை வேலியோரமாகவோ காணப்படுகிறது.
வசந்தகால முற்பகுதியில், ஓரீற்றில் ஏழு குட்டிகள் வரை ஈனுகின்றன. குட்டி அகழெலிகள் பிறக்கையில், பார்வையற்றவையாகவும் மயிரற்றவையாகவும், மூன்று கிராமுக்கும் குறைவான எடையோடுமிருக்கின்றன. ஐந்து வாரங்களுக்குப் பின்னர் அவை தானாகவே வாழக்கூடிய அளவுக்கு வளர்ந்து, 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நகர்ந்து செல்பவையாக இருக்கின்றன. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவை கூடி இணைவுறுவதற்குத் தயாராக இருக்கின்றன. அகழெலியின் சராசரி ஆயுட்காலம் மூன்று வருடங்கள். என்றபோதிலும், அதன் ஆயுட்காலம் முடிவதற்கு வெகு முன்பாக, விலங்குகளைக் கொன்று தின்னும் பிராணிகள் அவற்றில் அநேக பிராணிகளை அடித்துச் சாப்பிடுகின்றன.
அகழெலி அதன் உணவிற்காக நன்கு பராமரிக்கப்பட்ட புல்தரையிலோ குழிப்பந்தாட்டக் காலப்பகுதியிலோ அகழும்போது தொல்லைகளைத் தரலாம் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. ஆனாலும் கறுப்பு வெல்வெட் சூட்டிலிருக்கும் நம்முடைய சிறிய ஜென்டில்மேன் கிராமிய வாழ்க்கையில் ஆவலைக்கிளறும் பாகமாக இருந்துவருகிறான்.