இளைஞர் கேட்கின்றனர்
ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி—உண்மையில் அவ்வளவு மோசமானதா?
“எனக்குக் குழந்தைப்பிராயமுதல், ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்கான ஆசைகள் இருந்துவந்திருக்கின்றன. எனக்கு அவை விளங்கவில்லையென்பதால், நான் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவில்லை. ஒரு நண்பரோடு மிகவும் மோசமான காரியத்தைச் செய்வதற்கு இது வழிநடத்தியது. எனக்கு ஆழமான குற்றவுணர்ச்சி உண்டானது, இதனால் யெகோவா என்னை மன்னிக்கவேமாட்டார் என்று யோசித்தேன்.”
“நம் பிள்ளைகள் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியில் ஈடுபட டிவி செல்வாக்குச் செலுத்த முயலுகிறது.” இதுவே கூட்டுச் செய்தித்தாள் பத்தியெழுத்தாளரால் வரையப்பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பாக இருந்தது. அந்த எழுத்தாளர் சொன்னார்: “டிவி பார்ப்பவர்கள் ஒத்த பாலினத்தவ புணர்ச்சி வாழ்க்கை பாணியைச் சாதகமாகச் சித்தரித்துக் காட்டுகிற ப்லெதரா (plethora) [மிகுநிறைவான] நிகழ்ச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கின்றனர்.” என்றபோதிலும், இந்நாட்களில் இளைஞர் மத்தியில் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற அநேக மூலங்களுள் டிவி வெறுமனே ஒரு மூலந்தான். ஒத்த பாலினத்தினர் புணர்ச்சியை ஆதரிக்கும் பிரச்சாரமானது ஆசிரியர்களாலும் சகாக்களாலும் திரைப்படங்களாலும் புத்தகங்களாலும் பத்திரிகைகளாலுங்கூட முன்னேற்றுவிக்கப்படுகிறது.
மருத்துவத் துறையும் அதில் சேர்ந்துகொண்டிருக்கிறது. காலாகாலமாக, டாக்டர்கள் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியை ஒரு நோயாக கருதினர். ஆனால் 1973-ல் அமெரிக்க மனநோய் கழகமானது ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி இனிமேலும் ஒரு மனநோய் கோளாறாக கருதப்படாது என அறிக்கையிட்டது. அதுமுதல், மருத்துவத் துறையிலிருக்கும் அநேகர் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி வாழ்க்கை பாணியின்மீது அங்கீகார முத்திரையைப் போடுமளவுக்கு ஆதரித்திருக்கின்றனர். உதாரணமாக, ஒத்த பாலினத்தவரின் உறவுகள் “வக்கிரமாக இல்லவே இல்லை, மாறாக ஆரோக்கியமான மனித பாலின நடத்தையை உள்ளடக்குகின்றன. . . . நீங்கள் அதைத் தெரிவுசெய்துகொண்டால் அவற்றை அனுபவித்து மகிழுங்கள், மேலும் அவற்றை ‘தவறானது’ அல்லது ‘மன அமைதி குலைப்பது’ என்று நம்பும்படி உங்களிடம் பிரச்சாரம் செய்ய யாரையும் அனுமதியாதீர்கள்” என்று வசியத் துயில்முறை மருத்துவராகிய ஆல்பர்ட் எலஸ் அறிவித்தார்.
இத்தகைய பிரச்சாரம் அந்தளவு ஊடுபரவும் பாங்குள்ளதால் நியூஸ்வீக் பத்திரிகை அறிவிக்கிறது: “காட்சிமூலங்களில் காட்டப்படுகிறவற்றால் தூண்டப்படுவதாலும் ஏற்றுக்கொள்ளும் புதிய சூழலாலும் பருவவயதினர் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியையும் இரு பாலினத்தவர் புணர்ச்சியையும் அதிக வெளிப்படையாகச் செய்து பார்க்கின்றனர்.” கடந்த காலத்தில் பருவவயதினர் ஓரின பாலுறவுகளை மிகவும் கடுமையாகக் கண்டித்திருக்கையில், இப்போது வளர்ந்துகொண்டே வரும் இளைஞர் அதை “நாகரீகமானதாக” கருதுகின்றனர் என்று சொல்வது மிகைப்படுத்துதலாக இருக்காது. ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி செயல்களில் ஈடுபடாத இளைஞருங்கூட அதைச் செய்கிற மற்றவர்கள்பால் அடிக்கடி மிகவும் பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மையுள்ளவர்களாக இருக்கின்றனர். “என்னுடைய நண்பன் ஒருவன், தான் ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்காரன் என்று என்னிடம் சொன்னால், இன்னும் அவனுடைய நண்பனாகத்தான் நான் தொடர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன்,” என டேரன் என்ற இளைஞன் சொல்கிறான். ஓர் இளம் காலேஜ் மாணவன் தான் “பெண்கள்பேரிலேயே வேட்கை கொண்டதால்” சாதாரண ஆளாக உண்மையில் இருக்க முடியாது என்றுங்கூட கவலை தெரிவித்தான்!
இவ்விதமாக, இன்றைய ஒழுக்கக் கட்டுப்பாடற்ற சூழல் கிறிஸ்தவ இளைஞரைக் குழப்புவதாக இருக்கலாம்—விசேஷமாக ஏதோ காரணத்துக்காக ஒரே பாலரின் கண்பால் மோகம் கொள்கிறவர்களுக்கு அப்படியிருக்கும்.a ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி கடவுளுக்குப் பிரியமற்றது என்பதை அறிந்தவர்களாக, அதை உண்மையாகவே தவிர்க்க விரும்புகின்றனர். என்றாலும், சிலசமயத்தில், தங்கள் உணர்ச்சிகளை அடக்கியாளுவது அவ்வளவு அயர்வுண்டாக்குவதாக இருப்பதால் பைபிளின் நிலை நேர்மையானதா நியாயமானதா என்று யோசிக்கத் துவங்கலாம். ‘ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி உண்மையில் அவ்வளவு மோசமானதா?’ என்று அவர்கள் யோசிக்கலாம்.
கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது
விடைபெற, அப்போஸ்தலன் பவுல் 1 கொரிந்தியர் 6:9, 10-ல் என்ன சொன்னார் என்பதை நீங்களே படித்துப்பாருங்கள்: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும் [“ஆண் விபசாரர்கள்,” ஆங்கில புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு; “பெண்மை குணம் மிகுந்தவர்கள்,” ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு], ஆண்புணர்ச்சிக்காரரும் [“சோதோமியர்கள்,” ஜெரூசலம் பைபிள்; “ஒத்த பாலினத்தவ முறைதகாப்புணர்ச்சிக்காரர்கள்,” இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு], திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” அத்தாட்சிப்பூர்வமாக, பாலுறவில் மந்தமான பங்கை ஏற்பவர்களையும் தங்களுடைய ஒழுக்கக்கேடான உறவுகளில் “ஆண்” பங்கை மிகவும் சுறுசுறுப்பாக ஏற்பவர்களையும் பற்றி பவுல் குறிப்பாகச் சொல்வதைக் கவனியுங்கள். இவ்வாறு, கடவுள் எல்லா ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி செய்கைகளையும் அங்கீகரிப்பதில்லை என்பதை அவர் தெளிவாக்கினார்.
ரோமர் 1:18-27-ல் உள்ள பவுலின் வார்த்தைகளிலிருந்தும் இது தெளிவாகிறது: “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. . . . அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். . . . இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்[தனர்].” இங்கே பவுல் ஆண், பெண் ஆகிய இரு சாராருடைய ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியையும் குறிப்பாகக் கடிந்து பேசினார். ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி செய்கைகள் சுபாவத்திற்கு மாறானவையாகவும் “அவலட்சணமான”வையாகவும் இருப்பதாக அவர் கடிந்துரைத்தார்.
ஆரோக்கியமற்றதா ஆரோக்கியமானதா?
பைபிள் கருத்து வெறுமனே பழங்காலத்தியது, தற்காலப் போக்கிற்கு ஒவ்வாதது என்று அநேகர் இதற்கு ஒருவேளை பிரதிபலிக்கலாம். ஆனால் அதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், படைப்பாளரைத் தவிர, நம்முடைய மாம்சப்பிரகாரமான, மனப்பிரகாரமான, உணர்ச்சிப்பூர்வ மேலும் ஆவிக்குரிய அமைப்பை யார் நன்றாக அறிந்திருக்கிறார்? கடவுள் மனிதனையும் மனுஷியையும் உருவாக்கி, ஒருவருக்கொருவர் கவர்ச்சி கொள்ளும் தன்மையை அவர்களுக்குள் வைத்தார். (ஆதியாகமம் 1:27, 28) ஒரே பாலாராயிருக்கும் இன்னொருவர்பேரில் மோகம் கொள்ள அவர்களை உருவாக்கவில்லை. மேலுமாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலுறவுகள், திருமண ஏற்பாட்டுக்குள் மாத்திரம் இருக்கவேண்டும் என்று கடவுள் உறுதிப்படுத்தியிருந்தார்.—எபிரெயர் 13:4.
இது நமக்குக் கஷ்டங்களை உண்டுபண்ணுவதில்லை. ஏசாயா 48:17-ல் “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதி”ப்பவர், என்று தம்மைக் குறித்து யெகோவா தேவன் சொல்கிறார். ஆம், எது நமக்கு உதவும், எது தீங்கு விளைவிக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். சிலருக்கு பைபிள் போதனைகளைப் பின்பற்றுவது கடினமாகத் தோன்றினாலும் அவை எப்போதுமே ‘ஆரோக்கியமான உபதேசங்களாக’ இருக்கின்றன, அதாவது, மனதிற்கும் உடலுக்கும் நன்மை பயக்குவதாயிருக்கின்றன. (தீத்து 2:1) மறுபட்சத்தில், ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி ஒருவருடைய மாம்சப்பிரகாரமான, உணர்ச்சிப்பூர்வ, ஆவிக்குரிய நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும்.
ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி வாழ்க்கை பாணி எந்தளவு ஆரோக்கியமற்றதாயிருக்கும் என்பதற்கு எய்ட்ஸ் ஆபத்து ஓர் உதாரணமாகும். வட அமெரிக்காவில், ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்காரராகிய ஆண்கள் இந்நோய் தொற்றிக்கொள்ளக்கூடிய மிகுதியான வாய்ப்பை உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால், ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்காரர்களைப் பொதுவாகத் தொல்லைபடுத்தும் நோய்களாகிய ஈரல் அழற்சி, கல்லீரல் தொற்றுநோய்கள், மேக வெட்டை, மேகப்புண், மேலும் இரைப்பை-குடல் ஒட்டுண்ணிகள் ஆகிய நோய்களின் வரிசையில் எய்ட்ஸ் ஒரேவொரு நோயாகவே இருக்கிறது. இந்நோய் பரவும்படி எது ஊக்குவிக்கிறது? டாக்டர் ஜோசஃப் நிக்கலோஸி விளக்குகிறார்: “ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி வாழ்க்கை பாணியின் கட்டாயப்படுத்தும், அடிமைப்படுத்தும் மூலக்கூறுகள், அநேக எழுத்தாளரால் சான்றுபகரப்பட்டிருக்கின்றன.” “28 சதவீத ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்கார ஆண்கள் ஓராயிரம் அல்லது அதற்கும் மேலான கூட்டாளிகளோடே பாலுறவைக் கொண்டிருந்திருக்கின்றனர். . . . வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்கார ஆண்களில் ஏறத்தாழ பாதிபேர் . . . குறைந்தபட்சம் 500 வித்தியாசப்பட்ட பாலுறவு கூட்டாளிகளைக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள்,” என்று ஒரு விரிவான ஆய்வு எடுத்துக்காட்டினது.
அநேக ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்காரர்களின் மத்தியில் “உண்மைதவறாமை வாக்களிக்கப்பட்டிருக்கிற உறவுக்குள் நுழைவது, கள்ள நட்பு, அல்லது பொறுப்பு சார்ந்த பயங்கள் இருக்கின்றன . . . ஆட்சார்பற்ற பாலுறவிற்கான உந்துவிப்பு சிலசமயத்தில் அதிகப்படியான கட்டாயப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இத்தகைய நபர்களில் சிலர் ஒரு நாளினூடே அல்லது ஒரு நாளின் மாலையிலே, டஜன்கணக்கான அல்லது அதற்கும் மேற்பட்ட பாலுறவுகளில் ஈடுபட்டிருக்கலாம்,” என ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி நடத்தை என்ற ஆங்கிலப் புத்தகம் விவரிக்கிறது. அத்தகைய கட்டுப்பாடற்ற நடத்தை ஆரோக்கியமாயிருப்பது சாத்தியமா? மாறாக, அது ஒழுக்கங்கெட்டதாகவும் இழிவானதாகவும் இருக்காதா? இத்தகைய தீவிரிக்கும் வரையறையற்ற பாலுறவில் முழு ஈடுபாடுடையவர்கள் தெளிவாகவே, “கேட்டுக்கு அடிமைகளா”யிருக்கின்றனர்.—2 பேதுரு 2:19.
இதைத் தவிர, அதிகப்படியான ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி பயங்கரமானதாகவும் வன்முறையானதாகவும் முழுமையான காமவெறியாகவும் இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.” (எபேசியர் 5:12) அத்தகைய வன்முறை “சந்தோஷமான” வாழ்க்கை பாணியாக எண்ணப்படுவதற்கு மறைவாக உள்ள கோபத்தையும் வேதனையையும் சுட்டிக்காட்டுகிறது. வரையறையற்ற பாலுறவில் ஈடுபடும் ஆட்கள் அல்லர் என்று சில ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்காரர் சாதிக்கின்றனர். ஆனால் “ஒருதுணையுள்ள” ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்காரர்கள் சிறுபான்மையராக இருக்கின்றனர்—அவர்களுடைய உறவுகள் பொதுவாகக் குறுகிய காலந்தானே இருக்கின்றன. ஒரே பாலரின் கண் பால் உள்ள உறவுகள் நீடித்தாலுங்கூட, பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள அன்பின் விளைவாக அவை இருக்க முடியாது. அத்தகைய அன்பு “இழிவானதைச் செய்யாது.”—1 கொரிந்தியர் 13:4, 5.
விளைபயன்கள்
ரோமர் 1:27-ல் பவுல் சொல்கிறார்: “இத்தகைய அசிங்கமான, வெறுப்பூட்டும் காரியங்களை ஆண்கள் ஆண்களோடே நடப்பித்தனர், வக்கிரமான பாலுறவின் விளைபயன்களை எதிர்பார்த்தபடி தங்களுக்குள் அடைந்தார்கள்.” (நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு, ஜெ. பி. ஃபிலிப்ஸ் எழுதியது) என்ன வழிகளில்? ஒரு காரியத்தைப் பற்றி ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி நடத்தை என்ற ஆங்கிலப் புத்தகம் அறிக்கையிடுகிறது: “இயற்கைப் பால் இணைவுகொள்ளும் பெண்களைக் காட்டிலும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிகொள்ளும் பெண்கள் மிதமீறிய மதுபான பயன்பாட்டாலும் துர்ப்பிரயோகத்தாலும் குறிப்பாக அதிகமாய் அவதிப்படுகின்றனர்.” இளம் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் தற்கொலை செய்வதற்கான முயற்சிகள் பொதுவாக அசாதாரணமாய் இருக்கின்றன என்று சில ஆய்வாளர்கள் உரிமைபாராட்டவும் செய்கின்றனர்.
எல்லாவற்றையும் விட மிகவும் கெடுதலானது, ஒருவருடைய ஆவிக்குரிய தன்மைக்குக் கிடைக்கும் விளைபயன்களாகும். ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிக்காரர்கள் “புத்தியில் அந்தகாரப்பட்டு, . . . தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராய்” தங்களையே காண்கின்றனர். (எபேசியர் 4:18) ஆனால், பைபிள் நியமங்களைப் பற்றிய அறிவிருந்தபோதிலும், ஒரே பாலினத்தவர் கண் பால் தங்களையே வசீகரிக்கப்பட்டவர்களாகக் காணும் தேவபயமுள்ள இளைஞரைப் பற்றியதிலென்ன? தெளிவாகவே, தங்கள்பால் அவர்கள் மெய்யான போராட்டத்தைப் போராடுகிறவர்களாக இருக்கின்றனர். சந்தேகமின்றி, ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதை அறிந்திருப்பது, ‘தீமையை வெறுக்க’ அத்தகைய ஆட்களுக்கு உதவுகிறது. (ரோமர் 12:9) தவறான இச்சைகளுக்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்கு எண்ணிறந்த, நடைமுறையான நடவடிக்கைகளுங்கூட இருக்கின்றன. இதுவே பின்னர் வெளிவரும் கட்டுரையின் பொருளாக அமையும்.
[அடிக்குறிப்புகள்]
a “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு ஏன் இவ்வித உணர்ச்சிகள் வருகின்றன?” என்ற எமது முந்தைய இதழில் பாருங்கள்.
[பக்கம் 13-ன் படம்]
ஒத்த பாலினத்தவ புணர்ச்சிக்காரரின் வாழ்க்கை பாணி வரையறையற்ற பாலுறவாலும் உணர்ச்சிப்பூர்வ சோர்வாலும் நோயாலும் குறிக்கப்படுகிறது