சூரிய கிரகணமும்—வானியல் கவர்ச்சியும்
மே 10, 1994 வட அமெரிக்காவிலுள்ள சில ஆட்களுக்கு அசாதாரணமான ஒரு நாளாக இருந்தது. சூரியனை சந்திரன் மறைத்துவிடும்போது ஏற்படும் வளைவடிவமான கிரகணத்தின் சமயமாக அது இருந்தது.a ஒரு சில மணிநேரங்களுக்கு, லட்சக்கணக்கானோர் கவர்ச்சியூட்டும் வானியல் அறிவியலைப் பற்றி அறிந்துகொள்ளும்படி செய்யப்பட்டார்கள். ஆனால் சரியாக கிரகணம் (Eclipse) என்பது என்ன?
“குறிப்பிட்ட ஒரு பார்வையாளரின் சம்பந்தமாக, வானொளி கோளம் ஒன்று மற்றொன்றை பகுதியளவாக அல்லது முழுமையாக மறைக்கும்போது” ஒரு கிரகணம் நிகழுகிறது. (தி அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்ஷ்னரி ஆஃப் இங்லிஷ் லாங்வேஜ்) பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை ஏறக்குறைய நேர்கோட்டில் அமையும்போது மட்டுமே சூரிய அல்லது சந்திர கிரகணம் தோன்றமுடியும். சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் நிகழுவது, எந்த வானொளி கோளம் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்தே இருக்கிறது. சில சமயங்களில் பூமி தன் நிழலை சந்திரன்மீது விழச்செய்து, சந்திர கிரகணத்தை உண்டுபண்ணுகிறது. மறுபட்சத்தில், கடந்த வருடம் மே மாதம், சந்திரன் 230 முதல் 310 கிலோமீட்டர் அகலத்துக்கு வித்தியாசப்படும் ஒரு குறுகிய பட்டையில் தன் நிழலை பூமியின்மீது விழச்செய்தது. சந்திரன் படிப்படியாக பூமிக்கும் சூரியனுக்குமிடையே கடந்துசென்றபோது, சூரியனை அது கிட்டத்தட்ட முழுமையாக மறைத்துவிட்டது. நிழலின் பாதை பசிபிக் சமுத்திரத்துக்குக் குறுக்காகவும் பின்னர் வட அமெரிக்காவில் தென்மேற்கிலிருந்து வடகிழக்காகவும் சென்றது. சந்திரன் மெதுவாக சூரியனுக்கு முன்னால் கடந்துசென்றதைப் போல தோன்றியது. உண்மையில் நிழல் பூமியின் குறுக்காக மணிக்கு சுமார் 3,200 கிலோமீட்டர் வேகத்தில் கடந்துசெல்கிறது.
கண்களுக்குச் சேதம் ஏற்படாமல் கிரகணத்தைப் பார்ப்பதற்கு எல்லா வகையான முறைகளும் பயன்படுத்தப்பட்டன. சிலர் வெல்டரின் கண்ணாடிவில்லைக் கொண்டு பார்த்தனர். மற்றவர்கள் சக்திவாய்ந்த வடிகட்டிகளைப் பயன்படுத்தினர். இன்னும் மற்றவர்கள் மிகச் சிறிய ஒரு துவாரத்தின் மூலமாக ஒரு தாளின்மீது கிரகணத்தின் பிம்பம் தோன்றும்படிச் செய்தனர். புகைப்படக்காரர் ஒருவர் வடிகட்டியை வேறொருவர் பிடித்திருக்கும்படிச் செய்தார், துவாரங்கள் வழியாக வெளிச்சம் கடந்து சென்றபோது அது தரையின்மீது கிரகணத்தின் பல பிம்பங்களை உருவாக்கியது. மரங்களின் இலைகள் வழியாக வெளிச்சம் கடந்துவந்தபோது இதேபோன்ற விளைவுகள் கவனிக்கப்பட்டன. கருமையான ஒரு மேற்பாகத்தில் இரண்டு பிம்பங்களை விழச்செய்வதற்கு பைனாக்குலரின் வழியாக வெளிச்சத்தை கடத்துவது மற்றொரு முறையாக இருந்தது.
ஒரு வருடத்தில் ஐந்து சூரிய கிரகணங்கள் வரையாகவும் மூன்று சந்திர கிரகணங்கள் வரையாகவும் நிகழக்கூடும். “ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் இரண்டு கிரகணங்களாவது நிகழவேண்டும்,” என்று தி இன்டர்நேஷனல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் அஸ்ட்ரானமி சொல்கிறது. என்றபோதிலும், ஒவ்வொன்றையும் வித்தியாசமான இடங்களிலிருந்து பார்க்கமுடிகிறது. ஆகவே அருகிலுள்ள ஐக்கிய மாகாணங்களில் 1994-ன் கிரகணத்தைப் பார்க்க தவறிய எவரும் மற்றொரு கிரகணத்துக்காக 2012-ம் ஆண்டுவரையாக காத்திருக்கவேண்டும் அல்லது அதற்கு முன் ஒரு கிரகணத்தைப் பார்க்க பெரு, பிரேஸில் அல்லது சைபீரியாவுக்குப் பயணிக்கவேண்டும்.b
முழு கிரகணத்தின் மர்மம்
சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும்போது நிகழும் முழு சூரிய கிரகணம் கடந்த நூற்றாண்டுகளில் பயத்தையும் திகிலையும் உண்டுபண்ணியது. ஏன் அப்படி? தி இன்டர்நேஷனல் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் அஸ்ட்ரானமி குறிப்பிடுகிறது: “சந்திரன் சூரியனை நெருங்கிவருவதைக் காணமுடியாதிருப்பதால் தகவலறியாதவர்களுக்கு நேரிடப்போகும் அந்தக் காட்சியைப்பற்றிய எச்சரிப்பு இல்லாத காரணத்தால் முழு கிரகணத்தின் மர்மம் அதிகமாகிறது.” அந்தக் காட்சி பின்வரும் அம்சங்களையும் உட்படுத்துகிறது: “தெளிவாக வருணிக்க முடியாத, மேகத்தால் கருமையடைவதைப் போல் இல்லாமல், அநேகமாக அச்சமூட்டும் பச்சைவண்ண மென்சாயத்தில் வானம் கருக்கிறது, . . . சூரியனின் ஒரு பகுதி மாத்திரமே சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும் அந்தக் கடைசி சில நொடிகளில் வெளிச்சம் மறைந்துபோகிறது, கவனிக்கத்தக்கவிதமாக அது குளிர்ச்சியடைகிறது, பறவைகள் உறங்க சென்றுவிடுகின்றன, ஒருசில மலர்களின் இதழ்கள் மூடிக்கொள்கின்றன, காற்று குறைந்துவிடுகிறது. . . . கிராமப்புறங்களில் இருள் இறங்கிவிடுகிறது.”
கிரகணங்களின் கதை என்ற தன்னுடைய ஆங்கிலப் புத்தகத்தில், ஜார்ஜ் சேம்பர்ஸ் ஆகஸ்ட் 2, 1133-ல் “வரலாற்றின் இடைநிலை காலத்தின்போது நிகழ்ந்த மிகவும் பிரசித்திப் பெற்ற கிரகணங்களில் ஒன்று . . . ஸ்காட்லாந்தில் ஒரு முழு கிரகணமாக காணப்பட்ட” ஒன்றைப்பற்றி அறிக்கை செய்கிறார். மால்மஸ்பரியைச் சேர்ந்த வில்லியம் எழுதினார்: “அந்த நாளின் 6-ஆம் மணிநேரத்தில் அதிர்ச்சியூட்டும் இருளில் சூரியன் தன் மகிமையான முகத்தை மறைத்துக்கொண்டது, . . . ஒரு கிரகணத்தினால் மனிதர்களின் இருதயங்கள் அமைதி இழந்தன.” பண்டைய ஆங்கிலோ சாக்ஸன் க்ரானிக்கல், “மனிதர்கள் வியப்பால் செயலற்றுப்போய் திகிலடைந்தார்கள்,” என்பதாக சொன்னது.
இரண்டு பயணிகள் ஆப்பிரிக்காவில் தகவல்தெரிவித்த, செப்டம்பர் 2, 1830-ல் நிகழ்ந்த சந்திர கிரகணத்தைப் பற்றியும்கூட சேம்பர்ஸ் விளக்கமான பதிவை செய்தார்: “சந்திரன் படிப்படியாக மறைந்தபோது, அனைவருக்கும் பயம் வந்துவிட்டது. கிரகணம் அதிகமானபோது அவர்கள் அதிகமாக திகிலடைந்தார்கள். அதிகமான வருத்தத்தோடு அவர்கள் சூழ்நிலைமையைக் குறித்து தங்கள் மன்னரிடம் தெரிவிக்க ஓடினார்கள், ஏனென்றால் அத்தனை அடர்த்தியான ஒரு நிழலை விழச்செய்வதற்கு அங்கு ஒரு மேகம்கூட இல்லை, இயற்கையை அல்லது ஒரு கிரகணத்தின் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
அதிக சமீப காலங்களில், வானியல் ஆராய்ச்சி ஒரு சூரிய கிரகணத்தைப் பற்றிய மனிதவர்க்கத்தின் பயங்களை நீக்கிவிட்டிருக்கிறது—சூரியன் திரும்பவும் தோன்றும் என்பது நமக்குத் தெரியும்.
ஜெஸ்யுட்டுகள் எவ்வாறு ஒரு சூரிய கிரகணத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள்
1629-ல், சீனாவிலிருந்த ஜெஸ்யுட் மிஷனரிகள் ஒரு சூரிய கிரகணத்தின் மூலமாக பேரரசரின் தயவைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் எவ்விதமாக அதைச் செய்தார்கள்?
“சீனர்களுடைய சந்திர நாள்காட்டி பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருப்பது போலவே தவறாக இருந்ததை,” ஜெஸ்யுட்டுகள் கவனித்தார்கள். “பேரரசரின் வானாராய்ச்சியாளர்கள் சூரிய கிரகணத்தை முன்னறிவிப்பதில் திரும்பத் திரும்ப பிழைசெய்தார்கள் . . . ஜூன் 21, 1629 காலை ஒரு கிரகணம் எதிர்பார்க்கப்பட்ட அந்தச் சமயத்தில் ஜெஸ்யுட்டுகளுக்கு அந்தப் பெரிய வாய்ப்பு கிட்டியது. பேரரசரின் வானாராய்ச்சியாளர்கள் கிரகணம் 10:30-க்கு நிகழ்ந்து இரண்டு மணிநேரங்களுக்கு நீடிக்கும் என்பதாக முன்னறிவித்தார்கள். ஜெஸ்யுட்டுகள் கிரகணம் 11:30 வரை வராது என்றும் அது இரண்டு நிமிடங்கள் மாத்திரமே நீடிக்கும் என்றும் முன்னறிவித்தார்கள்.” என்ன நடந்தது?
“முக்கியமான அந்த நாளில், 10:30 வந்து போனபோது சூரியன் முழுமையாக பிரகாசித்துகொண்டுதானே இருந்தது. பேரரசனின் வானாராய்ச்சியாளர்கள் சொன்னது பொய்த்துப்போனது, ஆனால் ஜெஸ்யுட்டுகள் சொன்னது சரியா? பின்னர், சரியாக 11:30-க்கு ஜெஸ்யுட்டுகள் முன்னறிவித்திருந்த வண்ணமாகவே, கிரகணம் ஆரம்பித்து இரண்டே நிமிடங்கள் நீடித்தது. இப்பொழுது அவர்கள் பேரரசனின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டார்கள்.”—டேனியேல் ஜே. பூர்ஸ்டின் எழுதிய தி டிஸ்கவரர்ஸ்.
பைபிளில் வானியல்
வானம் சம்பந்தப்பட்ட தகவல் பைபிளில்கூட கொடுக்கப்பட்டிருக்கிறது. அநேக நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்கள் யோபு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலுமாக, வானங்களை ஆராய்வதற்காகவோ அல்லது மற்ற பொய் வணக்கத்துக்காகவோ அல்ல, ஆனால் அவருடைய படைப்புகளின் மாட்சிமையைப் போற்றுவதற்காக தம்முடைய ஊழியர்களை வானங்களைக் கூர்ந்து நோக்கும்படியாக யெகோவா அழைத்தார். ஏசாயா பின்வருமாறு எழுதுவதற்கு ஏவப்பட்டார்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிக்கிறது.”—ஏசாயா 40:26.
யோபு படைப்பாளரைப் பற்றி பின்வருமாறு சொன்னபோது அவருடைய ஈடற்ற நிலையை ஒப்புக்கொண்டார்: “அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், [ஒருவேளை வடதிசை விண்மீன் கூட்ட வகை அல்லது பெரும் கரடி], மிருகசீரிஷத்தையும், [ஒருவேளை மான்தலை விண்மீன் கூட்டம் அல்லது வானுலக வேட்டைக்காரன்] அறுமீனையும், [ஒருவேளை இடப வான்மனையிலுள்ள ஏழு விண்மீன் கூட்டம் அல்லது ரிஷபம், விண்மீன் கூட்டம்] தட்சண மண்டலங்களையும் [தென் கோளார்த்தத்திலுள்ள நட்சத்திரக்கூட்டங்களை அர்த்தப்படுத்துவதாக புரிந்துகொள்ளப்படுகிறது] உண்டாக்கினவர்.”—யோபு 9:7-9.
யெகோவா கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு நித்திய வாழ்க்கையை அருளிச்செய்யும்போது வானியல் ஆராய்ச்சி எத்தனை கவர்ச்சியூட்டுவதாக இருக்கப்போகிறது! பிரமாண்டமான பிரபஞ்சத்தின் சம்பந்தமாக கடவுளுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கையில் பிரபஞ்சத்தின் புதிர்கள் படிப்படியாக வெளிப்படுத்தப்படும். இப்படியாக தாவீதின் வார்த்தைகளை நாம் இன்னும் அதிகமான உணர்ச்சியோடு எதிரொலிக்கக்கூடியவர்களாக இருப்போம்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.”—சங்கீதம் 8:3, 4.
[அடிக்குறிப்புகள்]
a “எக்லிப்ஸ்” என்ற ஆங்கில வார்த்தை, எக்லீப்போ என்பதிலிருந்து வருகிற எக்லீப்சிஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது; அதன் அர்த்தம் “தோன்றத் தவறுதல்” என்பதாகும்.—தி கன்சைஸ் ஆக்ஸ்ஃபர்டு டிக்ஷ்னரி.
b நவம்பர் 3, 1994 அன்று முழு சூரிய கிரகணம் இருந்தது, அது தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் காணப்பட்டது.