நவநாகரிகம் பண்டைய கிரேக்க பாணி
கிரீஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
கிறிஸ்தவ எழுத்தாளர்களான பவுலுக்கும் பேதுருவுக்கும் முதல் நூற்றாண்டில் பெண்கள் உடையைப் பற்றி திட்டவட்டமான ஆலோசனை கொடுப்பது ஏன் அவசியமாயிருந்தது? உதாரணமாக, பவுல் எழுதினார்: ‘ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும்.’ (1 தீமோத்தேயு 2:9) அதேவிதமாக, பேதுரு ‘மயிரைப் பின்னுதல்,’ ‘பொன்னாபரணங்களை அணிதல்,’ ‘உயர்ந்த வஸ்திரங்களை உடுத்துக்கொள்ளுதல்’ ஆகியவற்றைப்பற்றி பேசுவதை அவசியமாக கண்டார்.—1 பேதுரு 3:3.
பண்டைய பிரசித்திபெற்ற கிரேக்க நாகரிகத்திலிருந்து நேரடியாக பெறப்பட்ட கிரேக்கருக்குரிய கலாச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கில் நவநாகரிகம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் இருந்ததா? அசலான ஒரு கிரேக்கனைப்பற்றி யோசிக்கையில், அநேகர்—சிந்திக்கப்படுகிற காலப்பகுதி அல்லது ஆடை அணிந்திருப்பவரின் பாலினம் அல்லது பிறப்பிடம் எதுவாக இருந்தாலும்—எங்கும் காணப்படுகிற கிட்டானை அல்லது தளர்ந்த சட்டையை—அங்கிபோன்ற ஆடையை—அவனோ அல்லது அவளோ அணிந்திருப்பதையே கற்பனை செய்வர்.a அந்தக் கருத்து சரியா? இல்லை!
உள்ளாடை எவ்வாறு செய்யப்பட்டு உடுத்திக்கொள்ளப்பட்டது
உருவச்சிலைகள், மட்பாண்ட ஓவியங்கள் மற்றும் இலக்கிய எழுத்துக்களை உன்னிப்பாக ஆராய்ந்துபார்ப்பது, கிரேக்கரின் ஆடை என்பது நீளமான வெள்ளை உடுப்பைவிட அதிகமான ஒன்றாக இருந்ததை வெளிப்படுத்துகிறது. பாணிகள், துணி வகைகள், வண்ணங்கள், தினுசுகள் மற்றும் அலங்கார பொருட்கள் வித்தியாசமானவையாகவும் பல்வகைப்பட்டவையாகவும் இருந்தன. விசேஷமாக பெண்கள் தங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு வித்தியாசப்பட்ட நுட்பமான உபாயங்களைப் பயன்படுத்தினர்.
ஒடிசஸ் என்ற பெருவீரனின் பத்தாண்டு கால சுற்றுலா பயணத்தை விவரித்த பண்டைய கிரேக்க கவியாகிய ஹோமரின் வீரகாவியம் ஒடிசி-ஐ வாசித்திருப்பவர்கள், அவர் வீடு திரும்பும் காலத்துக்காக காத்திருந்த வீரனின் மனைவி பெனிலோப் எவ்விதமாக அந்த ஆண்டுகளின்போது ஒரு சிறிய துணியைத் தொடர்ந்து நெய்துகொண்டும் நெய்ததைப் பிரித்துக்கொண்டுமிருந்தாள் என்பதை நினைவுகூருவார்கள். உடையைப் பற்றி ஹோமர் இன்னும் சில இடங்களில் குறிப்பிடுகிறார், தொன்றுதொட்டே துணி உற்பத்தியானது பெண்களின் முக்கியமான வீட்டுப் பொறுப்புகளில் ஒன்றாக இருந்ததை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
துணியை நெய்தப்பிறகு, கிட்டானை—ஒரு துணி, பின்னால் சில சமயங்களில் கம்பளி, ஷர்ட் போன்ற ஒரு ஆடை—உண்டுபண்ணுவதற்காக வெட்டப்பட்டது, இது ஆண்கள் மற்றும் பெண்களின் உடைக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. தொன்மையான காலங்களில் (சுமார் பொ.ச.மு. 630 முதல் 480 வரை), பெண்களின் கிட்டான் (அப்போது எஸ்திஸ் என்றழைக்கப்பட்டது) அந்தப் பெண்ணின் உயரமும் அவளுடைய கையின் அளவுக்கு இரண்டு மடங்கும் அளவுள்ள நீளமான ஒரு துண்டுத் துணியால் ஆனது. (ஒப்பிடுக: யோவான் 19:23; அப்போஸ்தலர் 10:30, தி கிங்டம் இன்டர்லீனியர்.) வேலைப்பாடுள்ள ஊசிகள் கிட்டானோடு இணைக்கப்பட்டிருந்தன, இவை ஆரம்பத்தில் சிறிய விலங்குகளின் கால் எலும்புகளிலிருந்தும் பின்னால் உலோகங்களிலும் செய்யப்பட்டவையாக இருந்தன. இது இரண்டு பக்கங்களிலும் திறப்பைக் கொண்டு, இடுப்பில் ஒரு கச்சையால் இணைக்கப்பட்டது, இவ்விதமாக அது இரண்டு தனி ஆடைகளின் தோற்றத்தை அளித்தது.
பின்னர், பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பண்டைய கிரேக்க கிட்டான் தளர்ந்த ஒரு சட்டையைக் காட்டிலும் அதிகமாக ஒரு உடையைப் போல தோற்றமளித்தது. மேலுக்கு மடிக்கப்படாமல் பக்கங்கள் தைக்கப்பட்டதால் துணியின் உபயோகத்தில் இது அதிக சிக்கனமாக இருந்தது. எல்லாம் ஒரே வெள்ளையாக இருப்பதற்குப் பதிலாக, துணியில் சில சமயங்களில் பல வகையான நிறங்களில் நீண்ட குறுகிய பட்டைகள் காணப்பட்டன அல்லது ஓரங்கள் குஞ்சங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தன. பிடித்தமான நிறங்களாக குங்குமப்பூ நிறமும் சிவப்பும் பயன்படுத்தப்பட்டன. பண்டைய கிரேக்கருடைய காலத்தில், ஆசியச் செல்வாக்கு இளம் சிவப்பு, நீலம், ஊதா மற்றும் மஞ்சள் போன்ற புதிய பகட்டான நிறங்களைக் கொண்டுவந்தது. பொன் நூலிழைகள் அல்லது பூ தையல்வேலையால் அலங்கரிக்கப்பட்ட மற்ற துணிகள் ஆரம்பத்தில் கடவுட்களின் சிலைகளுக்கும் அவற்றை வருணிக்கும் நடிகர்களுக்குமே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தன.
ஆதன்ஸின் பெண்மணி வேறு எதை அணிவாள்?
தன்மானமுள்ள எந்த ஆதன்ஸின் பெண்மணியும் தன்னுடைய ஹிமேடியான் அல்லது தளர்ந்த மேலாடையை அணியாமல் வீட்டைவிட்டு வெளியேற மாட்டாள். நாற்கட்ட வடிவான இந்தத் துண்டுத் துணி பல்வேறு விதங்களில் அணியப்படலாம்—சால்வையைப் போல தோளின்மீது போட்டுக்கொள்ளலாம், வலது தோளின்மீதும் இடது கையின் கீழும் தொங்கவிடப்படலாம் அல்லது வெயிலுக்குப் பாதுகாப்பாக தலைமீது இழுத்துவிடப்படலாம். பல்வேறு அளவுகளிலும்கூட தளர்ந்த மேலாடை கிடைக்கக்கூடியதாக இருந்தது, பெரிய அளவிலிருந்தவை தளர்ந்த மேலுடுப்பு போல குளிர்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. ஹிமேடியான் அநேகமாக அலங்காரக் கரைகளைக் கொண்டிருந்தன, மடிப்புகள் நேர்த்தியாக அமைய மடிப்பதும் தொங்கவிடுவதும் அதிகமான திறமையைத் தேவைப்படுத்தின.
முன்னால் பொத்தானைக் கொண்ட சிறிய சட்டையைப் போன்ற கைப்பாஸிஸ், சில சமயங்களில் ஹிமேடியானுக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டது. இன்று நாம் அறிந்திருப்பது போன்ற தொப்பிகள் பெண்களால் அணியப்படவில்லை, ஆனால் விசேஷமாக வெப்பமாக இருக்கும் நாளில், ஸ்கைடியான் அல்லது சிறு குடை எடுத்துச் செல்லப்படலாம். பணக்கார கிரேக்கப் பெண்கள் அடிக்கடி பெப்லோஸ் அல்லது கம்பளி ஆடையை அணிந்திருந்தனர். கிரேக்க வேதாகங்களும்கூட “முக்காடு” (கிரேக்கில் பெரிபோலையான்) பற்றிய குறிப்பை பவுலினுடைய எழுத்துக்களில் கொண்டிருக்கின்றன.—1 கொரிந்தியர் 11:15.
வீட்டுக்குள், பண்டைய கிரேக்கர்கள் சாதாரணமாக காலணிகளை அணியமாட்டார்கள், சில சமயங்களில் வெளியில் செல்லும்போதும் அணியமாட்டார்கள். ஹெஸியாட் என்ற கவியின் பிரகாரம், ஒட்டுக்கம்பள உள்வரியிட்ட மாட்டுத்தோலில் செய்யப்பட்ட செருப்பை நாட்டுப்புற மக்கள் அணிந்தனர். குட்டையாக இருந்த பெண்கள் சிலசமயங்களில் உயரமாக தோற்றமளிப்பதற்காக தக்கை உள்வைத்து செய்யப்பட்ட உயரமான காலணிகளை அணிந்தனர்.
பொன்னாபரணங்களை அணிதல்
பொன் தகடுகளால் செய்யப்பட்டு முக்கியமாக விலங்குகள் மற்றும் தாவரங்களின் உருவங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்கள் மிகவும் சாதாரணமாக இருந்தன. ஒன்றன்மீது ஒன்று சுழலும்படி அமைக்கப்பட்ட வளையங்களில் வரிசையாக அமைக்கப்பட்ட வண்டு வடிவத் தாயத்தும் வண்டுரு மணியும் மற்ற பிரபலமான ஆபரணங்களாக இருந்தன. காப்புகள்—சில சமயங்களில் ஓஃபிஸ் (சர்ப்பம்) அல்லது டிராக்கான் (வலுசர்ப்பம்) என்றழைக்கப்பட்டவை—விரும்பப்பட்ட மற்ற நகைகளாகும்.
நில அகழ்வாய்வுகள் கிரீடங்கள், பெரிய பதக்கங்கள், ஆரங்கள், கழுத்தணியில் கோர்க்கப்பட்ட தொங்கணிகள், மோதிரங்கள் இன்னும் மற்ற ஆபரணங்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. தனிப்பட்ட அலங்காரத்துக்கான இப்படிப்பட்ட பொருட்கள் பொதுவாக பொன், இரும்பு மற்றும் செம்பினாலும் எப்போதாவது வெள்ளியினாலும் செய்யப்பட்டிருந்தன, ஆனால் மணிகளோ கண்ணாடி அல்லது ஓரளவான விலையேறப்பெற்ற கற்களினால் செய்யப்பட்டிருந்தன.
காதணிகளும்கூட பிரபலமாக இருந்தன. சிலசமயங்களில் கண்ணியத்தின் வெளிப்புற சின்னமாக, அதிகாரத்தின் அடையாளமாக அல்லது பொருளாதார செழுமையின் பகட்டான வெளிக்காட்டாக இருந்தன. பெண்கள் சிறு வயதிலேயே காதுகுத்தியிருந்தனர்.
தலைமயிரைப் பின்னுதலில் பாணிகள்
தலைமயிர் பாணிகள் பண்டைய கிரேக்கில் அநேகமாயும் பல்வகைப்பட்டதாயும் இருந்தன. நடுவகிடு எடுத்து தலைமயிரை வண்ண ரிப்பன் கொண்டு பின்னால் கட்டுவது மிகவும் பிரபலமான பாணியாக இருந்தது. சில பெண்கள் தங்கள் தலைமயிரைச் சேர்த்து வளையமாகச் சுற்றி தங்கள் தலைக்கு மேல் ஒரு கொண்டையைப் போட்டனர். மற்றவர்கள் நெற்றியின்மீது தலைமயிரைக் குட்டையாக வெட்டி விட்டிருந்தனர். சில சமயங்களில் நெற்றியின்மீது ரிப்பன்கள் கட்டப்பட்டு சிறிய உலோக பொத்தானைக்கொண்டு முன்னால் அலங்கரிக்கப்பட்டது. செயற்கை சுருளை உண்டுபண்ணுவதற்கு இரும்பு சுருள் குறடுகள் பயன்படுத்தப்பட்டன. பண்டைய ஆதன்ஸில் பெண்கள் தங்கள் தலைமயிரைக் கருப்பாக்குவதற்கு சாயம் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதுகூட தெளிவாக தெரிகிறது. சுருள் முடியை உண்டுபண்ண “இயந்திர”ங்களைப் பயன்படுத்தி அராபிய தலைமயிர் சாயத்துக்காக தங்கள் கணவன்மாரின் செல்வங்களைச் சுரண்டிய அற்பமான பெண்களை வாக்குவன்மைக்குப் பெயர்பெற்றிருந்த லூஷன் கண்டனம் செய்தார்.
பண்டைய பணக்கார கிரேக்கப் பெண்கள் செய்துகொண்ட பிரபலமான தலைமயிர் அலங்காரங்கள் அளவுக்கு அதிகமாக விரிவாயும் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்வதாயும் இருந்தன. இப்படிப்பட்ட பாணிகள் ஒப்பனைசெய்வதில் கைதேர்ந்தவர் நீண்ட மணிநேரங்கள் ஆயத்தம் செய்வதையும், அதிகமான பணச்செலவை உட்படுத்துவதாயும், மிகவும் பகட்டாக அலங்காரம் செய்திருப்பவருக்குக் கவனத்தை ஈர்ப்பதாயும் இருந்தன.
தங்களையே அலங்கரித்துக்கொள்ளும் பெண்கள்
முக ஒப்பனைப் பொருட்களின் உபயோகம் பயணிகளாலும் வியாபாரிகளாலும் கிரேக்க நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மற்றொரு கிழக்கத்திய பழக்கமாகும். பொ.ச.மு. ஐந்தாவது நூற்றாண்டில், ஆதன்ஸ் நகர பெண்கள் தங்கள் முகங்களை வெள்ளையாக்குவதற்கு ஈயத்தைப் பயன்படுத்தினர். உதடுகளுக்குச் சிவப்பு சாயம் பூசப்பட்டது, கடற்பாசியிலிருந்து அல்லது தாவரங்களின் வேர்களிலிருந்து செய்யப்பட்ட ஒரு பொடியாக இது இருந்தது. புருவங்களுக்குப் புகைக்கரியால் அழுத்தம் கொடுக்கப்பட்டது, கண்ணிமைகள் கண் மையினால் (பொடியாக்கப்பட்ட அன்டிமனி சல்ஃபைடு) கருமையாக்கப்பட்டன, கண்ணிமை மயிர்களுக்குச் சாயமூட்டுவதற்கு கலவை மருந்து மாட்டு சாணத்திலிருந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் பிசின் கலவையிலிருந்து செய்யப்பட்டது.
பண்டைய கிரேக்க அரண்மனைகள், கல்லறைகள் மற்றும் குடியிருப்பிடங்களில் தொல்பொருள் ஆய்வு, பெண்களின் ஒப்பனையோடு சம்பந்தப்பட்ட ஏராளமான பொருட்களை வெளிப்படுத்தியிருக்கிறது. பல்வேறு வகைப்பட்ட கருவிகளிலும் பாத்திரங்களிலும், கண்ணாடிகள், சீப்புகள், கொக்கி வடிவ ஊசிகள், நேர்த்தியான சிறிய கத்திகள், கூந்தல் ஊசிகள், சவரக்கத்திகள், மற்றும் வாசனைப் பொருள், முகப்பூச்சு, மற்றும் நிறம் கொடுக்கும் வஸ்துக்களுக்கு மிகச் சிறிய ஜாடிகள் ஆகியவை உள்ளடங்கும்.
உண்மையான அழகு
பொதுவாக பேசுகையில் பண்டைய கிரேக்கிலிருந்த கேலிப் பேச்சு பேசுபவரின் பரிகாசத்தின் மத்தியிலும், பகட்டான பாணி ஒரு பெண்ணில் மெச்சத்தகுந்த பண்பாகவும் பண்டைய கிரேக்க பெண்மணி அதிகமான நேரம், முயற்சி, அக்கறை மற்றும் கவனத்தை அர்ப்பணித்த ஒன்றாகவும் இருந்தது.
கிறிஸ்தவப் பெண்ணுக்கு ஆவிக்குரிய பண்புகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை இது எளிதில் மறைத்துவிடக்கூடும். இதன் காரணமாகவே அப்போஸ்தலன் பேதுரு ஒரு பெண் உடுத்திக் கொள்ளக்கூடிய அதிக அழகான மற்றும் முக்கியமான உடை ‘தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றதாயிருக்கிற அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே,’ என்பதாக சரியாகவே வலியுறுத்துகிறார். (1 பேதுரு 3:3, 4) சுத்தமான, அடக்கமான உடையோடுகூட தனிப்பட்ட உள்ளான அலங்கரிப்பையுடைய ஒரு பெண் பழுதற்ற என்றுமுள்ள நாகரிக பாணியில் எப்பொழுதும் அழகாக உடுத்தியவளாய் இருப்பாள். பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதினார்: “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 2:9, 10.
[அடிக்குறிப்புகள்]
a கிட்டான் என்பது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 11 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன, இது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பில் (ஆங்கிலம்) “உள்ளாடை,” “வெளியில் தெரியும் ஆடைக்கு உள்ளிருக்கும் ஆடை” (Undergarment) என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டபிள்யூ. ஈ. வைன்ஸின் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ், புத்தகம் 1, பக்கம் 198, “உடை” என்ற தலைப்பின்கீழ் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் பெட்டி]
ஆபரணங்களும் மதமும்
அநேகமாக பண்டைய கிரேக்க ஆபரணங்களில் காணப்படும் உருவங்கள் மத இயல்புடையவையாக இருக்கின்றன. சிலவற்றில் ஆர்டிமிஸ் போன்ற பல்வேறு தேவர்களும் தேவதைகளும் ஹெர்குலஸ் போன்ற தெய்வமாக கருதப்பட்டவர்களுடைய படங்களும் வரையப்பட்ட பெரிய பதக்கங்களும் இருந்தன. கிரேக்க நாடு முழுவதிலுமாக கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் பொதுவான பரிசுகள் மத சடங்கு காட்சிகளையுடைய ஆபரணங்களாக இருந்தன. சரீரத்தின் மரணத்துக்குப் பின்பும் மனித ஆத்துமா தொடர்ந்து உயிர்வாழுகிறது என்ற புறமத நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், மரித்த நபரின் அருகிலேயே அநேக அலங்கார ஆபரணங்கள் வைக்கப்பட்டன.
[பக்கம் 23-ன் படம்]
பேன்த்தியன், தேவதை அதீனாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில்
மேலே: மார்பளவான ஆர்டிமிஸின் பொன் பதக்கம்
வலது: “ஹிமேடியான்” உடுத்திய ஒரு சிறுமி
கீழே வலது: பொன் மகுடம்
இடக்கோடி: ‘கிட்டானும்,’ ‘ஹிமேடியானும்’ உடுத்திய ஒரு தேவதை
இடது: பாம்பு தலைகள் கொண்ட பொன் காப்புகள்
[படத்திற்கான நன்றி]
Upper right: Acropolis Museum, Greece
All other photos: National Archaeological Museum, Athens
[பக்கம் 14-ன் படங்களுக்கான நன்றி]
Acropolis, Athens, Greece