உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 3/8 பக். 25-27
  • கருக்கலைப்பு—அதுதான் தீர்வா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கருக்கலைப்பு—அதுதான் தீர்வா?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் சிலர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர்
  • உணர்ச்சிப்பூர்வமான தழும்புகள்
  • ஆதரவைப் பெறுதல்
  • கருச்சிதைவு—அதற்கு என்ன விலை?
    விழித்தெழு!—1988
  • கருக்கலைப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    பைபிள் தரும் பதில்கள்
  • இந்த மதங்களிடம் விடை இருக்கிறதா?
    விழித்தெழு!—1993
  • கருக்கலைப்பு இரண்டகநிலை—ஆறு கோடி கொலைகள்தான் தீர்வா?
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 3/8 பக். 25-27

இளைஞர் கேட்கின்றனர்

கருக்கலைப்பு—அதுதான் தீர்வா?

“என்னுடைய கர்ப்பப் பரிசோதனை முடிவுகள் நான் கருவுற்றிருப்பதைக் காண்பித்தபோது, என்னுடைய காதலன் உடனடியாக நான் கருவைக் கலைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினான். அதற்குப் பணமும்கூட எனக்குத் தந்தான்,” என்பதாக ஜூடி நினைவுபடுத்திக் கூறுகிறாள். ஜூடி 17 வயதினளாக இருந்தாள்.a

பதினைந்து வயது நிரம்பிய மார்த்தா தான் கருவுற்றிருப்பதைக் கண்டுபிடித்தபோது கருக்கலைப்பு கிளினிக்கில் ஒரு ஆலோசகரிடம் பேசினாள். “அவர்கள் எனக்கு எல்லாவற்றையும் முழுவதுமாக விளக்கினார்கள்,” என்று மார்த்தா சொல்லுகிறாள். “நான் கருவைக் கலைத்துவிடலாம் அல்லது நான் விரும்பினால் அவர்கள் எனக்காக ஒரு ஸ்வீகார ஏஜென்ஸியை அல்லது தாய் சேய் நல விடுதியைக் கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்வதாக சொன்னார்கள்.”

ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வளரிளமைப்பருவ பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கருவுறுகின்றனர். அதில் கிறிஸ்தவப் பயிற்றுவிப்பைப் பெற்றிருந்தபோதிலும், “வேசிமார்க்கத்துக்கு” அல்லது திருமணத்துக்கு முன்பாக பாலுறவுக்கு ‘விலகியிருக்கும்படியான’ கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போன அநேக இளைஞரும் இருக்கின்றனர். (1 தெசலோனிக்கேயர் 4:3) இந்த ஒழுக்கயீனம் அனாவசியமாக அநேக துன்பங்களில் விளைவடைகிறது. ஆனால், இந்த இளைஞரில் அநேகர் தங்களுடைய நடத்தைப்போக்கைக்குறித்து மனம்வருந்தி தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் முறைகேடாக பிறந்த ஒரு குழந்தையைக் கொண்டிருக்க வேண்டிய அச்சமூட்டும் நிலையை எதிர்ப்படுகையில், கருக்கலைப்பு தங்களுடைய பிரச்சினைகளுக்கு எளிய ஒரு தீர்வாக இருக்குமா என்பதாக சிலர் யோசிக்கின்றனர். எப்படியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே ஏறக்குறைய ஐந்து லட்ச பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதைத் தெரிந்துகொள்கின்றனர். தேவையற்ற கர்ப்பத்துக்கு இது உண்மையில் மிகச் சிறந்த தீர்வாக இருக்குமா?

ஏன் சிலர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர்

ஒருசில சக்திவாய்ந்த, ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்ச்சிகளும்கூட செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்பது புரிந்துகொள்ளப்படத்தக்கதே. ஓர் இளம் பெண் தன்னுள் வளர்ந்துகொண்டிருக்கும் குழந்தைக்காக தாய்மை உணர்ச்சிகளைக் கொண்டிருப்பது மிகவும் சாத்தியமே, ஆனால் அவளுக்கு நியாயமான பயங்களும் கவலைகளும்கூட இருக்கலாம்.

உதாரணமாக பதினெட்டு வயது நிரம்பிய விக்கி, “கல்லூரிக்குச் சென்று ஒரு முதுநிலைப் பட்டத்தைக்கூட பெற்றுக்கொள்ள விரும்பினாள்.” அவளுடைய மனதில், ஒரு குழந்தையைக் கொண்டிருப்பது அவளுடைய திட்டங்களோடு குறுக்கிடுவதாக இருக்கும். (பருவ வயது ஆங்கிலப் பத்திரிகை, மார்ச் 1992) மார்த்தாவும் அதேவிதமாக முடிவுசெய்தாள்: “நீ ஒரு அம்மாவாக இருந்தால், உன் பிள்ளையோடு வீட்டில் இருக்கவேண்டியதுதான், இனிமேலும் பள்ளிக்குச் செல்ல முடியாது. அதற்கு நான் தயாராக இல்லை.” ஆய்வு ஒன்றின்படி, கருக்கலைப்பு செய்துகொள்ளும் பருவ வயதினரில் 87 சதவீதத்தினர் ஒரு குழந்தையைக் கொண்டிருப்பது அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒரு விதமாக அவர்களுடைய வாழ்க்கையை வெகுவாக மாற்றிவிடும் என்பதாக பயப்படுகிறார்கள்.

பொருளாதாரக் கஷ்டங்களும் ஒற்றைப் பெற்றோரின் உத்தரவாதங்களைக் கையாளுவதற்கு ஒருவர் திறமையற்றவராக இருக்கக்கூடும் என்ற பயமும்கூட அநேகர் கருக்கலைப்பைத் தெரிவுசெய்வதற்கான பொதுவான காரணங்களாகும். விக்கி இவ்விதமாக அதைச் சொல்கிறாள்: “பெற்றோர் மணவிலக்கு செய்துகொண்ட ஒரு குடும்பத்திலிருந்து நான் வந்தேன், என்னுடைய அம்மா தன்னுடைய மூன்று பிள்ளைகளாகிய எங்களைத் தனியாக வளர்த்தார்கள். அவர்கள் போராடுவதை நான் கவனித்திருக்கிறேன் . . . கடைசியாக என்னுடைய அம்மாவைப் போலவே நானும் ஒற்றைப் பெற்றோராவதை என்னால் கற்பனைசெய்து பார்க்க முடிகிறது.”

மற்றவர்களிடமிருந்து, விசேஷமாக காதலனிடமிருந்து வரும் அழுத்தங்கள் கர்ப்பத்தைக் கலைத்துவிட ஒருவரைக் கட்டாயப்படுத்தக்கூடும். ஜூடியின் காதலன் இறுதியாக அவளை இவ்வாறு எச்சரித்தான்: “நீ கருவைக் கலைக்காவிட்டால், உன்னை நான் மறுபடியும் ஒருபோதும் பார்க்க விரும்பமாட்டேன்.” நான்ஸிக்கு அழுத்தம் அவளுடைய அம்மாவிடமிருந்தும் மற்ற உறவினர்களிடமிருந்தும் வந்தது.

கருக்கலைப்பு உண்மையில் ஒரு சிசுவைக் கொலைசெய்வதை உட்படுத்துவதில்லை என்ற பிரபலமான கருத்தும்கூட சக்திவாய்ந்த செல்வாக்கைச் செலுத்துகிறது. விக்கி சொல்கிறாள்: “அதை ஒரு குழந்தையாக நினைக்க நான் என்னை அனுமதிக்கமாட்டேன். . . . கர்ப்பத்தின் ஐந்தாவது வாரத்தில், கர்ப்பத்திலுள்ள சிசு உங்கள் சுண்டுவிரலிலுள்ள நகத்தைவிட சிறியதாக இருப்பதாக நான் வாசிக்கிறேன். நான் அந்தக் கருத்தை மிகவும் உறுதியாக பற்றிக்கொண்டிருக்கிறேன். அது சுண்டுவிரலிலுள்ள நகத்தின் அளவாக மாத்திரமே இருக்கிறதென்றால், அது உண்மையில் ஒரு குழந்தை அல்ல. நான் கருச்சிதைவைச் செய்துகொள்ள செயல்படுவதற்காக அதை என்னுடைய மனதில் மிகவும் உண்மையானதாக இல்லாதது போல இருக்கச் செய்ய முயற்சித்தேன்.”

குறைந்தபட்சம் தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள தேசங்களில் சிலர் கருக்கலைப்பு—கருவுற்றிருக்கும் வளரிளமைப் பருவத்திலுள்ள ஒருவருக்கு மகப்பேற்றைவிட பாதுகாப்பானது என்பதாக சொல்லுகிறார்கள். அப்படியென்றால் அனைத்தையும் சிந்தித்துப் பார்க்கையில், கருக்கலைப்பு விரும்பத்தக்கதாக தோன்றலாம். என்றபோதிலும், கருக்கலைப்பைத் தெரிந்துகொள்ளும் அநேகர் பின்னால் வருந்துவதை உண்மைகள் காண்பிக்கின்றன. ஒரு பெண் சொல்கிறாள்: “எனக்கு 20 வயதாக இருந்தபோது நான் கருக்கலைப்பு செய்துகொண்டேன். இப்பொழுது எனக்கு 34 வயதாகிறது, நான் செய்த காரியத்துக்கு ஈடுசெய்வது எனக்குக் கடினமாக உள்ளது. நான் என்னுடைய குழந்தையைக் கொண்டிருக்க விரும்பினேன், ஆனால் என்னுடைய காதலன் அதை விரும்பவில்லை. நான் இன்னும் உணர்ச்சிப்பூர்வமான காயத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்; மீதமுள்ள உங்கள் வாழ்நாள் முழுவதிலும் அந்த வேதனை உங்களோடு நிலைத்திருக்கிறது.”

உணர்ச்சிப்பூர்வமான தழும்புகள்

எளிமையான ஒரு பரிகாரமாக இருப்பதற்கு பதிலாக கருக்கலைப்பு ஒருவருடைய கஷ்டங்களை மிக மோசமானதாக்கிவிடக்கூடும். குறைந்தபட்சம், அது, சரி மற்றும் தவறு என்பதற்குரிய நம்முடைய உள்ளான உணர்வுகளுக்கு—மனிதருக்குள் கடவுள் வைத்திருக்கும் மனச்சாட்சிக்கு எதிராகச் செயல்படுகிறது. (ரோமர் 2:15) மேலுமாக, தன்னுள் வளர்ந்துகொண்டிருக்கும் சின்னஞ்சிறு உயிருக்கு உருக்கமான இரக்கத்தைக் காண்பிக்காதபடி கருக்கலைப்பு ஒரு இளம் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறது. (1 யோவான் 3:17-ஐ ஒப்பிடுக.) எவ்வளவு ஊக்கமிழக்கச்செய்கிறது!

மார்த்தா சொல்கிறாள்: “ஒருசில வாரங்களுக்குப் [கருக்கலைப்புக்குப் பின்] பின்புதானே குற்றவுணர்வுள்ளவளாகவும் நான் செய்திருந்தக் காரியத்தைக்குறித்து வெட்கப்படவும் ஆரம்பித்தேன்.” குழந்தைப் பிறந்திருக்கக்கூடிய அந்தப் பிப்ரவரி மாதம் வந்தபோது நிலைமை இன்னும் கடினமாக ஆனது. எலியாஸா சொல்கிறாள்: “பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் கருக்கலைப்பு செய்துகொண்டேன். அதைத் தொடர்ந்து நான் கவலைக்கிடமாக மனச்சோர்வுகளை அனுபவித்து பல முறை கிளினிக்கில் சிகிச்சைபெற வேண்டியதாயிற்று. நான் தற்கொலை செய்துகொள்ளவும்கூட விரும்பினேன்.”

உண்மைதான், எல்லா இளம் பெண்களும் இவ்விதமாக பிரதிபலிப்பது கிடையாது. கருப்பையிலுள்ள சிசு ஒரு மனித உயிர் அல்ல என்பதாக உண்மையிலேயே அநேகர் நம்புகின்றனர். ஆனால் ‘உயிரின் ஊற்றுமூலராகிய’ படைப்பாளர் இதைக் குறித்து என்ன சொல்கிறார்? (சங்கீதம் 36:9) யெகோவா தேவனுக்கு, கருப்பையினுள் வளர்ந்துகொண்டிருக்கும் இன்னும் பிறவாத குழந்தை வெறும் கருக்குரிய திசுக்களைக் காட்டிலும் மிக அதிகமாய் இருக்கிறது என்பதை பைபிள் தெளிவாய் காண்பிக்கிறது. தாவீது ராஜாவை பின்வருமாறு எழுதும்படியாக அவர் ஏவினார்: ‘என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; அவைகள் அனைத்தும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.’ (சங்கீதம் 139:16) இவ்விதமாக ஒரு கருவைக்கூட தனி ஒரு நபராக, உயிருள்ள மனிதனாக படைப்பாளர் கருதுகிறார். இதன் காரணமாகவே, பிறவாத குழந்தைக்குச் சேதமுண்டாக்கும் ஒரு நபர் அதற்கு பொறுப்புள்ளவராவார் என்பதாக அவர் சொன்னார். (யாத்திராகமம் 21:22, 23) ஆம், கடவுளைப் பொறுத்தவரையில், பிறவாத குழந்தையைக் கொலைசெய்வது ஒரு மனித உயிரை எடுப்பதாக உள்ளது. ஆகவே, கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிற ஒரு பெண்—அவள்மீது கொண்டுவரப்படும் அழுத்தங்கள் என்னவாக இருந்தாலும்—கருக்கலைப்பை ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தெரிவாக கருதமுடியாது.b

ஆதரவைப் பெறுதல்

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஜூடி தன் குழந்தையை அழிக்காமல் இருக்க தெரிந்துகொண்டாள். அவள் சொல்கிறாள்: “என்னுடைய அக்கா கண்டுபிடித்துவிட்டாள், ஆரம்பத்திலிருந்தே, குறிப்பாக உணர்ச்சிப்பூர்வமாக ஆதரவாய் இருந்தாள். குழந்தைப் பிறந்தப் பின்பும்கூட தொடர்ந்து எனக்கு ஆதரவளிப்பதாக அவள் சொன்னாள். என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் சரியானது என்பதாக நான் நினைத்ததைச் செய்வதற்கு எனக்குத் தேவைப்பட்டதெல்லாம் இதுவே. நான் என் யோசனைப்படி செயல்பட்டு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.” அது ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தன்னுடைய பதினெட்டு வயது மகனைப் பார்த்து ஜூடி சொல்கிறாள்: “கருக்கலைப்புச் செய்துகொண்டிருந்தால், அது என்னுடைய வாழ்க்கையில் நான் செய்திருக்கக்கூடிய மிகப் பெரிய தவறாக இருந்திருக்கும்.”

நட்டீஷா என்ற பெயருடைய ஒரு இளம் பெண் அதேவிதமாகவே சொல்கிறாள்: “ஐந்து வருடங்களுக்கு முன்பாக என்னுடைய முறை வரும்வரை ஒரு கருக்கலைப்பு கிளினிக்கில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். என்னுடைய முறை வந்தபோது, மருத்துவரைப் பார்ப்பதற்குப் பதிலாக நான் இரண்டாவது தடவையாக மறுபடியும் அதைப் பற்றி யோசித்து கிளினிக்கைவிட்டு வெளியேறினேன். இப்பொழுது எனக்கு நான்கு வயதில் ஒரு அருமையான மகன் இருக்கிறான், மற்றொரு குழந்தை பிறக்கப்போகிறது, மேலும் நான் மிகவும் அன்பான ஒரு தகப்பனை திருமணம் செய்திருக்கிறேன்.”

முறைகேடான ஒரு கர்ப்பத்தை எவராவது எதிர்ப்படுகையில், அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. காரியங்கள் மிக மோசமாகத் தோன்றினாலும், நிலைமை முற்றிலும் நம்பிக்கையற்றதாக இல்லை. ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாகவே ஆதரவும் முதிர்ச்சியுள்ள வழிநடத்துதலும் தேவையாக இருக்கிறது. விசேஷமாக அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பார்களேயானால் தங்கள் பெற்றோரிடம், தங்கள் இருதயத்தைக் கொடுப்பது நல்ல ஒரு ஆரம்பமாகும். (நீதிமொழிகள் 23:26) உண்மைதான், அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக புண்படுத்தப்பட்டவர்களாக உணர்ந்து முதலில் கோபப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடைசியில், அவர்கள் உதவிசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக உணருவர். உதாரணமாக பெற்றோரின் கவனிப்புக்கு ஏற்பாடு செய்யக்கூடும். தகுதியுள்ளவர்களாக இருக்கிறவர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த அரசாங்க திட்டங்களையும் அனுகூலப்படுத்திக் கொள்வதற்கும் அவர்கள் உதவக்கூடும். அதிக முக்கியமாக, தவறிழைத்தவர்களுக்குத் தேவைப்படும் ஆவிக்குரிய உதவியை சபை மூப்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள அவர்களை உற்சாகப்படுத்தக்கூடும்.—யாக்கோபு 5:14, 15.

திருமணம் ஆகாத சில தாய்மார்கள், குழந்தைக்குத் தங்களால் மிகச் சிறந்த கவனிப்பைக் கொடுக்கமுடியாது என்று நினைத்து சுவீகாரத்துக்காக தங்கள் குழந்தைகளைக் கொடுப்பதைத் தெரிவுசெய்கின்றனர். குழந்தையின் உயிரைக் கொல்வதற்குப் பதிலாக சுவீகாரம் என்பது நிச்சயமாகவே மேலானதாக இருந்தாலும், ‘அவனுக்கு அல்லது அவளுக்குரியவர்களைக் கவனிக்க’ பெற்றோரைக் கடவுள் பொறுப்புள்ளவராக வைக்கிறார். (1 தீமோத்தேயு 5:8) ஒற்றைப் பெற்றோர் தன் குழந்தைக்குப் பொருள் சம்பந்தமாக மிகச் சிறந்ததைக் கொடுக்க முடியாவிட்டாலும், அதிக முக்கியமான ஒன்றை அவளால் கொடுக்கமுடியும்—அன்பு. (நீதிமொழிகள் 15:17) ஆகவே பெரும்பாலான சூழ்நிலைமைகளின்கீழ், திருமணமாகாத தாய் தன்னுடைய குழந்தையை தானே வளர்ப்பதே மேலானதாக இருக்கும்.

ஒரு சிறு குழந்தையை வளர்க்கும் அந்த வேலையைப் பற்றியும் வாழ்க்கைப் பாணியில் செய்யப்படவேண்டிய கடுமையான மாற்றங்களைப் பற்றியும் என்ன? இவை அனைத்தும் மலைப்பாகத் தோன்றலாம். இருப்பினும், பைபிள் இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கு மக்களுக்கு உதவக்கூடிய நடைமுறையான புத்திமதியை அளிக்கிறது. மனந்திரும்புகிற திருமணமாகாத தாய்மார்கள், முழுவதும் கடவுளுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்ட ஆவிக்குரிய உதவியிலிருந்தும்கூட பயனடையலாம். ஆம், இவர்கள் அன்பான ஆதரவோடும் சரியான வழிநடத்துதலோடும் தங்கள் சூழ்நிலையில் செய்ய முடிந்த சிறந்த காரியத்தைச் செய்யலாம்.c கருக்கலைப்பு உண்மையிலேயே தீர்வாக இல்லை!

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b எவராவது கடந்த காலத்தில் தவறுசெய்து பிறவாத உயிரைக் கலைத்திருந்தால், யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு எந்த நம்பிக்கையுமே இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை. தவறுசெய்து மனந்திரும்புகிறவர்களுக்கு யெகோவா ஆதரவாய் இருந்து ‘பெருத்த அளவில்’ மன்னிப்பதைக் குறித்து இப்படிப்பட்டவர்கள் நம்பிக்கையோடிருக்கலாம். (ஏசாயா 55:7, NW) ஒருவேளை உணர்ச்சிப்பூர்வமான தழும்பு நிலைத்திருந்தாலும், சங்கீதக்காரன் இவ்விதமாக நம்பிக்கையளிக்கிறார்: “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.”—சங்கீதம் 103:12.

c செப்டம்பர் 15, 1980 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தில், “ஒற்றைப் பெற்றோர் இன்றைய உலகில் சமாளிக்கின்றனர்” என்பதைக் காண்க. மற்றும் அக்டோபர் 8, 1994 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . மணமாகா தாய்மார்கள் நிலைமையை நன்கு சமாளிப்பது எப்படி?” என்பதையும் காண்க.

[பக்கம் 26-ன் படம்]

கருக்கலைப்பு செய்துகொள்ளும்படியாக பெண்பிள்ளைகள்மீது அழுத்தத்தைக்கொண்டு வர காதலர்கள் அடிக்கடி முயற்சிக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்