மருத்துவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்குமிடையே உறவுகளை மேம்படுத்த கருத்தரங்குகள்
கிறிஸ்தவர்கள் எந்த வழிவகையின் மூலமாகவும் இரத்தத்தை உட்கொள்வதைக் கடவுளுடைய சட்டம் தடைசெய்கிறது. (அப்போஸ்தலர் 15:28, 29) அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிவது சில சமயங்களில் தவறாக புரிந்துகொள்ளப்படுவதற்கு வழிநடத்தியிருக்கிறது, இதனால் அவர்களுடைய உடல்நலப் பிரச்சினைகளுக்குக் கிடைக்கக்கூடியதும் திறம்பட்டதுமான மாற்று மருத்துவ கவனிப்பு கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
மேம்பட்ட புரிந்துகொள்ளுதலை நிலைநாட்டுவதற்கும் இரத்தத்தைப் பயன்படுத்தாமல் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களுக்கு உதவிசெய்வதற்கும் யெகோவாவின் சாட்சிகள் உபயோகமுள்ள தொடர்பு சேவைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களில் (HLCs) சேவைசெய்வதற்காக தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சி மூப்பர்களைப் பயிற்றுவிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழு நியூ யார்க்கிலுள்ள புரூக்ளினில் மருத்துவமனை தகவல் சேவைகளை (HIS) நிறுவியிருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சி செய்யப்பட்டு, முடிவுகள் HLC-களுக்குக் கருத்தரங்குகளின் வாயிலாக அளிக்கப்படுகின்றன. இந்தத் தகவல், முறையே, மருத்துவர்களுக்கும் உடல்நல பராமரிப்பு மையங்களுக்கும் அளிக்கப்படுகிறது. மேலும், எதிர்ப்பைத் தவிர்க்கும் முயற்சியில் அனுபவமுள்ள மற்ற மருத்துவர்களோடு கூடி கலந்துபேசுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படலாம்.
இந்தத் திட்டம் வெற்றிபெற்றிருக்கிறதா? அளிக்கப்பட்ட தகவல் உண்மையிலேயே பயனுள்ளதாக இருந்திருக்கிறதா? மருத்துவர்கள் எவ்விதமாக இதற்குப் பிரதிபலித்திருக்கின்றனர்? அண்மையில் HLC கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட ஒரு மருத்துவர் சொன்ன கருத்துக்கள் தகவலளிப்பதாகவும் உறுதியளிப்பதாகவும் இருக்கின்றன.
“இந்தக் கருத்துக்கள் வெளிப்படையானவையாகவும் பயனுள்ளவையாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நம்புகிறேன்.
“நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை காரியாலயத்திலிருந்து வந்த மருத்துவமனை தகவல் சேவைகளில் பணிபுரியும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தளித்த இரண்டாவது மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழு கருத்தரங்கில் ஆஜராகும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டது ஒரு சிலாக்கியமாக இருந்தது என்பதை முதலாவது உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கூட்டம் என்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அதையும் விஞ்சிவிட்டது. அக்கிராசனரின் ஆரம்ப குறிப்புகள் இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கான பொதுவான போக்கை ஸ்தாபிப்பதாக இருந்தது. நோய்வாய்ப்பட்டிருக்கும் சாட்சிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களுடைய தேவைகளுக்குப் பிரதிபலிக்கும் வெறும் ஒரு இயந்திர ரீதியான ஏற்பாடாக HLC இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார். பொது மக்களும், மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகிகளும் மற்ற மருத்துவ சம்பந்தப்பட்ட ஆட்களும் சாட்சிகளைப்பற்றி பொதுவாக கொண்டிருக்கும் அநேக கட்டுக்கதைகளை அம்பலப்படுத்துவதற்கு குழு பொன்னான ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
“யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய மருத்துவ நம்பிக்கைகளில், கிறிஸ்டியன் சையன்டிஸ்ட்ஸ் (Christian Scientists) போல நிச்சயமாகவே ஒருக்காலும் இல்லை என்பதைக் கற்றறிவது இவர்களில் அநேகருக்கு வியப்பூட்டும் செய்தியாக இருக்கிறது. சாட்சிகள் ‘மரிப்பதற்கான உரிமையை’ அப்பியாசிப்பதோ அல்லது தங்களை உயிர்த்தியாகிகளின் ஸ்தானத்தில் வைப்பதற்கு முயற்சி செய்வதோ இல்லை. அதே சமயத்தில் இரத்தம் பற்றிய விஷயம் அமைப்பினுடைய கருத்தாக இல்லாமல் இருதயப்பூர்வமான தனிப்பட்ட ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள் HLC-யின் கல்வி சம்பந்தப்பட்ட நோக்கங்களை வலியுறுத்துவதாக உள்ளன. ஆம், அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக தோன்றினாலும், மருத்துவர்களும்கூட கற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றனர், இரத்தமில்லாத மாற்று மருத்துவம் குறித்து கற்றுக்கொள்ள அவர்களுக்கு அதிகமுண்டு. இந்த ஏற்பாடு அளித்த ஆராய்ச்சியின் செயல் எல்லையும் ஆழமும் என்னை இடையறாது ஆச்சரியப்படச் செய்கிறது, இதில் பெரும்பகுதி எனக்குப் புதியது. HLC-யின் கல்வி சம்பந்தப்பட்ட கடமைகள் அதோடு முடிவடைவதில்லை. அவை மருத்துவ நிர்வாகிகள், சமூக பணியாளர்கள், சட்டப்பூர்வமான மற்றும் நீதித்துறையிலுள்ளவர்கள் வரைகூட செல்கின்றன.
“சாட்சியின் நம்பிக்கைகளோடு ஒத்துழைக்கக்கூடிய மருத்துவர்களைக் கண்டுபிடித்து, தொடர்புகொண்டு அவர்களுடைய உதவியைப் பட்டியலில் சேர்த்திடுவதற்கு குழுக்கள் அசாதாரணமான முயற்சிகளை மேற்கொள்கின்றன. மருத்துவமனைகள், உடல்நல பராமரிப்பாளர்கள், வக்கீல்கள், மற்றும் நீதிபதிகளோடும்கூட HLC நடைமுறையான உறவுகளை உருவாக்கிக்கொள்வதால் இது நிச்சயமாகவே மருத்துவ சமுதாயத்துக்கும் அப்பால் செல்கிறது. ஒருவேளை சொல்லப்பட வேண்டிய அதிக முக்கியமான செய்தி என்னவென்றால், யெகோவாவின் சாட்சிகள் நியாயத்தன்மையுள்ள ஆட்கள், அவர்கள் வெறியர்கள் அல்லர், இரத்தத்துக்குப் பதிலாக வெறுமனே ஏற்கத்தகுந்த மாற்றுவகைச் சிகிச்சையையே கேட்கின்றனர். . . . இரத்தத்தை உபயோகிப்பதில் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் உள்ளன, இந்த ஆபத்துக்களை வெளிப்படுத்தி இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் சாத்தியமான அபாயங்களைக் குறித்து மருத்துவ சமுதாயத்துக்கு வலியுறுத்தும் வேலையை HLC நிச்சயமாகவே நிறைவேற்றுகிறது.
“மருத்துவமனை தகவல் சேவைகளும் உவாட்ச் டவர் சொஸைட்டியும் HLC-க்கு அளிக்கும் தகவல் என்னை எப்போதும் ஆச்சரியங்கொள்ளச் செய்கிறது. ஆனால் ஒருவருக்காக வேலைசெய்யும் அனுபவமுள்ள நம்பகமான எந்த நபரும் உறுதிசெய்யக்கூடிய விதமாகவே, சரியான கருவிகள் தரப்படுகையில் உண்மையில் எந்த ஒரு வேலையையும் செய்துமுடிக்க முடியும். . . . உண்மையில் எந்த ஒரு மருத்துவ அவசர நிலைமைக்கும் வேகமாகவும் திறம்படவும் பிரதிபலிப்பதற்காக இப்பொழுது செயல்படும் ஏற்பாடுகளைக் குறித்து கேட்பது மனதைக் கவருவதாக இருந்தது. ஒவ்வொரு HLC உறுப்பினரும் அத்தியாவசியமான விஞ்ஞான ரீதியிலான தகவலை முயன்றுபெறவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் மனநிலையை வேகமாக மதிப்பிடவும், அவசர நிலைமையின் அளவினை திருத்தமாக மதிப்பிட்டறியவும், இரத்தமேற்றுதலுக்கு நீதிமன்ற உத்தரவு போன்ற மருத்துவமனையின் சட்டப்பூர்வமான நடவடிக்கையின் சாத்தியமான அச்சுறுத்தலை சீர்தூக்கிப் பார்க்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்.
“சாட்சி நோயாளிகளின் தேவைகளையும் விருப்பங்களையும் தெளிவுபடுத்தும் விதங்களையும், விசுவாசத்தில் இல்லாத உறவினர்களை எவ்வாறு கையாளுவது என்பதையும், எவ்விதமாக மருத்துவர்களையும்கூட நீக்கிவிட்டு சாட்சிகளின் தேவைகளுக்கு அதிகமாக பிரதிபலிக்கக்கூடிய மாற்று மருத்துவ வசதிகளுக்கு நோயாளியை இடமாற்றுவது என்பதையும் பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்தோம். செய்தித்துறையோடு HLC-யின் பரஸ்பர செயல்விளைவு உயர்த்திக் காண்பிக்கப்பட்டது, சாட்சிகள் வெறும் இரத்தத்தை மாத்திரமே அன்றி எல்லா மருத்துவ கவனிப்பையும் நிராகரிப்பதில்லை என்ற முக்கிய குறிப்பை மறுபடியுமாக வலியுறுத்தி வழிகாட்டும் குறிப்புகள் அளிக்கப்பட்டன. இது ஏறத்தாழ, பக்தியுள்ள கத்தோலிக்கர் ஒருவர் எல்லா அறுவை சிகிச்சையையும் அல்ல, ஆனால் கருக்கலைப்பை மாத்திரமே நிராகரிப்பதற்கு சமமாக கருதப்படலாம்.
“தொடர்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் மருத்துவமனைகளாலும் மருத்துவர்களாலும், எப்போதாவது சாட்சிகளாலும்கூட பொதுவாக எழுப்பப்படும் அநேக கேள்விகளைக் கையாளுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றனர். இது நோய்காப்புப் புரதங்கள் அல்லது அல்பியூமினை ஏற்றுக்கொள்வது, இரத்தத்திலிருந்து மிகச் சிறிய மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்கும் உத்தி அல்லது இரத்தச் செறிவு மருத்துவமுறை, புற உடல் சார்ந்த திரவ ஓட்டம், செல் சேமிப்பு அல்லது ஹீமோடையாலிஸிஸ் போன்ற மருத்துவ உத்திகளின் பயன்பாடு போன்ற விஷயங்களை உட்படுத்தலாம்.
“சாட்சிகளையும் அவர்களுடைய மத நம்பிக்கைகளையும் பாதுகாப்பதற்குச் சட்டத்தைப் புரிந்துகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் உட்பட்டிருக்கும் சட்ட வரம்புக்குட்பட்ட சலுகைகளைப் பற்றிய மனதைக் கவரும் கலந்தாலோசிப்பை நான் அனுபவித்து மகிழ்ந்தேன். மருத்துவம் சம்பந்தமாக தன் முடிவுரிமைக்குச் சாட்சிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதாரமாக இருக்கும் நீதித்துறையின் தீர்மானங்கள் சுவாரசியமான கலந்துரையாடலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. சிலருக்கு, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவின் வேலை தேவைக்கு மேற்பட்டதாக, அவசியமற்றதாகக்கூட தோன்றலாம்; ஆனால் உண்மையில், இந்த ஆதரவு சேவைகளின் பின்னல்வலை அத்தியாவசியமானது. மருத்துவமனையின் சூழ்நிலை பற்றியும் ஒருவேளை இரத்தம் இல்லாத அநேக மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளைப் பற்றியும்கூட அறியாதிருக்கும் சாட்சி நோயாளிகளை நான் ஒவ்வொரு நாளும் சந்திக்கிறேன். மேலுமாக, வெகு சிலரே குழு அறிந்திருக்கும் ஒத்துழைக்க மனமுள்ள மருத்துவர்களின் சிகிச்சைபற்றியும் அல்லது இரத்தமில்லாத மருத்துவ கவனிப்பை நாடும்போது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் மற்றும் எதிர்ப்படும் குறிப்பிட்ட சட்ட உரிமைகள், பொறுப்புடைமைகளைப் பற்றியும் உண்மையில் நம்மில் அநேகருக்குத் தெரிந்திருக்க முடியாது.
“மருத்துவமனை தகவல் சேவைகளின் முயற்சிகளைப் பாராட்ட ஒரு கணம் விஷயத்தை விட்டு விலகிச்செல்ல விரும்புகிறேன். குழாய்களை இருதயத்திற்குள் செலுத்தும் மருத்துவமுறையில் நிபுணராக, என்னுடைய துறைக்கு நேரடியாக பொருத்தமுள்ள அநேக பத்திரிகைகளை வாசிப்பதற்கு எனக்கு நேரமில்லாதிருப்பதைக் காண்கிறேன். அறுவை மருத்துவம் தேவைப்படாத நோய்களின் சிகிச்சை முறைகளைப்பற்றிய விரிவான மருத்துவத்தைக் குறித்து வாசிப்பதைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மருத்துவ இலக்கியங்கள் என்ற முழு வைக்கோற்போர் முழுவதிலும் அலசிப்பார்த்து என்னுடைய நோயாளிகளுக்கு இரத்தமில்லாமல் சிகிச்சையளிப்பதில் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு மிகவும் திட்டவட்டமான பரிகாரங்களை மிக நுட்பமாக குறிப்பிடும் அந்த குறிப்புரைகளைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லாத ஒரு பணியாக இருக்கும். மறுபடியுமாக பத்திரிகை கட்டுரைகள் என்ற பழமொழிபோன்ற வைக்கோற்போரிலிருந்து பொருத்தமான ஆய்வுக்கட்டுரை என்ற ஊசியை எடுப்பதற்கு ஒரு காந்தக்கல்லை அளிப்பதன் மூலம் சங்கம் எனக்கு உதவிசெய்ய முன்வருகிறது.
“புரூக்ளினிலிருந்து வந்துகொண்டே இருக்கும் புத்தம் புதிய தகவல், என்னுடைய தொழிலைப் பாதிக்கக்கூடிய அதிக அண்மைக்கால வளர்ச்சியினைப் பற்றி தகவலறிந்தவனாக இருக்க எனக்கு உதவிசெய்கிறது. இவை நான் பழக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது தொலைத்தொடர்பு அமைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய மருத்துவப் பத்திரிகைகளிலிருந்து பெறப்பட்ட எந்தச் சுருக்கத்தையும்விட அதிக முழுமையாகவும் வலிமையுடன் தூண்டுவிப்பதாகவும் இருக்கின்றன. நிச்சயமாகவே, உயிர்கள் ஆபத்தில் இருப்பதைக் கருதுகையில் அது அவ்விதமாகவே இருக்கவேண்டும்.”—டாக்டர் ஸ்டீபன் இ. போப், அ.ஐ.மா.-விலுள்ள கலிபோர்னியாவின் சான் பிரான்ஸிஸ்கோ பே பகுதியில் ஒரு இருதய நோய் நிபுணர்.
[பக்கம் 20-ன் பெட்டி]
• ஐக்கிய மாகாணங்களில், சுமார் 18,000 மருத்துவர்கள் இரத்தமில்லாத மருத்துவ கவனிப்பை யெகோவாவின் சாட்சிகளுக்கு அளிப்பதன் மூலம் ஒத்துழைக்க விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர். உலகம் முழுவதிலும் எண்ணிக்கை 50,000 ஆகும்.
• ஐக்கிய மாகாணங்களில், இரத்தமில்லாத மருத்துவமும் அறுவைசிகிச்சையும் 45 மருத்துவ மையங்களில் கிடைக்கின்றன. உலகம் முழுவதிலும் எண்ணிக்கை 80 ஆகும்.