‘எறும்பினிடத்துக்குப் போ’
“அசாதாரணமான எறும்புகள்”—அது ஒருசில ஆண்டுகளுக்கு முன்பாக யெகோவாவின் சாட்சிகளுடைய விரைவாக கட்டப்பட்ட ராஜ்ய மன்றத்தின் சம்பந்தமாக தோன்றிய ஒரு செய்தித்தாள் கட்டுரையின் விநோதமான தலைப்பாக இருந்தது. இந்தத் தலைப்பைத் தூண்டியது என்ன? வானிலிருந்து எடுக்கப்பட்ட, அப்படிப்பட்ட ஒரு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் புகைப்படத்தை நீங்கள் காணும்போது அதைப் புரிந்துகொள்வது கடினமாக இல்லை. அதே செய்தித்தாளில் ஒரு உபதலைப்பு விளக்கியது: “கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஐந்நூறு யெகோவாவின் சாட்சிகள்—கனவில் காணும் ஒரு எறும்புப்புற்று.”
ஒருவேளை நிருபர் உணர்ந்ததற்கும் மேலாக ஒப்புவமை பொருத்தமாக இருக்கிறது. உண்மைதான், தூரத்தில் மேலிருந்து பார்க்கையில், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தைச் சுற்றி ஒருசில நூறு பேர் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருப்பது எறும்புப்புற்றின்மீது எறும்புகளுக்கு ஒத்திருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் தோற்றத்தில் காணப்படும் ஒற்றுமை மேலோட்டமாக இருப்பதைவிட அதிகமாக இருக்கிறது. ஏன் இப்படி? யெகோவாவின் சாட்சிகள் நீதிமொழிகள் 6:6-லுள்ள பைபிள் புத்திமதியைப் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்கின்றனர். அது சொல்வதாவது: “நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.” எறும்புகளைக் கவனிப்பதன் மூலம் ஒருவர் எவ்விதமாக ஞானவானாக முடியும்?
ஒரு காரியமானது, எறும்புகள் அதிகத்தை சாதிக்கின்றன. பைபிள் சொற்களஞ்சியமாகிய வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “எதிர்காலத்திற்காக ஆயத்தம்செய்யும் அதன் இயல்புணர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் விடா முயற்சியும் திடதீர்மானமும்கூட அப்படி இருக்கிறது. அநேகமாக அவை தங்களுடைய சொந்த எடையைவிட இரண்டு மடங்கு அதிகமான எடையுள்ள பொருட்களைச் சுமந்து செல்கையில் அல்லது இறுகப்பற்றிக்கொண்டு இழுத்துவருகையில் அந்தக் குறிப்பிட்ட வேலையை செய்துமுடிப்பதற்காக சாத்தியமான அனைத்தையும் செய்து, அவை விழுந்தாலும், சரிந்தாலும் அல்லது ஏதோவொரு செங்குத்தான பாறையில் உருண்டு விழுந்தாலும் பின்வாங்க மறுத்துவிடுகின்றன.”a
அதேவிதமாகவே, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உடலின் எடையைவிட இரண்டு மடங்கு எடையுள்ள கட்டுமானப் பொருட்களை பற்றியிழுத்துக் கொண்டுவராவிட்டாலும், ஒப்பிடுகையில் குறுகிய காலப்பகுதியில் தங்களுடைய கட்டுமானப் பணிகளில் அதிகத்தைச் செய்துமுடிப்பதன் மூலம் தங்கள் அயலாரை ஆச்சரியமடையச் செய்கிறார்கள். அஸ்திவாரத்திலிருந்து வெறுமனே இரண்டு அல்லது மூன்றே நாட்களில் அவர்களுடைய ராஜ்ய மன்றங்கள் வேகமாக கட்டிமுடிக்கப்படுவதைக் காண்பது வழக்கத்துக்கு மாறாக இல்லை!
இவை அனைத்தையும் அவர்கள் எவ்விதமாக செய்து முடிக்கிறார்கள்? எறும்பை மற்றொரு முக்கியமான வழியில் பின்பற்றுவதன் மூலம். வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை புத்தகம் எறும்புகளைப் பற்றி இவ்விதமாகச் சொல்கிறது: “குறிப்பிடத்தக்கவிதமாக ஒத்துழைப்பவையாக, அவை தங்கள் புற்றுகளை மிகவும் சுத்தமாக வைத்துக்கொண்டு தங்கள் உடன் வேலையாட்களுக்கு அக்கறையைக் காண்பித்து, சில சமயங்களில் காயமடைந்துள்ள அல்லது களைப்படைந்துவிட்ட எறும்புகளைப் புற்றுக்கு அழைத்துவருவதில் உதவிசெய்கின்றன.” மேலே குறிப்பிடப்பட்ட நிருபர், சாட்சிகள் மத்தியில் கண்ட அதே ஒத்துழைக்கும் மனப்பான்மையால் மனம் கவரப்பட்டு “கட்டுமான பணியின் ஒவ்வொரு துறையையும் பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் 80 தேர்ச்சிப்பெற்ற தொழிலர்களும் 400 தொண்டர்களும் பதற்றமில்லாத ஒரு சூழ்நிலையில் புன்முறுவலோடு செய்துமுடித்த மாபெரும் சாதனையை,” விவரித்தார்.
என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு செய்யும் எல்லா கடினமான வேலையும் ஒத்துழைப்பும் தொடர்ந்துவரும் வருடங்களில் அந்த மன்றங்களுக்குள் நடக்கும் காரியங்களுக்கு ஒரு முன்னனுபவமாக மாத்திரமே இருக்கிறது. அங்கே அவர்கள் தொடர்ந்து கடினமாக வேலைசெய்து ஒன்றாகச் சேர்ந்து ஒத்துழைத்து, தங்கள் போதிக்கும் மற்றும் பிரசங்கிக்கும் வேலையை ஒழுங்கமைத்து, கட்டியெழுப்புவதாயும் கல்விபுகட்டுவதாயும் இருக்கும் கூட்டங்களுக்கு ஏற்பாடுசெய்கிறார்கள். அதைவிட முக்கியமானது, இயேசு பூமியிலிருந்தபோது தம்மைப் பின்பற்றுவோருக்குக் காண்பித்த அதே அன்புள்ள அக்கறையை ஒருவருக்கொருவர் காண்பிக்க முயற்சி செய்கிறார்கள்.—யோவான் 13:34, 35.
நீங்கள் எப்போதாவது ஒரு ராஜ்ய மன்றத்தைப் பார்த்து, உள்ளே என்ன நடக்கிறது என்பதாக யோசித்திருந்தால், நீங்கள் வந்து காணும்படியாக உங்களைக் கனிவோடு வரவேற்கிறோம். கனிவான ஒரு வரவேற்பையும் படிப்பினை அளிக்கிற ஒரு சந்திப்பையும் நாங்கள் நம்பிக்கையோடு உங்களுக்கு உறுதிசெய்கிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
பிரான்ஸ், ஆரிலேக்கில் விரைவாக கட்டப்பட்ட ராஜ்ய மன்றம்