உலக சுகாதார நிலை—அதிகரித்துவரும் இடைவெளி
பிரேஸிலில் உள்ள விழித்தெழு! நிருபர்
ஆலீ மேயோ மாலினுக்கு 1977-ம் ஆண்டு சோமாலியாவில் பெரியம்மை வந்தபோது, அது அவனை மருத்துவமனைக்குப் போகவைத்தது மட்டுமல்லாமல், அவனுடைய பெயர் தலைப்புச் செய்திகளில் அடிபடும்படியும் செய்தது. சிகிச்சையளிக்கப்பட்டு அவன் குணமடைந்த பிறகு, பெரியம்மை—நூற்றாண்டுகளாக லட்சோபலட்சம் ஆட்களை நாசப்படுத்திய பின்னர்—பூமியிலிருந்தே துடைத்தழிக்கப்பட்டது என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) 1980-ல் அறிவித்தது. உலகில் இந்நோய்க்குப் பலியான ஆட்களிலேயே ஆலீதான் கடைசி நபர் என்று கூறப்பட்டது.
1992-ல், உடல்நலப் பராமரிப்புக்கான மற்ற நன்மைகளை WHO அறிக்கையிட்டது: 1980-களின் போது வளரும் நாடுகளிலுள்ள அதிக மக்கள், பாதுகாப்பான குடிநீர் வசதிகளும் சுகாதார வசதிகளும் கிடைக்கப்பெற்றனர். கூடுதலாக, மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள மக்களில் பெரும் சதவீதத்தினர் உள்ளூர் மருத்துவ சேவை வசதிகளைப் பெற்றனர். இவற்றின் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில், சில இடங்களில் குழந்தை மரண எண்ணிக்கை குறைந்துள்ளது.
திகிலூட்டும் உண்மைகள்
இருந்தபோதிலும், இந்த நன்மைகள் இழப்புகளினால் சரிக்கட்டப்பட்டு பேராபத்துக்களினால் மறைக்கப்படுகின்றன. இதோ, திகிலூட்டும் சில உண்மைகளைக் கவனியுங்கள்.
ஹெச்ஐவி/எய்ட்ஸ்—உலகம் முழுவதிலும் 1,70,00,000-க்கும் அதிகமானோர் எய்ட்ஸை ஏற்படுத்தும் வைரஸாகிய ஹெச்ஐவி-யினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். நாளொன்றுக்குத் தோராயமாக 8,000 பேர் என்ற வீதத்தில், ஒரே ஒரு வருடத்தில் சுமார் 30,00,000 பேர் பீடிக்கப்பட்டவர்களானார்கள். பத்து லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் ஹெச்ஐவி-யைப் பெற்றிருக்கின்றனர். பிள்ளைகள் மத்தியில் எய்ட்ஸினால் ஏற்படும் மரணங்கள், சமீப பத்தாண்டுகளில் பிள்ளைகளின் பிழைப்பு வீதத்தில் அடைந்திருக்கும் எந்த முன்னேற்றங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதைவிட விரைவில் அதிகத்தை செய்யலாம். ஆசியாவில் அதிகரித்ததைப் போன்று அநேக இடங்களில் இந்தக் கொள்ளைநோய் வெடிக்கும் நிலையின் ஆரம்பத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஹெச்ஐவி-க்குப் பலியான அனைவரிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் வசிக்கின்றனர் என்று எய்ட்ஸ் அண்ட் டிவலப்மெண்ட் கூறுகிறது.
எலும்புருக்கிநோய் (TB)—கடந்த இரண்டு பத்தாண்டுகளாக பெரும்பாலும் அசட்டை செய்யப்பட்டிருந்தாலும், TB மீண்டும் ஒருமுறை உலகில் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 30 லட்சம் மக்களைக் கொன்று, தொற்றுநோய்களிலேயே உலகின் முதன்மை கொலையாளியாக ஆகியிருக்கிறது. இந்த மரணங்களில் 98 சதவீதத்திற்கும் அதிகம் வளரும் நாடுகளில் ஏற்பட்டன. மோசமான நிலைமையை மகாமோசமாக்குவதற்கு, TB பேக்டீரியா ஹெச்ஐவி-யோடு இணைந்து, சாவுக்கேதுவான கூட்டு சேர்ந்து, அழிவுக்கேதுவான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 2000 ஆண்டிற்குள், ஹெச்ஐவி தொற்றப்பெற்ற பத்து லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் TB-யால் மரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புற்றுநோய்—வளர்ந்த நாடுகளில் உள்ள புற்றுநோயாளிகளைவிட தற்போது வளரும் நாடுகளில் உள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இருதய நோய்—“இருதய நோயினால் ஏற்படும் முழுவுலக அழிவுக்கு அருகாமையில் நாம் இருக்கிறோம்,” என்று எச்சரிக்கிறார் WHO-ன் டாக்டர் இவான் ட்யார்ஃபஸ். இருதய நோய் இனியும் தொழில்துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளின் கொள்ளைநோயாக மட்டும் இருக்கப்போவதில்லை. எடுத்துக்காட்டாக, லத்தீன் அமெரிக்காவில் தொற்றுநோய்களினால் மரிப்பதைவிட இருதய நோயினால் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமான மக்கள் மரிப்பார்கள். ஒருசில வருடங்களுக்குள் இதயத் தமனி உறைவும் பாரிசவாயும் வளரும் நாடுகள் முழுவதிலும் ஏற்படும் மரணத்திற்கான முன்னணி காரணமாக விளங்கும்.
வெப்பமண்டல நோய்கள்—“காலரா அமெரிக்க கண்டங்களுக்குப் பரவியிருக்கிறது . . . , மஞ்சள் காய்ச்சலும் டெங்கி கொள்ளைநோய்களும் அதைவிட அதிகமானோரைப் பாதித்தும், மலேரியாவினால் ஏற்பட்ட நிலைமை சீரழிந்தும், இவ்வாறு வெப்பமண்டல நோய்கள் கட்டுப்பாடின்றி தலைவிரித்தாடியிருப்பது போல் தோன்றுகிறது,” என்று WHO எச்சரிக்கிறது. டைம் பத்திரிகை சொல்கிறது: “உலகின் மிக ஏழை நாடுகளில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஏற்கெனவே ஒரு பெருந்தோல்வியாக இருக்கிறது.” மலேரியாவினால் மட்டும் இறந்தோரின் எண்ணிக்கை இப்போது ஆண்டுக்கு சுமார் 20 லட்சமாக இருக்கிறது. ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன்பே இந்நோய் பெரும்பாலும் ஒழித்துக்கட்டப்பட்டதாக எண்ணப்பட்டிருந்த பிறகும் இந்தக் கதி.
வயிற்றுப்போக்கு நோய்கள்—வளரும் நாடுகளில் மரித்த இளம் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. தொற்றுநோயின் விளைவாகவோ ஊட்டச்சத்துக் குறைவின் விளைவாகவோ ஒவ்வொரு நாளும் அநேகமாக 40,000 பிள்ளைகள் மரிக்கின்றனர்; வயிற்றுப்போக்கு நோய்களினால் மட்டும் ஒவ்வொரு எட்டு வினாடிகளுக்கும் ஒரு குழந்தை மரிக்கிறது.
உடல்நலமும் வறுமையும்—ஒரு தொடர்பு
இந்தச் சுகாதார நிலைமை நமக்கு எதைச் சொல்கிறது? “வளரும் நாடுகள் இரட்டைப் பிரச்சினையால் தாக்கப்படுகின்றன,” என்று ஒரு சுகாதார நிபுணர் சொல்கிறார். “தோன்றும் நவீன நீண்டகால நோய்கள் அனைத்தாலும் ஆனால் இன்னும் நிலவியிருக்கும் வெப்பமண்டல நோய்கள் ஒருசிலவற்றாலும் அவை இப்போது தாக்கப்படுகின்றன.” அதன் விளைவு? கவலையை உண்டாக்கக்கூடிய “புவியியல் அமைப்பினால் தீர்மானிக்கப்படும் ஒரு இடைவெளி” தெளிவாகத் தெரியலாயிற்று என்று 2000-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உடல்நலத்தை அடைவது (Achieving Health for All by the Year 2000) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, சுமார் 40 ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள உடல்நல பராமரிப்பு “உலகின் எஞ்சிய பாகங்களுக்குச் சமமாக வளரவில்லை.” சுகாதார நிலையின் இடைவெளி மிகப் பெரியதாகவும் அதிகரிப்பதாகவும் இருக்கிறது.
அகன்றுவரும் இந்த இடைவெளிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், குறைவுபட்ட உடல்நலத்திற்கான ஒரு முக்கிய காரணம் “வறுமையாக இருக்கிறது” என்று உலக சுகாதாரம் என்ற ஆங்கில பத்திரிகை கூறுகிறது. (நீதிமொழிகள் 10:15-ஐ ஒப்பிடுக.) வறுமையானது பெரும்பாலும் மக்களை சுகாதாரமற்ற, போதிய மற்றும் பாதுகாப்பான தண்ணீர் இல்லாத, மக்கள் நெருக்கடி நிறைந்த, நெருக்கமான இடவசதியுடைய வாழ்க்கை நிலைமைகளைக் கொண்ட, குறைபாடுள்ள வீடுகளில் வசிக்கும்படி தள்ளிவிடுகிறது. இந்த மூன்று காரணிகளும் உடல்நலத்தைப் பாதிப்பது மட்டுமன்றி மெய்யாகவே நோய்களையும் ஏற்படுத்துகின்றன. இதற்குக் கூடுதலாக, நோய்நொடிகளுக்கு எதிராக போராடக்கூடிய உடலின் பாதுகாப்பு அமைப்பைப் பலவீனப்படுத்திவிடும் ஊட்டச்சத்துக்குறைவை சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னர் மரத்தை கரையான் அரிப்பதைப்போன்று உடல்நலத்தை வறுமை அரித்துப்போடுவதேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
மரணத்துக்கேதுவான நோய்கள் வாழுமிடங்களைப் பீடித்து, உடல்களை முடமாக்கி, பிள்ளைகளைக் கொல்லும்போது, ஏழைகளே மிகக் கடுமையாகத் தாக்கப்படுகிறவர்களாகின்றனர். சில உதாரணங்களைக் கவனியுங்கள். தென் ஆப்பிரிக்காவின் ஏழ்மை நிறைந்த பகுதிகளில், எலும்புருக்கிநோய் வருவது அதே நாட்டில் அதிக வருமானம் பெறக்கூடியவர்கள் வாழும் பகுதிகளில் வருவதைவிட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. பிரேஸிலின் வறுமை நிறைந்த பகுதிகளில், அவற்றைச் சுற்றியிருக்கும் செழுமையான பகுதிகளில் நுரையீரல் அழற்சியாலும் இன்ஃபுளுவன்ஸாவாலும் மரிக்கும் ஜனங்களைக்காட்டிலும் ஆறு மடங்கு ஜனங்கள் அதிகம் மரிக்கின்றனர். இந்தியாவில் வசதியற்ற குடும்பங்களில் மரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவின் மிகவும் பணக்கார குடும்பங்களில் மரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது. வேதனைதரும் இந்த உண்மை மிகத் தெளிவாக இருக்கிறது: ‘வறுமை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது!’
உலகம் முழுவதும் குடிசைவாழ் மக்களில் 100 கோடிக்கும் அதிகமானோர் மனமுறிவடைந்து உணரும்படி விடப்பட்டிருக்கின்றனர் என்றால் அதில் ஆச்சரியமேதுமில்லை. வறுமைக்கான அடிப்படைக் காரணங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாய் இருக்கின்றன; நோயை ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகள் அவர்களுடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்கின்றன. வறுமையின் பிடியில் நீங்கள் சிக்கித் தவிக்கிறீர்கள் என்றால், சுகாதார நிலையின் இடைவெளியின் பரிதாபகரமான பக்கத்தில் நீங்களும் நம்பிக்கையேதுமின்றி மாட்டிக்கொண்டிருப்பதாக உணரலாம். எனினும், ஏழையாக இருக்கிறீர்களோ இல்லையோ, உங்களுடைய உடல்நலத்தையும் உங்களுடைய பிள்ளைகளின் உடல்நலத்தையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் எடுக்கக்கூடிய சில படிகள் இருக்கின்றன. அந்தப் படிகள் யாவை? பின்வரும் கட்டுரை சில ஆலோசனைகளை அளிக்கிறது.