உங்கள் உடல்நலத்தை தீர்மானிப்பது—உங்களால் செய்யமுடிவது
உடல்நலம் என்பது அரிசியையோ மாவையோபோல ஒரு நிவாரண ஊழியரால் வாரி கொடுக்கமுடிகிற ஏதோவொன்று அல்ல. இது ஒரு மூட்டையில் கிடைப்பதில்லை. ஏனென்றால் இது ஒரு பொருளல்ல ஆனால் ஒரு நிலைமையே. “உடல்நலம் என்பது ஒரு முழுமையான சரீர, மன, சமூக நலனைக்கொண்ட ஒரு நிலைமை,” என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) விவரிக்கிறது. ஆயினும் அந்த நலனின் அளவைத் தீர்மானிப்பதுதான் என்ன?
அட்டைகள், ஆணிகள், வளைந்த இரும்புத் தகடுகள் போன்றவற்றைக்கொண்டு எளிய ஒரு வீடு கட்டப்படலாம். ஆனால் அந்தப் பல பாகங்களும் பெரும்பாலும் நான்கு மூலைக் கம்பங்களால் ஆதாரமாக தாங்கப்படுகின்றன. அதைப்போலவே நம்முடைய உடல்நலமும் அநேக வித்தியாசமான காரணிகளால் உருவமைக்கப்படுகிறது, ஆனால் அவை யாவும் நான்கு “மூலை” காரணிகளோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. அவை (1) நடத்தை, (2) சுற்றுச்சூழல், (3) மருத்துவ கவனிப்பு, மற்றும் (4) உயிரியல்சார்ந்த உருவமைப்பு ஆகியவையே. அந்தக் கம்பங்களின் தரத்தை மேம்படுத்துவதன்மூலம் எப்படி உங்களுடைய வீட்டை உங்களால் உறுதிப்படுத்த முடியுமோ, அப்படியே செல்வாக்குச் செலுத்தும் இந்தக் காரணிகளின் தரத்தை முன்னேற்றுவிப்பதன்மூலம் உடல்நலத்தையும் உங்களால் மேம்படுத்த முடியும். கேள்வி என்னவென்றால், குறைந்த வசதிகளைக்கொண்டு அதை எவ்வாறு செய்யலாம்?
உங்களுடைய நடத்தையும் உடல்நலமும்
இந்த நான்கு காரணிகளிலும், நடத்தையே பெரும்பாலும் உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒன்றாக இருக்கிறது. அதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவது உதவியளிப்பதாய் இருக்கும். உங்களுடைய சாப்பாட்டிலும் பழக்கவழக்கங்களிலும் உங்களால் செய்துகொள்ளமுடிகிற மாற்றங்களை வறுமை மட்டுப்படுத்துகிறது என்பது உண்மைதான். இருந்தபோதிலும்கூட உங்களுக்கு இருக்கும் தெரிவுகளைப் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் நீங்கள் ஒரு கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தலாம். பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்.
வழக்கமாகவே ஒரு தாய்க்கு தன் பிள்ளையைத் தாய்ப்பாலூட்டி வளர்க்கவும் புட்டிப்பாலூட்டி வளர்க்கவுமான ஒரு தெரிவு இருக்கிறது. “சரீரத்தையும் பொருளாதாரத்தையும் பொருத்தளவில்” தாய்ப்பாலூட்டுவதே “மிகச் சிறந்த தெரிவு,” என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பு கூறுகிறது. தாய்ப்பால்தான் “ஆரோக்கியம்தரும் மிகச் சிறந்த உணவு”; குழந்தையின் “சமச்சீரான வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன், கொழுப்பு, லேக்டோஸ், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், மற்றும் நுண் கூட்டுப்பொருட்கள் ஆகியவற்றை சரியான அளவுகளில் துல்லியமாக” கொடுக்கிறது என்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தாய்ப்பால் நோயை எதிர்க்கும் புரோட்டீன்களை அல்லது உடற்காப்பு மூலங்களைத் தாயிடமிருந்து குழந்தைக்குக் கடத்துகிறது. இது நோய்களை எதிர்ப்பதில் குழந்தைக்கு சாதகமான ஒரு தொடக்கத்தைக் கொடுக்கிறது.
விசேஷமாக, மோசமான சுகாதார நிலைமைகளைக் கொண்ட வெப்பமண்டல தேசங்களில் தாய்ப்பாலூட்டுதல் மிகச் சிறந்ததாக இருக்கிறது. புட்டிப்பாலைப்போல் அல்லாமல், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக தாய்ப்பாலில் அதிக தண்ணீர் கலக்கமுடியாது; அதன் தயாரிப்பின்போது எந்தவித தவறுகள் ஏற்படவும் வாய்ப்பில்லை; மேலும் அது எப்போதுமே சுத்தமான கொள்களத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. அதற்கு மாறாக, “ஏழைச் சமுதாயத்தில் இருக்கும் புட்டிப்பாலூட்டப்பட்ட ஒரு குழந்தை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையைவிட, வயிற்றுப்போக்கு நோயால் மரிக்கும் வாய்ப்பு சுமார் 15 மடங்கு அதிகமாயும் நுரையீரல் அழற்சியினால் மரிக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாயும் இருக்கிறது,” என்று சினர்ஜி என்ற கனடியன் சொஸைட்டி ஃபார் இன்டர்நேஷனல் ஹெல்த் அமைப்பின் ஒரு செய்தி மடல் குறிப்பிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் பொருளாதார அனுகூலமும் இருக்கிறது. வளரும் உலகில் பால்பவுடரின் விலை அதிகம். உதாரணமாக, பிரேஸிலில், ஒரு குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்க ஒரு ஏழைக் குடும்பத்தின் மாத வருமானத்தில் ஐந்திலொரு பாகம் தேவையாயிருக்கிறது. தாய்ப்பாலூட்டுவதனால் மிச்சப்படுத்தப்படும் பணம் தாயையும் உட்பட முழு குடும்பத்துக்குமே ஆரோக்கியமான உணவளிக்கக்கூடும்.
இவ்வளவு அனுகூலங்களையும் பார்க்கும்போது, தாய்ப்பாலூட்டுவது பேரளவில் அதிகரிக்கவேண்டுமே என்று எதிர்பார்ப்பீர்கள். இருப்பினும், பிலிப்பீன்ஸில் “தாய்ப்பாலூட்டுதல் அறவே நிறுத்தப்படும் அபாயத்தில்” இருப்பதாக அங்குள்ள சுகாதார ஊழியர்கள் அறிவிக்கின்றனர். மேலும் பிரேஸிலில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி, சுவாச தொற்றுநோய் காரணமாக ஏற்படும் குழந்தைகள் மரணத்தோடு சம்பந்தப்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்று “தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதே” என்பதாக காண்பித்தது. இருப்பினும் உங்கள் குழந்தை அப்படிப்பட்ட முடிவிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஒரு தெரிவு இருக்கிறது.
குழந்தையின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான தாயின் முயற்சிகள் அனைத்தும், பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள மற்ற அங்கத்தினர்களின் சுகாதாரமற்ற நடத்தையால் தகர்த்தெறியப்படுகின்றன. நேப்பாளில் உள்ள ஒரு தாயை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன். புகையால் நிரப்பப்பட்ட ஒரு அறையில் தன் கணவனோடும் மூன்று வயது மகளோடும் வாழ்கிறாள். அந்தச் சிறிய அறை சமையலறையிலிருந்து வரும் புகையினாலும் புகையிலைப் புகையினாலும் நிறைந்திருக்கிறது என்று பெனஸ்கோப் என்ற பத்திரிகை எழுதுகிறது. அந்தக் குழந்தை சுவாச தொற்றுநோயினால் அவதிப்படுகிறது. “என் வீட்டுக்காரர் சிகரெட் குடிப்பதை என்னால் தடுத்து நிறுத்தமுடியாது. நானோ இப்போது என் வீட்டுக்காரருக்கு சிகரெட்டும் என் குழந்தைக்கு மருந்தும் வாங்கிக் கொடுக்கிறேன்” என்று அந்தத் தாய் பெருமூச்சு விடுகிறாள்.
வருத்தத்துக்குரிய வகையில், வளரும் நாடுகளில் உள்ள மக்களில் எப்போதையும்விட அதிகமானோர் புகைபிடிக்கத் தொடங்கி, மிகவும் தேவையாயிருக்கும் வருமானத்தை விரயம் பண்ணுவதனால் இவளுடைய பிரச்சினை மிகப் பொதுவானதாக ஆகிறது. உள்ளதைச் சொன்னால், ஐரோப்பாவிலோ ஐக்கிய மாகாணங்களிலோ புகைபிடித்தலை நிறுத்துகிற ஒவ்வொரு ஆளுக்கும் பதிலாக, லத்தீன் அமெரிக்காவிலோ ஆப்பிரிக்காவிலோ இரண்டுபேர் புகைபிடித்தலைத் தொடங்குகின்றனர். தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் பேரளவு குற்றத்தை ஏற்கவேண்டும், என்று ரூவகண் வெல்பெஸ்கோட் என்ற டச்சு புத்தகம் குறிப்பிடுகிறது. “அந்த நேர்த்தியான தெளிவான மனநிலை உணர்வுகளுக்கு: வேர்ஸிட்டி” மற்றும் “மிக முக்கிய நபர்களுக்கான மிக முக்கிய சிகரெட்டுகள்: கோல்ட் லீஃப்” போன்ற விளம்பர வாசகங்கள் இருக்கின்றன. புகைபிடித்தலுக்கும் முன்னேற்றம் மற்றும் செழுமைக்கும் சம்பந்தமிருக்கிறது என்று ஏழை எளியவர்களை இவை நம்பவைக்கின்றன. ஆனால் உண்மையோ அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. இது உங்கள் பணத்தை சாம்பலாக்கி உங்கள் உடல்நலத்தைச் சீரழிக்கிறது.
இதைப்பற்றி யோசித்துப் பாருங்கள். ஒருவன் சிகரெட் குடிக்கும் ஒவ்வொரு முறையும், தன் வாழ்நாள் எதிர்பார்ப்பில் பத்து நிமிடங்களைக் குறைத்துக்கொண்டு, தனக்கு மாரடைப்பும் பாரிசவாயும் நுரையீரல், தொண்டை, மற்றும் வாய் புற்றுநோய்களும் மற்ற நோய்களும் வருவதற்கான ஆபத்தையும் அதிகரிக்கச் செய்கிறான். UN க்ரானிக்கிள் என்ற பத்திரிகை இவ்வாறு சொல்லுகிறது: “உலகத்தில் அகால மரணத்தையும் ஊனத்தையும் ஏற்படுத்தும், தவிர்க்கமுடிகிற மிகப் பெரிய ஒரே காரணம் புகையிலையை உட்கொள்வதாகும்.” “தவிர்க்கமுடிகிற காரணம்” என்று சொல்வதை தயவுசெய்து கவனியுங்கள். சிகரெட் குடிப்பதை உங்களால் நிறுத்த முடியும்.
சந்தேகமின்றி, நடத்தை சம்பந்தமான இன்னும் அநேக தெரிவுகள் உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கின்றன. இந்தக் கட்டுரையில் 11-ம் பக்கத்தில் உள்ள பெட்டியில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு ராஜ்ய மன்ற நூலகத்தில் நீங்கள் வாசிக்கக்கூடிய சில கட்டுரைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்களாகவே படித்துத் தெரிந்துகொள்ள முயற்சி தேவை என்பது உண்மைதான். இருந்தபோதிலும், “தங்களுடைய சுகாதார நிலையைப்பற்றி தெரிவிக்கப்பட்டு கற்பிக்கப்பட்ட, நன்கு விவரமறிந்த ஆட்களின் ஈடுபாடின்றி ஆரோக்கியமான சமுதாயம் இருக்கமுடியாது” என WHO அதிகாரி ஒருவர் சொல்கிறார். ஆகவே இலவசமாக உடல்நலத்தை மேம்படுத்தும் இந்தப் படியை எடுத்துவையுங்கள்: உங்களுக்கே கற்பித்துக்கொள்ளுங்கள்.
உடல்நலமும் வீட்டுச் சுற்றுச்சூழலும்
உங்களுடைய உடல்நலத்தின்மீது மிக அதிக செல்வாக்கு செலுத்தும் சுற்றுச்சூழல் உங்களுடைய வீடும் உங்களுடைய சுற்றுப்புறமுமே என்பதாக ஏழைகள் சிறுவயதிலேயே மரிக்கின்றனர் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. தண்ணீரின் காரணமாக உங்களுடைய சுற்றுச்சூழல் உடல்நலத்திற்கு ஊறு விளைவிப்பதாக இருக்கக்கூடும். தொற்றுநோய்கள், தோல் வியாதிகள், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைஃபாய்டு போன்ற நோய்களும் மற்ற கோளாறுகளும் பாதுகாப்பற்ற தண்ணீரினாலும் தண்ணீர் பற்றாக்குறையினாலும் ஏற்படுத்தப்படுகின்றன.
நீங்கள் கைகழுவ வேண்டுமென்றால் ஒரு குழாயைத் திறந்துவிடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை. ஆனால் வீடுகளில் குழாய்த் தண்ணீர் வசதியில்லாத ஜனங்கள் ஒவ்வொரு நாளும் தண்ணீர் பிடித்துக்கொண்டு வர எவ்வளவு நேரம் செலவழிக்கின்றனர் என்பதை கற்பனைபண்ணி பார்ப்பதே உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஒரு தண்ணீர்க்குழாயைப் பெரும்பாலும் 500-க்கும் மேற்பட்ட ஆட்கள் உபயோகிக்கின்றனர். அதற்குக் காத்திருக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால் குறைந்த வருமானக்காரர்கள் அதிக நேரம் வேலைசெய்வதனால், காத்திருப்பதானது, “சம்பாத்தியத்திற்காக பயன்படுத்தக்கூடிய நேரத்தை நஷ்டப்படுத்துகிறது,” என்பதாக மூன்றாம் உலக நகரங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, ஆறுபேரைக்கொண்ட ஒரு குடும்பம் அதன் அன்றாட தேவையாகிய 30 வாளி தண்ணீருக்குக் குறைவாகவே வீட்டுக்குக் கொண்டுசெல்கிறது என்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆகவே, உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் கழுவி, துணிமணிகளைத் துவைத்து, தங்களையே சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு வெகு சிறிதளவு தண்ணீரே கிடைக்கிறது. இதன் விளைவாக, குடும்பத்தினரின் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் பேன்கள், ஈக்கள் போன்றவற்றை வசீகரிக்கும் நிலைமைகளுக்கு இது வழிநடத்துகிறது.
இந்த நிலைமையைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் தூரமாக வேலைக்குப் போவதற்கு உங்களுடைய சைக்கிளைத்தான் நம்பியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால், சைக்கிள் செயினுக்கு எண்ணெய் இட்டு, பிரேக்குகளைச் சரிசெய்யவோ, ஒரு சைக்கிள் சக்கரத்தின் கம்பியை மாற்றவோ வாராவாரம் சிறிது நேரம் செலவு செய்வதை ஒரு நஷ்டமாக கருதுவீர்களா? இல்லை, அவ்வாறு கருதமாட்டீர்கள். ஏனென்றால், பராமரித்தலை அசட்டை செய்வதனால் ஒருசில மணிநேரங்களை மிச்சப்படுத்தினாலும், பின்னர் ஒரு நாள் சைக்கிள் பாதி வழியில் பழுதடைந்துபோனால் ஒரு முழுநாள் வேலையையுமே இழக்க நேரிடலாம் என்று அறிந்திருக்கிறீர்கள். அதைப்போலவே, உங்களுடைய உடல்நலத்தைப் பராமரிப்பதற்குப் போதுமானதைவிட குறைந்த தண்ணீரை வீட்டுக்குக் கொண்டுவருவதனால், ஒவ்வொரு வாரமும் சிறிது நேரத்தையும் கொஞ்சம் பணத்தையும் நீங்கள் மிச்சப்படுத்தலாம். ஆனால் சரிவர பராமரிக்காததால் உங்களுடைய உடல்நலம் குன்றிப்போகுமானால் பிற்காலத்தில் அதிக நாட்களையும் அதிக பணத்தையும் நீங்கள் இழக்க நேரிடும்.
போதுமான தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவதை உங்களுடைய குடும்பத் திட்டமாக ஆக்கிக்கொள்ளலாம். தாயும் பிள்ளைகளும் மட்டுமே தண்ணீர் சுமக்கவேண்டும் என்று உள்ளூர் பழக்கவழக்கங்கள் நிபந்தனை இட்டாலும், கரிசனையுள்ள ஒரு தகப்பன் தண்ணீர் இறைப்பதற்கு தன்னுடைய பலத்தைப் பயன்படுத்தத் தவறமாட்டார்.
எனினும், தண்ணீர் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், இரண்டாவது பிரச்சினை எழும்புகிறது—அதை சுத்தமாக வைப்பது எவ்வாறு என்பது. சுகாதார நிபுணர்களுடைய ஆலோசனை: குடிப்பதற்கான தண்ணீரையும் மற்ற உபயோகத்திற்காக வைத்திருக்கும் தண்ணீரையும் ஒரே இடத்தில் வைக்காதீர்கள். தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தை சரிவர மூடக்கூடிய ஒரு மூடியால் எப்போதுமே மூடிவைத்திருங்கள். தண்ணீரிலுள்ள அழுக்கு அடியில் படியும்படி அதை சிறிதுநேரம் கலக்காமல் வையுங்கள். தண்ணீரைக் கோரியெடுக்கும்போது உங்களுடைய விரல்கள் அதில் படாமல் பார்த்துக்கொள்ளும்படி, நீண்ட கைப்பிடியுள்ள ஒரு சுத்தமான கோப்பையைப் பயன்படுத்தவும். தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்களை பிளீச்சிங் திரவம் கொண்டு கிரமமாக கழுவுங்கள். கழுவிய பின்னர் சுத்தமான தண்ணீரைக்கொண்டு அவற்றை அலசுங்கள். மழைத் தண்ணீர்? நிச்சயமாகவே அது நல்ல ஒரு பேரமாகத்தான் இருக்கும் (ஆனால் மழை பெய்தால் மட்டுமே!) அதைச் சேமித்து வைத்திருக்கும் தொட்டியினுள் மழைத் தண்ணீர் எந்தத் தூசியையும் அடித்துக்கொண்டு வராமல் இருந்தாலும், பூச்சிகள், எலிகள், மற்ற விலங்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டாலும் அத்தண்ணீர் பாதுகாப்பானதுதான்.
தண்ணீர் பாதுகாப்பானதுதானா இல்லையா என்ற சந்தேகத்தில் இருக்கிறீர்களானால், சோடியம் ஹைப்போக்ளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போக்ளோரைட் போன்ற குளோரினை கசியவைக்கும் ஏதேனும் ரசாயனப் பொருளை அதனுள் இட்டுவைக்கும்படி WHO ஆலோசனை வழங்குகிறது. இது நல்ல பலனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் செலவு குறைந்ததாகவும் இருக்கிறது. உதாரணமாக, பெருவில், இந்த முறையில் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு வருடம் ஒன்றிற்கு இரண்டு டாலருக்கும் குறைவான செலவே ஆகிறது.
உடல்நலமும் உடல்நலம் பேணுதலும்
ஏழைகள் பெரும்பாலும் இரண்டு வகையான உடல்நலப் பராமரிப்புகளையே அறிந்திருக்கின்றனர்: (1) கிடைக்கக்கூடியவை ஆனால் திறமைக்குமீறிய செலவு ஆகக்கூடியவை (2) செலவு குறைந்தவை ஆனால் கிடைக்காதவை. சாவோ பாலோவில் வாழும் கிட்டத்தட்ட 6,50,000 குடிசைவாழ் மக்களில் ஒருத்தியாகிய டோனா மரியா இந்த முதலாம் வகை பராமரிப்பை விவரிக்கிறாள்: “எங்களைப் பொருத்தவரை, நல்ல உடல்நலப் பராமரிப்பு என்பது சொகுசுப் பொருட்கள் விற்கும் கடைத்தெருவின் சன்னலில் வைத்திருக்கும் ஒரு காட்சிப் பொருளைப் போலவே இருக்கிறது. எங்களால் பார்க்கத்தான் முடியும் ஆனால் பெறமுடியாது.” (வாண்டார் பத்திரிகை) உண்மையில், இதய மாற்றுப்பாதை அறுவை சிகிச்சைகள், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைகள், CAT ஸ்கேன்கள் போன்ற சிகிச்சை முறைகளும் மற்ற உயர் தொழில்நுட்ப மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படும் மருத்துவமனைகள் இருக்கும் ஒரு நகரத்தில் டோனா மரியா வசிக்கிறாள். இருந்தாலும் இவற்றிற்கெல்லாம் செலவுசெய்வதற்கான பணவசதி அவளிடம் இல்லை.
திறமைக்குமீறிய செலவாகும் உடல்நலப் பராமரிப்பு கடைத்தெருவில் உள்ள ஒரு சொகுசுப் பொருளைப்போல இருக்குமானால், செலவு குறைந்த உடல்நலப் பராமரிப்பானது நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக்கொண்டு ஒரே சமயத்தில் வாங்க முயற்சிக்கும் ஒரு மலிவான சரக்கைப்போல இருக்கிறது. தென் அமெரிக்க தேசம் ஒன்றில் சமீபத்தில் வெளிவந்த செய்தியறிக்கை குறிப்பிட்டதாவது: ‘நோயாளிகள் டாக்டரைப் பார்ப்பதற்காக இரண்டு நாட்களாக வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். படுக்கை ஒன்றும் காலியாக இல்லை. அரசு மருத்துவமனைகளில் பணம், மருந்து, உணவு ஆகியவை குறைவுபடுகின்றன. உடல்நலப் பராமரிப்பு அமைப்பே நோய்வாய்ப்பட்டிருக்கிறது.’
நோயுற்றிருக்கும் அத்தகைய உடல்நலப் பராமரிப்பை பொது ஜனங்களுக்காக முன்னேற்றுவிக்க வேண்டி, WHO தன்னுடைய வேலையை நோய்க் கட்டுப்பாட்டில் இருந்து மக்களுக்கு நோய்த் தவிர்ப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டைப்பற்றி கற்பிப்பதன் மூலம் உடல்நலத்தை முன்னேற்றுவித்தலுக்கு படிப்படியாக மாற்றியிருக்கிறது. தகுந்த சத்துணவு, பாதுகாப்பான தண்ணீர் போன்ற அடிப்படை சுகாதார பராமரிப்பையும் அடிப்படைத் துப்புரவையும் மேம்படுத்தும் திட்டங்கள் “உலக சுகாதாரத்தில் ஒரு கணிசமான முன்னேற்றத்தில்” விளைவடைந்திருக்கின்றன என்று எழுதுகிறது UN க்ரானிக்கிள். இந்தத் திட்டங்கள் உங்களுக்குப் பயனளிக்கின்றனவா? அவற்றில் ஏதாவதொன்று பலனளித்திருக்கலாம். அது எது? EPI (விரிவுபடுத்தப்பட்ட நோய்த்தடைகாப்பு திட்டம்).
“தபால்காரரைவிட அம்மை குத்துபவரே வீட்டுக்கும் கிராமத்துக்கும் மிகவும் அடிக்கடி வருபவரானார்,” என்று சொல்கிறது EPI-ன் பேரிலான ஒரு அறிக்கை. கடந்த பத்தாண்டுகளின்போது, அமேசான் ஆற்றில் தொடங்கி இமயமலை வரை தடுப்பூசி போடப்பட்டது. 1990-க்குள், உலக குழந்தைகளில் 80 சதவீதத்தினருக்குச் சாவுக்கேதுவான ஆறு நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டது என்று WHO அறிக்கை செய்தது.a ஆண்டுதோறும் EPI 30 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுகிறது. ஊனமுற்றுப் போயிருக்கக்கூடிய கூடுதலான 4,50,000 பேர் நடக்கின்றனர், ஓடுகின்றனர், விளையாடுகின்றனர். இதன் காரணமாக, நோய்களைத் தவிர்க்க தங்களுடைய பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு அநேக பெற்றோர்கள் தனிப்பட்டவகையில் தீர்மானிக்கின்றனர்.
அவ்வப்போது ஒரு நோய் வருவதை உங்களால் தவிர்க்கமுடியாமல் போகும். இருப்பினும் அதை உங்களால் கட்டுப்படுத்தமுடியும். “உடல்நலப் பராமரிப்புகளில் பாதிக்குமேல் சுய-பராமரிப்பாகவோ குடும்பத்தினரால் கொடுக்கப்படும் பராமரிப்பாகவோ இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது,” என உவர்ல்ட் ஹெல்த் பத்திரிகை சொல்கிறது. அத்தகைய சுய-பராமரிப்பின் ஒரு வகைதான் வாய்வழி நீரூட்ட பானம் (ORS) என்றழைக்கப்படுவதாகும். இது உப்பு, சர்க்கரை, சுத்த தண்ணீர் ஆகியவற்றால் ஆகிய ஒரு எளிய செலவில்லாத கலவையே.
ORS-ஐப் பயன்படுத்துவதையும் உட்படுத்துகிற வாய்வழி நீரூட்ட சிகிச்சையை அநேக சுகாதார நிபுணர்கள் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பிற்கு மிகச் சிறந்த சிகிச்சையாகக் கருதுகின்றனர். வளரும் நாடுகளில் ஆண்டுதோறும் 150 கோடி மக்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் இதைப் பயன்படுத்தினால், பத்தே பத்து செண்டு விலையுள்ள ORS தாதுப்புக்களின் ஒரு சிறிய பேக்கட், ஒவ்வொரு வருடமும் வயிற்றுப்போக்கு நோய்களால் மரிக்கும் 32 லட்ச குழந்தைகளின் உயிர்களில் அநேகத்தைக் காப்பாற்ற முடியும்.
முடியும், ஆனால் சில நாடுகளில் வயிற்றுப்போக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் மருந்துகளைப் பயன்படுத்துவது இன்னமும் “ORS உபயோகத்தைவிட சர்வசாதாரணமாக இருக்கிறது,” என்று WHO-ன் செய்திமடலாகிய எஸன்ஷியல் ட்ரக்ஸ் மானிட்டர் கூறுகிறது. வளரும் நாடுகள் சிலவற்றில், உதாரணமாக, வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த ORS உபயோகிப்பதைவிட மருந்துகள் மூன்று மடங்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. “அவசியமே இல்லாமல் இவ்வாறு மருந்துகளை உபயோகிப்பதானது மட்டுக்குமீறி செலவு வைப்பதாக இருக்கிறது,” என்று அந்தச் செய்திமடல் குறிப்பிடுகிறது. இதற்காக ஏழை குடும்பங்கள் பட்டினியாயும் கிடக்க வேண்டியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கை எதிர்த்துப் போராடும் மருந்துகளுக்கு நிரூபிக்கப்பட்ட எந்த நடைமுறை பலனும் கிடையாது, மேலும் சில மருந்துகள் அபாயகரமானதாகவும் இருக்கின்றன என்று அது எச்சரிக்கிறது. “டாக்டர்கள் அத்தகைய மருந்துகளை எழுதிக் கொடுக்கக்கூடாது, . . . குடும்பத்தினரும் அவற்றை வாங்கக்கூடாது.”
வயிற்றுப்போக்கைக் குணமாக்க மருந்துகளை சிபாரிசு செய்வதற்குப் பதிலாக, WHO கீழ்க்கண்ட ஆலோசனைகளைத் தருகிறது. (1) அரிசி கஞ்சி அல்லது டீ போன்ற திரவங்களை பிள்ளைக்கு அதிகமாக கொடுத்து நீரிழப்பைத் தவிருங்கள். (2) அப்படியிருந்தும் குழந்தை நீரிழந்துகொண்டிருந்தால், நிலைமையைக் கணிக்க ஒரு மருத்துவரைச் சென்று பார்த்து, குழந்தைக்கு ORS பயன்படுத்தி சிகிச்சையளியுங்கள். (3) வயிற்றுப்போக்குக்கு முன்னும் பின்னும் குழந்தைக்குச் சாதாரணமாக உணவளியுங்கள். (4) குழந்தைக்குப் பெருமளவில் நீரிழப்பு ஏற்பட்டால், சிரைவழியே மீண்டும் நீரூட்டவேண்டும்.b
தயாராக கிடைக்கும் ORS உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால், பின்வரும் எளிய முறையைக் கவனமாக பின்பற்றி தயாரியுங்கள்: ஒரு முழு தேக்கரண்டி அளவு உப்பையும், எட்டு தேக்கரண்டி அளவு சர்க்கரையையும், ஒரு லிட்டர் (200 மிலி அளவு கப்பில் 5 கப்) சுத்தமான தண்ணீரையும் கலக்குங்கள். ஒவ்வொரு முறை வயிற்றுப்போக்கு ஏற்படும்போதும் ஒரு கப் நிறைய குடிக்கக் கொடுங்கள், சிறு குழந்தைகளுக்கு அதில் பாதியளவு கொடுத்தால் போதும். இந்த விஷயத்தின்பேரில் அதிக தகவல்களுக்குப் பக்கம் 10-ல் உள்ள பெட்டியைப் பாருங்கள்.
உயிரியல்சார்ந்த உருவமைப்பு என்ற காரணி எண் நான்கைப் பற்றியதென்ன? அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? அடுத்தக் கட்டுரை இந்தக் கேள்வியைக் கலந்தாராய்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a தொண்டை அடைப்பான், மணல்வாரி அம்மை, இளம்பிள்ளைவாதம், தசைவிறைப்பு ஜன்னி, காசநோய், கக்குவான் இருமல் ஆகியவையே சாவுக்கேதுவான அந்த ஆறு நோய்களாகும். எய்ட்ஸ் தற்போது கொல்லுவதைவிட அதிகமதிகமானோரைக் கொல்லுகிற ஹெபட்டைடஸ் B-யும்கூட நோய்த்தடைகாப்பு திட்டங்களில் சேர்த்துக்கொள்ளலாம் என்று WHO பரிந்துரை செய்கிறது.
b குழந்தையின் வயிற்றுத்தோலை கிள்ளி இழுங்கள். அது மீண்டும் பழைய நிலையை அடைய இரண்டு வினாடிகளுக்குமேல் ஆகுமானால் குழந்தைக்குப் பேரளவு நீரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அர்த்தப்படும்.
[பக்கம் 8, 9-ன் பெட்டி]
அடிப்படை உடல்நலப் பராமரிப்பு—அது எவ்வாறு செயல்புரிகிறது?
இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, தென் அமெரிக்காவில் WHO பிரதிநிதியாக இருக்கும், டாக்டர் மைக்கேல் ஓக்கேரல் என்பவரை விழித்தெழு! பேட்டி கண்டது. சில சுருக்கக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன:
‘உடல்நலத்தை மருத்துவரீதியில் அணுகும் உடல்நலப் பராமரிப்பு முறையை நாம் சுதந்தரித்திருக்கிறோம். உடம்பு சரியில்லையென்றால் ஒரு டாக்டரிடம் போகிறீர்கள். இரண்டு பாட்டில் விஸ்கியைக் குடித்திருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள். ஒருபோதும் உடற்பயிற்சி செய்வதில்லை என்பதையும் மறந்துவிடுகிறீர்கள். டாக்டரைப் பார்த்து, “டாக்டர், என்னைக் குணப்படுத்துங்கள்,” என்று சொல்கிறீர்கள். பிறகு டாக்டர் உங்களுக்கு சாப்பிட ஏதோ மருந்தைக் கொடுத்துவிட்டு, கையில் ஒரு ஊசியையும் போட்டு, ஆபரேஷன் பண்ணி எதையாவது வெட்டியெடுக்கிறார் அல்லது சேர்த்து வைத்துத் தைத்துவிடுகிறார். உங்களுக்குப் புரிய வைப்பதற்காக நான் இப்பொழுது கடுமையாகத்தான் பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஆனால் இப்படிப்பட்ட மருத்துவ அணுகுமுறையே நிலைத்து வந்திருக்கிறது. சமுதாயத்தின் பிரச்சினைகளை மருத்துவ பிரச்சினைகள் என்று தவறாக கருதி வந்திருக்கிறோம். தற்கொலை, ஊட்டச்சத்துக் குறைவு, போதை மருத்து துர்ப்பிரயோகம் போன்றவை மருத்துவ பிரச்சினைகளாய் ஆகியிருக்கின்றன. ஆனால் அவை மருத்துவ பிரச்சினைகள் அல்ல. அவை உடல்நலப் பிரச்சினைகளும்கூட அல்ல. அவை உடல்நல மற்றும் மருத்துவ பின்விளைவுகளை ஏற்படுத்தும் சமூகப் பிரச்சினைகளாக இருக்கின்றன.
‘பிறகு, கடந்த 20 வருடங்களாக மக்கள், “சற்றுப் பொறுங்கள். நாம் காரியங்களைத் தவறாக செய்துகொண்டிருக்கிறோம். உடல்நலம் என்றால் நம்முடைய கருத்து என்ன என்பதை நாம் மீண்டும் விவரிக்கவேண்டும்,” என்று சொன்னார்கள். அடிப்படை உடல்நலப் பராமரிப்பிற்கு ஆதாரமாக இருக்கும் பின்வருவனவற்றைப் போன்ற சில நியமங்கள் ஏற்படுத்தப்பட்டன:
‘நோயைக் குணப்படுத்துவதைவிட தவிர்ப்பதே நாளடைவில் அதிக இரக்கமுள்ளதாயும் பொருளாதாரரீதியில் லாபமுள்ளதாயும் இருக்கிறது. உதாரணமாக திறந்த இதய அறுவை சிகிச்சையை விளைவிக்கும் காரணங்களுக்குப் பரிகாரம் ஒன்றுமே செய்யாமல், அச்சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையைக் கட்டிவிடுவது இந்த நியமத்திற்கு எதிரானதாக இருக்கிறது. அப்படியென்றால் நோய்நொடிகள் வந்தால் அவற்றைக் குணப்படுத்தக்கூடாது என்று அர்த்தப்படுத்துகிறதில்லை. சந்தேகமின்றி அதைக் குணப்படுத்தவேண்டும். தெருவில் ஒரு குழி இருந்துகொண்டு, வாரத்தின் ஒவ்வொரு நாளும் விபத்தை விளைவிக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். விழுந்து காலை ஒடித்துக்கொள்ளும் அந்த அப்பாவிக்கு நீங்கள் சிகிச்சை அளிப்பீர்கள். ஆனால் அதைவிட அதிக இரக்கமுள்ளதும் பொருளாதாரரீதியில் லாபமுள்ளதுமான காரியம் என்னவென்றால்: அந்தக் குழியை மூடுவதுதான்.
‘உங்கள் உடல்நலத்தைக் காப்பதற்காக இருக்கும் வளங்களைத் திறம்பட்ட வகையில் உபயோகிப்பது மற்றொரு நியமமாகும். வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்து சரியாக்கக்கூடிய ஒரு பிரச்சினைக்கு ஒரு ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவது இந்த நியமத்திற்கு எதிரானதாக இருக்கிறது. அல்லது ஒரு க்ளினிக்கில் சுகப்படுத்தக்கூடிய நோய்க்கு ஒரு ஆளை அதிநவீன வசதிகள் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பதும்கூட அவ்வாறு இருக்கிறது. அல்லது பல்கலைக்கழகத்தில் பத்து வருட பயிற்சிபெற்ற ஒரு டாக்டரை, ஆறுமாத பயிற்சிபெற்ற ஒருவரால் செய்யமுடிந்த தடுப்பூசி போடும் வேலையைச் செய்யச் சொல்வதும் இந்நியமத்திற்கு எதிரானதேயாகும். அந்த டாக்டர் எந்த வேலைக்குப் பயிற்சியளிக்கப்பட்டாரோ அந்த வேலையைச் செய்ய அவர் அங்கு இருக்கவேண்டும். அடிப்படை உடல்நலப் பராமரிப்பு நமக்குச் சொல்வது இதுதான்: மக்களுக்குப் போதியுங்கள், நோய்களைத் தவிருங்கள், உங்களுடைய உடல்நலப் பாதுகாப்பிற்காக இருக்கும் வளங்களை ஞானமாக உபயோகியுங்கள்.’
[பக்கம் 10-ன் பெட்டி]
காலராவுக்கு மற்றொரு ORS
வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க, வழக்கமான உபயோகத்தில் இருக்கும் குளுக்கோஸிலிருந்து தயாரிக்கப்படும் ORS (வாய்வழி நீரூட்ட பானம்)-ஐவிட அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ORS-ஐயே பயன்படுத்தும்படி WHO தற்போது சிபாரிசு செய்கிறது. அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ORS பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்ட காலரா நோயாளிகளுக்கு வழக்கமான உபயோகத்தில் இருக்கும் ORS கொடுக்கப்பட்ட காலரா நோயாளிகளைவிட 33 சதவீதம் குறைவான அளவில், குறுகிய கால வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்று ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. ஒரு அவுன்ஸ் சர்க்கரைக்குப் பதிலாக இரண்டு மூன்று அவுன்ஸ் சமைக்கப்பட்ட அரிசி பவுடரைச் சேர்ப்பதன்மூலம் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு லிட்டர் ORS தயாரிக்கப்படுகிறது.—எஸன்ஷியல் ட்ரக்ஸ் மானிட்டர்.
[பக்கம் 11-ன் பெட்டி]
மேலும் வாசிப்பதற்கான கட்டுரைகள் . . .
நடத்தை: “நல்ல ஆரோக்கியம்—நீங்கள் அதைக்குறித்து என்ன செய்யலாம்?” (விழித்தெழு!, டிசம்பர் 8, 1990) “புகையிலையும் உங்கள் ஆரோக்கியமும்—உண்மையிலேயே ஒரு தொடர்பு இருக்கிறதா?” (விழித்தெழு!, செப்டம்பர் 8, 1990) “பிள்ளைகள் உயிருடன் இருப்பதற்கு உதவுதல்!” (விழித்தெழு!, நவம்பர் 8, 1989) “மதுபானம் உங்களுடைய உடலுக்கு என்ன செய்கிறது”—விழித்தெழு!, மார்ச் 8, 1981.
சுற்றுச்சூழல்: “சுத்தம் என்ற சவாலை சந்தித்தல்” (விழித்தெழு!, நவம்பர் 8, 1989) “சுத்தத்துடன் வாழுங்கள், ஆரோக்கியத்துடன் வாழுங்கள்!”—விழித்தெழு!, செப்டம்பர் 8, 1978.
உடல்நலப் பராமரிப்பு: “உயிர்காக்கும் மற்ற வழிகள்” (விழித்தெழு!, நவம்பர் 8, 1989) “உயிரைக் காக்கும் உப்புச் சத்துள்ள பானம்!”—விழித்தெழு!, ஜூலை 8, 1986.
[பக்கம் 7-ன் படம்]
தண்ணீர் கொண்டு வருவதற்கு காத்திருக்க வேண்டியதாயும் வேலைசெய்ய வேண்டியதாயும் இருக்கிறது
[படத்திற்கான நன்றி]
Mark Peters/Sipa Press
[பக்கம் 9-ன் படம்]
[படத்திற்கான நன்றி]
Mark Peters/Sipa Press
போதியளவு பாதுகாப்பான தண்ணீர்—நல்ல உடல்நலத்திற்கு ஒரு அத்தியாவசியம்