சிறுத்தை—மறைந்து வாழும் தன்மையுள்ள பூனை
கென்யாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. கென்யாவின் மாஸை மாராவின் வனவாழ் உய்விடத்தின் கண்கவர் வன உயிர்களைக் காண்பதிலும் படம்பிடிப்பதிலும் எங்களுடைய நாள் கழிந்தது. இரவில் நாங்கள் தங்கும் கூடாரத்தில் ஓய்வெடுப்பதற்கு முன்னர், மற்றுமொரு கிளர்ச்சியூட்டும் காட்சியை நாங்கள் அனுபவிக்க இருந்தோம். தங்கும்விடுதியில் பணிபுரிந்த ஒருவர், தன்னுடைய தோளில் வெள்ளாட்டுத் தொடை இறைச்சியைத் தொங்க விட்டவராய், டாலெக் ஆற்றின் குறுக்காக இருக்கும் கயிற்று பாலம் ஒன்றில் லாந்திக் கொண்டு வந்தது, அந்தக் காட்சி ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. ஒரு வேலமரத்தின் உயர்ந்த பிளவுபட்ட கிளை ஒன்றில் அந்த இறைச்சியைக் கட்டிவிட்டார்.
வெப்பமண்டலத்தின் குறைந்தநேர வைகறை மெல்லொளியின் வண்ணங்கள் இருட்டைநோக்கி மங்கி மறைந்தபோது, பெரிய ஆண் சிறுத்தை ஒன்று மரத்தின்மீது மெதுவாக ஏறிச்சென்று அந்த இறைச்சியைப் பிய்த்து இழுக்க ஆரம்பித்தது. காட்சியைக் காணும் தளத்திலிருந்து அதைக் காண ஒளிவட்டங்களால் வெளிச்சம் காட்டப்பட்டது. என்றபோதிலும், தன் உணவை அனுபவிப்பதில் கருத்தூன்றியதாய் இருந்ததில், நாங்கள் வியப்போடும் ஆச்சரியத்தோடும் பார்த்துக் கொண்டிருந்ததை அந்தச் சிறுத்தை கவனிக்கவில்லை. இரை வைக்கப்பட்ட அந்த மரத்திற்கு அது வந்தது, இரவுநேரத்தின் பழக்கமான செயலாக இருந்தது; சுமார் ஆறு வருடங்களாக அதன் பழக்கமாக இருந்த ஒன்று என்று பின்னர் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆகவே, அடுத்த நாள் இரவு, மீண்டுமொரு காட்சி விருந்தை அனுபவித்தோம்!
“தோற்றத்தில் அழகாகவும் தன் நடமாட்டத்தில் இயல் நயம் பொருந்தியதாகவும், பெரிய பூனைகளிலேயே மிகச் சிறந்தது” என்று சிறுத்தை ஏன் விவரிக்கப்படுகிறது என்பதை எங்களால் உண்மையிலேயே போற்ற முடிந்தது. 60 கிலோகிராம் அல்லது அதற்கும் அதிக எடையை உடைய சிறுத்தையானது மிக வலிமைமிக்க தசைகளையுடைய விலங்குகளில் ஒன்றாகும்; சராசரியாக, தோள் வரையில் 60 சென்டிமீட்டருக்கு மேல் உயரம் உள்ளதாயும் மூக்கிலிருந்து வாலின் நுனி வரையாக 200 சென்டிமீட்டர் நீளமுள்ளதாயும் இருக்கிறது. அதற்கே உரியதான கறுப்புப் புள்ளிகள் அதன் பழுப்பு மஞ்சள் மேல் தோலில் ரோஜா வடிவில் அமைக்கப்பட்டிருப்பதை நோக்கும்போது, எரேமியா தீர்க்கதரிசியால் ஒருமுறை கேட்கப்பட்ட இந்தக் கேள்வி எங்கள் நினைவிற்கு வருகிறது: “எத்தியோப்பியன் தன் தோல் நிறத்தை மாற்ற இயலுமா? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமா?”—எரெமியாஸ் ஆகமம் 13:23, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
பிரகாசமான அதன் பச்சை நிறக் கண்கள் குறிப்பிடத்தக்கவை. அணுக்களாலான ஒரு விசேஷித்த அடுக்காகிய டாப்பிட்டம் என்பதால் அவை அமைக்கப்பட்டிருக்கின்றன; இரவு நேரத்தில் வழக்கத்துக்கு அதிகமான பார்வையை அது அளிக்கிறது. மனித கண்களுக்குத் தேவையானதில் ஆறில் ஒரு பங்கு வெளிச்ச அளவிலேயே சிறுத்தையால் பார்க்க முடிகிறது. இரவில், ஒளிக்கதிர் ஒன்று அதன் கண்களில் பிரகாசிக்கும்போது, இந்த அணு அடுக்கு, விழித்திரை வழியாக வெளிச்சத்தைத் திரும்பவும் பிரதிபலித்து பிரகாசிக்கும் விளைவை ஏற்படுத்துகிறது.
பகல் பொழுதில் சிறுத்தை ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தால், அது முழுச்சோர்வின் விளிம்பை எட்டியிருப்பதுபோன்று மூச்சுத்திணறிக்கொண்டு இருப்பதை நீங்கள் காண்பீர்கள். என்றபோதிலும், அது வேகமாக மூச்சுவிடுதல், திறம்பட்ட குளிரூட்டும் அமைப்பு ஒன்றின் பாகமாக இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 150 தடவைகள் வரையாக மூச்சுவிடுவதன்மூலம், அதன் நாக்கு, வாய், மூக்கு துவாரங்கள் வழியாக ஈரம் ஆவியாகி வெளியேறும்.
பெரிய பூனைகளிலேயே, நிலைமைக்கேற்றார்போல் தங்களை மிகவும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சிறுத்தைகள் வனாந்தரங்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன; மலைகளிலும் கடல் மட்டத்திலும் காணப்படுகின்றன; சீனா, இந்தியா, கென்யா போன்ற பல்வகைப்பட்ட தேசங்களிலும் காணப்படுகின்றன. சிறுத்தையின் வாழ்விடத்தின் பெரும்பகுதியில் மனித ஆக்கிரமிப்பு இருந்தபோதிலும், ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் மட்டுமே கிட்டத்தட்ட பத்து லட்சம் இருப்பதாக அறிவியலாளர்கள் கணக்கிடுகின்றனர். அவ்வாறு இருந்தபோதிலும், நூற்றாண்டுகளாக, கருத்தூன்றிய அறிவியல்பூர்வ ஆராய்ச்சிக்குப் பிடிகொடுக்காமல் ஏய்த்தது சிறுத்தை. உதாரணமாக, சீனாய் சிறுத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் யூதேயாவின் வனாந்தரத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்படும் வரையாக சிறுத்தை மறைந்துபோய்விட்டதாக நெடுங்காலமாய் கருதப்பட்டது!
மறைந்து வாழும் தன்மையுள்ள பூனை
சிறுத்தை எவ்வாறு மனித கவனத்திற்குத் தப்பித்துக்கொள்கிறது? அது அடிப்படையில், இரவு நேரத்தில் நடமாடும் ஒரு மிருகமாக இருந்து—மேலுமாக, பதுங்கி இருந்து, மறைந்து வாழும் தன்மை உடையதாய் இருப்பதன்மூலம் அவ்வாறு செய்கிறது. மனிதன் அச்சுறுத்தக்கூடிய பகுதிகளில், சிறுத்தை எச்சரிக்கையாக அமைதலுடன் இருக்கிறது. கோபமூட்டப்படும்போது மட்டுமே சிங்கத்தைப்போன்ற உறுமல்களையும் சப்தங்களையும் எழுப்புகிறது. சாதாரணமான சூழ்நிலைகளின்கீழ், அதன் ஒலி அவ்வளவு அச்சுறுத்துவதாக இல்லை; கடினமான முரட்டு ஒலியாக—ரம்பத்தால் மரத்தை அறுப்பதுபோன்ற ஒலியாக அது இருக்கிறது. சி. டி. ஆஸ்ட்லி மாபர்லியின் கிழக்கு ஆப்பிரிக்காவின் மிருகங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின்படி, அது “க்ரண்ட்-ஹா! க்ரண்ட்-ஹா! க்ரண்ட்-ஹா! க்ரண்ட்-ஹா! என்பதுபோன்று ஒலிக்கிறது; வழக்கமாக ஒரு பலத்த ஏக்க தொனியோடு முடிகிறது.” இரகசியத்தன்மைக்கான அதன் விருப்பத்திற்கு இசைவாக, பெரும்பாலும் மனிதரால் கேட்க முடியாத அளவிலுள்ள கடுமையில் குறைந்த பல்வேறு சப்தங்களையும் அது எழுப்புகிறது.
மேலுமாக, கூடிவாழும் இயல்புடைய சிங்கங்களைப் போல், சிறுத்தை கூடிவாழும் இயல்புடைய பூனை அல்ல. அவ்வப்போது ஜோடி ஜோடியாகக் காணப்பட்டாலும், சிறுத்தைகள் தனியாகவே வேட்டையாடுகின்றன. எதிர்பாராத அல்லது பகைமையான சூழ்நிலைகளை எதிர்ப்படுவதைக் குறைப்பதற்காக, 25 முதல் 65 சதுர கிலோமீட்டர் வரையாக உட்படுத்தக்கூடிய தனிப்பிராந்தியத்தைச் சிறுத்தை தனக்கு எல்லை குறித்து வைத்துக்கொள்கிறது. தன்னுடைய நடமாட்ட எல்லையை வரைந்துகொள்வதற்கு, விசேஷித்த சுரப்பிகளிலிருந்து ஒரு கசிவைத் தூவுகிறது. அந்த அடையாளத்தின் வாசனை மற்ற சிறுத்தைகளுக்கு அதன் பாலினம், வயது, பாலின தகுதி, ஒருவேளை அதன் “உரிமைக்காரர்” யார் என்பதைக்கூட தெரியப்படுத்தக்கூடும்.
சிறுத்தைக்கே உரியதான பதுங்கியிருக்கும் தன்மையுடன் வேட்டையாடுதல் நடத்தப்படுகிறது. பைபிள் காலங்களில், வீட்டு வளர்ப்பு பிராணிகள்மீது பயங்கரமான வேகத்துடன் பாய்வதற்குத் தயாராக அது பட்டணங்களுக்கு அருகாமையில் பதுங்கி இருந்ததாக அறியப்பட்டிருந்தது. (எரேமியா 5:6, NW; ஓசியா 13:7, NW; ஆபகூக் 1:8, NW) கழுதைப்புலி மற்றும் நரிகள் போன்ற தோட்டிகளிடமிருந்து தன் கொள்ளையைப் பாதுகாக்கும்படியாக, தரையிலிருந்து சுமார் 9 அல்லது 12 மீட்டர் உயரத்திலுள்ள ஒரு மரக்கிளையில் அது தன்னுடைய பெரிய இரைகளைச் சேமித்து வைக்கிறது. ஆனால், ஒரு மறிமான் அல்லது 1.5 மீட்டர் உயரமான ஒட்டைச்சிவிங்கி குட்டியை அப்பேர்ப்பட்ட உயரங்களுக்கு அதால் எப்படி எடுத்துச்செல்ல முடிகிறது? சிறுத்தை அவ்வளவு எளிதாக வெளிவிடும் இரகசியம் அல்ல இது. ஆனால், அதைப் பொறுமையாக கவனிப்பவர்கள், வெறும் அதன் உடல் பலத்தாலேயே அதைச் செய்ய முடிவதாகச் சொல்கிறார்கள். சிறுத்தைகள் மரக்கிளைகளில் சாவகாசமாகக் கிடந்துகொண்டு, கிளைகளாலும் இலைகளாலும் மறைக்கப்பட்டு, முற்றிலும் இரகசியமாக இருந்து உண்ணுவதைத் தெரிந்துகொள்கின்றன.
எதிர்க்கப்படாத வரைக்கும், சிறுத்தை தயக்கமுள்ளதாயும் பின்வாங்கும் இயல்புடையதாயும் இருந்து, மனிதனோடு நேருக்குநேர் எதிர்த்து நிற்பதைத் தவிர்க்கிறது. ஆகவே சில சிறுத்தைகள் மனிதருக்கான பயத்தை இழந்து, மனிதனைச் சாப்பிடும் விலங்குகளாக மாறியிருக்கிற போதிலும், பெரும்பாலானவை மனிதருக்கு அவ்வளவு அச்சுறுத்தலாக இல்லை. என்றபோதிலும், காயப்பட்டாலோ இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டாலோ, சிறுத்தை அதன் பகைவனிடம் எவ்வித பயத்தையும் வெளிக்காட்டுவதில்லை. சிறுத்தையின் கதை (ஆங்கிலம்) என்பதில் ஜானத்தன் ஸ்காட், “கோபமடைந்திருக்கும் சிறுத்தை, குறைந்த தூரத்து மின்னல் வேக தாக்குதலில் தன்னிடத்தில் இருக்கும் எல்லா சக்தியையும் ஒருமுகப்படுத்தும் அளவிற்கு, . . . முரட்டுத்தனத்தின் திருவுருவாகவே இருக்கிறது,” என எழுதுகிறார்.
தாய் சிறுத்தைகள்
இப்படியிருக்க, சிறுத்தைகள் அவற்றின் குட்டிகளையும் ஓரளவு மறைவிலேயே வளர்க்கிறதில் ஆச்சரியம் ஏதுமில்லை. புதிதாகப் பிறந்த குட்டிகள், பிறந்து இரண்டு மாதங்களுக்கு பெரும்பாலும் ஒரு குகையில் ஒளித்து வைக்கப்படுகின்றன. குட்டிகளை வளர்ப்பதில் தந்தைக்கு எந்தப் பாகமும் இல்லையென்றாலும், தாய் அவற்றிற்கு உணவளித்து, அவற்றைச் சுத்தம் செய்து, அனலாக வைப்பதன்மூலம் அவற்றோடு ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்குகிறது. காலப்போக்கில், ஒரே சமயத்தில் பிறந்த இரண்டு அல்லது மூன்று குட்டிகளை, அவை இன்னும் சிறியவையாக இருந்தால் அந்தத் தாய் வாயில் கவ்விக்கொண்டும் அல்லது பெரியவையாக இருந்தால் வெறுமனே தன்னைப் பின்பற்றும்படி அவற்றை அழைத்துக்கொண்டும் ஒரு புதிய இருப்பிடத்திற்குச் செல்லுகிறது.
பபூன் குரங்குகள் போன்ற பகைவர்கள் கண்ணில் படாமல் தாய் சிறுத்தை தன்னுடைய குட்டிகளைப் பாதுகாக்கவும் முயற்சி செய்கிறது. ஆனால் தன்னுடைய குட்டிகளைப் பபூன் குரங்குகள் தாக்கினால், அது அவற்றை எதிர்த்துத் தாக்கி, தன்னை ஆபத்திற்குள்ளாக்கி தன் குட்டிகள் பாதுகாப்பிடமாகச் செல்வதற்கு வாய்ப்பளிக்கிறது. தன் குட்டிகளுக்கு உணவளிப்பதற்காகவும் அது பயங்கரமான அபாயங்களை எதிர்ப்படுகிறது. பொதுவாக தயக்க சுபாவமுள்ள இந்தப் பூனை, பசியுடனிருக்கும் குட்டிகளுக்கு இறைச்சியைக் கொண்டுவருவதற்காக பிளிறுகின்ற யானை கூட்டத்தினூடே நடந்து செல்கிறது.
அக்கறைக்குரியவிதத்தில், இளம் சிறுத்தைகள் சில காலத்திற்குத் தங்கள் சுதந்திர மனப்போக்கை வெளிக்காட்டுவதில்லை. குட்டிகள் சுமார் ஆறு மாதங்களில் பால் மறக்கச் செய்யப்படுகின்றன; ஆனால் அவற்றிற்கு ஒரு வயதாகும்வரையாக தங்கள் சொந்த இரையைக் கொல்லுவதில்லை. சுமார் இரண்டரை வயது வரையாக, ஆண்கள் முழுவளர்ச்சியடைந்த தனி நபர்களாவதில்லை. வயதுவந்த பின்னரும் பெண் குட்டிகள் தங்கள் தாயின் பிராந்தியத்தைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளக்கூடும்.
சிறுத்தை —முடிவில் சமாதானமாக இருக்கிறதா?
ஆனால் அந்தக் கொஞ்சத்தக்க குட்டிகள் கொலையாளிகளாக வளர்கின்றன. இதன் காரணமாக, ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த வார்த்தைகள் எப்போதாவது நிறைவேறும் என்று நம்புவது கடினமானதாக இருக்கக்கூடும்: “ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி [“சிறுத்தை,” NW] வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்.”—ஏசாயா 11:6.
சிறுத்தைகளை வளர்ப்பு பிராணிகளாகப் பயிற்றுவிப்பதற்கான சமீபத்திய முயற்சிகளில் அவ்வளவு வெற்றி காணப்படவில்லை. ஸுகா பிஸ்லெடி வான் டர் லானும் அவரது கணவரும் தங்களுடைய ஆப்பிரிக்க பண்ணையில் சிறுத்தை குட்டிகளின் தொகுதி ஒன்றை வளர்த்தனர். அந்தக் குட்டிகள் “முழு சுதந்திரத்தை” அனுபவித்தன; அவை பெரும்பாலும் கைகளால் உணவூட்டப்பட்டன. ஆனால் அவை ஒருபோதும் பழக்கப்படவில்லை. ஸுகா பிஸ்லெடி இவ்வாறு எழுதுகிறார்: “சிறுத்தை முழுவளர்ச்சி அடைந்ததும், அது தன் சொந்த இஷ்டத்திற்கு வாழ்கிறது. ஒரு சிங்கம் எப்போதும் உங்களை நேசித்து, உங்களுக்குக் கீழ்ப்படியும்; ஒரு சிறுத்தை எப்போதும் உங்களைக் கண்டறியும், ஆனால் எந்தச் சமயத்தில் எப்படி பிரதிபலிக்கும் என்று தனக்குத் தானே தீர்மானம் செய்யும்.”
வளர்ச்சியடைந்த குட்டிகளைக் கட்டுப்பாடின்றி பண்ணையில் திரியும்படி அனுமதிப்பது ஆபத்தானது என்று முடிவில் கருதப்பட்டது. அவற்றைத் திரும்பவும் காட்டிற்குள் விடும்படி தீர்மானிக்கப்பட்டது. சிநேகப்பான்மையுள்ள மனிதர் மத்தியில் வளர்க்கப்பட்டிருந்தது, அந்த இளம் சிறுத்தைகளைப் பாதித்திருந்ததா? இல்லவே இல்லை. அங்கு விடப்பட்டு மூன்றே நாட்களுக்குள், தான் கொன்றிருந்த ஆப்பிரிக்க மான் ஒன்றின் அருகில் அந்த ஆண் சிறுத்தை உட்கார்ந்திருந்ததாகக் காணப்பட்டது.
இருந்தபோதிலும், இவ்வாறு சிறுத்தைகளைப் பயிற்றுவிப்பதில் குறைந்த வெற்றியைக் கண்டிருப்பதுதானே, சிறுத்தைக்கும் வெள்ளாட்டிற்கும் இடையிலுள்ள சமாதானத்தைப் பற்றிய ஏசாயாவின் ஏவப்பட்ட தீர்க்கதரிசனத்தைச் செல்லாததாக்குவதில்லை. இந்த வியப்பூட்டும் சம்பவம் மனித முயற்சிகளால் அல்ல, ஆனால் கடவுள் தலையிடுவதன்மூலம் சம்பவிக்கும். கடவுளுடைய ஆட்சி, விலங்குவர்க்கத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவருவதைவிடவும் அதிகத்தைச் செய்யும். “பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்,” என்று ஏசாயா முன்னறிவித்தார். (ஏசாயா 11:1-9) ஆகவே, போர் மற்றும் பிரிவுக்குக் காரணமாயிருந்த மிருகத்தனமான நடத்தையை மனிதரும்கூட கைவிட்டுவிடுவார்கள். அதே நேரத்தில், மிருக உலகத்திடமாக மனிதகுலத்தின் மனநிலையும் மாறும். இனிமேலும், எந்த மிருகமும் வெறித்தனமான படுகொலைக்கு ஆளாவதுமில்லை. மனிதன் அவற்றின் வாழ்விடத்தைக் கெடுப்பதுமில்லை, அவை தொடர்ந்து வாழ்வதை அபாயத்திற்குள்ளாக்குவதுமில்லை; ஏனென்றால், யெகோவா ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுத்திருப்பார்.’—வெளிப்படுத்துதல் 11:18.