கம்யூனிஸ்ட் தடையுத்தரவின்கீழ் 40 ஆண்டுகளுக்கும் மேல்
யார்மிலா ஹாலோவா சொன்னபடி
நேரம்: நள்ளிரவுக்குப் பின், பிப்ரவரி 4, 1952. இடம்: செக்கோஸ்லோவாகியா, ப்ராக்கிலுள்ள எங்களுடைய வீடு. இடைவிடாது அடித்த கதவுமணி எங்களை விழித்துக்கொள்ள செய்தது. பின்னர் போலீஸார் உள்ளே நுழைந்தனர்.
அம்மா, அப்பா, என்னுடைய தம்பி பவல், மற்றும் என்னை வெவ்வேறு அறைகளில் வைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நிறுத்தி போலீஸார் எல்லாவற்றையும் சோதனையிட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 12 மணிநேரம் கழித்தும் அவர்கள் இன்னும் எங்களுடைய வீட்டை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்டுபிடித்த எல்லா இலக்கியங்களையும் பட்டியலிட்டு பெட்டிகளில் அடுக்கிக்கொண்டனர்.
அதற்குப் பின், நான் ஒரு காருக்குள் ஏறும்படியாக உத்தரவிடப்பட்டேன், எனக்குக் கருப்பு கண்ணாடிகள் அணிவிக்கப்பட்டன. அது எனக்கு விநோதமாக தோன்றியது, ஆனால் கண்ணாடிகளைச் சிறிது விலக்கி அவர்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கின்றனர் என்பதைப் பார்த்தேன். தெருக்கள் எனக்குப் பழக்கப்பட்டவையாக இருந்தன. நாங்கள் போய் சேர்ந்த இடம் இழி பெயரெடுத்த அரசு பாதுகாப்பிடத்தின் தலைமைக் காரியாலயமாகும்.
அவர்கள் என்னை காரிலிருந்து வெளியே தள்ளினார்கள். பின்னர் கண்ணாடிகள் கழற்றப்பட்டபோது, ஒரு சிறிய, அழுக்கடைந்த அறையில் நான் இருப்பதாகக் கண்டேன். சீருடையில் இருந்த ஒரு பெண்மணி, என்னுடைய உடைகளைக் கழற்றி வேலை செய்வதற்கு வசதியான, வேலை செய்கையில் அணியும் தடியான காற்சட்டைகளையும் ஆண்கள் அணியும் ஷர்டையும் அணிந்துகொள்ளும்படியாக உத்தரவிட்டார்கள். என் கண்களை மூடுவதற்காக ஒரு கந்தைத் துணி என் தலையைச் சுற்றிக் கட்டப்பட்டது, கண்கள் கட்டப்பட்ட நிலையில் நான் அறையிலிருந்து வெளியே முடிவில்லாதது போல தோன்றிய நடைக்கூடங்கள் வழியாக அழைத்துச் செல்லப்பட்டேன்.
கடைசியாக, பெண் காவலர் நின்று இரும்புக்கதவைத் திறந்தார்கள், அதற்குள் தள்ளப்பட்டேன். கந்தைத் துணி என் தலையிலிருந்து நீக்கப்பட்டது, கதவு எனக்குப் பின்னால் பூட்டப்பட்டது. நான் ஒரு சிறையில் இருந்தேன். என்னுடையதைப் போன்றே உடுத்தியிருந்த 40 வயதுகளில் இருந்த ஒரு பெண்மணி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு வேடிக்கையாக இருந்தது—வித்தியாசமாகத் தோன்றினாலும் என்னால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. கைது செய்யப்படுதல் போன்றவற்றில் அனுபவமில்லாத 19 வயதுள்ள ஒரு இளம் பெண்ணாக இருந்ததால் நான் உற்சாகமாகவே இருந்தேன். விரைவில், எங்களுடைய குடும்பத்தில் வேறு எவரும் சிறையிலடைக்கப்பட்டில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
செக்கோஸ்லோவாகியா என்று அப்போது அழைக்கப்பட்ட தேசத்தில் அந்த வருடங்களில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பது ஆபத்தானதாக இருந்தது. தேசம் கம்யூனிஸ்ட் ஆட்சியின்கீழ் இருந்தது, சாட்சிகள் தடை செய்யப்பட்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்போடு எங்களுடைய குடும்பம் எவ்விதமாக இத்தனை ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதாயிற்று?
நாங்கள் எப்படி சாட்சிகளானோம்
ப்ராக்கில் பிறந்தவரான அப்பா புராட்டஸ்டன்ட் பின்னணியில், தன்னுடைய மத நம்பிக்கைகளைக் குறித்து மிகவும் உண்மையுள்ளவராக இருந்தார். மருத்துவ படிப்புக்காக ப்ராக்குக்கு வந்திருந்த என் அம்மாவை அவர் 1920-களில் சந்தித்தார். அவர்களுடைய பிள்ளைப்பருவத்தில் ரஷ்யாவின் ஒரு பாகமாக இருந்த பெசராபியா பகுதியிலிருந்து அவர்கள் வந்தவர்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு, ஒரு யூதப் பெண்ணாக இருந்தபோதிலும் தன்னுடைய கணவனின் சர்ச்சை சேர்ந்துகொண்டார்கள். என்றபோதிலும், அதில் அவர்கள் திருப்தியாக இல்லை.
இரண்டாம் உலகப் போரின் போது, அப்பா உழைப்பாளிகளின் முகாமில் போடப்பட்டார், அம்மா மயிரிழையில் படுகொலையிலிருந்து தப்பினார்கள். அவை எங்களுக்குக் கடினமான வருடங்கள், ஆனால் நாங்கள் அனைவரும் தப்பிப் பிழைத்துவிட்டோம், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 1947-ன் மத்திபத்தில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக மாறிவிட்ட என்னுடைய அப்பாவின் ஒரு அக்கா எங்களுடைய குடும்பத்துக்காக காவற்கோபுரம் சந்தா செய்திருந்தார்கள். அதை அம்மா வாசிக்க ஆரம்பித்தார்கள், உடனடியாக அவர்கள் தேடிக்கொண்டிருந்த சத்தியமாக அச்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள்.
முதலில், எங்களுக்கு அதிகத்தைச் சொல்லவில்லை, ஆனால் ப்ராக்கில் கூட்டங்கள் நடைபெறும் இடத்தைக் கண்டுபிடித்து அவற்றுக்குப் போக ஆரம்பித்தார்கள். ஒருசில மாதங்களுக்குள், 1948-ன் வசந்த காலத்தில், சாட்சிகளின் ஒரு வட்டார மாநாட்டில் அவர்கள் முழுக்காட்டப்பட்டார்கள். பின்னர் கூட்டங்களுக்கு அவர்களோடு வரும்படியாக எங்களை அழைத்தார்கள். தயக்கத்தோடு அப்பா ஒப்புக்கொண்டார்.
ஒரு குடும்பமாக நாங்கள் செல்ல ஆரம்பித்த போது கூட்டங்கள் ப்ராக்கின் நடுவில் இருந்த ஒரு சிறிய மன்றத்தில் நடைபெற்றன. அப்பாவுக்கும் எனக்கும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் நம்பிக்கையின்மையும் கலந்த உணர்வுகளே இருந்தன. எங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க ஏற்கெனவே அம்மாவுக்குப் புதிய நண்பர்கள் இருந்தது எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது. அவர்களுடைய உற்சாகமும் அவர்களுடைய நியாயத்தன்மையும், தங்கள் சகோதரத்துவத்தை எவ்வளவாக போற்றினார்கள் என்பதும் என்னைக் கவர்ந்தது.
எங்களுடைய உடன்பாடான பிரதிபலிப்பைப் பார்த்து, விளக்கமான கலந்துரையாடல்களுக்காக சாட்சிகளை எங்கள் வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்று அம்மா யோசனை தெரிவித்தார்கள். எங்களுடைய சொந்த பைபிளிலிருந்து சாவாமையுள்ள ஆத்துமாக்கள் இல்லை மற்றும் திரித்துவம் இல்லை என்பதை எங்களுக்குக் காண்பித்தபோது என் அப்பாவுக்கும் எனக்கும் எத்தனை அதிர்ச்சியாக இருந்தது! ஆம், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படும்படியும், அவருடைய ராஜ்யம் வரும்படியும் ஜெபிப்பது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைக் கற்றறிவது வியப்பூட்டும் செய்தியாக இருந்தது.
ஒருசில வாரங்களுக்குப் பின், அப்பா தன்னுடைய சர்ச்சிலுள்ள பல பாதிரிமார்களை எங்களுடைய வீட்டுக்கு அழைத்தார். அவர் சொன்னார்: “சகோதரரே, நான் உங்களோடு சில வேதப்பூர்வமான குறிப்புகளைக் கலந்துபேச விரும்புகிறேன்.” அதைச் சொன்ன பிறகு, படிப்படியாக சர்ச்சின் அடிப்படை கோட்பாடுகளை அளித்து இவை எவ்விதமாக பைபிளிலிருந்து முரண்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டார். பாதிரிமார்கள் அவர் சொன்னது சரி என்பதாக ஒப்புக்கொண்டனர். அப்பா இவ்வாறாக முடித்தார்: “நான் தீர்மானித்துவிட்டேன், சர்ச்சை விட்டு விலகிக்கொள்வதை என்னுடைய குடும்பத்தின் சார்பாக நான் தெரிவித்துவிடுகிறேன்.”
பிரசங்க வேலை தடைசெய்யப்படுகிறது
பிப்ரவரி 1948-ல், அப்பாவும் நானும் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பிப்பதற்கு சற்று முன்னால், கம்யூனிஸ்ட் கட்சி தேசத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சக மாணவர்கள் தங்கள் பேராசிரியர்களைப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுவதையும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பெற்றோருக்குப் பயப்படுவதையும் கவனித்தேன். எல்லாருமே ஒருவரிடமிருந்து ஒருவர் விலகிச் செல்ல ஆரம்பித்தனர். என்றபோதிலும், ஆரம்பத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்குத் தொந்தரவு எதுவுமிருக்கவில்லை.
எங்களுக்கு ப்ராக்கில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு 1948-ன் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. செப்டம்பர் 10 முதல் 12 வரை 2,800-க்கும் அதிகமான ஆட்கள் ஆஜராயிருந்தனர். ஒருசில வாரங்களுக்குப் பின்னர், 1948, நவம்பர் 29-ம் தேதி கிளை அலுவலகத்துக்குள் இரகசிய போலீஸ் நுழைந்து அதை மூடி முத்திரைபோட்டது. தொடர்ந்துவந்த ஏப்ரல் மாதம் எங்களுடைய வேலைக்கு அதிகாரப்பூர்வமான தடையுத்தரவு போடப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் எதுவும் எங்களுடைய குடும்பத்தைப் பயமுறுத்தவில்லை, செப்டம்பர் 1949-ல் ப்ராக்குக்கு வெளியே காட்டுப் பகுதியில் நாங்கள் ஒரு விசேஷித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். ஒரு வாரத்துக்குப் பின், அப்பாவும் நானும் முழுக்காட்டப்பட்டோம். பிரசங்க வேலையில் எச்சரிக்கையுடன் இருக்க முயற்சித்த போதிலும், ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி நான் பிப்ரவரி 1952-ல் கைதுசெய்யப்பட்டேன்.
திரும்பத் திரும்ப விசாரணை
ஒருசில தடவைகள் விசாரணை செய்யப்பட்ட பின்பு, நீண்ட காலம் சிறையில் இருப்பேன் என்ற முடிவுக்கு வந்தேன். நேரத்தைப் போக்க எதுவுமில்லாமல் ஒரு ஆள் நீண்ட காலமாக சிறையிலடைத்து வைக்கப்படுகையில், அவர் அதிகமாக ஒத்துழைக்க மனமுள்ளவராக இருப்பார் என்பதாக என்னை விசாரணை செய்தவர்கள் நினைப்பது போல தோன்றியது. ஆனால் என்னுடைய பெற்றோரின் அறிவுரை என் மனதுக்கு வந்துகொண்டே இருந்தது, அது என்னை காக்க உதவியது. அவர்கள் அடிக்கடி சங்கீதம் 90:12-ஐ மேற்கோள் காட்டி, என்னுடைய ‘நாட்களை எண்ணும்படியாக’ அதாவது, ‘ஞான இருதயத்தைக் கொண்டுவரும்படி,’ அவற்றை மதிப்பிடும்படி அல்லது மதிப்பைக் கணக்கிடும்படியாக உற்சாகப்படுத்தியிருக்கின்றனர்.
ஆகவே, என்னுடைய மனதில் முழு சங்கீதத்தையும் முன்னர் மனப்பாடம் செய்திருந்த மற்ற பைபிள் பகுதிகளையும் மறுபார்வை செய்தேன். சிறையிலடைக்கப்படுவதற்கு முன்பாக நான் படித்திருந்த காவற்கோபுர கட்டுரைகளையும்கூட தியானம் செய்து, எனக்கு நானே ராஜ்ய பாடல்களைப் பாடிக்கொண்டேன். அதைத் தவிர, சிறையில் இருந்த முதல் மாதங்களில் எனக்குப் பேசுவதற்கு சக கைதிகள் இருந்தனர். மேலுமாக, ஒருசில மாதங்களுக்கு முன்புதானே என்னுடைய இறுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்ததால், பள்ளி வகுப்பில் கற்ற காரியங்களையும் மறுபார்வை செய்ய விஷயங்கள் இருந்தன.
தகவல் கொடுப்பவர் ஒருவர் என்னுடைய பைபிள் படிப்புகள் ஒன்றிற்கு வந்திருந்து என்னுடைய பிரசங்க வேலையைக் குறித்து தெரிவித்திருக்க வேண்டும் என்பது எனக்கு விசாரணைகளின் போது தெரியவந்தது. எங்களுடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட பைபிள் பிரசுரங்களின் தட்டெழுத்துப் பிரதிகளுக்கும்கூட நானே பொறுப்பு என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்திருந்தனர். உண்மையில், 15 வயதே நிரம்பியவனாக இருந்த என்னுடைய தம்பி தட்டச்சடித்திருந்தான்.
விசாரணை நடத்தியவர்கள் கொஞ்ச நேரத்தில் நான் வேறு எவரையும் சிக்க வைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துகொண்ட போது என்னுடைய நம்பிக்கைகளில் எனக்கிருந்த மனோதிடத்தைக் குலைக்க முயற்சிகள் செய்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய பிரயாணக் கண்காணி என்பவராக நான் அறிந்திருந்த ஒரு நபரைக்கூட என்னை சந்திக்கும்படிச் செய்தனர். அவர்தானே கைதியாக இருந்தபோதிலும், இப்பொழுது அடைத்துவைக்கப்பட்டிருந்த மற்ற சாட்சிகளைத் தங்களுடைய விசுவாசத்தைக் கைவிடும்படியாகச் செய்யும் ஒரு முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகளோடு ஒத்துழைத்துக்கொண்டிருந்தார். எத்தனை பரிதபிக்கத்தக்க ஒரு ஜீவியாக இருந்தார்! பல வருடங்களுக்குப் பின், விடுவிக்கப்பட்டதற்குப் பிற்பாடு அளவுக்கு அதிகமான குடியினால் அவர் மரித்துப்போனார்.
தனியறை சிறையடைப்பு
ஏழு மாதங்களுக்குப்பின், மற்றொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தனியறை சிறையடைப்பில் போடப்பட்டேன். இப்பொழுது, முழுவதும் தனிமையில், என்னுடைய நேரத்தை எவ்வாறு செலவழிப்பது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்புள்ளவளாக இருந்தேன். புத்தகங்கள் கேட்கப்படுகையில் கொடுக்கப்பட்டன, ஆனால் எதுவும் ஆவிக்குரிய வகையான புத்தகங்கள் அல்ல. ஆகவே வாசிப்பதையும் ஆவிக்குரிய காரியங்களைத் தியானிப்பதையும் உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒரு அட்டவணையை உண்டுபண்ணிக்கொண்டேன்.
அப்போது இருந்ததைப் போல முன்னொருபோதும் என்னுடைய ஜெபங்களில் யெகோவாவிடம் அத்தனை நெருக்கமாக நான் உணர்ந்ததில்லை என்பதை சொல்லவேண்டும். உலகளாவிய நம்முடைய சகோதரத்துவத்தின் எண்ணம் முன்னொருபோதும் அத்தனை மதிப்புள்ளதாக இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பூமியின் பல்வேறு பாகங்களில் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் நற்செய்தி எவ்வாறு பரப்பப்பட்டு வரக்கூடும் என்பதை கற்பனைசெய்ய முயற்சிசெய்தேன். மக்களுக்கு பைபிள் அளிப்புகளைச் செய்ய இந்த வேலையில் நான்தானே பங்குகொள்வதாக கற்பனைசெய்து கொள்வேன்.
என்றபோதிலும், இந்த அமைதியான சூழலில், கடைசியாக ஒரு கண்ணியில் விழுந்துவிட்டேன். வாசிப்பதை எப்பொழுதும் நேசித்ததாலும் வெளியிலிருந்து வந்த கருத்துக்களை அறிய பசியாயும் இருந்தததாலும், சில சமயங்களில் என்னுடைய அட்டவணையில் ஆவிக்குரிய காரியங்களைத் தியானம் செய்வதை அசட்டைசெய்யும் அளவுக்குக் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தில் ஆழ்ந்துபோய்விடுவேன். இது சம்பவித்தப் பின் எப்போதும் மனச்சாட்சி உறுத்துவதை உணர்ந்தேன்.
இவ்விதமாக ஒரு நாள் காலை வழக்குத் தொடர்பவரின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். குறிப்பாக எதைப் பற்றியும் பேசப்படவில்லை—முந்தைய விசாரணைகளின் முடிவுகள் மாத்திரமே பேசப்பட்டன. ஏமாற்றமடைந்தேன், ஏனென்றால் என்னுடைய வழக்குக்கு விசாரணை நாள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அரைமணி நேரத்தில் திரும்பவும் என் சிறை அறையில் இருந்தேன். அங்கே என் மன அமைதியை இழந்து அழ ஆரம்பித்துவிட்டேன். ஏன்? தனிமையில் இருந்த அந்த நீண்ட வாரங்கள் கடைசியாக என்மீது எதிரான பாதிப்பை ஏற்படுத்திவிட்டதா?
என்னுடைய பிரச்சினையைக் கூர்ந்து ஆராய்ந்து சீக்கிரத்தில் காரணத்தை அடையாளம் கண்டுகொண்டேன். முந்தைய நாள் என்னுடைய வாசிப்பில் ஆழ்ந்துவிட்டிருந்தேன், மறுபடியுமாக என்னுடைய ஆவிக்குரிய நடவடிக்கைகளைச் செய்வதில் தவறியிருக்கிறேன். ஆகவே எதிர்பாராத விதமாக விசாரிப்பதற்காக கொண்டு செல்லப்படுகையில், ஜெபசிந்தையான ஒரு சரியான மனநிலையில் இல்லை. உடனடியாக யெகோவாவிடம் என் இருதயத்தை ஊற்றி, ஆவிக்குரிய காரியங்களை மறுபடியுமாக ஒருபோதும் அசட்டைசெய்யப்போவதில்லை என்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன்.
அந்த அனுபவத்துக்குப் பின், மொத்தத்தில் வாசிப்பதையே நீக்கிவிட தீர்மானித்தேன். அப்போது ஒரு மேம்பட்ட எண்ணம் எனக்கு உதித்தது, அதாவது என்னை நான் கட்டாயப்படுத்திக்கொண்டு ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்வது என்ற எண்ணம். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் குடியேறியிருந்த சமயத்தில், நாங்கள் பள்ளியில் ஜெர்மன் மொழி கற்கவேண்டியிருந்தது. ப்ராக்கில் ஜெர்மானியர் குடியேறியிருந்த சமயத்தில் அவர்கள் செய்த பயங்கரமான காரியங்களின் காரணமாக, போருக்குப் பின் மொழி உட்பட, ஜெர்மன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் மறக்க விரும்பினேன். ஆகவே இப்பொழுது மறுபடியுமாக ஜெர்மன் மொழி கற்பதற்கு என்னிடமே கண்டிப்பாக நடந்துகொள்ள தீர்மானித்தேன். என்றபோதிலும், ஒரு தண்டனையாக கருதப்பட்டது ஆசீர்வாதமாக மாறியது. இதை நான் விளக்குகிறேன்.
சில புத்தகங்களின் ஜெர்மன் மற்றும் செக் பதிப்புக்களைப் பெற்றுக்கொண்டு ஜெர்மனை செக் மொழிக்கும் செக் மொழியை ஜெர்மனுக்கும் மொழிபெயர்க்க என்னை நானே பயிற்றுவித்துக்கொள்ள ஆரம்பித்தேன். இந்த வேலையானது தனியறை சிறையடைப்பின் சாத்தியமான தீங்கிழைக்கும் பாதிப்புகளுக்கு மற்றொரு மாற்று மருந்தாக நிரூபித்தது மட்டுமல்லாமல், பின்னால் ஒரு நல்ல நோக்கத்தையும்கூட சேவித்தது.
விடுதலையும் தொடர்ந்த பிரசங்கிப்பும்
கடைசியாக, தனிமையில் எட்டு மாதங்கள் இருந்தப்பின், என்னுடைய வழக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சதி வேலைக்காக நான் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டேன். நான் ஏற்கெனவே 15 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டதாலும் புதிய ஜனாதிபதியின் தேர்தலோடு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டதாலும் விடுதலை பெற்றேன்.
சிறையிலிருக்கையில் என்னுடைய குடும்பம் என்னைப் பற்றிய கவலையில்லாமல் இருக்க வேண்டும் என்று ஜெபித்திருக்கிறேன், வீடு திரும்பியபோது இந்த ஜெபம் பதிலளிக்கப்பட்டிருந்ததை கண்டேன். அப்பா ஒரு மருத்துவராக இருந்தார், அவருடைய நோயாளிகள் பலரை பைபிளைப் படிக்க அவர் உற்சாகப்படுத்தியிருந்தார். இதன் விளைவாக, அம்மா சுமார் 15 வாராந்தர படிப்புக்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்! மேலுமாக, அப்பா ஒரு தொகுதிக்கு காவற்கோபுர பத்திரிகையில் படிப்பை எடுத்துக்கொண்டிருந்தார். உவாட்ச் டவர் சொஸைட்டியின் சில பிரசுரங்களை ஜெர்மன் மொழியிலிருந்து செக் மொழிக்கு அவர் மொழிபெயர்த்திருந்தார், என்னுடைய தம்பி கையெழுத்துப்பிரதிகளைத் தட்டச்சு செய்தான். ஆகவே நான் உடனடியாக ஆவிக்குரிய நடவடிக்கையில் மூழ்கிப்போனேன், விரைவில் பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தேன்.
ஒரு புதிய நியமனம்
நவம்பர் 1954-ல் மழைபெய்துகொண்டிருந்த ஒரு பிற்பகலில், யாரோ ஒருவர் கதவு மணியை அடித்துக்கொண்டிருந்தார். கரும் சாம்பல் நிற ப்ளாஸ்டிக் நீர்புகா மேற்சட்டையிலிருந்து தண்ணீர் வழிந்துகொண்டிருக்க, பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தும் கான்ஸ்டான்சின் பாக்கர்ட் நின்றுகொண்டிருந்தார். பொதுவாக, அவர் அப்பாவிடம் அல்லது என்னுடைய தம்பி பவலிடம் பேச விரும்புவார், ஆனால் இந்த முறை அவர் என்னிடம் பின்வருமாறு கேட்டார்: “கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வர உங்களால் வர முடியுமா?”
ஒருசில பாதசாரிகள் கடந்து போகையில் நாங்கள் மெளனமாக கொஞ்ச நேரம் நடந்தோம், தெருவிளக்குகளின் மங்கிய ஒளி இருண்ட நடைபாதையில் மங்கலாகப் பட்டு பிரதிபலித்தது. கான்ஸ்டான்சின் திரும்பிப் பார்த்தார்; எங்களுக்குப் பின்னால் தெரு வெறிச்சோடிக் கிடந்தது. “உங்களால் கொஞ்சம் வேலையில் உதவிசெய்ய முடியுமா?” என்று அவர் திடீரென்று கேட்டார். ஆச்சரியத்தோடு ஒப்புதலுக்கு அடையாளமாக தலையசைத்தேன். “மொழிபெயர்ப்பு கொஞ்சம் செய்யப்படவேண்டும்,” என்பதாக அவர் தொடர்ந்து சொன்னார். “வேலைசெய்வதற்கு நீங்கள் ஏதாவது ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், வீட்டிலும் போலீஸுக்குத் தெரிந்த எவருடனும் கூடாது.”
ஒருசில நாட்களுக்குப் பிறகு, எனக்குக் கொஞ்சமும் பழக்கமாயிராத வயதான ஒரு தம்பதிக்குச் சொந்தமான ஒரு சிறிய வீட்டில் ஒரு மேசையின்முன் அமர்ந்திருந்தேன். அவர்கள் அப்பாவின் நோயாளிகள், அப்போதுதானே அவர்களோடு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்விதமாக சிறையில் படித்த ஜெர்மன் எனக்குப் பயனுள்ளதாயிருந்தது, ஏனென்றால் அப்போது நமது இலக்கியங்கள் ஜெர்மனிலிருந்து செக்குக்கு மொழிபெயர்க்கப்பட்டன.
ஒருசில வாரங்களுக்குப் பிறகு, சகோதரர் பாக்கர்ட் உட்பட, வேலையை முன்நின்று நடத்திய கிறிஸ்தவ சகோதரர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். என்றபோதிலும் எங்களுடைய பிரசங்க வேலை நின்றுவிடவில்லை. அம்மாவும் நானும் உட்பட பெண்கள் பைபிள் படிப்பு தொகுதிகளைக் கவனிப்பதிலும் எங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்திலும் உதவிசெய்தார்கள். பருவ வயதில் இருந்தபோதிலும் என்னுடைய தம்பி பவல் தேசத்தில் செக் மொழி பேசும் பிராந்தியம் முழுவதிலுமாக இலக்கியங்களையும் அமைப்பு சம்பந்தப்பட்ட கட்டளைகளையும் எடுத்துச்செல்லும் ஒரு தூதுவனாக செயல்பட்டான்.
அன்புக்குரிய ஒரு துணை
1957-ன் பிற்பகுதியில், 1952-ல் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த ஒரு சாட்சியாகிய யாரஸ்லாவ் ஹாலா மருத்துவ சிகிச்சைக்காக தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். பவல் அவருடன் உடனடியாக தொடர்புகொண்டான், விரைவில் யாரஸ்லாவ் மறுபடியுமாக சகோதரர்களுக்கு உதவிசெய்வதில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். மொழிகளை நன்கு அறிந்திருந்த காரணத்தால் பெரும்பாலான மொழிபெயர்ப்பு வேலையை அவர் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள் மாலை 1958-ன் மத்திபத்தில், யாரஸ்லாவ் என்னையும் பேவலையும் கொஞ்ச தூரம் நடந்துவிட்டுவர அழைத்தார். எங்களுடைய வீட்டில் ஒரு மின்சார ஒலிவாங்கி மறைவாக வைக்கப்பட்டிருந்ததால், அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கலந்துரையாடுவதற்கு இவ்வாறு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் பவலோடு தனிமையில் பேசிய பிறகு, நாங்கள் இருவரும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில் அவனை ஒரு பூங்கா பென்ஞ்சில் காத்திருக்கும்படியாக சொன்னார். என்னுடைய வேலைகளைப்பற்றி சிறிது நேரம் பேசிய பின்பு, அவருடைய மோசமான உடல்நிலை மற்றும் அநிச்சயமான எதிர்காலத்தின் மத்தியிலும் அவரை திருமணம் செய்துகொள்வேனா என்பதாக கேட்டார்.
நான் பெரிதும் உயர்வாக மதித்த ஒருவரின் உண்மையான, ஒளிவுமறைவில்லாத திருமண கோரிக்கையினால் நான் ஆச்சரியமடைந்து தயக்கமின்றி அவரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டேன். எங்களுடைய நிச்சயதார்த்தம், அபிஷேகம் செய்யப்பட்டிருந்த ஒரு கிறிஸ்தவரான, யாரஸ்லாவின் அம்மாவோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியது. 1920-களின் பிற்பகுதியில் ஆரம்பத்தில் ப்ராக்கில் இருந்த சாட்சிகளில் அவர்களும் அவர்களுடைய கணவரும் இருந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது இருவருமே நாசிக்களால் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர், அவர்களுடைய கணவர் 1954-ல் கம்யூனிஸ்ட் சிறையில் மரித்துப்போனார்.
நாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன், யாரா என்று நாங்கள் அழைத்த அவர், அதிகாரிகளால் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டார். தீராத அவருடைய மார்வலி நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்—அந்தச் சமயத்தில் அது இரத்தமேற்றுவதை உட்படுத்தியிருக்கும்—அல்லது மீதமுள்ள அவருடைய தண்டனைத் தீர்ப்பு நிறைவேறும்வரையில் சிறைச்சாலையில் தங்கியிருக்க வேண்டும். அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்த காரணத்தால், இன்னும் ஏறக்குறைய பத்து வருடங்கள் அவர் சிறைச்சாலையில் இருக்கவேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்தியது. நான் அவருக்காக காத்திருக்க தீர்மானித்தேன்.
சோதனை மற்றும் தைரியத்துக்கான ஒரு காலம்
1959-ன் ஆரம்பத்தில், யாரா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அதற்குப்பின் விரைவில், அவர் நல்ல உற்சாகத்துடன் இருப்பதை உணர்த்தும் ஒரு கடிதத்தை நாங்கள் பெற்றோம். எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு கடிதம் வந்துசேருவதற்கு முன் ஒரு நீண்டகால இடைவெளி இருந்தது. யாரா நரம்பு தளர்ச்சியினால் அவதியுறுவது போல மனவருத்தங்களையும், கவலையையும் பயங்களையும் இது வெளிப்படுத்தியது. “இது வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்,” என்பதாக அவருடைய அம்மா சொன்னார்கள். ஆனால் அது அவருடைய கையெழுத்தாக இருந்தது!
அவருடைய அம்மாவும் நானும் கடவுளில் எங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தி அவரை உற்சாகப்படுத்தி எழுதினோம். பல வாரங்களுக்குப் பின்னர், மற்றொரு கடிதம் வந்தது, இன்னும் அதிகம் குழப்புவதாக இருந்தது. “இது அவர் எழுதியிருக்க முடியாது,” என்பதாக அவருடைய அம்மா மறுபடியுமாகச் சொன்னார்கள். என்றபோதிலும், எழுத்து அவருக்கே உரிய பாணியிலும் அவருடைய தனித்தன்மையான சொல்லமைப்புகளிலும் இருந்தன. இதற்கு மேல் கடிதங்களும் வரவில்லை, சந்திக்கவும் அனுமதி இல்லை.
அதேவிதமாகவே, யாராவும் எங்களிடமிருந்து வந்ததாக கருதப்பட்ட குழப்பதை உண்டாக்கும் கடிதங்களைப் பெற்றிருந்தார். அவருடைய அம்மாவின் கடிதங்கள் வயதான காலத்தில் அவர்களைத் தனிமையில் விட்டுசென்றதற்காக அவரைக் குற்றப்படுத்துபவையாகவும், என்னுடைய கடிதங்கள் அவருக்காக இத்தனை நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதைக் குறித்து எரிச்சலைக் காண்பித்தவையாகவும் இருந்திருக்கின்றன. இவையும்கூட எங்களுடைய சொந்த கையெழுத்தையும் சொல்லமைப்பு பாணியையும் ஒத்திருந்தன. முதலில் அவரும்கூட குழம்பிப்போனார், ஆனால் நாங்கள் அந்தக் கடிதங்களை எழுதியிருக்க முடியாது என்று முழு நிச்சயமாயிருந்திருக்கிறார்.
ஒரு நாள் யாரோ ஒருவர் கதவண்டையில் வந்து ஒரு சிறிய பாக்கட்டை என்னிடம் கொடுத்துவிட்டு விரைவாக வெளியே போய்விட்டார். அதில் மிகவும் சிறிய கையெழுத்தில் எழுதப்பட்ட பல சிகரெட் காகிதங்கள் இருந்தன. நாங்கள் எழுதியதாக கருதப்பட்ட கடிதங்களை அதில் அப்படியே பார்த்து எழுதியிருந்தார். தணிக்கை செய்யப்படாத அவருடைய பல சொந்தக் கடிதங்களும்கூட அதில் இருந்தன. விடுவிக்கப்பட்டிருந்த, சாட்சியாக இல்லாத ஒரு கைதியால் இரகசியமாக கடத்தப்பட்டிருந்த இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு, நாங்கள் எத்தனை நிம்மதியாகவும் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாகவும் இருந்தோம்! எங்களுடைய உத்தமத்தைத் தகர்த்துப்போட இந்தப் பேய்த்தனமான முயற்சி எவ்விதமாக, அல்லது யாரால் திறமையாக திட்டமைக்கப்பட்டது என்பது இன்று வரையாக எங்களுக்குத் தெரியாது.
பின்னால், யாராவின் அம்மா அவர்களுடைய மகனைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள். இந்தச் சமயங்களில், சிறைச்சாலைக்கு அவர்களோடு சென்று, இந்தச் சிறிய, பலவீனமான பெண்மணி தைரியமான பெரிய செயல்களைச் செய்வதை கவனித்திருக்கிறேன். காவலர்கள் கண்காணித்துக்கொண்டிருக்கையிலேயே, அவர்கள் தன் மகனின் கையைப் பிடித்து மிகச் சிறிய புகைப்படம் எடுக்கப்பட்ட இலக்கியத்தை அவருக்குக் கடத்திவிடுவார்கள். இது கண்டுபிடிக்கப்பட்டால், விசேஷமாக தன்னுடைய மகனுக்குக் கடுமையாக தண்டனை வழங்கப்படும் என்றாலும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வதே எப்பொழுதும் முதல் முக்கியத்துவமுள்ளது என்பதை உணர்ந்தவர்களாய் அவர்கள் யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
பின்னால், 1960-ல், பொது மன்னிப்பு ஒன்று வழங்கப்பட்டு பெரும்பாலான சாட்சிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். யாரா வீடு திரும்பினார், ஒருசில வாரங்களில், நாங்கள் புதிதாக திருமணம் செய்த மகிழ்ச்சியான தம்பதியினராக இருந்தோம்.
என்னுடைய வாழ்க்கை பாணியை மாற்றுவது
யாரா தேசம் முழுவதிலுமுள்ள சகோதரர்களின் அக்கறைகளைச் சேவிக்கும் பிரயாண வேலைக்கு நியமிக்கப்பட்டார். 1961-ல் தேசத்தில் செக் மொழி பேசும் பகுதியில் முதல் ராஜ்ய ஊழியப்பள்ளியை ஒழுங்குபடுத்தவும் அதற்குப்பின் பள்ளியின் அநேக வகுப்புகளை நடத்தவும் அவர் நியமிக்கப்பட்டார்.
1968-ல் அரசியல் மாற்றங்களின் காரணமாக, அதைத் தொடர்ந்து வந்த வருடத்தில் எங்களில் பலரால் ஜெர்மனி, நூரெம்பர்க்கில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய “பூமியில் சமாதானம்” சர்வதேச மாநாட்டுக்குச் செல்ல முடிந்தது. என்றபோதிலும் தேசத்தைவிட்டு வெளியே போக அதிகாரிகள் யாராவை அனுமதிக்கவில்லை. இந்த மகத்தான மாநாட்டின் சிலைடு படங்களை எங்களில் சிலர் எடுத்தோம், இந்தப் படங்களை முக்கியப்படுத்தி காண்பித்த விசுவாசத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சியை தேசம் முழுவதிலும் அளிக்கும் சிலாக்கியத்தை யாரா பெற்றார். அநேகர் இந்நிகழ்ச்சியை பலமுறை பார்க்க விரும்பினர்.
யாரா சகோதரர்களைச் சந்திக்கும் கடைசி தடவையாக இது இருக்கும் என்று நாங்கள் சிறிதும் நினைக்கவில்லை. 1970-களின் ஆரம்பத்தில், அவருடைய உடல்நிலை கவனிக்கத்தக்கவிதமாக மோசமானது. அவருக்குப் பழகிப்போயிருந்த அந்தத் தீராத அழற்சி அவருடைய சிறுநீரகங்களைப் பாதித்திருந்தது, சிறுநீரகங்கள் செயல்படாதது சாவுக்கேதுவாக ஆனது. அவர் 48 வயதில் மரித்துப்போனார்.
யெகோவாவின் உதவியினால் காக்கப்படுதல்
நான் மிகவும் நேசித்தவரை இழந்துவிட்டேன். ஆனால் கடவுளுடைய அமைப்புக்குள் உடனடியாக உதவி அளிக்கப்பட்டது, பைபிள் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டேன். இடைமாற்று ஓட்டப்பந்தயத்தில் இருப்பது போன்று, என்னுடைய கணவன் தான் செய்துகொண்டிருந்த அந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்காக குறுந்தடியை என்னிடம் கடத்தியது போல உணர்ந்தேன்.
கிழக்கு ஐரோப்பாவிலுள்ள எங்களில் அநேகர் 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் தடையுத்தரவின்கீழ் யெகோவாவைச் சேவித்திருக்கிறோம். பின்னர், 1989-ல், இரும்புத் திரை நீங்கியயோது, வாழ்க்கை இங்கு குறிப்பிடத்தக்கவிதமாக மாற ஆரம்பித்தது. யெகோவாவின் சாட்சிகள் ப்ராக்கின் மிகப் பெரிய ஸ்ட்ராஹாஃப் அரங்கத்தில் ஒரு மாநாடு நடத்தவேண்டும் என்பதாக நான் கண்டகனவு நனவாகும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. என்றபோதிலும், ஆகஸ்ட் 1991-ல், 74,000-க்கும் அதிகமான பேர் சந்தோஷமுள்ள வணக்கத்துக்காக கூடிவந்தபோது இது மகத்தான விதமாக நனவானது!
தேசம் இரண்டாக—செக் குடியரசு மற்றும் ஸ்லோவாகியா—பிரிந்தபோது செக்கோஸ்லோவாகியா ஜனவரி 1993-ல் இல்லாமற்போனது. செப்டம்பர் 1, 1993-ல் செக் குடியரசு யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கியபோது நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தோம்!
நம்முடைய நாட்களை எவ்விதமாக எண்ணுவது என்பதை யெகோவா நமக்குக் கற்பிக்கும்படியாக நாம் அவரை அனுமதிக்கும் பட்சத்தில் அவர் எப்பொழுதும் நமக்காக ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார் என்பதை என்னுடைய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அறிந்திருக்கிறேன். (சங்கீதம் 90:12) முன்னால் அவருடைய புதிய உலகில் இருக்கும் எண்ணற்ற நாட்களில் அவருடைய மகிழ்ச்சியுள்ள ஊழியர்களின் மத்தியில் இருக்கும்படி, இந்தக் காரிய ஒழுங்குமுறையில் மீதமுள்ள என்னுடைய நாட்களை எவ்விதமாக எண்ணுவது என்பதை எனக்குப் போதிக்கும்படியாக கடவுளிடம் இடைவிடாது ஜெபித்துவருகிறேன்.
[பக்கம் 19-ன் படம்]
என்னுடைய அம்மாவும் அப்பாவும்
[பக்கம் 21-ன் படம்]
தடையுத்தரவின் போது 1949-ல் காட்டுப்பகுதிகளில் ஒரு கூட்டம்: 1. என்னுடைய தம்பி பவல், 2. அம்மா, 3. அப்பா, 4. நான், 5. சகோதரர் ஹாலா
[பக்கம் 22-ன் படம்]
என்னுடைய கணவர் யாராவுடன்
[பக்கம் 23-ன் படங்கள்]
யாராவின் அம்மாவும் அவர்கள் இரகசியமாக கடத்திய இலக்கியத்தின் புகைப்படமும்
[பக்கம் 24-ன் படம்]
இன்று ப்ராக்கில் கிளை அலுவலகத்தில் வேலை