இந்த விளையாட்டு உங்களுக்கு ஏற்றதுதானா?
“ஒருவருடைய நோக்குநிலையைப் பொறுத்து, டூம் என்ற கம்ப்யூட்டர் விளையாட்டு, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும், இருதயத்தைப் படபடக்க வைக்கும் துப்பாக்கி வெடிகள் நிறைந்த விளையாட்டாக இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை ஒழுக்க தராதரத்தின் மிகத் தாழ்நிலைக்குக் கொண்டு செல்லும் வன்முறையை அப்பட்டமாகக் காண்பிக்கும் களியாட்டமாகவும் இருக்கலாம்.” தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின் “பெர்சனல் கம்ப்யூட்டர்ஸ்” என்ற தனிப்பகுதியில் பீட்டர் லூயிஸ் இவ்வாறுதான் எழுதினார். சந்தேகமேதுமின்றி, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களில் அநேகம் போலித் தோற்றம் கொடுக்கப்பட்ட வன்முறை, ரத்தவெறி படுகொலைகள், அல்லது அப்பட்டமான ஆபாசமாகவும்கூட இருக்கின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் தொடர்ச்சி டூம் II—அதன் விலை $69.95 ஆக இருந்தபோதிலும்—மிகப் பெரியளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமாதானத்தை விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு இது தகுதியான விளையாட்டுதானா? இதைத் தீர்மானிக்க லூயிஸின் தொடர்ந்த விவரிப்பு உங்களுக்கு உதவலாம்.
“விளையாடுபவர் தான் செவ்வாய்க்கிரக செயற்கைக்கோளில் இருக்கும் ஒரு முரட்டு கடற்படை வீரனைப்போல பாவனை செய்துகொள்கிறார். தொழிற்சாலை விபத்து ஒன்று நரகத்தின் கதவைத் திறந்துவிடுகிறது. . . . மீண்டுவர முடியாதபடி வளைந்து நெளிந்து செல்லும் நடைக்கூடத்தின் வழியே அவ்வீரன் கிட்டத்தட்ட ஒவ்வொரு வளைவிலும் பிசாசுகளையும் முன்பு மனிதனாக வாழ்ந்தவர்களையும் . . . குத்தியும், சுட்டும், தீயில் சுட்டெரித்தும், சங்கிலி ரம்பத்தால் அறுத்துவிட்டும் (chain sawing) சமாளித்துச் செல்லவேண்டும். . . .
“டூம் II-ல் உள்ள முன்னேற்றங்கள் இவ்வாறு எளிதில் சுருக்கிச் சொல்லப்படுகின்றன: அநேக பேய்கள், தனிமை அச்சத்தை ஏற்படுத்தும் நடைக்கூடங்கள் அநேகம், அநேக போர்க்கருவிகளும் அநேக ரத்தக்களறிகளுமேயாகும்.”
லாஸ் வேகாஸின் நிவாடாவில் நடந்த ஒரு கம்ப்யூட்டர் மாநாட்டைப்பற்றி கூறும்போது, தி நியூ யார்க் டைம்ஸ் சொன்னதாவது: “இந்த வருடத்தின் மிகப் பிரபலமான, புதிய கவர்ச்சி என்னவென்றால், பல்வேறு தொலைத்தொடர்பு மூலங்களிலும் இருந்து வரும் ஆபாசமே . . . மாநாட்டுக்கு வந்ததிலேயே மாபெரும் கூட்டங்களில் சிலவற்றை இது கவர்ந்தது.”
பைபிள் எழுத்தாளர் யாக்கோபு சொன்னார்: “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும்,” இருக்கிறது. (யாக்கோபு 3:17) பெற்றோர்களே, சமீபத்தில் உங்களுடைய பிள்ளைகள் வீட்டில் பார்க்கிற கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை சோதித்துப் பார்த்தீர்களா? இதற்கு மேலேயுமா நாங்கள் சொல்லவேண்டும்?