வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் நான் கண்ட வெற்றி
அது 1951-ஆம் ஆண்டு. கலிபோர்னியாவில் பெவெர்லி ஹில்ஸிலிருந்த ஃபைன் ஆர்ட்ஸ் தியேட்டரை நோக்கி கார்கள் வரிசையாகச் செல்ல, பிரபல நாடக மற்றும் திரையுலக நட்சத்திரங்களைக் காண தெருக்களின் ஓரங்களில் மக்கள் கூட்டமாக நின்றனர். எனது மாமாவான தியடோர் ட்ரிஸர் எழுதிய புகழ்பெற்ற ஆங்கில நாவலான அன் அமெரிக்கன் டிராஜடி-யை அடிப்படையாகக் கொண்ட எ ப்ளேஸ் இன் தி சன் முதலாவது திரையிடப்பட்ட சமயம் அது. அப்படம் அவ்வருடத்தின் அகாதமி பரிசுக்குப் போட்டியிட்ட பாரமவுண்ட் பிக்சர்ஸின் படமாகும். அவர்களுடைய மிகச் சிறந்த டைரக்டர்களில் ஒருவரான ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் அதன் டைரக்டராக இருந்தார். அந்நாட்களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களில் மூவரான எலிசபெத் டெய்லர், மான்ட்கோமெரி கிளிப்ட், ஷெல்லி வின்டர்ஸ் ஆகியோர் நடித்த படம் அது. ஆரவாரித்துக் கொண்டிருந்த கூட்டங்களைக் கடந்து சென்ற அந்தப் பெரிய கார்கள் ஒன்றினுள் நான் ஏன் இருந்தேன்? அச்சூழ்நிலைமைக்கு ஏன் நான் அவ்வளவு ஒவ்வாதவனாக உணர்ந்தேன்? இதெல்லாம் எப்படி நேரிட்டது என்பதைக் காண நாம் ஆரம்பத்திற்கு செல்வோம்.
முழு சரித்திரத்திலும் அதிமுக்கிய காலம் ஒன்றில்—அக்டோபர் 1914-ல்—அம்மாதத்தின் 20-ஆம் தேதி, பிற்பகல் சுமார் நாலரை மணியளவில், வாஷிங்டனில் உள்ள சீயட்டிலில் இருந்த எங்கள் வீட்டில் மருத்துவரின் உதவியுடன் நான் பிறந்தேன்.
அந்நாட்களில் எங்கள் குடும்பம் ஆல்கை பீச்-ல் பானேர் என்றழைக்கப்பட்ட ஒரு பகுதியில் வாழ்ந்துவந்தது. என் பெற்றோர், என் மூத்த சகோதரன், ஒரு இளைய சகோதரன் ஆகியோருடன் நானும் சேர்ந்து ஐந்து அங்கத்தினர் அடங்கியதாக எங்கள் குடும்பம் சீக்கிரத்தில் வளர்ந்தது. கடற்கரையை எதிர்நோக்கியிருந்த ஒரு பெரிய, அழகிய வீட்டில் நாங்கள் வாழ்ந்தோம். அங்கிருந்து பியூஜட் சவுண்ட்-இன் நீர்களில் சீயட்டிலின் கீழ்ப்பகுதிக்கும் அக்கரையில் இருந்த நகரங்களுக்குமிடையே கப்பல்களும் படகுகளும் சென்றுகொண்டிருக்கும் அழகிய காட்சியைக் கண்டு மகிழ முடியும்.
பங்கு சந்தை 1929-ல் சரிந்ததைத் தொடர்ந்து, பொருளாதார நிலைமை அவ்வளவு மோசமடைந்ததால் நாங்கள் ஆல்கை பீச்-ல் இருந்த வீட்டை விற்று சீயட்டிலில் ஹைலண்ட் பார்க்-ல் இருந்த ஓர் உணவுப்பண்ட கடையை அதற்கு பதிலாகப் பெற்றுக்கொண்டோம். பணச்சரிவு இருந்த அக்காலத்தில் சிறு ஊதியத்தை அது எங்களுக்குத் தந்தது.
என் தாய் 1938-ல் இறந்துபோனதால் கடையை என் தகப்பனார் கவனிக்கவேண்டியதாயிற்று. அவரோடு நானும் வியாபாரத்தில் சேர்ந்துகொண்டேன், அக்கடையை நாங்கள் ஒரு நவீன உணவு அங்காடியாக மாற்றினோம். சீக்கிரத்தில் எங்கள் வியாபாரம் செழித்தது.
டிசம்பர் 7, 1941 அன்று பெர்ல் ஹார்பர்மீது ஜப்பானியர்களின் திடீர் தாக்குதல் நடந்தது, அதற்கு சற்றுப்பின் நான் இராணுவத்தில் கட்டாயமாய் சேரவேண்டிய நிலையையும் இரண்டாம் உலகப் போரையும் எதிர்ப்பட்டேன். என் தகப்பனுக்கு வாழ சிறிது பணத்தைக் கொடுத்துவந்த அந்த வியாபாரத்தை விற்க வேண்டியதாயிற்று. இராணுவத்தில் கட்டாயமாய் சேர்க்கப்படுவதற்கு ஒருசில நாட்களுக்குமுன் நானே அதில் சேர்ந்துகொண்டேன். மிகச் சுருக்கமாக சொல்லவேண்டுமானால், இராணுவத்தில் சேருவது என் மனச்சாட்சியை உறுத்தியது. நான் ஒருவரையும் கொல்ல வேண்டிய நிலை வரக்கூடாது என்று எந்தளவு கடவுளிடம் ஜெபித்தேன் என்று எனக்கு நினைவிருக்கிறது. அடிப்படை பயிற்சிக்குப்பின், போக்குவரத்துப் பிரிவுக்கு அனுப்பப்பட்டேன். சீக்கிரத்தில் நான் இரண்டாம் லெப்டினன்ட்-ஆக நியமிக்கப்பட்டேன்.
தியடோர் ட்ரிஸருடன் என் கூட்டுறவு
இதற்குள் 1945 ஆகிவிட்டது. நான் லாஸ் ஏஞ்சலிஸ் துறைமுகத்துக்கு நியமிக்கப்பட்டேன், அங்கு பொருட்களையும் துருப்புகளையும் பசிபிக்கிலிருந்த சில இடங்களுக்குக் கொண்டு செல்ல இராணுவம் பிரத்தியேகமாக பயன்படுத்திய கப்பல்களில் பண்டக பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தேன். நியமிப்புகளுக்கு இடைப்பட்ட காலங்களில் சில சமயம் என் மாமாவான தியடோர் ட்ரிஸரையும் அவருடைய மனைவி ஹெலனையும் சென்று சந்திப்பேன். மேற்கு ஹாலிவுட்டில் அவர்களுக்கு ஓர் அழகிய வீடு இருந்தது, நான் அவர்களை சந்தித்த சமயங்களில் மிக அன்பாக என்னை கவனித்துக் கொண்டார்கள். ட்ரிஸருக்கு எதையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும் மனமிருந்தது, நான் சென்ற இடங்களைப் பற்றி என் கருத்தைத் துருவிக் கேட்கப் பிரியப்படுவார்.
நிச்சயமாகவே, ட்ரிஸருக்கு நான் டெக்ஸஸிலிருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினரான மார்ட்டின் டைஸ்-க்கும் உறவினன் என்பது தெரியும். அவர் அன்-அமெரிக்கன் செயல்பாட்டு கமிட்டிக்கு முன்னோடியான டைஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். திரைப்பட துறையிலிருந்த அநேக எழுத்தாளர்களும் பிற கலைத்தொழிலர்களும் கம்யூனிசத்தை ஆதரித்ததற்காக ஒடுக்கப்பட்டு வந்தனர், ட்ரிஸரும் இதற்கு தப்பவில்லை, ஏனெனில் அவர் ரஷ்யர்களுக்கு ஆதரவாளராக அறியப்பட்டிருந்தார். எனவே ஒரு சந்திப்பின் போது அவர் கேட்டார்: “உன் உறவினரான மார்ட்டின் டைஸை நீயும் ஆதரிக்கிறாயா?” மார்ட்டினுடனும் அவருடைய அரசியல் நோக்கங்களுடனும் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என உறுதியளித்தேன், இது ட்ரிஸருடன் என் உறவை மேலும் இணக்கமுள்ளதாக்கியது.
செப்டம்பர் 2, 1945 அன்று ஜப்பான் சரணடைந்தபோது, உலகத்தில் ஆர்வத்துக்குரிய அநேக இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இருந்ததால், இன்னும் சிறிது காலம் இராணுவத்தில் இருக்க தீர்மானித்தேன். சீக்கிரத்தில் நான் முதல் லெப்டினன்ட்-ஆக உயர்த்தப்பட்டு, ஒரு பெரிய படைக் கப்பலில் போக்குவரவு மாற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். ஜப்பானில் இருக்கையில், நான் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, ஜப்பானுக்குள் யோகஹாமாவிலிருந்து அணுகுண்டினால் அழிக்கப்பட்டிருந்த நகரமாகிய ஹிரோஷிமாவுக்குப் பயணம் செய்தேன்.
ஹிரோஷிமாவில் நான் வந்திறங்கிய அன்று காலை, மக்கள் வீடுகள் இல்லாததால் இன்னும் பூங்காவில் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கு நடந்து செல்வது எனக்கு எவ்வளவு சங்கடமாக இருந்தது என்பதைச் சொல்லவே வேண்டாம், ஏனெனில் நான் சந்தித்தவர்களில் ஏறக்குறைய அனைவருமே அந்தப் பயங்கர படுகொலையில் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்திருந்தனர். அவர்களுடைய முகங்களில் நான் கண்ட வேதனையும், சீருடையிலிருந்த எங்கள்மீது அவர்கள் கண்களில் இருந்த அல்லது இருப்பதாகத் தோன்றிய வெறுப்பும், இருதயத்தை நோகச்செய்தது.
அர்த்தத்தை நான் தேட ஆரம்பிக்கிறேன்
ஹிரோஷிமாவினாலும், அநேக சந்தர்ப்பங்களில் நான் கண்ட வியாதி, ஏழ்மை ஆகியவற்றின் காரணமாகவும் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தேன். கடலில் கப்பல்களில் செல்கையில் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திப்பதற்கு அதிக நேரமிருந்தது. சில சமயங்களில் கப்பலில் இருந்த பாதிரியிடம் பேசி வாழ்க்கையிலுள்ள அநீதிகள் பற்றிய என்னுடைய சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க முடியுமா என்று பார்ப்பேன். அந்தப் பாதிரிகள் எவருமே திருப்திகரமான பதில்களைக் கொடுக்கவில்லை.
தியடோர் ட்ரிஸர் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் வாழ்காலத்தையே செலவிட்டு, டிசம்பர் 1945-ல் இறந்தார். இதன் தீர்வை எட்டுவதில் தான் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை என்பதை இறுதியில் “என் படைப்பாளர்” என்னும் தலைப்புடைய தன் ஆங்கில கட்டுரையில் அவர் ஒத்துக்கொண்டார். என் பெரியம்மாவின் மகளான அவருடைய விதவை ஹெலன் ட்ரிஸர், அச்சமயம் ட்ரிஸருடன் என் வாழ்க்கை என்ற தலைப்பைக்கொண்ட தன் சுயசரிதையை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எழுதியதை சரிபார்க்கவும் பல நாடுகளில் அச்சடிக்கப்பட்டுக் கொண்டிருந்த தியடோரின் புத்தகங்களின் பிரசுரிப்பு சம்பந்தப்பட்ட சில வியாபார விவகாரங்களை ஏஜன்டுகளோடு கையாளவும் ஹாலிவுட்டுக்கு வரும்படி என்னை வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள். எனவே டிசம்பர் 1947-ல் நான் இராணுவத்தை விட்டு விலகி, மேற்கு ஹாலிவுட்டில் ட்ரிஸருக்குச் சொந்தமான இடத்தில் வாழ ஆரம்பித்தேன்.
ஆனால் வாழ்க்கையின் அர்த்தத்தை காணும் என் நாட்டத்தை விட்டுவிடவில்லை. ஹெலன் ட்ரிஸரும் வாழ்க்கையில் ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலைத் தேடிக்கொண்டிருந்தார்கள், எனவே நாங்கள் நியாயமானதாக தொனிக்கும் பதிலைத் தேடி பல்வேறு கூட்டங்களுக்குச் சென்றோம். எந்தக் கூட்டத்திலும் திருப்திகரமான பதில்கள் இல்லை.
பின்னர், ஹெலனின் தாயை சந்திக்க நாங்கள் ஆரிகானிலுள்ள க்ரேஷம் சென்றிருந்தபோது, போர்ட்லண்டிலிருந்த சில பெரிய ஓட்டல்களில் எலக்ட்ரிக் ஆர்கன் வாசித்த ஒரு யெகோவாவின் சாட்சியிடம் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். மதத்தைப்பற்றி நாங்கள் கலந்துரையாட ஆரம்பித்தோம். அவர் சொன்ன அநேக விஷயங்கள் நியாயமாகத் தோன்றின. நாங்கள் லாஸ் ஏஞ்சலிஸிற்குத் திரும்பினபின் அவர்களுடைய ஊழியர்களில் ஒருவர் எங்களை சந்திக்கலாமா என்று அவர் கேட்டதற்கு நான் உடனடியாக ஒத்துக்கொண்டேன்.
லாஸ் ஏஞ்சலிஸுக்குத் திரும்பியதும், உடனடியாக ஓர் யெகோவாவின் சாட்சி எங்களை வந்து சந்தித்தார். பயனியர்களாயிருந்த (முழுநேர ஊழியர்களாயிருந்த) மற்றொரு சாட்சியுடனும் அவருடைய மனைவியுடனும் நாங்கள் வாராந்திர பைபிள் படிப்பைக் கொண்டிருக்கும்படி அவர் ஏற்பாடு செய்தார். நான் ஏற்கெனவே கொண்டிருந்த சில தப்பெண்ணங்களின் காரணமாக, அந்தப் படிப்பு ஆரம்பத்தில் சுமுகமாக செல்லவில்லை, ஆனால் பைபிளின் அடிப்படையில் நியாயகாரணங்கள் விளக்கப்பட்டபோது அவை சீக்கிரத்தில் அகன்றன.
அது 1950-ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதி, ட்ரிஸரின் புத்தகங்களின் பேரில் அதிக ஆர்வம் அப்போது நிலவியிருந்தது. வெகுவாக போற்றப்பட்ட ட்ரிஸரின் இரண்டு நாவல்களைத் திரைப்படமாக உருவாக்குவதில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஈடுபட்டிருந்தது: எ ப்ளேஸ் இன் தி சன் என்ற பெயரில் 1951-ல் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அன் அமெரிக்கன் ட்ராஜடி என்ற நாவலும், அதன் பின் கேரி என்ற பெயரில் திரையிடப்பட இருந்த சிஸ்டர் கேரி எனப்பட்ட நாவலும். இவை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு அகாதமி பரிசுகளுக்குப் போட்டியிடவிருந்த பாரமவுண்ட்டின் இரு திரைப்படங்களாகும். எனவே ஹெலனுக்கு அது முக்கியமான ஆண்டாக இருந்தது, ட்ரிஸருடன் என் வாழ்க்கை என்ற புத்தகத்தை எழுதிமுடித்துவிட்டு, தான் எழுதியதை பிரசுரிக்கவிருந்த உவர்ல்ட் பப்ளிஷிங் கம்பெனியின் அதிகாரிகளைச் சந்திக்க நியூ யார்க் நகரத்திற்கு அவர்கள் சென்றுவிட்டார்கள்.
வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்ற உறுதியான முடிவுக்கு வந்தேன்
அவர்கள் போய்விட்டிருந்தபோதும், நான் என் பைபிள் படிப்பைத் தொடர்ந்தேன், பைபிளைப் பற்றி பேசுவதற்கு வீட்டுக்கு வீடு செல்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன். ஹெலன் ட்ரிஸர் நியூ யார்க்கிலிருந்து திரும்பி வருவதற்குள், நான் அவ்வளவு காலம் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தத்தை இறுதியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று நிச்சயமாய் நம்பினேன். ஆனால் பைபிள் படிப்பைத் தொடர தனக்கு இனி விருப்பமில்லை என ஹெலன் அறிவித்தபோது என்னே ஓர் ஆச்சரியம்! பைபிளிலிருந்து அவர்கள் கற்றவை உலகத்தால் புகழப்படுபவையல்ல என்பதை நியூ யார்க்கில் அவர்களுடைய கூட்டுறவுகள் நம்பச் செய்திருக்க வேண்டும். வெளிப்படையாக அவர்கள் அதை சொன்னார்கள்: “அது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் முரண்படுகிறது.” எங்களோடு தொடர்ந்து பைபிளைப் படிக்க இதனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
நான் இராணுவத்தில் இருப்பது சத்தியத்துக்கு இணக்கமாய் இராது என்பது இப்போது எனக்குத் தெரிந்தது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டுதல் பெற உறுதியாய் இருந்தேன். ஒரு சாட்சியின் வீட்டில் நீச்சல் குளம் ஒன்று இருந்தது, அங்கு விசேஷமாக எனக்கு முழுக்காட்டுதல் ஏற்பாடு செய்யப்பட்டது. யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலை செய்தவனாய், ஆகஸ்ட் 19, 1950-அன்று முழுக்காட்டப்பட்டேன். பிறகு இராணுவத்துக்கு எழுதி, நியமிக்கப்பட்ட ஊழியனாக நான் இருந்ததால் இனிமேலும் சேமப்படைப் பகுதியில் சேவை செய்யமுடியாது என தெரிவித்தேன். என் ராஜினாமா முதலில் மறுக்கப்பட்டாலும் சில மாதங்களுக்குப்பின் கண்ணியமான விடுவிப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில், பாரமவுண்ட் பிக்சர்ஸ் எ ப்ளேஸ் இன் தி சன்-ஐ வெளியிடப்போகும் சமயமாகிவிட்டது. அதன் டைரக்டரான ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் கொடுத்த ஒரு விசேஷ விருந்துக்கு நானும் ஹெலனும் அழைக்கப்பட்டோம். இப்படம் உலகிலேயே முதலாவது திரையிடப்படுவது பெவெர்லி ஹில்ஸிலிருந்த ஃபைன் ஆர்ட்ஸ் தியேட்டரில் நடைபெறுமென்றும், நாங்கள் அரங்கத்தை அடைந்ததும் கதாசிரியரின் மனைவியான ஹெலன் தேசிய வானொலியில் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இது என் மாமாவின் மனைவி ஹெலனின் அதிமுக்கிய இரவு, நானும் அவர்களோடு செல்லும்படி எதிர்பார்க்கப்பட்டேன். எனவே குறித்த நேரத்தில், நாங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்து, எங்களிடமிருந்த மிகச் சிறந்த ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டு அரங்கத்தை நோக்கி சென்றோம். அத்திரையிடுதலுக்கு வரவிருந்த பிரபல திரைப்பட நட்சத்திரங்களைக் காண ஆவலாய் தெரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தை கடந்து மெதுவாக நாங்கள் முன்னேறினோம்.
அந்தப் பகட்டாரவார காட்சியில் என் பங்கைப் பற்றி நான் எப்படி உணர்ந்தேன்? கடந்த காலங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் திரைப்படங்களில் பார்த்து அத்தகைய சூழ்நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்ததுண்டு. ஆனால், சத்தியத்தின் அறிவைப் பெற்றபின் இப்போதோ அவ்விடம் எனக்கு ஒவ்வாததைப் போல் தோன்றியது. பைபிள் 1 யோவான் 2:16-ல், “ஜீவனத்தின் பெருமை . . . பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்,” என்று சொல்வதால் அக்காரியங்களின் பேரில் யெகோவாவின் வெறுப்பை ஒருவேளை நான் உணர்ந்திருக்கக்கூடும். அந்தப் பகட்டும் ஆரவாரமும் என்னுடைய புதிய கிறிஸ்தவ வாழ்க்கைமுறைக்குப் பொருந்தாதது என்பதை எளிதாக காணமுடிந்தது. அந்தச் சிறந்த திரைப்படத்தை நான் அனுபவித்த போதிலும், அந்நிகழ்ச்சி முடிவுற்றபோது நிம்மதியாய் உணர்ந்தேன்.
அதற்குச் சற்றுப்பின், ஹெலன் ட்ரிஸருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உடலின் ஒரு பகுதியை அசைக்கமுடியாமல் ஆகிவிட்டது. இரண்டாம் முறை அது தாக்கியபின் அவர்களால் வியாபார அலுவல்களைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அவர்களுடைய சகோதரி மெர்டில் புட்சர் அவர்களுடைய காப்பாளராக இருக்க அனுமதி கோரி மனு கொடுத்தார்கள், ஆரிகானில் க்ரேஷமிலிருந்த தன் வீட்டுக்கு அழைத்து செல்ல விரும்பினார்கள். ஹெலனுக்கு அதிக கவனிப்பு தேவைப்பட்டது. அதை அவர்களுடைய சகோதரி மட்டுமே கொடுக்கமுடியுமாதலால், இதுவே அவர்களுக்கு மிகச் சிறந்தது என நான் எண்ணி அந்த மனுவை எதிர்க்கவில்லை. இப்போது நான் வேலையில்லாதவனாகி விட்டேன். நான் என்ன செய்வது? மத்தேயு 6:33-ல் உள்ள இயேசுவின் வாக்குறுதியில் எனக்கு நம்பிக்கை இருந்தது: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”
என் தகப்பன் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டிருந்ததால், இப்போது என்னை மட்டுமே நான் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனவே நான் யெகோவாவை முழுநேரமாக சேவிக்கவிரும்பினேன். கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் முழு நேர பிரசங்கிப்பாளராக யெகோவாவை சேவிக்க ஆரம்பிப்பதற்கு எனக்குத் தேவையானதை அளித்த ஒரு பகுதிநேர வேலையை ஏறக்குறைய உடனடியாகப் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயேசு சொன்னவிதமாகவே யெகோவா அவருடைய முழுநேர சேவையில் இந்த 42 ஆண்டுகளாக என்னை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
1953-ஆம் ஆண்டு கோடைகாலத்தில், நான் நியூ யார்க் நகரில் யாங்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற எனது முதலாவது சர்வதேச மாநாட்டிற்குச் சென்றேன். அது எப்பேர்ப்பட்ட கிளர்ச்சியூட்டும் அனுபவமாக நிரூபித்தது! அதற்குள் நான் என் பயனியர் சேவையில் முதலாண்டை ஏறக்குறைய முடித்திருந்தேன். அந்தச் சுவிசேஷக வேலையில் அதிக மகிழ்ச்சியாய் இருந்தபோதிலும், ராஜ்ய சேவையில் மேலுமதிக பங்கு வகிக்க விருப்பமுள்ளவனாய் இருந்தேன். சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் முழுநேர சேவைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தேன். இப்போது இந்த மாநாட்டில் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் மிஷனரி பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். லாஸ் ஏஞ்சலிஸுக்குத் திரும்பிய சிறிது காலத்துக்குப் பிறகு, சங்கத்தின் தலைமை காரியாலயமான பெத்தேலில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றபோது எவ்வளவு ஆச்சரியமடைந்தேன்!
பல்வகை உணர்ச்சிகளோடு அக்டோபர் 20, 1953 அன்று பெத்தேலுக்குச் சென்றேன், அது எப்படி இருக்கும் என்றும் பயனியராக இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்ததைப் போல் அங்கு இருக்கமுடியுமா என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அத்தீர்மானத்தைக் குறித்து கடந்த 41 வருட பெத்தேல் சேவையில் ஒரு முறையும் நான் மனம் வருந்தியதில்லை. இங்கு பெத்தேலில் நான் அனுபவித்திருக்கும் அநேக சிலாக்கியங்கள் நான் ராஜ்ய சேவையின் மற்றெந்த விதத்திலும் அனுபவித்திருக்கக்கூடியதைவிட அதிக சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்துள்ளன.
1955-ல் ஹெலன் ட்ரிஸர் இறந்துபோனார்கள். அவர்களுடைய உயிலை நிறைவேற்றுபவராகவும் சொத்துக்கு இறுதி அறக்காப்பாளராகவும் நான் நியமிக்கப்பட்டேன். தியடோர் ட்ரிஸர் தன் உயிலில் எல்லாவற்றையும் தன் மனைவிக்கு விட்டுச் சென்றிருந்தார். அவர்களுடைய சொத்தை கையாளுவது அவருடைய பதிப்புரிமை பெற்ற எல்லா புத்தகங்களின் உரிமைகளையும் உட்படுத்தியது. ட்ரிஸர் ஒழுங்காக பைபிளை வாசிப்பார் என்று ஹெலன் எனக்கு சொல்லியிருந்தார்கள், அவருடைய நூல்நிலையத்தை ஆராய்கையில் அவர் பைபிளில் ஓரத்தில் மற்ற பைபிள் மொழிபெயர்ப்பு ஒன்றில் அவ்வசனம் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தைக் குறித்து குறிப்புகள் எழுதிவைத்திருந்ததை நான் கவனித்தேன்.
ட்ரிஸரும் யெகோவாவின் சாட்சிகளும்
ட்ரிஸருடன் கலந்துரையாடியபோது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது, ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடைய அரசியல் நடுநிலைமையைப் பற்றி அவர் அறிந்திருந்தார் என்பதை பின்னர் நான் அறிந்துகொண்டேன். அவர் அமெரிக்கா இஸ் வொர்த் சேவிங்க் என்ற தன் புத்தகத்தில் கொடிவணக்க பிரச்சினையில் அவர்களுடைய நிலைநிற்கையை புகழ்ந்து எழுதினார். தான் நம்பியவற்றின் பேரில் உறுதியான நிலைநிற்கையை எடுக்க ட்ரிஸர் பயப்படவில்லை. பைபிளை நான் இப்போது அறிந்திருப்பது போல் அப்போது அறிந்திருந்தால் நாங்கள் அதிக உற்சாகமூட்டும் கலந்துரையாடல்களை கொண்டிருந்திருக்கக்கூடும்.
யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தது முதற்கொண்டு கடந்த 45 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கையில், நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தத்தை நிச்சயமாக கண்டுபிடித்திருக்கிறேன் என்று உண்மையாகவே சொல்லமுடியும். வாழ்க்கையின் அநீதிகளைப்பற்றிய என் கேள்விகள், இவ்வுலகத்தின் கடவுளும் ஆட்சியாளனுமாக இருப்பது பிசாசாகிய சாத்தானே ஒழிய, அன்பான, சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா அல்லர் என்பதை அறிந்துகொண்டதால் பதிலளிக்கப்பட்டன. (யோவான் 14:30; 2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 4:8) கடவுளுடைய ராஜ்யம் அக்டோபர் 1914-ல் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது என்பதையும், அது சீக்கிரத்தில் பூமியை ஆள ஆரம்பித்து பிசாசின் வேலைகளைத் தகர்க்கும் என்பதையும் கற்றுக்கொள்வது களிகூருவதற்கு எப்பேர்ப்பட்ட காரணமாயிருக்கிறது.—1 யோவான் 3:8; வெளிப்படுத்துதல் 20:10.
இதற்கிடையில், ஈடற்ற உன்னதப் பேரரசராகிய யெகோவாவை அறிந்துகொள்வது, அவரோடு தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது, அவருடைய ராஜ்ய சேவையில் அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கொண்டிருப்பது ஆகியவற்றை ஒரு வியாபாரி தன் பிரயாணத்தின்போது கண்டெடுத்த ஒரு முத்துக்கு ஒப்பிடலாம். அந்த முத்து அவ்வளவு மதிப்புள்ளதாய் இருந்ததால் உடனடியாக அவன் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று அதை வாங்கினான்.—மத்தேயு 13:45, 46.
இத்தகைய பொக்கிஷத்தைக் கண்டுபிடித்த நான் பின்வருமாறு ஜெபித்த சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல உணருகிறேன்: “ஆண்டவருடைய இல்லத்தில் நான் வாழ்நாள் முழுவதும் குடியிருக்க வேண்டும்; ஆண்டவருடைய இனிமையை நான் சுவைக்கவேண்டும்; அவரது ஆலயத்தை நான் பார்க்கவேண்டும்.” (சங்கீதங்கள் 26:4, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்)—ஹாரல்ட் டைஸ் சொன்னபடி.
[பக்கம் 20-ன் படம்]
மிகச் சுருக்கமாக சொல்லவேண்டுமானால், இராணுவத்தில் சேருவது என் மனச்சாட்சியை உறுத்தியது
[பக்கம் 24-ன் படம்]
1953 முதற்கொண்டு பெத்தேலில் சேவைசெய்தல்