கடவுளுடைய வாக்குறுதிகளை நீங்கள் நம்பலாமா?
நம் படைப்பாளராகிய யெகோவா தேவன் எப்பொழுதுமே வாக்கு மாறாதவராக இருந்திருக்கிறார். ‘நான் அதைச் சொன்னேன், நானே அதை நிறைவேற்றுவேன்,’ என்று அவர் சொன்னார். (ஏசாயா 46:11) இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்திச் சென்றபிறகு, கடவுளுடைய ஊழியனாகிய யோசுவா எழுதினார்: “கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”—யோசுவா 21:45; 23:14.
யோசுவாவின் நாளிலிருந்து மேசியா வரும் நாள்வரை, கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின. எரிகோவைத் திரும்பக் கட்டியவர், நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு முன்னுரைக்கப்பட்ட, தண்டனையை அனுபவித்தது ஒரு உதாரணமாக இருக்கிறது. (யோசுவா 6:26; 1 இராஜாக்கள் 16:34) பட்டினி கிடந்த சமாரியர்கள், முன்னறிவிப்புக்கு அடுத்த நாளே உண்பதற்கு ஏராளமான உணவைப் பெறுவார்கள் என்ற, நிறைவேறவே நிறைவேறாது என்று தோன்றிய, வாக்குறுதி இன்னொரு உதாரணமாகும். அந்த வாக்குறுதியைக் கடவுள் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை 2 இராஜாக்கள் 7-ம் அதிகாரத்தில் நீங்கள் வாசிக்கலாம்.
உலக வல்லரசுகளின் தோற்றமும் வீழ்ச்சியும்
உலக வல்லரசுகளின் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் பற்றிய தகவல்களை எழுதி வைக்கும்படி பைபிள் எழுத்தாளர்களை கடவுள் ஏவினார். உதாரணமாக, பலம்வாய்ந்த பாபிலோன் வீழ்ச்சியடைவதற்குக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றி முன்னறிவிக்க கடவுள் தமது தீர்க்கதரிசி ஏசாயாவைப் பயன்படுத்தினார். மெய்யாகவே, பெர்சியர்களோடு கூட்டு சேர்ந்த மேதியர்களே வெற்றிவாகை சூடுவார்கள் என பைபிள் பெயர் குறிப்பிட்டுக் காட்டியது. (ஏசாயா 13:17-19) அதைவிட இன்னும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பெர்சிய ராஜாவாகிய கோரேசுவே அந்த வெற்றிக்குத் தலைமை தாங்குவான் என்று கடவுளுடைய தீர்க்கதரிசி பெயரைச் சுட்டி காண்பித்தார். இருந்தபோதிலும் இந்தத் தீர்க்கதரிசனம் பதிவுசெய்யப்பட்டபோது கோரேசு பிறக்கக்கூட இல்லை! (ஏசாயா 45:1) ஆனால் இன்னும் அநேக உதாரணங்கள் இருக்கின்றன.
பாபிலோன் தோற்கடிக்கப்படுவது எவ்வாறு நிகழ்ந்தேறும் என்பதையும் ஏசாயா முன்னுரைத்தார். அந்நகரத்தைப் பாதுகாத்த ஐப்பிராத்து நதி ‘வற்றிப்போக வேண்டும்’ என்றும் ‘[பாபிலோனின்] வாசல்கள் பூட்டப்படாதிருக்கும்’ என்றும் அவர் எழுதினார். (ஏசாயா 44:27–45:1) வரலாற்று ஆசிரியர் ஹெரடோடஸ் அறிக்கை செய்ததுபோல, குறிப்பாக சொல்லப்பட்ட இந்த விஷயங்கள் நிறைவேறின.
பாபிலோன் இன்னும் வல்லமைபொருந்திய ராஜ்யமாகவே இருந்து வந்தபோது, அதைப் பின்தொடர்ந்து வரவிருக்கும் உலக வல்லரசுகளைப்பற்றி சொல்ல கடவுள் தமது தீர்க்கதரிசியாகிய தானியேலையும் உபயோகித்தார். அடையாள அர்த்தமுடைய இரண்டு கொம்புள்ள ஒரு ஆட்டுக்கடாவை தானியேல் ஒரு தரிசனத்தில் கண்டார். இந்த ஆட்டுக்கடாவின் முன் எந்தவொரு “மிருகமும்” நிற்கக்கூடாதிருந்தது. இரண்டு கொம்புள்ள இந்த ஆட்டுக்கடா யாரைப் பிரதிநிதித்துவம் செய்தது என்ற சந்தேகத்திற்கே இடமின்றி, அது “மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்” என்று எழுதினார் தானியேல். (தானியேல் 8:1-4, 20) உண்மையில் முன்னுரைக்கப்பட்டதுபோலவே, மேதியா-பெர்சியா பொ.ச.மு. 539-ல் பாபிலோனை வென்றபோது, அது அடுத்த உலக வல்லரசானது.
கடவுளிடமிருந்து கிடைத்த இந்தத் தரிசனத்தில் அடுத்ததாக, ‘விசேஷித்த ஒரு கொம்பை அதன் கண்களுக்கு நடுவே கொண்ட ஒரு வெள்ளாட்டுக்கடாவை’ தானியேல் பார்த்தார். தானியேல் தொடர்ந்து இவ்வாறு விவரித்தார்: ‘அது ஆட்டுக்கடாவின் கிட்டச் சேரக்கண்டேன்; அந்த வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்து அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது; அதன் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை. அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.’—தானியேல் 8:5-8.
இவையெல்லாம் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதைப்பற்றியதில் கடவுளுடைய வார்த்தை எவ்வித சந்தேகத்தையும் விட்டு வைப்பதில்லை. அதற்கான விளக்கத்தைக் கவனியுங்கள்: “ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.”—தானியேல் 8:21, 22.
இந்தக் “கிரேக்கு தேசத்தின் ராஜா” மகா அலெக்ஸாந்தர் என்பதாக வரலாறு காட்டுகிறது. அவர் பொ.ச.மு. 323-ல் மரித்தபோது, அவருடைய பேரரசு இறுதியில்—செல்யூகஸ் I நிக்கேட்டார், கஸென்டர், தாலமி I, லைஸிமக்கஸ் என்ற—அவருடைய நான்கு தளபதிகளால் பிரித்துக்கொள்ளப்பட்டது. பைபிள் முன்னுரைத்தது போலவே ‘அதற்குப் பதிலாக நாலு ராஜ்யங்கள் எழும்பின.’ முன்னுரைக்கப்பட்டதுபோல இவற்றில் ஒன்றுக்கும் அலெக்ஸாந்தருக்கு இருந்ததுபோன்ற வல்லமை ஒருபோதும் இருந்ததில்லை. இத்தகைய பைபிள் தீர்க்கதரிசனங்கள் அந்தளவுக்குக் குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தைக் கண்டதால் இவை “முன்கூட்டியே எழுதப்பட்ட வரலாறு” என்பதாக அழைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
மேசியா வாக்களிக்கப்பட்டார்
கடவுள், மனிதர்களை பாவம் மற்றும் மரணத்தின் விளைவுகளிலிருந்து விடுவிப்பதற்கு ஒரு மேசியாவை வாக்களித்தது மட்டுமல்லாமல், அந்த மேசியாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு அநேக தீர்க்கதரிசனங்களையும் கொடுத்தார். இவற்றில் ஒருசிலவற்றை மட்டும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றை நிறைவேற்ற இயேசு ஏற்பாடுகள் செய்திருக்க முடியவேமுடியாது.
வாக்களிக்கப்பட்டவர் பெத்லகேமில் பிறப்பார் என்றும் அவர் ஒரு கன்னிகையிடமிருந்து பிறப்பார் எனவும் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டது. (மீகா 5:2-ஐயும் மத்தேயு 2:3-9-ஐயும்; ஏசாயா 7:14-ஐயும் மத்தேயு 1:22, 23-ஐயும் ஒப்பிடுக.) 30 வெள்ளிக்காசுகளுக்காக அவர் காட்டிக்கொடுக்கப்படுவார் என்பதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. (சகரியா 11:12, 13; மத்தேயு 27:3-5) அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படாது என்றும் அவருடைய உடைகளின்பேரில் சீட்டுப்போடப்படும் என்றும்கூட முன்னுரைக்கப்பட்டது.—சங்கீதம் 34:20-ஐயும் யோவான் 19:36-ஐயும், சங்கீதம் 22:18-ஐயும் மத்தேயு 27:35-ஐயும் ஒப்பிடுக.
மேசியா எப்போது வருவார் என்று பைபிள் முன்னுரைத்த உண்மையானது சிறப்பாக குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. கடவுளுடைய வார்த்தை தீர்க்கதரிசனம் உரைத்ததாவது: “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்.” (தானியேல் 9:25) பைபிள் சொல்லுகிறபிரகாரம், எருசலேமின் மதில்களைத் திரும்ப எடுத்துக் கட்டுவதற்கான ஆணை அர்தசஷ்டா ராஜாவுடைய ஆட்சியின் 20-ம் வருஷம் பிறப்பிக்கப்பட்டது. இந்த வருடம் பொ.ச.மு. 455-ம் ஆண்டு என்பதாக மதச்சார்பற்ற வரலாறு குறிப்பட்டுக் காட்டுகிறது. (நெகேமியா 2:1-8) இந்த 69 வார வருடங்கள் 483 ஆண்டுகளுக்குப் பிறகு (7 x69 = 483) பொ.ச. 29-ல் முடிவடைந்தன. இயேசு முழுக்காட்டப்பட்டு, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டு மேசியாவாக, அல்லது கிறிஸ்துவாக ஆனது அதே வருடத்தில்தான்!
முக்கியமாக, கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர் லூக்கா குறிப்பிட்டதுபோல, இயேசுவின் நாளில் வாழ்ந்த மக்கள் அப்போதே மேசியா தோன்றவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். (லூக்கா 3:15) மக்கள் இவ்வாறுதான் எதிர்பார்த்தனர் என்பதற்கு ரோம வரலாற்று ஆசிரியர்களாகிய டேசிட்டஸ், சுவிட்டோனியஸ், யூத வரலாற்று ஆசிரியர் ஜொசீஃபஸ், யூத தத்துவஞானி ஃபைலோ ஜுடேயஸ் ஆகியோர் அத்தாட்சி அளித்தனர். அபா ஹிலல் சில்வர் என்பவரும்கூட இஸ்ரேலில் மேசியானிய ஊகிப்பின் வரலாறு என்ற தனது ஆங்கில புத்தகத்தில், “பொ.ச. முதல் நூற்றாண்டின் சுமார் இரண்டாம் காற்பகுதியில் மேசியா எதிர்பார்க்கப்பட்டார்,” என்று ஒத்துக்கொள்கிறார். இது ஏனென்றால், தானியேல் புத்தகத்திலிருந்து ஓரளவு பெறப்பட்ட, “அந்நாளில் அனைவரும் அறிந்த காலக் கணக்கின்படியாகும்,” என்று சொன்னார் அவர்.
இத்தகைய தகவல்களைக் கவனிக்கும்போது, தமது ராஜரீக ஆட்சியைத் தொடங்குவதற்கு மேசியா எப்பொழுது திரும்ப வருவார் என்பதைக்கூட பைபிள் குறித்துக்காட்டும் என்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. “உன்னதமானவர்,” ‘மனுஷரில் தாழ்ந்தவராகிய’ இயேசு கிறிஸ்துவுக்கு ஆட்சியைக் கொடுக்கும் சரியான காலத்தை தானியேல் தீர்க்கதரிசனத்தில் அடங்கியுள்ள காலக் கணக்கின் அத்தாட்சி சுட்டிக்காட்டியது. (தானியேல் 4:17-25; மத்தேயு 11:29) “ஏழு காலங்கள்” அல்லது ஏழு தீர்க்கதரிசன வருடங்களைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் காலம் 1914-ல் முடிவடைந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது.a
முடிவிற்கான தேதி குறிப்பிடப்படவில்லை
இருப்பினும், 1914-ம் ஆண்டு, கிறிஸ்து “[தம்முடைய] சத்துருக்களின் நடுவே” ஆட்சி செய்ய தொடங்குவதற்கான தேதியாக மட்டுமே இருந்தது. (சங்கீதம் 110:1, 2; எபிரெயர் 10:12, 13) பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், கிறிஸ்துவின் ஆட்சி பரலோகத்தில் தொடங்குகையில், பிசாசாகிய சாத்தானையும் அவனது தூதர்களையும் அவர் கீழே பூமிக்குத் தள்ளிவிடுவார் என்று வெளிப்படுத்துகிறது. பொல்லாத ஆவி ஆட்களாகிய இவர்களை அவர் இல்லாமல் ஆக்குமுன், அவர்கள் பூமியில் ‘கொஞ்சக்காலத்திற்கு’ பேரளவு கஷ்டத்தைக் கொடுப்பார்கள் என்று பைபிள் கூறுகிறது.—வெளிப்படுத்துதல் 12:7-12.
முக்கியமாக, இந்தக் ‘கொஞ்சக்காலம்’ எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கும், அர்மகெதோனில் கடவுளுடைய பகைவர்களுக்கு எதிராக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவராக கிறிஸ்து எப்போது செயல்படப்போகிறார் என்பதற்கும் பைபிள் ஒரு தேதியைக் குறிப்பிடுவதில்லை. (வெளிப்படுத்துதல் 16:16; 19:11-21) உண்மையில், முந்தைய கட்டுரையில் நாம் கவனித்ததுபோல, இந்தச் சம்பவத்திற்கான தேதி எந்த மனிதருக்கும் தெரியாதாகையால், தயாராக இருக்கும்படி இயேசு கூறினார். (மாற்கு 13:32, 33) இயேசு கூறிய இதைமீறி, தெசலோனிக்கேயாவில் இருந்த பூர்வ கிறிஸ்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் செய்ததுபோல, யாரேனும் செல்வார்களேயானால், பொய்யான, அல்லது தவறான முன்னறிவிப்புகள்தான் வரும்.—2 தெசலோனிக்கேயர் 2:1, 2.
கருத்தைத் திருத்திக்கொள்வது தேவை
1914-ன் பிற்பகுதிக்குமுன், இயேசு அப்போது திரும்பிவருவார் என்றும் வந்து அவர்களைப் பரலோகத்துக்கு அழைத்துச் செல்வார் என்றும் அநேக கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்தனர். எனவே, பைபிள் மாணாக்கர் ஏ. ஹெச். மேக்மில்லன் செப்டம்பர் 30, 1914-ம் தேதி கொடுத்த ஒரு பேச்சில் சொன்னார்: “சீக்கிரம் நாங்கள் வீட்டிற்குப் [பரலோகத்துக்கு] போகப்போகிறோம். ஆகையால் ஒருவேளை இதுதான் நான் கொடுக்கும் கடைசி பொதுப் பேச்சாக இருக்கலாம்.” சந்தேகமின்றி மேக்மில்லன் நினைத்தது தவறாக இருந்தது. ஆனால் அவரோ அவருடைய உடன் பைபிள் மாணாக்கர்களோ எதிர்பார்த்திருந்து நிறைவேறாமல் போனது இந்த ஒரு எதிர்பார்ப்பு மட்டுமல்ல.
1931-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் என்றறியப்படும் பைபிள் மாணாக்கர்கள், 1925-ம் ஆண்டில் மகத்தான பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறப்போகின்றன என்பதாகவும் எதிர்பார்த்தனர். ஆபிரகாம், தாவீது, தானியேல் ஆகிய உண்மையுள்ளவர்களாயிருந்த பூர்வகால மனிதர்களைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவரும் பூமிக்குரிய உயிர்த்தெழுதல் அச்சமயத்தில்தான் தொடங்கப்போகிறது என்பதாக அவர்கள் கருதினார்கள். மிக சமீப காலத்தில், கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் தொடக்கத்தோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் 1975-ல் ஆரம்பிக்கலாம் என்பதாக யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் ஊகித்தனர். அந்த வருடத்தில்தான் மனித வரலாற்றின் ஏழாவது ஆயிர வருடம் தொடங்கப்போகிறது என்று புரிந்துகொண்டதன் காரணமாக அவர்கள் அவ்வாறு எதிர்பார்த்தனர்.
இந்தத் தவறான கருத்துக்கள்தானே கடவுளுடைய வாக்குறுதிகள் தவறிவிட்டன, கடவுள் தவறு செய்துவிட்டார் என்றெல்லாம் அர்த்தப்படுத்திவிடவில்லை. இல்லவே இல்லை! முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்ததுபோன்ற தவறுகளும் தவறான கருத்துக்களும், ‘அக்காலத்தை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்’ என்று இயேசு கொடுத்த எச்சரிக்கைக்குக் கவனம் செலுத்த தவறியதனாலேயே ஏற்பட்டன. எடுக்கப்பட்ட தவறான முடிவுகள், தீய எண்ணத்தோடு அல்லது கிறிஸ்துவுக்கு உண்மையற்றுப் போனதனால் எடுக்கப்பட்டவையல்ல, ஆனால் கடவுளுடைய வாக்குறுதிகள் தங்களுடைய வாழ்நாட்காலத்திலேயே நடந்தேறுவதைக் காணவேண்டும் என்ற பேராவலினாலே ஆகும்.
இதன் காரணமாகவே, ஏ. ஹெச். மேக்மில்லன் பின்னர் விளக்கியதாவது: “நாம் நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, இன்னும் அதிக அறிவுக்காக கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அவ்வப்போது நம்முடைய நோக்குநிலைகளில் என்னதான் மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டியிருந்தாலும்சரி, கருணை மிகுந்த மீட்புப்பலி ஏற்பாடு, நித்திய ஜீவனுக்கான கடவுளுடைய வாக்குறுதி ஆகியவற்றை அவை மாற்றப்போவதில்லை.”
மெய்யாகவே, கடவுளுடைய வாக்குறுதிகளை நம்பலாம்! தவறுசெய்வது மனிதர்களே. ஆகவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து காத்திருக்கும் மனநிலையில் தொடர்ந்திருப்பர். இவர்கள் விழிப்புள்ளவர்களாக இருந்து, கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவராகிய கிறிஸ்துவின் தவிர்க்கமுடியாத வருகைக்குத் தயாராக இருப்பார்கள். பொய் முன்னறிவிப்புகள் அவர்களுடைய புத்தியை மந்தப்படுத்திவிடவும், உலகத்தின் முடிவைப் பற்றிய உண்மையான எச்சரிப்பை அசட்டை செய்திடவும் அனுமதிக்கமாட்டார்கள்.
அப்படியென்றால் இந்த உலகம் முடிவடையும் என்ற நம்பிக்கையைப்பற்றி என்ன? அது சீக்கிரத்தில், உங்கள் வாழ்நாளுக்குள் சம்பவிக்கும் என்பதற்கான அத்தாட்சிகள் உண்மையிலேயே இருக்கின்றனவா?
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில், 138-41 பக்கங்களைப் பாருங்கள்.
[பக்கம் 7-ன் படம்]
பாபிலோனின் வீழ்ச்சியைப்பற்றி குறிப்பான தகவல்கள் முன்கூறப்பட்டிருந்தன
[பக்கம் 9-ன் படம்]
இயேசு தம்மைப்பற்றிய அநேக தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்திருக்க முடியாது