வயதானவர்களாயிருப்பது எப்படியிருக்கும்?
“முதிர்வயதுக்கு பிறகு வருவதை யோசித்தால், முதிர்வயதே பரவாயில்லை எனத் தோன்றுகிறது.” —மாரிஸ் செவலியர்.
முதிர்வயதடைதல் இறுதியில் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. அதிலிருந்து தப்பிக்கமுடியாது. அது, இங்கு கொஞ்சம் வலி, அங்கு ஒரு சின்ன சுருக்கம், ஆங்காங்கே ஒருசில வெள்ளைமுடிகள், என்று அநேகமாக, கண்டுபிடிக்கவே முடியாத வகையில் தொடங்குகிறது. ஆனால் கடைசியில் அது தனது தளர்த்தாத பிடியில் ஆளை வைத்துக்கொள்கிறது. வரலாற்றிலேயே முதிர்வயதின் பாதிப்பை இவ்வளவதிகம் பேர் முன்னொருபோதும் அனுபவித்ததில்லை.
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு பெரிய காரணம், சாவுக்கேதுவான நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவ அறிவியல் கண்ட வெற்றியாகும். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், 65 வயதைத் தாண்டியவர்கள் மக்கள்தொகையில் சுமார் 12 சதவீதத்தினரும் ஜப்பானில் தோராயமாக 11 சதவீதத்தினருமாவர். 85 வயதைத் தாண்டிய அமெரிக்கர்கள் 1953-ல் 7,00,000 பேரிலிருந்து, 1978-ல் 21 லட்சம் பேராக அதிகரித்தனர். உண்மையில், சுமார் 50,000 அமெரிக்கர்களும் கனடாவைச் சேர்ந்த சுமார் 3,700 பேரும் நூறு வயதையோ அல்லது அதற்கு மேற்பட்ட வயதையோ தாண்டியிருக்கின்றனர்!
வயதானவர்கள் கடந்தகாலங்களைவிட அதிக பலனுள்ள வாழ்க்கையை நடத்தினாலும், ஒரு நபரின் பிற்காலம் குறிப்பிட்ட சில திறன்களில் ஏற்படும் குறைவினால் மாற்றமுடியாத வகையில் கெடுக்கப்படுகிறது. ஒருவருக்கு வயதாக வயதாக கேட்கும் திறன், பார்வைத் திறன், தசை வலிமை, சுலபமாக அசைதல் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. வயதான சிலர் தனிமையினாலும் முதுமையின் தளர்ச்சியினாலும்கூட துன்பப்படுகின்றனர். மற்றவர்களோ தங்களுடைய கவர்ச்சியை இழப்பதாக நினைத்து மனச்சோர்வடைகின்றனர்.
ஒருவர் முதிர்வயதடைவதற்கு ஏற்றார்போல எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்கிறார் என்பதன் பேரிலேயே சந்தோஷமோ சந்தோஷமின்மையோ சார்ந்திருக்கிறது. “எனக்கு அதைக் செய்கிற வயதெல்லாம் தாண்டிவிட்டது,” என்று ஒருவர் சொல்லும்போது, சிலசமயங்களில் சரீரப்பிரகாரமான திறனைவிட மனநிலைதான் செய்யக்கூடிய செயல்களைத் தடைசெய்கிறது.
இளைஞன் ஒருவன் பின்வருமாறு சொல்லும்போது கணிசமான உட்பார்வையைக் காட்டினான்: “வயதானவர்கள் என்றால், என்னுடைய அபிப்பிராயத்தில், வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதை நிறுத்திவிட்ட, வாழ்க்கையை விரும்பாத, அதில் இனியும் சந்தோஷத்தைக் கண்டடையாத ஒருவராகவே எனக்குத் தோன்றுகிறார். எந்த வயதில் ஒருவர் ‘வயதானவராக’ கருதப்படுகிறார் என்று தீர்மானிப்பது முடியாத காரியமாக இருக்கிறது. காரணம், வயதானவர்களாக தோன்றும் இளைஞர்களும், இளைஞர்களாக தோன்றும் வயதானவர்களும் இருக்கின்றனர்.”
வயதானாலும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருத்தல்
சிலருக்குப் பிற்கால வாழ்க்கை ஒருசில வழிகளில் பொற்காலமாக இருக்கிறது. சந்தோஷமுள்ள இந்த வயதானவர்கள் முறைப்படியான வேலையினால் வரும் அழுத்தங்களிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டவர்களாக மகிழ்ச்சியடைகிறார்கள். முதிர்வயதென்பது இவர்களுக்குத் தங்களுடைய பேரப்பிள்ளைகளோடு அதிக நேரத்தைச் செலவழித்து அனுபவித்து மகிழுவதாகும். தங்களுடைய சந்தோஷம் தங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதின்பேரில் சார்ந்ததில்லை என்பதை உணருகிறார்கள். தங்கள் எண்ணங்களை மனம் திறந்து பேசத் தங்குதடையற்றவர்களாக உணரக்கூடும், ஆகவே அதிக இலகுவான மனநிலையோடும் திருப்தியோடும் அவர்கள் இருக்கலாம்.
இவை மட்டுமல்லாமல், அத்தகைய ஆட்கள் தங்களுடைய சொந்த தேவைகளுக்கப்பால் நோக்கி, தேவையிலுள்ளவர்களுக்கு உதவிசெய்ய முன்வருவதில் சந்தோஷத்தைக் கண்டடைகிறார்கள். அவர்கள் குருடர்களுக்கு வாசித்துக் காட்டுவதன் மூலம் உதவுகின்றனர், வெளியில் செல்லும்போது அனாதைகளைத் தங்களோடு கூட்டிச் செல்கின்றனர், அல்லது ஊனமுற்றோர் தங்களைப்பற்றி நல்லமுறையில் எண்ணுவதற்கு உதவுகின்றனர். மற்றவர்கள் புதிய திறமைகளை வளர்த்துக்கொண்டு, குடும்பத்தைப் பராமரிக்கும்போதோ சம்பாதிக்கும்போதோ செய்ய இயலாதுபோன காரியங்களைச் செய்கின்றனர். புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர் கிராண்ட்மா மோசஸ் 75-க்கும் 79-க்கும் இடைப்பட்ட வயதில் தன் ஓவியப்பணியைத் தொடங்கி, 100 வயதுக்குப் பிறகு 25 ஓவியங்களைத் தீட்டினார்!
சந்தேகமின்றி, சந்தோஷத்தை அடைய ஒருவர் அசாத்தியமான செயல்களைச் செய்யவேண்டிய தேவையில்லை. 86 வயதில், உலகப் புகழ்பெற்ற நடிகை ஒருவர் சொன்னதாவது: “இப்போதுதான் என் வாழ்க்கையை நான் அதிகம் அனுபவித்துக் களிக்கிறேன்! இவ்வளவு வயதான பின்பா என்று யோசிக்கிறீர்களா? என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இருப்பதன் அனுகூலமானது, நான் எதிர்காலத்தையோ, கடந்தகாலத்தையோ—எந்த ஒரு சமயத்திலும் சில நாட்களுக்கு கூடுதலாக—யோசித்துப் பார்ப்பது கிடையாது. நான் தற்காலத்தை அனுபவிக்கிறேன்.” அவர் தொடர்ந்து சொன்னார்: “உங்களைப்பற்றி, உங்களுடைய வாழ்க்கையைப்பற்றி உண்மையில் திருப்திகரமாய் உணரவேண்டுமானால், உங்களுடைய பெயர் தலைப்புச் செய்திகளில் வரவேண்டிய அல்லது நீங்கள் லட்சாதிபதியாக இருக்கவேண்டிய தேவையில்லை.”
வயதானவராக இருப்பதன் மற்றொரு அனுகூலம், வாழ்க்கை முழுவதும் பெற்ற ஞானமும் அனுபவமும் ஆகும். இந்தச் சொத்துக்களை நீங்கள் போற்றுகிறீர்களா? இந்தச் சொத்துக்களைப் போற்றுகிற ஒரு பெண்மணி சொன்னார்: “வருடங்களினூடே நான் சம்பாதித்துக்கொண்ட ஞானத்தைப் போற்றுகிறேன். உண்மையிலேயே எது முக்கியமானது என்பதை கற்றுக்கொண்டது வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க எனக்கு உதவியிருக்கிறது. மெய்யாகவே அநேக வாலிபப் பெண்கள் என்னிடம் அறிவுரை கேட்டு வருகின்றனர். அவர்கள் வழக்கமாக பின்னர் வந்து: ‘உங்களிடம் பேசியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்குமுன் அவ்வாறு நான் நினைத்துப் பார்த்ததேயில்லை,’ என்று சொல்லுகின்றனர். இந்த அனுபவத்தை நான் வேறு எதற்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். என்னால் மற்றவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவியாய் இருக்கமுடிகிறதே என்று நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.”
வயதானவர்களைப் பற்றிய நோக்குநிலை
ஒரு காலத்தில் வயதானவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர், ஆகவே அவர்களுடைய அறிவுரை பின்பற்றப்பட்டது. அநேக நாடுகளில் இந்த நிலைமை மாறிவிட்டது. இப்பொழுது வயதானவர்கள் பெரும்பாலும் அசட்டை செய்யப்படுகின்றனர் ஏன், கொடுமைப்படுத்தவும்படுகின்றனர். இது வருந்தத்தக்க ஒரு நிலைமையாகும். ஏனென்றால் இளைஞர்கள் தங்களுடைய அனுகூலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஞானம் மற்றும் அனுபவத்தின் ஒரு செழுமையான வளத்தை வயதானவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இதுதானே மற்றவர்களுடைய வாழ்க்கையில் அநாவசியமாக தலையிட வயதானவர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கிறதில்லை என்பதில் சந்தேகமேயில்லை.
சந்தோஷகரமாக, சில பண்பாட்டினர் மத்தியில் வயதானவர்களுக்கு இன்னும் தகுந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. உதாரணமாக, ஜப்பானிலும், பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலும் அவர்கள் அநேக சந்தர்ப்பங்களில் குடும்ப மற்றும் கோத்திரத் தொகுதியின் மையமாகத் திகழ்ந்துவருகின்றனர். மக்கள் பொதுவாகவே நூறு வயதுக்குமேல் வாழக்கூடிய, முன்னாள் சோவியத் யூனியனின் ஜார்ஜியாவில் எப்காஸ் குடியரசில், நூற்றாண்டினர் (centenarians) இளைய தலைமுறைகளால் மதிக்கப்படுகின்றனர். வயதானவர்களின் வார்த்தை குடும்பத்துக்குள் பெரும்பாலும் வேதவாக்காக மதிக்கப்படுகிறது.
இளைஞர்கள் ஞானத்தின் இந்த வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்போது, குடும்பத் தொகுதி பலனடைகிறது. தாத்தாபாட்டிகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு விசேஷித்த உறவுமுறை நிலவக்கூடும். இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடையில் உள்ள இந்தத் தொடர்பின் மூலமாகத்தான் பிள்ளைகள் பொறுமை, பரிவு, ஒற்றுணர்வு, வயதில் மூத்தவர்களுக்கான மரியாதை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இத்தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும்போதுதான் இளைஞர்கள் மோசமான வழியில் பாதிக்கப்படுகின்றனர்.
எப்படி நடத்தப்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்?
வயதானவர்கள் மதிக்கப்படவேண்டும் என விரும்புகின்றனர். அவர்களுக்குத் தீர்மானம் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது, மேலும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குப் பொறுப்பாளிகள் என்று உணரவேண்டும். வயதாக வயதாக அவர்களுடைய சரீரப்பிரகாரமான திறமைகள் குறைந்துகொண்டு போனாலும், தங்களுடைய மனதை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்கள் பொதுவாக மனதில் தெளிவுடன் இருக்கின்றனர். தங்களுடைய சிறுபிராயத்தில் யோசித்ததுபோல் வேகமாக யோசிக்க அல்லது புதிய காரியங்களை விரைவில் கற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் என்பது உண்மைதான். அதற்காக அவர்களை ஒருபக்கம் ஒதுக்கித் தள்ளிவிடக்கூடாது. குடும்பத்தில் அவர்களின் பங்கை வேறொருவர் எடுத்துக்கொள்ளக் கூடாது. தங்களுக்காக அவர்கள் செய்துகொள்ள விரும்பும் அனுதின வேலைகளை மற்றவர்கள் எடுத்து செய்யக்கூடாது. இவ்வாறு செய்வதானது, அவர்களை பெருத்த எமாற்றமடையச் செய்து உற்சாகமிழக்கச் செய்யும், அவர்களைக் குறைபாடு உள்ளவர்களாகவும், பிரயோஜனமே இல்லாதவர்களாகவும்கூட உணரச்செய்யும்.
பலனளிக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பது வயதானவர்களுக்கு அத்தியாவசியமாக இருக்கிறது; தாங்கள் விலைமதிப்புள்ளவர்கள் என்ற உணர்ச்சியை அவர்களுக்குக் கொடுக்க உதவுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், எப்காஸ் குடியரசில் உள்ள நூற்றாண்டினருக்கு, செய்ய பெரும்பாலும் அநேக அனுதின வேலைகள் இருக்கின்றன. வயலில் வேலை செய்தல், கோழிகளுக்குத் தீவனம் வைத்தல், துணி சலவை செய்தல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், சிறு குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுதல் ஆகிய இவையனைத்தும் அவற்றில் உட்படும். சந்தேகமின்றி இவையனைத்தும் அவர்கள் நெடுநாள் வாழ்வதற்கு உதவுகின்றன. மெய்யாகவே, வயதானவர்களுக்குச் செய்வதற்கு அர்த்தமுள்ள வேலைகள் இருக்கும்போது அவர்கள் செழிப்படைகின்றனர். ஏன்? ஏனென்றால் வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.
வயதானவர்கள் பாரிசவாயுனாலோ அல்லது மற்ற வியாதியினாலோ இயலாதவர்களாகிவிட்டாலும்கூட, இன்னும் மதிப்புடன் நடத்தப்படவே விரும்புகின்றனர். அவர்களை மட்டமாக பேசுவதையோ அல்லது குழந்தையைத் திட்டுவதைப்போல் திட்டுவதையோ அவர்கள் இஷ்டப்படுவதில்லை. அவர்களால் பேசமுடியாமல்போனால், பொதுவாகவே அவர்களால் கேட்கமுடியும், ஆகவே புரிந்துகொள்ளத்தக்க வகையில், அவர்களுடைய உணர்ச்சிகள் எளிதில் புண்படக்கூடிய நிலையில் உள்ளன. சிலவேளைகளில் அதிக மருந்துகள் சாப்பிட்டதனாலும் அவர்கள் தளர்ச்சியடைந்ததுபோல் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் தளர்ந்துபோய்விடவில்லை. எனவே அவர்களைத் தகுந்தமுறையில் கவனித்துக்கொள்ள வேறெதையும்விட நம்மை அவர்கள் நிலையில் வைத்துப் பார்ப்பதே மிகமிக முக்கியமானதாக இருக்கிறது.
வயதானவர்கள் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், அவர்கள் மறக்கப்படவில்லை என்று உணரவேண்டியது அவசியமாக இருக்கிறது. அவர்களைப் பார்க்க வருபவர்களைப் போற்றுகிறார்கள். ராஜ்ய வேலையின் விஸ்தரிப்பில் கடந்தகாலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்று இப்போது இயலாத நிலையில் கிடக்கும் வயதான அங்கத்தினரை கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் போய்ப் பார்க்கத் தவறுவது எவ்வளவு வருந்தத்தக்கது! மெய்யாகவே, அவ்வாறு பார்க்கப் போவதற்கு அல்லது தொலைபேசியில் பேசுவதற்குத் தேவையான சமயமும் முயற்சியும், வயதானவர்களுக்கு அவை செய்கிற பெரிய நன்மைகளோடு ஒப்பிடுகையில் குறைவானவையாகவே இருக்கின்றன!
எனினும், மற்றவர்கள் அவர்களை எப்படித்தான் நடத்தினாலும், வயதானவர்கள் தங்களைப்பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்பதன்பேரிலேயே அதிகம் சார்ந்திருக்கிறது. 75 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் சொன்னதுபோல: “என் வாழ்க்கையை நடத்த எனக்கு உண்மையிலேயே உதவுவது என்னவென்றால், செய்வதற்கு எப்பொழுதும் ஏதாவது இருந்துகொண்டிருப்பதுதான். திட்டங்களும் நோக்கங்களும் எனக்கு இல்லையென்றால் என்னால் எதையுமே செய்யமுடியாது. எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். ஆனால் என் வயதில் உள்ள பெரும்பாலானோருக்கு அப்படித்தானே இருக்கிறது.”
வயதானவர்கள் எப்பொழுது பார்த்தாலும் குறைகூறிக்கொண்டே இருப்பவர்களாகவும், ஒத்துழைக்காதவர்களாகவும் இருப்பதைத் தவிர்க்கவேண்டும். ஒருவர் துன்பப்படுகையில், இதையெல்லாம் செய்வதொன்றும் சுலபமாக இல்லாமல்போகலாம். “எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலும், வாழ்வதனால் கிடைக்கும் என் சந்தோஷத்தை இவை குறைத்துவிடவில்லை. மனநிலைதான் எல்லாவற்றையும்விட முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு வருடங்களாக வாழ்வதனால் கிடைத்த அனுபவம் எனக்கு வளமூட்டுவதாக இருந்திருக்கிறது. இளமையாக இருப்பதன் திறவுகோல் இளைஞர்களோடு சகவாசம் கொள்வதுதான் என்று நினைக்கிறேன். என்னுடைய ஞானத்திலிருந்து அவர்கள் நன்மையடைகின்றனர், நான் அவர்களுடைய சக்தியை வெளிக்கொணருகிறேன். பாருங்கள், நான் மெய்யாகவே இருதயத்தில் வாலிபனாகவே இருக்கிறேன்,” என்றார் வயதான ஒரு மனிதர்.
என்ன செய்யப்படலாம்?
நீங்கள் இளைஞராக இருப்பீர்களென்றால், முதிர்வயதைப் பற்றிய உங்களுடைய கருத்தையும் வயதானவர்களை நீங்கள் நடத்தும் விதத்தையும் மாற்றவேண்டிய தேவை இருக்கிறதா? வயதானவராக இருப்பீர்களேயானால், இதோடு கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் உள்ள கேள்விகளை உங்களை நீங்களே ஏன் கேட்டுக்கொள்ளக்கூடாது? உங்களுடைய நிலைமையை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடியது ஏதேனும் இருக்கிறதா?
எல்லா கேள்விகளுக்கும் ஆம் என்று பதிலளிப்பீர்களானால், உங்களுக்கு ஒருபோதும் நண்பர்கள்—முதியவர்களோ இளைஞர்களோ—இல்லாமல் போய்விடமாட்டார்கள். இயல்பாகவே மற்றவர்கள் உங்களோடு இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். எல்லாவற்றையும்விட, நீங்கள் தனிமையில் இருக்கும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்; எந்த வயதிலும், வாழ்க்கை விரும்பக்கூடியதாகவும், முழுமையானதாகவும் இருப்பதைக் காண்பீர்கள்.
[பக்கம் 16-ன் பெட்டி]
வயதானவர்களுக்கு சுய-பரிசோதனை
◻ எதிர்காலத்தை நான் நம்பிக்கையோடு நோக்குகிறேனா?
◻ புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள நான் இன்னும் ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் இருக்கிறேனா?
◻ என்னால் முடிந்தளவு சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கிறேனா?
◻ ஒவ்வொரு நாளும் அது எப்படி இருந்தாலும் அதை நான் ஏற்றுக்கொண்டு அதற்குத் தேவையான மாற்றங்களை செய்துகொள்கிறேனா?
◻ நான் சந்தோஷத்தோடு இருந்து மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறேனா?
◻ என்னுடைய நகைச்சுவை உணர்வைத் தொடர்ந்து காண்பிக்கிறேனா?
◻ சுருங்கச் சொன்னால்—நான் இனிய நயத்துடன் முதுமையடைகிறேனா?
[பக்கம் 15-ன் படம்]
நீங்கள் வயதானவர்களைச் சென்று பார்க்கிறீர்களா?