‘என்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்ததுக்கு நன்றி அம்மா’
என்னுடைய கணவர் க்ளென், விமானத்தில் பறக்கச் சென்றபோதெல்லாம் நான் தவித்துக்கொண்டு இருப்பேன். வீட்டுக்கு அவர் வரும்வரை என்னால் பொறுத்திருக்க முடியாது. உல்லாசத்துக்காக அவர் விமானத்தில் பறப்பது வழக்கம். இந்தத் தடவை, விமானத்திலிருந்து சில போட்டோக்கள் எடுப்பதற்காக பணத்துக்கு அமர்த்தப்பட்டிருந்தார். எங்களுடைய சிறிய மகன் டாடு அவரோடு சென்றிருந்தான். க்ளென் எப்போதும் கவனமாக ஓட்டும் பைலட், அநாவசியமாக ஒருநாளும் தன்னை ஆபத்திற்குட்படுத்திக் கொள்வதில்லை.
அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஏப்ரல் 25, 1982-ல், ஃபோன் அடித்தபோது, அசம்பாவிதம் நடந்த உணர்வுடன் ஃபோனில் பேசினேன். ஃபோன் செய்தது என்னுடைய கொழுந்தன். “க்ளென்னும் டாடும் ப்ளேன் ஆக்ஸிடென்டில் மாட்டிக்கொண்டாங்க, நாங்க உங்களை ஆஸ்பத்திரியில் பார்க்கிறோம்,” என்று அவர் சொன்னார்.
என்னுடைய 13-வயது மகன் ஸ்காட்டும் நானும் ஒரு ஜெபம் செய்துவிட்டு வேகமாக ஆஸ்பத்திரிக்கு சென்றோம். நாங்கள் போய் சேர்ந்தபோது, நியூ யார்க் நகரத்திற்கு வடக்கே கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரத்தில் க்ளென்னுடைய விமானம் உடைந்து சிதறியிருந்தது என்பதை தெரிந்துகொண்டோம். (அந்த விபத்திற்கான சரியான காரணம் தீர்மானிக்கப்படவே இல்லை.) க்ளென்னும் டாடும் உயிரோடிருந்தாலும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்கள்.
தேவையான சிகிச்சை கொடுப்பதற்கு ஆஸ்பத்திரிக்கு அனுமதியளிக்கிற சட்டசம்பந்தமான படிவங்களில் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். ஆனால் ஒரு யெகோவாவின் சாட்சியாக, இரத்தமேற்ற நான் சம்மதிக்க மறுத்தேன். அப்படிச் செய்வது ‘இரத்தத்திற்கு விலகியிருக்கும்படியான’ பைபிளின் கட்டளையை மீறுவதாக இருந்திருக்கும். (அப்போஸ்தலர் 15:28, 29) இந்த விஷயத்தில் க்ளென், அவருடைய நம்பிக்கைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த மருத்துவ ஆவணம் ஒன்றை தன்னிடம் வைத்திருந்தார். இருந்தபோதிலும், கன அளவைப் பெருக்கிடும் இரத்தமில்லாத பொருட்களை (nonblood volume expanders) பயன்படுத்தும்படி டாக்டர்களுக்கு நாங்கள் அனுமதியளித்தோம்.a
க்ளென்னுக்கு தலையிலும் நெஞ்சிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. சில மணிநேரங்களுக்குள்ளாகவே அவர் இறந்துவிட்டார். நான் இதுவரை என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த காரியத்திலேயே மிகக் கடினமான காரியம், வெயிட்டிங் ரூமுக்குச் சென்று என்னுடைய மகன் ஸ்காட்டிடம் அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னதுதான். அவன் என்னைப் பற்றிப்பிடித்துக்கொண்டு சொன்னான்: “நான் இப்ப என்ன செய்வேன்? என்னுடைய மிகச் சிறந்த நண்பரை இழந்துவிட்டேனே!” ஆமாம், க்ளென் தன்னுடைய மகன்கள் இருவருக்கும் மிகச் சிறந்த ஒரு நண்பராக இருந்திருந்தார்; பொழுதுபோக்கிலும் வணக்கத்திலும் அவர்களுடன் நேரத்தை செலவழித்தார். அவர் எனக்கும்கூட மிகச் சிறந்த நண்பராகவும் கணவராகவும் இருந்தார். அவருடைய மரணம் பயங்கரமான ஒரு இழப்பாக இருந்தது.
எங்களுடைய உறுதிப்பாடான நம்பிக்கைகளைக் காத்துக்கொள்ளுதல்
டாடுவுடைய காலும் விரல்களும் உடைந்திருந்தன, கடைவாய் எலும்புகள் நொறுங்கிவிட்டன, மேலும் மூளையில் கவலைக்கிடமான காயம் ஏற்பட்டிருந்தது. அவன் சுயநினைவிழந்த நிலைக்குச் சென்றுவிட்டான். சில மணிநேரங்களுக்கு முன்புவரை உயிர்த்துடிப்புடனிருந்த என்னுடைய ஒன்பது வயது மகனைப் பார்ப்பது எவ்வளவு வேதனையாக இருந்தது! டாடு எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சி நிரம்பிய குட்டிப்பையனாக துருதுருவென்று இருந்தான். அவன் வாயடிப்பவனாக இருந்தான், பாடுவதையும் ஓடியாடி விளையாடுவதையும் விரும்பினான். இப்பொழுது அவனுக்கு நாங்கள் வந்திருப்பதுகூட தெரியாதிருந்தது.
டாடுவுக்கு சிகிச்சை செய்யவேண்டிய அவசியமேற்படலாம் என்று பயந்ததினால், இரத்தமேற்றுவதற்கு நான் சம்மதிக்க வேண்டுமென்று டாக்டர்கள் வற்புறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன். இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்களை அனுமதிக்கும் நீதிமன்ற ஆணையைப் பெற்றுக்கொண்டதன்மூலம் செயல்பட்டார்கள். இருந்தாலும், அந்த சிகிச்சை செய்யவேண்டிய அவசியமில்லாமல் போனது, டாடுவுக்கு எந்தவித உட்புற இரத்தக்கசிவும் ஏற்படவில்லை. இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, எப்படியிருந்தாலும் அவனுக்கு இரத்தமேற்றப் போகிறோம் என்பதாக டாக்டர்கள் என்னிடம் சொன்னார்கள். நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம்! “நாங்கள் அதைக் கட்டாயம் செய்ய வேண்டும்!” என்பது மட்டும்தான் அவனுடைய டாக்டர் எங்களுக்குக் கொடுத்த விளக்கம். அவர்கள் எங்களுடைய மத நம்பிக்கைகளை ஒருபுறம் தள்ளிவிட்டு, டாடுவுக்கு மூன்று யூனிட் இரத்தம் கொடுத்தார்கள். நான் முழுவதுமாக நிராதரவானவளாய் உணர்ந்தேன்.
அந்த விபத்து நடந்ததைத் தொடர்ந்துவந்த அநேக நாட்களுக்கு செய்தித்தாளில் எங்களைப் பற்றிதான் முதல் பக்க செய்தி வந்தது. அந்த உள்ளூர் செய்தித்தாள், இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுத்ததினால் க்ளென் இறந்துவிட்டார் என்று வாசகர்கள் நம்பும்படி செய்தது. அதோடு அந்த அபிப்பிராயத்தைச் சொன்ன உள்ளூர் மருத்துவரையும்கூட மேற்கோள் காட்டி எழுதியது! இது உண்மை அல்ல. க்ளென்னுக்கு தலையிலும் நெஞ்சிலும் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் அவர் உயிர் பிழைத்திருக்கவே முடியாது என்பதை பிரேதப் பரிசோதனை செய்பவர் பிற்பாடு உறுதிப்படுத்தினார். மகிழ்ச்சிகரமாக, பைபிள் அடிப்படையிலான எங்களுடைய நிலைநிற்கையை விளக்குவதற்கு சாட்சியாக இருக்கும் அநேக ஊழியர்களை உள்ளூர் வானொலி நிலையம் அழைத்தது. இது ஓரளவுக்கு நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டுவந்தது. இரத்தத்தின் பேரிலான யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கையானது, எங்களுடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பொதுவான பேச்சுப்பொருளாக ஆனது.
டாடுவைப் பிழைக்கவைக்க முயற்சிகள்
டாடு தொடர்ந்து சுயநினைவிழந்த நிலையில் இருந்தான். பின்பு மே 13 அன்று, ஒரு நர்ஸ் அவனை படுக்கையின்மீது புரட்டிப் படுக்கவைத்தார், கடைசியில் அவன் கண்ணைத் திறந்தான்! நான் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவனுடன் பேச முயற்சிசெய்தேன், ஆனால் எந்தவித பதிலுமில்லை. அவன் கண்ணைச் சிமிட்டவோ என்னுடைய கையை இறுகப்பற்றவோ இல்லை. ஆனால் அதுமுதற்கொண்டு அவன் சீராக முன்னேற ஆரம்பித்தான். நாங்கள் அவன் அறைக்குள் நடந்து சென்றபோது, அவனுடைய தலை கதவுபக்கமாக திரும்பும். நாங்கள் அவனிடம் பேசியபோது, அவன் எங்களைப் பார்ப்பான். நாங்கள் அங்கே இருந்தோம் என்பதை உண்மையில் டாடு அறிந்திருந்தானா? எங்களுக்குத் தெரியவில்லை. ஆகவே, மனதின்பிரகாரமாகவும் சரீரப்பிரகாரமாகவும் அவனைக் கிளர்ச்சியடைந்தவனாய் வைப்பதற்கு நாங்கள் முயற்சிக்க ஆரம்பித்தோம். அந்த முதல் நாளிலிருந்து நாங்கள் அவனிடம் பேசினோம், அவனுக்கு வாசித்துக் காண்பித்தோம், அவனுக்காக இசையையும் பைபிள் சம்பந்தப்பட்ட டேப்புகளையும் போட்டுக் காட்டினோம். அவனுக்காக நான் என்னுடைய கிட்டாரையும்கூட வாசித்துக் காட்டினேன்; எங்கள் இருவருக்கும் அது சிகிச்சை அளித்தது.
யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையிலிருந்து நாங்கள் அதிக உதவியைப் பெற்றோம். என்னுடைய மூத்த மகன் ஸ்காட், கொஞ்ச நாளுக்கு முன்பு நினைவுபடுத்தி சொன்னான்: “இரண்டு குடும்பத்தார் உண்மையிலேயே என்னை அவர்களுடைய சொந்த மகன்போல ஏற்றுக்கொண்டு, விடுமுறை நாட்களில் அவர்களுடைய குடும்பத்தில் என்னை சேர்த்து அழைத்துச் சென்றார்கள்.” அதோடு, சிலர் எங்களுடைய புல்தரையை வெட்டினார்கள், சலவை செய்தார்கள், எங்களுக்காக சமையலும் செய்துகொடுத்தார்கள். மேலும் நண்பர்களும் குடும்ப அங்கத்தினர்களும் ஆஸ்பத்திரியில் இராத்திரி பூராவும் மாறிமாறி டாடுவுடன் தங்கியிருந்தார்கள்.
இருந்தாலும், அநேக வாரங்களாக இப்படிப்பட்ட கவனிப்புக்கு டாடுவால் பிரதிபலிக்க முடியவில்லை—சிரிக்கக்கூட இல்லை. பின்பு அவனுக்கு நுரையீரல் அழற்சி வந்தது. டாடுவை மறுபடியும் மூச்சுக்கருவியில் (respirator) வைப்பதற்கு டாக்டர் என்னுடைய அனுமதியைக் கேட்டார். இனி காலம்பூராவும் அவன் அதைச் சார்ந்திருப்பவனாக ஆகக்கூடிய ஆபத்து இருந்தது. கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: ஜீவனா மரணமா என்பதைத் தீர்மானிப்பது என்னுடைய கையில் விழுந்தது! இருந்தாலும், இரத்தமேற்றுகிற விஷயத்தைக் குறித்ததில், என்னுடைய விருப்பங்கள் அடியோடு அசட்டை செய்யப்பட்டிருந்தன! எப்படியிருந்தபோதிலும், மூச்சுக்கருவியைப் பயன்படுத்த முடிவுசெய்து, ஒரு நல்ல பலனுக்காக எதிர்பார்த்திருந்தோம்.
சிறிது களைப்பாற அந்த நாள் பிற்பகலில் நான் வீட்டுக்குப் போய்விட்டேன். எங்கள் வீட்டுக்கு முன்புறத்திலுள்ள புல்தரையில் நின்றுகொண்டிருந்தவர் ஓர் அரசாங்க அதிகாரி. சாலையை விரிவுபடுத்துவதற்காக எங்களுடைய வீட்டை விற்கவேண்டும் என்று எங்களிடம் அவர் தெரிவித்தார். இப்பொழுது போராடுவதற்கு இன்னொரு பெரிய நெருக்கடி எங்களுக்கு வந்துவிட்டது. நாங்கள் சமாளிக்க முடியாத அளவுக்கும் மேலாக கஷ்டப்படும்படி யெகோவா ஒருக்காலும் எங்களை விடமாட்டார் என்று நான் எப்பொழுதும் மற்றவர்களிடம் சொல்லியிருந்தேன். 1 பேதுரு 5:6, 7-ஐ நான் மேற்கோள் காட்டுவேன்: “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” கடவுளில் இருந்த என்னுடைய விசுவாசமும் நம்பிக்கையும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டன.
வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தன, ஒரு தொற்றுநோய் விட்டு மற்றொன்றாக டாடுவுக்கு வந்துகொண்டிருந்தது. எந்தநாள் பார்த்தாலும் இரத்தப் பரிசோதனைகள், தண்டுவட வடிகுழல் முறைகள் (spinal taps), எலும்பை ஸ்கேன் செய்தல், மூளையை ஸ்கேன் செய்தல், நுரையீரல் வடிகுழல் முறைகள் (lung taps), கணக்கே இல்லாத எக்ஸ் ரே-க்கள். ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக, டாடுவுடைய உடலின் வெப்பநிலை கடைசியாக இயல்பான நிலைக்கு வந்தது. டாடுவுக்குப் பயன்படுத்தப்பட்ட உணவு மற்றும் சுவாசக் குழாய்கள் ஆகஸ்டில் நீக்கப்பட்டன! நாங்கள் இப்பொழுது எல்லாவற்றைக் காட்டிலும் மிகப் பெரிய சவாலை எதிர்ப்பட்டோம்.
வீட்டுக்குத் திரும்பிவருதல்
விசேஷ மருத்துவ காப்பகத்தில் டாடுவை சேர்ப்பது மிகச் சிறந்தது என்பதாக டாக்டர்கள் எங்களிடம் சொல்லியிருந்தார்கள். ஸ்காட்டுவுக்கும் எனக்கும் எங்களைப் பார்த்துக்கொள்ள நேரமும் சக்தியும் தேவை என்பதாக ஒரு டாக்டர் நினைப்பூட்டினார். நல்லெண்ணமுள்ள நண்பர்களும்கூட அதேபோலவே நியாயம் சொன்னார்கள். இருந்தாலும், டாடு அதிகளவாக எங்களுடைய வாழ்க்கையின் பாகமாக இருந்தான் என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள்! அவனை வீட்டில் வைத்து நாங்கள் கவனித்துக்கொள்ள முடிந்தால், அவனை நேசித்து அவனுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள் மத்தியில் இருப்பான்.
சக்கர நாற்காலி ஒன்றையும் மருத்துவமனை படுக்கை ஒன்றையும் நாங்கள் வாங்கினோம். நண்பர்கள் சிலருடைய உதவியால், என்னுடைய படுக்கையறை சுவரை நாங்கள் இடித்துவிட்டு, நகர்வுறும் கண்ணாடிக் கதவுகள் சிலவற்றை போட்டோம், மேலும் டாடு நேரடியாக சக்கர நாற்காலியில் தன்னுடைய படுக்கையறைக்கு செல்ல வழிசெய்யும் வகையில் வீட்டையொட்டியுள்ள வெளிப்புறத்தில் காரைபோட்டு சாய்தளம் பாவினோம்.
ஆகஸ்ட் 19-ம் தேதி காலை, இன்னமும் அரை சுயநினைவிழந்த நிலையிலிருந்த (semicomatose) என்னுடைய மகனை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவதற்கான நேரமாக இருந்தது. டாடுவுக்கு கண்ணைத் திறக்கவும், வலதுகாலையும் கையையும் மெதுவாக அசைக்கவும் முடிந்தது, ஆனால் அவன் அதற்குமேல் தேறமாட்டான் என்று அவனுடைய டாக்டர் முன்னறிவித்தார். சில வாரங்களுக்குப் பிறகு, மிகவும் பேர்போன நரம்பியல் நிபுணர் ஒருவரிடம் டாடுவைக் கொண்டுசென்றோம், அவரும் அந்த வார்த்தைகளையே தான் திரும்பவும் சொன்னார். என்றபோதிலும், அவனை வீட்டுக்குக் கொண்டுவந்தது என்னே ஓர் ஆச்சரியமான உணர்ச்சி! என்னுடைய அம்மாவும் நெருங்கிய நண்பர்கள் சிலரும் எங்களுக்காக வீட்டில் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நாள் மாலையில், நாங்கள் ஒன்றுசேர்ந்து ராஜ்ய மன்றத்திற்கும்கூட சென்றோம். டாடுவை கவனிப்பதில் உட்படப்போகும் பிரமாண்டமான முயற்சியின் முதல் அனுபவத்தை அது எங்களுக்குத் தந்தது.
வீட்டில் டாடுவை கவனித்துக்கொள்ளுதல்
ஊனமுற்ற ஒரு ஆளை கவனித்துக்கொள்வது எண்ணிப்பார்க்க முடியாத வகையில் நேரத்தை எடுத்துக்கொள்வதாய் ஆனது. சாப்பாடு சாப்பிட டாடுவுக்கு ஒரு மணிநேரம் எடுத்தது. அவனை ஸ்பான்ஜினால் துடைப்பது, அவனுக்கு சட்டை போட்டுவிடுவது, முடியை அலசிவிடுவது போன்றவற்றை செய்வதற்கு இன்னமும் எனக்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் எடுக்கிறது. சுழல்நீர் குளியல் (whirlpool bath) இரண்டு மணிநேரம் பூராவும் எடுத்துக் கொள்ளலாம். பயணம் செய்வது ஒரு மிகப் பெரிய வேலையாக இருக்கிறது, கணிசமானளவு சரீர முயற்சியையும் தேவைப்படுத்துகிறது. சமீபத்தில் நன்றாக குணமடைந்து வந்திருக்கிறபோதிலும், நேராக நிமிர்ந்து உட்காருவது டாடுவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கிறது, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சக்கர நாற்காலியின் உதவியிருந்தபோதும்கூட அவ்வாறாக இருந்திருக்கிறது; பொதுவாக அவன் தரையில் படுக்க வேண்டியிருந்திருக்கிறது. சில வருஷங்களாக, ராஜ்ய மன்றத்தின் பின்புறத்திலுள்ள தரையில் நான் அவனுடன் உட்கார்ந்தேன். என்றபோதிலும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதிலிருந்து இது எங்களைத் தடுத்துநிறுத்தும்படி நாங்கள் அனுமதிக்கவில்லை, பொதுவாக நாங்கள் சரியான நேரத்திற்கு சென்றுவிடுவோம்.
எங்களுடைய பொறுமையான முயற்சிகள் பலன்களைக் கொண்டுவந்திருக்கின்றன. அந்த விபத்து டாடுவை செவிடனாகவும் குருடனாகவும் ஆக்கிவிட்டது என்பதாக டாக்டர்கள் கொஞ்ச காலமாக நினைத்தார்கள். இருந்தபோதிலும், அந்த விபத்திற்கு முன்பு நான் என்னுடைய பையன்களுக்கு சங்கேத மொழியைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தேன். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்த அந்த முதல் வாரத்தின்போது, நாங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு ஆமாம் அல்லது இல்லை என்று சைகைகளால் டாடு சொல்ல ஆரம்பித்தான். பின்பாக அவன் சுட்டிக்காட்டும் திறமையை வளர்த்துக்கொண்டான். நாங்கள் அவனிடம் நண்பர்களுடைய படங்களைக் காண்பித்து, குறிப்பிட்ட ஒருவரை அடையாளங்காட்ட சுட்டிக்காட்டும்படி கேட்போம், அவன் அவ்வளவு திருத்தமாக சுட்டிக்காட்டினான். எண்களையும் எழுத்துக்களையும்கூட அவனால் சரியாக அடையாளங்காட்ட முடிந்தது. பின்பு நாங்கள் வார்த்தைகளுக்கு முன்னேறினோம். காரியங்களை நிதானிக்கும் திறமைகள் குறைவுபடாமல் அப்படியே இருந்தன! நவம்பர் மாதத்தில், அந்த விபத்து நடந்து ஏழே மாதங்களுக்குப் பிறகு, நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த ஒரு சம்பவம் ஏற்பட்டது.
டாடு புன்முறுவல் செய்தான். ஜனவரி மாதத்திற்குள்ளாக அவனுடைய புன்முறுவலுடன் சிரிப்பும் சேர்ந்து வந்தது.
நாங்கள் எங்களுடைய வீட்டை விற்கும்படி வற்புறுத்தப்பட்டோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது கவலைக்குரியதாக தோன்றினாலும் ஒரு ஆசீர்வாதமாக இருந்தது, ஏனென்றால் எங்களுடைய இரண்டுமாடி வீடு சின்னதாக இருந்தது, மேலும் டாடு அங்குமிங்கும் செல்வதை வெகுவாக மட்டுப்படுத்தவும் செய்தது. எங்களிடம் கொஞ்சம் பணம்தான் இருந்ததால், எங்களுடைய வசதிக்கேற்ற திருப்திகரமான வீட்டைக் கண்டுபிடிப்பது கஷ்டமான ஒன்றாக ஆகவிருந்தது. இருந்தபோதிலும், தயவுள்ள ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தார். அந்த வீடு மனைவியை இழந்திருந்த ஒருவருக்கு சொந்தமானது, அவருடைய மனைவி சக்கர நாற்காலியிலேயே எப்போதும் இருக்க வேண்டியதாயிருந்தது; அவளுடைய தேவைகளை மனதில் வைத்து அந்த வீடு வடிவமைக்கப்பட்டிருந்தது. டாடுவுக்கு மிகவும் ஏற்றவொன்று!
அந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டியதாகவும் பெயிண்ட் அடிக்க வேண்டியதாகவும் இருந்தது. ஆனால், நாங்கள் பெயிண்ட் அடிக்கத் தயாராக இருந்தபோது, எங்களுடைய ராஜ்ய மன்றத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட நண்பர்கள் பெயிண்ட் அடிப்பதற்கான ரோலர்களையும் பிரஷ்களையும் கையோடு கொண்டுவந்து சேர்ந்தனர்.
அன்றாட வாழ்க்கையை சமாளித்தல்
குடும்ப வியாபாரம், பில்கள், இன்னும் பிறவற்றை எப்போதுமே க்ளென் கவனித்து வந்திருந்தார். அதிக சிரமமின்றி வாழ்க்கையின் இந்த விஷயங்களை நான் எடுத்துக்கொள்ள முடிந்தது. இருந்தாலும், உயில் அல்லது தகுந்தபடி இன்சூரன்ஸ் செய்து வைப்பதை முக்கியமென்று க்ளென் உணரவில்லை. இந்த விஷயங்களைக் கவனிக்க அவர் நேரம் செலவிட்டிருந்திருந்தார் என்றால், பணக் கஷ்டத்தினால் இந்நாள் வரையாக தொடர்ந்திருக்கிற பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை நாங்கள் தவிர்த்திருப்போம். எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்குப் பிறகு, எங்களுடைய நண்பர்களில் அநேகர் இப்படிப்பட்ட விஷயங்களைச் சரிசெய்ய ஆரம்பித்தார்கள்.
எங்களுடைய உணர்ச்சி சம்பந்தமான தேவைகளையும் ஆவிக்குரிய தேவைகளையும் திருப்திப்படுத்துவது மற்றொரு சவாலாய் இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து டாடு வீட்டுக்கு வந்தப் பிறகு, நெருக்கடியெல்லாம் முடிந்துவிட்டதுபோல சிலர் நடந்துகொண்டார்கள். இருந்தாலும், தொடர்ந்து உதவியும் ஊக்கமும் ஸ்காட்டுக்குத் தேவைப்பட்டது. எங்களுக்கு வந்த கார்டுகள், லெட்டர்கள், ஃபோன் கால்கள் இதெல்லாம் எப்பொழுதும் நெஞ்சில் வைத்து மகிழும் அருமையான நினைவுகளாக இருக்கும். பண உதவியளித்த ஒரு நபரிடமிருந்து ஒரு லெட்டர் வந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அந்த லெட்டரில் எழுதியிருந்தது: “நான் இந்த லெட்டரில் கையெழுத்திட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் எனக்கு நன்றி சொல்லும்படி நான் விரும்பவில்லை, ஆனால் யெகோவாவுக்கு நன்றிசொல்லும்படி விரும்புகிறேன், ஏனென்றால் ஒருவருக்கொருவர் அன்புகூரும்படி நம்மைத் தூண்டுவது அவர்தான்.”
இருந்தாலும், உற்சாகத்திற்காக முழுவதும் மற்றவர்களை நம்பியிருப்பவர்களாக இல்லாமல், எங்களுடைய சொந்த பாகத்தில் நம்பிக்கையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் கற்றுக்கொண்டோம். நான் உற்சாகமற்றவளாக உணரும்போது, அடிக்கடி மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முயற்சி செய்கிறேன். ரொட்டி சுடுவதையும் சமைப்பதையும் நான் அனுபவித்து மகிழுகிறேன், மேலும் அவ்வப்போது, நண்பர்களை விருந்துக்கு அழைப்பேன் அல்லது ஏதாவது சில பலகாரங்களையாவது அவர்களுக்கு செய்து கொடுப்பேன். நான் உண்மையில் மனச்சோர்வடைந்து இருக்கும்போது அல்லது ஓய்வு தேவைப்படும்போது, விருந்துக்கு, மதிய சாப்பாட்டிற்கு, அல்லது வாரக்கடைசியில் நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக எனக்கு அழைப்புவருகிறது. சிலசமயங்களில், டாடுவுடன் சிறிது நேரம் இருப்பதற்குக்கூட யாராவது முன்வருவார்கள், ஆகவே நான் வெளியில் செல்வதற்கு அல்லது கடைக்குச் செல்வதற்கு முடிகிறது.
என்னுடைய மூத்த மகன் ஸ்காட்டும்கூட அதிசயமான விதத்தில் ஓர் ஆசீர்வாதமாக இருந்திருக்கிறான். எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் சமூகக் கூட்டுறவுகளுக்கு டாடுவையும் ஸ்காட் கூட்டிக்கொண்டு சென்றான். ஏதோவொரு விதத்தில் டாடுவை கவனித்துக் கொள்வதுடன் உதவியளிப்பதற்கு அவன் எப்பொழுதும் மனமுள்ளவனாக இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள் இருப்பதைக் குறித்து ஒருபோதும் குறைகூறியதே கிடையாது. ஒருதடவை ஸ்காட் சொன்னான்: “அதிக ‘இயல்பான’ வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று சிலசமயங்களில் எனக்குத் தோன்றினால், எனக்கு ஏற்பட்ட அனுபவம் கடவுளிடம் என்னை எவ்வளவு நெருக்கமாக கொண்டுவந்திருக்கிறது என்பதாக நான் உடனடியாக நினைத்துப்பார்க்கிறேன்.” இப்படிப்பட்ட அன்பும் ஆவிக்குரிய சிந்தையுமுள்ள ஒரு மகனைக் கொண்டிருப்பதற்கு அனுமதித்ததற்காக நான் தினமும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன். சபையில் அவன் ஒரு உதவி ஊழியனாக சேவைசெய்கிறான், தன்னுடைய மனைவியுடன் முழுநேர சுவிசேஷ வேலை செய்வதை அனுபவித்து மகிழுகிறான்.
டாடு? அவன் தொடர்ந்து சீரான முன்னேற்றம் செய்துவந்திருக்கிறான். இரண்டு வருடங்களுக்குள்ளாக, அவன் மீண்டுமாக பேச ஆரம்பித்துவிட்டான். முதலில் சிறிய வார்த்தைகளை, பின்பு வாக்கியங்களைப் பேச ஆரம்பித்தான். இப்பொழுது கிறிஸ்தவ கூட்டங்களில் அவனாகவே பேசக்கூட முடிகிறது. அதிக சரளமாக பேசுவதன்பேரில் அவன் கடினமாக உழைத்துவருகிறான், பேச்சு வருவதற்கான மருத்துவமுறை (speech therapy) உதவியிருக்கிறது. பாடுவதை அவன் இன்னும் விரும்புகிறான்—விசேஷமாக ராஜ்ய மன்றத்தில். அவன் எப்பொழுதும் நல்நம்பிக்கையுள்ளவனாகவும் தொடர்ந்து இருந்துவருகிறான். இப்பொழுது அவனால் ஊன்றுகட்டையினால் நிற்க முடிகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் எங்களுடைய அனுபவம் சிலவற்றை சொல்லும்படியான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஆஜராகியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் தான் என்ன சொல்ல விரும்புகிறான் என்று கேட்கப்பட்டபோது, டாடு சொன்னான்: “கவலைப்படாதிருங்கள். நான் குணமாகிவிடுவேன்.”
இந்த எல்லா கஷ்டங்களிலும் யெகோவா எங்களை காத்துவந்ததற்காக நாங்கள் முழு புகழையும் அவருக்கே கொடுக்கிறோம். உண்மையில் சொல்லப்போனால், முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு அவரில் சார்ந்திருப்பதற்கு நாங்கள் கற்றிருக்கிறோம். தூக்கமற்ற அந்த இரவுகளெல்லாம், டாடுவுடைய தனிப்பட்ட தேவைகளையும் செளகரியங்களையும் கவனித்துக்கொள்வதில் உட்பட்ட கடின வேலையெல்லாம், நாங்கள் செய்திருக்கிற தியாகங்களெல்லாம் தகுதியுள்ளவையாக இருந்திருக்கின்றன. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நாங்கள் காலையுணவை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, முகத்தில் அதிக புன்முறுவலுடன் டாடு என்னை உற்றுப்பார்ப்பதை நான் பார்த்து கண்டுகொண்டேன். அவன் சொன்னான்: “நான் உங்களை நேசிக்கிறேன், அம்மா. ஆஸ்பத்திரியிலிருந்து என்னை கூட்டிக்கொண்டு வந்ததுக்கு உங்களுக்கு நன்றி.”—ரோஸ் மேரி பாடி என்பவரால் சொல்லப்பட்டது.
[அடிக்குறிப்புகள்]
a இரத்தமேற்றுவதையும் இரத்தமில்லா பொருட்களைப் பயன்படுத்துவதையும் பற்றிய வேதப்பூர்வமான நோக்குநிலையின் பேரிலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட “உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?” என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
மிகக் கடினமான காரியம், என்னுடைய மகன் ஸ்காட்டிடம் அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னதுதான்
[பக்கம் 15-ன் படம்]
என்னுடைய மகன்களுடன்