பைபிளின் கருத்து
நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்பது முக்கியமா?
“மனிதன் தனக்கு எது உண்மை என்று விரும்பித் தெரிந்தெடுக்கிறானோ அதையே நம்புவதற்கும் விரும்பித் தெரிந்தெடுக்கிறான்.” —ஃபிரான்ஸிஸ் பேக்கன், 1561-1626, ஆங்கில உரையாசிரியரும் அரசியல் மேதகையுமானவர்.
மதக் கோட்பாடுகளைக் குறித்ததில், ‘எல்லாவற்றிற்கும் மேல் ஒருவர் இருக்கிறார்’ என்று மனப்பூர்வமாக ஒருவர் நம்பி தன்னுடைய உடன் மானிடனில் அன்புகூருகிற வரையில், வேறெதை அவர் நம்பினாலும் அது உண்மையில் ஒரு பொருட்டல்ல என்று அநேக ஆட்கள் நினைக்கிறார்கள். கடவுள், அவருடைய நோக்கம், அவரை எவ்வாறு வழிபட வேண்டும் ஆகியவற்றைப் பற்றி மதத் தொகுதியினர் ஆதரித்து வாதிடுகிற முரண்பட்ட கருத்துக்களை சிலர் கண்டு, ஒரே ஆள் உடுத்துகிற வித்தியாசமான பாணி உடையைப் போல, அந்த வேறுபாடுகள் எல்லாம் வெறுமனே மேலோட்டமானவையே என்ற முடிவுக்கு வரக்கூடும். இப்படிப்பட்ட வேறுபாடுகளைப் பெரிய பிரச்சினையாக்குகிறவர்கள் உண்மையான கிறிஸ்தவத்தின் மெய்ப்பொருளை அடைய முழுமையாக தவறிவிட்டார்கள் என்றும்கூட அவர்கள் உணரக்கூடும்.
மத போதனைகளைப் பற்றிய அனைத்து கலந்துரையாடல்களும் தகுதியானவையல்ல என்பதை வேதவசனங்கள் ஒப்புக்கொள்கின்றன. உதாரணமாக, தீமோத்தேயுவுக்கு எழுதிய தன்னுடைய ஏவப்பட்ட நிருபங்களில், ‘அற்பமான காரியங்களைக் குறித்து கடும் வாக்குவாதங்களைத்’ தூண்டிய மனிதர்களைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். ‘வார்த்தைகளைக் குறித்து தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் எழுப்புகிறவர்கள் மனதின்பிரகாரமாக நோயுற்றவர்கள்’ என்பதாக பவுல் அவர்களை வர்ணித்தார். (1 தீமோத்தேயு 6:4, 5, NW) ‘முட்டாள்தனமும் அறிவில்லாததுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து அவற்றை விட்டொழிக்கும்படியும்,’ ‘ஒரு பிரயோஜனமும் இல்லாத வார்த்தைகளைக் குறித்து சண்டை செய்யாதபடிக்கு’ சபைகளுக்கு அறிவுறுத்தும்படியும் தீமோத்தேயுவுக்கு அவர் புத்திமதி கூறினார். (2 தீமோத்தேயு 2:14, 23, NW) நம்முடைய நாளில் நடக்கிற பெரும்பாலான மதசம்பந்தப்பட்ட வாக்குவாதம் இந்த வர்ணனைக்குப் பொருந்தியிருக்கிறது, மேலும் அர்த்தமில்லாமல் நேரத்தை வீணாக்குகிற ஒன்றாக இருந்திருக்கிறது.
என்றபோதிலும், மத நம்பிக்கைகளைப் பற்றிய எல்லா கலந்துரையாடல்களும் அர்த்தமற்றவை என்பதை இது குறிக்கிறதா? சில ஆடைகள் உடுத்துவதற்கு பொருத்தமில்லை என்ற காரணத்துக்காக ஆடை அணிவதையே முழுவதுமாக நாம் விட்டுவிட மாட்டோமல்லவா? ஆகையால், கோட்பாட்டுக்குரிய சில கேள்விகள் சிந்திப்பதற்கு தகுதியற்றவை என்ற காரணத்துக்காக மத நம்பிக்கைகளைப் பற்றிய முழுப் பொருளையே ஏன் முக்கியமற்றதாக விட்டுவிட வேண்டும்? மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள பவுலினுடைய வார்த்தைகளின் சூழமைவு, கோட்பாடுகளைப் பற்றிய விஷயம் இன்றியமையா அக்கறைக்குரிய ஒன்றாக இருப்பதாக அவர் கருதினார் என்பதைக் காட்டுகிறது. பொய் போதனைகள், ஒருவரை விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போகப்பண்ணுவதில் விளைவடையக்கூடும் என்று அவர் திரும்பத் திரும்ப எச்சரித்தார். மேலும், ‘மாறுபட்ட கோட்பாடுகளைப் போதிக்காதிருக்க குறிப்பிட்ட சிலருக்கு கட்டளையிடும்படி’ தீமோத்தேயுவுக்கு அவர் புத்திமதி கூறினார். (1 தீமோத்தேயு 1:3-7, NW; 4:1; 6:3-5; 2 தீமோத்தேயு 2:14-18, 23-26; 4:3, 4) நிச்சயமாகவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நம்பினது முக்கியத்துவமுடையதாக இருந்தாலொழிய, இப்படிப்பட்ட உறுதியான கூற்றுகளை அவர் பேசியிருக்கமாட்டார்.
அப்படியானால், கோட்பாட்டின் பேரிலான தர்க்கங்களை விட்டொழிக்கும்படி ஏன் அறிவுரை கொடுக்க வேண்டும்? இது ஏனென்றால், பவுலினுடைய நாளிலிருந்த குறிப்பிட்ட சில மனிதர்கள்—‘கெட்ட சிந்தையுள்ளவர்களாகவும் சத்தியத்தைக் கொள்ளையாடினவர்களாகவும்’ அவரால் வர்ணிக்கப்பட்டவர்கள்—மற்றவர்களுடைய விசுவாசத்தைக் கவிழ்க்கவேண்டுமென்ற எண்ணத்தினாலேயே கோட்பாட்டுக்குரிய பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். (1 தீமோத்தேயு 6:5, NW) அந்தக் கெட்ட மனிதர்களால் எழுப்பப்பட்ட தர்க்கங்கள் நிமித்தமே மத நம்பிக்கைகளைப் பற்றிய கலந்துரையாடல்களைத் தவிர்க்கும்படி தீமோத்தேயுவுக்கு பவுல் புத்திமதி கொடுத்தார்.
நம்பிக்கைகள் நடத்தையை பாதிக்கின்றனவா?
என்றபோதிலும் நம்முடைய மத நம்பிக்கைகள், நம்முடைய தனிப்பட்ட பண்பியல்புகள் மற்றும் நடத்தையில் நாம் எப்படிப்பட்ட வகையான ஆட்களாக ஆகிறோம் என்பதன்பேரில் அதிக பாதிப்பை உண்டுபண்ணுகிறதா என்று சிலர் கேள்வி கேட்கக்கூடும். அணிந்துகொள்கிறவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு கலந்து அல்லது பொருத்தமாக அணிந்துகொள்ளக்கூடிய ஒரு ஷர்ட்டையும் ட்ரெளஸரையும் போல், நம்பிக்கைகளையும் நடத்தையையும் இரண்டு தனித்தனியான, தொடர்பற்ற விஷயங்கள் என்பதாக அவர்கள் நோக்கக்கூடும். இருப்பினும், பைபிளில், பொருத்தமான ஜோடாக மட்டுமே வருகிற ஒரே நிற ஜோடுடைய ஆடையைப் போலவே நம்பிக்கைகளும் நடத்தையும் இருக்கின்றன.
நாம் என்ன நம்புகிறோம் என்பதற்கும் நாம் எப்படிப்பட்ட ஆளாக ஆகிறோம் என்பதற்கும் இடையே உள்ள ஒரு நேரடியான தொடர்பை பைபிள் வெளிப்படுத்துகிறது. இயேசுவுடைய நாளிலிருந்த சுயநீதியுள்ள பரிசேயர்கள், நடத்தையை பாதிக்கிற தவறாக வழிநடத்தப்பட்ட நம்பிக்கைகளுக்கு ஒரு மாதிரியாக இருந்தார்கள். (மத்தேயு 23:1-33; லூக்கா 18:9-14) மறுபட்சத்தில், கொலோசெயர் 3:10 (NW) இவ்வாறு அறிவுரை கூறுகிறது: ‘படைத்தவருடைய சாயலுக்கு ஏற்றவாறு திருத்தமான அறிவின் மூலம் புதிதாக்கப்படுகிற புதிய ஆளுமையை உடுத்திக்கொள்ளுங்கள்.’ தேவபக்திக்குரிய ஒரு வாழ்க்கை நடத்துவதற்கான வல்லமை, கடவுளுடைய திருத்தமான அறிவைப் பெற்றிருப்பதுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பதைக் கவனியுங்கள்.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் 20 தடவைகள் வருகிற, ‘திருத்தமான அறிவு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற இந்தக் கிரேக்கப் பதம், சரியான, திருத்தமான, அல்லது முழுமையான அறிவைக் குறிக்கிறது. கிரேக்க அறிஞர் நத்தானியேல் கல்வர்வெல் அதை இவ்வாறு வர்ணிக்கிறார்: “நான் முன்பு அறிந்திருந்த ஒரு காரியத்துடன் மேம்பட்ட விதத்தில் அறிமுகமாகிவருவதைப் [போல]; நான் தூரத்திலிருந்து முன்பு பார்த்த ஒரு பொருளை மிகச் சரியாக நோக்குவதைப்” போல இருக்கிறது. விலையேறப்பெற்ற ஒரு இரத்தினக்கல்லின் தரத்தையும் மதிப்பையும் மதிப்பிடுவதற்காக நகை வியாபாரி ஒருவர் அதைப் பரிசோதித்துப் பார்ப்பது போலவே, கிறிஸ்தவர் ஒருவர் தான் சேவிக்கிற கடவுளைப்பற்றி சரியான, திருத்தமான, முழுமையான அறிவை அடைவதற்காக கடவுளுடைய வார்த்தையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். கடவுளுடைய ஆளுமை, அவருடைய நோக்கங்கள், அவருடைய தராதரங்கள் மற்றும் “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை” உண்டுபண்ணுகிற அனைத்து போதனைகளை—‘எல்லாவற்றிற்கும் மேல் ஒருவர் இருக்கிறார்’ என்று வெறுமனே நம்புவதிலிருந்து மிகவும் வித்தியாசமானதை—அறியவருவதை இது அர்த்தப்படுத்துகிறது.—2 தீமோத்தேயு 1:13.
கடவுளை ஒருவர் தூரத்திலிருந்து மட்டுமே அறிந்திருக்கும்போது வருகிற கனி வகையைப் பற்றிய மாதிரியானது, ரோமர்களுக்கு ஏவப்பட்டு எழுதப்பட்ட கடிதத்தின் முதல் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘கடவுளை அவர்கள் அறிந்திருக்கிறபோதிலும், திருத்தமான அறிவின்படி கடவுளைப் பற்றிக்கொள்ளாதிருந்த’ குறிப்பிட்ட சில மனிதர்களைப் பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய தவறான நம்பிக்கைகளின் விளைவுகள் அப்போஸ்தலனாகிய பவுலால் விவரிக்கப்பட்டிருக்கின்றன: “தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.”—ரோமர் 1:21 (NW), 28-31.
சந்தேகத்திற்கிடமின்றி, அந்த மனிதர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கான அவர்களுடைய திறமையை நேரடியாக பாதித்தன. அதேபோலவே இன்றைக்கும், பிரிக்கமுடியாத வண்ணமாக ஒன்றாக பின்னப்பட்டிருக்கிற ஒரு ஆடைக்கு, நம்பிக்கைகளையும் நடத்தையையும் ஒப்பிடலாம். ஆகவே, கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு ஆசைகொள்கிற அனைவரும், தங்களுடைய நம்பிக்கைகள் முற்றுமுழுக்க கடவுளுடைய வார்த்தையின்மீது ஆதாரமிடப்பட்டு போலியல்லாமல் உண்மையாக இருக்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வது அத்தியாவசியமானதாக இருக்கிறது, ஏனெனில், ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவை அடையவும் [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்.’—1 தீமோத்தேயு 2:4.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
பரிசேயனுடைய சுயநீதி அவனுடைய நம்பிக்கைகளைப் பிரதிபலித்தது