சர்ச்சுகள் ஏன் மெளனமாக இருந்தன
டிசம்பர் 8, 1993, பேலர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபிராங்கிளின் லிட்டெல், தொந்தரவு செய்யும் “திட்டவட்டமான ஒரு உண்மையைக்” குறித்து ஐக்கிய மாகாணங்களின் சர்வநாசம் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தில் பேசினார். அது என்னவாக இருந்தது?
லிட்டெல் சொன்ன உண்மை என்னவென்றால், “ஆறு லட்சம் யூதர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் நடுவில் ஞானஸ்நானம் பெற்ற ரோமன் கத்தோலிக்கர், புராட்டஸ்டன்டினர் மற்றும் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் அங்கத்தினர் ஆகியோரால் குறிவைக்கப்பட்டு திட்டமிட்டு கொல்லப்பட்டனர், இவர்கள் ஒருபோதும் கடிந்துகொள்ளப்படக்கூட இல்லை, அப்படியிருக்க சர்ச்சைவிட்டு அவர்களை நீக்குவதைக் குறித்து சொல்லவே தேவையில்லை” என்பதாகும். ஆனால் ஒரு குரல் எப்போதும் தைரியமாகவே ஹிட்லரின் ஆட்சியில் மதகுருமாரின் ஈடுபாடு குறித்து பேசி வந்தது. நாம் பார்த்த வண்ணமாகவே, அது யெகோவாவின் சாட்சிகளுடைய குரலாக இருந்தது.
ஹிட்லர் அவனுடைய அரசாங்கத்திலிருந்த அநேக தலைவர்களைப் போலவே ஞானஸ்நானம் பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்தான். அவர்கள் ஏன் சர்ச்சைவிட்டு நீக்கப்படவில்லை? இந்த மனிதர்கள் செய்துகொண்டிருந்த பயங்கரமான செயல்களை கத்தோலிக்க சர்ச் ஏன் கண்டனம் செய்யவில்லை? புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளும்கூட ஏன் மெளனமாக இருந்தன?
சர்ச்சுகள் உண்மையில் மெளனமாக இருந்தனவா? ஹிட்லரின் போர் முயற்சிகளை அவை ஆதரித்தன என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?
கத்தோலிக்க சர்ச்சின் பங்கு
கத்தோலிக்க சரித்திராசிரியர் இ. ஐ. வாட்கன் எழுதினார்: “இதை ஒப்புக்கொள்வது வேதனையாக இருந்தபோதிலும், ஆயர்கள் எப்பொழுதுமே தங்களுடைய தேசத்தின் அரசாங்கம் தொடுக்கும் எல்லா போர்களையும் ஆதரித்து வந்திருக்கின்றனர் என்ற சரித்திர உண்மையை, நல்லொழுக்க போதனைக்காக அல்லது நேர்மையற்ற பற்றுறுதிக்காக மறுத்துவிடவோ அல்லது அசட்டை செய்யவோ முடியாது. . . . போரில் ஈடுபடுவதற்குரிய தேசப்பற்றைப் பொருத்தவரையில் அவர்கள் அரசாங்கத்துக்காகப் பரிந்து பேசுகிறவர்களாகவே இருந்திருக்கின்றனர்.”
கத்தோலிக்க சர்ச்சின் ஆயர்கள் “தங்களுடைய தேசத்தின் அரசாங்கம் தொடுக்கும் எல்லா போர்களையும் ஆதரித்து வந்திருக்கின்றனர்,” என்பதாக வாட்கன் சொன்னபோது, ஹிட்லர் தொடுத்த எல்லா ஆக்கிரமிப்பு சண்டைகளையும் அவர் உட்படுத்திப் பேசினார். வியன்னா பல்கலைக்கழகத்தின் ரோமன் கத்தோலிக்க பேராசிரியர் ஃபிரெட்ரிக் ஹெர் ஒப்புக்கொண்டவிதமாகவே: “ஜெர்மன் சரித்திரத்தின் மறுக்க முடியாத உண்மைகளில், சுவஸ்திகா ஜெர்மன் கத்தீட்ரல்களின் கோபுரங்களிலிருந்து வெற்றி குறித்த செய்தியை அறிவித்து, சுவஸ்திகா கொடிகள் சர்ச்சுகள் மேடையைச் சுற்றி தோன்றும் வரையாக சிலுவையும் சுவஸ்திகாவும் ஒன்றாக நெருங்கிவந்தன, கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் இறையியலரும், பாதிரிமார்களும், சர்ச்சிலுள்ள ஆட்களும் அரசியல் பிரமுகர்களும் ஹிட்லரோடு உறவை வரவேற்றனர்.”
கத்தோலிக்க சர்ச் தலைவர்கள் அத்தகைய முழுமையான ஒரு ஆதரவை ஹிட்லரின் போர்களுக்கு கொடுத்த காரணத்தால், ரோமன் கத்தோலிக்க பேராசிரியர் கார்டன் ட்சான் இவ்விதமாக எழுதினார்: “ஹிட்லரின் போர்களில் இராணுவ சேவையின் சம்பந்தமாக ஆவிக்குரிய வழிநடத்துதலுக்காகவும் அறிவுரைக்காகவும் தன்னுடைய மதசம்பந்தமான மேலதிகாரிகளைச் சார்ந்திருந்த ஜெர்மன் கத்தோலிக்கர் நாசி ஆட்சியாளனிடமிருந்து அவர் பெற்றிருக்கும் அதே பதில்களையே பெற்றுக்கொண்டார்.”
கத்தோலிக்கர் தங்கள் சர்ச் தலைவர்களின் அறிவுரைகளைக் கீழ்ப்படிதலுடன் பின்பற்றிய உண்மையை பேராசிரியர் ஹெர் உறுதிசெய்கிறார். அவர் குறிப்பிட்டார்: “3 கோடி 20 லட்சம் ஜெர்மன் கத்தோலிக்கரில், ஆண்களாக இருந்த 1 கோடி 55 லட்சம் பேரில், ஏழு பேர் [தனி நபர்கள்] மாத்திரமே தைரியமாக இராணுவ சேவையை ஏற்க மறுத்தனர். இவர்களில் ஆறு பேர் ஆஸ்டிரியாவைச் சேர்ந்தவர்கள்.” ஒருசில கத்தோலிக்கரும் ஒரு சில புராட்டஸ்டன்ட்களும்கூட மத நம்பிக்கைகளின் காரணமாக நாசி அரசை தைரியமாக எதிர்த்தனர் என்பதாக சமீப கால அத்தாட்சி சுட்டிக்காட்டுகிறது. சிலர் தங்களுடைய உயிரையும் இழக்க நேர்ந்தது, அதே சமயத்தில் அவர்களுடைய ஆன்மீகத் தலைவர்கள் நாசி ஆட்சியிலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு தங்கள் சர்ச் உறுப்பினர்களைக் காட்டிக்கொடுத்து வந்தனர்.
வேறு யாரும் மெளனமாயிருந்தனர், யார் மெளனமாயிருக்கவில்லை
மேலே குறிப்பிடப்பட்டபடி பேராசிரியர் ஹெர் “ஹிட்லரோடு உறவை வரவேற்றவர்களில்” புராட்டஸ்டன்ட் தலைவர்களையும் உட்படுத்தியிருந்தார். அது உண்மையா?
அநேக புராட்டஸ்டன்ட்கள், ஹிட்லரின் ஆக்கிரமிப்பு சண்டைகளின்போது, மெளனமாக இருந்தமைக்காக சுய குற்றவுணர்வில் நெளிந்திருக்கின்றனர். உதாரணமாக, முன்னணியிலிருந்த 11 மதகுருமார் அக்டோபர் 1945-ல் ஸ்டுட்கார்டு குற்ற ஒத்தேற்புரை என்றழைக்கப்பட்டதினுடைய முன்வரிவைத் தயாரிக்க கூடிவந்தனர். அவர்கள் சொன்னார்கள்: “நம்முடைய நம்பிக்கைகளை அறிக்கைசெய்வதில் அதிக தைரியமுள்ளவர்களாகவும், நம்முடைய ஜெபங்களைச் சொல்வதில் அதிக உண்மையுள்ளவர்களாகவும், நம்முடைய விசுவாசத்தை வெளியிடுவதில் அதிக சந்தோஷமுள்ளவர்களாகவும், நம்முடைய அன்பைக் காண்பிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர்களாகவும் இல்லாமல் இருந்தமைக்காக நாம் நம்மையே குற்றப்படுத்திக் கொள்கிறோம்.”
பால் ஜான்சனின் கிறிஸ்தவத்தின் வரலாறு (ஆங்கிலம்) சொன்னது: “17,000 சுவிசேஷ பாதிரிமாரில், எந்த ஒரு சமயத்திலும் [நாசி ஆட்சியை ஆதரிக்காத காரணத்துக்காக] சிறையில் நீண்ட கால தண்டனைத் தீர்ப்பை அனுபவித்தவர்கள் ஐம்பதுக்கு மேலாக ஒருபோதும் இருந்தது கிடையாது.” யெகோவாவின் சாட்சிகளை இப்படிப்பட்ட பாதிரிமார்களோடு வேறுபடுத்திக் காட்டுபவராய் ஜான்சன் எழுதினார்: “ஆரம்பத்திலிருந்தே உடனடியாக தங்களுடைய கொள்கை சம்பந்தமான எதிர்ப்பைத் தெரிவித்து அதற்கேற்ப துன்பமனுபவித்த யெகோவாவின் சாட்சிகளே மிகவும் தைரியமானவர்கள். நாசி அரசோடு எவ்வகையிலும் ஒத்துழைக்க அவர்கள் மறுத்தனர்.”
1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான சமயத்தில் கான்சலேஷன் ஒரு புராட்டஸ்டன்ட் ஊழியர் டி. ப்ருப்பக்கர் இவ்விதமாகச் சொன்னதாக மேற்கோள் காட்டியது: “ஒருவர் உண்மைக் கிறிஸ்தவரா இல்லையா என்பதை நிரூபிக்கும் சோதனைகளில் தங்களைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்பவர்கள் தோல்வியடைந்துவிட்டிருக்கையில், இந்த அறியப்படாத யெகோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ தியாகிகளாக, மனச்சாட்சியின் பலாத்காரம் மற்றும் புறமத விக்கிரகாராதனைக்கு எதிராக அசைக்கமுடியாத எதிர்ப்பை காத்துவந்தனர். முதன்மை வாய்ந்த சர்ச்சுகள் அல்ல, ஆனால் இழிவாகவும் அலட்சியமாகவும் பேசப்பட்ட இந்த ஜனங்களே நாசி ஆட்சியின் கோபத்துக்கு எதிராக தைரியமாக நின்ற முதலாவதானவர்கள் என்பதை எதிர்காலத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் சரித்திராசிரியர்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் . . . அவர்கள் ஹிட்லரையும் சுவஸ்திகாவையும் வணங்க மறுத்துவிட்டனர்.”
அதேவிதமாகவே, நாசி சித்திரவதை முகாமில் ஒரு சமயம் இருந்த புராட்டஸ்டன்ட் சர்ச் தலைவர் மார்டின் நிமோலர் பின்னால் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: ‘சகாப்தங்களினூடாக கிறிஸ்தவ சர்ச்சுகள் எப்பொழுதும் போரையும் போர்ப் படைகளையும் வெடிக்கும் போர்க் கருவிகளையும் ஆசீர்வதிக்க எப்பொழுதும் சம்மதித்து, தங்களுடைய சத்துரு நிர்மூலமாக்கப்படுவதற்காக மிகவும் கிறிஸ்தவமற்ற முறையில் ஜெபித்திருப்பது உண்மையிலேயே நினைவுகூரப்படலாம்.’ அவர் ஒப்புக்கொண்டார்: “இவை எல்லாம் நம்முடைய தவறாகவும் நம்முடைய தந்தைமாரின் தவறாகவும் இருக்கிறது, ஆனால் கடவுளுடைய தவறாக இல்லை என்பது தெளிவாயிருக்கிறது.”
நிமோலர், பின்னர் கூடுதலாக இவ்வாறு சொன்னார்: “போரில் பணிபுரிய உடன்படாமல், மனிதர்களைச் சுட்டுக்கொல்ல மறுத்த காரணத்துக்காக நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் சித்திரவதை முகாம்களுக்குள் சென்று மரித்திருக்கும் பைபிளின் பொறுப்புணர்ச்சி வாய்ந்த கல்விமான்கள் [யெகோவாவின் சாட்சிகள்] என்றழைக்கப்படும் உட்பிரிவினரைக் குறித்து இன்றைய கிறிஸ்தவர்களாகிய நாம் வெட்கப்படுவதை எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமாயிருக்கிறது.”
லூத்தரன் மத குருக்கள் ஹிட்லரை ஆதரிக்க மனமுள்ளவர்களாக, ஆம், ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர் என்பதை நிரூபிக்கும் சர்ச் ஆவணங்களை யூதர்களைப் பற்றிய ஆய்வு படிப்பின் பேராசிரியர் சூசன்னா ஹெஷல் கண்டுப்பிடித்துள்ளார். சுவஸ்திகாவை தங்களுடைய சர்ச்சுகளில் பறக்கவிடுவதற்கான சிலாக்கியத்துக்காக அவர்கள் மன்றாடியதாக அவர் சொன்னார். மதகுருக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒத்துழைப்பவர்களாக இல்லாமல், ஹிட்லரையும் அவனுடைய ஆரிய இலட்சியங்களை உற்சாகமாய் ஆதரிப்பவர்களாக இருந்தனர் என்பதை அவர்களுடைய ஆய்வு காண்பித்தது.
சொற்பொழிவுகளை ஆற்றுகையில், ஹெஷல்லை சர்ச் உறுப்பினர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, “நாம் என்ன செய்திருக்க முடியும்?”
“நீங்கள் யெகோவாவின் சாட்சிகளைப்போல இருந்திருக்கலாம்,” என்பதாக அவர் பதிலளிக்கிறார்.
அவர்கள் ஏன் மெளனமாக இருந்தார்கள்
சர்ச்சுகள் மெளனமாக இருந்ததற்குக் காரணம் தெளிவாக இருந்தது. கிறிஸ்தவமண்டலத்தின் மதகுருமாரும் அவர்களுடைய மந்தையும் அரசை ஆதரித்து பைபிளின் போதனைகளைப் புறக்கணித்துவிட்டிருப்பதே காரணமாகும். 1933-ல் ரோமன் கத்தோலிக்க சர்ச் நாசிக்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. ரோமன் கத்தோலிக்க கார்டினல் ஃபால்ஹேபர் ஹிட்லருக்கு இவ்விதமாக எழுதினார்: “போப்பாட்சியோடு இந்தக் கைகுலுக்கல் . . . அளவிடமுடியாத ஆசீர்வாதத்தின் அருஞ்செயலாகும். . . . நாசி ஆட்சி வேந்தரை [ஹிட்லரை] கடவுள் காப்பாற்றுவாராக.”
உண்மையில், கத்தோலிக்க சர்ச்சும் மற்ற சர்ச்சுகளும்கூட, பொல்லாத ஹிட்லர் அரசாங்கத்தின் கைப்பாவையாக ஆனார்கள். இயேசு கிறிஸ்து தம்மை உண்மையாய்ப் பின்பற்றுவோரைக் குறித்து ‘உலகத்தின் பாகமாக இல்லை’ என்பதாக சொன்னபோதிலும்கூட, சர்ச்சுகளும் அவர்களுடைய பங்கைச் சேர்ந்தவர்களும் ஹிட்லரின் உலகில் இன்றியமையாத பாகமாக ஆனார்கள். (யோவான் 17:16) இதன் விளைவாக, நாசிக்களால் அவர்களுடைய மரண முகாம்களில் நடப்பிக்கப்பட்ட மனிதருக்கு எதிரான பயங்கரமான செயல்களைக் குறித்து தைரியமாக பேச தவறிவிட்டனர்.
கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் மற்றும் பல வித்தியாசமான மதங்களைச் சேர்ந்த ஒரு சில தைரியமுள்ள தனிநபர்கள் நாசி அரசை எதிர்த்து நின்றது உண்மையே. ஆனால் அவர்களில் சிலர் இதற்காக தங்கள் உயிரையே இழந்தபோது, கடவுளைச் சேவிப்பதாக உரிமைபாராட்டிய அவர்களுடைய ஆன்மீகத் தலைவர்கள் நாசி ஆட்சியின் கைப்பாவைகளாக சேவித்து வந்தனர்.
என்றபோதிலும், எப்போதும் தைரியமாக பேசிய ஒரு குரல் இருந்தது. செய்தி சாதனம் நாசி நாடகத்தில் சர்ச்சுகளின் முக்கியப் பங்கைப் பெரும்பாலும் கவனியாதிருந்தபோதிலும், திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு அவர்கள் செய்தவற்றை நுணுக்கமான விவரங்களோடுகூட மதகுருமாரின் துரோகச் செயலையும் மாய்மாலத்தையும் அம்பலப்படுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக உணர்ந்தனர். இந்தப் பத்திரிகையின் முன்னோடியிலும் 1930 மற்றும் 1940-கள் முழுவதிலுமாக மற்ற பிரசுரங்களிலும் நாசிக் கொள்கையின் கைப்பாவைகளான மத அமைப்புகளின் பலமான குற்றங்களை அவர்கள் வெளியிட்டனர்.
கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுவோரை அடையாளம் கண்டுகொள்ளுதல்
யெகோவாவின் சாட்சிகள் உலகின் மதங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள். உலகத்தின் பாகமாக இல்லாத காரணத்தால், தேசங்களின் போர்களில் அவர்களுக்கு எந்தப் பங்குமில்லை. கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலாக அவர்கள் ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக’ அடித்திருக்கிறார்கள்! (ஏசாயா 2:4) ஆம், கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலாக அவர்கள் ஒருவரில் ஒருவர் அன்புகூருகின்றனர். (யோவான் 13:35) அவர்கள் யுத்தத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் வேண்டுமென்றே காயப்படுத்துவதில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.
கடவுளின் உண்மை வணக்கத்தாரை அடையாளம் கண்டுகொள்வதைப் பற்றி வருகையில் பைபிள் தெளிவாக சொல்வதாவது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்.”—1 யோவான் 3:10-12.
ஆம், யெகோவாவின் சாட்சிகள் எப்பொழுதும் கடுமையான அழுத்தத்தை எதிர்ப்படுகையிலும்கூட தங்கள் உடன் மானிடருக்கு அன்பைக் காண்பித்திருப்பதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. ஐரோப்பா முழுவதிலுமாக ஹிட்லர் போர் தொடுத்தபோது, கொல்லும் வெறிபிடித்த செயலில் சேர்ந்துகொள்ளும்படி நாசிக்கள் செய்த மிருகத்தனமான முயற்சிகளை எதிர்ப்பட்டபோதிலும் சாட்சிகள் உறுதியாக நின்றனர். பேராசிரியர் கிறிஸ்டீன் கிங் விஷயத்தை நன்றாகவே சுருக்கமாகச் சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள் தைரியமாக பேசினார்கள். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே தைரியமாக பேசினார்கள். அவர்கள் ஐக்கியப்பட்டவர்களாக தைரியமாக பேசினார்கள். அவர்கள் இப்படிப்பட்ட தைரியத்தோடு பேசிய உண்மையானது, நம் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கொண்டிருக்கிறது.”
போரிலிருந்தும் பொல்லாப்பிலிருந்தும் விடுபட்டதாய் இந்த உலகம் யெகோவாவினுடைய அரசாங்கத்தின் அன்புள்ள ஆட்சியின்கீழ் பாதுகாப்பாய் இருக்கும் வரையாக, யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து தைரியமாக பேசிக்கொண்டிருப்பர். கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவின் சித்தமாக இருக்கும் வரையாக இந்தப் பத்திரிகை இந்தச் சாத்தானிய உலகின் தீமைகளை அம்பலப்படுத்திக்கொண்டும் கடவுளுடைய ராஜ்யமாகிய மனிதவர்க்கத்தின் ஒரே உண்மையான நம்பிக்கையை அறிவித்துக்கொண்டுமிருக்கும்.—மத்தேயு 6:9, 10.
[பக்கம் 13-ன் படங்கள்]
ஐ.மா. பத்திரிகைத்துறை நாசிக்கொள்கையை சர்ச் ஆதரித்த உண்மையை உறுதிசெய்தது
நியூ யார்க் போஸ்ட், ஆகஸ்ட் 27, 1940, புளு ஃபைனல் எடிஷன், பக்கம் 15
தி நியூ யார்க் டைம்ஸ், செப்டம்பர் 25, 1939, லேட் சிட்டி எடிஷன், பக்கம் 6
தி நியூ யார்க் டைம்ஸ், டிசம்பர் 7, 1941, லேட் சிட்டி எடிஷன், பக்கம் 33
[பக்கம் 15-ன் படம்]
சர்ச்சுகளைப் போல் இல்லாமல், யெகோவாவின் சாட்சிகள் நாசிக்கொள்கைக்கு எதிராக தைரியமாக பேசினார்கள்