உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 9/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஜெர்மானிய சர்ச்சுகள் படுகொலைக்கான குற்றத்தை ஏற்கின்றன
  • உறவை முறிப்பதற்கான ஒரு கோயில்
  • கண்கள் இரட்டிப்பான வேலை செய்கின்றன
  • திரைப்படங்களுக்கு ஒரு “புரவலர் புனிதர்”
  • மறுமையா மாயத்தோற்றமா?
  • பூமியின் பாதிபாகம் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது
  • கடவுளுக்காக சூதாடுபவர்களா?
  • படுக்கை ஓய்வின் தீமைகள்
  • உலகிலேயே மிகப் பணக்கார நாடுகள்
  • வால்சிங்ஹேம்—இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய கோயில்
    விழித்தெழு!—1994
  • பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
    காவற்கோபுரம்: பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
விழித்தெழு!—1995
g95 9/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

ஜெர்மானிய சர்ச்சுகள் படுகொலைக்கான குற்றத்தை ஏற்கின்றன

போலந்தைச் சேர்ந்த அவுஷ்விட்ஸில் உள்ள சித்திரவதை முகாம்களில் இருந்தவர்கள் விடுதலையாக்கப்பட்டதில் இருந்து ஜனவரி 1995-ல் 50 ஆண்டுகள் நிறைவேறின. இம்முகாம்களில் யூதர்கள், ஸ்லாவியர்கள், நாடோடிகள், யெகோவாவின் சாட்சிகள் ஆகியோரையும் மற்றவர்களையும் நாசிக்கள் நன்கு ஒழுங்குப்படுத்தப்பட்ட ரீதியில் துன்புறுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். சில சர்ச்சுகள் இதற்கான குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றன. ஜெர்மானிய பிஷப்புகள் மாநாடு “குற்றம் நிறைந்து காணப்படும் நம் நாட்டின் வரலாற்றையும் சர்ச்சின் வரலாற்றையும்” விவரித்து, “கத்தோலிக்கர் மத்தியில் ஏராளமான தவறும் குற்றமும் இருந்தது,” என்று ஒப்புக்கொண்டதாக ஸுடெய்ச்ச ட்ஸைடுங் அறிவித்தது. “அநேக கத்தோலிக்கர்கள் நேஷனல் சோஷியலிஸ்ட் கொள்கைகளால் மேற்கொள்ளப்பட அனுமதித்து, குற்றச்செயல்களைச் செய்வதுபற்றி கவலையற்ற மனப்பான்மையைத் தொடர்ந்து காண்பித்து வந்தனர்.” ஜெர்மனியில் உள்ள புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் கவுன்ஸிலின் தலைவர் இவ்வாறு மனம்திறந்து சொன்னார்: “இதை மனக்கசப்புடன் உணருகையில், கிறிஸ்தவ இறையியலும் சர்ச்சும்கூட யூதர்களுக்கு எதிரான பிரிவினைகளும் விரோதமும் நிறைந்த நீண்ட வரலாற்றில் பங்கெடுத்திருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறோம்.”

உறவை முறிப்பதற்கான ஒரு கோயில்

மணவிலக்கையோ அநாவசியமான உறவுகளை முறித்துக்கொள்வதையோ எதிர்நோக்கியிருக்கும் ஜனங்கள் டோக்கியோவின் வடபகுதியில் 80 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஆஷிகாகாவில் உள்ள ஒரு ஷின்டோ கோயிலுக்குப் படையெடுக்கின்றனர். உறவு முறிக்கும் கோயில் என்றறியப்பட்ட இது மட்டுமே ஜப்பானில் மணவிலக்குக்கான மனுக்களைப் பெறும் ஒரே ஷின்டோ கோயிலாகத் தோன்றுகிறதென்று அஸாஹி ஈவ்னிங் நியூஸ் சொல்லுகிறது. ஒவ்வொரு நாளும் அநேக பக்தர்கள் வந்து சேருகின்றனர். இமா என்ற மெல்லிய மரப்பலகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய வேண்டுதலை எழுதி கோயிலின் சுவர்களில் மாட்டிவைத்துவிட்டு, அந்தக் கடவுட்கள் கேட்டருள வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார்கள். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால், இந்தக் கோயிலை ஸ்தாபித்தபோது, “உள்ளூரிலுள்ள பணக்கார வியாபாரிகளுடைய மனைவிமார்கள், தங்களுடைய கணவன்மார்கள் அவர்களுடைய கள்ளக் காதலிகளை விட்டுவிட்டுத் தங்களிடம் திரும்பி வரவேண்டும் என்று கேட்டுத் தங்களுடைய பிரார்த்தனையை எழுதி வைத்தார்கள்,” என்று அந்தச் செய்தித்தாள் விளக்கமளிக்கிறது. ஆனாலும் இன்றோ அத்தகைய உருக்கமான பிரார்த்தனை இனிமேலும் சமரசத்துக்காக அல்ல.

கண்கள் இரட்டிப்பான வேலை செய்கின்றன

மனித கண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலையைச் செய்கின்றன என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் ஒன்று நாம் அறியக்கூடிய வகையில் பார்வையளிக்கிறது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தி நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்ட மற்றொன்று, உடம்பினுள் உள்ள உடலியல் கடிகாரத்தை சீர்படுத்தும் ஒளி அலைகளைப் பதிவுசெய்து வைத்தல் ஆகும். இந்த இரண்டாவது வேலையானது பார்க்கும் திறனைச் சார்ந்திராமல் செய்யப்படுவதால், முற்றிலும் குருடர்களாக இருப்பவர்களும் வெளிச்சத்தைப்பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் இருப்பவர்களும், சாதாரணமாக இயங்கும் உடலியல் கடிகாரத்தைக் கொண்டிருக்கலாம். இந்தக் கண்டுபிடிப்பு குருடர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் மாற்றங்களுக்கு வழிநடத்தலாம். உதாரணமாக, முற்றிலும் குருடானவர்களுடைய கண்களை அகற்றிவிட்டு, அதிக கவர்ச்சியூட்டும் செயற்கை கண்களைப் பொருத்துவது பொதுவான ஒரு பழக்கமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒளியைப் பதிவு செய்வதற்கான விழித்திரையின் திறனை தடைசெய்யும், விழி அழுத்த மிகைப்பு போன்ற நிலையை முற்றிலும் குருடானவர்களிடம் வழக்கமாகவே பரிசோதித்துப் பார்ப்பதில்லை. இதன் விளைவாக, இந்த மக்களில் பெரும்பாலானோருக்கு தங்களுடைய உடலியல் கடிகாரங்களை 24-மணிநேர இரவு பகல் சுழற்சிகளுக்கு ஏற்றாற்போல் இனிமேலும் சீராக்க முடியாமல் போகிறது என்றும் இது விமானப்பயண பாதிப்புகளைப் போன்று இருக்கும் நிரந்தர உறக்கக் கோளாறுகளில் விளைவடையும் என்றும் ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக இருக்கும் டாக்டர் சாரல்ஸ் ஏ. சேஸ்லர் கூறினார்.

திரைப்படங்களுக்கு ஒரு “புரவலர் புனிதர்”

திரைப்படத் தொழில்துறை விரைவில் தனக்கென சொந்தமாக “புரவலர் புனிதர்” ஒருவரைக் கொண்டிருக்கும் என்பதாக ஸ்பெய்னில் உள்ள மாட்ரிடைச் சேர்ந்த எல் பாயிஸ் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. திரைப்படத் தொழில்துறையின் முதல் நூற்றாண்டு நினைவுவிழா கொண்டாட வாடிகன் பொருத்தமாக இருக்க சாத்தியமுள்ள நபர்களை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது. விருப்பமான தெரிவு, இயேசுவின் பிறப்பிடக் காட்சியைக் கண்டுபிடித்தவராகிய அசிசியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் ஆவார். இந்தக் காட்சியே “ஹாலிவுட் அமைவிற்கு” தொடக்கக் கட்டமாக இருந்ததாக சில திரைப்பட தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். முன்மொழியப்பட்ட மற்றொரு பெயரானது ஜுயான் போஸ்கோ ஆவார். இவர் பிள்ளைகளுக்குப் போதிக்க பொழுதுபோக்கை ஒரு கருவியாக பயன்படுத்திய ஒரு செலேஷியன் பாதிரியாவார். “முதல் மகா காட்சிகளில் ஒன்றாக இருக்கும், கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையைக் கண்டுபிடித்தவராகிய செயின்ட் டோமிங்ஙோ டெ கூஸ்மான்” என்பவருடைய பெயரை ஒரு திரைப்பட இயக்குநர் ஒருவர் முன்மொழிந்தார். மிகவும் சமீபத்தில் வந்த ஒரு காரியமான தொலைக்காட்சி ஏற்கெனவே, “சாந்தா” க்ளாராவை “புரவலர் புனிதர்” ஆக வைத்துக்கொண்டுள்ளது. அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த சிறையின் ஜன்னல் வழியாக பார்த்து பலிபூசைக்குப் போனதனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எனினும், நிகழ்ச்சிநிரலைத் திட்டமிடுவதில் புனிதர்களுக்கு அதிகாரம் இருப்பதாக ஒரு சான்றுகூட கிடையாது.

மறுமையா மாயத்தோற்றமா?

செய்தித்தொடர்பு துறை “மரணதறுவாய் அனுபவங்கள்” பற்றிய தகவல்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இவற்றில் மரிக்கும் தறுவாயில் உள்ள நோயாளிகள் மறுவாழ்வின் காட்சியைப் பெற்றிருப்பதாக பின்னர் கூறினர். அத்தகைய அனுபவங்கள் ஆக்ஸிஜன் இல்லாமையினால் ஏற்படுவதாகவும் அது மாயத்தோற்றத்தை உருவாக்குவதாகவும் ஜெர்மானிய நரம்பியல் வல்லுநர்களின் குழுவால் நடத்தப்பட்ட ஆய்வுகள் சமீபத்தில் காண்பித்தன. டச்சு செய்தித்தாள் ட கோயி என் ஏம்லான்டிர் சொல்லுகிறபடி, அந்தக் குழு அளவுக்கதிகமான காற்றோட்டத்தை ஏற்படுத்துவதன்மூலம் நல்ல ஆரோக்கியமுள்ள 42 இளைஞர்களை அதிகபட்சம் 22 நொடிகளுக்கு மயக்கநிலையில் இருக்கவைத்து ஆராய்ச்சிகள் நடத்தியது. அதற்குப் பிறகு அந்த இளைஞர்கள் “மரணதறுவாய் அனுபவங்களுக்கு” குறிப்பிடத்தக்கவகையில் ஒத்திருக்கக்கூடிய உணர்ச்சிகளையும் காட்சிகளையும் விவரித்தனர். சிலர் மிகவும் அடர்த்திமிகுந்த வண்ணங்களையும் பிரகாசமான வெளிச்சத்தையும் கண்டதாகவும், உயரத்திலிருந்து காட்சிகளைக் கண்டதாகவும் அன்பார்ந்தவர்களை மிகவும் சந்தோஷமான சூழ்நிலையில் பார்த்ததாகவும் வேறு அநேகத்தையும் அறிவித்தனர். பெரும்பாலான இளைஞர்கள் சுயநினைவு நிலைமைக்குத் திரும்பிவராமலிருந்தால் பரவாயில்லையே என்று நினைக்குமளவுக்கு, அந்த உணர்ச்சிகள் சந்தோஷகரமானதாகவும் அமைதி நிறைந்ததாகவும் இருந்ததாகவே அவர்கள் விவரித்தனர்.

பூமியின் பாதிபாகம் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது

“மனிதவர்க்கம் மிகச் சிறந்த முயற்சிகளை எடுத்திருந்தபோதிலும், பூகோளத்தின் நிலப்பரப்பில் பாதியைவிட சற்று அதிகமான அளவு இன்னும் வெறும் காடாகவே கிடக்கிறது,” என்று அறிவிக்கிறது நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை. புதிய ஆராய்ச்சி ஒன்று “ஒன்பது கோடி சதுர கிலோமீட்டர் [3,50,00,000 சதுர மைல்] நிலப்பரப்பு, அதாவது மொத்த நிலப்பரப்பில் சுமார் 52 சதவீதம் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே கிடக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறது.” 1989-ல் நடத்திய நில அளவையின் விளைவாக கொடுத்த புள்ளிவிவரங்கள் கோளின் மூன்றிலொரு பாகம் மட்டுமே காடாக இருக்கிறது என்பதாக பட்டியலிட்டது. ஆனால் இந்த அளவு அதைவிட இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன? ஏனென்றால், சர்வதேசிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த லீ ஹான்னாவால் நடத்தப்பட்ட இந்தச் சமீப ஆராய்ச்சி, முன்பு செய்ததைப்போல 4,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை குறைந்தபட்சமாக வைத்துக்கொள்ளாமல், 1,000 சதுர கிலோமீட்டர் உள்ள பகுதிகளைக்கூட உள்ளடக்கிற்று. “இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் கோளத்தின் இன்னும் அதிக சதவீதம் மனிதர்களால் தொடப்படாமலேயே இருக்கிறது என்று வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது,” என்பதாக அந்தக் கட்டுரை கூறியது. எனினும், பயன்படுத்தப்படாத நிலத்தின் பெரும்பகுதி “பாறை, பனிக்கட்டி, அடித்துவரப்படும் மணல்” ஆகியவையாகவே இருப்பதனால் மனிதர்களோ விலங்குகளோ அதில் குடியிருக்கமுடியாது என்று ஹான்னா குறிப்பிட்டார். “பூமியின் நிலப்பரப்பில் உள்ள இயற்கை வாழிடங்களில் கிட்டத்தட்ட முக்கால் பாகத்திற்கும் அதிகமாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது,” என்று அவர் சொன்னார். அந்த அளவையின் மூன்று வகைகளாவன: பயன்படுத்தப்படாதது (52 சதவீதம்), அரைகுறையாக பயன்படுத்தப்பட்டது (24 சதவீதம்), முழுவதுமாக பயன்படுத்தப்பட்டது (24 சதவீதம்).

கடவுளுக்காக சூதாடுபவர்களா?

அ.ஐ.மா.-விலுள்ள நிவேடாவைச் சேர்ந்த லாஸ் வேகாஸுக்கு ஒவ்வொரு வருடமும் உலகமுழுவதிலிருந்தும் ஏறக்குறைய 2.9 கோடி மக்கள் வந்து குவிகிறார்கள். சந்தேகமின்றி பெரும்பாலானோர், சூதாடுவதற்கு வந்திருக்கின்றனர்; ஆனால் அவர்களில் அநேகர் வழிபடவும் ஜெபிக்கவும் விரும்புகின்றனர். ஆகவே, இந்தப் பகுதியிலுள்ள கத்தோலிக்க பங்கு சமீபத்தில் அந்நகரத்தின் மிகப்பெரிய சீட்டாட்டக்கூடம் இணைந்த ஹோட்டலிலிருந்து ஒருசில கட்டிடங்கள் தள்ளி, $35 லட்சம் செலவில், 2,200 இருக்கை வசதிகளைக் கொண்ட ஒரு சர்ச்சை கட்டிற்று என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது. அந்த சர்ச்சுக்கு வரும் வணக்கத்தாரில் சுமார் 80 சதவீதத்தினர் நகரத்திற்கு சூதாட வந்திருக்கும் சுற்றுப் பயணிகளாதலால், சூதாட்டக்கூடத்து நாணயத்தை நன்கொடை வசூலிப்புத் தட்டில் போடும்படி சர்ச் அவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த சர்ச்சில் அன்பளிப்புப் பொருட்கள் வாங்கும் கடையும் ஒன்று இருக்கிறது, இதில் தங்களுடைய நாணயங்களைப் பணமாக உபயோகிக்கும்படி புரவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இயேசு கிறிஸ்துவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள சுவனியர் சூதாட்ட நாணயத்தையும்கூட அந்தச் சர்ச் வழங்குகிறது. வாராவாரம் எல்லா சூதாட்டக்கூடங்களுக்கும் போய் சர்ச்சுக்கு நன்கொடையாக கிடைத்த சூதாட்ட நாணயங்களைக் கொடுத்துவிட்டு பணமாக மாற்றிக்கொண்டுவர அந்தச் சர்ச் கொஞ்ச காலத்திற்கு ஒரு பிரான்ஸிஸ்கன் துறவியை அமர்த்தியிருந்தது.

படுக்கை ஓய்வின் தீமைகள்

“நீண்ட படுக்கை ஓய்வு நன்மை செய்வதைவிட அதிக தீமையே செய்யக்கூடும்,” என்று லண்டனில் பிரசுரிக்கப்படுகிற தி டைம்ஸ் வலியுறுத்திக் கூறுகிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னால், மருத்துவர் சர் ரிச்சர்ட் ஏஷர், வழக்கமாக செய்யும் இந்த மருத்துவ பழக்கத்தை கேள்விக்குள்ளாக்கி ரத்தம்கட்டுதல், தசை தளர்ச்சி, எலும்பில் கால்சியம் குறைதல், சிறுநீரகக் கற்கள், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்ற உடல்நல அபாயங்களுக்குக் கவனத்தை ஈர்த்தார். அப்பொழுதிலிருந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இந்த எச்சரிப்பை உறுதிப்படுத்தின; மேலும் ரத்தம்கட்டுதலும் அதைத் தொடர்ந்து ஏற்படுகிற நுரையீரல் ரத்த உறைகட்டியின் ஆபத்தும், இறப்பதற்கு முன் எடுக்கக்கூடிய படுக்கை ஓய்வின் நீளத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதாக பிணிக்கூற்றாய்வு காண்பித்தது. ஆனால் மறுபட்சத்தில், இடுப்புவலியோடும் கர்ப்பந்தரித்தலின் முற்றிய நிலையில் ஏற்படும் சிக்கல்களோடும்கூடிய தாங்கமுடியாத முதுகு வலிக்கு டாக்டர்கள் படுக்கை ஓய்வை சிபாரிசு செய்கின்றனர். சந்தேகமின்றி, மற்ற முற்றிப்போன மோசமான நோய்களுக்கு ஓய்வெடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருக்கலாம். எனினும், நெருக்கடி நிலை கடந்துவிட்டால், எழுந்து நடப்பதானது நோயிலிருந்து குணமடைதலை துரிதப்படுத்துகிறது என்பதாக டாக்டர்கள் கருதுகின்றனர்.

உலகிலேயே மிகப் பணக்கார நாடுகள்

உலக வங்கியினால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஸ்விட்ஸர்லாந்துதான் உலகிலேயே மிகவும் பணக்கார நாடு. 1993-ல் இதன் மொத்த நாட்டு உற்பத்தி—உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துப் பொருள் மற்றும் சேவைகளின் மதிப்பு—தலைக்கு $36,410-ஆக இருந்தது. இது பட்டியலில் ஏழாவது இடத்தை வகித்த ஐக்கிய மாகாணத்தைவிட கிட்டத்தட்ட $12,000 அதிகமாக இருந்தது. ஸ்விட்ஸர்லாந்தைப் பின்தொடர்ந்து, லக்ஸம்பர்க், ஜப்பான், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஐக்கிய மாகாணங்கள், ஐஸ்லாந்து, ஜெர்மனி, குவைத் ஆகிய நாடுகள் இருக்கின்றன. மொஸாம்பிக் ஒரு நபருக்கு $80 மட்டுமே உற்பத்தி செய்து உலகிலேயே மிகவும் ஏழை நாடாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலின் முதல் பத்தில் குறிப்பிடத்தக்கவகையில் காணப்படாமல் போனவை, எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளாக இருக்கின்றன. இது எண்ணெய் விலை குறைந்துவிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இருந்தபோதிலும் வாங்கும் திறனை கவனிப்போமானால் பட்டியல் மாறுகிறது. பெரும்பாலான பணக்கார நாடுகளைவிட ஐக்கிய மாகாணங்களில் விலைவாசி குறைவாக இருப்பதால், அமெரிக்கர்கள் தங்களுடைய பணத்துக்கு லக்ஸம்பர்க்கைத் தவிர வேறு எந்த நாட்டையும்விட அமெரிக்கா அதிகப் பொருட்களை வாங்கமுடிகிறது. அப்படியானால் அந்தப் பட்டியல் இவ்வாறு மாறுகிறது: லக்ஸம்பர்க், ஐக்கிய மாகாணங்கள், ஸ்விட்ஸர்லாந்து, ஐக்கிய அரபுக் கூட்டாட்சி, கடார், ஹாங்காங், ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர், மற்றும் கனடா.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்