இடப்பெயர்ச்சியின் மர்மங்களை துருவுதல்
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
தகைவிலான் குருவிகள் அ.ஐ.மா.-வின் கலிபோர்னியாவைச் சேர்ந்த சான் ஜ்வான் கெப்பஸ்ட்ரானோவில் உள்ள தங்களுடைய பழைய சான் ஜ்வான் காப்பஸ்ட்ரானோ சர்ச்சுக்குத் திரும்பி வருவதைப்பற்றி சொல்லக்கூடிய பழைய பாட்டு ஒன்று உண்டு. இங்குள்ள தங்களுடைய கூடுகளுக்கு இவை ஒவ்வொரு வருடமும் தவறாமல் மார்ச் 19-ம் தேதியன்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய தகைவிலான்களும் இதைப்போன்ற ஒரு கால அட்டவணையையே பின்பற்றுகின்றன. மார்ச் 15-ம் தேதியன்று மீண்டும் தகைவிலானின் பாட்டு கேட்கப்படும் என்று ஸ்பானிய பழமொழி ஒன்று முன்னறிவிக்கிறது.
வட அரைக்கோளத்தில் உள்ள கிராமத்து ஜனங்கள், இளவேனிற்காலத்து பாரம்பரிய முன்னோடியாகிய தகைவிலானின் மறுவருகையை எப்போதுமே வாழ்த்தி வரவேற்றிருக்கின்றனர். ஆனால் குளிர்காலத்தில் அவை காணப்படாதிருந்த சமயம் எங்கு போயிருந்தன என்பதாகவும் ஆர்வமுள்ள சிலர் யோசித்தனர். அவை செயலற்ற நிலையில் குளிர்கால ஓய்வெடுத்தன என்று சிலர் நினைத்தனர். மற்றவர்களோ அவை சந்திரனுக்குப் போய்விட்டன என்பதாகக் கருதினர்—அவற்றால் இரண்டு மாத காலத்தில் சந்திரனுக்கு பறந்து செல்லமுடியும் என்று ஒருவர் கணக்கிட்டார். தகைவிலான்கள் குளிர்காலத்தை நீருக்கடியில், ஏரிகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு அடியில் ஒன்றாகக்கூடி செலவழித்தன என்பதாக ஸ்வீடனைச் சேர்ந்த 16-ம் நூற்றாண்டு ஆர்ச்பிஷப் ஒருவர் அடித்துச் சொன்னார். மீனவர்கள் தங்கள் வலையில் முழுவதும் தகைவிலான்களைப் பிடித்து இழுப்பதுபோன்ற ஒரு சித்தரிப்பும்கூட அவருடைய ஆய்வுக்கட்டுரையில் இருந்தது. இந்தக் கருத்துகள் இப்போது விநோதமானவையாக தோன்றலாம், ஆனாலும் உண்மை கிட்டத்தட்ட கற்பனைக் கதையைப் போன்று விசித்திரமானதாகவே இருந்தது.
இந்த நூற்றாண்டின்போது பறவையியல் நிபுணர்கள் ஆயிரக்கணக்கான தகைவிலான் குருவிகளுக்கு அடையாள வளையமிட்டிருக்கின்றனர். வளையமிடப்பட்ட இந்தப் பறவைகளில் ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க சதவீதம் அவற்றின் குளிர் வாசஸ்தலங்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது நம்பமுடியாததாகத் தோன்றினாலும், பிரிட்டனிலும் ரஷ்யாவிலுமிருந்து வரும் தகைவிலான்கள் தங்களுடைய சொந்த ஊரிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கப்பால் இருக்கும்—ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கடைமுனையில் ஒன்றுசேர்ந்து குளிர்காலத்தை செலவழித்துக்கொண்டிருந்தது காணப்பட்டது. வட அமெரிக்காவில் இருக்கும் அவற்றின் கூட்டாளிகளில் சில, தெற்கில் அர்ஜன்டினா அல்லது சிலி போன்ற தூரப்பகுதிகளுக்குப் பறந்து செல்கின்றன. அத்தகைய சாகச பயணங்களை மேற்கொள்ளும் பறவைகள் தகைவிலான் குருவிகள் மட்டுமேயல்ல. வட அரைக்கோளத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பறவைகள் தெற்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தைக் கழிக்கின்றன.
தகைவிலானைப்போன்ற மிகச்சிறிய பறவையும்கூட, அடுத்த இளவேனிற்காலத்தில் அதே கூட்டிற்குப் போகுமுன் 22,500 கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு முழுப் பிரயாணத்தை மேற்கொள்ளுவதைக் கண்டு பறவையியல் நிபுணர்கள் ஆச்சரியத்தில் ஆழந்துவிட்டிருக்கின்றனர். தகைவிலான்கள் எங்குப் போயின என்று அறிவது, குழப்பமுண்டாக்கும் இன்னுமநேக கேள்விகளைத்தான் எழுப்பியிருக்கின்றன.
“தகைவிலானே, நீ உன் கூட்டைவிட்டுச் செல்வதேன்?”
ஒரு பறவை பூகோளத்தின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு பயணப்படும்படி செய்வதெது? அல்லது, ஸ்பானிய பழமொழி ஒன்று சொல்வதுபோல, “தகைவிலானே, நீ உன் கூட்டைவிட்டுச் செல்வதேன்?” குளிரின் காரணமாகவா அல்லது உணவைத் தேடிக் கண்டுபிடிக்கவா? சந்தேகமின்றி, குளிரான வானிலையின் தொடக்கத்தைவிட, நம்பகரமான உணவு கிடைப்பதற்கான அவற்றின் தேவையே இதற்கான விடையாக இருக்கிறது. ஏனென்றால் குளிரைத் தாங்கிக்கொள்வதைப் பிரச்சினையாகக் காண்கிற அநேக சிறிய பறவைகள் இடம் பெயருவதில்லை. ஆனால் பறவையின் இடப்பெயர்ச்சி என்பது ஏதோ உணவைத் தேடி அலைந்து திரிவது மட்டும் கிடையாது. இடம்பெயரும் மனிதர்களைப் போலல்லாமல், பறவைகள் இடம்பெயருமுன் சாதகமற்ற காலக்கட்டம் வரும்வரை காத்திருப்பது கிடையாது.
குறுகிய பகல்நேரப் பொழுதுகளே இடம்பெயருவதற்கான உந்துவிப்பைத் தூண்டிவிடுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இலையுதிர்காலத்தில் பகல்நேர சமயம் குறைந்துவரும்போது கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பறவைகள் அமைதியற்றுக் காணப்படுகின்றன. செயற்கையாக இந்தப் பாதிப்பை ஏற்படுத்தும்போதும், ஆராய்ச்சியாளர்களால் இந்தப் பறவைகள் வளர்க்கப்பட்டபோதும்கூட இவ்வாறே இருக்கிறது. கூண்டில் அடைத்துவைக்கப்பட்டு இருக்கும் பறவை தன்னுடைய இடப்பெயர்ச்சி பிரயாணத்தின்போது எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று இயல்புணர்வினால் அறிந்திருக்கிறதோ அதே திசையில் திரும்புகிறது. தெளிவாகவே, வருடத்தின் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில் இடம்பெயரவேண்டும் என்ற தூண்டுதல் பிறப்பிலிருந்தே வந்ததாக இருக்கிறது.
பறவைகள் நீண்ட தூரங்களுக்கு வெற்றிகரமாக பயணப்பட்டுப் போவது எவ்வாறு? அநேக பறவைகள் எல்லைக் குறிகள் புலப்படா பெருங்கடல்கள் மீதும் பாலைவனங்கள் மீதும், அதுவும் பகலிலும் இரவிலும் பிரயாணப்பட்டு இடம்பெயருகின்றன. ஒருசில இனங்களில் குஞ்சுகள் அனுபவமிக்க பெரிய பறவைகளின் உதவியின்றி தாங்களாகவே பயணம்செய்கின்றன. இவை புயல்கள் வந்தாலும் பக்கவாட்டில் காற்று வீசினாலும்சரி, எப்படியோ தங்களின் வழியைவிட்டு விலகாதிருக்கின்றன.
முக்கியமாக பரந்த கடல்கள் வழியாகவோ பாலைவனங்கள் வழியாகவோ பயணம் செய்வதென்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. இதைப்பற்றி முழு அறிவைப் பெறுவதற்கு மனிதனுக்கே ஆயிரக்கணக்கான வருடங்களாயிற்று. உயர்வுமானி (Astrolabe) மற்றும் காந்தவிசை திசைமானி ஆகிய கடற்பயண கருவிகளின் உதவியின்றி, கிறிஸ்டோஃபர் கொலம்பஸ், கடல் கடந்து அவ்வளவுதூர பயணம் மேற்கொள்ள ஒருபோதும் துணிந்திருக்கமாட்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.a அப்படியிருந்தபோதிலும், தன்னுடைய முதல் கடல்பயணத்தின் இறுதிக்கட்டத்தில், பஹாமாவுக்கு வழிகாட்டியது பறவைகளேயாகும். பண்டையகால மாலுமிகளின் பழக்கத்தைப் பின்பற்றி, இடம்பெயரும் நிலவாழ் பறவைகள் தென்மேற்குத் திசையில் பறப்பதைக் கண்டு அவரும் அத்திசைக்குத் தன் பயணத்தை மாற்றிக்கொண்டார்.
வெற்றிகரமான பயணத்திற்கு சீரான போக்கைக் காத்துக்கொள்வதற்கான ஒரு அமைப்பும், இருக்கும் நிலையைத் தீர்மானிக்கும் ஒரு முறையும் தேவைப்படுகிறது. எளிதாக சொல்லவேண்டுமென்றால், நீங்கள் போய் சேருமிடத்தோடு ஒப்பிடுகையில் எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் அந்த இடத்தைச் சென்றடைய எந்தத் திசையில் போகவேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும். கருவிகளின்றி அப்படிப்பட்ட வேலையைக் கையாளும் திறமை மனிதர்களாகிய நமக்கில்லை—ஆனால் தெளிவாகவே, பறவைகளுக்கு இருக்கிறது. பறவைகள் தாங்கள் பறக்கவேண்டிய சரியான திசையை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதை விளக்கக்கூடிய தகவல்களை விஞ்ஞானிகள், பொறுமையுடன், கொஞ்சம்கொஞ்சமாக ஒன்று திரட்டியிருக்கின்றனர்.
விடைகளில் சில
தங்களுடைய வீட்டுக்குத் திரும்பும் புறாக்கள், பறவைகளின் பயணத்தின்பேரிலான மர்மங்களை வெளிப்படுத்த உறுதிபூண்டிருக்கும் விஞ்ஞானிகள் இஷ்டப்பட்டு தெரிந்துகொள்ளும், “பரிசோதனை பறவைகளாக” இருக்கின்றன. நீடிய பொறுமையுள்ள புறாக்கள், குறிப்பிட்ட அடையாளக்குறிகளைக் காணமுடியாத அளவுக்கு மேற்பரப்பு சொரசொரப்பாக்கப்பட்ட “மூக்குக் கண்ணாடி” அணிவிக்கப்பட்டிருக்கின்றன. மற்றவையோ வழி அறிந்துகொள்வதற்கு பூமியின் காந்தப்புலத்தை உபயோகிப்பதைத் தடைசெய்யும்வண்ணம், முதுகில் காந்தக்கருவி பொருத்தப்பட்டவையாய் இருக்கின்றன. சில பறவைகள் விடப்பட்ட இடத்திற்குப் போகும்போது, வெளிப்படையான வழியைக் காண ஒரு வழியும் இல்லாதவகையில், போதைப்பொருட்களும்கூட கொடுக்கப்பட்டிருந்தன. இந்தப் புத்திசாலி புறாக்கள் இத்தடை ஒவ்வொன்றையும் தனித்தனியாக மேற்கொண்டன. இருப்பினும் ஒருசில தடைகள் ஒன்றாக சேரும்போது இப்புறாக்கள் வெற்றிகரமாக வீடுதிரும்புவது தடைசெய்யப்பட்டது. தெளிவாகவே, பறவைகள் ஒரேவொரு பயணமுறையை மட்டும் சார்ந்தில்லை. அவை எந்த முறைகளைப் பயன்படுத்துகின்றன?
செயற்கை சூரியன்களையோ இரவு வானங்களையோ பயன்படுத்தி நடத்திய சோதனைகள், பறவைகள் பகல் நேரத்தில் சூரியனை வைத்தும் இரவில் நட்சத்திரங்களை வைத்தும் பிரயாணம் செய்யமுடியும் என்பதைக் காட்டுகின்றன. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால் அப்போது என்ன? பறவைகள் உள்ளமைக்கப்பட்ட திசைமானியைக் கொண்டிருந்ததைப்போல, அவை பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தியும்கூட ஒரு தடத்தை நிர்ணயிக்கமுடியும். அதே கூட்டுக்கு அல்லது மேல்கூரைக்குத் திரும்பிவர, பழக்கமான சில அடையாளங்களை அவற்றால் கண்டுபிடிக்க முடியவேண்டும். கூடுதலாக, பறவைகளால் சத்தங்களையும் வாசனைகளையும் மனிதர்களைவிட சிறந்தளவில் உணர்ந்துகொள்ளமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இருப்பினும் பயணத்தை மேற்கொள்ளுவதில் இந்தத் திறன் எந்தளவுக்கு உபயோகிக்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
“பறவையின் பயண வரைபடத்தின்” மர்மம்
நிர்ணயிக்கப்பட்ட ஒரு திசையில் பறவைகளால் எவ்வாறு பறக்கமுடிகிறது என்பதை நிரூபிக்க இந்த ஆராய்ச்சிகளனைத்தும் உதவியிருந்த போதிலும், திணறடிக்கும் ஒரு பிரச்சினை இன்னும் இருந்துவருகிறது. நம்பகரமான திசைமானியை வைத்திருப்பது நல்லதுதான், ஆனால் வீடுதிரும்ப உங்களுக்கு ஒரு வரைபடமும் தேவைப்படுகிறது—முதலாவது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கும், பின்னர் மிகச் சிறந்த தடத்தைக் குறித்துவைப்பதற்குமாகும்.
என்ன “பறவையின் பயண வரைபடங்களை” பறவைகள் உபயோகிக்கின்றன? வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, அவை எங்கு இருக்கின்றன என்று அவற்றிற்கு எவ்வாறு தெரியும்? வரைபடங்களோ அடையாளக் கம்பங்களோ இருப்பதுபோல் தெரியவில்லையென்றாலும், மிகச் சிறந்த தடத்தை அவை எவ்வாறு தீர்மானிக்கின்றன?
ஒரு பறவையின் “வரைபட அறிவானது, விலங்குகளின் நடத்தையிலேயே கண்டுபிடிக்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராகவே தொடர்ந்து இருக்கும்போல் தோன்றுகிறது” என்று உயிரியல் நிபுணர் ஜேம்ஸ் எல். கூல்ட் சொல்கிறார்.
மர்மத்தின் பின்னிருக்கும் மனது
தெள்ளத்தெளிவாக இருப்பது என்னவென்றால் இடப்பெயர்ச்சியானது இயல்புணர்வு நடத்தையாகும். அநேக பறவை இனங்கள், வருடத்தின் குறிப்பிட்ட ஒரு சமயத்தில் இடம்பெயரும்படி மரபணுப்பூர்வமாகவே திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆகவே அவை வெற்றிகரமாக பயணம் மேற்கொள்ளத் தேவையான திறமைகளோடும் உணர்ச்சிகளோடும் பிறந்திருக்கின்றன. இந்த இயல்புணர்வுத் திறமை எங்கிருந்து வந்தது?
நியாயமாகவே, இந்த இயல்புணர்வு ஞானமானது, பறவைகளின் மரபணுக் குறியீட்டைத் “திட்டமிட” முடிந்த, ஞானமான படைப்பாளரிடமிருந்து மட்டுமே வந்திருக்கக்கூடும். பொருத்தமாகவே கோத்திரப் பிதாவாகிய யோபிடம் கடவுள் வினவினார்: “பருந்து உயரத்தில் எழும்பிப் பறப்பதும், தெற்கு நோக்கித் தன் இறக்கைகளை விரிப்பதும் உன் அறிவினாலோ?”—யோபு ஆகமம் 39:26, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
பறவை இடப்பெயர்ச்சியின் பேரில் நூற்றுக்கணக்கான வருடங்களாக ஆழ்ந்து ஆராய்ந்தபின், விஞ்ஞானிகள் பறவைகளின் சின்னஞ்சிறு மூளைகளை மதிக்கத் தொடங்கியிருக்கின்றனர். பிரதான இடப்பெயர்ச்சி தடங்களைக் குறித்தபின், சில பறவைகள் பயணம் மேற்கொள்ளும் நம்பமுடியாத தூரத்தை அறிந்து விஞ்ஞானிகளால் அதிசயப்படாமல் இருக்கமுடியவில்லை. தலைமுறை தலைமுறையாக, இளவேனிற்காலத்திலும் இலையுதிர்காலத்திலும் இடப்பெயர்ச்சி செய்யும் கோடிக்கணக்கான பறவைகள் உலகைச் சுற்றிவருகின்றன. அவை பகல் நேரத்தில் சூரியனை வைத்தும் இரவில் நட்சத்திரங்களை வைத்தும் பிரயாணம் செய்கின்றன. வானிலை மப்பும் மந்தாரமுமாக இருக்குமேயானால், அவை பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி, பழக்கமான நில அமைப்புகளை உடனடியாக அடையாளம் கண்டுகொள்கின்றன. ஒருவேளை அவை வாசனை அல்லது அகவொலி அலைகளைக் கொண்டும்கூட தங்களை சரியான திசையில் வைத்துக்கொள்கின்றன.
அவை தங்களுடைய பிரயாணங்களை எவ்வாறு “திட்டமிடு”கின்றன என்பது ஒரு மர்மமாகவே இருந்துவருகிறது. தகைவிலான்கள் அனைத்தும் எங்கே போகின்றன என்று நமக்குத் தெரியும்; ஆனால் அவை அங்கு எவ்வாறு போகின்றன என்றுதான் தெரியாது. இருந்தபோதிலும், இலையுதிர்காலத்தில் தகைவிலான்கள் ஒன்றுகூடி திரண்டு வருவதை நாம் பார்க்கும்போது, அவற்றின் இடப்பெயர்ச்சியை கூடிய காரியமாக்கிய கடவுளின் ஞானத்தைப்பற்றி ஒரு கணம் நினைத்துப்பார்த்து வியக்காதிருக்கமுடியாது.
[அடிக்குறிப்புகள்]
a உயர்வுமானி என்ற கருவி அட்சரேகையை அளக்கப் பயன்படுத்தப்பட்டது.
[பக்கம் 18-ன் பெட்டி]
உலக இடப்பெயர்ச்சி வீரர்கள்
தூரம். 1966-ம் ஆண்டு வடப்பிரதேசத்தின் கோடைகாலத்தில், ஆர்க்டிக் டெர்ன் ஒன்று கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த நார்த் வேல்ஸில் அடையாள வளையமிடப்பட்டது. அதே வருடம் டிசம்பரில் அது பொருத்தமாகவே ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சௌத்வேல்ஸுக்கு வந்தது. ஆறே ஆறு மாதகாலத்தில் இது 18,000-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் பறந்திருக்கிறது. ஒருவேளை ஆர்க்டிக் டெர்ன்களுக்கு இத்தகைய சாகசம் சர்வசாதாரணமாக இருக்கலாம். ஒரு வருடத்தின் போக்கில், இந்தப் பறவைகளில் சில தவறாமல் உலகத்தை முழுவதுமாக சுற்றிவருகின்றன.
வேகம். அமெரிக்கன் கோல்டன் ப்ளோவர்கள்தான் இடம்பெயரும் பறவைகளிலேயே ஒருவேளை அதிவேகத்தில் பறக்கக்கூடியவையாக இருக்கலாம். இந்தப் பறவைகளில் சில ஹவாயை அலாஸ்காவின் அலூஷியன் தீவுகளிலிருந்து பிரிக்கும் 3,200 கிலோமீட்டர் தூரமுள்ள கடலை, முப்பத்தைந்தே மணி நேரத்தில்—மணிக்கு சராசரி 91 கிலோமீட்டர் வேகத்தில்—கடந்து சென்றிருக்கின்றன.
சகிப்புத்தன்மை. 20 கிராம் எடை மட்டுமேயுள்ள, வட அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளாக்போல் வார்ப்ளர்கள் மிகவும் நீண்ட தூரங்களுக்குப் பறக்கின்றன. தென் அமெரிக்காவுக்குப் போகும் பிரயாணத்தில், அவை அட்லான்டிக்கிற்குக் குறுக்கே 3,700 கிலோமீட்டர் தூரத்தை வெறும் மூன்றரை நாட்களில் நிறுத்தமேயின்றி பறந்து கடக்கின்றன. அசாதாரணமான இந்தச் சகிப்புத்தன்மையின் சோதனையானது, நான்கு நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடும் ஒரு மனிதன் 1,900 தடவைகள் நிறுத்தாமல் ஓடுவதற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. இது பறப்பதானது உடலின் எடை ஏற்ற இறக்கத்தில் கவனம் செலுத்துவோரின் கனவுமாகக்கூட இருக்கிறது—இந்த வார்ப்ளர் பறவை தனது உடல் எடையில் கிட்டத்தட்ட பாதியை உபயோகப்படுத்துகிறது.
காலம்தவறாமை. தகைவிலானைத் தவிர, செங்கால் நாரையும் (மேலே காட்டப்பட்டுள்ளது) காலம்தவறாமைக்கு பெயர்பெற்றதாக இருக்கிறது. செங்கால் நாரையை, ‘தன் வேளையை நன்கு அறிந்திருக்கும்’ பறவை என்பதாகவும், “வரத்தக்க” காலத்தை அறிந்திருக்கிற பறவை என்பதாகவும் தீர்க்கதரிசி எரேமியா விவரித்தார். (எரேமியா 8:7) ஒவ்வொரு இளவேனிற்காலத்திலும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் செங்கால் நாரைகள் இஸ்ரேலைக் கடந்து செல்கின்றன.
பிரயாணத் திறமைகள். மேங்க்ஸ் ஷியர்வாட்டர்ஸுக்கு வேறெந்த இடமும் தன் வீட்டைப்போல் இருக்காது. கிரேட் பிரிட்டனில் உள்ள அதன் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பெண் பறவை சுமார் 5,000 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்திருக்கும் அ.ஐ.மா.-விலுள்ள பாஸ்டனில் விடப்பட்டது. அட்லான்டிக்கை அது 12 1/2 நாட்களில் கடந்து, அது விடுவிக்கப்பட்டதை அறிவிக்கும் ஏர்மெயில் கடிதம் வீட்டுக்குச் சென்றடைவதற்கு முன்னமே, வீட்டிற்கு வந்து சேர்ந்தது. இந்த சாதனை வியப்புமிக்க ஒன்றாக இருக்கிறது, ஏனென்றால் இந்தப் பறவைகள் தங்களுடைய இடப்பெயர்ச்சி பிரயாணங்களில் வட அட்லான்டிக்கை ஒருபோதும் கடந்ததில்லை.
[பக்கம் 16-ன் படம்]
செங்கால் நாரை ஒவ்வொரு வருடமும் காலம்தவறாமல் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வருகிறது
[பக்கம் 17-ன் படம்]
V-வடிவில் குழுமி செல்லும் இடம்பெயரும் கொக்குகள்