இளைஞர் கேட்கின்றனர்
ஏன் என்னைத் தவிர எல்லாரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்?
நான் திருமணம் செய்பவளாக இருக்க விரும்புகிறேன். அப்போது நான் சந்தோஷமாயிருப்பேன்.”—ஷெரில்.a
திருமணம் செய்துகொள்ள விரும்புவது இயல்பானதே. இருபாலாருக்கும் இடையே இயல்பான கவர்ச்சியுண்டாகும் பண்புடன் கடவுள் ஆணையும் பெண்ணையும் அமைத்தார். திருமணத்தை ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள நிலையான ஒன்றிணைப்பாக அவர் நிலைநாட்டினார்.—ஆதியாகமம் 1:27, 28; 2:21-24.
ஆகவே, உனக்கு இன்னும் மணமாகவில்லை என்றால்—முக்கியமாய் உனக்கு இணையானவர்கள் பலர் ஏற்கெனவே மணவாழ்க்கைக்குள் பிரவேசித்துவிட்டார்களென்றால்—நீ ஒருவாறு மனத்தளர்வுற்றவளாக அல்லது ஒதுக்கிவிடப்பட்டவளாகவும் கூட உணரக்கூடுமென்பது புரிந்துகொள்ளத்தக்கதே. நல்நோக்கமுள்ள நண்பர்களுங்கூட இந்தச் சங்கடத்தோடு மேலும் கூட்டக்கூடும். “எனக்கு 24 வயது, மணமாகாதவளாக இருக்கிறேன், தற்போது நான் யாரிடமும் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு வைத்துக்கொண்டுமில்லை,” என்று டீனா சொல்கிறாள். “எனக்கு மணமாகவில்லை என்பதைப்பற்றி மற்ற எல்லாரும் கவலைப்படுவதாகத் தோன்றுகிறது, ஆகவே நான் அதைப்பற்றி உணர்ச்சியுடையவளாவதற்குத் தொடங்குகிறேன். முதுகன்னியைப்போல் அல்லது என்னில் ஏதோ குறைபாடு இருப்பதுபோல் என்னை உணரச் செய்கின்றனர்.”
சில ஆட்களுக்கு, மணமாகாத நிலை, சந்தோஷத்திலிருந்து அவர்களை ஒதுக்கி வைக்கும் ஒரு மதிலைப்போல், சமாளிக்கமுடியாத இடையூறைப்போல் தோன்றத் தொடங்கக்கூடும். ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதோடு, மற்றொரு அடுக்குச் செங்கல் அந்த மதிலின் உச்சியில் வைத்துக் கட்டப்பட்டு வருவதுபோன்ற உணர்ச்சியுண்டாகலாம். இளைஞர் ஒருவர், தான் கவர்ச்சியற்று அல்லது விரும்பத்தகாமல் இருப்பதாக உணரத் தொடங்கக்கூடும். இத்தாலியில் ரோஸான்னா என்ற பெயருடைய ஓர் இளம் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “நான் அடிக்கடி தனிமையாகவும் பயனற்றவளாகவும் உணருகிறேன்; மணம் செய்வதற்கான வாய்ப்புகள் எனக்கு இல்லையென்று தோன்றுகிறது.” இளம் ஆண்களுக்கும் கூட இதைப்போன்ற உணர்ச்சிகள் இருக்கக்கூடும். உதாரணமாக, ஃபிராங்க், தன் நண்பர்கள் யாவரும், மணம் செய்த பின்பு, அதிக கவர்ச்சியுள்ளோராயும் உலகப்பிரகார ஆரவாரமுடையோராயும் ஆகிவிட்டனரென்று உணரத் தொடங்கினான். திருமணம் தனக்கும் அதையே செய்யக்கூடுமாவென்று சிந்திக்கத் தொடங்கினான்.
நீயும் இதைப்போன்று சிந்திப்பதாக உன்னைக் காண்கிறாயா? நீ மணமாகாத நிலையில் இருந்தால், உன்னில் ஏதோ பிழையாயுள்ளதா அல்லது மணமாகாத வாழ்க்கைக்கே நீ என்றுமாக விதிக்கப்பட்டிருக்கலாமா என்று சில சமயங்களில் யோசிக்கிறாயா?
திருமணம்—கற்பனைக்கதைக்கு எதிராக உண்மை
முதலாவது, திருமணம் சந்தோஷத்திற்குத் தானாக வழி திறக்கிறது என்ற பொது நம்பிக்கையை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். திருமணம் ஒருவருடைய சந்தோஷத்திற்கு உதவியளிக்கக்கூடும், அடிக்கடி அவ்வாறு செய்தும் இருக்கிறதென்பது உண்மையே. எனினும், வெறுமனே மணம் செய்திருப்பதுதானே ஒருவரை சந்தோஷமுள்ளவராக்குகிறதில்லை. மிகச் சிறந்த திருமணங்களும் கூட ‘சரீரத்திலே உபத்திரவத்தை’ ஓரளவாகக் கொண்டுவருகின்றன. (1 கொரிந்தியர் 7:28) இடைவிடாது செய்யும் தன்னலத் தியாகத்தாலும் கடும் முயற்சியினாலும் மாத்திரமே திருமண சந்தோஷம் உண்டாகிறது. கவனத்தைக் கவருவதாய், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராகிய இயேசு கிறிஸ்து மணமாகாதவராக இருந்தார். அவரைச் சந்தோஷமில்லாதவரென்று எவராவது அழைப்பாரா? நிச்சயமாகவே இல்லை! அவருடைய மகிழ்ச்சி யெகோவாவின் சித்தத்தைச் செய்வதிலிருந்து வந்தது.—யோவான் 4:34.
தனிமை உணர்வைத் திருமணம் தீர்க்கிறதென்ற உறுதிச்சொல் மற்றொரு கற்பனைக் கதையாகும். அவ்வாறு இல்லை! மணம் செய்த கிறிஸ்தவ மனிதர் ஒருவர் இவ்வாறு புலம்பினார்: “என் மனைவி என்னில் நம்பிக்கையை ஒருபோதும் தெரிவிக்கவில்லை அல்லது என்னுடன் தனிக் கருத்துடன் பேசினதில்லை. ஒருபோதுமே இல்லை!” இதைப்போன்றே கிறிஸ்தவ மனைவிமார் சிலர், தங்கள் கணவர்கள் பேச்சுத்தொடர்புகொள்ளத் தவறுகின்றனர் அல்லது தங்கள்பேரில் இருப்பதைப் பார்க்கிலும் தங்கள் வேலைகளில் அல்லது நண்பர்களிலேயே அதிக அக்கறையுடையோராகத் தோன்றுகின்றனரென்று வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். விசனகரமாய், மணம் செய்திருந்து ஆனால் தனிமையுணர்வுடன் இருப்பது மிகச் சாதாரணமாயுள்ளது.
பின்னும், குடும்பப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கொள்வதற்கு வழியாகத் திருமணத்தைக் கருதுவோரும் உள்ளனர். மணம் செய்த ஓர் இளம் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “நான் முதிர்ச்சியடைவதற்கு ஒரு வாய்ப்பை என் பெற்றோர் எனக்குக் கொடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், ஒரு பையனை நண்பனாகக் கொண்டிருக்க அல்லது நண்பர்களுடன் வெளிச்செல்ல அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை . . . என் பெற்றோர் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருந்தால், நான் 16 வயதில் மணம் செய்திருந்திருக்க மாட்டேன். ஆனால் என்னை முதிர்ந்தவளாக அவர்களுக்குக் காண்பிக்க விரும்பினேன்.”
வீட்டில் வாழ்க்கை மட்டுமீறி கட்டுப்பாடுடையதாக இருப்பதாய் நீ ஒருவேளை உணரலாம். ஆனால் திருமணம் ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தைப் பேரளவாய் மட்டுப்படுத்தக்கூடிய பொறுப்புகளைக் கொண்டுவருகிறது. வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு வேலையைக் கொண்டிருப்பது, செலவு சீட்டுகளுக்குப் பணம் செலுத்துவது, வீட்டு மற்றும் வாகன பழுதுபார்த்தல்களைச் செய்வது, சமைப்பது, சுத்தப்படுத்துவது, ஆடைகளைத் துவைப்பது, ஒருவேளை பிள்ளைகளையும் வளர்ப்பது ஆகியவை உட்படுத்துவதைச் சிந்தித்துப் பார்! (நீதிமொழிகள் 31:10-31; எபேசியர் 6:4; 1 தீமோத்தேயு 5:8) வயதுவந்தவர்களின் இந்தப் பொறுப்புகளை எதிர்ப்படும்போது இளைஞர் பலர் அதிர்ச்சியுற்று திகைக்கின்றனர்.
மணம் செய்வது புகழடைவதற்கு வழிவகையாக உள்ளதென்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால் நீ மணம் செய்திருக்கும் வெறும் காரணத்தினிமித்தம் மற்றவர்கள் உன் தோழமையை—அல்லது உன்னுடைய மணத்துணையின் தோழமையை—ஆவலுடன் விரும்புவர் என்பதற்குச் சான்றுறுதி எதுவுமில்லை. நீ தயவாயும், தாராள குணமுள்ளவளாயும், தன்னலமற்றவளாயும் இருந்தால், நீ மணம் செய்தவளாகவோ மணமாகாதவளாகவோ எவ்வாறு இருந்தாலும் ஆட்கள் உன்னை விரும்புவர். (நீதிமொழிகள் 11:25) தம்பதிகளாக இருப்பது, மணமாகிய நண்பர்களோடு பொருந்துவதைச் சிறிது எளிதாக்குகிறதென்றாலும், கணவனும் மனைவியும் தாங்கள் ‘ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்’ என்பதை நினைவில் வைக்க வேண்டும். (ஆதியாகமம் 2:24) தங்கள் நண்பர்களோடல்ல—தாங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு பொருந்திப்போகிறார்கள் என்பதே அவர்களுடைய முக்கிய அக்கறையாக இருக்க வேண்டும்.
மணம் செய்வதற்கு ஆயத்தமா?
நிச்சயமாகவே, இந்தக் குறிப்புகளின் நியாயமானத் தன்மையை நீ கண்டாலும், சில சமயங்களில் மனச்சோர்வடைபவளாக இன்னும் உணரக்கூடும். பழங்கால நீதிமொழி ஒன்று இவ்வாறு கூறினது: “நெடுநாட் காத்திருப்பது இதயச் சோர்பு உண்டாக்கும்.” (நீதிமொழிகள் 13:12, தி.மொ.) உதாரணமாக, இளம் டோனி, தான் மணமாகாதவனாக இருந்ததனால் பெரும்பாலும் மனக்கசப்புற்ற நிலையில் தன்னைக் கண்டான். எவரையாயினும் மணம் செய்ய தான் தயாராயிருப்பதாக உணரத் தொடங்கினான். அவ்வாறே, சாந்த்ரா என்ற பெயர்கொண்ட ஓர் இளம் பெண், காதல் தொடங்குவதைப்பற்றி தான் கேள்விப்படும் ஒவ்வொரு சமயத்திலும் மனச்சோர்வுற்றவளானாள்; தனக்கு எப்போது வாய்ப்பு உண்டாகப் போகிறதென்று சிந்திப்பாள்.
மனத்தளர்வுற்ற நிலைக்குள்ளாகும்படி உன்னை அனுமதிப்பதற்கு முன்பாக, ‘மணம் செய்வதற்கு நான் உண்மையில் தயாராக இருக்கிறேனா?’ என்று உன்னைக் கேட்டுக்கொள். வெளிப்படையாய்ச் சொல்ல, நீ பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவளாக இருந்தால், இல்லை என்பதே அழுத்தமான பதிலாக இருக்க வேண்டும்! ஐக்கிய மாகாணங்களில், பத்தொன்பது வயதுக்குட்பட்ட திருமணங்களில் பெரும்பான்மையானவை ஐந்து ஆண்டுகளுக்குள் தோல்வியடைகின்றன.b நிச்சயமாகவே, இளைஞர் சிலர் தங்கள் வயதுக்குப் பொதுநிலைமீறிய வகையில் முதிர்ச்சியுள்ளோராக இருந்து, மணவாழ்க்கையை வெற்றிகரமாக்கக் கூடியோராக இருக்கலாம். ஆனால் அது, நீ திருமணம் செய்ய வேண்டுமென்று அவசியமாய்ப் பொருள்படுகிறதில்லை. மணவாழ்க்கையின் பொறுப்புகளை ஏற்பதற்கு நீ ஆயத்தமாயிருக்கிறாயா என்று நேர்மையுடன் சிந்தித்துப் பார்த்துவிட்டாயா?
நேர்மையுடன் சுய பரிசோதனை செய்வது மிகுதியானதை வெளிப்படுத்தக்கூடும். உதாரணமாக, நீ எவ்வளவு முதிர்ச்சியுடையவனாயும் பொறுப்பறிந்தவனாயும் இருக்கிறாய்? பணத்தை வீணாக்காமல் சேமித்து வைக்கக்கூடியவனாக இருக்கிறாயா, அல்லது அதைப் பெற்றவுடன் செலவழித்துவிடுகிறாயா? பணம் செலுத்துவதற்கான சீட்டுகளுக்குக் காலதாமதமின்றி பணத்தைச் செலுத்துகிறாயா? ஒரு வேலையில் நிலைத்திருக்கும் அல்லது ஒரு குடும்பத்தை நடத்தும் திறமையுள்ளவனாக இருக்கிறாயா? உடன் வேலைசெய்பவர்களும் பெற்றோர்களும் போன்ற மற்றவர்களோடு ஒத்து வாழ்கிறாயா, அல்லது அவர்களோடு அடிக்கடி சச்சரவு செய்கிறவனாக இருக்கிறாயா? அவ்வாறெனில், ஒரு மணத்துணையுடன் ஒத்து வாழ்வதை நீ வெகு கடினமாகக் காணக்கூடும்.
பத்தொன்பது வயதுக்குட்பட்டவனாக நீ இன்னும் இருக்கிறாயென்றால், நல்ல ஒரு கணவனாக அல்லது நல்ல ஒரு மனைவியாக இருப்பதற்குத் தேவைப்படும் முதிர்ச்சியையும் திடநிலையையும் அடைவதற்கு மேலும் சில ஆண்டுகள் உனக்குத் தேவைப்படுகின்றன என்று நீ கண்டறிவாய். இந்த உண்மையைத் தெளிவாக உணர்வது உன் எதிர்பார்ப்புகளைத் திரும்பச் சரிப்படுத்தி அமைத்து, திருமணத்தை எதிர்கால வாய்ப்பாகக் கருதும்படி உனக்கு உதவிசெய்யலாம். இது, மணமாகாத உன் நிலையைப்பற்றி, தற்போதைக்காவது ‘இருதயத்தில் அதிக உறுதியுள்ளவனாக’ இருக்கும்படி உனக்கு உதவிசெய்யக்கூடும்.—1 கொரிந்தியர் 7:37.
தகுந்த ஆயத்தம்
‘இளமை மலர்ச்சி பருவத்தை’ நீ கடந்துவிட்டதாக நம்பி, மணம் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறாயென்று உணர்ந்தால் என்ன செய்வது? மணத்துணைவர்களாக இருக்கக்கூடியவர்கள் சொற்பமாயிருந்து, எவரிலாவது நீ அக்கறையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சமயத்திலும் நீ மறுக்கப்பட்டால், அது மனச்சோர்வுண்டாக்கலாம். ஆனால் இது, நீ விரும்பத்தகாதவனென்று கட்டாயமாகப் பொருள்படுகிறதா? இல்லவேயில்லை. அரசன் சாலொமோன், தான் காதல்கொண்ட ஓர் இளம் பெண்ணை வசியச் செய்வதில் சற்றேனும் வெற்றியடையவில்லை—உயிர்வாழ்ந்த எவரிலும் அதிக செல்வந்தராயும் அதிக ஞானமுள்ளோராயும் இருந்த மனிதரில் அவர் ஒருவராக இருந்தார்! பிரச்சினை என்ன? அந்தப் பெண்ணின் இருதயம் அவரிடமாகக் காதல் உணர்ச்சிகளைக் கொள்ளும்படி சற்றேனும் சாயவில்லை. (உன்னதப்பாட்டு 2:7) அதுபோலவே, நீ உண்மையில் ஒத்திணையக்கூடிய ஒருவரை இன்னும் சந்தியாதிருக்கலாம்.
ஒருவரைக் கவரக்கூடாதபடி நீ மிகப் பொதுப்படையான தோற்றமுள்ளவனாக இருப்பதாய் உணருகிறாயா? உண்மைதான், அழகான தோற்றங்கள் அவற்றிற்குரிய அனுகூலங்களைக் கொண்டுள்ளன, ஆனால் அவைதான் முக்கியமான எல்லாமல்ல. உனக்குத் தெரிந்த மணமாகிய தம்பதிகளை நீ சிந்தித்துப் பார்க்கையில், அவர்களுக்குள் வெவ்வேறுபட்ட உயரங்களும், உருவங்களும், கவர்ச்சிக்கும் தன்மைகளும் இருப்பது உண்மையல்லவா? இவற்றைத் தவிர, உண்மையில் கடவுள் பயமுள்ள ஒருவன், ‘இருதயத்தின் மறைவான ஆளில்’ நீ எவ்வாறு இருக்கிறாய் என்பதிலேயே முக்கியமாய் அக்கறையுடையவனாக இருப்பான்.—1 பேதுரு 3:4, NW.
நிச்சயமாகவே, உன் உடல் தோற்றத்தை நீ கவனியாமல் இருக்கக்கூடாது; சிறந்த முறையில் தோற்றமளிக்க முயற்சி செய்வது நியாயமானதே. ஒழுங்கற்ற உடையும் சிகை அலங்காரமும் உன்னைப்பற்றி மற்றவர்களுக்குத் தவறான அபிப்பிராயத்தைக் கொடுக்கக்கூடும்.c மேலும், உரையாடல் திறமைகளில் குறைவுபடுவது அல்லது உன் தனிப்பட்ட ஆள்தன்மையிலுள்ள குறைபாடுகள், உன்னை அறிந்துகொள்வதற்கு முன்பாகவே, உன்மீது விருப்பம் கொள்ளாதபடி மற்றவர்களைச் செய்விக்கலாம். இந்தக் காரியங்களில் தேவைப்படும் சிறிது சரிப்படுத்தல்களை முதிர்ச்சியடைந்த ஒரு நண்பன் அல்லது பெற்றோர் ஒருவர் உனக்குச் சொல்லக்கூடும். உண்மையைத் தெரிவிப்பது வேதனையாக இருக்கலாம், ஆனால் அதை ஏற்பது, சரிப்படுத்தல்களைச் செய்யவும், அவ்வாறு மற்றவர்களுக்கு மேலுமதிகமாய் விரும்பத்தக்கவனாய் இருக்கவும் உனக்கு பெரும்பாலும் உதவிசெய்யலாம்.—நீதிமொழிகள் 27:6.
எனினும், கடைசியாகக் கவனிக்கையில், ஓர் ஆளாக உன் தகைமை அல்லது மதிப்பு, நீ திருமணம் செய்திருக்கிறாயா இல்லையா என்பதால் தீர்மானிக்கப்படுகிறதில்லை. கடவுள் உன்னை எவ்வாறு கருதுகிறார் என்பதே உண்மையாக மதிப்புள்ளது, அவர் “இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) ஆகவே, மணம் செய்வதன்பேரில் அல்ல, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதன்பேரிலேயே குவிமையமாக உன் அக்கறை ஒருமுகமாய் ஊன்றியிருக்கும்படி வைக்கவேண்டும். மணம் செய்வதே உன் சிந்தனைகளையும் உரையாடலையும் ஆட்கொள்ளவிடாதபடி முயற்சி செய். உன் கூட்டுறவுகளையும், இசை விருப்பத் தேர்வையும், பொழுதுபோக்கையும் கவனமாய்த் தேர்ந்தெடு.
திருமணம் செய்வதற்கான ஆசை போய்விடாதென்பது மெய்யே, ஆனால் குழப்பமடைய வேண்டாம். பொறுமையைக் கையாளு. (பிரசங்கி 7:8) மணமாகாத உன் நிலையை ஒரு சாபமாகக் கருதுவதற்குப் பதிலாக, கவனத்தைத் திருப்பும் இடையூறில்லாமல் கடவுளைச் சேவிப்பதற்கு மணமாகாத நிலை அளிக்கிற சுதந்திரத்தையும், அது அளிக்கிற வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள். (1 கொரிந்தியர் 7:33-35, 38) ஏற்ற காலத்தில்—ஒருவேளை நீ நினைப்பதற்கும் முந்தியே, சீக்கிரமாக உனக்குத் திருமணமாகலாம்.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b எங்கள் ஏப்ரல் 22, 1995, வெளியீட்டில், “இளைஞர் கேட்கின்றனர் . . . வெகு சீக்கிரத்தில் மணம் செய்துகொண்டோம்—நாங்கள் வெற்றிபெற முடியுமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c இந்தக் காரியங்களைப்பற்றி திட்டமான ஆலோசனைகளைப் பெற, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் 10-வது மற்றும் 11-வது அதிகாரங்களைப் பாருங்கள்.
[பக்கம் 26-ன் படம்]
சகாக்கள் திருமணம் செய்யும்போது தனித்து விடப்பட்டவர்களாக உணருவது இயல்பானதாக இருக்கிறது