உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 11/8 பக். 26-27
  • புட்டிகளிலிருந்து அழகிய மணிகள் வரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புட்டிகளிலிருந்து அழகிய மணிகள் வரை
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பீடவில் மணிசெய்தல்
  • கலையைக் கற்றுக்கொள்ளுதல்
  • கண்ணாடி—அதை முதலில் உருவாக்கியவர்கள் நெடுங்காலத்துக்குமுன் வாழ்ந்தனர்
    விழித்தெழு!—1995
  • மேதைகளின் கண்ணோட்டத்தில் சுவிசேஷம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • கண்ணாடித் தீவுக்கு விஜயம்
    விழித்தெழு!—2004
  • பவளம்
    சொல் பட்டியல்
விழித்தெழு!—1995
g95 11/8 பக். 26-27

புட்டிகளிலிருந்து அழகிய மணிகள் வரை

நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

நீங்கள் அவசரத்தில் இருக்கிறீர்கள். மேசையில் இருக்கும் ஒரு புட்டியை எடுக்கிறீர்கள், ஆனால், அது பிடி நழுவுகிறது, தரையில் விழுகிறது, உடைந்துவிடுகிறது. நீங்கள் வேதனைப் பெருமூச்சு விடுகிறீர்கள், உடைந்த துண்டுகளைப் பெருக்கியெடுத்து, குப்பைக்கூடையில் அவற்றைக் கொட்டுகிறீர்கள். உங்களைப் பொருத்தமட்டில், அந்தக் காரியம் முடிந்துவிட்டது.

ஒருவேளை நீங்கள் நைஜீரியாவின் பீட நகரத்தில் வாழ்ந்தால், அந்த உடைந்த புட்டிக்கு அது வெறும் ஒரு தொடக்கமே. ஏன்? ஏனென்றால் அங்கு வாழும் நியூபே மக்கள் மத்தியில் கைவினைஞர்கள் உடைந்த ஒரு புட்டியை எடுத்து, அதிலிருந்து ஓர் அழகான மணிச் சரத்தைச் செய்யமுடிகிறது. அது தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட ஒரு கலையாகும்—நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் சிறிது மாறியிருக்கும் ஒன்று அது.

பீடவில் மணிசெய்தல்

மண்ணால் செய்யப்பட்ட சிறிய, வட்டமான குடிசையே பட்டறையாகும். தரையின் நடுவில் மண்பாண்டத்தாலாகிய சூளை நிற்கிறது. கைவினைஞர்கள் சூளைக்குள் மரத்துண்டுகளைப் போட்டு, அவற்றை நெருப்பு மூட்டுகிறார்கள். நெருப்பு தகதகவென்று எரியும்படி கையால் இயக்கப்படும் துருத்திகளால் விசிறப்படுகிறது. அதிகமான கட்டைகளைப் போடப் போட, செந்தணல் சூளைக்கு மேல் உயரே எழும்புகிறது. சூளைக்கு மேல் ஒரு இரும்பு தடியில் ஒரு புட்டி தொங்கவிடப்படுகிறது, விரைவில் கண்ணாடிப் பொருள் மிருதுவாகி, இளகிய நிலையில் தொங்குகிறது.

மணிசெய்பவர் மணிகளை ஒவ்வொன்றாக செய்கிறார். அவர் ஒரு கூரிய கம்பியை நெருப்புக்கு மேல், கண்ணாடிப் பொருள் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்பு தடிக்குப் பக்கத்தில் வைக்கிறார். அந்தக் கூரியமுனை செந்தணலாக மாறும்போது, அவர் அதை இளகிய நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் கண்ணாடி உருண்டையிடமாக நகர்த்துகிறார். பிறகு, தன் விரல்களால் கம்பியைத் திருப்பி, கண்ணாடியிலிருந்து ஒரு மணி-அளவு பகுதியை, அதிலே சுற்றி எடுக்கிறார்.

பின்னர், ஒரு நீண்ட தட்டையான அரிவாளை உபயோகித்து கண்ணாடியை மழமழப்பாக்கி, வடிவமைத்து ஒரு மணியாக உருவாக்குகிறார். ஒருவேளை அவர் பிரத்தியேக திறம்பெற்றவராக இருந்தால், பற்பல நிறக் கண்ணாடியைக் கொண்டு வேலை செய்யக்கூடும். அவர் செய்யும் ஒவ்வொரு மணியின் மேலும் அலங்கார வேலைப்பாட்டைக் கூட்டக்கூடும். கடைசியாக, அவர் அரிவாளை உபயோகித்து கம்பியிலிருந்து மணியை மெல்ல அகற்றி சாம்பல் உள்ள கலத்தில் போடுகிறார், அங்கு அது ஆறும். இப்போது மணியை முழுமையாக தயாரித்தாயிற்று. கம்பியால் இடப்பட்ட துளையே மணியை கோர்ப்பதற்கான துளையாக மாறிவிடுகிறது. ஒரு நெக்லஸை உருவாக்குவதற்காக இனி செய்யவேண்டியதெல்லாம், மணியைக் கழுவி, பிறகு மற்ற மணிகளுடன் கோர்க்கவேண்டியதுதான்.

கலையைக் கற்றுக்கொள்ளுதல்

மணிசெய்யும் கலையை ஒருவர் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்? நியூபே பிள்ளைகள் பார்ப்பதன் மூலம் துவங்குகிறார்கள். அவர்கள் பத்து வயதை அடைவதற்குள், விறகுகளை சேகரிப்பதிலும், வெட்டுவதிலும் உதவி செய்கின்றனர்.

துருத்திகளை இயக்குவதில் கைதேர்ந்தவராதல் அடுத்த படியாகும். இந்தத் துருத்திகள், துணியாலான இணைக்கப்பட்ட இரட்டைப் பைகள், ஒவ்வொன்றும் ஒரு கம்புடன் இணைக்கப்பட்டிருக்கும். துருத்திகளை இயக்குவதற்கு, “ஊதுபவர்” ஒவ்வொரு கையிலும் ஒரு கம்பைப் பிடித்து, அவற்றை மேலும் கீழும் வேகமாக அசைக்கிறார். அவருக்கு பலம், ஒருங்கிணைவு ஆகிய இரண்டும் தேவை. மணிசெய்யும் காலப்பகுதி முழுவதும், துருத்திகளால் தொடர்ச்சியாக காற்றடிப்பதற்குப் போதுமான பலசாலியாக அவர் இருக்கவேண்டும். ஒரு காலப்பகுதி பல மணிநேரம் வரை நீடிக்கக்கூடும்!

வேகமான, தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களை செயலாற்றுவதற்கு ஒருங்கிணைப்பவராகவும்கூட அவரிருந்து, துருத்திகளால் துல்லியமாக சரியான வேகத்தில் காற்றடிக்கவேண்டும். ஒருவேளை அவர் ரொம்ப மெதுவாக காற்றடித்தால், நெருப்பின் உஷ்ணமானது வேலை செய்ய போதுமான அளவுக்கு கண்ணாடியை ஒரே சீராக இளக்குவதில்லை. ஒருவேளை அவர் அதிக வேகமாக காற்றடித்தால், வெளிவரும் உஷ்ணமானது இரும்பு தடியிலிருந்து கண்ணாடியை நெருப்பில் விழச்செய்யலாம்.

இதேமாதிரியாக, மணிசெய்யும் தொழில் பழகுபவர், துருத்திகளை ஐந்து வருடங்களுக்குக் கையாளுகிறார். இறுதியில் அவர் மணிகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார். நெருப்பின் உஷ்ணத்தைத் தாங்கிக்கொள்ளக் கற்றுக்கொள்வது இந்த வேலையினுடைய சவாலின் ஒரு பகுதியாகும், இதில் வெப்பமண்டல வெயிலின் உஷ்ணமும் சேர்ந்துகொள்வதால், இது ஒரு பெரும் சோதனையாக இருக்கலாம்.

படிப்படியாக அவர் கற்றுக்கொள்கிறார். அனுபவம் நிறைந்த மணிசெய்பவருடன் இரும்பு தடியைக் கையாளுவதில் உதவிய பின்னர், சிறிய, எளிய தோற்றமுள்ள மணிகளைச் செய்வதற்கு தொழில் பழகுபவர் கற்றுக்கொள்கிறார். ஏற்றகாலத்தில், பெரிய மணிகளையும், வேறொரு நிறமுள்ள கண்ணாடியைக் கொண்டு, அலங்கார வேலைப்பாட்டுடன்கூடிய மணிகளைச் செய்யும் அளவுக்கு முன்னேறுகிறார். அனுபவம்வாய்ந்த மணிசெய்பவர்கள், பார்ப்பதற்கு சுலபமான வேலையைப்போல் செய்கிறார்கள், ஆனால், தொடர்ச்சியாக மணிகளை, ஒவ்வொன்றாக, அனைத்தையும் ஒரே அளவிலும் உருவிலும் பாங்கிலும் தயாரிப்பதற்குத் தேவையான கைத்திறனில் கைதேர்ந்தவராவதற்கு காலம் எடுக்கிறது.

மணி-செய்தல் ஓர் ஆனந்தக் கலை. சிறு மணிகளை பிள்ளைகளும் கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்ட மணிகளை பெண்களும், கனமாக இருக்கும் சடங்காச்சார மணிகளை ஆண்களும் அணிந்து கொள்கிறார்கள், இவ்வாறு நாடு முழுவதிலும் தாங்கள் செய்த வண்ண மணிகளால் மக்கள் தங்களை அலங்கரித்து இருப்பதைக் காண்பதில் மணிசெய்பவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். திருவிழாக் காலங்களிலும் ஆனந்தமிருக்கிறது. அப்போது, ஜனங்கள் துருத்திகளின் ஓசை நயத்திற்கு ஏற்ப பாடுவதற்கும் நடனம் ஆடுவதற்கும் பட்டறையில் கூடுவார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவின் வரலாறு (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது: “நியூபே கலைநயத்துடன்கூடிய . . . கண்ணாடித் தயாரிப்புகள் . . . இன்னமும் இந்தக் கண்டத்தின் சிறந்தவற்றுள் சிலவாகத் திகழ்கின்றன.” மற்றவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஒரு கிறிஸ்தவ மிஷனரி கூறினார்: “நாங்கள் விடுமுறையில் சென்றபோது, நண்பர்களுக்கும் குடும்பத்திற்கும் கொடுப்பதற்காக, பீடவிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் மணிகளை வாங்கிச் சென்றோம். நாங்கள் ஐக்கிய மாகாணங்களைச் சென்றடையும்போது, எங்கள் நண்பர்கள் பீடவின் மணிகளையே ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுத்தனர்!”

[பக்கம் 26-ன் படம்]

சூளையில் கண்ணாடிக்கு வெப்பமூட்டுதல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்