எத்தனையோ பேர் கொடிய வறுமையில் வாழ்கிறார்கள், அதிலேயே சாகிறார்கள்!
யாட்டி, ஷூக்களுக்காக தோல் துண்டுகளையும் அவற்றின் கயிறுகளையும் அவள் தைக்கும் தொழிற்சாலைக்கு தென்கிழக்கு ஆசிய தேசமொன்றில் உள்ள தன் குடிசையைவிட்டுச் செல்கிறாள். ஒரு மாத வேலைக்கு—40 மணிநேர வாரங்களும் 90 மணிநேர மிகை நேர வேலையும் செய்து—அவள் $80-க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறாள். குறைந்தளவு வளர்ச்சி அடைந்திருக்கும் நாடுகளில் மனித உரிமைகளை மனச்சாட்சிப்பூர்வமாக முன்னேற்றுவிக்கும் ஒன்றாக, அவளைப் பணிக்கு அமர்த்தியிருக்கும் ஷூ நிறுவனம் தன்னைப் பெருமையாக சித்தரிக்கிறது. மேற்கத்திய உலகில், இந்த நிறுவனம், ஒரு ஜோடு ஷூவை $60-க்கும் அதிகமான விலைக்கு விற்கிறது. அதில் சம்பளம் $1.40-ஆக இருக்கலாம்.
யாட்டி, “சுத்தமானதும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டதுமான தொழிற்சாலையை விட்டுத் திரும்புகையில், 3-க்கு 3.6 மீட்டர் அளவுள்ளதும், வீட்டுப் பல்லிகள் நிறைந்திருக்கும் அழுக்கடைந்த சுவர்களையும் உடைய ஒரு குடிசையை வாடகைக்கு எடுப்பதற்கு மட்டும் போதுமான பணமே அவளிடம் இருக்கிறது. ஃபர்னிச்சர் எதுவுமில்லை; ஆகவே யாட்டியும் அவளது அறை சகாக்கள் இருவரும் மண்-ஓடு தரையில் சிசுக்களைப்போல் சுருண்டு படுத்துத் தூங்குகிறார்கள்,” என்பதாக பாஸ்டன் க்ளோப் அறிக்கை சொல்லுகிறது. அவளுடைய நிலைமை கவலைக்குரிய மாதிரியாக இருக்கிறது.
“இந்த மக்கள் என் உதவியுடன் நன்றாக இருக்கிறார்களா அல்லது அது இல்லாமல் நன்றாக இருக்கிறார்களா?” என்று வணிகக் கூட்டுறவுத் தலைவர் ஒருவர் வாதாடுகிறார். “அந்தச் சிறிய சம்பளம், அவர்கள் ஒரு திருப்திகரமான வாழ்க்கை முறையை அனுபவிக்க அவர்களுக்கு உதவுகிறது. இன்பமான வாழ்க்கைச் சூழலில் அவர்கள் வாழாமல் இருக்கக்கூடும், ஆனால் அவர்கள் பட்டினியாய் இல்லை.” என்றபோதிலும், அவர்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்துக் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் அடிக்கடி பசியோடுதான் உறங்கச் செல்கின்றனர். ஆபத்தான வேலையிடங்களின் அபாயங்களை அவர்கள் தினசரி எதிர்ப்படுகின்றனர். விஷங்களையும் நச்சுக் கழிவுகளையும் கையாளுவதன் காரணமாக அநேகர் மெல்ல செத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் “திருப்திகரமான வாழ்க்கைமுறை”யாக இருக்கிறதா?
தென்னாசியாவிலுள்ள பண்ணைத் தொழிலாளியாகிய ஹரி, காரியங்களை வித்தியாசமாகப் பார்த்தார். அவர் தன்னைச் சுற்றியெங்கும் காணப்படும் கடுமையான வாழ்வு-சாவு சுழற்சியை வார்த்தைகளால், கவிநயம்பட சித்தரித்தார். “உரலுக்கும் உலக்கைக்கும் இடையில், மிளகாய் சிதையாமல் இருக்க முடியாது. ஏழைகளாகிய நாங்கள் மிளகாய்களைப்போல இருக்கிறோம்—ஒவ்வொரு வருடமும் நாங்கள் அரைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம், சீக்கிரத்தில் ஒன்றுமே விட்டுவைக்கப்பட்டிருக்காது,” என்று அவர் சொன்னார். ஹரி ஒருபோதும் அந்த “திருப்திகரமான வாழ்க்கைமுறையை” அனுபவிக்கவுமில்லை; தன்னை வேலைக்கு அமர்த்தியிருந்தவர்கள் ஒருவேளை வாழ்ந்துவந்திருக்கும் இன்பமான வாழ்க்கைச் சூழல் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றி லேசாகவும் அறிந்திருக்கவில்லை. சில நாட்களுக்குப் பின்னர், ஹரி இறந்துபோனார்—கொடிய வறுமையின் மற்றுமொரு பலியாள்.
ஹரியைப்போலவே திரளானவர்கள் வாழ்கிறார்கள், சாகிறார்கள். அவர்கள் தங்கள் உயிராற்றலை இழக்கும் நிலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அதை எதிர்க்க முடியாதபடி மிகவும் பலவீனமுள்ளவர்களாகி, துயரத்தில் வாடுகிறார்கள். யாரால் அவ்வாறு செய்யப்படுகிறார்கள்? எப்படிப்பட்ட மக்கள் அதைச் செய்வார்கள்? அவர்கள் நன்மைசெய்ய விருப்பமுள்ளவர்களாகவே தோன்றுகின்றனர். அவர்கள் உங்கள் குழந்தைக்கு உணவளிக்க, உங்கள் பயிர்களை விளைவிக்க உதவ, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த, உங்களை செல்வந்தராக்க விரும்புவதாகச் சொல்கின்றனர். உண்மையில் அவர்கள் தங்களைத்தாங்களே பணக்காரராக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கின்றனர். பொருட்களை விற்பதற்கும், லாபங்களைப் பெறுவதற்குமான வாய்ப்புகளைக் காண்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைவுள்ள பிள்ளைகளும், நச்சுப் பாதிப்பை அடைந்த வேலையாட்களும், அழுக்காக்கப்பட்ட சூழலும் அவர்களுடைய பேராசையின் உப விளைவுகள் என்றால், அவர்கள் இதைக் குறித்து கவலைகொள்ளுவதில்லை. தங்கள் பேராசைக்காக நிறுவனங்கள் அந்த விலையைச் செலுத்த மனமுள்ளவையாய் இருக்கின்றன. ஆகவே லாபங்கள் குவிந்துகொண்டு செல்கையில், துயரூட்டும் மரண எண்ணிக்கைகளும் அதிகரிக்கின்றன.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.N. Photo 156200/John Isaac