உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 11/22 பக். 8-11
  • பூமி—கடவுள் நமக்களித்த பரிசு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி—கடவுள் நமக்களித்த பரிசு
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பூமி—வியப்புக்குரியதும் அழகானதும்
  • கடவுளுடைய பரிசைப் பெற தகுதியற்ற நன்றிகெட்ட சமுதாயம்
  • கடவுளுடைய பரிசு மதித்துணரப்படுகையில்
  • விசேஷித்த ஒரு கிரகத்தின் அத்தாட்சி
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • கிரக பூமிக்கு என்ன ஏற்படும்?
    புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்
  • கடவுள் தந்த பரிசுகளுக்கு நன்றியோடு இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • நீங்கள் கேட்க வேண்டும் என அவர்கள் விரும்பும் நற்செய்தி
    யெகோவாவின் சாட்சிகள் அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 11/22 பக். 8-11

பூமி—கடவுள் நமக்களித்த பரிசு

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” அந்தப் பூமி “மிகவும் நன்றாயிருந்தது” என்றும் அவர் கூறினார். (ஆதியாகமம் 1:1, 31) கழிவுப்பொருள் குவியல்கள் அதன் அழகைக் கெடுக்கவில்லை; எவ்வித குப்பை கூளங்களும் அதை மாசுபடுத்தவில்லை. ஓர் அழகிய பரிசு மனிதகுலத்திற்கு ஒப்படைக்கப்பட்டது: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.”—சங்கீதம் 115:16.

ஏசாயா 45:18-ல் பூமிக்கான அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து அவர் சொல்கிறார்: “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.”

பூமியினிடமாக மனிதனின் பொறுப்பு என்னவாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுக் காண்பிக்கிறார்—“அதைப் பண்படுத்தவும் காக்கவும்.”—ஆதியாகமம் 2:15.

யெகோவா முன்மாதிரியை அளிக்கிறார். அவர் பூமியைக் காத்து வருகிறார். ஒரு வழி, பூமியிலுள்ள எல்லா உயிர்களும் சார்ந்திருக்கிற காரியங்களான, பூமியின் முக்கியமான பொருள்களை மறுசுழற்சி செய்வதன் மூலமேயாகும். ஸயன்டிஃபிக் அமெரிக்கன் என்பதன் விசேஷித்த வெளியீடு ஒன்று இந்தச் சுழற்சிகளில் பலவற்றைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டிருந்தது; பூமியின் ஆற்றல் சுழற்சி, உயிர்மண்டலத்தின் ஆற்றல் சுழற்சி, தண்ணீர் சுழற்சி, ஆக்சிஜன் சுழற்சி, கார்பன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி, மற்றும் கனிம சுழற்சிகள் ஆகியவற்றை அது உட்படுத்தியது.

பூமி—வியப்புக்குரியதும் அழகானதும்

மிகவும் பிரசித்திப்பெற்ற உயிரியலாளர் லூயிஸ் தாமஸ், டிஸ்கவர் என்ற அறிவியல் பத்திரிகையில் பூமியைக் குறித்து இந்த வரையறையற்ற புகழ்ச்சியை எழுதினார்:

“திணறடிக்க வைக்கும் விந்தையாக, பிரபஞ்சத்திலேயே நாம் இதுவரைக்கும் அறிந்திருப்பதில் மிக வியப்பான அமைப்பாக இருந்து, பிரபஞ்சத்திற்குரிய அறிவியல் புதிர்கள் அனைத்திலும் மிகப் பெரியதாகவும், அதைப் புரிந்துகொள்வதற்கான நம்முடைய எல்லா முயற்சிகளையும் குழப்புவதுமாகவும் இருப்பது பூமியாகும். அது எவ்வளவு விநோதமானதும் சிறந்ததுமாக இருக்கிறது, எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது, தன் சொந்த ஆக்சிஜனைத் தயாரித்து, சுவாசிப்பதும், காற்றிலிருந்து தன் சொந்த நைட்ரஜனை எடுத்து தன் சொந்த மண்ணுக்குள் நிலைப்படுத்துவதும், தன் மழைக்காடுகளின் மேற்பரப்பில் தன் சொந்த வானிலையை உருவாக்குவதும், சுண்ணாம்புப் பாறைகள், பவளப்பாறைகள், உலகெங்கும் புதிய உயிரிகளால் ஒன்றுசேர்ந்து பின்னப்பட்ட அடுக்குகளால் தற்போது மூடப்பட்டிருப்பவற்றின் பண்டைய உயிர் வகைகளின் புதைப்படிவங்கள் ஆகியவற்றிலிருந்து தன் சொந்த மேலோட்டை உருவமைப்பதும், தன் சொந்த நீல குமிழ் போன்ற வளிமண்டலத்தால் சூழப்பட்டிருப்பதும், சூரியனைச் சுற்றி மிதந்துவருவதுமான மிக அழகிய அந்தப் பொருளை நாம் இப்போதுதான் மதித்துணர ஆரம்பித்திருக்கிறோம்.”

மக்களுக்கும் எண்ணற்ற கோடிக்கணக்கான மற்ற உயிர் சிருஷ்டிகளுக்கும் என்றென்றும் நிலைத்திருக்கும்படியாக படைக்கப்பட்ட வீடாகிய இந்தப் பூமி, மனிதகுலத்துக்கு தொடர்ந்து ஓர் அழகிய பரிசாக செயல்படும்படியாக யெகோவா அவற்றிற்குரிய இடத்தில் இருக்கும்படி அமைத்த ஏற்பாடுகளில் சில மட்டுமே இவை. சங்கீதம் 104:5 சொல்லுகிறது: “பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.” கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட மற்றொரு சாட்சி, பூமியின் இதே நிலையான தன்மையைக் குறித்துச் சான்றளித்தார்: “ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.”—பிரசங்கி 1:4.

சூரியனைச் சுற்றி தன் சுற்றுப்பாதையில் நீந்திவரும் இந்த அழகிய, நுட்பமான கோளத்தைக் கண்டு பூமியை வட்டமிடும் விண்வெளி வீரர்கள் சொல்வன்மையுடன் அதை விவரித்து, அதன் அழகை மனிதகுலம் போற்றி அதைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். விண்வெளி வீரர் எட்கர் மிச்சல் விண்வெளியிலிருந்து முதன்முதலாக பூமியைக் கண்டபோது, ஹொஸ்டனுக்கு இவ்வாறு செய்தி அனுப்பினார்: “அடர்ந்த கருமை நிறக் கடலின் புதிரில் ஒரு சிறிய பவளத்தைப் போல், . . . , மெல்லச் சுழலும் வெண்திரைகளால் அழகுபடுத்தப்பட்டு . . . பளிச்சிடும் நீலமும் வெள்ளையும் கலந்த ஒரு நகையைப் போலக் காணப்படுகிறது.” விண்வெளி வீரர் ஃப்ராங்க் பார்மனின் குறிப்பு இதுவே: “நாம் அவ்வளவு அழகிய ஒரு கோளத்தில் இருக்கிறோம். . . . உலகில் நமக்கிருப்பவற்றை நாம் ஏன் போற்றுவதில்லை என்பதே மேலெழும்பிநிற்கும் ஆச்சரியமாகும்.” அப்பல்லோ 8 சந்திர பயணத்தின் விண்வெளி வீரர்களில் ஒருவர் குறிப்பிட்டார்: “முழு பிரபஞ்சத்திலும், நாம் எங்குப் பார்த்தாலும் பூமியில் மட்டுமே நிறத்தைக் காணமுடிந்தது. சமுத்திரங்களின் கம்பீரமான நீல வண்ணத்தை, நிலத்தின் மஞ்சள் பழுப்பு மற்றும் பழுப்பு நிறத்தை, மேகங்களின் வெள்ளை நிறங்களை அங்கு காணலாம். . . . வானமெங்கிலும் அதுவே பார்ப்பதற்கு மிக அழகிய பொருளாக இருந்தது. கீழிருக்கும் மக்கள் தங்களுக்கு இருப்பவற்றை உணருகிறதில்லை.”

அந்தக் கூற்று சரியானதென உண்மைகள் காண்பிக்கின்றன—மக்கள் தங்களுக்கிருக்கும் பொக்கிஷத்தை உணருகிறதில்லை. கடவுளிடமிருந்து கிடைத்த இந்தப் பரிசைப் பேணிக்காப்பதற்குப் பதிலாக, மனிதகுலம் அதை மாசுபடுத்தி, அழித்துக்கொண்டிருக்கிறது. விண்வெளிவீரர்கள் இதையும் கண்டிருக்கிறார்கள். விண்வெளியிலிருந்து பார்க்கும்போது மனிதன் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படுத்தியுள்ள சேதம் “திடுக்கிடவைப்பதாய்” இருக்கிறதென சாலஞ்சர் என்ற விண்வெளி ஓடத்தின் முதல் பயணத்தின் தலைவர் பால் வைட்ஸ் சொன்னார். “கவலைக்குரியவிதத்தில், விரைவாக இந்த உலகம், மங்கிய ஒரு கோளாக ஆகிவருகிறது.” அவர் மேலுமாகச் சொன்னார்: “இதிலிருந்து நமக்கு என்ன செய்தி கிடைக்கிறது? நம் சொந்த கூட்டை நாம் அழுக்காக்குகிறோம்.” மேலும் குறிப்பாக இந்த “கடைசிநாட்களில்” இந்த சேதப்படுத்துதல் துயரளிக்கும்வகையில் அதிகரித்திருக்கிறது. இந்த பூமியைக் கெடுக்கிறவர்களுக்கு விரோதமாக யெகோவா தம்முடைய தீர்ப்பை அறிவித்திருக்கிறார்; எவ்வாறென்றால், ‘பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுப்பதாக’ சொல்லுகிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.

கடவுளுடைய பரிசைப் பெற தகுதியற்ற நன்றிகெட்ட சமுதாயம்

தங்கள் மாம்சத்தைக் கட்டுப்பாடின்றி செயல்பட அனுமதிப்பதற்காக பொருளாசை மிகுந்த சமுதாயம் ஒன்று ஆவிக்குரிய மதிப்புகளைக் காலின்கீழ் மிதித்தது. நம்முடைய காலங்களுக்கே உரியதான தன்னலமான நான்-முதல் என்ற கொள்கை மேலெழும்பியதன் காரணமாக, மனிதகுலம் மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் வாழ்வதற்காக யெகோவாவால் கொடுக்கப்பட்ட நடைமுறையான வழிகாட்டு அறிகுறிகள் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கின்றன.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இன்னல்மிக்க காலங்களை 2 தீமோத்தேயு 3:1-5 சரியாக விவரிக்கிறது: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”

வாணிக மனப்பான்மை, பொருட்களை நுகரும் மனப்பான்மையை வளர்க்கிறது; விளம்பரம் செய்தல் அதற்குரிய கையாளாக இருக்கிறது. பெரும்பாலான விளம்பரம் பொருத்தமானதாக இருக்கிறது; பெரும்பாலானது பொருத்தமற்றதாக இருக்கிறது. பொருத்தமற்றவை என்பது, தேவை உருவாக்கிகள் (ஆங்கிலம்) என்பதில் எரிக் க்ளார்க்கின் கவனிப்புக்குப் பொருந்துகிறது: “விளம்பரமானது, மக்களால் வாங்க முடியாததாக இருக்கும் தவறான பொருட்களை அவர்களுக்கு விற்க உதவுவது மட்டுமல்லாமல், பொருத்தமற்ற விதத்தில் அதிகமான விலைகளிலும் அவற்றைப் பெரும்பாலும் விற்கின்றன.” உலக கவனிப்பு (ஆங்கிலம்) என்பதில் ஆலன் டர்னிங் சொல்கிறார்: “விளம்பரதாரர்கள் கலைப்பொருட்களை அல்ல, ஆனால் உணர்ச்சித் தூண்டுதல்களின் எல்லையற்ற ஏக்கங்களை தங்கள் பொருட்களோடு இணைத்து வாழ்க்கைப்பாணிகளை, மனப்பான்மைகளை, கற்பனைகளை விற்கின்றனர்.” நம்மிடம் இருக்கும் பொருட்களில் நம்மை திருப்தியற்றவர்களாக்கி, நமக்குத் தேவையற்ற பொருட்களில் விருப்பம் கொள்ளச்செய்வதில் விளம்பரம் நோக்கம்கொள்கிறது. அது தணியாத ஆசையை உருவாக்குகிறது; அது சோர்வூட்டும் அளவுக்கு அதிகமான நுகர்தலுக்கு வழிநடத்துகிறது; பூமியை மாசுபடுத்தும் பெருகிவருகிற கழிவுப்பொருள் கொட்டுமிடங்களை அது உருவாக்குகிறது. நம்பிக்கையிழந்த அளவுக்கு வறுமையில் வாழ்கிறவர்களின் சோர்வுற்ற இருதயங்களுக்குள்ளாகக்கூட செல்லும் விதத்தில் அதன் தூண்டுதல் தந்திரமாக நுழைந்துவிடுகிறது. மனிதரைக் கொல்லுவதாக அல்லது நோயுறச் செய்வதாக அறியப்பட்டிருக்கும் பொருட்களை அநேக விளம்பரதாரர்கள் துணிவுடன் வியாபாரம் செய்கின்றனர்.

பிரசங்கி 12:13 சொல்கிறதுபோல், கடவுளிடமுள்ள நம்முடைய நிலைநிற்கையே முக்கியமானது: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.” அவ்வாறு செய்கிறவர்கள் யெகோவாவின் சுத்தமான பரதீஸில் ஜீவனைப் பெற தகுதிபெறுவார்கள்! இயேசு வாக்களித்தார்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.

கடவுளுடைய பரிசு மதித்துணரப்படுகையில்

நம்பமுடியாத அளவுக்கு என்னே ஓர் அருமையான பூமியாக அது இருக்கும்! அதைக் குறித்து பின்வரும் திணறச்செய்யும் விவரிப்பை யெகோவா நமக்கு அளித்திருக்கிறார்: “நான் [யோவான்] புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:1, 4.

குப்பை கொட்டுமிடங்கள், நச்சுக் கழிவுகள், மற்றவர்களுடைய இடங்களில் தங்கள் குப்பைகளை ஒழித்துக்கட்டுகிறவர்கள் போன்ற முந்தின காரியங்களும் ஒழிந்துபோயிருக்கும். தங்களைப்போல் தங்கள் அயலாரை நேசிக்கிறவர்கள், பூமியென்னும் பரிசுக்காக யெகோவாவைப் போற்றுகிறவர்கள், அதைக் காப்பதிலும், பரதீஸிய நிலைமையில் அதைத் தொடர்ந்திருக்கச் செய்வதிலும் களிகூருகிறவர்கள் ஆகியோர் மட்டுமே அப்போது பூமியில் உயிருடன் இருப்பார்கள்.—மத்தேயு 22:37, 38; 2 பேதுரு 3:13.

[பக்கம் 11-ன் பெட்டி]

பொருளாசையின் மாயை

இயேசு பின்வருமாறு எச்சரித்தபோது ஒரு தெளிவான உண்மையைச் சொன்னார்: “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) நமக்கு என்ன இருக்கிறது என்பது முக்கியமானதல்ல; நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே முக்கியமானது. வாழ்க்கையின் பரபரப்பில்—பணம் சம்பாதித்தல், பொருட்களைச் சேர்த்தல், மாம்சம் ஆசைப்படுகிற எல்லா இன்பங்களையும் பற்றிக்கொள்ள வெறித்தனமாகத் தொடர்தல் ஆகியவற்றில்—ஈடுபட்டுவிடுவதும், வாழ்க்கை கொடுக்கிற மிகச் சிறந்தவற்றை இழந்துவிட்டு, எதையும் இழக்காமல் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைப்பதும் மிக எளிது.

வாழ்க்கை கடந்துசெல்கையில்தான் நாம் எதை இழந்திருக்கிறோம் என்பதை உணருகிறோம். பைபிள் சொல்வதன் உண்மையை நாம் உணருகிறோம்: வாழ்க்கை மிகவும் குறுகியது, மறைந்துவிடும் மூடுபனி, ‘குப்’ என்று செல்லும் புகை, வெளியே விடப்படும் மூச்சு, கடந்துபோகிற நிழல், உலர்ந்துபோகும் பசும்புல், ஒரு வாடிப்போகும் மலர் ஆகியவற்றைப் போன்றது. அது எங்கே போய்விட்டது? நாம் என்ன செய்திருக்கிறோம்? நாம் ஏன் இங்கே இருந்தோம்? இவ்வளவுதானா? மாயைகளில் மாயையாகவே, காற்றைத் தொடர்வதாகவே இருக்கிறதா?—யோபு 14:2; சங்கீதம் 102:3, 11; 103:15, 16; 144:4; ஏசாயா 40:7; யாக்கோபு 4:14.

மருத்துவமனையில் சாகப்போகும் ஒரு மனிதன், தன் ஜன்னல் வழியாக பார்க்கையில், புல்லும் களைகளும் கலந்ததும், வாழப்போராடும் ஒருசில மலர்களும், ஒருசில விதைகளுக்காக அழுக்கைக் கொத்திக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவியும் காணப்படும் ஒரு மலைப்பாங்கான இடம் வெதுவெதுப்பான சூரிய ஒளியில் திளைக்கிறது—உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அப்பேர்ப்பட்ட காட்சியாக ஒன்றும் இல்லை. ஆனால் சாகப்போகும் மனிதனுக்கு, அது அழகாக இருக்கிறது. எவ்வளவு எளிய சந்தோஷங்களை, அவ்வளவு அதிகத்தை அர்த்தப்படுத்தக்கூடிய சிறிய காரியங்களை அவர் இழந்திருக்கிறார் என்று யோசிக்கையில் ஏதோவொரு சலனம் அவரை நெருடுகிறது. எல்லாம் வெகு சீக்கிரத்தில் போய்விட்டிருக்கும்!

பைபிளிலுள்ள கிரேக்க வேத எழுத்துக்கள் அதைத் தெளிவாகக் கூறுகின்றன: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1 தீமோத்தேயு 6:7, 8) எபிரெய வேத எழுத்துக்கள் இன்னும் ஒளிவுமறைவில்லாமல் சொல்லுகிறது: “தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை.”—பிரசங்கி 5:15.

[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]

NASA photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்