உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 11/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு
  • “அபாயகரமான தொழில்”
  • போரும் கொந்தளிப்பும் நிறைந்த சகாப்தம்
  • உலக சுகாதார சுற்றாய்வு
  • அர்மகெதோன் கருத்துக்கள்
  • மதமும் சுகப்படுத்துதலும்
  • ஆமைவேக அஞ்சல்
  • அசல் மெய்மை விளைவு
  • மத உருவங்களுக்கு விற்பனை இயந்திரம்
  • முன்னறிவிக்கப்பட்ட உலக அழிவு எப்பொழுது வரும்?
    உண்மையான சமாதானம்
  • அர்மகெதோன் மக்களின் கருத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • அர்மகெதோன்—மகிழ்ச்சியான ஓர் ஆரம்பம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • பாரெல்லாம் ஆரோக்கியம்—கிட்டுமா எல்லாருக்கும்?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 11/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு

புதையல் நிறைந்திருந்த, துதங்கமன் ராஜாவின் கல்லறையை 1922-ல் கண்டுபிடித்ததற்குப் பிறகு, எகிப்தில் உள்ள ராஜாக்கள் பள்ளத்தாக்கில் பெரியளவில் கண்டுபிடிக்கப்படுவதற்கு வேறு ஒன்றுமில்லை என்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வெகு காலமாகவே யோசித்துவந்திருக்கின்றனர். ஆனால் அந்தப் பள்ளத்தாக்கில் இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே ஒருவேளை மிகப்பெரியதாகவும் மிக நுணுக்கமுடையதாகவும் இருக்கும் புதிய கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 67 அறைகளையும், அறைகளின் மொத்த எண்ணிக்கையை 100-க்கும் மேலாக உயர்த்தும் ஒரு நிலத்தடி தளத்தையும் கொண்டிருப்பதாக ஊகிக்கப்படும் இது, தன்னுடைய மகன்களைப் புதைப்பதற்கான இடமாக இரண்டாம் ராம்ஸஸ்ஸால் கட்டப்பட்டதாகத் தோன்றுகிறது. பொ.ச.மு. 13-ம் நூற்றாண்டில் 66 வருடங்கள் ஆட்சிசெய்த இரண்டாம் ராம்ஸஸுக்கு 52 மகன்கள் உட்பட 100-க்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தனர். அவற்றில் இரண்டு மகன்களின் கல்லறைகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்லறையில்தான் மீதமுள்ளவர்களெல்லாரும் புதைக்கப்பட்டனர் என்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கல்லறையில் அவருடைய மூத்த மகன் ஆமென்-ஹர்-காப்ஷெஃப் என்பவரையும் உள்ளிட்ட நான்கு மகன்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மத அறிஞர்களை குழப்பமடையச் செய்திருக்கிறது. ஏனெனில் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது இரண்டாம் ராம்ஸஸ்தான் எகிப்தின் பார்வோனாக இருந்தார் என்று இவ்வறிஞர்களில் சிலர் ஊகித்தனர். இருப்பினும் மற்ற ஆராய்ச்சியோ இஸ்ரவேலர்களுடைய யாத்திரை பொ.ச.மு. 1513-ல் நடந்ததாக கூறியிருக்கிறது.

“அபாயகரமான தொழில்”

“சுரங்கத்தொழில் அதன் தன்மையில் அபாயகரமானதும் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் இன்றியமையாததுமான ஒரு தொழிலாக இருக்கிறது,” என்பதாக ஜோஹன்ஸ்பர்கின் வீக்கென்ட்ஸ்டார் குறிப்பிடுகிறது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை மே மாதம் நடந்த ஒரு சம்பவம் சிறப்பித்துக் காட்டுகிறது. அதில் தென் ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கங்கள் ஒன்றில், 12-டன் எடையுள்ள நிலத்தடி எஞ்சின் ஒன்று 104 சுரங்கத் தொழிலாளர்கள் இருந்த “லிஃப்ட்டின் கேபிள்களை அறுத்துக்கொண்டு 2,103 மீட்டர் [6,900 அடி] ஆழமுள்ள சுரங்கக் குழியில் விழுவதற்குமுன் மூன்றுக்கும் அதிகமான பாதுகாப்புக் கருவிகளை நொறுக்கிவிட்டுச் சென்றது.” அதில் தப்பிப்பிழைத்தவர்கள் ஒருவரும் கிடையாது. “வருந்தத்தக்க வகையில், இத்தகைய துயர சம்பவங்கள் வெகுகாலமாக தென் ஆப்பிரிக்கர்களுடைய வாழ்க்கையின் பாகமாக இருந்துவந்திருக்கின்றன,” என்று வீக்கென்ட்ஸ்டார் சொல்லுகிறது. “நம்முடைய சுரங்கங்களில் இந்த நூற்றாண்டின் முதல் 93 வருடங்களில் 69,000 தொழிலாளர்களுக்கும் அதிகமாக கொல்லப்பட்டனர், மேலும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் காயமுற்றனர்.”

போரும் கொந்தளிப்பும் நிறைந்த சகாப்தம்

“20-ம் நூற்றாண்டு ஈடிணையற்ற கொடூரத்தின் ஒரு காலப்பகுதியாகக் காணப்படும் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. “அதிகமதிகமாக, இரண்டு உலகப் போர்களையும் பனிப்போரையும் உள்ளடக்கும், 1914 முதல் 1989 வரையுள்ள 75-வருட காலப்பகுதி ஒரேவொரு, தனித்தன்மை வாய்ந்த சகாப்தமாக, உலகத்தின் பெரும்பகுதி யுத்தம் நடத்திக்கொண்டு அல்லது யுத்தத்தின் விளைவுகளிலிருந்து மீண்டு வந்துகொண்டு அல்லது யுத்தத்திற்குத் தயார் செய்துகொண்டு இருந்த ஒரு காலப்பகுதியாக வரலாற்று ஆசிரியர்களால் காணப்பட்டு வருகிறது.” தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரை இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “நம்முடைய 20-ம் நூற்றாண்டு போர்கள் போர்வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிரே சமமாக தொடுக்கப்பட்டு, ‘முழுமூச்சாக நடத்தப்பட்ட போர்களாக’ இருந்தன. யூதர்களின் இன அழிப்பையும் சேர்த்து ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் கோடிக்கணக்கில் கணக்கிடப்படுகின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில், கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட பழங்காலப் போர்கள் ஏதோ தெருச்சண்டைகளாக இருந்தன.” உள்நாட்டுக் கிளர்ச்சிகளும் இந்தப் படுகொலையில் பங்கு வகித்தன. எத்தனைபேர் இறந்தனர்? “ஸூபிக்னெவ் ப்ரேஷின்ஸ்கியால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 1914 முதற்கொண்டு ஏற்பட்ட இந்த ‘மகா மரணங்கள்’ மொத்தம் 19 கோடியே 70 லட்சமாக இருந்தது எனவும், இது ‘1900-ல் இருந்த மொத்த உலக மக்கள்தொகையில் பத்திலொரு பாகத்தைவிட அதிகத்திற்கும் சமமாக இருந்தது’ எனவும், ” போஸ்ட் கூறுகிறது. இது தொடர்ந்து கூறுவதாவது: “பயங்கரவாதமும் ஈவிரக்கமற்ற கொலைகளும் இந்த நூற்றாண்டின் பண்பாட்டில் ஆழப் பதிந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. கிளர்ந்தெழும் கோடிக்கணக்கான மக்களை, இந்த நூற்றாண்டில் எந்த அரசியல் அமைப்பும் அல்லது பொருளாதார அமைப்பும் இதுவரை சமாதானப்படுத்தியது அல்லது திருப்திப்படுத்தியது கிடையாது.”

உலக சுகாதார சுற்றாய்வு

உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதத்தினர்—200 கோடிக்கு அதிகமான ஜனங்கள்—ஒரு குறிப்பிட்ட சமயத்தில் உடல்நலமின்றி இருக்கின்றனர் என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO), உலக சுகாதாரத்தைப் பற்றிய அதன் முதல் வருடாந்தர சுற்றாய்வில் அறிக்கை செய்கிறது. இந்நோய்களில் அநேகம் வரவேண்டிய அவசியமே இல்லாதவையாயும், தவிர்க்க முடிந்தவையாயும் இருக்கின்றன என்பதாக அவர்கள் சொல்கின்றனர். வறுமையே இதற்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், உலகின் மக்கள்தொகையாகிய 560 கோடி மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு மிக அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை; குழந்தைகளில் மூன்றிலொரு பாகத்தினருக்கு ஊட்டச்சத்து குறைவுபடுகிறது. உலக மக்களில் ஐந்திலொரு பாகத்தினருக்கு தங்களுடைய நோய்நொடிகளைத் தவிர்க்கவும், அவற்றுக்கு சிகிச்சையளிக்கவும் தேவையான பணமில்லை அல்லது வசதியேயில்லை. மரணத்துக்கேதுவான—இருதய நோய், வலிப்பு, நுரையீரல் நோய், காசநோய், மலேரியா, சுவாச மண்டல தொற்றுநோய்கள், ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு —நோய்கள் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோருடைய உயிர்களை மாய்க்கின்றன. என்றபோதிலும், கடந்த 25 வருடங்களில், வாழ்நாள் எதிர்பார்ப்பு 61 வருடத்திலிருந்து 65 வருடமாக உயர்ந்துள்ளது என்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “பிழைத்திருப்பதே அனுதின போராட்டமாக இருக்கும் பல லட்சக்கணக்கானோருக்கு நீடித்து வாழ்வதற்கான வாய்ப்பு பரிசாக இருப்பதைவிட ஒரு தண்டனையைப் போலவே தோன்றலாம்,” என்று WHO நிறுவனத்தின் பொது இயக்குனர் டாக்டர் ஹிரோஷி நாகாஜீமா கூறினார்.

அர்மகெதோன் கருத்துக்கள்

மார்ச் மாதத்தில் டோக்கியோவின் சுரங்கப்பாதையில் நடத்திய சாவுக்கேதுவான சாரின் வாயு தாக்குதல் சம்பந்தமாக ஆம் ஷின்ரிக்யோ மதம் பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்த பிறகு, ஜப்பானில் உள்ள மதங்கள் அர்மகெதோனைப் பற்றிய தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கும்படி தூண்டுவிக்கப்பட்டன. “உலகம் அர்மகெதோனைக் கண்கூடாகக் காணும் என்று . . . கருத்து வேறுபாட்டுக் குழுவின் தலைவராகிய ஷோக்கோ ஆசாஹாரா பல வருடங்களாக தீர்க்கதரிசனம் உரைத்தார்,” என்று அறிக்கை செய்கிறது தி டெய்லி யொம்யூரி. ஆம் மதம் பெயரளவில் புத்தமதமாக இருந்தபோதிலும், “அர்மகெதோன் என்ற கருத்தானது புத்த மதத்தால் அறியப்படாத ஒன்று,” என்பதாக இரண்டு புத்தமத அமைப்புகள் கூறினதாக மைனிச்சி டெய்லி நியூஸ் அறிவிக்கிறது. “சுற்றாய்வு நடத்தப்பட்ட இரண்டு முக்கிய கிறிஸ்தவ சபைகளும் . . . அர்மகெதோன் அண்மையில் வரும் என்று ஆம் மதத்தவர் நம்பினார்கள் என்பதை நிராகரித்தனர். அந்த நம்பிக்கை கத்தோலிக்கர்களுக்குப் பழக்கப்பட்டதாக இல்லை என்று கத்தோலிக்கத் தொகுதியினர் கூறினர். ஆனால் இந்தக் கருத்து வேறுபாட்டுக் குழுவினர் ‘அர்மகெதோன்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தியிருக்கக்கூடாது, காரணம் ‘பைபிளில் உள்ள ஒரு வார்த்தை பொருத்தமற்ற சூழமைவில் பிரயோகிக்கப்பட்டது,’ என்று புராட்டஸ்டண்ட் அமைப்பினர் கூறினர். ‘பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பிவிடும் மதப் பிரச்சார முறைகள் விரும்பத்தகாதவை,’ என்று யூனிஃபிகேஷன் சர்ச் கூறிற்று. சில கருத்துக்களை மிகவும் வலியுறுத்திக் கூறினால் மக்கள் பயப்படுத்தப்பட்டவர்களாக உணருகின்றனர் என்று ஷின்யோயென் அமைப்பு கூறிற்று.” ஆம் மதத்தின் ஸ்தாபகர் தன்னுடைய சொந்த தீர்க்கதரிசனத்தைப் பற்றியே சந்தேகித்திருப்பதாகத் தோன்றுகிறது. “குருவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை சாத்தியமாக்குவதற்கே சாரின் திட்டம் தொடங்கப்பட்டது என்று நினைக்கிறேன்,” என்பதாக அந்தக் கருத்து வேறுபாட்டுக் குழுவின் மேலிடத் தலைவர்களில் ஒருவர் சொன்னதாகக் கூறப்பட்டது.

மதமும் சுகப்படுத்துதலும்

“தாங்கள் கொண்டிருக்கும் மத நோக்குநிலையில் பலத்தையும் ஆறுதலையும் கண்டடைய முடிந்த,” நோயாளிகள் “மத விசுவாசத்தில் சுகப்படுத்தும் சக்தியைக் கண்டடையாதவர்களைவிட மூன்று மடங்கு அதிக பிழைப்பு வீதத்தைக் கொண்டிருந்ததாக,” திறந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதிர்வயதான 232 நோயாளிகளை வைத்து நடத்திய ஆராய்ச்சி ஒன்று காண்பித்திருக்கிறது என்று பாரிஸைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் சொல்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் நெருங்கிய உறவையும் ஆதரவையும் கொண்டிருப்பதால் வரும் உடல்நல நன்மைகளை இதற்கு முந்தின ஆராய்ச்சி குறிப்பிட்டுக் காட்டியிருந்தாலும், “மிகவும் மோசமாக இருக்கும் நோயாளிகள் மத்தியில் உள்ள மத விசுவாசத்தினால் வரும் அத்தகைய பலமான உடல்நல அனுகூலங்களை நிரூபிக்கும்” முதல் ஆராய்ச்சி இதுவே என்று அந்த ட்ரிப்யூன் கூறிற்று. இந்த ஆராய்ச்சியின் இயக்குனர், டாக்டர் தாமஸ் ஆக்ஸ்மன் கூறியதாவது: “உயிரை அச்சுறுத்தும் அபாயகரமான சூழ்நிலைக்கு அர்த்தம் கொடுக்க முடிவது—ஏதோ மேலான அர்த்தம் இருக்கிறது அல்லது சக்தி கிரியை செய்கிறது என்ற நம்பிக்கை வைத்திருப்பது—மருத்துவ ரீதியில் உதவிபுரிவதாக இருக்கும்போல் தோன்றுகிறது.”

ஆமைவேக அஞ்சல்

அஞ்சல் சேவையின் திறமையின்மையைப்பற்றி குறைகூறுவதற்கான காரணம் யாருக்காவது எப்போதாவது இருந்திருக்குமென்றால், அவர்கள் இத்தாலியில் உள்ள விசென்ஸாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு நடந்த சம்பவத்திலிருந்து ஆறுதல் பெற்றுக்கொள்ளலாம். வட ஐரோப்பாவில் 1944-ல் நாசி சித்திரவதை முகாம் ஒன்றில் சிறைவாசம் இருந்தபோது ஒரு இத்தாலிய கணவன் தன் மனைவிக்கு எழுதினான்: “என்னிடமிருந்து தகவல் கிடைப்பதற்கு அதிகம் தாமதிக்குமானால் அதைப்பற்றி கவலைப்படாதே.” “கிட்டத்தட்ட ஒரு முன்னுணர்வேதான்,” என்று சொல்கிறது லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாள். ஏனென்றால் இந்தத் தகவல் 51 வருடங்கள் கழித்து அதன் சேருமிடத்தைச் சென்றடைந்தது. தற்போது தங்களுடைய 80-களில் வாழ்ந்துவரும் இந்தத் தம்பதி, இந்தக் கடிதத்தின் வருகையினால் எதிர்பாரா சந்தோஷமடைந்தனர். ஆகவே இந்த சம்பவத்தைக் குறிப்பதற்காக தங்களுடைய நண்பர்களோடு ஒரு சிறு விருந்தை ஏற்பாடு செய்தனர். இந்தக் கடிதம் சேருமிடத்தை இறுதியில் வந்தடையுமுன் எங்கெங்கெல்லாம் போய் சுற்றிவிட்டு வந்ததென்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருந்துவருகிறது.

அசல் மெய்மை விளைவு

அசல் மெய்மை (Virtual reality [VR]) “இந்நூற்றாண்டின் இறுதியில் வீட்டு வீடியோ விளையாட்டுச் சந்தையின் மூன்றிலொன்று வரையான பாகத்தின்மீது ஆதிக்கம் செலுத்தலாம்,” என்று கனடாவைச் சேர்ந்த தி குளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கை ஒன்று உறுதியாகச் சொல்கிறது. அத்தகைய விளையாட்டுக்களில் விளையாடுபவர், இயர் ஃபோன்களையும், ஒவ்வொரு கண்ணுக்கு முன்னும் ஒரு காட்சித் திரையையும் தன்னுள் கொண்டுள்ள ஒரு ஹெல்மட்டை அணிகிறார். மின்கம்பி இணைப்புகளுள்ள கையுறைகள், இயக்க அடையாளக் குறிகளை அனுப்பி கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட உலகில் செயல்படுவதை விளையாடுபவருக்கு சாத்தியமாக்குகிறது. ஆனால் அத்தகைய விளையாட்டுகளின் உயிரூட்டமுள்ளதாகத் தோன்றும் உருவங்களோடுகூடவே “சைபர்சிக்னஸ்” என்பதைப்பற்றிய அறிக்கைகளும் சேர்ந்து வருகின்றன. இது ஒருவேளை கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட உருவங்கள் உடல் இயக்கங்களுக்கு எதிர்வினை புரிவதில் ஏற்படும் கால இடைவெளியினால் இருக்கலாம். சூழல் உணர்விழப்பு (disorientation), குமட்டல், தலைவலி, விழிக் களைப்பு, ஒத்து இயங்குதல் பிரச்சினைகள் (coordination problems), கடந்தகால நினைவுகள் போன்றவை இதன் பின்விளைவுகளாக இருக்கலாம். “சைபர்சிக்னஸ் அதிகமானோருக்கு வருவதனால், ஒரு நாள் யாராவது காயமடைந்து, VR நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்லப்படும் என்று கவனித்தறிபவர்கள் முன்னுரைக்கின்றனர்,” என்பதாக தி குளோப் சொல்லுகிறது. உயிரூட்ட உருவங்களின் வேகம் மக்களின் பிரதி செயல்பாடுகளுடைய வேகத்திற்கு ஏற்ப அமைக்கப்படும்வரை, “குறைந்த உயிரூட்டமுள்ள உருவங்கள், குறைந்த இயக்கம், அவ்வளவாக கருத்தூன்றவைக்காத உருவங்கள், இயந்திரங்களின்மீது நேர வரையறை ஆகியவை உதவியாக இருக்கலாம்,” என்று அந்த அறிக்கை சிபாரிசு செய்கிறது.

மத உருவங்களுக்கு விற்பனை இயந்திரம்

மக்கள் பரம்பரை பரம்பரையாக கத்தோலிக்கர்களாக இருக்கும் நாடுகளில், “பாதுகாப்பாளர்களாக இருக்கும் புனிதர்களுக்கும் புனித ஸ்தலங்களைப் பாதுகாப்பவர்களுக்கும் காட்டப்படும் பிரபல பக்தியின்” மிகவும் வெளிப்படையாக காணப்படக்கூடிய அடையாளம் மத உருவங்களாகும் என்று இத்தாலிய தினசரி செய்தித்தாளாகிய லா ரேப்பூப்ளிக்கா சொல்லுகிறது. இப்போது, மத சம்பந்தமான இந்தப் பொருட்களின் செழித்தோங்கும் விற்பனையிலும் தொழில் நுணுக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிலைகளை விற்பனை செய்யும், “ஐக்கோமேட்டிக்ஸ்” என்ற பெயருடைய தானியங்கும் இயந்திரம் ஒன்று, விசேஷித்த அடையாள வில்லை ஒன்றை போட்டதும் மத உருவங்களை விநியோகிக்கிறது. “இந்த சுயசேவை முறையானது தெரிவு செய்வதில் பகுத்துணர்வை உத்தரவாதமளிக்கிறது, வரிசையில் நிற்பதைத் தவிர்க்கிறது, அனைவருக்கும் ஒரு மத சிலை கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறது,” என்பதாக அந்தச் செய்தித்தாள் சொல்லுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்