ட்யூரட் நோய்க்குறித் தொகுதியோடு வாழ்வதற்கான சவால்
தத்திச் செல்லும் பிராயத்தில் மிகவும் துருதுருவென்று இருந்தான் எட்வர்டு. அவன் மூர்க்க வெறியோடு அலமாரியைக் காலிசெய்துவிடுவான், தலையணைகளைத் தூக்கியெறிந்துவிடுவான், நாற்காலிகளை ஓர் அறையிலிருந்து மற்றொன்றுக்கு நகர்த்துவான். அவனுடைய அம்மாவின் வார்த்தைகளில் சொன்னால்—அவன்—“ஒரு அடங்காப்பிடாரியாக” இருந்தான்.
ஆனால் எட்வர்டு பள்ளிக்குப்போகத் துவங்கியதும், அவனுடைய நடத்தை மேலும் அதிகம் அதிரவைப்பதாக மாறியது. முதலில் அவன் விநோதமான கீச்சிடும் ஓசைகளை எழுப்பத் துவங்கினான். பிறகு அவனுடைய முகத்திலும் கழுத்திலும் வலிப்புகள் வரத் துவங்கிற்று. அவன் உறுமுவான், வள்ளென்று விழுவான் மற்ற விநோதமான சத்தங்களை எழுப்புவான். கெட்ட வார்த்தைகளைத் திடீர் திடீரென கொட்டித்தீர்ப்பவனாகவும் இருந்தான்.
பார்ப்பவருக்கு எட்வர்டு செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட பிள்ளையைப் போன்றும், அவனுக்கு வெறுமனே சிட்சை மாத்திரம் தேவைப்பட்டது என்றும் தோன்றியிருக்கும். ஆயினும், உண்மையில் அவன், தசை மற்றும் குரல் வலிப்புகளால் அடையாளம் காணப்படும் ஒரு நரம்பியல் கோளாறாகிய ட்யூரட் நோய்க்குறித் தொகுதியினால் (Tourette syndrome) அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.
வளர்ச்சியின் இயல்பான ஒரு படியென, பல பிள்ளைகள் தற்காலிக தசை வலிப்புகளைச் சிறிய அளவில் உடையவர்களாயிருப்பார்கள். ஆனால் வலிப்புக்கோளாறு வகைகளில், பொதுவாகவே வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கக்கூடிய அறிகுறிகளைக்கொண்ட ட்யூரட் நோய்க்குறித் தொகுதியே கடுமையானதாக இருக்கிறது.a பொதுமக்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கிறபோதிலும், இன்னமும் பலருக்கு முன்பின் அறியப்படாத ஒன்றாகவே இந்த துன்புறுத்தும் கோளாறு உள்ளது, அதன் இயல்புமீறிய நோய் அறிகுறிகள் எளிதில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.
அவர்களின் தசை வலிப்புகளை உண்டாக்குவது எது?
மறுப்புக்கிடமின்றி, ட்யூரட் கோளாறுடன் தொடர்புடைய தசை வலிப்புகள் விநோதமாகத் தோன்றக்கூடும். முகம், கழுத்து, தோள்கள் அல்லது கைகால்களில் வலிப்புகள் வரலாம். அடிக்கடி மூக்கைத் தொடுவது, கண்களை உருட்டுவது அல்லது முடியை இழுப்பதோ திடீரென உதறுவதோ போன்ற விநோதமான தனிப் பழக்கங்கள்கூட நோய் அறிகுறிகளில் உள்ளடங்கியிருக்கலாம்.
குரல் வலிப்புகள் மேலும் அதிக தொல்லைகொடுப்பதாய் இருக்கக்கூடும். தன்னையறியாமலே தொண்டையைக் கனைப்பது, மோப்பம் பிடிப்பது, வள்ளென்று விழுவது, சீட்டியடிப்பது, திட்டுவது, வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை திரும்பத்திரும்பச் சொல்வது ஆகியவை இவற்றுள் சிலவாகும். “என் மகள் ஏழு வயதை அடைவதற்குள், எல்லாவற்றையும் அவள் திரும்பத்திரும்பச் சொன்னாள். அவள் டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தால், எதைக் கேட்கிறாளோ அதை திரும்பவும் சொல்வாள் அல்லது நீங்கள் அவளிடத்தில் பேசினால், நீங்கள் சொன்னதை அவள் எதிரொலிப்பாள். அவள் துடுக்கு என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்!” என்று ஹாலி கூறுகிறார்.
இத்தகைய விநோதமான தசைவலிப்புகளை உண்டாக்குவது எது? மூளையில் இரசாயன சமநிலையின்மை ஒருவேளை உட்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இந்தக் கோளாறைப்பற்றி இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இரசாயன இயல்பு மாற்றங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன, ஆனால், அமெரிக்க மனநோய் மருத்துவ இதழ் (ஆங்கிலம்) அறிவிக்கிறது: “இந்த இயல்பு மாற்றங்களின் சரியான தன்மை இன்னும் நிர்ணயிக்கப்படவிருக்கின்றன.”b
சரியான காரணம் எதுவாயினும் ட்யூரட் நோய்க்குறித் தொகுதி ஒரு உடற்கோளாறு ஆகும், அவதிப்படுபவருக்கு அதன் மீது சிறிதளவே கட்டுப்பாடு இருக்கிறது. அதனால்தான், ட்யூரட் நோய்க்குறித் தொகுதியுள்ள ஒரு குழந்தையிடமோ வளர்ந்தவரிடமோ “அதைச் செய்வதை நிறுத்து” அல்லது “அந்தச் சத்தம் போடுவதை நிறுத்து” என்று வெறுமனே சொல்லிக்கொண்டிருப்பது வீணாகும். “நீங்கள் விரும்புவதற்கும் மேலாக, நிறுத்திவிட அவர் விரும்புகிறார்,” என்று ட்யூரட் நோய்க்குறித் தொகுதியைச் சமாளித்தல் (ஆங்கிலம்) என்னும் சிற்றேடு சொல்கிறது. நிறுத்திவிடும்படி அவருக்கு அழுத்தத்தைக் கொடுப்பது, பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிக்கும், அது ஒருவேளை தசை வலிப்பை அதிகரிக்கவும் செய்யலாம்! ட்யூரட் நோய்க்குறித் தொகுதியைச் சமாளிப்பதற்கு, அவதிப்படுபவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் அதிக பலன்தரக்கூடிய பல வழிகள் உள்ளன.
பெற்றோர்களிடமிருந்து ஆதரவு
“ட்யூரட் நோய்க்குறித் தொகுதியோடு வளர்ந்து, இப்போது வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் பெரியவர்கள் அனைவரும், தங்களுடைய குடும்பங்களிலிருந்து அருமையான உதவியைப் பெற்றதாகக் கூறுகிறார்கள். அவர்கள் நேசிக்கப்பட்டார்கள் மற்றும் ஆதரவளிக்கப்பட்டார்கள், அவர்களுடைய நிலைமைக்காகத் திட்டவோ குறைகூறவோ படவில்லை,” என்று ட்யூரட் நோய்க்குறித் தொகுதி கழகத்தைச் சேர்ந்த எலனர் பெரெட்ஸ்மன் விழித்தெழு!-விடம் கூறினார்.
ஆம், ட்யூரட் நோய்க்குறித் தொகுதியுடன் இருக்கும் ஒரு பிள்ளை, பெற்றோரின் ஆதரவை உடையவனாக இருக்க வேண்டும்—அவன் உடையவனாக இருக்கிறான் என்று உணரவும்வேண்டும். இவ்வாறு உணருவதற்கு பெற்றோர்கள் ஒரு குழுவாகச் செயல்படவேண்டும். பெற்றோரில் ஒருவர் மாத்திரம் முழு பளுவையும் சுமக்கக்கூடாது. ஒரு பெற்றோரின் முனைப்பற்ற பின்வாங்குதலை உணரும் ஒரு பிள்ளை, அவனுடைய நிலைமைக்காக அவனையே நொந்துகொள்ள துவங்குவான். “இப்படி ஏற்படுவதற்கு நான் செய்ததுதான் என்ன?” என்று ட்யூரட்டால் அவதிப்படும் ஒரு குமரிப்பெண் அழுதாள். ஆனால், நாம் ஏற்கெனவே கவனித்தப்பிரகாரம், இந்தத் தசை வலிப்புகள் தன்னையறியாமலே வருகின்றன. பிள்ளையின் வாழ்க்கையில் முனைப்பான பங்கையெடுப்பதன் மூலம் இந்த உண்மையைப் பெற்றோர் இருவரும் வலியுறுத்தலாம்.
தெரிந்தவிதமாகவே, இது எப்போதுமே சுலபம் அல்ல. பிள்ளையின் நோய் அறிகுறிகளினால் சில சமயங்களில் பெற்றோர்கள்—விசேஷமாக அப்பாமார்கள்—ஒரு விதமான சங்கடத்தை உணருகிறார்கள். “என் மகனை திரைப்படங்களுக்கோ விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கோ அழைத்துச்செல்வதை நான் வெறுக்கிறேன். அவனுக்கு வலிப்பு வரும்போது, ஜனங்கள் திரும்பிக்கொண்டு அவனையே வெறித்து நோக்குவார்கள். பிறகு அவர்கள்மேல் எனக்குக் கோபம் வரும். அந்தச் சூழ்நிலையில் என்ன செய்வதென்றே தோன்றாது, கடைசியில் கோபத்தையெல்லாம் என் மகன் மீது கொட்டித்தீர்ப்பதில்தான் முடிவடையும்,” என்று ஒரு தகப்பனார் மனந்திறந்து கூறுகிறார்.
இந்த வெளிப்படையான கூற்று வெளிக்காட்டுகிற பிரகாரம் பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலானது இந்தக் கோளாறின் பேரில் அவர்களுக்கிருக்கும் சொந்த நோக்குநிலையே ஆகும். எனவே, ஒருவேளை உங்களுடைய பிள்ளைக்கு ட்யூரட் நோய்க்குறித் தொகுதி இருக்குமானால், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், ‘அந்தக் கோளாறு என் பிள்ளைக்கு ஏற்படுத்தும் சங்கடத்தைவிட எனக்கு ஏற்படுத்தும் சங்கடத்துக்காக நான் அதிக கரிசனையுள்ளவனாக இருக்கிறேனா?’ “எப்போதுமே உங்களுடைய சங்கோஜமான உணர்வுகளை ஒருபக்கமாக ஒதுக்கிவிடுங்கள்,” என்று பெற்றோர் ஒருவர் உந்துவிக்கிறார். அவதிப்படுபவருடைய சங்கடத்துடன் ஒப்பிடுகையில் உங்களுடைய சங்கடம் ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல என்பதை நினைவில்வைக்கவும்.
இதற்கு நேர்மாறாக, அம்மாமார்கள், கணவனையும் மற்ற பிள்ளைகளையும் புறக்கணித்துவிட்டு, அந்த ஒரே பிள்ளையின் மீது முழு கவனத்தை ஒருமுகப்படுத்தும் மட்டுக்குமீறிச் செல்லும் செயலுக்கு எதிராக பொதுவாகவே காத்துக்கொள்ளவேண்டும். அப்போது எவரும் புறக்கணிக்கப்படாதபடி சமநிலை தேவைப்படுகிறது. பெற்றோர்கள் முன்போலவே தங்களுக்கென்று நேரத்தை கொண்டிருக்கவேண்டும். ஹாலி என்னும் பெயரையுடைய பெற்றோர் ஒருவர் மேலும் குறிப்பிடுகிறார், “ட்யூரட் நோய்க்குறித் தொகுதி இருக்கும் பிள்ளையின் காரணமாகப் பெற்றோரின் கவனிப்பிலிருந்து நிராகரிக்கப்பட்டவர்களாக அவர்கள் உணராமலிருப்பதற்காக ஒவ்வொரு பிள்ளையிடத்திலும் நீங்கள் தனியே நேரத்தை செலவிடவேண்டும்.” ஐயத்துக்கிடமின்றி, இந்தக் குடும்ப சமநிலையை அடைவதற்குப் பெற்றோர் இருவரும் ஒத்துழைக்கவேண்டும்.
சிட்சையைப்பற்றியது என்ன? ட்யூரட் நோய்க்குறித் தொகுதியைக் கொண்டிருப்பதானது, பயிற்சியின் தேவையை எடுத்துவிடுவதில்லை. அதற்கு மாறாக, இந்தக் கோளாறுடன் உணர்ச்சிவசப்படும் நடத்தையும் பெரும்பாலும் சேர்ந்தே வருவதனால், ஒழுங்கமைப்பும் வழிநடத்துதலும் இன்னும் அதிக அத்தியாவசியமானவையாக இருக்கின்றன.
நிச்சயமாகவே, ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமானது. நோய் அறிகுறிகள் தன்மையிலும் அளவிலும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆனால், தசை வலிப்புகளை பொருட்படுத்தாமலே ஏற்கத்தக்க நடத்தைக்கும் ஏற்கத்தகாத நடத்தைக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை உங்களால் கற்பிக்க முடியும் என்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நண்பர்களிடமிருந்து ஆதரவு
உங்களுக்குத் தெரிந்தவர் ஒருவர், ட்யூரட் நோய்க்குறித் தொகுதிகளை உடையவராயிருக்கிறாரா? அப்படியானால், அவருடைய வேதனையைக் குறைக்க நீங்கள் அதிகத்தை செய்யலாம். எப்படி?
முதலாவதாக, அந்த வியாதிக்குப் பின்னால் இருக்கும் நபரை பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். ஹார்வர்டு மருத்துவ கல்லூரி சுகாதார கடிதம் (ஆங்கிலம்) கூறுகிறது: “இயல்புக்கு மாறான செயல்நடவடிக்கைகளுக்கும் விநோதமான ஓசைகளுக்கும் தாறுமாறான நடத்தைக்கும் பின்னால் எவரோ ஒருவர் இயல்பாக இருப்பதற்கு துடிதுடிக்கிறார், அவரை ஒரு நபராகவும் அதே சமயத்தில் ஒரு நோயாளியாகவும் புரிந்துகொள்ளப்படவேண்டிய தேவையுள்ளவராகவும் இருக்கிறார்.” உண்மையிலேயே, ட்யூரட் நோய்க்குறித் தொகுதியுள்ள நபர்கள், வேறுபட்டு இருப்பதன் வேதனையை உணருகிறார்கள். தசை வலிப்பைக் காட்டிலும் இந்த உணர்வே அதிகமாய் செயலிழக்கச் செய்யலாம்!
ஆகவே, இந்தக் கோளாறு உள்ள ஒருவரிடத்திலிருந்து விலகிச்செல்லாதீர்கள். ட்யூரட் நோயாளிக்கு நட்பு தேவை. ஒருவேளை அவருடைய நட்பிலிருந்தும்கூட நீங்கள் நன்கு பயனடையலாம்! ட்யூரட் நோய்க்குறித் தொகுதியுள்ள ஒரு 15 வயது பையனுடைய அம்மா நான்ஸி கூறுகிறார்: “என் மகனிடமிருந்து விலகிச்செல்பவர்கள், ஒற்றுணர்வை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை தவறவிடுகிறார்கள். நாம் எதிர்ப்படும் எந்த ஒரு அனுபவத்திலிருந்தும் படிப்பினையைப் பெறுகிறோம், என் மகனுடன் வாழும் வாழ்க்கையானது அதிக புரிந்துகொள்ளுதலுடன் இருப்பதற்கும் விசாரணை செய்யுமுன்பே தீர்மானம் செய்யாமலிருப்பதற்கும் கற்பித்திருக்கிறது.” ஆம், உட்பார்வையானது நண்பர்கள் ஆதரவாக இருப்பதற்கும் கருத்துகளை கணிக்காதவர்களாக இருப்பதற்கும் உதவும்.—நீதிமொழிகள் 19:11-ஐ ஒப்பிடுக.
யெகோவாவின் சாட்சிகளுள் ஒருவர் டெப்பி, அவருக்கு 11 வயதிலேயே நோய் அறிகுறிகள் ஆரம்பமாயின, அவர் கூறுகிறார்: “பயணக் கண்காணிகளையும் உள்ளடக்கி நிறைய நண்பர்களை ராஜ்ய மன்றத்தில் நான் உடையவளாயிருக்கிறேன், அவர்கள் என்னை நேசிக்கிறார்கள், என்னுடைய தசை வலிப்பை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.”
அவதிப்படுபவருக்கு உதவி
தங்களுக்குத் தசை வலிப்பு வருவதற்கான காரணம் தாங்கள் குறைவுபடுவதனால் அல்ல, ஆனால் ட்யூரட் நோய்க்குறித் தொகுதி—என்னும் பெயரையுடைய நரம்பியல் கோளாறுதான் என்று வெறுமனே அறிந்துகொள்வதனால் பலர் வருத்தம் நீக்கப்பெறுகிறார்கள். “இதற்கு முன் அதைப்பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் எனக்கிருந்த வியாதிக்கு ஒரு பெயரிருக்கிறது என்று சொன்னபோது என் பாரம் நீங்கியது. நான் நினைத்தேன், ‘பரவாயில்லை, நான் ஒருவன் மாத்திரமல்ல.’ நான் ஒருவன் மாத்திரமே என்று எப்போதும் நினைத்திருந்தேன்,” என்று ஜிம் கூறுகிறார்.
தசை வலிப்பைக்குறித்து என்ன செய்யலாம்? மருத்துவ சிகிச்சையினால் பலர் உதவப்பட்டிருக்கிறார்கள். ஆயினும், விளைவுகள் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு வித்தியாசப்படுகிறது. தசை விறைப்பு, அயர்ச்சி, மனச்சோர்வு போன்ற பக்கவிளைவுகளை சிலர் அனுபவிக்கிறார்கள். பல மருத்துவ சிகிச்சைகளை முயன்றுபார்த்த ஷான் என்னும் வாலிபர் கூறுகிறார்: “தசை வலிப்புகளைக் காட்டிலும் பக்க விளைவுகளை சிறிதளவே பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஆகவே, மருத்துவ சிகிச்சையைக்காட்டிலும், அது இல்லாமலே எவ்வளவு காலம் முடியுமோ அதுவரை தொடர்ந்திருப்பதற்கு நான் தீர்மானித்துவிட்டேன்.” மற்றவர்களுக்கு ஒருவேளை பக்கவிளைவுகள் அவ்வளவு தீவிரமாக இல்லாமலும் இருக்கலாம். எனவே, மருத்துவ சிகிச்சையை உபயோகிப்பதும் உபயோகிக்காததும் தனிப்பட்ட தீர்மானமாகும்.c
மருத்துவ சிகிச்சை இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, “தோழமைக்கூட்டத்தில் இடர்ப்பாடுகளையும் சங்கடங்களையும் மேற்கொள்ளவேண்டியதாய் இருப்பதே மிகக் கடினமான சவாலாக இருக்கலாம்,” என்று குறிப்பிடுகிறது பரேய்டு மெகஸின். தீராத தசை வலிப்புகளுடன் இருக்கும் கெவின் என்னும் ஒரு இளம் மனிதர், இந்தச் சவாலை நேருக்கு நேர் எதிர்ப்பட தீர்மானித்தார். “சங்கடப்பட நேரும் என்ற பயத்தினால், கூடைப்பந்து விளையாடுவதற்கோ ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்வதற்கோ வரும் அழைப்புகளை மறுத்துவிடுவேன். இப்போதெல்லாம் எனக்கு என்ன இருக்கிறது என்று அப்படியே நேரடியாக ஜனங்களிடத்தில் சொல்லிவிடுகிறேன், எனவே இது என்னை மிகுந்தளவில் நலமாக உணரச்செய்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், நீங்கள் ட்யூரட் நோய்க்குறித் தொகுதியை உடையவராயிருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய தசை வலிப்பும் அதனோடுகூட ஒருவேளை திடீரென புண்படுத்தும் வார்த்தைகளை தன்னையறியாமலே கொட்டிவிடும் காப்ரலெலீயா (coprolalia) என்னும் பிரச்சினையும் சேர்ந்து, மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமானால் அதைப்பற்றி என்ன? பைபிள் சொல்வதிலிருந்து நீங்கள் ஆறுதலை பெற்றுக்கொள்ளலாம். அது நமக்கு உறுதியளிக்கிறது: “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” (1 யோவான் 3:20) ஒருவேளை நீங்கள் உடலாரோக்கியத்துடன் இருந்திருந்தால், இந்த ‘தூஷண வார்த்தையை’ உங்களால் ‘விட்டுவிட’ இயலும் என்பதை அவர் அறிந்துள்ளார். (கொலோசெயர் 3:8) ஆம், எந்த மனிதனைக் காட்டிலும் சிருஷ்டிகரே இந்தக் கோளாறைப்பற்றி நன்கு புரிந்துகொள்கிறார். ஒருவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத உடற்கோளாறுக்காக ஒருவரையும் அவர் பொறுப்பாளியாகத் தீர்ப்பதில்லை.
இந்த ட்யூரட் நோய்க்குறித் தொகுதியோடு வாழ்பவர்கள் நித்தம் சவாலை எதிர்ப்படுகிறார்கள். “நீங்கள் ஒருவேளை ட்யூரட் நோய்க்குறித் தொகுதியை உடையவராயிருக்கிறீர்கள் என்றால், அப்போதும் உங்களால் பல காரியங்களை சாதிக்கமுடியும் என்று உறுதியளிக்கப்பட்டவர்களாக இருங்கள். பிரசங்க வேலையில் முழுவதுமாகப் பங்கெடுப்பதற்கும் துணைப்பயனியர் சேவையைப் பல தடவைகள் செய்வதற்கும் என்னால் முடிந்திருக்கிறது,” என்று டெப்பி சொல்கிறார்.
நிச்சயமாகவே, நோய் அறிகுறிகள் அதிக கடுமையாக இருக்கும் சிலர் அதிக வரம்புக்கு உட்பட்டிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடத்தப்படும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மார்க் பேச்சுக்களைக் கொடுப்பதுண்டு. இப்போது, 15-ம் வயதில், அவனுடைய காப்ரலெலீயாவும் கூச்சலிடும் தசை வலிப்புகளும் அவனை அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்கின்றன. “இது அவனை ஒரு சாட்சியாக இருப்பதிலிருந்து சிறிதளவேனும் குறைவுபடுத்துவதில்லை. யெகோவாவை மார்க் மிகவும் நேசிக்கிறான், இந்தப் பயங்கரமான வியாதியிலிருந்து அவன் குணமாகும் அந்த நேரத்தை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறான்,” என்று அவனுடைய அம்மா கூறுகிறார்.
இந்த நம்பிக்கையினால் டெப்பியும் ஆறுதலளிக்கப்பட்டிருக்கிறார். அவர் சொல்கிறார்: “வரவிருக்கின்ற புதிய உலகில் நானும் என்னோடுகூட மற்ற அநேகரும் ட்யூரட் நோய்க்குறித் தொகுதிகளை இனிமேலும் உடையவர்களாயிருக்கமாட்டோம் என்று அறிந்துகொள்வதே அருமையாக உள்ளது.”—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4.
[அடிக்குறிப்பு]
a ட்யூரட் நோய்க்குறித் தொகுதி, பெண்களில் இருப்பதைக்காட்டிலும் ஆண்களில் மூன்று மடங்கு அதிகப் பரவலாக உள்ளன. இதன் காரணமாக நாம் ட்யூரட் நோயாளியை ஆண்பாலில் குறிப்பிடலாம். நிச்சயமாகவே, ட்யூரட் நோய்க்குறித் தொகுதியுள்ள பெண்களுக்கும் இதே நியமங்கள்தான் பொருந்தும்.
b யாரெல்லாம் ட்யூரட் நோய்க்குறித் தொகுதியுள்ள நோயாளிகளோ, அவர்களில் பாதிப்பேர் மட்டுக்குமீறி-வலுக்கட்டாயமான நோய் அறிகுறிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், மற்றொரு பாதிப்பேர் கவனப்பற்றாக்குறை மிகை இயக்க கோளாறின் அறிகுறிகளை வெளிக்காட்டுகிறார்கள். இந்தக் கோளாறுகளுக்கும் ட்யூரட் நோய்க்குறித் தொகுதிக்கும் இடையே உள்ள தொடர்பு இன்னும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
c ஊட்டச் சத்துக்கும் நடத்தை பிரச்சினைக்கும் இடையே இருக்கும் இணைப்பு சர்ச்சைக்குரியதாக இருக்கையில், பிள்ளையின் தசை வலிப்புகளை அதிகரிக்க செய்வதாகத் தோன்றும் எந்த உணவுகளுக்கும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிலர் யோசனை கூறுகிறார்கள்.
[பக்கம் 21-ன் பெட்டி]
சிட்சையின் பங்கு
தெரிந்தவிதமாகவே, ட்யூரட் நோய்க்குறி தொகுதிக்கே வழக்கமான, தன்னையறியாமலே நிகழும் வெளிக்காட்டுதல்களுக்காக ஒரு பிள்ளையைக் கண்டிப்பது தவறானதாய் இருக்கும். அத்தகைய நடத்தை இருப்பதனால், அந்தப் பிள்ளை ஒழுங்காகச் சிட்சிக்கப்படவில்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆயினும், “சிட்சை” என்ற வார்த்தையானது “பயிற்றுவித்தல் அல்லது போதகத்தாலும் பயிற்சியினாலும் வளர்த்தல்” என்பதை அர்த்தப்படுத்தக்கூடும். தசை வலிப்புகளை நீக்கிவிட இயலாதபோதிலும், இந்தக் கோளாறின் விளைவுச் செயலான ஏற்கத்தகாத நடத்தையைக் குறைக்க பெற்றோர்கள் அந்தப் பிள்ளையைப் பயிற்றுவிக்கலாம். எப்படி?
(1) செயல்கள் பின்விளைவுகளை உடையவையாய் இருக்கின்றன என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். ட்யூரட் நோய்க்குறி தொகுதியுள்ள ஒரு பிள்ளை, தான் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயல்கள் பின்விளைவுகளை கொண்டிருக்கின்றன என்று அறிந்துகொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. ‘குளிர்பதனப் பெட்டியில் உணவை திரும்பவும் வைக்காவிட்டால் என்ன நேரும்?’ போன்ற நித்தம் நடக்கும் காரியங்களின் பேரில் கேள்விகளை கேட்பதன் மூலம் இதை கற்றுக்கொடுங்கள். அவனை பிரதிபலிக்க அனுமதியுங்கள். அவன் ஒருவேளை ‘அதில் பூஞ்சணம் வரும்,’ என்று சொல்லக்கூடும். அதன்பிறகு, அந்த விரும்பத்தகாத பின்விளைவை தவிர்ப்பதற்கான நடவடிக்கையின் ஒரு போக்கை அவன் தேர்ந்தெடுக்கட்டும். ‘அதை நாம் திரும்பவும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவேண்டும்,’ என்று அவன் ஒருவேளை முடிவெடுக்கலாம். ஒருவேளை இதனை வெவ்வேறு சூழ்நிலைகளில் திரும்பத்திரும்ப செய்தால், அந்தப் பிள்ளையானது உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதற்கு முன் யோசிப்பதற்கு பயிற்றுவிக்கப்படலாம்.
(2) வரம்புகளை நிர்ணயுங்கள். விசேஷமாக இது, ஒரு பிள்ளையின் நடத்தை அவனுக்கோ மற்றவர்களுக்கோ தீங்குவிளைவிக்குமானால் முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக, சூடாக இருக்கும் அடுப்பை தொடுவதற்காகத் தூண்டப்படும் ஒரு பிள்ளையிடம், அவன் அடுப்பிற்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படலாம். மிதமிஞ்சி சீற்றமடையும் மனப்பாங்கை கொண்டிருக்கும் பிள்ளையிடம் சீற்றம் தணியும் வரை தனியே ஒரு இடத்திற்கு சென்றுவிட கற்றுக்கொடுக்கலாம். எவை பொருத்தமான நடத்தைகள் எவை அல்ல என்பதை தெளிவாக்குங்கள்.
(3) கூடுமானால், விரும்பத்தகாத தசை வலிப்புகளை சிறிது மாற்றியமைக்க பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள். சிலர் தங்களுடைய தசை வலிப்புகளை தற்காலிகமாகக் கட்டுப்படுத்த முடியும். ஆயினும், பெரும்பாலும் அவ்விதம் அடக்குவதற்காக வற்புறுத்துவது, தவிர்க்கமுடியாத உணர்ச்சி வெடிப்பை வெறுமனே தாமதிக்கிறது. ஒரு சிறந்த அணுகுமுறையானது, சமுதாயத்தில் விரும்பத்தகாத தசை வலிப்புகளை சிறிது மாற்றியமைக்க அந்தப் பிள்ளைக்கு உதவுவதாகும். உதாரணமாக, கைக்குட்டை ஒன்றை அந்தப் பிள்ளை வைத்திருக்க செய்வதன் மூலம் எச்சில் துப்பும் பழக்கத்தை குறைந்தளவே ஆட்சேபிக்கும் ஒன்றாக மாற்றலாம். இந்த நோய் அறிகுறியைச் சமாளிக்கும் உத்தரவாதத்தை இது அந்தப் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கிறது, அதனால் அவன் சமுதாயத்தில் செயல்பட முடியும்.
“சிட்சிப்பதற்கு நாம் பயப்படக்கூடாது. கொஞ்ச காலத்திற்குப்பின், இது அந்தப் பிள்ளைக்கு எந்தச் சமுதாய சூழ்நிலையானாலும், அங்கு நாம் இல்லாமல், தானாகவே அவனால் செயல்பட முடியும் என்ற அறிவையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்” என்று சிட்சை மற்றும் டிஎஸ் பிள்ளை (ஆங்கிலம்) கூறுகிறது.
[பக்கம் 23-ன் படம்]
“ஒவ்வொரு நாளுக்கான நடவடிக்கைகளிலிருந்து என்னை விலக்கி வைக்க என்னுடைய நிலைமையை நான் அனுமதிப்பதில்லை”