போர் நினைவுகளின் மத்தியில் அமைதிக்கான ஜெபங்கள்
நவம்பர் 1994-ல் போப் ஜான் பால் II, வத்திகனில் பலமதப்பிரிவினரும் சேர்ந்த ஒரு மாநாட்டைத் திரட்டினார். உலக சமாதானத்திற்கான ஜெபங்கள் அந்த நிகழ்ச்சியின் சிறப்பாகும். “கடந்தகாலத்திலும் இப்போதும்கூட உள்ள சண்டைகள் என்னவாக இருந்தாலும், மதத்திற்கும் சமாதானத்திற்கும் இடையிலுள்ள தொடர்பை சிறந்தவிதத்தில் அறியச்செய்வது நம்முடைய பொது வேலையாகவும் கடமையாகவும் இருக்கிறது” என்று போப் தன்னுடைய தொடக்கப் பேச்சில் சொன்னார்.
எதிர்பார்ப்புக்கு முரணாக, இந்த விஷயத்தில் இந்த உலகின் மதங்கள் மோசமான பெயரைப் பெற்றிருக்கின்றன. “உலகின் பல்வேறு பாகங்களிலுள்ள சண்டைகளில் மதங்கள் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கின்றன,” என்பதை அந்த மாநாட்டின் பொதுச் செயலராகிய உவில்லியம் வென்ட்லி ஒத்துக்கொண்டார். ரோமன் கத்தோலிக்க ஆதிக்கமுள்ள நாடாகிய ருவாண்டாவின் படுகொலைகளை எண்ணிப் பாருங்கள்.
ருவாண்டாவின் அவலம் “கவலைக்குரியவிதத்தில் கத்தோலிக்கரும்கூட பொறுப்புள்ளவர்களாக இருந்த நிஜமான, உண்மையான இனப்படுகொலை” என்பதாக மே 1994-ல், போப் ஜான் பால் II ஒத்துக்கொண்டார். கத்தோலிக்க பங்கெடுப்பு, சர்ச்சிலுள்ள மக்களின் நம்பிக்கையைப் பாதித்திருக்கிறதா? “அந்தப் படுகொலைகள் அநேக மக்களின் விசுவாசத்தைத் தடுமாறச் செய்திருக்கிறது,” என்று பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜெஸ்யூட் ஆன்ட்ரே பூயோ கூறினார். நல்ல காரணத்தோடேயே அவ்வாறு சொல்கிறார்.
மியாமி ஹெரல்டில் பிரசுரிக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, “இனப்படுகொலை செயல்களுக்காக விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் ஹூட்டூ சிறைக்கைதிகளின் மத்தியில் குருமாரும், பாதிரிமாரும், கன்னியாஸ்திரீகளும் இருக்கிறார்கள்.” தி நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அறிக்கையிட்டது: “அவர்களுடைய பிஷப்புகளும் ஆர்ச்பிஷப்புகளும் போதுமான அளவு விரைவுடனோ அல்லது வற்புறுத்தலுடனோ அந்தப் படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் ஹாப்யாரீமானா அரசுக்கு அவர்கள் அவ்வளவு நெருங்கி இருந்தனர் என்றும், மரணமேற்படுத்தும் கும்பல்களைப் பயிற்றுவிப்பதற்கு இது உதவியாக இருந்தது என்றும் ருவாண்டாவைச் சேர்ந்த அநேகர் சொல்லுகின்றனர். இந்தப் படுகொலைகளில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின்பேரில் டூட்ஸியால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட புதிய அரசால் குறைந்தபட்சம் ஒரு பாதிரியாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்.” “புதிய அரசாங்கம், கத்தோலிக்க சர்ச்சை முன்பிருந்ததுபோல் பலமானதாய் இருக்க விரும்புவதில்லை என்று சொல்லுகிறது; மேலும் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறவர்களாகவும் தனித்தியங்கும் தன்மையுடையவர்களாகவும் இருக்கும் பாதிரிமாரை படைவீரர்கள் கஷ்டப்படுத்தி, கைது செய்யப்போவதாக அச்சுறுத்தவும்கூட செய்திருக்கிறார்கள்” என்று மேலுமாக டைம்ஸ் சொல்லுகிறதில் ஆச்சரியமில்லை.
இரத்தப்பழியுள்ள மதவாதிகளால் சமாதானத்திற்காகச் செய்யப்படுகிற ஜெபங்களை யெகோவா தேவன் எவ்வாறு கருதுகிறார்? ஏசாயா 1:15 பதிலளிக்கிறது: “நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.”
அதேநேரத்தில், யெகோவாவின் உண்மையான ஊழியர்கள் ‘இந்த உலகத்தின்’ மற்றும் அதன் சண்டைகளின் ‘பாகமாக இல்லை.’ ருவாண்டாவின் படுகொலைகளின்போது, ஒரு இனத்தைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த அச்சுறுத்தப்பட்ட சாட்சிகளுக்கு தங்கள் வீடுகளில் புகலிடம் கொடுத்தார்கள்; இவ்வாறு தங்கள் சொந்த உயிர்களைப் பணயம் வைத்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தனர். உலகெங்கும் ஒவ்வொரு பின்னணியிலிருந்தும் எடுக்கப்பட்ட ‘திரள் கூட்டமான’ சாட்சிகள், உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒரே நம்பிக்கையாக கடவுளுடைய ராஜ்யத்தை அறிவித்து, அதற்காக ஜெபிக்கிறார்கள்.—யோவான் 17:14; வெளிப்படுத்துதல் 7:9; மத்தேயு 6:9, 10; 24:14.