இளைஞர் கேட்கின்றனர்
அணி விளையாட்டுகள் எனக்கு அவை நல்லவையா?
“எனக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு விருப்பம். ஏனென்றால், உண்மையிலேயே எனக்கு ஒரு நல்ல உணர்வு ஏற்படுகிறது. மேலும், என்னுடைய நண்பர்களுடன் இருப்பதை நான் அனுபவிக்கிறேன்.” —14 வயது சண்டீ.
“வேடிக்கை!” “கிளர்ச்சி!” “வெற்றிபெற!” ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளில் ஏன் பங்குகொண்டார்கள் என்று ஆய்வு நடத்தியபோது, ஐ.மா. மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கூறின சில காரணங்கள்தான் இவை. தெளிவாகவே, அவர்களுடைய உற்சாகத்தை பல இளைஞர் பகிர்ந்து கொள்கிறார்கள்.
உதாரணத்திற்கு, ஐக்கிய மாகாணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். லாரன்ஸ் கல்டன் எழுதிய விளையாட்டுகளில் உங்கள் பிள்ளை என்ற ஆங்கில புத்தகத்தின்படி, “ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு அணிகளில் ஒவ்வொரு வருடமும், ஆறு வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள 2 கோடி அமெரிக்க குழந்தைகள் விளையாடுகிறார்கள், அல்லது விளையாட முயற்சி செய்கிறார்கள்.” மேலும், சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு அணிகளில் பெரும்பாலும் ஆண்களே பிரத்தியேகமாக இருந்தார்கள். இன்றோ, தளக்கட்டுப் பந்து எறிவதிலும், கூடைப் பந்துகளை குறி தப்பாமல் போடுவதிலும், கால் பந்தாட்ட களத்திலே, ஒருவரோடு ஒருவர் போட்டி போடுவதிலும்கூட பெண்கள் அசாதாரணமான எண்ணிக்கைகளில் இருக்கிறார்கள்.
ஒருவேளை, நீங்கள் விளையாட்டு வீரரைப் போல சுறுசுறுப்பானவராக இருக்கிறதால், ஒரு அணியில் சேருவது வேடிக்கையாக இருக்கும் என்று உணரலாம். அல்லது, அவ்விதமாகச் செய்வதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், அல்லது பயிற்சியாளர்கள் போன்றவர்களிடமிருந்து நீங்கள் அதிக உற்சாகத்தையோ, ஒருவேளை அழுத்தத்தையோகூட பெற்றுக்கொண்டிருக்கலாம். நிலைமை என்னவாயிருந்தாலும், அணி விளையாட்டுகளுடன் சம்பந்தப்படுவது, ஒரு கணிசமான அளவு நேரத்தையும், சக்தியையும் தேவைப்படுத்துகிறது. அதனால்தான், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகளைப் பற்றி நாம் அறிந்திருப்பது, விவேகமாகவும், பிரயோஜனமாகவும் இருக்கும். முதலில், சில நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
விளையாட்டுகள்—அதன் பலன்கள்
“சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது,” என்று பைபிள் கூறுகிறது. (1 தீமோத்தேயு 4:8) மேலும், சரீர சம்பந்தமான நடவடிக்கைகளினால் இளம் பிராயத்தார் நிச்சயமாக பயனடையலாம். ஐக்கிய மாகாணங்களில், திடுக்கிடச்செய்யும் எண்ணிக்கையான இளைஞர், உடல் பருமன், உயர்ந்த இரத்த அழுத்தம், மற்றும் அதிக கொழுப்புச்சத்தால் துன்பப்படுகிறார்கள். ஒழுங்கான உடற்பயிற்சி, அத்தகைய பிரச்சினைகளைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர அதிக உதவி செய்யும். அமெரிக்கன் ஹெல்த் என்ற பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின்படி, ஒழுங்காக உடற்பயிற்சி செய்யும் இளைஞர், “மந்தமாக உள்ள பிள்ளைகளைவிட, மேம்பட்ட சுவாசம் மற்றும் இரத்தவோட்ட செயலாற்றலை அடைகிறார்கள். மேலும், அடிக்கடி உடற்பயிற்சி செய்பவர்கள் விளையாட்டுகளில் அதிக சிறப்பாக செயலாற்றுகின்றனர். மேலும் உடல் பருமனை மிக நன்றாக கட்டுப்படுத்த பழகுகின்றனர்.” மேலும், உடற்பயிற்சி, உங்களை அழுத்தத்திலிருந்து விடுவித்து, சோர்வைக் குறைத்து, உங்கள் தூக்கத்தைக்கூட மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆர்வத்தை அளிக்கும் விதமாக, விளையாட்டுகளில் உங்கள் பிள்ளை என்ற புத்தகம் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது: “வயதுவந்தவர்களுக்கு வரும் அநேக உடல்நலப் பிரச்சினைகள் இளமைப்பருவத்தில் இருந்துதான் தொடங்குகின்றன என்பது தெளிவாகியுள்ளது.” ஆக, ஒழுங்கான உடற்பயிற்சியின் பலன்கள் வயதுவந்த பருவத்திற்குள்ளும்கூட நீடித்திருக்கலாம் என்று பல மருத்துவர்கள் உணருகிறார்கள். “விளையாட்டில் ஈடுபடுகிற பிள்ளைகள், வளர்ந்தபின்பு அதிக சரீர சுறுசுறுப்புடன் இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது,” என்று எழுத்தாளரான மரீ சி. ஹிக்கீ அறிவிக்கிறார்.
அணி விளையாட்டுகளில் மற்ற முக்கிய பயன்கள் உள்ளன என்று அநேகர் உணருகிறார்கள். தன்னுடைய மகன் கால்பந்தாட்டம் விளையாடுவதைக் குறித்து ஒரு தந்தை பின்வருமாறு கூறினார்: ‘தெருவில் அவன் சுற்றித்திரிவதை இது தடுத்து, ஒழுக்கத்தை அவனுக்கு கற்பிக்கிறது.’ ஒரு அணியுடன் விளையாடுவது, மற்றவர்களுடன் ஒத்துழைத்து வேலைசெய்வதை ஒரு இளைஞனுக்கு கற்றுத்தருகிற, நீண்டநாள் பயன்தரக்கூடிய ஒரு திறமையாக இருக்கக்கூடும் என்று மற்றவர்கள் உணருகிறார்கள். சட்டங்களைப் பின்பற்றுவதற்கும், தோல்வியையும், வெற்றியையும் நயமாக கையாளுவதற்கும், தலைமைவகிப்பை தாங்குவதற்கும், சுய கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதற்கும், அணி விளையாட்டுகள் கற்பிக்கின்றன. “விளையாட்டுகள் இளைஞருக்கு ஒரு மிகப் பெரிய படிக்கும் அனுபவம்,” என்று டாக்டர் ஜார்ஜ் ஷீஹன் கூறுகிறார். “தைரியம், திறமை, அர்ப்பணம் போன்ற காரியங்களை அடிக்கடி ஆசிரியர்களிடமிருந்து கேட்கும் மாணாக்கர்களுக்கு அவை நேரடியான அனுபவத்தை அளிக்கின்றன.”—கரண்ட் ஹெல்த், செப்டம்பர் 1985.
வெற்றிபெறுகிற அணியிலே இருப்பது, குறைந்தபட்சம் ஒருவருடைய தன்மதிப்பையாவது உயர்த்தக்கூடும். “நான் தொடுபந்தெடுப்பை செய்தாலோ அல்லது பந்தை எறிந்து மதிப்பீட்டைப் பெற்றாலோ, என்னைக் குறித்தே மிகுந்த பெருமைப்படுவேன்,” என்று இளம் எடீ கூறுகிறான்.
புகழ், பணம், மற்றும் பிரசித்தி
மற்ற இளைஞரையோ, தங்கள் நண்பர்களுடைய திருப்தியையும், அங்கீகாரத்தையும் பெறுவதற்குத்தான் அணி விளையாட்டுகள் உண்மையில் கவர்ந்திழுக்கின்றன. “நீங்கள் நன்றாக செய்யும் எல்லா சமயங்களிலும், எப்போதும் உங்களுக்குப் பாராட்டுதலும், போற்றுதலும் எல்லாரும் தெரிவிக்கிறார்கள்,” என்று 13-வயது கோர்டென் விளக்குகிறான்.
“பிரசித்திபெற ஒரு நிச்சயமான வழி ஏதாவது இருந்தால், முக்கியமாக வாலிபர்களுக்கு, அது விளையாட்டுப் போட்டிதான். . . . கவனத்தை ஈர்க்காத ஒரு கால்பந்து அல்லது கூடைப்பந்து அணியின் நட்சத்திரத்தை நீங்கள் அரிதாகத்தான் பார்க்கமுடியும்,” என்று ஸூசன் மற்றும் டானியல் கோஹென் எழுதிய பருவ வயதின் அழுத்தம் என்ற ஆங்கில புத்தகம் ஒத்துக்கொள்கிறது. விளையாட்டு வீரர்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்புவாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை சரியாக ஒரு ஆய்வு வெளிக்காட்டியது. மிகப் பிரபலமான நபர், ஒரு கூரறிவுடைய மாணாக்கர் அல்லது ஒரு விளையாட்டு நட்சத்திரம், இவர்களில் எவராக நினைவுகூரப்படுவதற்கு தாங்கள் விரும்புகிறார்கள் என்பதாக தேர்ந்தெடுக்க மாணாக்கர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். வாலிபர்களுக்கு, “ஒரு விளையாட்டு நட்சத்திரமாக” இருப்பதுதான் முதலாம் தெரிவாக இருந்தது.
தொழில்முறையான விளையாட்டு வீரர்கள்மேல் செய்தித்துறை வணக்கத்துக்குரிய கவனத்தை ஒருமுகப்படுத்துகிறதை கருதும்போது, ஒரு கால்பந்தாட்ட அல்லது கூடைப்பந்தாட்டக்காரர் ஒரு படித்தமேதையைவிட அதிக மரியாதை பெறுவது அவ்வளவு ஆச்சரியம் அல்ல. அவர்களுடைய பகட்டான வாழ்க்கை முறைகளின்மேலும், வானுயர்ந்த வருமானங்களின்மேலும் பெரும்பாலான விளம்பரங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. அநேக இளைஞர், முக்கியமாக மக்கட்தொகை அதிகமாக உள்ள நகரத்தில் இருப்பவர்கள், பள்ளி விளையாட்டுகளை, செல்வாக்கடைந்திட ஒரு முன்னேற்றப்படியாகவும், ஏழ்மையிலிருந்து தப்பிக்க ஒரு வழியாகவும் கருதுவது ஆச்சரியமாயில்லை!
பரிதாபகரமாக, உண்மைநிலை அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை அடைந்திட படுமோசமாக தோல்வியடைந்திருக்கிறது. “எத்தனை விளையாட்டு வீரர்கள் தொழில்முறையாக வெற்றிபெற்றிருக்கிறார்கள்?” என்று கரண்ட் ஹெல்த் பத்திரிகையிலிருந்த ஒரு கட்டுரை, சில யோசிக்கவைக்கிற புள்ளிவிவரங்களைக் கொடுத்தது. “மேல்நிலைப் பள்ளி கால்பந்தாட்டத்தை பத்து லட்சத்திற்கும் மேலான இளைஞர் [ஐக்கிய மாகாணங்களில்] விளையாடுகிறார்கள்; கூடைப்பந்தாட்டத்தில் 5,00,000 பேரும், தளக்கட்டுப் பந்தாட்டத்தில் சுமார் 4,00,000 பேரும் பங்குகொள்கிறார்கள். மேல்நிலைப் பள்ளியிலிருந்து கல்லூரிவரை, பங்குகொள்வோரின் எண்ணிக்கை பெருமளவில் சரிவடைந்துள்ளது. கல்லூரி கால்பந்து, கூடைப்பந்து மற்றும் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் 11,000 விளையாட்டு வீரர்கள் மாத்திரமே ஒட்டுமொத்தத்தில் பங்குகொள்கிறார்கள்,” என்று அது தெரிவித்தது. கல்லூரியிலிருந்து, புள்ளிவிவரங்கள் இன்னும் குறைவடைகின்றன. “[கல்லூரி விளையாட்டு வீரர்களில்] 8 சதவீதத்தினரையே தொழில்முறையான அணிகள் தேர்ந்தெடுக்கின்றன. மேலும், ஒரு தொழில்முறையான ஒப்பந்தத்தை வெறும் 2 சதவீதத்தினர்தான் கையெழுத்திடுகிறார்கள்.” அந்தக் கட்டுரை இந்த நினைப்பூட்டுதலை பின்பு கொடுக்கிறது: “ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் மாத்திரமே, ஒரு விளையாட்டு வீரனுக்கு அணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று அர்த்தமாகாது.”
அப்படியென்றால் மொத்தத்தில், “ஒவ்வொரு 12,000 மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்களில் ஒருவர்தான் தொழில்முறையில் வாழ்க்கை அமைத்துக்கொள்கிறார்.” அது லாட்டரியில் முதல் பரிசு பெறும் சாத்தியத்தைவிட சிறப்பாக இல்லாமல் இருக்கலாம்! ஆனால், ஒரு விளையாட்டு வீரன் தான் எடுக்கும் எல்லா முயற்சிக்காகவும் குறைந்தபட்சம் ஒரு இலவச கல்லூரி படிப்பையாவது பெறமுடியாதா என்று நீங்கள் யோசிக்கலாம். மறுபடியுமாக, சாத்தியக்கூறுகள் அவ்வாறு இல்லை. ரிச்சர்ட் இ. லாப்சிக் மற்றும் ராபர்ட் மல்கொஃப் எழுதிய ஆன் தி மார்க் என்ற புத்தகத்தின்படி, “இலட்சக்கணக்கான மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்களில் . . . , 50-ல் ஒருவருக்குத்தான் கல்லூரியில் விளையாடுவதற்கு ஒரு உதவித்தொகை கிடைக்கும்.” மற்றொரு உற்சாகமற்ற புள்ளிவிவரம்: “கூடைப் பந்தாட்டம், கால் பந்தாட்டம் போன்ற அதிக வருமானம் தரும் விளையாட்டுகளில், உதவித்தொகை பெறும் முன்னணி வீரர்களில், 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களே நான்கு வருடங்களுக்குப் பிறகு கல்லூரியிலிருந்து பட்டதாரி ஆவார்கள்.”
பெரும்பான்மையான ஆட்டக்காரர்களுக்கு, ஒரு புகழ்பெற்ற, பணக்கார விளையாட்டு வீரராக ஆகும் கற்பனை வெறும் ஒரு கனவாக—ஒரு பகல் கனவாக—இருக்கிறது.
விலகிவிடுபவர்கள்
சீர்பட்ட உடல்நலம், குணநல வளர்ச்சி மற்றும் அதிகரித்த பிரசித்தி போன்ற சாத்தியங்களை நீங்கள் கருதும்போது, அணி விளையாட்டுகளில் சேர்வது விவேகமான காரியமாக இன்னும்கூட தோன்றலாம். ஆனால், நீங்கள் அவசரப்பட்டு முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னால், பெண்கள் வீட்டு பத்திரிகை-ல் (ஆங்கிலம்) என்ன சொல்லப்பட்டதென்று கவனியுங்கள்: “ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளில், வேறு எந்த முந்திய சந்ததியையும்விட இன்று, அதிக பிள்ளைகள் சேருகிறார்கள். கெட்ட செய்தி: இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளிலிருந்து, உயர்ந்த எண்ணிக்கையானவர்கள் விலகிவருகிறார்கள்.” விளையாட்டு வல்லுனராயிருக்கும் டாக்டர் வேர்ன் சாரஃபெல்ட் இவ்வாறு கூறினார் என்று மேற்கோள்காட்டப்பட்டது: “பதினைந்து வயது ஆகுமுன்னே, ஒரு விளையாட்டை எப்போதாவது விளையாடியிருக்கிற எழுபத்தைந்து சதவீதமான பிள்ளைகள் அதிலிருந்து விலகிவிட்டிருந்தார்கள்.”
பனியில் விளையாடும் வளைகோற்பந்தாட்டம், மிகப் பெரிய பிரசித்தியை அனுபவித்துவரும் கனடாவை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். பழகிவருபவர்கள் அடங்கிய ஒரு வளைகோற்பந்தாட்ட சங்கத்தில், அதன் 6,00,000-க்கும் அதிகமான உறுப்பினர்களில் 53 சதவீதத்தினர், 12 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். ஆயினும், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 சதவீதம்தான் இருந்தனர். காரணம்? அந்த வயதிற்குள் அநேக இளைஞர் விலகிவிட்டிருந்தார்கள். அவ்வளவு அநேகம்பேர் ஏன் விலகிவிடுகிறார்கள்?
தங்களுடைய விலகலுக்கு அப்படிப்பட்டவர்கள், ஆட்டங்கள் இனிமேலும் வேடிக்கையளிப்பவையாக இல்லை என்ற ஒரு ஆச்சரியமான சாதாரண காரணத்தையே பொதுவாக கொடுக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு அணியில் விளையாடுவது உண்மையிலேயே, களைப்படைய செய்யும், நேரத்தை செலவழிக்க வேண்டிய ஒரு திட்டமாயிருக்கலாம். செவன்டீன் என்ற பத்திரிகை, ஒரு அணியில் வெறுமனே ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால், “சுமார் ஓரிரண்டு வாரங்கள் . . . ஐந்து நாட்கள் வீதம், ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம்” செலவிடுவதை உட்படுத்தும் என்று அதன் வாசகருக்குக் கூறினது. அந்தக் கடுமையான சோதனையைத் தப்பி, அணியிலே சேர நீங்கள் அனுமதிக்கப்பட்டால், அதிகமான பல மணிநேரம் தேகப்பயிற்சியும், ஒத்திகைப்பயிற்சிகளுமே உங்களுடைய எதிர்காலமாக இருக்கும். பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியின் அங்கத்தினரும், ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கும் அதிகமாக தன்னுடைய ஆட்டப்பயிற்சிக்காக செலவிடுபவருமான ஒருவர் இதற்கு உதாரணமாக இருக்கிறார். அதிக பயனுள்ள எதையாவது செய்ய அந்த நேரத்தைச் செலவிடலாம்.
நிச்சயமாகவே, அநேக இளைஞர் ஆயாசப்படுத்துகிற, இந்தத் தொடர்பழக்கத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள். தங்களுடைய விளையாட்டுத் திறமையை மேம்படுத்துகிற சவாலையும் வேடிக்கையையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால், ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையான இளைஞர் ஏன் விலகிவிடுகிறார்கள் என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்கிறான்,” என்று நீதிமொழிகள் 13:16 கூறுவதுபோல, ஒரு அணி விளையாட்டில் சேருவதா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்க, நீங்கள் அந்தக் காரணங்களைக் குறித்து தெரிந்திருப்பது அவசியம். ஆகையால், இந்த ஆய்வுரையை வரப்போகிற ஒரு கட்டுரை தொடரும்.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
விளையாட்டு வீரர்களின் பிரசித்தி அநேக இளைஞரை ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளுக்கு கவர்ந்திழுக்கிறது
[பக்கம் 13-ன் படம்]
‘விளையாட்டு உதவித்தொகை வாங்கும் அநேக உயர் பல்கலைக்கழக ஆட்டக்காரர்கள், பட்டம்பெற தவறுகிறார்கள்’