பண்டைய அமெரிக்க இந்திய பாரம்பரியம் ஒன்று
நீங்கள் உலகில் எங்கு சென்றாலும் சரி, ஒவ்வொரு இடத்திற்கும் அதனதன் பாரம்பரிய கலை அமைப்புகள் இருப்பதைக் காண்பீர்கள். ஓவியங்கள், சிறு உருவச் சிலைகள், மர செதுக்கு வேலைகள், மண்பாண்ட வேலைப்பாடுகள், அல்லது மற்ற பொருட்கள் பொதுவாக பரிசுப்பொருள் மற்றும் அருங்கலைப்பொருள் கடைகளில் காணப்படுகின்றன. உங்கள் வீட்டை அலங்கரிக்க இவற்றில் எதையாவது நீங்கள் எப்போதாவது வாங்கியிருக்கிறீர்களா? அப்படியானால், அந்தப் பொருள் உண்மையில் எங்கு உண்டாக்கப்பட்டது என்று நீங்கள் ஏன் அதை சோதித்துப் பார்க்கக்கூடாது. வேறொரு நாட்டில் அது உண்டாக்கப்பட்டிருந்ததாகக் கண்டால் ஆச்சரியப்படாதீர்கள்.
பல நூற்றாண்டுகளாக, கைவினைஞர்கள் தாங்கள் உண்டாக்கிய பொருட்களின் அடிபாகத்தில், அவை யாருடைய படைப்புகள் என்பதைக் காண்பிப்பதற்காக தங்கள் பெயரின் முதலெழுத்துக்களைப் பொறித்து வைத்தனர். என்றபோதிலும், இன்று, அந்தப் பொருள், பெருமளவு-உற்பத்தி செய்யப்பட்டது, கைவேலைப்பாடு அல்ல என்று குறிப்பிடும் ஒரு ஸ்டிக்கரை அல்லது ஒரு முத்திரையை நீங்கள் பெரும்பாலும் காண்பீர்கள். பெருமளவு-உற்பத்தி செய்யப்பட்ட, ஒன்றையொன்று ஒத்திருக்கும் இந்தப் பொருட்கள் மிகப் பிரபலமானவையாகிக்கொண்டும் பாரம்பரிய கைவேலையான கலைவண்ணங்கள் காண்பதற்கு அரிதாகிக்கொண்டும் வருகின்றன. என்றபோதிலும், பாரம்பரியமான, உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்கள் இன்னும் காணப்பட முடியுமா?
அமெரிக்க இந்திய ஒதுக்கீட்டுப் பகுதி ஒன்றை விஜயம்செய்தல்
தங்கள் சொந்த கலை வேலைகளைச் செய்கிற அமெரிக்க இந்திய நண்பர்கள் சிலரை நாங்கள் சந்திக்கச் சென்றபோது உண்மையில் அவற்றைக் காண முடியும் என்று நாங்கள் கண்டுபிடித்தோம். அவர்கள் ஸான்டா க்ளாராவின் ப்யூயெப்லோ என்ற இந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள்; விசேஷமாக அவர்களுடைய மெருகூட்டப்பட்ட கறுப்பு மண்பாண்டங்களுக்காக அறியப்பட்டவர்கள்—அவை உலகிலுள்ள மிக அழகிய மண்பாண்டங்களில் சிலவாகும். தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களில் அநேக கடைகளில் காணப்படும் பெருமளவு-உற்பத்தி பொருட்களிலிருந்து அவர்களுடைய பாரம்பரிய பொருட்கள் வெகுவாக வித்தியாசப்பட்டவையாய் இருக்கின்றன.
எங்கள் நண்பர்களாகிய ஜோவும் அனீட்டாவும் மண்பாண்டங்களை பாரம்பரிய முறையில் அநேக வருடங்களாக செய்து வருகின்றனர். அனீட்டா தனக்கு ஆறு வயதாக இருக்கும்போது தன் அம்மாவுடன் சேர்ந்து மண்பாண்டங்களைச் செய்ய ஆரம்பித்தாள். அனீட்டா செய்த கலைப்பொருட்களில் ஒன்று, வாஷிங்டன் டி.சி.-யிலுள்ள ஸ்மித்சோனியன் நிறுவனத்தில், அமெரிக்க இந்திய கலைப்பொருட்கள், காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கிறது.
ஜோவும் அனீட்டாவும் ஒரு புதிய தொகுதியான மண்பாண்டங்களைச் செய்ய தயாராகிக்கொண்டிருக்கையில்தானே நாங்கள் அவர்களுடைய வீட்டைச் சென்றடைந்தோம். ஆகையால் அது எப்படி செய்யப்படுகிறது என்று இப்போது நாங்கள் நேரடியாகப் பார்க்க முடியும். நாங்கள்தாமே சில மண்பாண்டங்களைக் கடந்தகாலத்தில் செய்திருக்கிறோம். ஆனால், நாங்கள் அதை நவீன முறையில் வார்ப்புகளையும், மண்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களியையும், ஒரு சூளையையும் பயன்படுத்தி செய்தோம். நாங்கள் பார்க்கப்போவது பண்டைய முறை, வழிவழியாகக் கடத்தப்பட்டு வந்த முறையாகும். இந்தச் செய்முறையில் நவீன தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. அனைத்துமே தொடக்கத்திலிருந்து செய்யப்படுகின்றன.
தேவையான பொருட்களைச் சேகரித்தல்
முதலாவதாக, ஜோவும் அனீட்டாவும் தேவையான பொருட்களைச் சேகரிக்க வேண்டும். பொருட்களை ஏற்றிக் கொண்டுவரக்கூடிய அவர்களுடைய ட்ரக்கில் (pickup truck) களிமண்ணை கண்டெடுக்கக்கூடிய குன்றுபகுதிக்கு நாங்கள் சென்றோம். இவர்களது ஒதுக்கீட்டுப் பகுதியில் இது அமைந்திருப்பதால், ஸான்டா க்ளாராவின் ப்யூயெப்லோக்களில் தற்போது சுமார் 2,400 பேர் இருக்கிற, இந்த இன அங்கத்தினருக்கு மட்டுமே இந்தக் களிமண் கிடைக்கிறது. சுமாராக பொ.ச. 16-ம் நூற்றாண்டு வரை பழமையானதாக இருக்கும் பாரம்பரிய முறையிலேயே அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மண்பாண்டங்களைச் செய்கிறார்கள். அந்தக் குன்றுபகுதியை வந்தடைந்ததும், ஜோ தன் கோடரியை எடுத்துக்கொண்டு, களிமண்ணாலான ஒரு பிளவை நோக்கிச் சென்றார்.
அந்தக் குன்றின் அடியில் அந்தப் பிளவு, மட்டநிலையில் தொடர்ந்து நீண்டு செல்கிறது. ஜோ பக்கவாட்டில் படுத்துக்கொண்டு அந்தப் பிளவைக் குத்தி, அதிலிருந்து சுமார் செங்கற்களின் அளவிலான களிமண் துண்டுகளை வெட்டியெடுக்க வேண்டியிருந்தது. இது அபாயகரமானதாக இருக்கலாம்; ஏனென்றால், எவ்வளவு ஆழமாக செல்கிறீர்களோ, அந்தப் பாறை சரிந்து விழுவதற்கான வாய்ப்புகளும் அவ்வளவு அதிகமாக இருக்கின்றன. நல்ல தரமான களிமண் என்பதாக ஜோ குறிப்பிட்டதில், 60-லிருந்து 70 கிலோகிராம் வரையானதை அவர் எடுத்து முடித்தபின், நாங்கள் திரும்பிச் செல்ல தயாரானோம். ஆனால் ஒரு முறை வரும்போது, பல நூறு கிலோகிராம் களிமண்ணை அவர்கள் சேகரித்து, மீண்டும் வரக்கூடிய சில பயணங்களை ஏன் குறைத்துக்கொள்ளக்கூடாது என்று என்னால் அவர்களிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. அனீட்டா எங்களிடம் சொன்னார்: “அவ்வாறு செய்வது இந்தியரின் முறை அல்ல.” அப்போதைக்கு அவர்கள் எவ்வளவை பயன்படுத்துவார்களோ அதை மட்டுமே அவர்கள் நிலத்திலிருந்து எடுப்பார்கள். களிமண்ணை விருதாவாக வைத்துவிட்டு அதைக் கெட்டியாகும்படி விட்டுவிட்டால் நிறைய வீணாகிவிடக்கூடும்.
அடுத்ததாக, வெள்ளை மணலை எடுப்பதற்காக வேறொரு குன்றின் பக்கமாக நாங்கள் சென்றோம். இது மிக எளிதாக இருந்தது—வெறுமனே ஓரிரண்டு வாளிகள் நிறைய மண்ணை வாரி எடுத்துக்கொண்டு வருவதுதான். பின்னர் நாங்கள் அவர்களுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
செய்முறை
ஒருசில நாட்களுக்கு அந்தக் களிமண், தண்ணீரில் ஊற வைக்கப்படுகிறது. பின்னர் அது மூன்று அல்லது நான்கு தடவைகள் அரித்தெடுக்கப்படுகிறது. அந்த மணலும் பலமுறைகள் அரித்தெடுக்கப்படுகிறது. அதற்குப் பின்னர், சரியான அடர்த்தி அளவில் அந்த இரண்டையும் சேர்த்து கலவை ஆக்குவார் ஜோ. இந்த இரண்டில் எதையுமே அளப்பது கிடையாது. அனுபவமே முக்கியம். வெப்பமூட்டப்படும்போது அந்த மண்பாண்டம் அதன் வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவ, குறிப்பிட்ட அளவு மணல் அந்தக் களிமண்ணில் இருக்க வேண்டும். மிக அதிகமாகவோ மிக குறைவாகவோ இருந்தால் அந்தக் கலத்தில் கீறல் விழும் அல்லது அது சில்லுகளாக உடைந்துவிடும். அனீட்டா முதல்முதலாக சொந்தமாக மண்பாண்டங்களைச் செய்யத் தொடங்கியபோது, களிமண்ணில் போதுமான மணல் இருக்கிறதா என்பதைத் தொட்டுப் பார்த்தே சொல்லும்படி அதைத் தன் அம்மாவிடம் கொண்டுசென்றதாகச் சொன்னார். விரைவில் தானாகவே அதை அறிந்துகொள்ள கற்றுக்கொண்டார்.
ஜோ, தன்னுடைய வெறுங்காலை வைத்து களிமண்ணையும் மணலையும் சரியான அடர்த்தி அளவுடையதாக உணரும் வரையாகக் குழைத்தார். இப்போது அவர்கள் மண்பாண்டங்களை உண்டாக்க தயாராக இருந்தனர். எந்த வார்ப்புகளும் பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு கலமும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் கையால் வடிவமைக்கப்பட்டதாகவும் இருந்தது. அனீட்டா தான் உண்டாக்கும் கலத்தை உலருவதற்காக அப்புறப்படுத்தி வைக்கும் முன்னர் அதை வடிவமைப்பதில் பல மணிநேரங்களைச் செலவிடுகிறார். அது பாதி உலர்ந்து, தோல் கெட்டி என்று சொல்லுமளவிற்கு கொஞ்சம் கெட்டியானதும், அதில் பல உருமாதிரிகள் அல்லது உருவரைகள் பொறிக்கப்படலாம் அல்லது கையால் செதுக்கப்படலாம். பின்னர் அது முழுமையாக உலரும்படி விடப்படுகிறது; ஈரப்பதத்தைப் பொறுத்து அது ஒரு வாரம் வரை எடுக்கக்கூடும். இப்போது அது உப்புத்தாள் போன்ற ஒன்றால் தேய்க்கப்படுவதற்குத் தயாராக உள்ளது. இது களிமண்ணை சொரசொரப்பற்றதாக்கி, மெருகூட்டப்படுவதற்கு தயாராக வைக்கிறது.
மெருகூட்டப்படுதல், வழவழப்பான கூழாங்கல் ஒன்றை வைத்து கையால் செய்யப்படுகிறது. அது மிகவும் சரியான அளவுக்குச் செய்யப்பட வேண்டும். மிக கூடுதலாகவோ மிக குறைவாகவோ மெருகூட்டப்பட்டால், சுடப்பட்ட பிறகு அதற்கு ஒரு பளபளப்பு இருக்காது. எவ்வித வண்ணமும் தீட்டப்படுவதில்லை. மெருகூட்டும் செய்முறையே அதற்கு அதன் அழகிய பளபளப்பைக் கொடுக்கிறது.
தனித்தன்மையுள்ள சுடுதல் செய்முறை
இப்போது கடைசி படி: மண்பாண்டத்தைச் சுடுதல். இதைச் செய்வதற்கு அவர்கள் தங்கள் கொல்லையில் ஒரு நெருப்பை மூட்டவேண்டும். இங்கு எந்தச் சூளையும் பயன்படுத்தப்படுவதில்லை! விறகுக்கட்டைகளை செங்குத்தாக குவித்து அடுக்கி, அந்த செங்குத்தான கட்டைகளுக்கு மேல் அதிகமான விறகையும், மண்பாண்டத்தை உள்ளே நுழைப்பதற்காக ஒரு திறப்பையும் வைத்து அடுப்பு போன்று அமைப்பதன் மூலம் ஒரு சூட்டடுப்பு உண்டாக்கப்படுகிறது. பின்னர் இது பற்றவைக்கப்படுகிறது. அந்த மண்பாண்டத்தை உள்ளே நுழைப்பதற்கேற்ற சரியான சூட்டில் நெருப்பு எப்போது இருக்கிறது என்று அவர்களுக்கு அனுபவத்தால் தெரியும்.
மண்பாண்டம் சுடப்படும்போது, அதன் இயல்பான நிறம் சிவப்பாக இருக்கும். பின்னர், சரியான அந்தக் கணத்தில், ஜோ அபூர்வமான ஒரு படியை எடுக்கிறார். அந்த நெருப்பின்மேல் குதிரை எருவைக் குவிக்கிறார்! இதுதான் அந்த மண்பாண்டத்தைக் கறுப்பாக்குகிறது. ஆக்ஸிஜன் குறைக்கப்படுகையில், களிமண்ணிலுள்ள சிவப்பு இரும்பு ஆக்ஸைட் வேதியல் முறையில் கறுப்பு இரும்பு ஆக்ஸைடாக மாறுகிறது. சந்தேகமின்றி, அந்தப் பகுதியில் யாராவது கறுப்பு மண்பாண்டங்களைச் சுடுகிறார்களென்றால் அந்த நாற்றத்தை வைத்தே சொல்லிவிடலாம்!
செய்துமுடிக்கப்பட்ட பொருள் பெருமைக்குரிய ஒன்றாகும்; மேலும் உலகெங்கிலும் பல மக்கள் அதன் அழகை ரசிக்கிறார்கள். ஆரம்பத்தில், அப்படிப்பட்ட மண்பாண்டங்கள், வீட்டில் தேவையான பல்வேறு பொருட்களை பத்திரப்படுத்தி வைத்தல் போன்ற நடைமுறையான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. உலகின் சில பாகங்களில், இது இன்னும் இந்த முறையிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எங்கள் வீட்டை அலங்கரிக்கவும், அமெரிக்க இந்திய பாரம்பரியங்கள் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஸான்டா க்ளாராவின் ப்யூயெப்லோவை நாங்கள் விஜயம் செய்தோம் என்பதை பெருமிதத்துடன் பறைசாற்றவும் இந்த அழகிய மண்பாண்டங்களில் ஒன்று பயன்படுத்தப்படும்.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 25-ன் படங்கள்]
செங்கல் அளவுள்ள களிமண் கட்டிகள் தோண்டி எடுக்கப்படுகின்றன
களிமண் கையால் வடிவமைக்கப் படுகிறது
பாரம்பரிய சூட்டடுப்பு ஒன்றில் மண்பாண்டம் சுடப்படுகிறது