உலகை கவனித்தல்
நிலநடுக்கங்கள் முன்னறிவிக்கப்பட முடியாதவை
நிலநடுக்கங்களை முன்னறிவிப்பது சாத்தியமாக இருக்க வேண்டும் என்று அநேக வருடங்களாக அறிவியலாளர்கள் நினைத்தனர். மாறிக்கொண்டு வருகிற நிலநீர்மட்ட அளவுகளையும் பூமியின் மேலோட்டிலுள்ள நுட்பமான அசைவுகளையும், கிணறுகளிலிருந்து வெளிவரும் ரடான் வாயுவையும் மற்ற அடையாள அறிகுறிகளையும் அவர்கள் கவனித்தனர். “நிலநடுக்கங்கள் இயல்பாகவே முன்னறிவிக்கப்பட முடியாதவை என்பதாக நாட்டின் பிரபல நிலநடுக்க ஆய்வாளர்கள் பலர் இப்போது எண்ணுகிறார்கள்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது. “ஒரு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு நாட்கள், மணிநேரங்கள் அல்லது நிமிடங்களுக்கு முன்பு மக்களை எச்சரிப்பதற்கான வழிமுறைகளைத் தேடுதல் வீணானதாகத் தோன்றுகிறது என்று அவர்கள் சொல்லுகின்றனர். . . . பூமியின் மேலோட்டில் பெயர்ச்சிகளை உட்படுத்துகிற முன்குறிப்பான அறிகுறிகளை சில நிலநடுக்கங்கள் உண்டுபண்ணக்கூடும் என்று சமீபத்திய ஆராய்ச்சி குறிப்பிட்டாலும், அந்த அறிகுறிகள் மிகச் சிறியவையாயும், காட்சிக்கு மங்கலானவையாயும் மறைவானவையாயும் இருப்பதால் அவற்றை திறம்பட்ட விதத்தில் கண்டுணருவது சாத்தியமற்றதாக இருக்கக்கூடும்.” நிலநடுக்க ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிதியை எடுத்து, நிலநடுக்கத்தால் விளையும் விபத்துக்களைக் குறைப்பதற்குப் பயன்படுத்தும்படி சில மக்கள் தற்போது அரசாங்கத்திடம் கோருகின்றனர். இருந்தாலும், நிலம் எப்படி நகர்கிறது என்றும், நிலநடுக்கங்களின்போது கட்டடங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்றும் அதிகமான அறிவு தேவைப்படுகிறது என்று அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.
குளிர்ந்த நீரில் மூழ்குதலைத் தப்பிப்பிழைத்தல்
கடுங்குளிரான நீருக்குள் விழுகிற மக்கள் ஏன் அவ்வளவு விரைவாக சாகிறார்கள் என்பதைக் குறித்து ஆராய்கிற அறிவியலாளர்கள், குளிர் அதிர்ச்சிக்கு உடலின் இயல்பான பிரதிபலிப்பு அதிவேகத்தில் சுவாசித்தலாக இருக்கிறதென கண்டுபிடித்திருக்கிறார்கள். “திடீரென்று மூச்சை உள்ளிழுப்பதைத் தொடர்ந்து தண்ணீர் உட்செல்லுதலும்—மூழ்குதலும் ஏற்படுகிறது,” என்று நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை சொல்லுகிறது. அதிவேகத்தில் சுவாசித்தல் தடுக்க முடியாததாக இருக்கிறது. ஆகவே தப்பிப்பிழைத்தலானது, பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் ஏற்படும் காற்றை விழுங்குவதற்கான பிரதிபலிப்பு அடங்கும்வரையாக, தலையை நீருக்கு மேலாக வைத்திருப்பதை சார்ந்திருக்கிறது.
விளையாட்டும் நீண்ட வாழ்நாளும்
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுக்காக $2,500 கோடியை, அல்லது ஒரு ஆளுக்கு $300-க்கும் அதிகமான தொகைக்கு சமமானதை ஜெர்மானியர்கள் செலவிடுகின்றனர். இந்தத் தொகை “ஆடைகளுக்காகவும், கருவிகளுக்காகவும், பயிற்சிக்காகவும், விளையாட்டு மைதானங்களின் வாடகைக்காகவும், க்ளப் கட்டணங்களுக்காகவும்” செலவிடப்படுகிறது என்று நாஸாயுய்ஷெ நாய்யெ ப்ரெஸெ அறிக்கை செய்கிறது. 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உடற்கட்டு பயிற்சிக்கூடங்களில் உடற்பயிற்சி செய்கின்றனர்; இன்னும் லட்சக்கணக்கானோர் மென்னோட்டத்திற்காகச் செல்கின்றனர். ஆகவே வீட்டிலேயே இருப்பவர்களைவிட விளையாட்டு ஆர்வமுள்ளவர்கள் நீண்ட நாட்கள் வாழவோ அல்லது மேம்பட்டு வாழவோ கூடுமா? அவ்வாறிருக்க அவசியமில்லை. ஃப்யுயெஸியோலோஜீ டெஸ் மென்ஷன் (மனித உடலியங்கியல்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “விளையாட்டுதான் மிகச் சிறந்த மருந்து என்று பொது விதியாகக் கூறுவது நிச்சயமாகவே சரியானதல்ல.” ஏன்? ஏனென்றால், வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் பெறப்பட்ட விளையாட்டு-தொடர்பான காயங்களுடன் ஒவ்வொரு வருடமும் 15 லட்சத்திற்கும் அதிகமான ஜெர்மானியர்கள் மருத்துவரிடம் செல்கிறார்கள். “விபத்துக்களால் அல்லது நாட்பட்ட விளையாட்டு காயங்களால் உடல்நல முன்னேற்றத்தில் ஊறு விளைவிக்கப்படாத வரைக்கும்” மட்டுமே பயிற்சியும் விளையாட்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதாக அந்தப் புத்தகம் ஆலோசனை அளிக்கிறது.
உண்மையைச் சொல்வதற்கான கடமையில் இல்லை
சமீபத்திய ஐ.மா. நீதிமன்ற வழக்கு விசாரணைகள் உலகெங்கும் பொது மக்கள் கவனத்தையும் பிரமித்துப்போன பார்வையாளர்களையும் ஈர்த்திருக்கின்றன. “வழக்குரைஞர்கள் உண்மையை எடுத்துக்கூற வேண்டிய கடமை உடையவர்களாய் இருக்கையில், எதிர்வாதம் செய்யும் வழக்குரைஞர்கள் வித்தியாசமான இலக்குகளுடன் செயல்படுகின்றனர்,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. “தன் கட்சிக்காரருக்கு ஒரு விடுதலையை வாங்கி தருதல், (விசாரணை குழுவிலுள்ள ஒருவர் மனதிலாவது நியாயமான சந்தேகத்தைத் தூண்டியெழுப்புவதன் மூலம்) விசாரணை குழுவை தீர்ப்பை எட்ட முடியாத ஒரு நிலைக்கு வர வைத்தல் அல்லது மிக அற்பமான குற்றச்சாட்டுகளின்பேரில் குற்றத்தீர்ப்பை வாங்கித் தருதலே எதிர்வாதம் செய்யும் வழக்குரைஞரின் வேலையாக இருக்கிறது.” “குற்றவுணர்வற்ற தீர்ப்பு சரியானதென்று உறுதிசெய்துகொள்ள அவர்கள் கடமைப்பட்டவர்களாக இல்லை,” என்பதாக நியூ யார்க் பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் சட்டப்பூர்வ நெறிமுறை ஆசிரியராகிய ஸ்டீஃபன் கில்லர்ஸ் கூறுகிறார். “வழக்கு விசாரணையானது உண்மைக்கான தேடல் என்பதாக நாங்கள் விசாரணை குழுவிடம் கூறுகிறோம், எதிர்வாதம் செய்யும் வழக்குரைஞர்கள் அவர்களை ஏமாற்ற கடமைப்பட்டவர்கள் என்பதை நாங்கள் அவர்களிடம் ஒருபோதும் சொல்வதில்லை.” “தன் கட்சிக்காரரை மாட்டிவைக்கக்கூடிய பகிரங்கமான உண்மைகளை எதிர்ப்படுகையில், விசாரணை குழு அந்த உண்மைகளைக் கவனியாமல் விட்டு, விடுதலைக்காகப் பரிந்துரைப்பதற்காக வழக்குரைஞர்கள் அடிக்கடி கதைகளை உருவாக்க வேண்டும்,” என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது. தங்கள் கட்சிக்காரர் குற்றமுள்ளவராய் இருக்கிறார் என்பதை வழக்குரைஞர்கள் அறிந்திருக்கிறபோதிலும், அவர் தன் வழக்கை விசாரணை குழுவுக்கு முன் கொண்டுவர வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கையில் என்ன நடக்கிறது? “அப்போது வழக்குரைஞர்கள், யெரீய ஹிப்பைப்போல, போலி மனத்தாழ்மை நிறைந்தவர்களாக நீதிமன்றத்திற்குள் சென்று, தங்கள் கட்சிக்காரரின் கதை 100 சதவீதம் பொய் என்பதை அறிந்திருக்கிறபோதிலும் அதன் உண்மைத்தன்மையில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதாக அறிவிப்பார்கள்,” என்று சொல்கிறார் கில்லர்ஸ்.
புதிய மதிப்பீடுகள்
ரஷ்ய இளைஞரும், பொதுவில் ரஷ்ய சமுதாயத்தினருமே மதிப்பீடுகளில் ஒரு நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். ரஷ்யாவிலுள்ள செய்ன்ட் பீட்டர்ஸ்பர்கில் செய்யப்பட்ட சமீபத்திய சுற்றாய்வு ஒன்று, இளைஞரின் மனநிலையானது “மனித இயல்புக்குப் பொதுவான மதிப்பீடுகளுக்கு—உடல்நலம், வாழ்க்கை, குடும்பம் மற்றும் அன்பு ஆகியவற்றிற்கும் அதோடு வெற்றி, தொழில், வசதி, பொருளாதார பாதுகாப்பு போன்ற சொந்த மதிப்பீடுகளுக்கும்” முக்கியத்துவம் தந்ததாகக் கண்டறிந்தது என்று ரஷ்ய செய்தித்தாள் ஸாங்க்ட்-பீட்டர்புர்க்ஸ்கியா வ்யேடமாஸ்டி அறிக்கை செய்கிறது. மற்ற முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பீடுகள், பெற்றோர், பணம், நலன், மகிழ்ச்சி, நட்பு, அறிவு ஆகியவற்றைச் சார்ந்த மதிப்பீடுகளாக இருந்தன. அக்கறைக்குரிய விதத்தில், ஒரு நல்ல பெயரைக் கொண்டிருப்பதும் தனிப்பட்ட சுதந்திரங்களை அனுபவிப்பதும் இளைஞரின் மனங்களில் கடைசி இரண்டு இடங்களையே பெறுகின்றன. கடைசி இடத்தைப் பெறுவது எது? நேர்மை. அந்த அறிக்கை இவ்வாறு முடிகிறது: “பொய் சொல்லுதல் அவ்வளவு பொதுவானதாக இருந்தால், வளர்ந்துவரும் இந்தத் தலைமுறையின் மனங்களில் [நேர்மை] மதிப்பற்றதாக இருக்கிறது.”
பலனற்ற பத்தாண்டு
பிரிட்டிஷ் சர்ச்சுகள் இந்தப் பத்தாண்டை “நற்செய்தி ஊழியத்தின் பத்தாண்டு” என அறிவித்தன. பாதிகாலம் கடந்துவிட்ட இப்போது, என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது? சார்பு பேச்சாளராகிய மைக்கல் க்ரீன், சர்ச் டைம்ஸ் என்பதில் கூறுகிறார்: “நாங்கள் அரிதாகவே, சாதாரண மக்கள் எழுப்புகிற கேள்விகளுக்கு ஏற்றாற்போல் நற்செய்தியை பொருந்தியமைக்க தொடங்கி இருக்கிறோம். சர்ச்சுகள், தங்கள் சுவர்களுக்கு அப்பால் இயங்கி, சமுதாயத்தின் மத்தியில் நற்செய்தியுடன் செல்கிறதற்கான அறிகுறியை நான் காணவேயில்லை. . . . சர்ச்சுக்கே செல்லாத நவீன இளைஞர்மீது நாம் அரிதாகவே எந்த பாதிப்பையும் ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறோம்; நாட்டிலுள்ள மொத்த இளைஞரில் சுமார் 86 சதவீதத்தினர் அப்படிப்பட்டவர்களே ஆவர்.” ஏன் இந்த வெற்றியைப் பெற இயலவில்லை? “வார்த்தையால் பிரசங்கிக்கப்படுவதற்கான அவசியமில்லாமல் நம் வாழ்கை-பாணிதானே அதைச் செய்துவிடும் என்று எங்களை நாங்களே நம்ப வைத்துக்கொள்கிறோம். நாங்கள் யாரையும் புண்படுத்திவிடக்கூடாதென்று அஞ்சுகிறோம்,” என்கிறார் க்ரீன்.
தைரியமான கொள்ளையடிப்புகள்
1994-ல், கனடாவில், 7 வங்கிகளில் 1 வங்கி திருடர்களால் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது—வேறு எந்த நாட்டில் சம்பவிப்பதைவிடவும் ஒரு கிளை அலுவலகம் அதிகப்படியான திடீர் தாக்குதலுக்கு உள்ளாவது இங்குதான். என்றபோதிலும், 13 வங்கி கிளை அலுவலகங்களில் 1 தாக்கப்படும் இத்தாலியில், திருடர்கள் மற்றெந்த இடத்திலும் இருப்பதைவிட அதிக தைரியமுள்ளவர்களாகத் தோன்றினார்கள். வெகு சில இத்தாலிய வங்கி கொள்ளைக்காரர்களே மாறுவேடம் போட்டுக்கொள்ள அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக்கூட தெரிந்துகொண்டனர். சிலர் வெறுமனே பணப் பொறுப்பாளர்களை வார்த்தைகளால் அச்சுறுத்தி, பணத்தைப் பெற்றுக்கொண்டனர். திருடர்கள் இருவர் ஹிப்னடிஸ முறையைக்கூட கடைப்பிடித்தனர் என்பதாக தி எக்கானமிஸ்ட் அறிக்கை செய்கிறது. இத்தாலியிலுள்ள வங்கி கொள்ளைக்காரர்கள் மிகவும் விடாப்பிடியாகவும் இருக்கிறார்கள்: அந்த வருடத்தின்போது 165 வங்கி கிளை அலுவலகங்கள் இருமுறையும் 27 கிளைகள் மூன்று முறையும் 9 கிளைகள் நான்கு முறையும் திடீர் தாக்குதலுக்கு உள்ளாயின. 1994-ல் இவ்வாறு கொள்ளையடித்து எடுக்கப்பட்ட மொத்த தொகையின் சராசரி? ஆறு கோடி பத்து லட்சம் லீரே ($37,803 ஐ.மா.), 1987-லிருந்து பார்த்தால் மிகக் குறைவான தொகை இது.
முதலை செய்தி
சமீபத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பண்டைய முதலை ஒன்றின் புதைபடிவமாக்கப்பட்ட தாடைகள், முதலை குடும்பத்தில் “முதலாவதாக அறியப்பட்ட தாவரவுண்ணியைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடும்” என்பதாக இயற்கை (ஆங்கிலம்) பத்திரிகை அறிக்கை செய்கிறது. இன்று மனிதர்களால் அவ்வளவு அஞ்சப்படும் நவீன முதலையின் நீண்ட கூரிய பற்களுக்குப் பதிலாக, இந்தப் பண்டைய மூதாதை, புல்லை மெல்லுவதற்கு அதிக பொருத்தமானதென்று சொல்லப்பட்ட தட்டையான பற்களைக் கொண்டிருந்தது. இந்தப் பிராணி—சீனாவில் யாங்ஸி ஆற்றின் தெற்குக் கரையருகே உள்ள ஒரு குன்றில் சீனாவின் ஹுபே மாகாணத்தில் சீனாவையும் கனடாவையும் சேர்ந்த ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இது—நிலவாழ் பிராணியாக இருந்ததென்றும் நில நீர்வாழ் பிராணியாக இருக்கவில்லை என்றுமே அறிகுறிகள் காண்பிக்கின்றன. அதன் அளவு? அது சுமார் மூன்று அடி நீளமுடையதாக இருந்தது.
அதிகரித்துவரும் மன அழுத்தம்
மருத்துவ கவனிப்பை நாடுகிற மக்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோர் பல்வேறு வகை மன உளைச்சல்களால் துன்புற்றதாக பிரேஸிலிலுள்ள ரியோடி ஜனீரோவில் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு காண்பித்தது என்று வேஜா அறிக்கை செய்கிறது. உலக சுகாதார அமைப்பின் [World Health Organization (WHO)] மனநல இயக்குநர் டாக்டர் ஜார்ஜ ஆல்பர்டூ காஸ்ட இ ஸில்வ என்பவரிடம் அந்தப் பத்திரிகை இவ்வாறு கேட்டது: “இந்த எண்ணிக்கைகளை விளக்குவது எப்படி? உலகம் மோசமாகிவிட்டதா அல்லது மக்கள் உளம்சார்ந்த வகையில் பலவீனராகிவிட்டனரா?” அவருடைய பதில்: “மிகவும் விரைவான மாற்றங்கள் ஏற்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்; அவை முடிவில், மனித வரலாற்றிலேயே முன்னொருபோதும் இல்லாத கவலை மற்றும் மன அழுத்த நிலைகளுக்கு கொண்டுபோய்விடுகின்றன.” மன அழுத்தத்திற்கான பொதுவான ஒரு காரணம், ரியோடி ஜனீரோவில் நிலவியிருக்கும் வன்முறையே என்று அவர் வலியுறுத்துகிறார். இது பெரும்பாலும் மன அதிர்ச்சிக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்திற்கு வழிநடத்துகிறது; இந்த அழுத்தம் “ஏதோவொரு விதத்தில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்திருக்கும் மக்களை பாதிக்கிறது. பகல் பொழுதில் எல்லா காரியங்களைக் குறித்தும் அப்பேர்ப்பட்டவர்கள் பாதுகாப்பற்ற உணர்ச்சியை வெளிக்காட்டுகிறார்கள். இரவில், அவர்களின் வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கிய அந்த சம்பவம் மீண்டும் வாழ்ந்து காட்டப்படுகிற கொடுங்கனவுகளைக் கொண்டிருக்கிறார்கள்,” என்று அவர் விளக்குகிறார்.
உடல்நல ஏற்றத்தாழ்வு
ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கிடையில் உடல்நல ஏற்றத்தாழ்வு அகன்றுகொண்டே செல்கிறது. வளர்முக நாடுகளில் வாழ்கிறவர்கள் மற்றும் அங்கு பிறந்தவர்களின் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு 76 வருடங்கள்—ஒப்பிடுகையில், குறைந்தளவு வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலுள்ளவர்களுக்கு 54 வருடங்கள்—என்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கணக்கிடுகிறது. 1950-ல், ஏழை நாடுகளில் சிசு இறப்பு, பணக்கார நாடுகளில் இருப்பதைவிட மூன்று மடங்கு உயர்ந்தளவானதாக இருந்தது; தற்போது அது 15 மடங்கு அதிகமானதாக இருக்கிறது. பிந்திய 1980-களில், ஏழை நாடுகளில் மகப்பேறு சிக்கல்களின் காரணமான இறப்பு விகிதம் பணக்கார நாட்டில் இருந்ததைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால், ஏழை நாடுகளில் வாழும் மக்களில் பாதிக்கும் குறைவானோரே சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளைப் பெறும் நிலையில் இருக்கின்றனர் என்ற உண்மையாகும் என்பதாக WHO குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகளின்படி, ‘குறைந்தபட்ச வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின்’ எண்ணிக்கை 1975-ல் 27 என்பதிலிருந்து 1995-ல் 48 என்பதாக அதிகரித்திருக்கிறது. உலகெங்கிலும் 130 கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள்; மேலும் அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.