எமது வாசகரிடமிருந்து
இந்தியப் பெண்கள் “இந்தியப் பெண்கள்—21-ம் நூற்றாண்டிற்கு செல்லுதல்” (ஜூலை 22, 1995) என்ற கட்டுரை எனக்குப் பிடித்தது. இந்தியா என்னுடையதிலிருந்து மிக வித்தியாசப்பட்ட பண்பாட்டைக் கொண்டிருப்பதால், அது எப்போதுமே என்னைக் கவர்ந்து வந்திருக்கிறது. இந்தியப் பெண்களுக்கு உண்மையான விடுதலை கடவுளுடைய ராஜ்யத்தில்தான் வரும் என்பதை உங்கள் கட்டுரை காண்பித்தது. எல்லா பெண்களும், தாங்கள் மதிக்கிற கணவர்களால் உண்மையிலேயே அன்புசெய்யப்பட்டு, நெஞ்சார நேசிக்கப்படும் காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
டபிள்யூ. எஸ்., பிரிட்டிஷ் கொலம்பியா
குடும்பத்தால் நிராகரிக்கப்படுதல் எனக்கு 14 வயது; “என்னை உண்மையில் நேசித்த குடும்பம்” (ஜூலை 22, 1995) என்ற கட்டுரைக்கு நன்றி தெரிவிக்கும்படி இதை எழுதுகிறேன். அது நிஜமாக என் விசுவாசத்தைப் பலப்படுத்தியது. எங்குமுள்ள இளைஞர்களுக்கு யூடோம் யூடோ ஒரு நல்ல முன்மாதிரி. மிக சிறிய வயதிலேயே சத்தியத்திற்கான நிலைநிற்கை எடுக்கலாம் என்று அவன் உண்மையிலேயே காண்பித்தான்.
ஏ. எம்., ஐக்கிய மாகாணங்கள்
யூடோமைப் போலவே, நான் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க தொடங்கியபின் எதிர்ப்பை எதிர்ப்பட்டேன். நானும் வீட்டை விட்டு வெளியேறும்படி சொல்லப்பட்டேன். சொல்லாலும் உடல்ரீதியாலும் அதிகப்படியான துன்புறுத்தலை அனுபவித்தபின், நான் வெளியேறினேன். ஒரு மூப்பராலும் அவருடைய மனைவியாலும் நான் தயவாக கவனித்துக்கொள்ளப்பட்டேன். உங்கள் கட்டுரை உண்மையிலேயே எனக்குத் தெம்பளித்தது. இந்தத் தனித்தன்மை வாய்ந்த உலகளாவிய குடும்பத்தின் பாகமாக இருப்பதில் என்னே ஓர் சந்தோஷம்!
எல். ஜே., ஐக்கிய மாகாணங்கள்
கடவுளின் நண்பனாகுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . உண்மையில் என்னால் கடவுளின் நண்பனாயிருக்க முடியுமா?” (ஜூலை 22, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. அது என்னைக் கண்ணீர் விடச்செய்யும்படி நெகிழ்வித்தது. எனக்கு 13 வயதாகிறது; நான் மிக மோசமான காரியங்கள் சிலவற்றை செய்திருக்கிறேன். மற்றவர்கள் என்னை உற்சாகப்படுத்த முயன்றிருக்கிறார்கள், ஆனால் யெகோவாவிடம் ஜெபிப்பதை நான் இன்னும் கடினமாகக் கண்டேன். என்னுடைய அநேக தவறுகளின் காரணமாக அவர் இனிமேலும் என்னை நேசிக்கவில்லை என்று நான் நினைத்தேன். கடவுள் மன்னிக்கிறார் என்றும் நான் அவரிடம் ஜெபிக்கலாம் என்றும் இந்தக் கட்டுரை எனக்குக் காண்பித்தது.
ஜே. டி. ஜெர்மனி
அந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட டாரஸைப் போல, நானும் கடவுளின் சிநேகிதியாக இருக்க தகுதியற்றவளாக உணர்ந்தேன். இந்த உதவியை எனக்கு அளித்ததற்காக நான் யெகோவாவுக்கு நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். என்னுடைய தவறுகளுக்காக நான் மனம் வருந்தினால், அவர் என்னை மன்னிக்கவும் எனக்கு நண்பராயிருக்கவும் மனமுள்ளவராய் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது. இளைஞருக்கான இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிப்பதை நீங்கள் ஒருபோதும் நிறுத்திவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
பி. எம். ஏ., ஸ்பெய்ன்
மாதவிடாய் முடிவுறும் பருவம் பெண்களுக்குரிய நோய்கள் சம்பந்தமான மருந்துகளை முக்கியமாகக் கையாளும் மருந்து கம்பெனி ஒன்றை நாங்கள் நிர்வகிக்கிறோம். மாதவிடாய் முடிவுறும் பருவம் சம்பந்தமாக “தெளிவான புரிந்துகொள்ளுதலை அடைதல்” (பிப்ரவரி 22, 1995) என்ற தலைப்புடைய கட்டுரையை மிகவும் சுவாரஸ்யமானதாகக் கண்டோம், மேலும் இந்தப் பொருளைக் கையாண்டதற்காக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். என்றாலும், “எஸ்டரஜன் ஈடுசெய்யும் சிகிச்சை முறையைப் பற்றியென்ன?” என்ற பெட்டி, “ஹார்மோன் ஈடுசெய்யும் சிகிச்சை முறையில் ப்ரோஜெஸ்டரோனையும் உடன் சேர்ப்பது . . . இருதய நோய் சம்பந்தமான எஸ்டரஜனின் நன்மையான விளைவுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று குறிப்பிடுகிறது. இது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை, முக்கியமாக இயல்பான ப்ரோஜெஸ்டின்களைக் குறித்ததில் அவ்வாறில்லை.
டாக்டர் டி. டபிள்யூ. மற்றும் ஜே. கே., ஜெர்மனி
காலத்தோடு முன்னேறிய புதிய தகவலுக்காக உங்களுக்கு நன்றி. ப்ரோஜெஸ்டின்கள், HDL அளவுகளை அல்லது “பயனுள்ள” கொலெஸ்ட்ராலைக் குறைக்கக்கூடும் என்றும் அதன் காரணமாக இருதய நோயின் அபாயம் அதிகரிக்கிறது என்றும் பழைய தகவல்மூலங்கள் குறிப்பிடுகிறபோதிலும், அவ்வாறல்ல என்று அதிநவீன ஆய்வு குறிப்பிடுகிறது. “JAMA”-வின் ஜனவரி 18, 1995 வெளியீட்டில் அறிக்கை செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று, “எஸ்டரஜன் தனிப்பட்ட வகையிலோ அல்லது ப்ரோஜெஸ்டின்களுடன் சேர்ந்தோ [“பயனுள்ள” கொலெஸ்ட்ராலின் அளவுகளை] முன்னேற்றுவிக்கிறது,” என்று கூறுகிறது. ஹார்மோன் சிகிச்சைகளின் நீண்டகால விளைவுகள் அனைத்தும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுவதற்குள் அதிக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.—ED.
பரிணாமம் “உலகை மலைக்கவைத்த கொள்கை—அது விட்டுச்சென்ற சொத்து என்ன?” (ஆகஸ்ட் 8, 1995) தொடர் கட்டுரைகளை இப்போதுதான் வாசித்து முடித்தேன். என்னுடைய பிரதிலிப்பு? மிகவும் ஈர்க்கப்பட்டேன். திணறடிக்கப்பட்டேன்! அந்தக் கட்டுரை அவ்வளவு பல்வகைமையுடனும் விளக்கமானதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேற்கோளும் பரந்த ஆய்வு செய்யப்பட்டிருந்ததை வெளிப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனுடைய மனதில் பரிணாம போதகத்தின் உண்மையான பாதிப்பைக் குறித்ததில் அறிவொளியூட்டுவதாக இருந்தது. அதைப் பற்றி எனக்கு தெரியாமல் இருந்தது! தரமான வாசிப்புப் பொருளுக்கு உலகில் பஞ்சம் இருக்கிறது, ஆனால் நீங்கள் அந்த தேவையைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள்.
ஆர். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்