ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ்—எந்தளவுக்கு கிறிஸ்தவமண்டலம் பொறுப்புள்ளது?
ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, “கிறிஸ்தவமண்டலம்” என்ற சொல், பைபிள் குறிப்பிடும் கிறிஸ்தவத்துக்கு முரண்பட்டுள்ள, ஆனால் உரிமைபாராட்டப்படும் கிறிஸ்தவத்தைக் குறிக்கிறது.
கிறிஸ்தவமண்டலம்
“கிறிஸ்தவ விசுவாசத்தைப் பின்பற்றுவதாக உரிமைபாராட்டும் குடிமக்களைப் பெரும்பான்மையோராகக் கொண்டிருக்கும் உலகின் பாகங்கள்.” —உவெப்ஸ்டர்ஸ் நியூ உவர்ல்ட் டிக்ஷ்னரி.
எய்ட்ஸ்
“எதிர்ப்பாற்றல் அமைப்பின் அணுக்களில் ஓர் எதிர்நச்சுக்கிருமியால் ஏற்படுத்தப்படும் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய ஈட்டு எதிர்ப்பாற்றல் குறைந்த நிலை.”—உவெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலெஜியேட் டிக்ஷ்னரி.
எய்ட்ஸ் ஓர் உலகளாவிய கொள்ளைநோய். கணக்கிடப்பட்ட 1.7 கோடி மக்கள், எய்ட்ஸ்-ஐத் தோற்றுவிக்கிற வைரஸாகிய HIV-யால் ஏற்கெனவே நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதுவும் வேகமாகப் பரவிவருகிறது.
இக்கொள்ளைநோயோடு தொடர்புடைய மருத்துவரீதியான, அரசியல்ரீதியான, உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கையில், அதில் உட்பட்டிருக்கும் மத சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறதில்லை. இப்பொழுது, எய்ட்ஸ் பரவிவருவதோடு மதத்தை சம்பந்தப்படுத்திப் பேசுவதானது, மிகப் பழங்காலத்துக் கதையைத் திரும்பப் பேசுவதுபோல் சில வாசகர்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரவிவரும் சூழ்நிலையை நீங்கள் கவனிக்கையில், அது அர்த்தமற்றதாய்த் தோன்றுவதில்லை.
ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் குறிப்பாக வேதனைதரும் வகையில் பாதித்துள்ளது.a உலகம் முழுவதிலும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 67 சதவீதத்தினரை இக்கண்டம் கொண்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர். சாத் என்ற நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், மொத்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. உலக வங்கியால் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவின் நகர்ப்புற மையத்தலங்கள் பலவற்றில் ஏற்படும் மரணங்களுக்கு எய்ட்ஸ் மிகவும் பொதுவான காரணமாய் ஆகிவிட்டது.
மதம்—அது பங்கு வகித்ததா?
நிச்சயமாகவே, கிறிஸ்தவம்—இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்டிருந்த அந்த மதம்—இப்பேராபத்துக்குக் காரணமாயிருப்பதாய் எண்ணமுடியாது. என்றபோதிலும், கீழே காட்டப்பட்டிருப்பதுபோல், “கிறிஸ்தவமண்டலம்” என்ற வார்த்தை கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டும் மக்கள் வாழும் அந்நாடுகளை உள்ளடக்குகிறது. மேலும் கிறிஸ்தவமண்டலம் தெளிவாய் சுட்டிக்காட்டப்படுகிறது. சர்ச்சுகள் இந்நோயை உருவாக்கினதாகவோ, எய்ட்ஸ் வைரஸை நேரடியாக பரப்பினதாகவோ சொல்ல முடியாது. ஆனால் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவியிருப்பது முதன்மையாக, அங்கிருந்துவரும் முறையற்ற ஈரினப்புணர்ச்சி நடவடிக்கையால்தான்.b ஆகவே, எய்ட்ஸ் ஓர் ஒழுக்க பிரச்சினையாக அழைக்கப்படலாம்; அது அவ்விதம் இருப்பதால், தொந்தரவுக்குள்ளாகும் மத சம்பந்தமான சில கேள்விகளை அது எழுப்புகிறது. ஆப்பிரிக்க “கிறிஸ்தவம்” மேற்கத்திய நாடுகளிலிருந்து நேரடியாக புகுத்தப்பட்ட ஒரு மதம்தான். தங்களுக்கென்றே உள்ள குறிப்பிடப்பட்ட விதமான ஒரு மதத்திற்கு ஆப்பிரிக்கர்கள் மாற்றப்படும் பொறுப்பை சர்ச் தலைவர்கள் தங்கள்மீது எடுத்துக்கொண்டனர்; அவ்வாறு செய்கையில், பாரம்பரிய ஆப்பிரிக்க வாழ்க்கைமுறைகளைவிட மேலான ஒரு வாழ்க்கைமுறையை அது அளித்ததாய் உரிமைபாராட்டினர். அதன் புதிய ஆதரவாளர்களின் ஒழுக்கநெறியை கிறிஸ்தவமண்டலத்தின் செல்வாக்கு உண்மையிலேயே மேம்படுத்தியதா? சரியாய் அதற்கு நேர்மாறானது சம்பவித்திருப்பதாக இந்த எய்ட்ஸ் இக்கட்டான நிலை தெளிவாக மெய்ப்பித்துக் காட்டுகிறது.
உதாரணமாக, சாத் நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நான்கு முக்கிய நகரங்களில், மூன்று நகரங்கள் ஒரு பரந்த “கிறிஸ்தவ” ஜனத்தொகையை உடையன. அந்த மற்றொரு நகரம் முஸ்லீம்களை அதிகமாய் உடையது. இருந்தபோதிலும், இந்த மூன்று “கிறிஸ்தவ” நகரங்களில்தான் இப்போது இந்த வைரஸ் தீவிரிக்கிறது! அந்தக் கண்டம் முழுவதிலும் நிலைமை அவ்விதமாகவே உள்ளது. முஸ்லீம்களை அதிகளவு கொண்டிருக்கும் நாடுகளைக்கொண்ட வட ஆப்பிரிக்காவைவிட, கிறிஸ்தவ நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளைக் கொண்ட மத்திப மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இந்நோய் அதிகளவு தொற்றியுள்ளது.
ஆப்பிரிக்கா “கிறிஸ்தவம்” ஆனது எப்படி?
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாய் உரிமைபாராட்டிக்கொள்ளும் மக்களிடையே இந்த வைரஸ் இவ்வளவு வேகமாய் பரவியிருப்பதற்குக் காரணமென்ன? நிஜத்தில், ஆப்பிரிக்கர்களில் பலர் தங்களைக் கிறிஸ்தவர்களாக அழைத்துக்கொண்டாலும், பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் ஒழுக்க தராதரத்தை வெகு சிலரே கடைப்பிடிக்கின்றனர். கிறிஸ்தவமண்டலத்தின் மிஷனரிகள் ஆப்பிரிக்க மக்களை ‘மாற்றின’ விதத்தின் ஒரு நேரடி விளைவாய் இது இருப்பதாகத் தோன்றுகிறது.
18-வது மற்றும் 19-வது நூற்றாண்டுகளில், கிறிஸ்தவமண்டலத்தின் பாரம்பரிய நம்பிக்கைகள் தாக்குதலுக்கு உட்பட்டன. பிறர் கண்களுக்கு பைபிள் வெறும் ஒரு பண்டைய இலக்கியப் படைப்பு என்றே தோன்றும்படி அதன் மதிப்பை குறைப்பதாய், நுட்பப்பிழை காண்பது பிரபலமானது. பரிணாமக் கோட்பாடும்கூட மதகுருமார்களின் மத்தியில் சம்மதத்தைப் பெற ஆரம்பித்தது. சந்தேக விதைகள் விதைக்கப்பட்டன. பரிசுத்த வேதாகமங்களில் விசுவாசம் வைப்பது கேள்விக்குரியதானது. இச்சூழலில் ஆப்பிரிக்கர்களை ‘மாற்றுவதற்கு’ கிறிஸ்தவமண்டலம் எடுத்த முயற்சிகள் தீர்வாகவே மதசம்பந்தமல்லாதவை என்பது ஆச்சரியமூட்டுவதாயில்லை. சர்ச் மிஷனரிகள் சமூக சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர், அதாவது பைபிளின் ஒழுக்க தராதரங்களோடு ஒத்திணங்கிச் செல்ல கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக, மனிதாபிமான செயல்களின்மீது மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாய் இருந்தனர். ஒருவேளை தங்களுக்குத் தெரியாமலேயே, வழக்கத்தில் இருக்கும் ஒழுக்க நெறிகளைத் தரக்குறைவாக்குவதற்கு மிஷனரிகள் உண்மையிலேயே உதவினர்.
உதாரணமாக, ஆப்பிரிக்க நாகரிகங்கள் பலவற்றில் பலதார மணம் ஒரு நெடுங்காலப் பழக்கமாகவே இருந்துவந்திருந்தது. என்றபோதிலும், முறையற்ற இன ஒழுக்கக்கேடு அரிதாய் இருந்தது, ஏனெனில் பெரும்பான்மையான இனத்தவர்கள் விபசாரத்தைக் குறித்ததில் கடுமையான சட்டங்களைக் கொண்டிருந்தனர். சர்ச் மிஷனரிகள் வந்துசேர்ந்ததற்கு முன்பெல்லாம், “விபசாரம் கெட்ட சகுனத்தைக் கொண்டுவந்த ஒன்றாக உணரப்பட்டது” என்பதாக சாத்தில் மிகவும் பிரபலமான, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவரான ஜோஸப் டார்னாஸ் விழித்தெழு! நிருபரிடம் கூறினார். அதன் விளைவாக, “சமுதாயத்தை அபாயத்திற்குள்ளாக்கினதற்காகக் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்—பொதுவாக மரண தண்டனை அளிக்கப்பட்டனர்.” மூடநம்பிக்கை? ஆம், ஆனால் அத்தகைய நம்பிக்கைகள் முறைகேடான பாலுறவைக் குறைத்தன.
அந்தச் சமயத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் வந்துசேர்ந்தனர். அவர்கள் பலதார மணத்துக்கு எதிராக பிரசங்கித்தனர், ஆனால் ஒழுக்கநெறி சம்பந்தமாக பைபிளின் தராதரத்தை செயற்படுத்துவதில் அதிகத்தைச் செய்யவில்லை. மனந்திரும்பாத வேசித்தனக்காரர்களும் விபசாரக்காரர்களும் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பைபிள் கூறுகிறபோதிலும், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக அரிதாகவே கண்டிப்பு நடவடிக்கை எடுக்கின்றன. (1 கொரிந்தியர் 5:11-13) இந்நாள் வரையில், புகழ்வாய்ந்த ஆப்பிரிக்க அரசியல்வாதிகள் பலர் அவர்களது ஒழுக்கக்கேடான செயல்களுக்குப் பேர்போனவர்களாய் இருக்கின்றனர், ஆனாலும் சர்ச் அங்கத்தினர்களாக நல்ல நிலைநிற்கையில் உள்ளனர். ஆப்பிரிக்காவில் பெயர்க் கிறிஸ்தவர்களிடையே திருமணத்தில் உண்மைத்தன்மை அரிதாக உள்ளது.
மேலுமாக, மதகுருமார்தாமே வகிக்கும் கெட்ட முன்மாதிரியும் உள்ளது. குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப் பண்பாட்டில், திருமணம் செய்து எண்ணற்ற குழந்தைகளைப் பெறுவது இயல்பானது. ஒருவேளை அதன்காரணமாகத்தான் ஆச்சரியப்படும் எண்ணிக்கையான கத்தோலிக்க குருக்கள் தங்களது கற்பு மற்றும் மணத்துறவு சம்பந்தப்பட்ட பிரமாணங்களை அவமதிப்பதை நியாயமாகக் கருதுகின்றனர்போலும். மே 3, 1980 தேதியிட்ட தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்தது: “குறைவாய்ப் பண்படுத்தப்பட்ட நாட்டுப்புறங்கள் பலவற்றில், . . . குருக்களும் பிஷப்புகளும் பலதார மணம் புரிந்தவர்களாய் உள்ளனர்.”
இயல்பாகவே, அத்தகைய திருமணங்கள் முறைப்படி செய்யப்படுபவையல்ல, மேலும் அந்த “மனைவிகள்” நிஜத்தில், வெறும் வைப்பாட்டிகளாகவே உள்ளனர். அத்தகைய தவறான நடத்தையை, பொருட்படுத்தாமல் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. டைம்ஸ் பத்திரிகையின்படி, “ஆப்பிரிக்க குரு, இயேசு கிறிஸ்துவின் ஊழியனாய் இருப்பதைக் காட்டிலும் அதிகாரத்தின் ஓர் உருவாக, அதிகாரத்தின் சின்னமாயிருக்கிறார்” என்று “புகழ்வாய்ந்த ஒரு கத்தோலிக்க குருவானவர்” ஒப்புக்கொள்ளுகிறார். இந்த ‘அதிகார உருவங்களிடமிருந்து’ கிடைக்கப்பெறும் செய்தியானது, “நான் சொல்வதைச் செய் ஆனால் நான் செய்வதன்படி செய்யாதே” என்று கூறுவதுபோல் தோன்றுகிறது.
மேற்கத்திய பொழுதுபோக்கு பரவுதல்
சமீப ஆண்டுகளில் ஆப்பிரிக்காவினுள் மடைதிறந்த வெள்ளம்போல் தங்குதடையின்றி நுழைந்திருக்கும் ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்கும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடப்பட முடியாததாகும். அத்தகைய பொழுதுபோக்கை அளிக்கும், மேற்பார்வை செய்யப்படாமல் இருக்கும் பொது வீடியோ அறைகள் சாத்தில் எங்குப்பார்த்தாலும்—தனி வீடுகளில், வாகன அறைகளில், மிகப் பெரும்பாலும், இருட்டினபிறகு கட்டடங்களின் முற்றங்களில்—முளைத்திருக்கின்றன. இவ்வாறு காட்டப்படும் காட்சிகள் அதிக செலவுள்ளதாயிராததாய், 25 பிரான்ஸ்கள் (5 சென்ஸ், ஐ.மா.) அளவு கொஞ்சமாகவே உள்ளன. சிறு பிள்ளைகள் செல்கிறார்கள். காட்சிப்படுத்தப்படும் இந்த விஷயம் எங்கிருந்து கிடைக்கிறது? அவற்றுள் பெரும்பாலானவை ஐக்கிய மாகாணங்களிலிருந்து கிடைக்கிறது—பெருவாரியான கிறிஸ்தவர்களைக் கொண்டிருக்கும் நாடாக உரிமைபாராட்டும் ஒரு நாடு!
ஆனால் இந்த மேற்கத்திய பண்பாட்டின் பரவுதல் பார்வையாளர்களின்மீது ஏதாகிலும் தாக்கத்தைக் கொண்டிருக்கிறதா? மத்திப ஆப்பிரிக்காவில் 14 ஆண்டுகள் ஊழிய அனுபவம் கொண்டிருப்பவரான யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்த ஒரு மிஷனரி கூறுகிறார்: “உள்ளூர் மக்கள் பொதுவாக வீடியோ கேஸட்டுகளைக் காண்பதன் மூலம் மேற்கத்திய உலகோடு தொடர்பு கொள்ளுவதைத் தவிர வேறு வகையில் மிகக் கொஞ்சமே தொடர்பு கொண்டிருக்கின்றனர். இப்படங்களில் தாங்கள் காணும் மேலை நாட்டவரைப் போன்றே தாங்கள் ஆகவேண்டும் என்று விரும்புகின்றனர். இதை நிரூபிப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஆய்வுகள் எதையும் நான் கண்டறியவில்லை, ஆனால் இங்குள்ள மிகப் பலருக்கு, அத்தகைய பொழுதுபோக்கு இன ஒழுக்கக்கேட்டை உற்சாகப்படுத்துகிறது என்று தெளிவாகத் தெரியும்.”
ஒழுக்கக்கேட்டால் பரவும் சாவுக்கேதுவான நோயின் பரவலைத் தடுப்பதற்கென்று உடல்நல வல்லுநர்கள் நம்பிக்கையிழந்த விதத்தில் முயலுகையில், கிறிஸ்தவ நாடுகள் எனப்படுபவை ஒழுக்கக்கேடான, அதிக-அபாய நடத்தையை மேம்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வது எத்தகைய முரண் நகைச்சுவை அங்கதமாயிருக்கிறது! வீட்டிலோ பள்ளியிலோ, சர்ச்சுகள் இப்பேராபத்தை மேற்கொள்வதைச் சரிபார்ப்பதில் அதிகத்தைச் செய்யாதிருக்கையில், சாத், காமரூன் போன்ற ஆப்பிரிக்க அரசாங்கங்கள் இழிபொருள் ஓவியப்பொருள்கள் தங்கள் நாடுகளில் நுழைவதைத் தடுக்க அல்லது மட்டுப்படுத்தவாவது செய்திருக்கின்றன. ஆனால் அவற்றின் முயற்சிகள் அடிக்கடி வெற்றிபெறாதவையாகவே நிரூபித்திருக்கின்றன.
இவையெல்லாவற்றின் முடிவான விளைவானது, ஆப்பிரிக்க “கிறிஸ்தவர்கள்” மத்தியில் ஒரு விரிந்து பரவிய ஒழுக்கத்தின் வீழ்ச்சியாகவே இருந்திருக்கிறது. மோசமான பொருளாதார நிலைகளும் ஒரு தீங்கான தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. வேலைவாய்ப்புகள் குறைவாய் இருப்பதால், வேலைதேடி ஆண்கள் தங்கள் குடும்பத்தைவிட்டு ஒரே சமயத்தில் பல மாதங்கள் பிரிந்திருக்கும்படி வற்புறுத்தப்படுகின்றனர். அத்தகைய ஆண்கள் உள்ளூர் வேசிகளின் நேரடியான குறியிலக்காய் இருக்கின்றனர். ஆனாலும், அந்த வேசிகள்தாமே பொதுவாக ஏழ்மையின் பலியாட்களாய் இருக்கின்றனர். பெற்றோர்கள் வற்புறுத்தும் ஓர் அளவுகடந்த மணப்பெண்-விலையும்கூட ஒரு காரணியாகும். அநேக ஆண்கள் திருமணம் செய்கிறதில்லை, ஏனெனில் செலுத்தப்படத் தேவையான மணப்பெண்-விலையை அவர்களால் ஈட்ட முடிவதில்லை. ஆகவே சிலர் கள்ளக்காதல் விவகாரங்களைக் கொண்ட ஒரு வாழ்க்கை வாழும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். அத்தகைய ஓர் ஒழுக்க மற்றும் பொருளாதாரச் சூழலில், எய்ட்ஸ் அதிவேகமாகப் பரவியிருக்கிறது.
இந்த இக்கட்டான நிலைக்குத் தீர்வு
தெளிவாகவே, ஆப்பிரிக்காவின் எய்ட்ஸ் பேராபத்திற்கான எல்லா குற்றச்சாட்டையும் கிறிஸ்தவமண்டலம் ஏற்கவேண்டியதாய் இல்லை. ஆனால் பெரும்பாலான குற்றச்சாட்டை அது ஏற்கிறது என்பது வேதனைதரும் வகையில் தெளிவாயுள்ளது. “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள்” என்று இயேசு அழைத்தவர்களில் ஒருவராக விரும்பும் ஆட்களுக்கு இது அதிக அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது.—யோவான் 4:23.
குற்றம் ஒருபுறமிருக்க, இந்த எய்ட்ஸ் கொள்ளைநோயை நிறுத்துவதற்கு என்ன செய்யப்படலாம்? ஆப்பிரிக்க அரசாங்கங்கள் எய்ட்ஸ்-தடுப்பு ஏற்பாடுகளை ஏற்று நடத்துவனவாய், கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன. ஆனால் நைஜீரியாவைச் சேர்ந்த உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி இந்த வெளிப்படையான ஒப்புதலைத் தெரிவித்தார்: “தனிநபர் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைபாணியைப் பின்பற்ற வேண்டும் . . . , அதே சமயத்தில் குடும்பமானது . . . முறைகேடான பாலுறவைத் தவிர்க்க வேண்டும்.”
எய்ட்ஸ்-ஐப் பற்றி மக்கள் அறிந்திருப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே, முறைகேடான பாலுறவை பைபிள் கண்டனம்செய்து, கற்பு, தன்னடக்கம், திருமணத்தில் உண்மைத்தன்மை போன்றவற்றை ஆதரித்திருக்கிறது. (நீதிமொழிகள் 5:18-20; 1 கொரிந்தியர் 6:18) இந்த நியமங்களைப் பின்பற்றுவதானது எய்ட்ஸிலிருந்தும் பாலுறவால் கடத்தப்படும் பிற நோய்களிலிருந்தும் கணிசமான அளவு பாதுகாப்பை அளிக்கிறது என்பதற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் நேரடியான நிரூபணத்தை அளிக்க முடியும். அவர்கள் பைபிள் தராதரத்தைப் பின்பற்றுவது, கிறிஸ்தவமண்டலத்தை மெய்யாகவே குற்றச்சாட்டில் நிறுத்துகிறது. இந்த மெய்க் கிறிஸ்தவர்கள் வரவிருக்கிற “நீதி வாசமாயிருக்கும்” ஒரு புதிய உலகில் தங்கள் நம்பிக்கையை வைத்தவர்களாயும் இருக்கின்றனர். (2 பேதுரு 3:13) விசுவாசம் வைப்போருக்கு, இதுவே எய்ட்ஸ் இக்கட்டான நிலைக்கு முடிவான தீர்வாயிருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a மேலுமான தகவலுக்கு, எங்களுடைய ஆகஸ்ட் 8, 1992 தேதியிட்ட ஆங்கில இதழில், “ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ்—அது எப்படி முடிவுக்கு வரும்?” என்ற தொடர் கட்டுரையைக் காண்க.
b இரத்தமேற்றுவதன் மூலமாகவும் சிரைவழியாக போதைமருந்துகளை உட்செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஊசிகளை ஒருவருக்கு மேற்பட்டோர் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவும்கூட இந்நோய் பரவக்கூடும். எந்தத் தவற்றிலும் ஈடுபடாத சில கிறிஸ்தவர்கள், இன ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டுள்ள அல்லது போதைமருந்துகளைப் பயன்படுத்தியுள்ள துணைகளிடமிருந்து இந்நோயைப் பெற்றுள்ளனர்.
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
“குறைவாய்ப் பண்படுத்தப்பட்ட நாட்டுப்புறங்கள் பலவற்றில், . . . குருக்களும் பிஷப்புகளும் பலதார மணம் புரிந்தவர்களாய் உள்ளனர்.” —தி நியூ யார்க் டைம்ஸ்
[பக்கம் 20-ன் படம்]
கிறிஸ்தவமண்டல குருமாரின் மோசமான முன்மாதிரி ஆப்பிரிக்காவில் வரம்புமுறையற்ற பாலுறவு தொற்றுநோய்க்குக் காரணமாய் இருந்திருக்கிறது
[பக்கம் 21-ன் படம்]
“கிறிஸ்தவ” நாடுகளால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஒழுக்கக்கேடான பொழுதுபோக்குக்கு இளைஞர்கள் ஆளாகின்றனர்